Tuesday, October 9, 2012

பொரித்தால் புழு கூட முறுகலாதான் இருக்கும் - KFC சிக்கன் பீஸில் புழுக்கள்


பதிவின் தலைப்பையும் மேலே உள்ள படத்தில் உள்ள வாசகத்தையும் ஒரு முறை திரும்பி படித்து பாருங்கள்! இது வரை நான் தேர்ந்தெடுத்த எந்த ஒரு படத்துக்கும், பதிவுக்கும் இப்படி ஒரு  அர்த்தம் கிடைத்ததில்லை.

KFC எனப்படும் மேற்கெத்திய உணவகத்தின் திருவனந்தபுரத்து கிளையில் நேற்று பரிமாறப்பட்ட சிக்கன் பீச்களில் இருந்து புழுக்கள் வெளிவந்ததாக செய்தி வெளி வந்தது சற்று என்ன மிகவும் அதிர்ச்சியாகவே இருந்தது.

முதலில் ஒன்றை நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இங்கு செயல்படும் KFC, McDonald's, Pizza hut, போன்ற எல்லா உணவகங்களும் நம்மூர் லோக்கல் மக்கள் வைத்து நடத்துவது தான். அங்கு போய் சாப்பிடுவதினாலோ, அம்மாதிரி ஜன்க் புட் எனப்படும் உடலுக்கு கெடுதலான உணவை அடிக்கடி குடும்பத்தோடோ, குழந்தைகளுடனோ போய் சாப்பிடுவதால் நாம் ஒன்றும் அமெரிக்கர், ஐரோப்பியர்கள் ஆகி விட முடியாது.

நிச்சயம் ஓரிரு முறை பல்வேறு உணவு வகைகளை ருசித்து பார்க்க வேண்டும் என்ற அளவில் இந்த உணவு வகைகளை உண்ணலாம். அதை விடுத்து, வறட்டு கவுரவுத்துக்காகவும், பெருமைக்காகவும் சாப்பிட்டால்  இம்மாதிரி பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.

நம்ம ஊரு நாட்டுக்கோழி குழம்பு, அதுவும் வீட்டில் பெண்கள் மிளகாய், மல்லி என்று கைப்பட அரைத்து வைத்த குழம்பு என்றால் அதற்க்கு இந்த KFC சிக்கன் கிட்ட வர முடியுமா? மேலை நாட்டினரே இப்போதெல்லாம் இயற்கை உணவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். சமீபத்திய ஆய்வின் படி இயற்கை உணவை பெரும்பாலும் விநியோகிக்கும் 'சப் வே' தான் மிக சிறந்த உணவகமாக அறிவிக்கப் பட்டுள்ளது. மிக மோசமான உணவகங்களாக McDonald போன்றவைகள் இடம் பெற்றிருந்தன.

வெளி நாடுகளில் இம்மாதிரி உணவுகளை ஜன்க் புட் என்று தான் கூறுவார்கள். அங்கு சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் அவசரத்திற்காகவோ, குறைந்த விலையில் உணவை முடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவோ, இல்லை குழந்தைகள் அவர்களுக்கு பொம்மைகள் கிடைக்கும் என்பதற்காகவோ வற்புறுத்தி கூட்டிக் கொண்டு போனால் தான் உண்டு. எந்த ஒரு பார்ட்டிக்கும் அங்கு McDonald 's கூட்டிக் கொண்டு போக மாட்டார்கள்.

ஆனால் நம் மக்கள் தான் அதை ஒரு 'ஸ்டேடஸ் சிம்பலாக' இங்கு எடுத்துக் கொள்கிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரண்டு மூன்று முறை எங்கள் பிராஜக்ட் டீமில் KFC யில் ஆர்டர் செய்துள்ளார்கள். அவர்களுக்கு இந்த செய்தி தெரிந்தால் அடுத்த முறை ஆர்டர் செய்வார்களா என தெரியவில்லை. அதில் 'டீசண்டாக' சாப்பிட வேண்டும் என்று சிக்கன் பீஸ்களை பிய்த்து கூட சாப்பிடாமல், வாயிலிருந்து எடுக்காமல் அப்படியே கடித்து மென்று சாப்பிட்டால் அப்புறம் எப்படி உள்ளே புழுக்கள் இருப்பது தெரியும்?

