Sunday, July 31, 2011

வாடகை கார்


ஒரு காலத்தில் கார்களை காண்பதே அபூர்வமாக இருக்கும்.  நான் சிறுவனாக  இருந்த போது எங்கள் தெருவிலேயே (10 வீதிகளை கொண்டது)  மொத்தம்  மூன்று பேரிடம் தான் கார் இருந்தது. ஒரு டாக்டர்(பீயட்) , எங்கள்  ஏரியாவின்  ஓனர்(அம்பசிடர்) மற்றும் ஜமீந்தார்(ப்ளைன் மூத்) ஒருவரிடம் மட்டும் தான்.

அது போல் டிராவல்ஸ் என்றெல்லாம் ஒன்றும் இருந்ததில்லை. ஒரே ஒரு டாக்சி ஸ்டாண்ட் மருத்துவ கல்லூரி அருகே இருக்கும். அதில் அதிகமாக இருப்பது, மஞ்சள் கருப்பு கலரில் உள்ள அம்பாசிடர் கார்கள் தான். அதை கண்டாலே எனக்கு  கிலியாகிவிடும். ஏனென்றால் அது பெரும்பாலும்  இறந்தவர்களை  எடுத்துக்கொண்டு  போவதற்கு தான் உபயோகிக்கப்படும்.   இப்போதெல்லாம்   காலம் மாறிவிட்டது. கார் இல்லாத வீடுகளையோ  டாக்ஸி  ஸ்டான்ட் இல்லாத ஏரியாவையோ பார்க்க முடிவதில்லை. சரி  விசயத்திற்கு  வருவோம்.  அமேரிக்கா போன்ற மேலை நாடுகளில் உள்ள  வசதிகளில்  மெடிக்கல்  இந்சூரன்சிற்கு பிறகு என்னை மிகவும் கவர்ந்தது  ரெண்டல் கார்  பாலிசி தான்.     

அமெரிக்காவில் ரெண்டல் கார் என்பது மிகவும் வசதியான ஒரு சேவை எனலாம்.  e -Enterprise, AVIS, hertz என பல கார்பரேட் நிறுவனங்கள் இந்த  சேவையை வழங்கி வருகின்றன. ஒரு மேஜர் கிரெடிட் கார்டு, உங்கள்  ஓட்டுனர் உரிமை இவை இரண்டும் இருந்தால் போதும். உங்களுக்கு  விருப்பமான காரை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். கட்டணம்  நீங்கள் தேர்வு செய்யும் காரைப்பொருத்தும், நாட்களைப்பொருத்தும்  இருக்கும். உதாரணமாக ஐந்து பேர் பயணம் செய்யக்கூடிய சாதாரண
ரக காருக்கு ஒரு நாளைக்கு 15 - 20 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும்.  பெட்ரோல், இன்சூரன்ஸ் செலவு உங்களுடையது.

ரெண்டல் கார்கள் பொதுவாக புதிதாகவே இருக்கும். அதாவது ஓரிரு  வருடங்களுக்கு மேல் ஆன கார்களை ரெண்டல் கம்பெனிகளில் பார்ப்பது அரிது. அதே போல் மைலேஜும் 50 - 70 ஆயிரத்தை தாண்டி இருக்காது.  வண்டியை நீங்கள் வாடகைக்கு எடுக்கும் போது எப்படி கொடுக்கிறார்களோ  அதே போல் நீங்கள் திரும்பி கொடுக்க வேண்டும். உங்களை  வைத்துக்கொண்டே வண்டியை ஒரு முறை வலம் வந்து ஏதாவது ஸ்க்ராட்ச்  அல்லது நசுங்கல் இருந்தால் அதை குறித்து கொள்வார்கள், அதே போல் புல்  டான்க் பெட்ரோல் நிரப்பி கொடுப்பார்கள். நீங்கள் கொடுக்கும்  போது அதே போல் பெட்ரோலை நிரப்பி கொடுத்து விட வேண்டும்.

