Wednesday, December 26, 2012

நீயா நானா : கார்பரேட் வாழ்க்கை - வந்ததும் வராததும்...


விஜய் டி.வி. யே ஒரு கார்பரேட் கம்பெனி என்பதாலோ என்னவோ சென்ற வார நீயா நானாவில் கார்பரேட் வாழ்க்கை பற்றிய விவாதத்தின் போது  மிஸ்டர். கோபிநாத்தின் வாய்ஸ் கொஞ்சம்  கம்மியாகவே தெரிந்தது.

அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் (இரண்டு புறமும்) பெரும்பாலானவை உண்மையில் நடப்பவை தான். இருந்த போதிலும் IT யில் வேலை என்றாலே எல்லோரும் சுக போகமாக வாழ்க்கையை நடத்துபவர்கள் போலவும், அதிக படியாக செலவு செய்பவர்களாகவும் எப்போதுமே சித்தரிக்க படுகிறார்கள். இப்படியே போனால் பின் T. ராஜேந்தர் படத்தில் வருவது போல காலேஜ் பசங்க என்றாலே பெண்கள் பின்னால் சுற்றுபவர்களாகவும், பரீட்சை என்றாலே பிட் அடிக்காமல் இருக்க மாட்டார்கள் போலவும் சித்தரிக்க படுவது போல் பின்னாளில் எல்லோரும் IT மக்களை பற்றிய தவறான எண்ணம் ஏற்பட வாய்ப்புண்டு(பின்னாளில் என்ன இப்ப மட்டும் என்ன வாழுதாம்னு சக நண்பர்கள் சொல்வது கேட்கிறது!).

இனி, நிகழ்ச்சியிலிருந்து:

#IT வாழ்க்கை அடிமை வாழ்க்கை போல் சிலர் பேசினார்கள். அப்போ அரசாங்க உத்தியோகம் மட்டும் என்ன சுதந்திர வாழ்க்கையா? அப்படியே இருந்தாலும் ஒரு ரிசர்வேஷன் கவுண்டரில் உள்ளவர் இயற்கை உபாதைக்கு அஞ்சு என்ன ரெண்டு நிமிஷம் எழுந்து போனால் கூட நாமே கரிச்சு கொட்டுவோமே? 9 டு 5 ஆபிசில் இல்லையென்றால் அரசு அதிகாரிகள் விட்டு விடுவார்களா? உட்கார்ந்த இடத்தில் வேலை செய்யாமல் இருக்கலாம். அது வேறு கதை. கொடுத்த வேலையை/கடமையை நேரம் காலம பார்க்காமல் செய்தால் அது அடிமை தனமாம். இன்னும் சொல்லப்போனால் வேலைக்கு சேர்ந்த முதல் ஒன்றிரண்டு வருடங்கள் மட்டும் பல கம்பெனிகளில் பாண்ட் போடுவார்கள். அதன் பின் யாரும் யாரையும் பிடித்து வைத்துக்கொள்வதில்லை/முடியாது. இதில் எங்கிருந்து அடிமைத்தனம் வந்ததென்று தெரியவில்லை. இதோ, இரண்டு நாட்களுக்கு முன்னர் என் சக மேனேஜர் ஒருவரிடம் வேலை பார்க்கும் ஒரு ஊழியர், உங்கள்  டீமில் வேலை செய்ய பிடிக்கவில்லை. என்னை உடனே உங்கள் பிராஜக்டில் இருந்து ரிலீஸ் செய்யுங்கள் என்று கேட்டாராம். இதை என்னவென்று சொல்லுவது?

