Friday, January 22, 2010

பாத்துப் போங்கப்பு... உங்க புள்ள குட்டிங்க உங்களுக்காக காத்துக்கிடக்கு...


ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம். நன்றாக இழுத்து போத்திக்கிட்டு தூங்கிக்கிட்டுருந்த என்னை செல்போன் அலறல்தான் எழுப்பிவிட்டது. தூக்க கலக்கத்தில் செல்போனை எடுத்து சோம்பலாக ஹலோ சொல்லி முடிக்கக்கூட இல்லை.

ஏய் பாலு, நான்தாண்டா கிஷோர் பேசுறேன். நம்ம ஆனந்துக்கு திடீர்னு உடம்புக்கு முடியலடா. ராத்திரி பூரா ஹய் பீவர். அப்புறம் 911 கால் பண்ணி ஸ்டேட் ஹாஸ்பிடல்ல சேத்துருக்கோம். இப்ப பரவாயில்லை. நான் வேற அமெரிக்காவுக்கு புதுசா, இங்க இவனுங்க (doctor) பேசறது, கேக்கறது சில நேரத்தில ஒன்னும் புரியமாட்டேன்குது.

நீ கொஞ்சம் உடனே கிளம்பி இங்க வரமுடியுமாடா?

அப்படியா? சரிடா நீங்க ஒன்னும் கவலை படாதீங்க. நான் உடனே கிளம்பி அங்க வரேன். சரியா? கிஷோரின் பதிலுக்கு கூட காத்திராமல், உடனே படுக்கையை எடுத்துவைத்துவிட்டு அவசர அவசரமாக என்னை தயார் செய்து கொண்டு கீழே (underground) கார் பார்கிங் ஏரியாவை நோக்கி நடக்க தொடங்கினேன்.

கார் பார்கிங் ஏரியா உள்ளே நுழைந்தவுடன் என் கார் ரிமோட் கீயில் உள்ள இக்னைட் பட்டனை மறக்காமல் அழுத்தினேன். இரவு முவதும் சீரோ டிகிரி குளிருக்கு காரின் உள்ளே ஏறி உக்கார்ந்தால் ஸ்டீயரிங்கை கூட புடிக்க முடியாது. ஐஸ் கட்டியை தொட்டது போல் இருக்கும். அதற்குதான் இந்த ரிமோட் ஆட்டோ ஸ்டார்ட் வசதி. நாம் காரை நெருங்குவதற்குள் கார் ஆட்டோமேடிக்காக ஸ்டார்ட் செய்யப்பட்டு ஹீட்டரும் ஓடத் தொடங்கிவிடும். அப்பா... என்ன எல்லாம் கண்டு பிடிச்சு வச்சிருக்காங்க!

நினைத்துக் கொண்டிருக்கையிலேயே கார் அருகில் வந்து விட்டேன். மனதிற்குள் ஆனந்துக்கு ஒன்னும் ஆகாது என்ற நம்பிக்கை. அமெரிக்காவிற்கு வந்த ஆறு வருடங்களில் இப்படி அவசரமாக எங்கும் கிளம்பி போனதே கிடையாது.

காரின் இஞ்சின் ஓடிக்கொண்டிருப்பது கூட வெளியே தெரியவில்லை. நம் ஊர் மாதிரி சைலன்சரிலிருந்து புகை வெளியே வராது அல்லது தெரியாது. கதவை திறந்து உள்ளே ஏறி அமர்ந்தேன். சற்று கதகதப்பாக இருந்தது .

சீட் பெல்டை எடுத்து மாட்டிக்கொண்டு, பார்வர்ட் மற்றும் சைடு ரிவீவ் மிரரை உள்ளேயிருந்த கண்ட்ரோல் மூலமாகவே சரி படுத்தினேன். ஹான்ட் பிரேக்கை ரிலீஸ் செய்து பின்னும் சைடிலும் பார்த்துக் கொண்டே வண்டியை ரிவர்ஸ் செய்து பிறகு நேராக்கினேன்.