இது எங்கோ நடந்த ஒரு சம்பவமாக நாம் பார்க்க முடியாது. ஏனென்றால் இதே போல் ஒரு சம்பவம் ஓரிரு மாதத்திற்கு முன் இதே கேரளாவில் நடந்து ஒரு பொறியாளர் 'புட் பாய்சனால்' இறந்தே விட்டார். அது மட்டுமன்றி இங்கு தயாரிக்கப் படும் பெரும்பாலான உணவு வகைகள் 'ப்ரோசன்' செய்யப்பட்டு பாதுகாக்கப் படுபவை. நம்மூரில் நிலவும் கரண்ட் கட்டில் இவர்கள் ஜெனரேட்டர்கள் வைத்து பிரீசரை ஆனில் வைத்திருப்பார்களா என தெரியவில்லை.

சமீபத்தில் பீசா ஹட் அருகே காத்திருந்த போது ஒரு முதிய தம்பதியினர் பீசா ஹட்டில் சாப்பிட உட்காருவதற்கு இடம் கிடைக்காமல் வெகு நேரம் காத்திருந்து திரும்பி சென்றதை பார்த்து சற்று ஆச்சர்யமாக தான் இருந்தது. ஹ்ம்ம் எல்லோருக்கும் மெல்லிய வெளிச்சத்தில் ஆயிரம் ருபாய் கொடுத்து இரண்டு மூன்று சிக்கன் பீஸ்கள் சாப்பிட ஆசை வந்து விட்டது.

என்னைப் பொறுத்தவரை நான்வெஜ் என்றால் வீட்டில் சமைக்கப் பட்டதற்கு ஈடு இணை ஏதுமில்லை. குறிப்பாக நாள் பட்டு போன இறைச்சியாக இருக்குமோ? நேற்றைய குழம்பாக இருக்குமோ என அஞ்ச தேவையில்லை.

லேட்டஸ்ட் அப்டேட்: முதல் கட்ட விசாரணையில், ஸ்டாக் செய்யப்பட்டிருந்த கோழி இறைச்சிகள் ஐந்து மாதத்திற்கும் மேற்பட்டவையாக இருக்கலாம் என சந்தேகப் படுகிறார்கள். அதே நேரத்தில் 270 டிகிரி வெப்பத்தில் இறைச்சிகளை நாங்கள் வேக வைக்கும் போது புழுக்கள் உயிருடன் இருக்க வாய்ப்பே இல்லை என்று KFC ஐ சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  


share on:facebook

20 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கோழி வளர்க்கும் பண்ணையைப் பார்த்தால் யாரும் சாப்பிடவே மாட்டார்கள்...

ப.கந்தசாமி said...

//இங்கு தயாரிக்கப் படும் பெரும்பாலான உணவு வகைகள் 'ப்ரோசன்' செய்யப்பட்டு பாதுகாக்கப் படுபவை//

நூற்றுக்கு நூறு உண்மை. நான் ஒரு தடவை சாப்பிட்டு, நல்ல காலம் வாந்தி வந்துவிட்டது.

கோவை நேரம் said...

இனி அந்த பக்கம் போவேன்...நல்ல வேளை..சொன்னீர்கள்

mubarak kuwait said...