#அடுத்து அளவுக்கு அதிகமாக/ஆடம்பரமாக செலவழித்தல். இது எப்போதுமே எழுப்பப்படும் பொதுப்படையான ஒரு குற்றச்சாட்டு. உண்மையில் ஒரு மிக சிறிய சதவிகிதம் மட்டுமே அப்படி செலவு செய்வார்கள்/முடியும். அமெரிக்காவில் இருந்த போது கூட நான் தான் கடைசி ஆளாக ஐ-போன் வாங்கினேன். பணம் இல்லை என்று இல்லை. எனக்கு அதில் பெரிதாக ஆர்வம் இல்லை. என்னையும் சேர்த்து இந்த வருடத்தில் இரண்டு பேர் எங்கள் சென்னை கிளைக்கு அமெரிக்காவில் இருந்து மாற்றல் வங்கி வந்தோம். நான் இன்னமும் 1997 மாருதி தான் ஒட்டி செல்கிறேன். மற்ற இருவர் புது டூ வீலர் தான் வாங்கினார்கள். பெரும்பாலும் வீட்டில் நல்ல வசதியும் வேலையில் சேரும் புதிதில் தான் சிலர் கண்ணா பின்னாவென்று செலவு செய்வார்கள். அப்படியே செய்தால் தான் என்ன? அதனால் பொருளாதாரத்திற்கு தான் நல்லது. சும்மா அப்படியே மூட்டை மூட்டையா சேர்த்து வைக்கிற பழக்கத்த முதலில் விட்டு ஒழிப்போம்.

#பெயர் சொல்லி கூப்பிடுவது மற்றும் கெட்ட வார்த்தைகள் பிரயோகம். இதில் வருத்தப்பட பெரிசா என்ன இருக்குனு தெரியல. சார், சார்னு இன்னும் தனக்கு மேல உள்ளவர்களுக்கு சலாம் போட்டுகிட்டே இருக்கணும்னு எதிர் பார்க்குறாங்களா? மேலை நாடுகளுடன் IT தொடர்பு உள்ளதால் அங்குள்ள  வழக்கம் போல் பேர் சொல்லி எல்லோரையும் கூப்பிடுகிறோம். அதற்காக அப்பா, அம்மாவையும் என்ன பேர் சொல்லியா வீட்டில் கூப்பிடுகிறோம்? கெட்ட வார்த்தைகள். சிலர் அதன் முழு அர்த்தம் தெரிந்தாலும் ஆங்கிலத்தில் இருப்பதால் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சாதாரணமாக உபயோக படுத்துகிறார்கள். இதையும் எல்லோரும் எல்லோரிடத்திலும் செய்வதில்லை. தமிழிலும், மற்ற தொழில் செய்பவர்களும் கெட்ட வார்த்தை பேசுவதே இல்லையா என்ன? இன்னும் சொல்லப்போனால் இங்கு யாரும் கெட்ட வார்த்தையை அடுத்தவர்களை திட்ட உபயோகிப்பதில்லை. மாறாக அவர்களுக்குள்ளாக 'ஷி...' என்று கூறிக்கொள்வார்கள். மற்ற வேலைகளில் கெ.வா. அடுத்தவர்களை திட்டவே உபயோக படுகிறது.

#கை நிறைய சம்பளம். வாங்கினா என்ன? கைக்கும் எட்டாம வாய்க்கும் எட்டாம பாதி மாசத்தில் இருந்து அடுத்தவரிடம் கை ஏந்தாமல் இன்றைய இளைஞர்கள் வாழ்கையில் முன்னேறுவதில் இவர்களுக்கு என்ன பிரச்னை? நான் முன்பே கூறியது போல் அதுவும் ஆரம்ப காலத்தில் பெரிய சம்பளமாக தோன்றும். பின் திருமணம் குழந்தைகள் என ஆன பின் எவ்வளவு வாங்கினாலும் பத்தாது. நான் ஒரு காலத்தில் பாசஞ்சர் ரயிலில் பொது பெட்டியில் துண்டை விரித்து இடம் பிடித்து சென்னை வருவேன். இப்போ எக்ஸ்பிரஸ் ரயிலில் ரிசர்வ் செய்து படுத்து தூங்கி போவது ஒரு முன்னேற்றம் தானே? அப்படி தானே எல்லோரும் சொல்லி வளர்கிறார்கள். வாழ்கையில் நிறைய சம்பாதிக்க வேண்டும். நல்ல வளமான வசதியான வாழ்வு அமைத்துக்கொள்ள வேண்டும் என்று. எல்லாம் நாங்கள் உழைத்து தானே சம்பாதிக்கிறோம். தவறான வழியில் அல்லவே?