அமெரிக்காவில் வெளியூர் அல்லது வெகு தூரம் பயணிக்க வேண்டுமானால்  பெரும்பாலானவர்கள் வாடகை கார்களையே தேர்ந்தெடுப்பார்கள். இதற்கு  முக்கிய  காரணம் வாடகை கார்கள் புதியவைகளாக இருப்பதால் பயணத்தின் நடுவில் பெரும்பாலும் சிக்கல் ஏதும் ஏற்படாது. அப்படியே வந்தாலும் அதை  வாடகை கார் கம்பெனி பார்த்துக்கொள்ளும். அதே போல் இங்கு உங்கள் காரை  பிற்காலத்தில் விற்க வேண்டுமானால் எல்லோரும் கார் எவ்வளவு  மைலேஜ் போயிருக்கிறது என்பதை முக்கியமாக பார்ப்பார்கள். ஆகையால்  உங்கள் காரில் வெகு தூரம் செல்வதால் ஏற்படும் மைலேஜ் மற்றும்  தேய்மானத்தை கணக்கில் கொண்டால் அது நீங்கள் வாடகை கருக்கு செலவு  செய்வதை விட மேலாக இருக்கும். இதுவும் வாடகை காரை மிகவும்  விரும்பி எடுப்பதற்கு ஒரு காரணம். மற்றொன்று நீங்கள் விரும்பும் கார் மாடல்களை வாடகைக்கு எடுத்து நீங்களே ஒட்டி உங்கள் ஆசையை  பூர்த்தி  செய்து கொள்ளலாம்(வாடகை கார் என எந்த அடையாளமும்  வெளியில் இருக்காது).   

இம்மாதிரி வாடகை கார் வழிமுறைகள் இங்கு பெருமளவில் வெற்றி  பெற்றதற்கு இங்குள்ள பெரும்பாலான மக்களின் நேர்மையும் கடுமையான  சட்ட திட்டங்களும் ஒரு காரணம். வாடகை காரில் அந்த காரின்  மேனுவல்ஸ் (manuals) டூல்ஸ் உட்பட எல்லாம் அப்படியே லெதர் பாக்கில்  வைக்கப்பட்டிருந்தாலும் அதை யாரும் எடுத்து சென்று விட மாட்டார்கள். அதே போல் காரை நாமே ஒட்டுவதால் நம் குடும்பத்துடன் செல்லும்   போது  நமக்கும் ப்ரைவசியும் இருக்கும்.

தற்போது இந்தியாவிலும் முன்னே கூறியிருந்தது போல் மெடிகல் இன்சூரன்ஸ்  பிரபலமாகி வருகிறது. அதே போல் இம்மாதிரி வாடகை கார் கம்பெனிகளும்  வந்தால் சூப்பராக இருக்கும். ஹ்ம்ம் கனவு நினைவாகுமா?    

வாடகை சைக்கிள் பற்றிய என் முந்தைய பதிவு இங்கே...



share on:facebook

Wednesday, July 27, 2011

கோடை விடுமுறை கொண்டாட்டங்கள் - சாண்டியாகோ சபாரி பார்க்


இந்தியாவில், சென்னையில் இருக்கும் போது பக்கத்தில் உள்ள கிண்டி பார்க்கையோ வண்டலூர் மிருககாட்சி சலையையோ பார்க்க முடிவதில்லை. காரணம் பல. அதில் ஒன்று நம்மூரில் அடிக்கும் வெயில் மற்றும் போக்குவரத்தில் உள்ள சிரமங்கள். அல்லது நமக்கே உள்ள சோம்பேறித்தனம் அல்லது கஞ்சத்தனம்.

அதே நேரம் வெளிநாட்டில் பிழைப்புக்காக வரும்போது (அதுவும் நல்ல சம்பளத்தில்) அந்த நாட்டில் உள்ள முக்கியமான சுற்றுலா தளங்களை ஒன்று விடாமல் பலரும் பார்த்துவிடுவது இயல்பு. இதற்கும் பல காரணங்கள். பல விஷயங்கள் பிரமிப்பாகவும், விட்டால் திரும்ப பார்க்க முடியுமா என்கிற எண்ணமும், அங்குள்ளவர்களின் வெகேஷன் போகின்ற மனப்பான்மை நம்மையும் தொற்றிக்கொள்வது ஒரு காரணம். இது   எல்லாவற்றையும் விட அங்குள்ள சொகுசான வாழ்க்கைமுறை, சுத்தம், சுலபமான போக்குவரத்து வசதிகள் என எல்லாமும் எல்லா இடங்களையும் சுற்றி  பார்க்க   வைத்துவிடுகிறது. 

இந்த கோடைக்கால விடுமுறைக்காக கலிபோர்னியாவின் சாண்டியாகோ நகரத்தில் உள்ள மிகவும் பிரபலமான "San diego Safari Park" சென்றோம். 1800  ஏக்கர் பரப்பளவில் 3000 மேற்ப்பட்ட விலங்குகள். வருடத்திற்க்கு  20 லட்சத்திற்கு  மேற்ப்பட்ட பார்வையாளர்கள் என மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு திறந்த வெளி மிருககாட்சி சாலை அது.