ஐம்பதடி சென்றால் அங்கு ஸ்டாப் சைன் இருக்கும். கார் பார்கிங் செல்ல அங்கு இன்னொரு வழி இருப்பதால் யாரும் அவ்வழியாக வரும் போது அவர்களை வேகமாக வந்து இடித்து விட கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. அமெரிக்காவில் ஸ்டாப் சைன் என்று ஒன்று இருந்தால் அங்கு கண்டிப்பாக வண்டியை கம்ப்ளீடாக நிறுத்திய பிறகு தான் (டயர் சுற்றுவது நிற்கும் அளவுக்கு ) பிறகு மூவ் செய்ய வேண்டும். நம்மூரில் பல இடங்களில் பாதசாரிகள் கடக்கும் இடங்களில் ஸ்டாப் சைன் போர்ட் பார்திருக்கிறேன். ஆனால் யாரும் வண்டியை நிறுத்தி கூட பார்த்ததில்லை. ஆனால் இங்கு அது சட்டம்.   

கார் பார்கிங் ஷட்டரை திறக்கும் ரிமோட்டை அழுத்தி வெளியில் வந்தால் பிறகு இன்னொரு ஸ்டாப் சிக்னல். இது பொது சாலையாதலால் இரு புறமும் திரும்பி பார்த்து வேறு வாகனங்கள் ஏதும் வரவில்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு தான் நாம் இடதோ வலதோ திரும்ப வேண்டும்.

ஏனெனில் அவர்களுக்கு தான் "right of way", அதாவது முன்னுரிமை. நாம் சிக்னல் இல்லாத நேர் சாலையில் திரும்ப வேண்டும் என்றால் இதை கடை பிடிக்க வேண்டும். இது உலகத்தில் எங்கு இருந்தாலும் கடை பிடிக்க வேண்டிய வாகனம் ஓட்டும் மரபு அல்லது ரோடு சென்ஸ்.

ஆஸ்பத்திரி என் வீட்டில் இருந்து ஒரு 55 மைல் இருக்கும். ஒரு 5 மைலில் நம்மூரில் ஹைவேஸ் என்போமே அது போல் இங்கு ப்ரீ வேஸ் என்பார்கள். உண்மையிலேயே அது free ways தான். free way என்றால் எங்கும் சிக்னல் இருக்காது. தவிர்க்க முடியாத காரணங்கள் (an emergency) இருந்தால் மட்டுமே காரை நடுவழியில் நிறுத்தலாம். அதுவும் சர்வீஸ் லேன் எனப்படும் கடைசி தடத்தில்.

மற்ற சாலைகளிலிருந்து பிரீவேசுக்குள் நுழைய ராம்ப் (ramp) எனப்படும் சற்று சரிவான சாலைகள் இருக்கும். அதேபோல் பிரீவேசிலிருந்து உள்ளூர் சாலைகளுக்கான இணைப்பு சாலை (ramp) சற்று ஏற்றமாக காணப்படும். இதற்கு ஒரு காரணமும் உள்ளது.

ப்ரீவேயில் இணைந்த பின்பு அங்கு ஏற்கனவே சென்று கொண்டிருக்கும் வாகனங்களின் வேகத்துக்கு இனையாக நீங்களும் செல்ல வேண்டும். இங்கும் "Right of the way" ப்ரீவேயில் செல்பவர்களுக்கே. உள்ளூர் சாலையிலிருந்து ப்ரீவே சாலையில் இணையும் போது அங்கு சிக்னல் இருக்காது. நீங்கள் தான் ப்ரீவே ட்ராபிக் flow-i கணித்து நிறுத்தி/நிதானித்து  இடைவெளி கிடைக்கும் போது உள்ளே இணைந்து விட வேண்டும்.


அதே போல் பிரீவேயிலிருந்து உள்ளூர் சாலைக்கு வெளியேறும் போது சற்றே ஏற்றமான சாலையில் பிரிவதால் உங்கள் வேகம் கட்டுப்படுத்தப்படும்.