                                                                                                                            இன்னும் வரும்...

தொடர்புடைய பழைய பதிவு: நீங்க என்ன புதுசா கண்டு பிடித்தீர்கள் Mr. (நீயா நானா) கோபிநாத் ?

  

share on:facebook

7 comments:

சேக்கனா M. நிஜாம் said...

சிந்திக்கத் தூண்டும் பதிவு !

எல்லா விசயத்திலும் முழுவதுமாக மாறிவிட்டனர் என்று கூற முடியாது. குறிப்பாக ஒருவர் தான் அணிந்திருக்கும் ஆடையை வைத்தோ அல்லது தான் பேசுகின்ற அல்லது பேசுவதற்காக கற்றுகொண்ட மொழியை வைத்தோ ஒருவர் மாறிவிட்டார் என கணித்துக் கூறமுடியாது.

உதாரணமாக,

1. தங்களின் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதாகட்டும்...

2. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கி குமிப்பதகாட்டும்...

3. தான் பிறந்த ஊரையும், தாங்கள் அங்கம் வகிக்கும் சமய கொள்கை கோட்பாடுகளையும் நேசிப்பவர்களும்...

4. தங்களின் இறுதி நாட்களை ஊரில் பிள்ளை குட்டிகளோடு மகிழ்ச்சியுடன் கழிப்பவர்கள்...

என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

இறுதியாக கூறிக்கொள்வது ஒரு நபர் தங்களின் சமூகம் நலன் சார்ந்த கொள்கை கோட்பாடுகளில் உறுதியாக இருந்தால் யாராலும் அவர்களை மாற்றிவிட முடியாது

அமுதா கிருஷ்ணா said...

வேலைக்கு போவது வேலை பார்க்க தானே. வேலை வேலை என்றால் ஹவுஸ் ஹஸ்பெண்டாக/ஹவுஸ்வைஃபாக வீட்டிலேயே இருந்து கொள்ளலாமே.இருவருக்கும் நைட் ஷிஃப்ட் என்றால் ஒருவர் வேலையை விட்டுவிடுவது தான் நல்லது.எல்லோரும் விவசாயி ஆக முடியாது.விவசாய நிலம் எல்லோரும் வாங்க முடியுமா என்ன? இல்லை வேலையினை விட்டு விட்டு அங்கு தின கூலியாகவா செல்ல முடியும்?

என்னுடைய கணவர் செண்ட்ரல் கவர்ண்மெண்ட் வேலை(முன்பு),என் தங்கை ஸ்டேட் கவர்ண்மெண்ட் வேலை இருவரும் தேவையெனில் ஞாயிற்று கிழமைகளில் கூட வேலைக்கு போவார்கள்.ஏன் வரவில்லை என்று யாரும் கேட்க போவதில்லை. எனினும் வேலை மேல் இருக்கும் அக்கறை தான் காரணம். என்னவோ ஐ.டியில் மட்டும் தான் வேலை இருப்பது போல் ஒரு மாயை உள்ளது. ஆனால் ஐ.டியில் மட்டும் தான் வேலைக்கு தகுந்த மரியாதையான பெருமையாக சொல்லி கொள்ளும் படியான சம்பளம் உள்ளது. அதை எல்லோரும் மறந்து விடுகிறார்கள்.

Vadivelan said...

ஒரு ரிசர்வேஷன் கவுண்டரில் உள்ளவர் இயற்கை உபாதைக்கு அஞ்சு என்ன ரெண்டு நிமிஷம் எழுந்து போனால் கூட நாமே கரிச்சு...

they will not respond, even if you scold, whatever...

