Tuesday, August 7, 2012

ஆடி தள்ளுபடியில் IT மாப்பிள்ளைகள்


அமெரிக்க IT மாப்பிளைகளின் அவல நிலையை வேறொரு பதிவில் பதிந்திருந்தேன். அது இன்னமும் மாறியதாக தெரியவில்லை. சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு சாரார் ஆண்களின் உரிமைகளுக்காக போராட ஒரு கமிஷன் தேவை என கோரிக்கை வைத்துள்ளார்கள். அதாவது, பெரும்பாலான விவாகரத்து வழக்குகளில் பெரும்பாலும் பெண்களுக்கு ஆதரவாகவே தீர்ப்புகள் வழங்கப் படுவதாகவும், அதிலும் பிள்ளைகளின் பொறுப்பு என வரும் போது  அது தாயிடமே ஒப்படைக்கப் படுவதாகவும் இந்த குழு குற்றச்சாட்டை வைக்கிறது. அது உண்மையும் கூட.

சரி நம்ம ஊர் மேட்டருக்கு வருவோம். இன்று வாழ்க்கை துணையை தேடும் போது  ஆண்களை விட பெண்கள் தான் பெரிய எதிர்பார்ப்புகளை வைத்துள்ளார்கள். அதிலும் குறிப்பாக IT யில் வேலை பார்க்கும் பெண்களை பற்றி கேட்கவே வேண்டாம் (இப்படி சொல்வதற்காக என்னுடன் சண்டை போட யாரும் வருவதற்கு முன்னால், நானும் IT யில் இருக்கிறேன். எனக்கு தெரிந்த/என் உறவுகார பெண்களே அப்படிதான் இருகிறார்கள்). தமிழகத்தை பொறுத்த வரையில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். அப்படி பார்த்தால் இன்று வேலை பார்க்கும் பெண்கள் பெரும்பாலும் சாதாரண நிலையில் இருந்து தான் வந்திருப்பார்கள். ஆனால், இவர்களின் எதிர்பார்ப்புகள் தான் திகைக்க வைக்கின்றன.

என் டீமில் உள்ள பையன் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெண் தேடுகிறார். அமெரிக்காவில் இருந்தாலும் ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. காலை மாலை என வீட்டில் பட்டையை போட்டுக்கொண்டு சாமி கும்பிடுவார். வார இறுதிகளில் கோவிலில் மறக்காமல் இவரை காணலாம் (நிஜமாதான் சொல்றேன்). இத்தனைக்கும் இவர் வரதச்சனை என்ற வார்த்தையை கூட வரன் தேடும் போது உபயோகிக்கவில்லை. இவருடன் இரண்டு பெண்கள் வைத்த கோரிக்கைகள் பின் வருமாறு.

1. கல்யாணமாகி அமேரிக்கா வந்தால் ஒரு புதிய "ஆடி(Audi )" கார் வாங்க வேண்டும் அதுவும் கருப்பு கலர் தான் எனக்கு பிடிக்கும்.

2. அப்படி இந்தியா வந்து வேலை பார்பாரானால் வருடத்திற்கு குறைந்தது 15 லட்சம் ரூபாய் சம்பாதிப்பவராக இருக்க வேண்டும்.

முதலில் ஒரு Audi காரின் விலை என்ன வென்று இந்தப்பெண்ணுக்கு  தெரியுமா என எனக்கு தெரியவில்லை. அடுத்ததாக ஒருவர் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்றால் அவருக்கு 27 முதல் 30 வயதிற்குள் இருக்கும். அப்படியானால் IT துறையில் அவர் வேலைக்கு சேர்ந்து ஒரு பத்து வருடங்கள் கூட ஆகி இருக்காது. அப்படி இருக்கும் போது ஒரு சில பெரிய நிறுவனங்களை தவிர பெரும்பாலான கம்பனிகளில் பத்து வருட அனுபவத்திற்கு நிச்சயம் 15 லட்ச ரூபாய் சம்பளம் கிடைக்காது. இதெல்லாம் அந்தப் பெண்ணுக்கு தெரியுமா என தெரியவில்லை.