சப் வே கூட இயற்கை உணவை தருகிறார்கள் என்று எப்படி சொல்கிறீர்கள்? நான் வேலை பார்த்து இருக்கிறேன், அதிலும் சிக்கன் fillat, நண்டு, hot dog இப்படி பட்டவை வைத்துதான் பரிமாறுகிறார்கள், நான் வேலை செய்ததால் எனக்கு தினம் ஒரு சான்விச் இலவசம் மூன்று மாதங்களில் குண்டாகிவிட்டேன், தற்போது முழுமையாக நிறுத்தி விட்டேன், நான் குவைதில் வேலை பார்கிறேன்.
kfc, mcdonalds,pizza hut நம்ம நாட்டுக்கு புதுசு கொஞ்சம் நாட்களில் மவுசு குறைந்து விடும், ஆனால் இங்குள்ள அஞ்சப்பர் உணவகத்தில் நல்ல கலை கட்டுகிறது என்ன கொஞ்சம் விலை அதிகம், உணவு தயாரிக்க நேரம் பிடிக்கும், உணவு காரம் என்பதால் அரபிகள் சாப்பிடுவதில்லை.
என்னதான் இருந்தாலும் நாடுகோழி, ஆட்டுக்கறி நானே வாங்கி வந்து சமைக்கும் உணவில் இருக்கும் ருசி எனக்கு வேறு எதிலும் இருக்காது
உங்கள் பகிர்விற்கு நன்றி

அமுதா கிருஷ்ணா said...

வருடம் இரண்டு முறை போனாலே ஜாஸ்தி.வீட்டு சாப்பாடு தான் சூப்பர்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இச் செய்தி எனக்கு எந்த ஆச்சரியத்தையும் தரவில்லை. இன்றைய உலக வாழ்வில் இவை சகசமெனும் நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டு விட்டான்.
குளிர்சாதனப் வசதிகளே உலக அழிவின் முதற்காரணி என்பேன். ஆனால் அதைத் தவிர்த்து நாம் வாழ தயாரா?
முற்றும் கசந்ததென்று பற்றறுத்தேன் எனும் துறவிகளுக்கே குளிர்சாதன அறை தேவையாக உள்ளது.
அவர்கள் சிறை செல்லும் போது கூட குளிர்சாதன வசதியோடு இருக்கவே போராடுகிறார்கள்.
தேவைக்குக் கொன்று தின்றவன், இப்போ தேவைக்கு அதிகமாகக் கொன்று குளிர்பதனத்தில் பாதுகாக்கிறான். உயிருடன் வாழ்ந்த காலத்தை விட அதிககாலம் கொல்லப்பட்ட மிருகம் குளிர் பதனத்திலுள்ளது.
கண்டம் விட்டு கண்டம் இறைச்சி, மீன் ஏன் காய்கறி,பழங்கள் கூடப் பயணிக்கிரது. மனிதனுக்கு இவை தேவையாகத்தான் உள்ளது.
இவற்றில் ஆங்காங்கே தவறும் நடக்கவே செய்கிறது.
நம் கண்ணுக்குத் தெரியும் போது, அதைப் பெரிது படுத்துகிறோம். தெரியவில்லையா? உலகம் போய்க் கொண்டே இருக்கிறது.
கருவாட்டில் புழுவென்கிறோம். கத்தரிக்காயில் புழுவுள்ளதே!!!
உங்களுக்கு ஒன்று தெரியுமா? உலகத்தின் சில மூலைகளில் மக்கள் புழுக்களை உணவாக உண்கிறார்கள்.*
அவை மட்டுமன்றி சிலந்தி, வெட்டிக்கிளி, தத்தன் பூச்சி,கறையான், கரப்பான், தேள்,பாம்பு, நத்தை, தவளை என்பன பல இன மக்களின் அன்றாட உணவு.
பிரான்சில் தயாரிக்கப்படும் அத்தனை வைனிலும் புழுச்சாறும் இருக்கும். தொன்கணக்கில் திராட்சையைப் பிடுங்கி அவற்றை ஒவ்வொறாகத் துப்பரவு செய்யமுடியுமா? அப்படியே கொட்டிப் பிளிகிறார்கள்.
ஜேர்மனியில் ஒருவகை உணவு கோவா(முட்டைக் கோஸ்) செய்கிறார்கள். கோவாவை சீவி வினாகிரியிலிடுவது, ஒன்றா இரண்டா? தொன்கணக்கே , தோட்டத்தில் இருந்து நேரே சீவும் இயந்திரத்துக்கே செல்கிறது.நிச்சயம் புழு இருக்கும் அது பற்றிக் கேட்டபோது. புழு இருக்கும்
அவையும் அதையே சாப்பிடுகின்றன அதனால் ஏதும் தீங்கில்லை.
காட்டுவாசிகள் தேனை அதன் வதையுடனே உண்பார்கள். அந்த வதைகளில் தேனீயின் குடம்பிப்பருவப் புழுக்களும் இருக்கும், அவை சிறந்த புரட்டீனாம்.
அமேசன் காட்டுவாசிகள் வேட்டைக்குச் சென்றால் வீடு திரும்ப 4 - 5 நாட்கள் செல்லும் , முதல் நாட் கொன்ற மிருகத்தை வெட்டிச் சற்று நெருப்பில் வாட்டிக் கூடையில் கொண்டு திரிந்து போதிய இறைச்சி சேகரித்ததும், திரும்புவார்கள். அப்போ முதல் நாள் இறைச்சி புழுப் பிடித்து நாறத் தொடங்கி விடும். அதை அவர்கள் எறிவதில்லை. நெருப்பில் வாட்டி , சோளத்தில் தயாரித்த ஒருவகை மதுவுடன் உண்டு மகிழ்வார்கள். இன்றும் வாழ்கிறார்கள். இதைப் படம்பிடித்த குழு நாற்றம் தாங்காமல் வாந்தி எடுத்ததாகக் கூறினார்கள். இதை நசனல் யீயோகிரபியில் பார்த்தேன்.
ஆனால் சமீபகாலமாக உணவில் நச்சுத் தன்மையெனும் பேச்சு அதிகம் அடிபடுகிறது. அவை புழுக்கலால்
ஏற்பட்டவை அல்ல, பழுதடைந்ததால் ஏற்பட்டதல்ல, உணவுவை நெடுநாள் பாதுகாக்க இடும் இரசாயனங்களால் சிலருக்கு ஏற்படும் ஒவ்வாமையால் ஆனது.
இந்தப் பூமிக் கோளத்தில் நம் நாடுகள் விசித்திரமானவை! சைவ உணவு மோட்சத்துக்குச் செல்ல வைக்குமென சொல்லி வளர்க்கப்பட்ட மக்களையுடைய நாடு.
அதனால் அசைவமென்றாலே மனப்பயம் அதிலும் இப்படி என்றால் சொல்லவே தேவையில்லை.
எனினும் நான் இயன்ற வரை , வெளியில் உணவுண்பதைத் தவிர்க்கிறேன்.





