//நான் ஒரு முறை இம்மாதிரி பிரச்சனையில் மாட்ட வேண்டியது. நல்ல வேலை தப்பித்தேன்//
நேற்று நார்வே நீதிமன்றம் ஒன்று தங்கள் குழந்தையை கொடுமை படுத்தினார்கள் என்பதற்காக அக்குழந்தையின் இந்திய பெற்றோருக்கு தந்தைக்கு 18 மாதமும் தாய்க்கு 15 மாதமும் சிறை தண்டனை வழங்கி உள்ளது. இது பெரும்பாலானோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அயல் நாடுகளில் பல வருடங்கள் குடும்பத்துடன் வாழ்ந்த எனக்கே இது சற்று பயத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மேலே போவதற்கு முன், இந்தியாவிலிருந்து வெளி நாடு செல்லும் நண்பர்கள் யாராக இருந்தாலும் அந் நாட்டிற்கு செல்லும் முன், அந்நாட்டின் முக்கியமான சட்ட திட்டங்களை, வரைமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இன்று எல்லா இடங்களிலும் இந்தியர்கள் தமிழர்கள் இருக்கிறார்கள். அதனால் அது ஒன்றும் பெரிய காரியமில்லை.
உதாரணத்திற்கு சிங்கப்பூர் மலேசியாவில் சுத்தம் மிக முக்கியம். நம்மூர் மாதிரி ரோட்டில் பேப்பர் அது இது என்று எதை போட்டாலும் 500 டாலர் 1000 டாலர் என்று பைன் போடுவார்கள் என்று தெரியும். சவூதி போன்ற நாடுகளில் மற்ற மதங்களின் வழிபாடுகள் தடை செய்யப்பட்டுள்ளது என தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதற்காக கடுமையான சட்டங்கள் உண்டு.
ஏன் நாம் மட்டும் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லையா? நாம் பெற்ற குழந்தைகளை நமக்கு கண்டிக்க, அடிக்க உரிமை இல்லையா என சிலர் கேட்கலாம். எந்த நாடாக இருந்தாலும் அங்குள்ள சட்டங்கள் அங்குள்ள பிரச்சனைகளின் அடிப்படையில் தான் உருவாக்கி இருப்பார்கள். அப்படி பார்க்கும் போது, மேலை நாடுகளில் பரவலாக குழந்தை கொடுமைகள் உண்டு. அதற்க்கு காரணம் அவர்களுக்கு குழந்தைகள் மேல் பாசம் இல்லை என்றில்லை. இன்னும் சொல்லப்போனால் நம்மை விட அவர்கள் அதிக நேரம் குழந்தைகளுடன் செலவிடுவார்கள். ஆனால், தனி மனித சுதந்திரம், விருப்பு வெறுப்பு என வரும்போது குழந்தை பாசம் அங்கே குறுக்கே வராது.
விவாகரத்து என்பது அங்கு சர்வ சாதாரணம். கணவன் மனைவியிடையே பிரச்னை உருவாகும் போது நம்மை போல் என் குழந்தைக்காக, குடும்பத்திற்காக தான் நான் பொறுத்து போகிறேன் அப்படி இப்படி எல்லாம் வசனம் பேசிக்கொண்டு இருக்க மாட்டார்கள் அவர்கள். அப்போது இந்த குழந்தை பாசமும் குறுக்கே வராது. கோர்ட் உத்தரவு படி யாராவது ஒருவர் பராமரிப்பில் குழந்தை வளரும். பெற்றோர் மட்டுமல்ல, குழந்தைகளும் இதை சாதரணமாக எடுத்துக்கொள்ளுங்கள்.
அவ்வாறு பெற்றோர் பிரியும் போது நம்மூர் போலவே அப்பவோ அம்மாவோ மறுமணம் செய்து கொள்ளும் போது 'சித்தி/சித்தப்பா' கொடுமைகளை சில குழந்தைகள் சந்திக்க நேரிடும். அது மட்டுமின்றி 'சைல்ட் அப்யூசர்ஸ்' நிறைய பேர் அங்கு இருப்பார்கள். அம்மாதிரி கொடுமைகளை தண்டிக்க மேலை நாட்டு அரசுகள் கடுமையான சட்ட திட்டங்களை பின்பற்றுகின்றன. இதில் தான் நம் இந்திய பெற்றோர்கள் விட்டில் பூச்சி போல் மாட்டிக்கொள்கிறார்கள்.