கூண்டுக்குள்ளேயே பெரும்பாலும் மிருகங்களை பார்த்து பழக்கப்பட்ட நமக்கு திறந்த வெளியில் பல வகையான மிருங்கங்கள் உலவி வருவதை பார்த்த போது மிகவும் சந்தோசமாக இருந்தது. அதைவிட சில இடங்களில் நாம் அவைகளை நெருங்கி தொட்டு பார்த்து ரசிக்க முடிவது இன்னும் அருமை.

உள்ளே நுழையும் போது பலதரப்பட்ட சின்ன சின்ன விலங்குகள், பறவைகள் என ஆரம்பித்து உள்ளே நுழைந்தவுடனேயே திறந்த வெளியில் (சிறிய தடுப்பு வேலிக்குள்தான்) சிங்கத்தை காட்டி பயமுறுத்தி விடுகிறார்கள்.

சபாரி பார்க் முழுவதையும் வெவேறு தீம்களில் பிரித்து வன விலங்குகளை வளர்த்து வருகிறார்கள். கொரில்லா பாரெஸ்ட், ஆப்ரிக்கன் அவுட் போஸ்ட்  என பல பெயர்களில். இவை எல்லாவற்றையும் சுற்றி பார்க்க பல வழிகள் உண்டு. உங்கள் வசதிக்கேற்ப(பர்சின் கனத்திற்க்கேர்ப்பவும்). பொதுவாக  ட்ராம் எனப்படும் வரிசையாக கோர்க்கப்பட்ட வண்டியில் ஏறி உட்கார்ந்தால் அந்த வண்டியிலேயே முக்கால்வாசி பார்க்கை சுற்றி காட்டி விடுவார்கள். இதை விட்டால், வேன் அல்லது தனி ஜீப்பிலும் போய் சுற்றிபார்க்கலாம். அதேபோல் கயிற்றில் தொங்கியபடியோ அல்லது ரோல்லிங் சபாரி எனப்படும்(தசாவதாரம் படத்தில் காட்டி உள்ளார்கள்) வாகனத்திலும் நீங்கள் சுற்றி பார்க்கலாம்.

அமெரிக்காவில் எனக்கு மிகவும் பிடித்தது அவர்கள் சுத்தத்தை கடை பிடிக்கும் விதம்தான். அதனாலேயே எங்கு நீங்கள் பயணம் செய்தாலும் அதனால் எந்த பிரச்னையும் வராது. அவ்வளவு பெரிய பார்க்கில் ஒரு சின்ன குப்பையை கூட பார்க்க முடியாது. அதே போல் மிருகங்களிடமும் அதிக பட்ச மரியாதையையையும் அன்பையும் காட்டுவார்கள். ரொம்ப நேரமாக புலிகள் சரணாலயத்தில் இரண்டு மூன்று புலிகள் தூக்கத்திலிருந்து எழுந்திரிக்கவேயில்லை. இருந்தும் எல்லோரும் அதை அமைதியாக நின்று பார்த்துவிட்டு போய்க்கொண்டே இருந்தார்கள்.
  
அப்பா, சரியான ஆந்த கண்ணுடா!

அழகான வண்ண கிளிகள் உள்ள பார்வை கூடத்தில் சிறிய கிண்ணத்தில் உணவை கொண்டு சென்றால் (பார்வை கூடம் இலவசம் ஆனால் உணவுக்கின்னம் $3) அனைத்து கிளிகளும் உணவுக்காக நம் மீது வந்து  உட்கார்ந்து  உணவை உன்ன பழக்கி வைத்துள்ளார்கள். உணவு காலியானவுடன் எல்லாம் பறந்து சென்று விடுகிறது. அப்பதானே அவர்களுக்கு பிசினெஸ்.

இதுதான் கி(லி)ளியா...  


அப்புறம் யாரு நம்ம சிங்க ராஜாதான். சும்மா எப்படி கம்பீரமா இருக்காருன்னு பாருங்க. சும்மா இருபதடி தூரத்தில் சிறிய வேலிக்கு பின் நம்மையே முறைத்து பார்கிறார் பாருங்கள்.


இங்க இரையை தேடி சீட்டா...

கண்ணுக்கு குளிர்ச்சியாக அழகான கொக்குகள்...

ஓவியம் போன்ற மான்கள்.  

நான் வளர்கிறேனே மம்மி...

எனக்கும் லிப்ட் தாங்களேன்...

என் செல்ல குட்டி...

ஐயைய...சீ....எவ்வளவோ முயற்சி செய்தேன். முன்பக்கம்  படம் எடுக்க முடியவில்லை. 

