Thursday, January 28, 2010

படுக்கையறையில் சிக்கி குழந்தை தவிப்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர் - செய்தி

இது நடந்து ஓரிரு மாதங்கள் இருக்கும். இன்று அது சமந்தப்பட்ட ஒரு செய்தியை படித்தவுடன் தான் ஒரு விழிப்புணர்வு பதிவாக நாமும் இதை போட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இனி நடந்தது என்ன ...?

வேலை விசயமாக அடிக்கடி வெளியூர் செல்லும் வழக்கம்  உள்ளவன் நான். அப்படி  போகையில்  அலை  பேசியில் மனைவி மகளுடன் குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பேசும் பழக்கம் உண்டு (இல்லனாலும் விட்ருவாங்களா  என்ன?). அப்படி பேசுகையில் என் மனைவியோ/மகளோ பேசும் விதத்தை வைத்தே அங்க வூட்ல என்ன விசேசம்னு ஓரளவுக்கு நான் கணிச்சுடுவேன்(ரொம்ப தான் புத்திசாலின்னு எனக்கு நினைப்பு).

அப்படி ஒரு நாள் பேசும் போதுதான் என் மனைவியிடம் சற்று சுரத்து கம்மியாக காணப்பட்டது. என்ன விஷயம் என்று கிண்டி கிளறின பிறகு தான் உண்மை வெளியே வந்தது. எங்கள் அப்பார்ட்மென்ட்  4 அடுக்குகளை கொண்டது. எங்கள் பிளாட் 3- வது  மாடியில் இருக்கிறது. வீட்டிற்குள் நுழையும் மெயின் டோர் ஆட்டோ லாக் சிஸ்டம் கொண்டது. அதாவது சாவியே இல்லாமல் வெளியிலிருந்து வேகமாக இழுத்து சாத்தினால் கதவு தானாக லாக் ஆகிவிடும்.

எங்கள் வீட்டு பாத்ரூம் கதவின் உள்  தாழ்ப்பாள் சற்று உயரத்தில்  இருந்ததால்  என் இளைய மகளுக்கு அது எட்டாது. ஆகவே  எப்போதும் அவள் என் மனைவியிடம் வெளியே தாழ்பாள் போடச் சொல்லி உள்ளே அவள் குளிப்பது தான் வழக்கம். அவளுக்கு அது விளையாட்டு கூட. நாங்களும்  அதை விளையாட்டாக எடுத்துக்கொண்டு அது  போலவே  அவளுக்காக  வெளியில்  லாக்  செய்வோம்.
 
இந்த மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில் தான் அன்று என் மூத்த மகள் வெளியே விளையாட போய் விட்டாள். என் மனைவி துணிகளை காய போட மேல் மாடிக்கு சென்று விட்டார். பாத்ரூம் உள்ளே என் சின்ன மகள் குளித்துக்கொண்டிருக்கிறாள், கதவு வெளியில் தாழிட்டபடி.

என் மனைவி மாடிக்கு சென்ற சிறுது நேரத்தில் பலத்த காற்றொன்று அடிக்க, மெயின் டோர்  ஆட்டோ லாக் ஆகிவிட்டது. திரும்பி வந்த என் மனைவி உள்ளே செல்ல முடியவில்லை. குளித்துக் கொண்டிருந்த என் இளைய மகள் வெளியே வர முடியவில்லை.

பாத்ரூம் பக்கத்திலேயே ots(over to sky)இருப்பதால் மேல் வீட்டு பாத்ரூம் அருகில் இருந்து சத்தமாக என் மகளிடம் பயப்படாதே, அழுகாதே அம்மா சீக்கிரம் கதவை திறந்து விடுகிறேன் என என்  மனைவி கூவிக் (அழுது) கொண்டு இருக்கும் போதே பக்கத்தில் உள்ளவர்கள் அங்குள்ள ஒரு யலக்ட்ரிசியனை அழைத்து வந்து கதவை திறக்கும் வழியை தேடினார்கள். 

பிறகு அங்கிருந்த ஒருவரின் ஆலோசனைப்படி, மேல் மாடியில் உள்ள பிளாட்டில் இருந்து ஒரு கயிறு மூலம்  எங்கள் வீட்டின் பால்கனி அருகே யலக்ட்ரிசியனை இறங்க (தொங்க) செய்து அங்கிருந்தபடியே பால்கனி கிரில் டோர் பூட்டை  அறுத்து அதன்  மூலம்  எங்கள் ஹாலுக்குள் செல்ல முடிவானது (எங்கள் வீட்டின் ஹாலுக்கும் பால்கனிக்கும் இடையில் பிரெஞ்சு  டோர் தான். நல்ல  வேலை  அதை அன்று  லாக்  செய்யவில்லை. இல்லை என்றால்  பிரெஞ்சு  டோரின் பூட்டையோ/க்ளாசையோ அன்று உடைக்கவேண்டி இருந்திருக்கும்).

