Friday, December 31, 2010

Happy New Year - 2011




Wish You All a Very Happy and Prosperous New Year - 2011


2000 மாவது ஆண்டாக இருந்தாலும், 2011 ஆக இருந்தாலும் ஏன், 3000 மாவது ஆண்டாக இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களின் புதுவருட பாட்டு இதுவாகத்தான் இருக்கும்.


மீண்டும் அனைவருக்கும் என் இனிய 2001 புது வருட நல்வாழ்த்துக்கள்.





என்றும் அன்புடன்....
share on:facebook

Tuesday, December 28, 2010

2010 - Top 10 'எல்லாமே பெரிசுதான்'


சென்ற 2010 - Top 10 'எல்லாமே பெரிசுதான்' பதிவில் என்னை கவர்ந்த, பாதித்த சில செய்திகளில் முதல் ஐந்தை பதிந்தேன். அவற்றில் மீதி ஐந்து இதோ...

பீகார் தேர்தல் முடிவு:
பீகாரில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என ஓரளவிற்கு அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் எதிர்க்கட்சிகளான ராஸ்ட்ரிய ஜனதா தளமும் அகில இந்தியா கட்சியான காங்கிரசும் இந்த அளவிற்கு மண்ணை கவ்வும் என யாரும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள் - லல்லுவும் ராகுல் காந்தியும் சேர்த்து. பீகாரில் நிதீஷ் குமார் பெற்ற இந்த மாபெரும் வெற்றி இந்திய அரசியலில் நிச்சயம் ஒரு திருப்புமுனைதான்.


முற்றிலும் ஜாதியை அடிப்படையாகவும், வன்முறையை வழிகாட்டியாகவும் வைத்தே அரசியல் நடக்கும் பீகாரில், வளர்ச்சியையும், சட்டம் ஒழுங்கை (ஓரளவிற்கு) நிலை நாட்டியத்தை வைத்து மட்டுமே நிதீஷ் குமார் வெற்றி பெற்றார் என்றால் இந்தியாவில் மேலும் பின்தங்கியுள்ள மாநிலங்களும் முன்னேற வாய்ப்புண்டு என்பதை நாட்டு மக்களுக்கும் இதர அரசியல்வாதிகளுக்கும் உணர்த்திய பெருமை நிதீஷ் குமாரையே சாரும்.

CNN - Hero of the year:
இந்த வருடம் CNN நடத்திய Hero of the year தேர்வில் தமிழகத்தை சேர்ந்த நாராயணன் சங்கரன் முதல் பத்து பேரில் ஒருவராக தேர்வானது தமிழர்கள்/இந்தியர்களான நமக்கெல்லாம் கிடைத்த மிக பெரிய பெருமை என்றுதான் சொல்லவேண்டும்.


இறுதியாக நடந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் நாராயணன் சங்கரனால் முதல் இடத்தை பிடிக்க முடியவில்லை என்றாலும் அவரின் சேவையை பாராட்டி அவரை அமெரிக்காவிற்கு அழைத்து கவுரவித்ததுடன் $ 25,௦௦௦ அமெரிக்க டாலர்கள் பணமுடிப்பையும் வழங்கியது. சக அமெரிக்கர்கள் கூட 'who is this Sankaran' என அவரைபற்றியும் நம் மதுரையை பற்றியும் கேட்கும் அளவிற்கு தனி மனித சேவையில் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தவர் சங்கரன் நாராயணன்.

ஆ (சாமி) நித்யானந்தாவின் லீலைகள் (Villian of the Year):
உலகம் பூராவும் போலி சாமியார்களின் அட்டூழியங்கள் அவ்வப்போது அரங்கேறி கொண்டிருந்தாலும் மேல்வர்க்க மக்களிடமும் மீடியாக்களிடமும் சற்று அதிகமாகவே செல்வாக்கு பெற்றிருந்த நித்யானந்தாவின் லீலைகள் வெளியே தெரிந்த போது அந்த அதிர்ச்சி சற்று அதிகமாகவே இருந்தது.

தன்னை தானே சாமி என்று சொல்லிக்கொண்டு துறவறத்துக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் பளபளக்கும் கார்களிலும் பகட்டான குடில்களிலும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் கூடவே சிஷ்யைகளை கொண்டிருக்கும் இம்மாதிரியான ஆட்களால் நம் சமூகத்திற்கு மட்டும் அல்ல துறவறம் என்ற அந்த புனிதமான அறத்திற்கே அவப்பெயர் ஏற்படுத்திவிடுமோ என்ற ஐயமே தற்போது மிஞ்சுகிறது.