நான் இன்னமும் 1997 மாருதி தான் ஒட்டி செல்கிறேன். மற்ற இருவர் புது டூ வீலர் தான் வாங்கினார்கள்.

What about others, you are talking about only 3 people.

தமிழிலும், மற்ற தொழில் செய்பவர்களும் கெட்ட வார்த்தை பேசுவதே இல்லையா என்ன?
Is it? in office, we are using tamil words like "Oo.." (in IT, well educated people are using bad words)

Take majority of IT company's managers/employees..

btw, I am also in IT for 10 yrs.. I have also worked continuously 18 hrs for 3 months every year.. so but never ever received any dinner (at least pizza) or extra pay from my manager(s)...

So my point is, it is like holding tiger's tail.. you cant resign the job and go for agri.. if you resign, immediately your relatives will start to make fun.....

Anonymous said...

எந்த வேலையும் உயர்வு தாழ்வில்லை, அனைத்து வேலைகளிலும் நன்மை தீமை எல்லாமும் உண்டு.. ஐடி வேலைகளில் சேருவோர் பலர் பணத்துக்காக தமது திறமைகள், கனவுகள் போன்றவற்றை தொலைத்துவிட்டு சேருவதால் வரும் மன சலிப்பே பலரிடம் உள்ளது. பிடித்த தொழிலை தேர்ந்தெடுங்கள், சமூக அழுத்தங்களுக்கு பிடிக் கொடுக்காமல் விரும்பியவற்றை செய்வதிலேயே ஆனந்தம் உண்டு, அதில் வெற்றியும் கிட்டும். அத்தோடு எந்த வேலை செய்தாலும் வேலையில் மூழ்காமல், சொந்த வாழ்க்கை, குடும்பம், பொழுதுப் போக்கு, உடலநலம் ஆகியவற்றில் கவனம் எடுப்பதும், மிகச் சரியாக பேலண்ஸ் பண்ணக் கற்றுக் கொள்வதிலேயே நம் வாழ்க்கை நல்ல முறையில் அமையும் வாய்ப்புள்ளது.

ஆதி மனிதன் said...

//இறுதியாக கூறிக்கொள்வது ஒரு நபர் தங்களின் சமூகம் நலன் சார்ந்த கொள்கை கோட்பாடுகளில் உறுதியாக இருந்தால் யாராலும் அவர்களை மாற்றிவிட முடியாது//

நச்சுனு சொன்னீங்க நிஜாம். நன்றி.

ஆதி மனிதன் said...

நன்றி அமுதா கிருஷ்ணா.

//வேலைக்கு போவது வேலை பார்க்க தானே.//

அதானே!

//.எல்லோரும் விவசாயி ஆக முடியாது//

இன்றைய பதிவில் இதை பற்றி எழுதி இருக்கிறேன்.
http://aathimanithan.blogspot.com/2012/12/blog-post_27.html

//ஆனால் ஐ.டியில் மட்டும் தான் வேலைக்கு தகுந்த மரியாதையான பெருமையாக சொல்லி கொள்ளும் படியான சம்பளம் உள்ளது. அதை எல்லோரும் மறந்து விடுகிறார்கள்.//

ஏதோ நீங்களாவது மறக்காம இருக்கீங்களே. மீண்டும் நன்றி.

ஆதி மனிதன் said...

நன்றி வடிவேலன்.

தங்கள் பக்க கருத்தையும் மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில் IT, அதில் வேலை பார்ப்பவர்கள் என்றாலே அடிமைகள் போலவும் IT ஒரு பாவப்பட்ட தொழில் போலவும் பேசுவது தான் விந்தையாக இருக்கிறது எனக்கு.

// I have also worked continuously 18 hrs for 3 months every year.. so but never ever received any dinner (at least pizza) or extra pay from my manager(s)...//

I think most of the companies gives comp-off or extra bucks and in our case every three months we have a project lunch etc. etc.,You can join ours!

Post a Comment