பிரீவேசில் வாகனங்கள் குறைந்தது 45 மைலிலிருந்து 80 மைல்ஸ் (60 miles = 100 Kms) ஸ்பீட் வரை செல்லும். இதில் வலது ஓர வழித்தடம் குறைந்த வேகத்தில் செல்லும் வாகனத்திற்கும்(US இல் left hand drive), இடது ஓர சாலை வேகமா செல்லும் வாகனத்திற்கும் ஆனவை.

ஹாஸ்பிடலுக்கு விரைவாக செல்ல வேண்டுமாதலால் back and side ரிவீவ் மிரரில் மற்ற பின் தொடரும் வாகனங்களின் வேகத்தை சிறு நொடிகள் கணித்துவிட்டு பாதுகாப்பான இடைவெளி கிடைத்ததும் இடது இன்டிகேடரை ஆன் செய்துவிட்டு பாஸ்ட் லேனுக்கு மூவ் செய்தேன். நாம் லேன் மாறுவது நம் பின்னால் வரும் வாகனங்களின் வேகத்தை தடை செய்யாமலிருக்க இந்த உத்தி அவசியம்.

அடுத்த அரை மணி நேரத்தில் நண்பனின் ஹாஸ்பிடல் ரூமில் இருந்தேன். ஆனந்த் இப்போ நல்ல தெளிவாக இருந்தான். நன்றாக பேசினான். அங்கிருந்த டூட்டி டாக்டரிடம் அவனுக்கு ஏற்பட்ட ஜூரம் பற்றியும் அதற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை பற்றியும் தெரிந்து கொண்டேன். பயப்படும்படி ஒன்றும் இல்லை.


சிறிது நேரம் அங்கிருந்து விட்டு கிளம்பினேன். அதற்குள் வெளியே லேசாக இருட்ட ஆரம்பித்துவிட்டது. குளிர்காலம் ஆதலால் சீக்கிரம் இருட்டிவிடும். கார் பார்கிங்கில் நுழைந்து காரை வெளியே எடுத்தேன். வெளியே வெளிச்சம் சற்று கம்மியாக இருந்தாலும் உள்ளேயிருந்து என்னால் வெளியே தெளிவாக பார்க்க முடிந்தது. அதற்கு காரணம் அமெரிக்காவில் இங்குள்ளதுபோல் நம் இஷ்டத்துக்கு உள்ளே இருப்பவர் யாரென்று தெரியாத அளவிற்கு கார் கதவு கண்ணாடிகளில் ஸ்டிக்கர் (flim) ஓட்ட முடியாது. அதற்கென்று சில வரைமுறைகள் உண்டு.
 
பிரீவேசில் நான் இணைந்த போது நன்றாக இருட்டி இருந்தது. என்னுடைய கார் வெளியே உள்ள வெளிச்சம் குறைவாக இருந்தால் தானாக ஹெட் லைட்  ஆன் ஆகும் வசதி கொண்டது. எப்பொழுது கார் ஹெட் லைட் அவசியம் ஆன் செய்ய வேண்டும் என்பதற்கு கூட ஒரு ரூல் உண்டு இங்கே. நம்மூரில் ஒத்த லைட்டுடன் லாரி எதிரே வரும்போது அது டூ வீலர் என நினைத்துக்கொண்டு போய் முட்டி ஆக்சிடன்ட் ஆன கதையெல்லாம் நான் கேட்டதுண்டு.


எல்லோரும் அவசர அவசரமாக வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். எதிரே தொடர்ச்சியாக வாகனங்கள் திரும்பிக் கொண்டிருந்தன. இருந்தும் எனக்கு கண்கள் கூசவில்லை. அவசியமில்லாமல் இங்கு ஹய் பீம் யூஸ் பண்ணக் கூடாது.