மழையில் நனைந்த தமிழகம்:
கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு வருடமும் வஞ்சனை இல்லாமல் தமிழகத்தில் மழை பொழிந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால் கிடைக்கும் நீரை சேமித்து வைக்கவோ சீர்படுத்தி அகற்றவோ வழியில்லாமல் அரசாங்கம் இன்னும் உறங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அதிலும் தலை நகர் சென்னையில் கேட்கவே வேண்டாம். திரும்பிய பக்கமெல்லாம் தெப்பம் போல் மழை நீரில் வாகனங்கள் மிதந்து கொண்டு செல்கின்றன. ஆனால் அரசியல்வாதிகள் குடியிருக்கும் பகுதிகளில் மட்டும் துடைத்து விட்டாற்போல் பளிச்சென்று சாலைகள். ஹ்ம்ம் என்றுதான் இவர்கள் திருந்துவார்களோ.


தலைவர்களின் உயிருக்கு விடுதலைப்புலிகள் குறி:
இந்த ஆண்டின் மிக பெரிய காமெடி இதுவாகத்தான் இருக்கு வேண்டும். இலங்கை இன பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டது முதல் இன்றுவரை இலங்கை தமிழர்களை வைத்தே அரசியல் செய்து வந்த தமிழக அரசியல்வாதிகள் இன்று விடுதலை புலிகள் என்ற இயக்கமே இல்லாமல் போனபிறகும் கூட அவர்களை வைத்து இன்னும் அரசியல் செய்கிறார்கள்.

தமிழகம் வரும் பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு விடுதலை புலிகளால் ஆபத்து என திடீரென்று ஒரு அறிக்கை வெளியாகிறது. இன்னும் பத்தாண்டுகள் கழித்து கூட ஏதாவது ஒரு பிரச்சனையை திசை திருப்ப இதே கதையை கட்டி விடுவார்கள் போலிருக்கிறது.
 
ஹையா, எல்லோருக்கும் முன் நான்தான் 2010 - ஒரு சிறப்பு கண்ணோட்டம் போட்டேனாக்கும் (!?). ஆமா நீங்க எப்ப போட போறீங்க?

படம் நன்றி: bostom.com
share on:facebook

Friday, December 24, 2010

2010 - Top 10


2010 ஆம் ஆண்டு எல்லாமே பெருசுதான்...

2G ஸ்பெக்ட்ரம்:
சுமார் ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் கோடி ரூபாய் (1,75,000, 000,000) ஊழல் நடந்திருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் இது எல்லாம் யூகத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளதாகவும், ஒரு தனி நபரால் இந்தளவு எல்லாம் ஊழல் செய்ய முடியாது என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள்.

அப்படி என்றால் ஒரு நாலு பேர் அல்லது நாற்பது பேர் அட நாலாயிரம் பேர் சேர்ந்து செய்தால் பரவாயில்லை என கூறுகிறார்களா? இல்லை மேலே கூறிய தொகையில் ஒரு லட்சத்தை எடுத்துவிட்டு எழுபத்தையாயிரம் ஊழல் என்றால் ஒத்துக்கொள்வார்களா?

விக்கி லீக்ஸ்:
அமெரிக்க அரசாங்க ரகசியங்களை கசிய விட்ட விக்கி லீக்ஸ் இணையதள ஆசிரியருக்கு லண்டன் ஐ கோர்ட் ஜாமீன் வழங்கியது. இருந்தும் அவரால் உடனே விடுதலையாக முடியவில்லை. அவர் ஜாமீனில் செல்ல 200,000 (1,60,00,000 ரூபாய்) இங்கிலாந்து பவுண்டுகளை பணமாக கட்ட வேண்டும் என விதித்த நிபந்தனைதான். இதை ஏற்பாடு செய்ய அவரது ஆதரவாளர்களுக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு மேல் ஆனது.


ஜூலியன் அசான்ஜிடம் சுமார் 250,000 ரகசிய ஆவணங்கள் இருக்கிறது. ஒரு வேளை ஒரு ஆவணத்திற்கு ஒருபவுண்ட் என பினையதொகையை கணக்கு செய்திருப்பாரோ அந்த நீதிபதி!