நாங்கள் சென்ற நாளன்றுதான் சீட்டா ரன் என இரண்டே வயதான சீட்டா ஒன்றை பார்வையாளர்கள் முன் ஓடவிட்டு காட்டினார்கள். அப்பப்பா...என்ன ஒரு வேகம். 0 கிலோ மீட்டர் ஸ்பீடில் ஆரம்பித்து 110 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்தது... அந்த சீட்டா இங்கே...


யானை கூட்டம்னா இதுதானோ...

அப்புறம் வழக்கம் போல ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்...   

அப்புறம் வரட்டா....பை. பை....முடிஞ்சா இந்தப்பக்கம் வந்து நீங்களும் சபாரி பார்க்கை ஒரு முறை பார்த்துவிட்டு போங்கள்.
 

share on:facebook

Wednesday, July 20, 2011

பூபோர்ட்(USA) நகரின் மக்கள் தொகை-1. சென்னை நகர மக்கள் தொகை - 7,21,38,958

அமெரிக்காவின் வையோமிங் மாநிலத்தில் பூபோர்ட் என்னும் நகரத்தில் ஒரே ஒருவர் தான் வசிக்கிறார். அதாவது அந்நகரத்தின் மொத்த மக்கள் தொகையே அந்த ஒருவர் தான். இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 8000 அடி உயரத்தில் அமைந்து உள்ளது.


பூபோர்ட் நகரத்தின் ஒரே வாசியான "டான்" தான் அந்நகரத்தின் மேயரும் கூட. அட ஆமாங்க, அவர் ஒரே வோட்டில் தான் வெற்றியும் பெற்றுள்ளார். மொத்தம் பதிவான வாக்கும் ஒன்று தான். நியூயார்க் சான் பிரான்சிஸ்கோ இடையே உள்ள இன்டர்ஸ்டேட் 80 வழித்தடத்தில் பூபோர்ட் நகரத்தில் "பூபோர்ட் ட்ரேடிங் போஸ்ட்" என ஒரு கடையும் அவர் நடத்துகிறார். பூபோர்ட் நகரத்தில் உள்ள ஒரே கடையும் அதுதான். அந்த ஒரு கடை மூலம் தான் டான் அவ்வழியே கடந்து செல்பவர்களுக்கு பெட்ரோல், மளிகை, லிக்கர், ATM என அனைத்து சேவைகளையும் வழங்குகிறார். அவ்வூரில் உள்ள ஒரே பணி நீக்கும் (Snow removal) எந்திரமும் அவரிடம் தான் உள்ளது.

ஊரில் இருக்கும் ஒரே ரோடும் அவர் வீட்டிலிருந்து அவரின் கடையை தான் சென்றடைகிறது. மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

இன்று வந்த செய்தி: சென்னை நகரம் இந்தியாவிலேயே அதிக நெரிசல் மிகுந்த இரண்டாவது நகரம் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. சமீபத்தில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 27 ஆயிரம் பேர் வசிக்கும் நகரம் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. சென்னையின் மக்கள் தொகை ஏழு கோடியை தாண்டி விட்டதாம். மக்கள் தொகை இப்போது நகரம், கிராமம் என இரண்டிலும் சரி சமமாக பரவி இருக்கிறதாம்.
share on:facebook

Tuesday, July 12, 2011

ஜூலை 4: அமெரிக்க ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

ஜூலை 4, அமெரிக்க சுதந்திர தினம். அமெரிக்கர்கள் எல்லாவற்றிலும் சற்று வித்தயசமானவர்கள். இம்மாதிரி கொண்டாட்டங்களிலும். இந்தியாவை போன்று அமெரிக்காவில் அவர்களின் தேசிய கோடியை பயன்படுத்துவதில் பெரிதாக ஒன்றும் கட்டுபாடுகள் இல்லை. சில ஆங்கில திரைப்படங்களில் கூட நாம் பார்த்திருப்போம். தேசிய கொடியை உள்ளாடையாக கூட தைத்து போட்டிருப்பார்கள். அதே போல் தான் இங்கு சுதந்திர தின கொண்டாட்டங்களும். அவரவர் விருப்பபடி கொண்டாடுவர்.

பொதுவாக பல மாநிலங்களில் சுதந்திர தினத்தன்று அங்குள்ள சிட்டிகளில் சுதந்திர தின பரேடுகள் காலையில் நடை பெரும். அதுவும் நம்மூர் மாதிரி பெரிய டாங்கிகள் மிலிடரி மார்ச் பாஸ்ட் எல்லாம் இருக்காது. அதே நேரத்தில் அவ்வூரில் உள்ள ஸ்கவுட், பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் மார்ச் பாஸ்ட் போவார்கள். இடை இடையே, வேடிக்கை, சாகச விளையாட்டுகள் என பார்பதற்கு நன்றாக இருக்கும். இதில் உள்ளூர் அழகி பட்டம் பெற்றவர், மேயர், கவுன்சிலர் என்று அவரவர் கார்களிலோ அல்லது அலங்கரிக்கப்பட்ட வண்டிகளிலோ பவனி வருவார்கள்.

