Monday, July 11, 2011

கட்டிங் ஸ்பெஷல்: ஆண்களுக்கு நிகராக பெண்களும்

பிறந்த ஒரு வருடத்திலிருந்தே நாம் எல்லோரும் கட்டிங் போட ஆரம்பித்து விடுகிறோம். மனித நாகரிகம் வளர்ச்சி அடைந்ததிற்கு இன்னொமொரு  அடையாளம், நம் முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள நாம் அடிக்கடி செய்து கொள்ளும் (ஹேர்) கட்டிங் தான்.

நான் சிறு வயதாக இருந்த போது என்னையும் என் அண்ணனையும் என் தந்தை வழக்கமாக ஒரு முடிதிருத்தும் நிலையத்திற்கு அழைத்து செல்வார். கடையின் பெயர் நினைவில்லை. ஆனால் அந்த மாமாவின் முகம் அப்படியே நினைவில் உள்ளது. முழுதும் நரைத்துப்போன வெள்ளை முடியுடன், அவரின் கனிவான முகமும், பாசமுடன் என்ன தம்பி நல்லா இருக்கீங்களா? என அவர் உண்மையான அக்கறையுடன் கேட்கும் குரலும் என்னால் மறக்க முடியாது. ஒவ்வொரு முறை முடி திருத்திக்கொள்ளும்  போதும் அப்பா தின்பண்டங்கள் நிறைய வாங்கி தருவார். அதனால் முடி வெட்டி  கொள்வதென்றால் முதல் ஆளாக நான் கிளம்பி நிற்பேன்.

நடுவில் ஒரு சமயம் நான் என் உறவினர் வீட்டிற்கு (அசலான தஞ்சை  மாவட்ட கிராமம் ஒன்று) சென்றிருந்த போது அங்கு முடி  வெட்டிக்கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. நான் எவ்வளவோ சொல்லியும் கேக்காமல், வழக்கமான ஒரு படி அரிசிக்காக முடி வெட்டும் தாத்தாவும் நீ வா தம்பி, அடுத்து நீ வாப்பா என உறவினர் வீட்டில் இருந்த எல்லா சிறுவர்களுக்கும் கட்டாயப்படுத்தி முடி வெட்டிக்கொள்ள செய்தார். அதுவரை வேறு எந்த புது முடி திருத்துபவரிடமும் முடி வெட்டி பழக்கமில்லாததால் நான் பாட்டுக்கு கற்சிலை போல் அமர்ந்திருக்க அவர் என் முகத்தை அந்த பக்கமும் இந்த பக்கமும் திருப்பி என் கழுத்தை ஓடித்துவிட்டார். அது மட்டுமில்லாமல் இங்க பார், அங்க பார் என அவரின் கரடு முரடான முக தோற்றமும், தாடியும் மீசையும்   பார்த்து எனக்கு  கிலியே  பிடித்துவிட்டது. அன்றிலிருந்து ஊர் பக்கம் போவது என்றாலே முடி வெட்டிக்கொள்ள மாட்டேன் என்ற நிபந்தனையுடன் தான் செல்வேன்.
 
அதன் பிறகு பெரியவனாக ஆனா பிறகு என் தந்தை எனக்கு கொடுத்த சுதந்திரத்தின் காரணமாக ஸ்டேப் கட்டிங், பங்க் கட்டிங் என விதவிதமான  சலூன்களை எட்டி பார்த்ததுண்டு. முடி திருத்தும் தொழில் தற்போது  நல்ல  நிலையை எட்டி உள்ளது. சென்னையில் ஏ. சி. வசதி இல்லாத சலூனே  இல்லை எனலாம். ஆனால் உள்ளே சென்றால் சில கடைகளில் ஏசியும்  இல்லாமல் பேணும் இல்லாமல் நம்மை கஷ்ட்டப்பட வைத்துவிடுவார்கள் என்பது தனிக்கதை.

சென்னை போன்ற பெரு நகர்களில் சிறுவர் மற்றும் மகளிர்க்கான சலூன்கள் தற்போது உண்மையிலேயே மிகவும் மார்டனாகவும் வசதியாகவும் உள்ளது.  காசும் அதே போல் தான். நூறு ரூபாய்க்கு குறைந்து எந்த சேவையும் அங்கு  கிடைக்காது. இதில் கவனிக்க வேண்டிய சிறப்பு அம்சம் என்னவென்றால்,  ஆண்கள் சலூன்கள் பெரும்பாலும் முடி திருத்தும் தொழிலை பரம்பரையாக  செய்பவர்களே நடத்துகிறார்கள். ஆனால் பெண்கள் அழகு நிலையம் பெரும்பாலும் அனைத்து தரப்பாலும் ஒன்று சுய தொழில் மூலமாகவோ அல்லது  அதற்கென்று படித்து முறையாக தொழில் செய்பவராகவோ தான்  இருக்கிறார்கள். ஆகையால் எப்படி பார்த்தாலும் பெண்கள் இத்துறையில்  பாராட்ட வேண்டியவர்களே. 