கோவை குழந்தைகள் கடத்தி கொலை:
கல்நெஞ்சம் படைத்தவர்கள் கூட அந்த குழந்தைகளின் (அக்கா தம்பியாக சேர்ந்திருந்த) புகைப்படங்களை பார்த்தபிறகு அவர்களை ஒருவன் பணத்திற்காக கொலை செய்தான் என்பதை நம்ப மாட்டார்கள். தமிழகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பில் ஒரு மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவம். குற்றம் செய்தவர்களுக்கு உடனடி தண்டனையும் கிடைத்தது.


குற்றம் செய்தவர்களை என்கவுண்டரில் சுட்டு கொன்றதை பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டால் கூட இதே போல் குழந்தை கடத்துபவர்கள் எல்லோரையும் போலீசார் சுட்டு கொள்வார்களா? அப்படியே செய்தாலும் அதை எப்போதும் மக்கள் ஏற்றுகொள்வார்களா? முறையான தண்டனையே என்றும் சரியான தீர்வு.


எந்திரன் வெற்றி:
நடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பது விபரம் அறிந்தவர்களுக்கு தெரியும். அதிலும் எல்லா தரப்பினரும் பார்த்து ரசிக்கும் அளவுக்கு ஈர்ப்பது என்பது இன்னும் அரிது. அந்த வகையில் அறுபது வயதிலும் நான்கு தலைமுறை தாண்டி இன்னும் பழைய ரசிகர்களையும் புதிய ரசிகர்களையும் தொடர்ந்து ஈர்த்துவரும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் மிகப் பெரிய வெற்றி படம் 'எந்திரன்'. இந்திய திரைப்பட வரலாற்றில் எதிர்பார்ப்பிலும் வசூலிலும் ஒரு மிக பெரிய சாதனை படைத்த தமிழ் திரைப்படம்.  அமெரிக்கா போன்ற நாடுகளில் அதற்கு கிடைத்த வரவேற்பும், வசூலுமே அந்த சாதனைக்கு ஓர் சாட்சி.

அதே சூப்பர் ஸ்டார், இனி கலை சேவையாக தன் மீது மக்களுக்கு உள்ள ஈர்ப்பை பயன்படுத்தி வாழ்ந்து மறைந்த மக்கள் தலைவர்களின் வாழ்கை வரலாற்றை தன் கதாபாத்திரமாக ஏற்றுக்கொண்டு குறைந்தது ஒரு சில படங்கள் நடித்து கொடுப்பாரேயானால் அதை விட இந்நாட்டு மக்களுக்கு சிறந்த வகையில் சேவை செய்ய வேண்டியதில்லை. தனக்கு மக்கள் கொடுத்த பேருக்கும் புகழுக்கும் நன்றிக்கடனாக திருப்பி கொடுக்க இதைவிட ஒரு நல்ல விஷயம் வேறு இருக்கப்போவதில்லை ஹ்ம்ம். ஆசை பட எல்லோருக்கும் உரிமையுண்டு. எனக்கும் தான்.


ஒபாமாவின் இந்தியா வருகை:
ஒபாமா காந்தியையும் மார்டின் லூதர் கிங்கையும் தன் குருவாக ஏற்றுக்கொண்டவர். ஒரு மிக சிறந்த பேச்சாளர். மெத்த படித்த அமெரிக்க மக்களையே தன் பேச்சாற்றலால் மயக்கும் மந்திரம் தெரிந்தவர். எதிர்பார்த்தது போலவே அவருடைய இந்திய வருகை பெறும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் சேர்த்தே தந்தது.


இது எல்லாவற்றையும் விட அவருக்காக தலை நகர் டில்லியில் பாதுகாப்பு என்ற பெயரில் அவர் செல்லும் வழி எங்கிலும் ரோட்டோரமாக இருந்த அனைத்து மரங்களும் வெட்டி வீழ்த்தப்பட்டன. தென்னை மரங்களில் இருந்த தேங்காய்கள் கூட தப்பவில்லை. இந்திய கடலோரத்தை சுற்றி இரண்டு பெரிய போர்க்கப்பல்கள் நாற்பதுக்கும் மேற்ப்பட்ட கடற்படை ரோந்து கப்பல்கள், தினம் 600 கோடி ரூபாய் செலவில் பல்லாயிரக்கணக்கான காவலர்கள் என அவருக்கும் அவருடன் பயணித்த 3000 மேற்பட்ட அவருடைய பரிவாரத்துக்கும் செலவிடப்பட்டதாக செய்திகள் கூறின.