இன் நிகழ்ச்சிகளை பார்க்க காலையிலே ரோட்டோரம் இடம் பிடித்து நாற்காலிகளை போட்டு விடுவார்கள். ஏதோ சண்டைக்கு போவதை போல், நாற்காலியோடு சேர்த்து தின்பண்டம், தண்ணீர், புத்தகம் என எல்லாவற்றையும் கொண்டு வந்து விடுவார்கள். எதையாவது கொறித்துக்கொண்டே, குடித்துக்கொண்டே பேரணிகளை கண்டு களிப்பார்கள். இதில் குழந்தைகளுக்கு தான் கொண்டாட்டம். அணிவகுப்பில் கலந்து கொள்ளும் பெரும்பாலான குழுக்கள் சாக்கலேட்களையும், ப்ரீ டிக்கெட், என எதையாவது பார்வையாளர்களை நோக்கி வீசிக்கொண்டே செல்வர்கள். எல்லா குழந்தைகளும் (சில நேரங்களில் பெரியவர்கள் கூட) அதை போட்டி போட்டுக்கொண்டு எடுப்பதை பார்க்க வேடிக்கையாக இருக்கும்.

மாலையில் பொதுவாக எல்லா நகரங்களிலும் "சிட்டி சென்டர்" என கூறப்படும் இடங்களில் மக்கள் குழுமி விடுவார்கள். அங்கு குழந்தைகளுக்கு என்று பல விளையாட்டுகளும் போட்டிகளும் நடைபெறும். வழக்கம் போல் அறுசுவை உணவு வகைகளுடன் உணவு அரங்குகளும் அங்கு இருக்கும். இந்தியர்கள் உணவு பிரியர்கள் என நாம் கூறிக்கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது என்பதை இங்கு வந்து பார்த்தால் தெரியும். அமெரிக்கர்களை போல் உணவு பிரியர்களை நான் பார்த்ததில்லை எங்கும். அத்தோடு நம்மூர் ஆர்க்கெஸ்ட்ரா மாதிரி ஒரு இன்னிசை குழு பிரபலமான பாடல்களை இசைத்துக்கொண்டே இருக்கும். மக்களும் அதற்க்கேற்ப்ப மேடைக்கு முன் ஆட்டத்தை போட்டுக்கொண்டிருப்பார்கள். இது எதிலும் தேச பக்தி பாடல்கள் ஏதும் இருக்காது என்பது வேறு விஷயம்.

கடைசியாக எல்லோரும் எதிர்ப்பார்க்கும் வான வேடிக்கை சரியாக 9 மணியளவில் நடை பெறும் (அது ஏன் எல்லா ஊர்களிலும் சரியாக 9 மணிக்கு வான வேடிக்கை ஆரம்பிக்கிறார்கள் என தெரியவில்லை). குறைந்தது 15 அல்லது 20 நிமிடங்கள் வான வேடிக்கைகள் தொடரும். நம்மூர் கணக்கு படி பார்த்தால் சுமார் 10 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள வான வேடிக்கைகள் வெடிக்கப்படும். நம்மூரில் தீபாவளியை போல் சுதந்திர தினம் என்றால் இங்கு எல்லோருக்கும் நினைவுக்கு வருவது இங்கு நடை பெறும் வான வேடிக்கைகள்தான். பெரும்பாலான அமெரிக்க நகரங்களில் தனியாக வெடி வெடிக்க வருடந்தோறும் தடை இருக்கும். அதுவும் மக்கள் வான வேடிக்கைகளை பெரிதும் விரும்பி பார்பதற்கு ஒரு காரணம்.

இவை எல்லாவற்றையும் தவிர, சுதந்திர தினம் அன்று பெரும்பாலான அமெரிக்கர்கள் வெளியூருக்கு பயணம் ஆவார்கள். தங்கள் நண்பர்களை சந்திக்கவோ அல்லது விடுமுறையை கழிக்கவோ. மூன்று நாள் விடுமுறையாக கொண்டாடப்படும் சுதந்திர தினத்தன்று வெளியே செல்ல சரியாக திட்டமிடா விட்டால் சரியான டிராபிக் ஜாமில் மாட்டிக்கொள்ள நேரிடும். அதே போல் பொது இடங்கள் (பார்க், பீச் என) எல்லாவற்றிலும் அன்று ஒரு நாள் தான் மக்கள் கூட்டத்தை பார்க்க முடியும்.

