பார்க்காமலேயே காதல், பேசாமலேயே நட்பு போலதான் இந்த வலை உலக வட்டாரமும். யாரோ எங்கோ எதை பற்றியோ எழுதுவதை படிப்பதும், அதற்க்கு நம்முடைய கருத்தை தெரிவிப்பதும், அதற்க்கு நாலு பேர் பதில் போடுவதும்...சற்று விதயாசமான உலகம் தான். அதிலும் என்னை போல் முகம் காட்டாதவர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். முகம் காட்ட போவதில்லை என்று முடிவெடுத்த பின், அடடா இவரை சந்திக்க முடியவில்லையே, அவரிடம் பேச முடியவில்லையே என்று அவ்வப்போது மனதில் ஆதங்கப்படுவதுண்டு. ஆனாலும் இதுவரை யாரையும் சந்திக்காமல் இருந்து விட்டேன். சென்ற வாரம் வரை!
நான் முன்பே ஒரு முறை சொல்லி இருந்தது போல் தனிப்பட்ட வேலை பளு மற்றும் பதிவுலகில் சும்மா 'டம்மி' பீசாக தான் இதுவரை உலாவி வருவதால் பெரிதாக ஒரு கலந்துரையாடல் மற்றும் பதிவுலக சந்திப்புகள் எல்லாம் நமக்கு எட்டாக்கனியாக நான் நினைப்பதுண்டு. இருந்தாலும் ஓரிரு சக பதிவர்களுடன் நான் அலை பேசி மூலமாகவோ, ஈமெயில் மூலமாகவோ தொடர்பில் இருப்பேன்.
அதில்
மோகன் குமாரின் பழக்கம் சற்று வித்தியாசமானது. நான் அவரை பார்க்கும் முன்பே அவரும் எனது தாயாரும் சந்தித்து உரையாடி இருகிறார்கள். நான் தான் கொஞ்சம் லேட்டு. தொடர்ந்து அலை பேசியில் தொடர்பில் இருந்தாலும் முதன் முதலாக ஒரு சக பதிவரை அதிலும் தற்போதைய டாப் பதிவரை சந்தித்த வரலாறு தான் கீழே...
சென்ற வெள்ளியன்று திடீரென்று அந்த அழைப்பு வந்தது. சரி இதை விட்டால் நமக்கு வேறு வாய்ப்பு கிடைக்காது அன்றே சந்தித்து விடுவோம் என்று கூறி அதன்படியே வெள்ளியன்று மாலை நம் வீடு திரும்பல் மோகன் குமாரை அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்தது மிகுந்த மன மகிழ்வை தந்தது.
மாலை 6 மணிக்கு சந்திப்பதாக திட்டம். மோகனின் அலுவலகத்தை அடைந்ததும் அவரே எனக்காக வெளியே வந்து என்னை வரவேற்று அழைத்து சென்றார். அவரை 'பல' புகைப்படங்களில் பார்த்திருப்பதால் எனக்கு அவரை நேரில் பார்த்ததும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் என்னை அவர் பார்த்ததே இல்லை. பார்த்து விட்டு என்ன நினைத்தாரோ? சின்ன பையன் என்னாமா எழுதுறாரு(!) என்றோ ஆளு பார்க்க நல்லாத்தான் இருகாரு ஆனா எழுதறது அப்படி ஒன்னும் தெரியலையேன்னு நினைச்சாரோ? சத்தியமா எனக்கு தெரியவில்லை.
பின்னர் அவரது அறையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தமிழ் இலக்கியம் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம் அப்படின்னு நான் சொல்லுவேன்னு நினைச்சிங்கனா சாரி...அதுக்கும் எனக்கும் வெகு தூரம்...பொதுவாக அவரது பணி, என் வேலை, அமெரிக்கா மற்றும் தற்போதைய இந்திய வாழ்க்கை, தாய் தந்தையர், குழந்தைகள் பற்றியும் நிறைய பேசினோம். இடை இடையே அவருக்கு போன் மற்றும் அலுவலக வேலை குறுக்கீடுகள் இருந்தாலும் ஒவ்வொன்றையும் எனக்காக சுருக்கமாக முடித்துக்கொண்டார். நன்றி மோகன். எப்படி இவ்வளவு பிஸியா இருந்து கொண்டு தினமும் ஒரு பதிவு போடறீங்களோ? சான்ஸே இல்ல...
'அண்ணனுக்கு' எல்லாவற்றிலும் ஆர்வம், சுற்றுப்பயணம், சினிமா, செல்ல பிராணிகள் வளர்ப்பு அது இது என்று. அவரது மேஜைக்கு கீழே sneaker ஷூ ஒன்று என் கண்ணை உறுத்திக்கொண்டு இருந்தது. கடைசியில் நான் கேட்கும் முன்பு அவரே கூறிவிட்டார். தினமும் இங்கு ஜிம்முக்கு போவேன். தொடர்ந்து மூன்று வருடங்களாக போய்கிட்டு இருக்கேன் என்று அவர் கூறியபோது என் கண்கள் சற்று விரியத்தான் செய்தது. Keep doing Sir.
அடுத்த மாதம் நாங்கள் நடத்தப்போகும் பள்ளி reunion பற்றி பேச்சு வந்த போது அதற்கும் நல்ல ஆலோசனைகள் தந்தார். சென்னையில் pet வளர்ப்பது பற்றி எனக்கு இருந்த மிக பெரிய தயக்கங்களுக்கு எல்லாம் சரியான விளக்கங்களையும் தீர்வுகளையும் சொல்லி அநேகமாக சரி, நாமும் வளர்த்தால் தான் என்ன என்று சிந்திக்க ஆரம்பிக்கும் அளவுக்கு அவரது பேச்சு இருந்தது. வீட்டில் பிள்ளைகளிடம் இன்னும் சொல்லவில்லை. சொன்னால் மிகுந்த சந்தோசப்படுவார்கள். உங்களுக்கு குழந்தைகளிடம் இருந்து நிச்சயம் ஒரு கார்ட் வரும் மோகன்!
சரி, நேரம் ஆகிவிட்டது என்று கிளம்பும் தருவாயில் அன்போடு இரவு உணவுக்கும் என்னை அழைத்து அவரும் நானும் அலுவலக கேண்டீனில் சாப்பிட்டோம். இனி லேட்டானால் 'வீடு திரும்பும்' வழியில் வீடு திரும்பல் மோகன் அலுவலகத்திற்கு வண்டியை ஓரம் கட்டி விட வேண்டியது தான். போற வழி தானே. அண்ணன பார்த்த மாதிரியும் இருக்கும் சாப்பிட்ட மாதிரியும் இருக்கும். ok வா மோகன்?
இந்த மூன்று வருடங்களில் முதன் முதலில் ஒரு சக பதிவரை நேரில் சந்தித்தது இது தான். முகம் காட்டாமல் இருப்பதில் சில சவுகரியங்களும் உள்ளது. அதே போல் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து பேச முடியாது. First time I broke my rules. But still happy. ரகசியமா என்ன போட்டோ ஏதும் எடுக்கலையே மோகன்? உங்களிடம் தெரிந்து கொள்ள நிறைய உள்ளது. மீண்டும் சந்திக்கும் வரை, நன்றி வணக்கம்.