என்னுடைய ஒரே ஆதங்கம், இன்றைய ஹைடெக் உலகத்தில் ஒரு வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவர் எல்லாவற்றையும் செய்திருக்க முடியுமே. நம் நாட்டில் கரும்பலகை கழிப்பிட வசதி இன்றி இருக்கும் எத்தனையோ பள்ளிகளுக்கு அவருக்காக செலவிடப்பட்ட தொகையில் ஒரு பகுதியை செலவிட்டிருந்தால் கூட போதும். பல்லாயிரக்கணக்கான ஏழை மாணவர்கள் பயனடைந்து இருப்பார்கள்.


Top 10 - ல் மீதி தொடரும்...

படம் நன்றி : boston.com
share on:facebook

Wednesday, December 22, 2010

Let it snow...Let it snow...



பனிபொழிவு. நான் மிகவும் பார்த்து ரசித்து அனுபவிக்கும் ஒன்று. நண்பர் சாயை தொடர்ந்து நானும் நானே எடுத்த சில புகைப்படங்களை இங்கு இணைத்துள்ளேன்.





பனிப்பொழிவில் பல வகை உண்டு. சில சமயம் ரவையை போல் பொடி பொடியாக பெய்யும். சிறிய மரக்கிளைகளில் அது ஒட்டிக்கொண்டிருப்பதே அழகு.




சில சமயம் பெரிய அளவில் பொத் பொத்தென்று பனி விழும். ஒரு அரை மணி நேரத்தில் தரை எல்லாம் வெண்மை பூசிவிடும்.



பல தடவைகள் மரங்களில் தொத்திக்கொண்டு இருக்கும் பனியின் அழகை ரசிக்கவே சும்மாவேனும் காரை எடுத்துக்கொண்டு சுற்றுவேன்.


மிசிசிப்பி ஆறு பனிக்காலத்தில் அப்படியே உறைந்து அங்குள்ள சிறிய கப்பல் ஒன்று தரையில் தெரியும் கட்டடம் போல் காட்சி அளிக்கிறது.



சில நேரங்களில் வெள்ளையும் கொள்ளை அழகுதான்.


சென்னையில் இருந்தால் மழை பெய்வதை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும்(வீட்டுக்குள்ளிருந்து தான்).
share on:facebook

Saturday, December 18, 2010

நெஞ்சு பொறுக்குதில்லையே தோழா...



நெஞ்சு பொறுக்குதில்லையே.

நெஞ்சு பொறுக்குதில்லையே தோழா...
மாறிவரும் நம் சமுதாய உணர்வுகளை நினைந்துவிட்டால்.


சமத்துவமும், சமதர்மமும் ஒன்று சேர்ந்து
சோஷலிச பாதை நோக்கி செல்லும்
நம் ஒன்று பட்ட இந்தியாவில்
பாபர் மசூதி-ராமர் கோவில் பிரச்சனையா?

தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் - கடவுள்.
பிறகு எங்கே ராமருக்கு பிறந்த இடம் - தனித்து அயோத்தியில்?

நெஞ்சு பொறுக்குதில்லையே தோழா...
மாறிவரும் நம் சமுதாய உணர்வுகளை நினைந்துவிட்டால்.


உலக நாடுகளின் பிரச்சினை - பெட்ரோலிய பொருட்களின் பற்றாக்குறை  பற்றிய ஆராய்ச்சியில். இந்திய நாட்டின் பிரச்சினை மசூதியை மீண்டும் கட்டலாமா கூடாதா என்பதில்.

ஒருபுறம் கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் கொடுமைபடும் பாட்டாளிகள். மறுபுறம் ஏசியிலும், ஏழடுக்கு மாளிகையிலும்
ஏட்டை புரட்டி நோட்டை என்னும் ஏகாதிபத்தியங்கள்.

மாற்றம் தர வேண்டிய மந்திரி சபைகளோ மாதமொருமுறை மாறும் அவலம் நமக்கு.

நெஞ்சு பொறுக்குதில்லையே தோழா...
மாறிவரும் நம் சமுதாய உணர்வுகளை நினைந்துவிட்டால்.