இவ்வாறு வெளியில் எங்கும் செல்லாதவர்கள் தங்கள் வீட்டிலேயே, பீர் சாப்பிட்டுக்கொண்டும், டி. வி. பார்த்துக்கொண்டும், பார்பிக்கூ செய்து கொண்டும் தங்கள் சுதந்திரத்தை கொண்டாடுவார்கள். இவை எல்லாவற்றையும் பார்த்தபோது எனக்கு தோன்றியது, "இவர்கள் சுதந்திரத்தை மதிக்கிறார்களோ இல்லையோ, நிச்சயம் கொண்டாடுகிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்".
share on:facebook

Monday, July 11, 2011

கட்டிங் ஸ்பெஷல்: ஆண்களுக்கு நிகராக பெண்களும்

பிறந்த ஒரு வருடத்திலிருந்தே நாம் எல்லோரும் கட்டிங் போட ஆரம்பித்து விடுகிறோம். மனித நாகரிகம் வளர்ச்சி அடைந்ததிற்கு இன்னொமொரு  அடையாளம், நம் முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள நாம் அடிக்கடி செய்து கொள்ளும் (ஹேர்) கட்டிங் தான்.

நான் சிறு வயதாக இருந்த போது என்னையும் என் அண்ணனையும் என் தந்தை வழக்கமாக ஒரு முடிதிருத்தும் நிலையத்திற்கு அழைத்து செல்வார். கடையின் பெயர் நினைவில்லை. ஆனால் அந்த மாமாவின் முகம் அப்படியே நினைவில் உள்ளது. முழுதும் நரைத்துப்போன வெள்ளை முடியுடன், அவரின் கனிவான முகமும், பாசமுடன் என்ன தம்பி நல்லா இருக்கீங்களா? என அவர் உண்மையான அக்கறையுடன் கேட்கும் குரலும் என்னால் மறக்க முடியாது. ஒவ்வொரு முறை முடி திருத்திக்கொள்ளும்  போதும் அப்பா தின்பண்டங்கள் நிறைய வாங்கி தருவார். அதனால் முடி வெட்டி  கொள்வதென்றால் முதல் ஆளாக நான் கிளம்பி நிற்பேன்.

நடுவில் ஒரு சமயம் நான் என் உறவினர் வீட்டிற்கு (அசலான தஞ்சை  மாவட்ட கிராமம் ஒன்று) சென்றிருந்த போது அங்கு முடி  வெட்டிக்கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. நான் எவ்வளவோ சொல்லியும் கேக்காமல், வழக்கமான ஒரு படி அரிசிக்காக முடி வெட்டும் தாத்தாவும் நீ வா தம்பி, அடுத்து நீ வாப்பா என உறவினர் வீட்டில் இருந்த எல்லா சிறுவர்களுக்கும் கட்டாயப்படுத்தி முடி வெட்டிக்கொள்ள செய்தார். அதுவரை வேறு எந்த புது முடி திருத்துபவரிடமும் முடி வெட்டி பழக்கமில்லாததால் நான் பாட்டுக்கு கற்சிலை போல் அமர்ந்திருக்க அவர் என் முகத்தை அந்த பக்கமும் இந்த பக்கமும் திருப்பி என் கழுத்தை ஓடித்துவிட்டார். அது மட்டுமில்லாமல் இங்க பார், அங்க பார் என அவரின் கரடு முரடான முக தோற்றமும், தாடியும் மீசையும்   பார்த்து எனக்கு  கிலியே  பிடித்துவிட்டது. அன்றிலிருந்து ஊர் பக்கம் போவது என்றாலே முடி வெட்டிக்கொள்ள மாட்டேன் என்ற நிபந்தனையுடன் தான் செல்வேன்.
 
அதன் பிறகு பெரியவனாக ஆனா பிறகு என் தந்தை எனக்கு கொடுத்த சுதந்திரத்தின் காரணமாக ஸ்டேப் கட்டிங், பங்க் கட்டிங் என விதவிதமான  சலூன்களை எட்டி பார்த்ததுண்டு. முடி திருத்தும் தொழில் தற்போது  நல்ல  நிலையை எட்டி உள்ளது. சென்னையில் ஏ. சி. வசதி இல்லாத சலூனே  இல்லை எனலாம். ஆனால் உள்ளே சென்றால் சில கடைகளில் ஏசியும்  இல்லாமல் பேணும் இல்லாமல் நம்மை கஷ்ட்டப்பட வைத்துவிடுவார்கள் என்பது தனிக்கதை.