சரி இப்போலாம் எப்படி நம்ம ஹேர் ஸ்டைல் போகுதுன்னு கேட்டிங்கனா அது  ஒரு பெரிய சோக கதை. அமெரிக்காவில் இந்தியர்கள் IT துறையில்  சாதிக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால் எனக்கு தெரிந்து பெரும்பாலான இந்தியர்கள் அமெரிக்காவில் கஷ்டப்படும் ஒரே விஷயம் இந்த முடி வெட்டி  கொள்வதில்தான். 

மற்ற தொழில்களை போலவே முடி திருத்தும் தொழிலும் இங்கு பிரான்சிஸ் Franchise முறையிலேயே நடை பெறுகிறது. ஒரே கடைக்கு போனாலும் ஒரே நபரிடம் வெட்டி கொண்டாலும் நம்மூரைப்போல் வாடிக்கையாளரை நினைவில் வைத்து பிரத்தியோகமாக முடி வெட்டிக்கொள்வது என்பது பெரும்பாலும் நடக்காது. அதை விட கொடுமை ஒவ்வொரு முறையும் நமக்கு வேண்டிய முடி ஸ்டைலை அவர்களிடம் புரிய வைப்பது. பொதுவாக 1, 2, 3 என நம்பர் சிஸ்டம் வைத்து தான் இங்கு முடி வெட்டும் அளவை குறிக்கிறார்கள். நம் கிருதாவை சைடு பர்ன் என குறிப்பிடுவார்கள். சைடு பர்ன் எப்படி இருக்கவேண்டும் என கேக்கும் போது முதல் முறை செல்பவர்களுக்கு ஒன்றும் புரியாமல் விழிப்பதை பார்க்கும் போது சிரிப்பாக இருக்கும்.


அதே போல் ஒவ்வொருமுறை நாம் முடி வெட்டிக்கொள்ள போகும்போதும் நம் ஸ்டைல் மற்றும் முடி வெட்டிக்கொள்ளும் அளவு ஆகியவற்றை அவர்களின் கம்ப்யூட்டரில் பதிவு செய்து விடுவார்கள். அடுத்த முறை செல்லும் போது எப்போது நாம் கடைசியாக முடி வெட்டினோம், எவ்வாறு வெட்டிக்கொண்டோம் என முடி வெட்டிய வரலாற்றையே நமக்கு சொல்லி விடுவார்கள். அரை இன்ச் குறைக்க சொல்லி கேட்ட போது நிஜ ஸ்கேலை எடுத்து வந்து என் முடியை அளந்து பார்த்த கூத்தெல்லாம் நடந்துள்ளது.

மற்றபடி நம்மூரை போலவே ஊர் கதை உலகத்து கதை என முடி வெட்டும் போதே எல்லாவற்றையும் பேசிக்கொண்டே வெட்டுவார்கள். இங்குள்ள பெரும்பாலனவர்கள் முடி வெட்டிவிட்டு குளிக்க மாட்டார்கள். அப்படியே ஆபிஸ் அல்லது வீட்டுக்கு சென்று விடுவார்கள். முடிவெட்டும் கடையும் அப்படி சுத்தமாக இருக்கும். அதே போல் நம்மூரை போல் இங்கு யாரும் தலைக்கு என்னை வைத்து கொள்ள மாட்டார்கள். குளித்து விட்டு ஜெல் மட்டும் வைத்து கொள்வார்கள்.

ஆங், சொல்ல மறந்து விட்டேனே, இங்கு ஆண் பெண் என்ற பேதமில்லாதலால் பெண்கள் ஆண்களுக்கு முடி திருத்துவது சகஜம். அவர்களின் அழகான மெல்லிய விரல்களுக்கிடையே கத்திரியை வைத்துக்கொண்டு அழகான நெய்ல் பாலிஷ் போட்ட நகங்களை வைத்து முடியை நீவி விட்டு முடி வெட்டும் அழகே தனி.


share on:facebook

2 comments:

CS. Mohan Kumar said...

ம்ம் அமேரிக்கா காரன்..அமேரிக்கா காரன் தான்

ஆதி மனிதன் said...

நன்றி மோகன். சரியாக சொன்னீர்கள். பல விசயங்களில் அவர்கள் வித்தியாசமானவர்கள் தான்(நம்மை போல!).

Post a Comment