வருடத்துக்கொருமுறை தேர்தல்
மாதத்துக்கொருமுறை  பந்த்
வாரத்துக்கொருமுறை கடையடைப்பு

பொருட்களின் உற்பத்தி பெருக்குவது எப்படி?
மக்கள் உற்பத்தியில் உயர்வு கண்டதுதான் பலன்.

மலிவு விலை மது தேடி கணவன்.
ஏறிவரும் அதிகவிலை அத்தியாவசிய பொருள் தேடி மணைவி.

நெஞ்சு பொறுக்குதில்லையே தோழா...
மாறிவரும் நம் சமுதாய உணர்வுகளை நினைந்துவிட்டால்.


இன்றைய மாணவர்கள் நாளைய இந்திய மன்னர்கள்.
ஆனால் இவர்களுக்குள் ஏற்படும் சந்தேகம் - நாளை புதுப்படம் ரிலீஸ் ஆகுமா - ஆகாதா என்பதே.

இவர்களுக்குள் ஏற்படும் போட்டி நடிகைகளின் வயது குறைவா - அதிகமா என்பதில்தான்.

இவர்கள் எங்கே வெல்லப்போகிறார்கள் ஒலிம்பிக் தங்கத்தை?

நெஞ்சு பொறுக்குதில்லையே தோழா...
மாறிவரும் நம் சமுதாய உணர்வுகளை நினைந்துவிட்டால்.

*=========================================*
பி.கு. 1990 - களின் ஆரம்பம் என நினைக்கிறேன். என்னுடைய உறவுகார பெண் ஒருவர் தஞ்சை மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற போட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்காக என்னிடம் ஏதாவது ஒன்றை எழுதி தருமாறு கேட்டார். அதற்காக எழுதிய கவிதை(!) தான் இது. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். இந்த கவிதைக்கு பரிசாக (முதல் பரிசா என்பது ஞாபகம் இல்லை) பாரதியாரின் பாடல்கள் என்ற புத்தகமும் ஒன்று பரிசாக கிடைத்தது. 

*========================================*


பொருட்குற்றம், இலக்கனக்குற்றம், பிழை எதுவாக இருந்தாலும் பொருத்துக்கொண்டதற்கு நன்றி. 

 
share on:facebook

Wednesday, December 8, 2010

லண்டன் டு பாரிஸ்.


ஆக்காஷவாணி, செய்திகள் வாசிப்பது "சரோஜ் நாராயண்சாமி". - தற்போது உள்ள சூரியம் எப். எம்., சந்திரன் எப். எம். எல்லாம் வருவதற்கு முன் அகில இந்திய வானொலி மட்டும் கோலோச்சிக்கொண்டிருந்த போது டெல்லி அலைவரிசையில் தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்த இவரின் குரலுக்கு பலர் ரசிகர்களாக இருந்தார்கள். அப்படி ஒரு தமிழ் உச்சரிப்பு, கணீரென்ற குரல் வளம்.

இனி என்னைப்பற்றி: செய்திகள் சுவாசிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இணையம், செய்தித்தாள், தொலைக்காட்சி என்று எதுவாக இருந்தாலும் மாய்ந்து மாய்ந்து செய்திகளை படிக்கும் பழக்கம் எனக்கு. அதில் என்னை கவர்ந்த சுவாரிசியமான செய்திகள் இருந்தால் அதை எல்லோரிடமும் பகிர்ந்தும் கொள்வேன்.

சரி இப்ப தலைப்பிற்கு வருகிறேன்...லண்டன் டு பாரிஸ்.

லண்டன்: சமீபத்தில் லண்டனுக்கு சென்ற இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு நாட்டு அதிபராக இருந்தும் விமான நிலைய புற வாசல் வழியாக வெளியே செல்லும் நிலைமை ஏற்பட்டது.

அதுமட்டுமில்லை. அவர் கலந்து கொள்வதாக இருந்த ஆக்ஸ்போர்ட் யூனியன் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. இது எல்லாவற்றுக்கும் காரணம் லண்டனில் உள்ள தமிழர்கள். இலங்கை இனப்போராட்டத்தில் அவர் நடத்திய படுகொலைகளை கண்டித்து கொட்டும் பணியையும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கில் அவர்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்ததுதான்.

