Tuesday, July 12, 2011

ஜூலை 4: அமெரிக்க ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

ஜூலை 4, அமெரிக்க சுதந்திர தினம். அமெரிக்கர்கள் எல்லாவற்றிலும் சற்று வித்தயசமானவர்கள். இம்மாதிரி கொண்டாட்டங்களிலும். இந்தியாவை போன்று அமெரிக்காவில் அவர்களின் தேசிய கோடியை பயன்படுத்துவதில் பெரிதாக ஒன்றும் கட்டுபாடுகள் இல்லை. சில ஆங்கில திரைப்படங்களில் கூட நாம் பார்த்திருப்போம். தேசிய கொடியை உள்ளாடையாக கூட தைத்து போட்டிருப்பார்கள். அதே போல் தான் இங்கு சுதந்திர தின கொண்டாட்டங்களும். அவரவர் விருப்பபடி கொண்டாடுவர்.

பொதுவாக பல மாநிலங்களில் சுதந்திர தினத்தன்று அங்குள்ள சிட்டிகளில் சுதந்திர தின பரேடுகள் காலையில் நடை பெரும். அதுவும் நம்மூர் மாதிரி பெரிய டாங்கிகள் மிலிடரி மார்ச் பாஸ்ட் எல்லாம் இருக்காது. அதே நேரத்தில் அவ்வூரில் உள்ள ஸ்கவுட், பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் மார்ச் பாஸ்ட் போவார்கள். இடை இடையே, வேடிக்கை, சாகச விளையாட்டுகள் என பார்பதற்கு நன்றாக இருக்கும். இதில் உள்ளூர் அழகி பட்டம் பெற்றவர், மேயர், கவுன்சிலர் என்று அவரவர் கார்களிலோ அல்லது அலங்கரிக்கப்பட்ட வண்டிகளிலோ பவனி வருவார்கள்.

இன் நிகழ்ச்சிகளை பார்க்க காலையிலே ரோட்டோரம் இடம் பிடித்து நாற்காலிகளை போட்டு விடுவார்கள். ஏதோ சண்டைக்கு போவதை போல், நாற்காலியோடு சேர்த்து தின்பண்டம், தண்ணீர், புத்தகம் என எல்லாவற்றையும் கொண்டு வந்து விடுவார்கள். எதையாவது கொறித்துக்கொண்டே, குடித்துக்கொண்டே பேரணிகளை கண்டு களிப்பார்கள். இதில் குழந்தைகளுக்கு தான் கொண்டாட்டம். அணிவகுப்பில் கலந்து கொள்ளும் பெரும்பாலான குழுக்கள் சாக்கலேட்களையும், ப்ரீ டிக்கெட், என எதையாவது பார்வையாளர்களை நோக்கி வீசிக்கொண்டே செல்வர்கள். எல்லா குழந்தைகளும் (சில நேரங்களில் பெரியவர்கள் கூட) அதை போட்டி போட்டுக்கொண்டு எடுப்பதை பார்க்க வேடிக்கையாக இருக்கும்.

மாலையில் பொதுவாக எல்லா நகரங்களிலும் "சிட்டி சென்டர்" என கூறப்படும் இடங்களில் மக்கள் குழுமி விடுவார்கள். அங்கு குழந்தைகளுக்கு என்று பல விளையாட்டுகளும் போட்டிகளும் நடைபெறும். வழக்கம் போல் அறுசுவை உணவு வகைகளுடன் உணவு அரங்குகளும் அங்கு இருக்கும். இந்தியர்கள் உணவு பிரியர்கள் என நாம் கூறிக்கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது என்பதை இங்கு வந்து பார்த்தால் தெரியும். அமெரிக்கர்களை போல் உணவு பிரியர்களை நான் பார்த்ததில்லை எங்கும். அத்தோடு நம்மூர் ஆர்க்கெஸ்ட்ரா மாதிரி ஒரு இன்னிசை குழு பிரபலமான பாடல்களை இசைத்துக்கொண்டே இருக்கும். மக்களும் அதற்க்கேற்ப்ப மேடைக்கு முன் ஆட்டத்தை போட்டுக்கொண்டிருப்பார்கள். இது எதிலும் தேச பக்தி பாடல்கள் ஏதும் இருக்காது என்பது வேறு விஷயம்.

கடைசியாக எல்லோரும் எதிர்ப்பார்க்கும் வான வேடிக்கை சரியாக 9 மணியளவில் நடை பெறும் (அது ஏன் எல்லா ஊர்களிலும் சரியாக 9 மணிக்கு வான வேடிக்கை ஆரம்பிக்கிறார்கள் என தெரியவில்லை). குறைந்தது 15 அல்லது 20 நிமிடங்கள் வான வேடிக்கைகள் தொடரும். நம்மூர் கணக்கு படி பார்த்தால் சுமார் 10 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள வான வேடிக்கைகள் வெடிக்கப்படும். நம்மூரில் தீபாவளியை போல் சுதந்திர தினம் என்றால் இங்கு எல்லோருக்கும் நினைவுக்கு வருவது இங்கு நடை பெறும் வான வேடிக்கைகள்தான். பெரும்பாலான அமெரிக்க நகரங்களில் தனியாக வெடி வெடிக்க வருடந்தோறும் தடை இருக்கும். அதுவும் மக்கள் வான வேடிக்கைகளை பெரிதும் விரும்பி பார்பதற்கு ஒரு காரணம்.

இவை எல்லாவற்றையும் தவிர, சுதந்திர தினம் அன்று பெரும்பாலான அமெரிக்கர்கள் வெளியூருக்கு பயணம் ஆவார்கள். தங்கள் நண்பர்களை சந்திக்கவோ அல்லது விடுமுறையை கழிக்கவோ. மூன்று நாள் விடுமுறையாக கொண்டாடப்படும் சுதந்திர தினத்தன்று வெளியே செல்ல சரியாக திட்டமிடா விட்டால் சரியான டிராபிக் ஜாமில் மாட்டிக்கொள்ள நேரிடும். அதே போல் பொது இடங்கள் (பார்க், பீச் என) எல்லாவற்றிலும் அன்று ஒரு நாள் தான் மக்கள் கூட்டத்தை பார்க்க முடியும்.

இவ்வாறு வெளியில் எங்கும் செல்லாதவர்கள் தங்கள் வீட்டிலேயே, பீர் சாப்பிட்டுக்கொண்டும், டி. வி. பார்த்துக்கொண்டும், பார்பிக்கூ செய்து கொண்டும் தங்கள் சுதந்திரத்தை கொண்டாடுவார்கள். இவை எல்லாவற்றையும் பார்த்தபோது எனக்கு தோன்றியது, "இவர்கள் சுதந்திரத்தை மதிக்கிறார்களோ இல்லையோ, நிச்சயம் கொண்டாடுகிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்".
share on:facebook

No comments:

Post a Comment