சிறிது நேரத்தில் ப்ரீவேசிலிருந்து  பிரிந்து உள்ளூர் சாலையில் இணைந்து விட்டேன். எதிரே பள்ளி பேருந்து (பெரும்பாலும் அது மஞ்சள் நிறத்தில் இருக்கும்) ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆட்டமேடிக்காக என் கால்கள் பிரேக்கை மிதித்து என் வண்டியின் வேகத்தை குறைத்தது. பள்ளி பேருந்து எதிரே சென்றால் வழக்கத்தை விட சற்று அதிகமான இடைவெளி விட்டுதான் செல்ல வேண்டும். அதேபோல் குழந்தைகளை இறக்கி விடுவதற்காக பேருந்து நின்றால் பின்புறம் ஒரு மஞ்சள் லைட் அணைந்து அணைந்து எறியும். அப்படி எறிந்தால் நாம் அந்த பேருந்தை cross/overtake செய்ய கூடாது (பக்கத்தில் எவ்வளவு இடம் இருந்தாலும்). விளக்கு அணைந்த பிறகு தான் நாம் அதை overtake செய்யலாம். நம்மூரில் ஆம்புலன்ஸ் போனால் கூட அதை ஒட்டியோ அல்லது அதை ஓவர்டேக் செய்தோ பார்திருக்கேன்.


ஒருவழியாக வீடு வந்து சேர்ந்ததும் களைப்பில் அப்படியே கண்கள் சொறுகியது. சோபாவில் சாய்ந்துகொண்டே சண் டி வி யை ஆன் செய்தேன். "இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 11 பேர் சாலை விபத்துகளில் உயிர் இழப்பு" என்று தலைப்பு செய்திகளில் கூறிக்கொண்டிருந்தார்கள். உலகத்தில் உள்ள மொத்த வாகனங்களில் இந்தியாவில் 2 % தான் உள்ளது. ஆனால் சாலை விபத்துக்களோ 90 % நம் நாட்டில் தான் நடக்கிறது. அதற்கு நாம் எல்லோரும் ஏதாவது ஒரு வகையில் தெரிந்தோ தெரியாமலோ ஒரு காரணம் ஆகிறோம்.
 
இதை படிக்கும் ஒவ்வொருவரும் இனியாவது சாலை விதிகளை மதிப்போம். விலை மதிக்க முடியாத உயிர்களை   காப்போம். நன்றி.


பி. கு.
(1) சில நாட்களுக்கு முன்பே இந்த பதிவை பாதி எழுதி அப்படியே வைத்து விட்டேன். இன்று நண்பர் பலா பட்டறையின் "சாலையோரம் - தொடர் இடுகை"   படித்ததினாலும் மற்றும் அவரின் வேண்டுகோளுக்காகவும்   இதோ நானும் எழுதி பதிவிட்டுவிட்டேன். நீங்களும் ஒண்ணு முடிஞ்சா போடுங்க. இல்ல வழக்கம் போல உங்க கருத்துகளையும் ஓட்டையும் மறக்காம போட்டுடுங்க. மீண்டும் நன்றி.  
 
(2 ) இப்படி பதிவு போடுவதால் நான் இந்தியாவை மட்டம் தட்டுவதாக அர்த்தம் இல்லை. நமக்குள்ள குறைகளை மனம் திறந்து ஒத்துக்கொள்கிறேன். அவ்வளவுதான்.

 
படம்: United Nations Global Road Safety Week Logo, நன்றி.
share on:facebook

29 comments:

கிரி said...

நண்பரை பார்க்க போகிறேன் என்று அதை பற்றி குறைவாகவும் மீதி அனைத்தையும் விரிவாக கூறி விட்டீர்கள் :-)

நாவல் படித்தது போல இருந்தது

புதிய விஷயங்கள் பல தெரிந்து கொள்ள முடிந்தது!

