Wednesday, October 19, 2011

தைரியலட்சுமி செல்வி ஜெயலலிதா


ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சர், இருபத்திநான்கு மணி நேரமும் கருப்பு பூனை பாதுகாப்புடன் உலா வருபவர். அவர், பக்கத்து மாநிலத்தில் நடக்கும் ஒரு நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர் ஆவதற்கு பாதுகாப்பு இல்லை என நேரில் ஆஜர் ஆவதற்கு விலக்கு அளிக்க கோருகிறார். என்ன கொடுமை  சரவணா இது?

கர்நாடகா மாநிலம் அப்படி ஒன்றும் தீவிரவாதிகளோ நக்சலைட்டுகளோ நிறைந்த மாநிலம் அல்ல. அதே போல் இவருக்கும் தற்போது எந்த ஒரு தீவிரவாத கும்பலின் அச்சுறுத்தலும் இருப்பதாக நமக்கு தெரியவில்லை. இப்படியெல்லாம் சொல்வதற்கு ஒரே காரணம் நாட்களை கடத்தி வழக்கையே ஒன்றும் இல்லாமல் செய்வதற்கு தவிர வேறு ஒன்றும் இல்லை.

இத்தனைக்கும் பாதுகாப்பு காரணங்களுக்காக நீதி மன்ற வளாகத்தையே மாற்றி விட்டார்கள். அது தவிர, விமான நிலையத்திலிருந்து நீதி மன்றத்திற்கு செல்ல தனி பாதுகாப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனம் வேறு. இவையெல்லாம் மீறி அப்படி என்ன பாதுகாப்பு இவருக்கு வேண்டும் என தெரியவில்லை. இல்லை கர்நாடக மாநில அரசையும், காவல் துறையையும் வேறு ஒரு மாநில முதல் அமைச்சருக்கு பாதுகாப்பு அளிக்க கூட துப்பு இல்லை என கூற வருகிறார்களா?

இந்த A.K. 47 , கருப்பு பூனை பாதுகாப்பெல்லாம் இந்திய அரசியல்  வாதிகளுக்கு மட்டும் தான். அமெரிக்க ஜனாதிபதியோ போகும் வழியில்  உள்ள சாலையோர ரெஸ்டாரன்ட்டில் இறங்கி மக்களோடு மக்களாக பர்கர்  வாங்கி சாப்பிடுகிறார். அமெரிக்க ஜனாதிபதிக்கு இல்லாத அச்சுறுத்தலா  நம்மூர் மாநில முதல் அமைச்சருக்கு இருந்து விட போகிறது? இன்னும் சொல்லப்போனால் நம்மூரை போல் பொழுதுக்கும் A.K. 47 துப்பாக்கிகளோடும், கருப்பு பூனை பாதுகாப்போடும் எந்த ஒரு நாட்டு அமைச்சர்களோ, முதல்வர்களோ, பிரதமர், ஜனாதிபதிகளையோ நான் பார்த்ததில்லை.

இதில் இன்னொரு காரணம் வேறு நீதி மன்றத்தில் தெரிவித்து இருக்கிறார்கள். அதாவது, புதிதாக ஏற்பாடு செய்யப்பட்ட நீதிமன்ற  வளாகத்தில், புதிதாக பெயின்ட் அடித்திருப்பதாகவும், அது முதல்வருக்கு  ஒத்துக்கொள்ளாது எனவும் அதனால் இரு வாரங்களுக்கு விசாரணையை  தள்ளிப்போட வேண்டுமாம். இன்னும் என்னவெல்லாம் சொல்லப்போகிறார்களோ?

சரி, நாளையே ஒரு வெள்ளம், விபத்து என ஏதாவது (அப்படி ஏதும் நடந்து விடக்கூடாது) ஒரு அவசர நிலை ஏற்பட்டால் இப்போது கூறியது போல் 96 மணிநேர அவகாசம் எடுத்துக்கொண்டு தான் ஒரு மாநில முதல்வர்  பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்று பார்ப்பாரா?

நல்ல வேலை இவை எல்லாவற்றையும் நிராகரித்த நீதி மன்றங்கள் நாளைக்குள் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறபித்துள்ளது. பொதுவாக இம்மாதிரி விசயங்களில் நீதி மன்றங்கள் சற்று கடுமையாகவே உத்தரவு பிறப்பிக்கும். ஆனால் அப்படி ஒன்றும் இந்த உத்தரவில் தெரியவில்லை.  அதற்கு மேல் நாம் கூறக்கூடாது. பிறகு அது நீதிமன்ற அவமதிப்பாக  போய்விடும். அதனால் ஜூட்....

கடைசியா வந்த செய்தி : ஒரு வழியாக முதல்வர் நீதிமன்றத்தில் ஆஜர் என்று.



share on:facebook

No comments:

Post a Comment