சென்னை போன்ற பெரு நகர்களில் சிறுவர் மற்றும் மகளிர்க்கான சலூன்கள் தற்போது உண்மையிலேயே மிகவும் மார்டனாகவும் வசதியாகவும் உள்ளது.  காசும் அதே போல் தான். நூறு ரூபாய்க்கு குறைந்து எந்த சேவையும் அங்கு  கிடைக்காது. இதில் கவனிக்க வேண்டிய சிறப்பு அம்சம் என்னவென்றால்,  ஆண்கள் சலூன்கள் பெரும்பாலும் முடி திருத்தும் தொழிலை பரம்பரையாக  செய்பவர்களே நடத்துகிறார்கள். ஆனால் பெண்கள் அழகு நிலையம் பெரும்பாலும் அனைத்து தரப்பாலும் ஒன்று சுய தொழில் மூலமாகவோ அல்லது  அதற்கென்று படித்து முறையாக தொழில் செய்பவராகவோ தான்  இருக்கிறார்கள். ஆகையால் எப்படி பார்த்தாலும் பெண்கள் இத்துறையில்  பாராட்ட வேண்டியவர்களே. 

சரி இப்போலாம் எப்படி நம்ம ஹேர் ஸ்டைல் போகுதுன்னு கேட்டிங்கனா அது  ஒரு பெரிய சோக கதை. அமெரிக்காவில் இந்தியர்கள் IT துறையில்  சாதிக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால் எனக்கு தெரிந்து பெரும்பாலான இந்தியர்கள் அமெரிக்காவில் கஷ்டப்படும் ஒரே விஷயம் இந்த முடி வெட்டி  கொள்வதில்தான். 

மற்ற தொழில்களை போலவே முடி திருத்தும் தொழிலும் இங்கு பிரான்சிஸ் Franchise முறையிலேயே நடை பெறுகிறது. ஒரே கடைக்கு போனாலும் ஒரே நபரிடம் வெட்டி கொண்டாலும் நம்மூரைப்போல் வாடிக்கையாளரை நினைவில் வைத்து பிரத்தியோகமாக முடி வெட்டிக்கொள்வது என்பது பெரும்பாலும் நடக்காது. அதை விட கொடுமை ஒவ்வொரு முறையும் நமக்கு வேண்டிய முடி ஸ்டைலை அவர்களிடம் புரிய வைப்பது. பொதுவாக 1, 2, 3 என நம்பர் சிஸ்டம் வைத்து தான் இங்கு முடி வெட்டும் அளவை குறிக்கிறார்கள். நம் கிருதாவை சைடு பர்ன் என குறிப்பிடுவார்கள். சைடு பர்ன் எப்படி இருக்கவேண்டும் என கேக்கும் போது முதல் முறை செல்பவர்களுக்கு ஒன்றும் புரியாமல் விழிப்பதை பார்க்கும் போது சிரிப்பாக இருக்கும்.


அதே போல் ஒவ்வொருமுறை நாம் முடி வெட்டிக்கொள்ள போகும்போதும் நம் ஸ்டைல் மற்றும் முடி வெட்டிக்கொள்ளும் அளவு ஆகியவற்றை அவர்களின் கம்ப்யூட்டரில் பதிவு செய்து விடுவார்கள். அடுத்த முறை செல்லும் போது எப்போது நாம் கடைசியாக முடி வெட்டினோம், எவ்வாறு வெட்டிக்கொண்டோம் என முடி வெட்டிய வரலாற்றையே நமக்கு சொல்லி விடுவார்கள். அரை இன்ச் குறைக்க சொல்லி கேட்ட போது நிஜ ஸ்கேலை எடுத்து வந்து என் முடியை அளந்து பார்த்த கூத்தெல்லாம் நடந்துள்ளது.

மற்றபடி நம்மூரை போலவே ஊர் கதை உலகத்து கதை என முடி வெட்டும் போதே எல்லாவற்றையும் பேசிக்கொண்டே வெட்டுவார்கள். இங்குள்ள பெரும்பாலனவர்கள் முடி வெட்டிவிட்டு குளிக்க மாட்டார்கள். அப்படியே ஆபிஸ் அல்லது வீட்டுக்கு சென்று விடுவார்கள். முடிவெட்டும் கடையும் அப்படி சுத்தமாக இருக்கும். அதே போல் நம்மூரை போல் இங்கு யாரும் தலைக்கு என்னை வைத்து கொள்ள மாட்டார்கள். குளித்து விட்டு ஜெல் மட்டும் வைத்து கொள்வார்கள்.