இன்னொரு பெண், எனக்கு தெரிந்த ஒரு அமெரிக்க மாப்பிள்ளையிடம் முதன் முதலில் திருமண பேச்சு வார்த்தை எடுத்தவுடனேயே, திருமணம் ஆனா பிறகு எல்லா முடிவுகளையும் நான் தான் எடுப்பேன் என கூறியுள்ளார். அதன் பிறகு நம்மாளு ஏன் பேசப் போகிறாரு!

என் டீமில் உள்ள  இதே போல் பெண் பார்த்துக்கொண்டிருக்கும் சிலரிடம் நீங்கள் எல்லாம் கொஞ்சம் குறைவா பவுணு கேட்டா சீக்கிரம் பொண்ணு கிடைக்கும்பா என கிண்டலாக கூறினேன். அதற்க்கு அவர்கள், ஹல்லோ அவுங்க எங்களிடம் வரதச்சனை கேட்காம இருந்தா சரி சார் என்று பொலம்பி தள்ளி விட்டார்கள். சரி இப்படியே போனா எப்பப்பா நீங்கல்லாம் பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணப் போகிறீர்கள் என கேட்டதற்கு, பொண்ணுக்கு வயது 20 - 24 வயசு இருக்கும் போதுதான் இந்த ரூல்ஸ் எல்லாம் போடுவாங்க அப்புறம் 26-27 வயசு ஆயிடுச்சுனா எல்லா ரூல்சும் தள்ளுபடி ஆகி செட்டில் ஆயிடும். ஏன்னா அப்ப அவங்களுக்கு கொஞ்சம் வயசு ஆகி போயிடும் அதுதான் என விரக்தியில் கூறினார்கள்.

எனக்கு என்னாமோ அளவுக்கு மீறின எதிர்பார்ப்புகளும், தேவையில்லாத கட்டுப்பாடுகளை திருமணத்திற்கு முன்பே போடுவதும் அவர்களையும் பாதித்து, இதை எல்லாம் தாண்டி திருமணம் ஆகும் போது அதுவே மணமக்களுக்குள் தேவையில்லாத இடைவெளியை ஏற்படுத்தும் என்றே என் எண்ணம். அதற்க்கு பதிலாக திருமணம் ஆனபின் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதே புத்திசாலித்தனமாக எனக்கு தோன்றுகிறது.

சமீபத்தில் பெண் தேடி அலையும் ஒரு IT வாலிபர் என்னிடம் சொன்னது, சார், எங்காவது ஆடி தள்ளுபடியில் மாப்பிள்ளை வேணும்னு விளம்பரம் பார்த்தா சொல்லுங்க சார். நாங்க ரெடி என்று.

என்ன கொடுமை சரவணா இது?


share on:facebook

16 comments:

Ramani said...

யானைக்கொரு காலமென்றால் பூனைக்கொரு காலம்
முன்பு பைய்னகளும் அவர்களுடைய பெற்றோர்களும்
ஆடிய ஆட்டத்திற்கு கொஞ்சம் அனுபவிக்கட்டுமே ?
சுவாரஸ்யமான ப்திவு.வாழ்த்துக்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஆடி தள்ளுபடியில் மாப்பிள்ளையா...

ரைட்டு..

விருச்சிகன் said...

உண்மையை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். என்னுடைய நண்பரின் மைத்துனருக்கு பெண் தேடுகிறார்கள். அவர் ஒரு திருமண மையத்தை தொடர்பு கொண்டபோது, அந்த திருமண மைய அதிகாரி சொன்னது, "இப்பெல்லாம் பொண்ணுங்க ரொம்ப கண்டிஷன் போடறாங்க. ஒரு பொண்ணு, கப்யானதுக்கு அப்புறம் no attaachments and enclosures , அதாங்க, பையனோட அப்பா அம்மா கூட வரகூடாது அப்படிங்கரான்கலாம். இன்னொரு பொண்ணு, நீ உங்க அப்பா அம்மாவை பாக்கறது உன்னோட இஷ்டம்... ஆனா என்ன கூப்பிடாத. 15 நாளுக்கு ஒரு தடவ, எங்கேயாவது பொது எடத்துக்கு போயி அவங்கள பாத்துட்டு வந்துடனும்" அப்படின்னு கண்டிஷன் போடறாங்களாம்.