CS. Mohan Kumar said...

அட கொடுமையே :( இந்த செய்தியே உங்கள் பதிவு மூலம் தான் அறிகிறேன்

சதீஷ் செல்லதுரை said...

KFC பேஷன் கலையட்டும்...

ஆதி மனிதன் said...

@திண்டுக்கல் தனபாலன் said...
//கோழி வளர்க்கும் பண்ணையைப் பார்த்தால் யாரும் சாப்பிடவே மாட்டார்கள்...//

உண்மை தனபால். சில சமயங்களில் நானும் இறைச்சி வாங்க போய் அங்குள்ள நிலைமையை பார்த்தபின் வாங்காமல் வந்திருக்கிறேன். அது என்னவோ இறைச்சி கடைகள் மட்டும் பெரிய சிட்டியில் கூட சுத்தம் இல்லாமல் தான் வைத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் என் மனைவியிடம் நான் நான்-வெஜ் சாப்பிடுவதையே நிறுத்தலாம் என தோன்றுகிறது என கூறினேன்.

ஆதி மனிதன் said...

@பழனி.கந்தசாமி said...
//நூற்றுக்கு நூறு உண்மை. நான் ஒரு தடவை சாப்பிட்டு, நல்ல காலம் வாந்தி வந்துவிட்டது.//

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது என கூறுங்கள்.