ஆங், சொல்ல மறந்து விட்டேனே, இங்கு ஆண் பெண் என்ற பேதமில்லாதலால் பெண்கள் ஆண்களுக்கு முடி திருத்துவது சகஜம். அவர்களின் அழகான மெல்லிய விரல்களுக்கிடையே கத்திரியை வைத்துக்கொண்டு அழகான நெய்ல் பாலிஷ் போட்ட நகங்களை வைத்து முடியை நீவி விட்டு முடி வெட்டும் அழகே தனி.


share on:facebook

Tuesday, July 5, 2011

மாறாத அம்மா. மாறிக்கொண்டே இருக்கும் மந்திரிசபை.


பதவி ஏற்று இன்னும் முழுசாக இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் இரண்டு முறை மந்திரி சபையில் மாற்றங்கள். ஒரு மந்திரியின்  பதவி பறிப்பு.  

தமிழக சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா ஞாயிற்றுக்கிழமை அதிரடியாக நீக்கப்பட்டார். புதிய அமைச்சராக கடையநல்லூர் எம்.எல்.ஏ. செந்தூர்ப்பாண்டியன் இன்று பதவி ஏற்கிறார். மேலும் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

  • உணவுத்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து வந்த உணவு, குடிமைப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை, விலை கட்டுப்பாடு ஆகிய துறைகள் அமைச்சர் புத்திசந்திரனுக்கு ஒதுக்கப்படுகிறது.

  • அமைச்சர் புத்திசந்திரன் கவனித்து வந்த சுற்றுலாத்துறை, சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஆகியவை அமைச்சர் கோகுலஇந்திராவுக்கு ஒதுக்கப்படுகிறது.

  • அமைச்சர் கோகுலஇந்திரா இதுவரை கவனித்து வந்த வணிகவரிகள், பத்திரப்பதிவு, முத்திரைத்தாள் சட்டம் ஆகிய துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு ஒதுக்கப்படுகிறது
இப்படியே போனால் முதல்வருக்கே நேற்று யார் எந்த துறை அமைச்சராக இருந்தார் இன்று யார் எந்த துறைக்கு அமைச்சர் என்று நினைவில் வைத்துக்கொள்வதில் சிக்கல் ஏற்படும்.

அமைச்சரவை மாற்றம் என்பது முதல்வரின் தனிப்பட்ட உரிமை. ஆனால் அதே நேரத்தில் நிர்வாக வசதி மற்றும் நியாயமான காரணங்கள் இன்றி தனிப்பட்ட விருப்பு வெறுப்பு, கட்சியின் முக்கியஸ்தர்கள் நலம் என்று   இம்மாதிரி சுயநலன்களுக்காக அமைச்சர் பதவிகளை மாதத்துக்கொரு முறை மாற்றிக்கொண்டே இருப்பது மக்கள் எதிர்பார்த்த எந்த ஒரு  மாற்றத்தையும் தராது.

பதவி ஏற்று இரண்டு மாதங்களில் அமைச்சர்கள் இப்போது தான் தன் துறை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள ஆரம்பித்து இருப்பார்கள். உடனே அவர்களை வேறு துறைகளுக்கு மாற்றுவதால் எந்த பலனும்  அரசுக்கோ மக்களுக்கோ கிடைக்கப்போவதில்லை.

கடந்த முறை ஆட்சியின் போதும் பதவி ஏற்ற பதினாறு நாளிலேயே இந்து  அறநிலைய துறை அமைச்சராக இருந்த திரு. ஐயாறு வாண்டையாரின் பதவி  பறிக்கப்பட்டது. மீண்டும் அதே மாதிரியான சூழ்நிலை தற்போது.

எத்தனையோ மக்கள் பிரச்சனைகள் உங்கள் முன். தீராத மின்வெட்டு, சமச்சீர் கல்வி, பள்ளி கல்வி கட்டண, தமிழக மீனவர் பிரச்சனைகள் என்று ஏராளம். அதையெல்லாம் விட்டு விட்டு கிச்சன் காபினெட் தான் முக்கிய பிரச்சனையாக நீங்கள் கருதினால் பழையபடி நீங்களும் உங்கள் சகாக்களும் எதிர் வரிசையில் தான் அமரவேண்டி வரும்.

பாத்து சூதானமா இருந்துக்குங்க. இல்லைனா அப்புறம் மக்கள்  உங்களையே மாற்றிவிடும் சூழல் வந்துவிடும் (வழக்கம் போல).



share on:facebook