இதுக்கெல்லாம் காரணம், அவங்கள வளர்த்த அப்பா அம்மாவைதான் சொல்லணும். போற போக்குல, பொண்ணு எடுத்து பொண்ணு குடுத்தாதான் கல்யாணமே ஆகும் போல...

நல்ல வேலை, 10 வருஷ முன்னாடியே எனக்கு கல்யாணம் ஆயிடிச்சு.

விருச்சிகன் said...

வணக்கம். நான் உங்களோட 100 வது follower.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல அலசல்...

சில இடங்களில் உண்மையாக நடப்பதுண்டு...

(இரு மனங்கள் சேராது... பணங்கள் சேரும்)

நன்றி… தொடர வாழ்த்துக்கள்...

krish said...

தாங்கள் குறிப்பிட்டுள்ளதும் நடக்கின்றது.
நன்றி.

திருவாரூர் சரவணன் said...

ஒரு அரசுப்பள்ளி ஆசிரியை. வயது 43 ஆகி விட்டது. ஆள் கறுப்பு நிறம். மாதம் 30ஆயிரம் ரூபாய் சம்பளம். (அந்த ஆசிரியை வேலை பார்ப்பது சிறு நகரம்தான். மாதம் 6 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவில்லை) ஆனால் என்னுடன் படித்தவர்கள் 50ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள். எனக்கு ஏன் இந்த கஷ்டத்தை (?!) ஆண்டவன் கொடுக்கிறான்னு தெரியலையே என்று புலம்புவார். நான் 15ஆயிரம் ரூபாய் அளவுக்கு உழைத்துவிட்டு 5 ஆயிரம் சம்பளம் வாங்கி அவதிப்பட்டவன்.இப்போது எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு சொந்த தொழில் தொடங்கி ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைத்து மாதம் 8ஆயிரம் ரூபாய் பார்க்க போராடிக்கொண்டிருப்பவன். அந்த அம்மா(வேற எப்படி சொல்றது) 30 ஆயிரம் சம்பாதித்து கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லும்போது எனக்கு எவ்வளவு ஆத்திரம் வந்திருக்கும்.? இதுல என்ன கொடுமைன்னா, 43 வயசு ஆனது புரியாம மாசத்துக்கு 50 ஆயிரம் சம்பாதிக்கிற மாப்பிள்ளைய தேடுது. நல்லா சம்பாதிக்கிற 50 வயசு ஆளே 20வயசுல பொண்ணுகேட்குற காலம் இது.

அமுதா கிருஷ்ணா said...

சொந்தக்கார பையன் அமெரிக்காவிலிருந்து போன மாதம் ஒரு வாரம் அவனின் நிச்சயத்திற்கு இங்கு வந்தான். மிக சிம்பிளாக நிச்சயம் ஒரு கோயிலில் முடிந்தது. அடுத்த இரண்டு நாள் கட்டாயம் ஊர் சுற்ற வேண்டும் என்று பெண் கேட்கவும் நம்ம ஆளும் ஜெட்லாக் முழுவதும் தீரும் முன்னரே ஒன்றரை நாள் ஊர் சுற்றினார்கள். பெண் செலவு செய்தது பையனின் 23 ஆயிரம் ரூபாய்களை. பெண்ணின் அப்பா என்ன ஒரு ஆடி கார் கூட அமெரிக்காவில் உன்னிடம் இல்லையா? பேங்க் பேலன்ஸ் எவ்வளவு உள்ளது. என் பெண் அங்கு வருவதால் அவளை எம்.எஸ் படிக்க வைக்கணும் அப்படி இப்படி என்று பேச பேச பையன் அரண்டு விட்டான். அவன் அமெரிக்கா சென்று விட இப்போ பையனின் பெற்றவர்கள் இந்த திருமணம் வேண்டாம் என்று கெஞ்சி கொண்டு உள்ளார்கள். பெண்ணை பெற்றவர்கள் நாங்கள இந்த் பையனை விடமாட்டோம் என்று பஞ்சாயத்து போய் கொண்டு இருக்கிறது. பையன் மிகவும் நல்லவன். நன்கு படிப்பான்.

SathyaPriyan said...