ஆதி மனிதன் said...

@கோவை நேரம் said...

//இனி அந்த பக்கம் போவேன்...நல்ல வேளை..சொன்னீர்கள்//

ரொம்ப பயமுறுத்திட்டேனோ ?

ஆதி மனிதன் said...

@mubarak kuwait said...

//சப் வே கூட இயற்கை உணவை தருகிறார்கள் என்று எப்படி சொல்கிறீர்கள்...//

மத்ததை கம்பேர் செய்யும் பொது 'சப் வே' தேவலாம் என்று கூறுகிறேன். அதில் கால்வாசிதானே அசைவம். மற்றதெல்லாம் இலை தழை தானே?

ஆதி மனிதன் said...

@அமுதா கிருஷ்ணா said...

//வருடம் இரண்டு முறை போனாலே ஜாஸ்தி.வீட்டு சாப்பாடு தான் சூப்பர்.//

அப்ப நீங்களும் நம்மாளு தான்.

ஆதி மனிதன் said...

யோகன்: வருகை மற்றும் நீண்ட (நல்ல) கருத்துக்கு நன்றி. உங்கள் பொறுமையை கண்டு நான் பொறாமை படுகிறேன்.

ஆதி மனிதன் said...

@ மோகன் குமார் said...

//அட கொடுமையே :( இந்த செய்தியே உங்கள் பதிவு மூலம் தான் அறிகிறேன்//

கொடுமை தான் மோகன். என்ன செய்வது?

ஆதி மனிதன் said...

@சதீஷ் செல்லதுரை said...

//KFC பேஷன் கலையட்டும்...//

Repeattuuu...

Anonymous said...

உண்மையை சொல்ல வேண்டுமானால் KFC சிக்கனில் என்ன தான் இருக்கோ ? எனக்கு பிடிப்பதே இல்லை ... இங்கு பாப்பாய் சிக்கன் என்று ஒன்று உண்டு அது காரமாகவும், அருமையாகவும் இருக்கும் ..

புழுவுக்கு வருவோம்.. புழுவில் அதிகளவு புரதம் இருக்கின்றதாமே, அதனால் தான் என்னவோ கூடுதல் மெனுவாக புழுச் சிக்கன் பரிமாறினார்களோ .. என்னவோ ?

நடந்தது இந்தியா என்பதால் அமுக்கப்பட்டுவிடும், மேற்கில் கொஞ்சம் கடினம் தான் ... இங்கும் இப்படி நடைப்பெறுவதுண்டு .. மக்டோனால்டில் பெண்ணின் நகம் இருந்த சம்பவங்கள் எல்லாம் உண்டு ...

Anonymous said...

பசிக்கோ ருசிக்கோ சாப்பிடாமல் பெருமைக்கு சாப்பிட்டால் இப்படித் தான் .. நம்மவர்கள் உணர்வார்களாக ?

ஆதி மனிதன் said...

@இக்பால் செல்வன் said...

//பசிக்கோ ருசிக்கோ சாப்பிடாமல் பெருமைக்கு சாப்பிட்டால் இப்படித் தான் .. நம்மவர்கள் உணர்வார்களாக ? //

நன்றாக சொன்னீர்கள்.

அ. வேல்முருகன் said...

எப்போ கெண்டகி சிக்கன் இந்தியாவுக்கு வந்ததோ அப்பவே சொன்னார்கள்

நீங்கள் இன்று உறுதிபடுதியுள்ளீர்கள்

அப்புறம்

கெண்டகி சிக்கன் சாப்பிட்டா கௌரவம்

நாட்டுகோழி வறுத்து வீட்டுல சாப்பிட்டா நாட்டுப்புறத்தான் சொல்வாங்கல்ல

நான் அமெரிக்க போயிட்டு வந்தத எப்படி உலகுக்கு சொல்றது

Post a Comment