எனக்கு தெரிந்து எந்த ஒரு நாட்டு அதிபரும் இது மாதிரியான ஒரு எதிர்ப்பை தங்கள் பதவிக்காலத்தில் சந்தித்து இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். வீர்கள் அணிவகுப்பு மரியாதை, அமைச்சர்கள் வரவேற்பு என இருந்திருக்க வேண்டிய ஒரு நாட்டு அதிபரின் பயணம் இப்படி ஆகிப்போனதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

போர் முடிந்து இரண்டு ஆண்டு ஆகியும் இன்னமும் இலங்கை தமிழர்களுக்குள் தகித்துக்கொண்டிருக்கும் நெருப்பு அவர்களின் போராட்டமும் பிரச்சனைகளும் இன்னமும் தீரவில்லை என்றே காட்டுகிறது.

பாரிஸ்: பாரிசிலிருந்து ஜூலை 2000 ஆம் ஆண்டு கிளம்பிய (Concord) கான்கோர்டு விமானம் ஒன்று கிளம்பிய சில நிமிடங்களிலேயே தீ பிடித்து வெடித்து சிதறியது. அந்த விபத்திற்கு காரணம் கான்கொர்டு விமானம் கிளம்புவதற்கு முன் கிளம்பிய காண்டினண்டல் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து கழன்று விழுந்த ஒரு சிறு இரும்புத்துண்டு. ரன்வேயில் விழுந்து கிடந்த அந்த சிறு இரும்புத் துண்டு கான்கோர்டு விமானத்தின் டயர்களை கிழித்து, கிழிந்து விழுந்த அந்த டயர் துண்டுகள் விமானத்தின் பெட்ரோல் டாங்க்கை சென்று தாக்கி ஓட்டை போட்டதால் தான் இந்த மாபெரும் விபத்து ஏற்பட்டது என்று இறுதியாக அறிவித்துள்ளார்கள்.

இவ்விபத்திற்கு காரணமானவர்கள் என்று காண்டினெண்டல் ஏர்லைன்சில் வேலை பார்த்த மெக்கானிக் ஒருவருக்கும் மற்றும் ஒருவருக்கும் அபராதமும் கடும் சிறை தண்டனையும் அளித்துள்ளார்கள்.

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என கூறுவார்கள். இங்கு அதுவே பல பேரின் உயிரை எடுத்துள்ளது.

கான்கொர்டு பற்றிய சுவாரசியமான சில தகவல்கள்:

* இது ஒரு அதிவேக விமானம். சாதாரண தொலை தூர விமானங்களை காட்டிலும் இது இருமடங்கு வேகம் செல்லக்கூடியது. பாரிசிலிருந்து நியூயார்க் செல்ல வெறும் மூன்று மணி நேரம்தான். சாதாரண விமானங்கள் சுமார் 8 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.

* மற்ற விமானங்கள் 30,000 அடி உயரத்தில் பறந்தால் இது 60,000 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும். விமானங்கள் பறக்கும் உயரத்திற்கு தகுந்தாற்போல் தான் அதன் வேகம் இருக்கும்.

* அதே போல் பயணக் கட்டணமும் மற்ற விமானத்தை விட பன்மடங்கு அதிகம்.

* கான்கொர்டு விமானம் ஒரே ஒரு முறைதான் விபத்துக்குள்ளாகியது. அது ஜூலை 2000 ஆண்டு நடந்த இந்த ஒரு விபத்து தான்.

மீண்டும் புதிய செய்திகளுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது...ஆதி.
share on:facebook

Sunday, December 5, 2010

வாடகை சைக்கிள்


வாடகை சைக்கிள்.

நான் சிறு வயதாக இருந்த போது தெருவுக்கு ஒரு வாடகை சைக்கிள் கடையாவது இருக்கும். அப்போதெல்லாம் சற்று வசதியானவர்கள் மட்டுமே ஸ்கூட்டரோ பைக்கோ வைத்திருப்பார்கள். அதுவும் ஒன்று பஜாஜ் செட்டாக் அல்லது இண்டு சுசூகி போன்று ஒன்று இரண்டு வகைகளை தான் பார்க்க முடியும். பிறகு டி வி எஸ் 50 வந்த பிறகு ஓரளவு கீழ்தட்டு மக்களும் வாங்கும் வகையிலும் இருந்தது.


இப்போதெல்லாம் பைசாவிற்கு வழியில்லை என்றாலும் பல்சர் வண்டி வாங்கிவிடுகிறார்கள். சரி மீண்டும் வாடகை சைக்கிள் விசயத்திற்கு வருவோம். எங்கள் தெருவில் ஒரு வாடகை சைக்கிள் கடை உண்டு. சனி ஞாயிறு என்றால் அங்கு படை எடுத்து சென்று விடுவோம்.


