Sunday, September 16, 2012

சுஜாதாவும் விமான பயணங்களும்...


சுஜாதா ஒரு தீர்க்கதரிசி என்பது பலரும் அறிந்தது தான். சில வாரங்களுக்கு முன் உள்ளூர் விமான பயணம் ஒன்று மேற்கொண்ட போது சுஜாதா பல வருடங்களுக்கு முன் கட்டுரை ஒன்றில் எதிர்காலத்தில் விமான சேவைகள் எப்படி இருக்கும் என்பதை நகைசுவையை எழுதியது நினைவுக்கு வந்தது.

இப்போதெல்லாம் அதிகாலை வேளைகளில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் கியூ இருக்கிறதோ இல்லையோ, விமான நிலையங்களில் கியூவில் மக்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். விமான சேவை பற்றி திரு. சுஜாதா சொன்னதை பற்றி பார்க்கும் முன், சமீபத்தில் ஒரே மாதத்தில் மூன்று முறைக்கு மேல் உள்ளூர் விமான பயணம் மேற்கொண்டதில் பார்த்து ரசித்த/வருத்தப்பட்ட சம்பவங்கள் சில...

என்னதான் படித்திருந்தாலும், விமானத்தில் பயணம் என்றாலும் இன்னமும் சினிமா தியேட்டரில் முண்டியடித்துக்கொண்டு போகும் பழக்கத்தை சிலர் கை விடவில்லை. எல்லோரும் செக்யூரிடி செக் வரிசையில் காத்திருந்தால் ஒரு சிலர் நேராக சென்று தங்கள் உடமைகளை ஸ்கானரில் வைத்துவிட்டு நடுவில் வந்து புகுந்து விடுகிறார்கள்.

தற்போது உள்ளூர் விமானங்களில் உணவோ/ஸ்நாக்ஸ் பரிமாறப்படுவதில்லை. அப்படியே காசு கொடுத்து வாங்கலாம் என்றால், அம்மாடி விலை யானை விலை குதிரை விலைதான். இதனால் மக்கள் தற்போது பிளைட் ஏறும்போதே வீட்டிலிருந்து பொட்டலம் கட்டி வந்து விடுகிறார்கள். விமானம் டேக் ஆப் ஆனதுதான் போதும். விமானம் முழுக்கு ஒரே கம கம மனம் தான். இதில் குரூப்பாக வருபவர்கள் வெவேறு இருக்கைகளில் அமர்ந்திருந்தால் இட்லியும் சப்பாத்தியும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு 'பார்சேல்'....

விமான பணியாளர்கள். சொல்லவே வேண்டாம். MTC கண்டக்டர்களை விட அதிகம் அலுத்துக் கொள்கிறார்கள். குடிக்க தண்ணீர் கேட்டால் கூட ஏதோ அவர்கள் சொத்தை கேட்பதை போல்/நமக்கு ஒரு கிரவுண்ட் நிலத்தை எழுதி கொடுப்பது போல் தான் அவர்களின் ரியாக்ஷன். இதற்க்கெல்லாம் காரணம் வேறு யாருமல்ல. பயணிகளான நாம் தான். சில பயணிகள் விமானத்தில் ஏறிவிட்டாலே அங்குள்ள பணிப்பெண்கள் எல்லாம் அவர்களுக்கு பணிவிடை செய்யவே பிறந்தவர்கள் போல் அவர்களுக்கு கட்டளை இடுவதும், முறைத்துக் கொள்வதும் வாடிக்கையாக பார்த்தேன்.

எல்லாம் முடிந்து லேன்டிங் ஆகும் போது பல முறை பைலட் கேட்டுக்கொண்டும் கூட, விமானம் இறுதியாக நிற்பதற்கு முன்பே செல் போனை ஆன் செய்து, ஆங் நான் வந்துட்டேன்ப்பா. வண்டி அனுப்பிட்டியா? வண்டி இப்பதான் லான்ட் ஆனுச்சு...என்று எல்லோரும் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். அதே போல் வண்டி நிற்கும் முன்பே எல்லோரும் தங்கள் பெட்டிகளை எடுத்துக்கொண்டு நின்று விடுகிறார்கள். எல்லா முறையும் பார்த்துவிட்டேன். வண்டி நின்று குறைந்தது 10 நிமிடங்களாவது ஆகும் பிளைட்டின் கதவுகள் திறக்க. அப்படி என்ன தான் அவசரமோ நம் மக்களுக்கு. இத்தனைக்கும் மும்பையிலிருந்து மதுரைக்கு மூன்று மணி நேரத்தில் வந்து விடுகிறோம். ஒரு 10 நிமிடம் சீட்டிலேயே உட்கார்ந்து கொள்வதற்கு நமக்கு பொறுமையில்லை.

இதை விட கொடுமை. சென்ற முறை மும்பையிலிருந்து சென்னை வந்த போது ஒருவர் விடாமல் விட்ட ஏப்பம். அப்பப்பா...அப்படி ஒரு சத்தத்துடன் தொடர்ந்து அவர் விட்ட ஏப்பமே போதும் விமானம் பறப்பதற்கு. அவ்வாறு பொது இடத்தில் செய்யக்க் கூடாது என்று அவருக்கு தெரியுமா என அவருக்கே வெளிச்சம்.

சரி இதுக்கும் சுஜாதாவுக்கும் என்ன சம்பந்தம் என கேக்குறீங்களா? பல வருடங்களுக்கு முன் திரு. சுஜாதா, பிற்காலத்தில் இந்தியாவில் விமான சேவைகள் எப்படி இருக்கும் என்ற ஒரு கட்டுரையில், விமான பயணங்கள் மிகவும் சாதாரணமான ஒரு நிகழ்வாக மாறி விடும். பயணிகளை கவர கட்டணங்கள் மிகவும் குறைக்கப்படும். அதற்க்கு தங்குந்தாற்போல்  சேவைகளும் மாறும். யார் கண்டது. குறைந்த கட்டணம் குறைந்த கட்டணம் என்று, விமானம் வந்து நின்ற பிறகு கீழே இறங்க மாடிபடிகளுக்கு பதிலாக கீழே மணலை குவித்து வைத்து அதில் குதிக்க சொன்னாலும் சொல்லுவார்கள் என கூறி இருந்தார். தற்போது அது போல் தான் உள்ளது பல விமான சேவைகள்.

மும்பை விமான நிலையத்தில் வரிசையாக பேருந்துகளில் பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் நிற்கும் இடத்தில் இறக்கி விடுகிறார்கள். சில நேரங்களில் பேருந்து நிலையம் போல் வரிசையாக நிற்கும் விமானத்தில் எதில் ஏறுவது என குழப்பம் வந்து விடுகிறது. மேலே உள்ள படம் இரண்டு விமானங்களுக்கு நடுவே நின்ற எங்கள் பஸ்ஸிலிருந்து எடுத்தது.

share on:facebook

1 comment:

krish said...

ரசித்தேன்,நன்றி.

Post a Comment