Tuesday, July 5, 2011

மாறாத அம்மா. மாறிக்கொண்டே இருக்கும் மந்திரிசபை.


பதவி ஏற்று இன்னும் முழுசாக இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் இரண்டு முறை மந்திரி சபையில் மாற்றங்கள். ஒரு மந்திரியின்  பதவி பறிப்பு.  

தமிழக சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா ஞாயிற்றுக்கிழமை அதிரடியாக நீக்கப்பட்டார். புதிய அமைச்சராக கடையநல்லூர் எம்.எல்.ஏ. செந்தூர்ப்பாண்டியன் இன்று பதவி ஏற்கிறார். மேலும் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

  • உணவுத்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து வந்த உணவு, குடிமைப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை, விலை கட்டுப்பாடு ஆகிய துறைகள் அமைச்சர் புத்திசந்திரனுக்கு ஒதுக்கப்படுகிறது.

  • அமைச்சர் புத்திசந்திரன் கவனித்து வந்த சுற்றுலாத்துறை, சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஆகியவை அமைச்சர் கோகுலஇந்திராவுக்கு ஒதுக்கப்படுகிறது.

  • அமைச்சர் கோகுலஇந்திரா இதுவரை கவனித்து வந்த வணிகவரிகள், பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் சட்டம் ஆகிய துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு ஒதுக்கப்படுகிறது
இப்படியே போனால் முதல்வருக்கே நேற்று யார் எந்த துறை அமைச்சராக இருந்தார் இன்று யார் எந்த துறைக்கு அமைச்சர் என்று நினைவில் வைத்துக்கொள்வதில் சிக்கல் ஏற்படும்.

அமைச்சரவை மாற்றம் என்பது முதல்வரின் தனிப்பட்ட உரிமை. ஆனால் அதே நேரத்தில் நிர்வாக வசதி மற்றும் நியாயமான காரணங்கள் இன்றி தனிப்பட்ட விருப்பு வெறுப்பு, கட்சியின் முக்கியஸ்தர்கள் நலம் என்று   இம்மாதிரி சுயநலன்களுக்காக அமைச்சர் பதவிகளை மாதத்துக்கொரு முறை மாற்றிக்கொண்டே இருப்பது மக்கள் எதிர்பார்த்த எந்த ஒரு  மாற்றத்தையும் தராது.

பதவி ஏற்று இரண்டு மாதங்களில் அமைச்சர்கள் இப்போது தான் தன் துறை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள ஆரம்பித்து இருப்பார்கள். உடனே அவர்களை வேறு துறைகளுக்கு மாற்றுவதால் எந்த பலனும்  அரசுக்கோ மக்களுக்கோ கிடைக்கப்போவதில்லை.

கடந்த முறை ஆட்சியின் போதும் பதவி ஏற்ற பதினாறு நாளிலேயே இந்து  அறநிலைய துறை அமைச்சராக இருந்த திரு. ஐயாறு வாண்டையாரின் பதவி  பறிக்கப்பட்டது. மீண்டும் அதே மாதிரியான சூழ்நிலை தற்போது.

எத்தனையோ மக்கள் பிரச்சனைகள் உங்கள் முன். தீராத மின்வெட்டு, சமச்சீர் கல்வி, பள்ளி கல்வி கட்டண, தமிழக மீனவர் பிரச்சனைகள் என்று ஏராளம். அதையெல்லாம் விட்டு விட்டு கிச்சன் காபினெட் தான் முக்கிய பிரச்சனையாக நீங்கள் கருதினால் பழையபடி நீங்களும் உங்கள் சகாக்களும் எதிர் வரிசையில் தான் அமரவேண்டி வரும்.

பாத்து சூதானமா இருந்துக்குங்க. இல்லைனா அப்புறம் மக்கள்  உங்களையே மாற்றிவிடும் சூழல் வந்துவிடும் (வழக்கம் போல).



share on:facebook

No comments:

Post a Comment