எல்லாம் அங்குள்ள ஒன்றிரண்டு சிறிய சைக்கிளை வாடகைக்கு எடுத்து ஓட்டுவதற்கு தான். நாம் போகும் முன்பே வேற ஒருத்தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்று விட்டால் அவன் வரும் வரை அங்கேயே உக்கார்ந்து இருக்க வேண்டி இருக்கும். அவன் எப்ப வருவான் எப்ப வருவான் என்று அடிக்கு ஒரு தரம் வெளியே எட்டி எட்டி பார்த்துக்கொண்டே இருப்போம். ஒரு வழியாக அவன் வந்து ஸ்டைலாக நிறுத்திய அடுத்த நொடி அந்த சைக்கிளை பெற ஒரு போரே நடக்கும்.


இதில் சில விசமிகள் சைக்கிளை திரும்ப விடுவது போன்று வந்து "அண்ணே மணி என்னாச்சுனே" என கேட்பான். மணியை சொன்னவுடன் அப்படியா சரி அப்ப இன்னும் அரை மணி நேரம் எனக்கு காசு இருக்கு என திரும்பவும் பறந்து விடுவான். மணிக்கு ஒரு ரூபாயோ என்னமோ. எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. சிலர் வேண்டும் என்றே வீட்டில் ஒரு மணி நேரத்திற்கு கொடுக்கும் காசில் ஐந்து பத்து பைசாவிற்கு மிட்டாய் வாங்கி சாப்பிட்டு விட்டு கடைகாரரிடம், "அண்ணே, பத்து பைசா கீழ எங்கயோ விழுந்துடுச்சுன்னே" என பரிதாபமாக பார்ப்பான். அவரும் சரி சரி வுட்டுட்டு போ என்பார்.


இதையெல்லாம் விட இன்றும் என் மனதில் பாரமாக தோன்றும் காட்சி அக் கடையில் வேலை பார்த்த எங்கள் வயது சிறுவன் ஒருவன். அவன் பெயர் தற்போது ஞாபகம் இல்லை. சைக்கிள் கடை ஓனரிடம் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை தலையில் குட்டு வாங்கிக்கொண்டே இருப்பான். எப்பொழுதும் அழுக்கு சட்டையும் அழுக்கு அரை கால் டிராயரும் அணிந்து கொண்டு சைக்கிள் டூயுப் பஞ்சர் பார்ப்பது, சைக்கிளுக்கு காற்றடிப்பது போன்ற வேலைகளை காலையிலிருந்து மாலை வரை அசராமல் பார்ப்பான்.


பொழுது முழுவதும் சைக்கிள்களோடு உறவாடி கொண்டிருந்தாலும் காலையும் மாலையும் தன் கால்களே தனக்கு உதவி என நடந்தே வீட்டிற்கு போய் வந்து கொண்டிருப்பான். ஒரு தடவை கூட எங்களை போல் அவன் வயதிற்கு ஏற்ற சிறிய சைக்கிளை எடுத்துக்கொண்டு சுற்றி பார்த்ததில்லை. ஆனால் கடைகார அண்ணாச்சியும் நல்லவர் தான். நாள் முழுதும் வேலை வாங்கினாலும், குட்டினாலும் மதியம் அவனுடன் சேர்ந்து தான் சாப்பிடுவார். கறி குழம்பு ஆனாலும் மீன் குழம்பு ஆனாலும் அவனுக்கு கொடுத்துவிட்டு மீதி இருந்தால் தான் அவர் சாப்பிடுவார். கோபம் இருக்கும் இடத்தில் தானே குணம் இருக்கும்.


சற்று வளர்ந்த பின்பு வெளி இடங்களுக்கு போகும்போது குறிப்பிட்ட இடத்திற்கு பேருந்தில் சென்றுவிட்டு அங்கிருக்கும் சைக்கிள் கடை ஒன்றில் சைக்கிளை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வோம். அப்போதெல்லாம் மினி பேருந்து, ஆட்டோ, கால் டாக்சிகள் இல்லை. பேருந்து செல்லாத இடமாக இருந்தால் வாடகை சைக்கிள் தான் ஒரே சிறந்த வழி.