ஆடி கார் கேட்பதாலேயே அவர்களது எதிர் பார்ப்பெல்லாம் தவறு என்று சொல்லிவிட முடியாது.
ஒரு வகையில் அவர்களை பாராட்டவே வேண்டும். எல்லாவற்றுக்கும் தலையை ஆட்டி விட்டு திருமணத்திற்கு பின்னர் டார்ச்சர் செய்யாமல் முன்னரே தெளிவாக தங்களது எதிர் பார்ப்புகளை சொல்லிவிடுவதே சிறந்தது.

நம்மால் அவர்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடிந்தால் திருமணம் செய்து கொள்ள போகிறோம். இல்லை என்றால் விலகிவிட போகிறோம்.

ஆதி மனிதன் said...

@Ramani said...
//யானைக்கொரு காலமென்றால் பூனைக்கொரு காலம்//

அது என்னவோ உண்மை தாங்க. வருகைக்கு நன்றி ரமணி சார்.

ஆதி மனிதன் said...

@கவிதை வீதி... // சௌந்தர் // said...
//ஆடி தள்ளுபடியில் மாப்பிள்ளையா...

ரைட்டு.. . //

ஆமா சௌந்தர். சீக்கிரம் முந்திக்கிங்க. அப்புறம் கிடைக்காம போய்டும்.

ஆதி மனிதன் said...

@விருச்சிகன் said...
//உண்மையை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்//

நன்றி விருச்சிகன்.

//நீ உங்க அப்பா அம்மாவை பாக்கறது உன்னோட இஷ்டம்... ஆனா என்ன கூப்பிடாத. 15 நாளுக்கு ஒரு தடவ, எங்கேயாவது பொது எடத்துக்கு போயி அவங்கள பாத்துட்டு வந்துடனும்//

இது கொஞ்சம் இல்ல, ரொம்பவே ஓவரா படுது. வெளியில சொல்லிடாதீங்க.

//நல்ல வேலை, 10 வருஷ முன்னாடியே எனக்கு கல்யாணம் ஆயிடிச்சு. //

Same blood.

Avargal Unmaigal said...

//வார இறுதிகளில் கோவிலில் மறக்காமல் இவரை காணலாம்//
காரணம் கோயிலில் உணவுகள் மிக குறைந்த விலையில் கிடைப்பதாலா? அல்லது சாமியை கும்பிட்டாவது பொண்னு கிடைக்கும் என்பதாலா அல்லது வேறு எந்த கெட்டப்பழக்கம் இல்லாததால் பெண்களை சைட்டு அடிக்க வருகிறா?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நல்ல வேளை எனக்கு திருமணம் ஆகிவிட்டது

"என் ராஜபாட்டை"- ராஜா said...

வாழ்த்துகள் உங்களை பின் தொடபவகளின் எண்ணிக்கை 100 தாண்டிவிட்டது . நான் 101

Anonymous said...

என்னது ஔடிக் காரா !!! இந்தியா வந்தால் பதினைந்து லட்சம் சம்பாதிக்கணுமா ???? ஆணியே பிடுங்க வேண்டாம் .. !!!

திருமணமான பின்னர் எல்லா முடிவும் பெண்ணே எடுப்பார் எனில் - அவர் எதிர்ப்பார்ப்பது கணவனை அல்ல, அடிமை ஒருவரை !!!

திருமணத்தில் எதிர்ப்பார்ப்புக்களே இருக்கக் கூடாது என்பது தான் எனது எண்ணமும், என்ன சொன்னாலும் சில எதிர்ப்பார்ப்புக்கள் வந்துவிடும் என்பது நிதர்சனம் ... !!! ஆனால் அதற்கும் ஒரு லிமிட் வேண்டாமா ??? !!!

ஆண்களும் சளைத்தவர்கள் அல்ல - ஒரே சாதியில், ஒரே மதத்தில், ஒரே ரேஞ்சில், ஒரே உத்தியோகத்தில், வெள்ளை வெளேர் என பெண் தேடினால் - வருவது எல்லாம் இப்படி ஏடாக் கூடமாகத் தான் இருக்கும் .. !!!

இந்தியாவில் பல நல்ல பெண்களும் இருக்கின்றார்கள் .. கொஞ்சம் சிட்டிக்கும் வெளியே போய் பார்க்கச் சொல்லுங்கள் அவரை !!!

Post a Comment