அதன்படியே அவரும் கயிற்றில் தொங்கியபடியே மிகவும்  கஷ்ட்டப்பட்டு பால்கனி கிரில் டோர் பூட்டை அறுத்து பிறகு அதன் மூலம் ஹாலுக்குள் நுழைந்து என் மகளுக்கு பாத்ரூம் கதவை திறந்து  விட பிறகுதான் என்  மகள்  வெளியே  வர முடிந்தது. பிறகு உள்ளிருந்தபடி மெயின்  டோர் லாக்கையும் ரிலீஸ் செய்து  கதவை திறந்து விட்டார்.

அதிலிருந்து மரியாதையா ஒரு கீயை எப்போதும் பக்கத்து வீட்டில் கொடுத்து வைத்துள்ளோம். பின்னால் தான் தெரியவந்தது இது எங்கள் வீட்டில் மட்டுமில்லை இன்னும் சில பிளாட்களிலும் இது போல் முன்பு நடந்துள்ளது என்று.

ஆகவே நண்பர்களே, எனக்கு தெரிந்து இந்த ஆட்டோ லாக்கினால் ஒன்றும் பெரிய பயனில்லை; சாவி போடாமல் பூட்டை பூட்டுவதை தவிர. ஆனால் சாவி உள்ளே மாட்டிக்கொண்டால் பின்னர் பெரும்பாடுதான். அனுபவத்த சொல்லியாச்சு. மத்தபடி நீங்களே முடிவு பண்ணிக்குங்க. ஆட்டோ  லாக் வேணுமா வேணாமானு.

நல்ல பதிவுனா நீங்க எப்பவும் வோட்ட போட்டுடுவிங்க. அப்ப இதுக்கும் அப்படியே போட்டுடுங்க.

* மேலே உள்ள தலைப்பு சில தினங்களுக்கு முன் செய்தியாக வந்தது.
share on:facebook

9 comments:

பலா பட்டறை said...

இது பற்றி நிறைய கேள்வி பட்டாச்சு, உங்களோடது இன்னும் கொடுமை, குழந்தைகள், வயதானவர்கள் பாத்ரூம் செல்லும்போது தாளிடாமலிருப்பதே நல்லது. உங்கள் குழந்தை சுலபமாயிருக்கும் என்று நினைக்கிறேன், அல்லது இது போன்ற சிறிய அறைகளுக்கு போக பயப்படக்கூடும். பேசி சாதாரன நிகழ்வாக்கி விடுங்கள். ஒரு சாவி போட்டு தாள் போட சோம்பி இருப்பதின் வசதிதான் இது.:))
--
நல்ல அனுபவ பகிர்வு..

ஸ்ரீராம். said...

நல்ல எச்சரிக்கை. எல்லோரும் படிக்க வேண்டியது. எங்கள் அனுபத்தில் ஒருமுறை இது மாதிரி ஆட்டோ லாக்கில் உள்ளே மாட்டிக் கொண்ட கீயை எடுக்க, திறந்திருந்த ஜன்னல் வழியே ஒரு குச்சியில் ச்பீகர் பாக்ஸ் மேக்னட்டைக் கட்டி (எடுக்க எளிது..) சாவியை வெளியே எடுத்துள்ளேன்.

பட்டாபட்டி.. said...

இதெல்லாம் பட்டுத்தான் , எப்போதும் ஒரு செட் சாவி-ய அருகில்
உள்ள நண்பர்கள் வீட்டில் கொடுத்துள்ளோம்..

போன மாதம் ஒரு சிறு குழந்தை , பாட்டலில் உள்ள இருமல் மருந்தை எடுத்து குடித்துவிட்டது..
நல்லவேளை.. காப்பாற்றிவிட்டோம்..

இதைப்போல் உள்ள் பொருள்களை( மாத்திரை பட்டைகள்) , அவர்கள் அணுகமுடியாத
உயரத்தில் வைக்கவேண்டும்..

கண்ணகி said...

ஆமாங்க. நானும் இது மாதிரி பட்டிருக்கேன். சிறுகுழந்தைகள் இருக்கு வீட்டில் பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

மாதேவி said...

மேற்கூறியவர்களுடைய கருத்துக்களுடன்.

பல்கனி,வீட்டுவாசல்களுக்குப் போடுவதைத் தவிர்த்துக் கொள்வது சிறந்தது.

ஆதி மனிதன் said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி.

சாய்ராம் கோபாலன் said...

இது கமான் ப்ராப்ளம். கார் சாவியும் தான் !!

இங்கு என் நண்பர்கள் பலர் வீட்டில் என் கார் மற்றும் வீட்டின் சாவி உண்டு.

சிறு குழந்தை என்றால் கொஞ்சம் கவனம் தேவை. குழந்தை பயந்து விடும்.

ஆதி மனிதன் said...

வருகைக்கு நன்றி சாய்ராம்.

cheena (சீனா) said...

ஆகா ஆகா - எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் இவை எல்லாம் தவிர்க்க இயலாததாகி விடுகிறதே ! என்ன செய்வது - எனக்கும் அயலகத்தில் இது மாதிரி ஒன்று நடந்தது. பயங்க்ர அனுபவம்

Post a Comment