வெளி ஊராகவோ தெருவாகவோ இருந்தால் ஆள் தெரியாமல் சைக்கிள் கொடுக்க மாட்டார்கள். யாரவது தெரிந்தவர் சொன்னால்தான் கொடுப்பார்கள். சிறு வயதில் சைக்கிள் ஓட்டுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். தஞ்சையிலிருந்து நானும் என் நண்பனும் (ஒவ்வொரு பயணத்திலும் ஒவ்வொரு நண்பன் சேருவான்) சைக்கிளிலேயே திருச்சி வரை சென்று வருவோம். அதுவும் நேர் வழியில் செல்லாமல், தஞ்சையிலிருந்து திருவையாறு சென்று அங்கிருந்து கல்லணை, துவாக்குடி என்று ஊர் முழுவதும் சுற்றி திருச்சி செல்வோம்.


அது போல் எங்கள் உறவினர்கள் வீட்டுக்கு நீடாமங்கலத்திற்கு சைக்கிளிலே செல்வோம். ஏழாவது எட்டாவது படிக்கும் வயதாக இருந்ததால் சில சமயம் அவர்கள் என்னப்பா? வீட்ல சொல்லிட்டுதானே வந்தே? என ஆச்சிரியமாக கேப்பார்கள்.


சைக்கிள் கடைகளை பற்றி சொல்லும் போது தஞ்சையில் இருந்த மிகவும் பிரபலமான "மனோகரன்" சைக்கிள் கடை பற்றி கூறித்தான் ஆகவேண்டும். தஞ்சையிலுள்ள நாஞ்சிக்கோட்டை சாலையில் மனோகரன் சைக்கிள் கடை மிகவும் பிரபலம். இப்போது இருக்கா என தெரியவில்லை. அவர் மட்டும் தான் சுமார் நூறு சைக்கிள்கள் அப்போதே வைத்திருந்தார். சைக்கிள் எடுப்போர் பெயர், எடுக்கும் நேரம் ஆகியவற்றை ஒரு நோட்டில் குறிப்பதற்கென்றே ஒருவர் இருப்பார். திரும்ப கொடுக்கும் சைக்கிள்களில் எல்லா பாகமும் இருக்கிறதா என செக் செய்ய மட்டும் இன்னொருவர் இருப்பார். அவரின் கடையில் ஆயுதபூஜை கொண்டாட்டங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். இருக்காதா பின்னே? நூறு சைக்கிள்கள் ஆச்சே!

அதே போல் இருதயபுரம் போஸ்ட் அபீஸ் பக்கம் "இயேசு" சைக்கிள் கடை என்று ஒன்று இருந்தது. அவரிடம் இருந்த அனைத்து சைகிள்களுமே ஓட்டை தான். இருந்தாலும் நல்ல சைக்கிள்கள் உள்ள பக்கத்து கடையில் எடுக்காமல் அவரிடம் தான் வந்து எல்லோரும் சைக்கிள் எடுப்பார்கள். எல்லாம் பழக்க வழக்கத்தினால் நடக்கும் வியாபாரம்.

ரயிலடி ஆஞ்சநேயர் கோவில் எதிரே உள்ள G.M. சைக்கிள் மார்ட் சைக்கிள் உதிரி பாகங்களுக்கு மிகவும் பிரபலம். கடை சிறியதாக இருந்தாலும் பாரம்பரியமாக அந்த கடையை வைத்துள்ளார்கள். அவர்களுக்கென்றே வாடிக்கையாளர்கள் உண்டு. விலை எதுவாக இருந்தாலும் வாங்கும் ஆளுக்கேற்றவாறு அதிகபட்சம் விலையை குறைத்தே விற்பனை செய்வார்கள். தற்போதும் அக்கடை உள்ளது.

ஹீரோ சைக்கிள்கள் அப்போது பிரபலம். அதே போல் இப்போதுள்ள B.S.A. சைக்கிள்கள் சற்று அதிக விலை உள்ள சைக்கிள்கள்.

சிறுவர்களாகிய எங்களுக்கென்று சைக்கிள் எல்லாம் அப்போது வாங்கி கொடுத்ததில்லை. இப்போது என் பிள்ளைகள் இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே சைக்கிள் கேட்டு அடம் செய்து வாங்கிவிட்டார்கள்.

சைக்கிள்கள் பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதன் தொடர்ச்சியா அதையும் எழுதலாம் என உள்ளேன். சரி ஜூட்...
share on:facebook