மேலை நாட்டில் உள்ள சட்டங்களை நாம் குறை கூறவும் முடியாது. அதே சமயம் அவர்களை போல் திட்டாமல், அடிக்காமல் நாம் குழந்தைகளை வளர்க்க முடியாது வளர்க்கவும் தெரியாது. நமக்கு ஒழுக்கம் அதிலும் நம் குழந்தைகள் ஒழுக்கமாக வளருவதற்காக நாம் என்ன வேண்டுமானாலும் செய்வோம். ஆனால், அங்கோ, ஐந்து வயது குழந்தைக்கே தனி பெட் ரூம். அந்த ரூமிற்குள் செல்ல பெற்றோரே பெர்மிஷன் கேட்க வேண்டும்/தட்டிவிட்டு செல்ல வேண்டும். அப்படி பட்ட தனிமனித சுதந்திரம் உள்ள நாடுகள் அவைகள்.
ஆனால் இந்த குறிப்பிட்ட கைது/தண்டனை சம்பவம் பல சந்தேங்கங்களை கிளப்புகிறது. குழந்தை தன்னை பெற்றோர்கள் திட்டினார்கள், ஒழுங்காக நடக்கவிட்டால் இந்தியா திருப்பி அனுப்பி விடுவோம் என மிரட்டினார்கள் என்பதையெல்லாம் எப்படி குழந்தை கொடுமை என்று எடுத்துக்கொண்டார்கள் என தெரியவில்லை. எந்த நாட்டிலும் குழந்தைகளை சாதரணமாக (அதாவது பொது இடத்தில் அல்லாமல்) திட்டுவது ஒன்றும் பெரிய குற்றமில்லை. அதே போல் கண்டிப்பதும். பிசிகல் அப்யூஸ் தான் குற்றமாக கருதப்படும்.
அதே போல் சம்பவம் நடந்து ஆறு மதங்களுக்கு மேல் அதுவும் குழந்தைகள் தற்போது இந்தியாவில் உள்ள போது இம்மாதிரி பெற்றோர்களை சிறையில் அடைப்பது அநியாயம். இரண்டும் விபரம் அறியா குழந்தைகள். அவைகள் அம்மா அப்பாவை பார்க்காமல் தவித்து விடாதா? அதிபட்சம் அவர்கள் வெர்பல் அப்யூஸ் செய்தததாக புகார் வந்திருந்தால் அவர்களை கூப்பிட்டு முதலில் ஒரு வார்னிங் செய்திருக்கலாம்.
முதலில் பெற்றோர்கள் திட்டினார்கள் என கூறிய அந்நாட்டு போலீஸ் தற்போது குழந்தை மீது காயங்களும் தழும்புகளும் இருந்தது என கூறுகிறது. குழந்தைகள் ஆறு மாதமாக இந்தியாவில் இருக்கும் போது இவ்வாறு குற்றச்சாட்டு வைப்பது பல சந்தேகங்களை கிளப்புகிறது. எது எப்படியோ, மக்களுக்காக தான் சட்டங்கள். அது எந்த நாடாக இருந்தாலும். இந்த பிரச்சனயை பொறுத்த வரை குழந்தையை திட்டினார்கள் என்பதற்கு சிறை தண்டனை என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அக் குழந்தைகளுக்காவது பெற்றோர் இருவரையும் உடனடியாக நார்வே அரசு விடுதலை செய்ய வேண்டும். அது தான் என் வேண்டுதலும் விருப்பமும்.
அதை விட முக்கியம். வெளி நாடு செல்லும் பெற்றோர்கள் அந்நாட்டு சட்ட திட்டங்களை தெரிந்து கொண்டு அதன் படி நடப்பது. நான் ஒரு முறை இம்மாதிரி பிரச்சனையில் மாட்ட வேண்டியது. நல்ல வேலை தப்பித்தேன். முடிந்தால் தனி பதிவாக போடுகிறேன்.