//இப்படி பதிவு போடுவதால் நான் இந்தியாவை மட்டம் தட்டுவதாக அர்த்தம் இல்லை//

:-)

பொதுவாக இப்படி கூறும் போது அங்கு உள்ள சிறப்பை மட்டும் கூறி விட்டு நம்முடன் ஒப்பீடு செய்வதை தவிர்த்து விடுங்கள், ஏனென்றால் இருவருக்கும் வாழும் சூழ்நிலை, அமைப்பு, கலாச்சாரம் அனைத்தும் வேறு.

Prathap Kumar S. said...

ஒரு ட்ரைவிங் தியரி வகுப்பே எடுத்துட்டீங்கப்போங்க...
நீங்க இந்தியாவை குற்றம் சொல்வதான் நினைக்கவே இல்லை...உண்மையத்தானே சொன்னீங்க...

Chitra said...

சாலை விதிகளை மதிப்போம். Good one!

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல பதிவு, நிறைய தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி

Paleo God said...

இப்படி பதிவு போடுவதால் நான் இந்தியாவை மட்டம் தட்டுவதாக அர்த்தம் இல்லை. நமக்குள்ள குறைகளை மனம் திறந்து ஒத்துக்கொள்கிறேன். அவ்வளவுதான்.
//

மிக்க சரி நண்பரே. அங்குள்ள வண்டிகள் போலவே வேண்டுமென்று ஆசைப்படும்போது அதனை இயக்க அதுபோன்ற விதிமுறைகளும் முக்கியம். அழகான முறையில் விதிகளை கொண்ட பதிவு. வேண்டுகோளுக்கு மதிப்பளித்து இடுகை இட்டதற்கு நன்றி. விஷயம் எல்லோருக்கும் பரவட்டும்.

வாழ்த்துக்கள்.:)

மாதேவி said...

சாலை விதிகள் நல்ல தகவல்களுடன் கூடிய பதிவு.

Madhavan Srinivasagopalan said...

தூங்கிக்கொண்டிருக்கும் மக்களை தட்டி எழுப்பும் பதிவு.

//பொதுவாக இப்படி கூறும் போது அங்கு உள்ள சிறப்பை மட்டும் கூறி விட்டு நம்முடன் ஒப்பீடு செய்வதை தவிர்த்து விடுங்கள், ஏனென்றால் இருவருக்கும் வாழும் சூழ்நிலை, அமைப்பு, கலாச்சாரம் அனைத்தும் வேறு.//

தப்புன்னா தப்புதானே. என்னமோ நாம சாலை விதிகளை மீறினால், நம்ம சூழ்நிலை, அமைப்பு, கலாச்சாரம் விபத்துலேர்ந்து காப்பாத்திடுங்கரா மாதிரிசொல்றீங்களே..

This is the great weakness of us.. not ready to accept the fact.

I saw the following lines in 'Mambalam' (chennai) station years back.. nice one.

"Better You are called as 'Mr. Late', rather 'Late Mr....' "

ஆதி மனிதன் said...

// கிரி said... நாவல் படித்தது போல இருந்தது. புதிய விஷயங்கள் பல தெரிந்து கொள்ள முடிந்தது! //

நன்றி கிரி.

//பொதுவாக இப்படி கூறும் போது அங்கு உள்ள சிறப்பை மட்டும் கூறி விட்டு நம்முடன் ஒப்பீடு செய்வதை தவிர்த்து விடுங்கள்//

ஏற்றுக்கொள்கிறேன். அதே நேரத்தில் அந்த ஒப்பீடும் நம்மிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் தவறு செய்யும் நாலு பேர் தங்களை இதன் மூலம் திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்குமே என்ற எண்ணத்தில்தான்.

ஆதி மனிதன் said...

வருகை, பின்னூடத்திற்கு நன்றி சித்ரா, நாஞ்சில்.

//நீங்க இந்தியாவை குற்றம் சொல்வதான் நினைக்கவே இல்லை...உண்மையத்தானே சொன்னீங்க...//

அப்பா... சப்போர்ட்டுக்கு ஆள் இருக்கு. கிரி கவனிக்கவும்.

ஆதி மனிதன் said...

முதல் வருகைக்கு நன்றி ஆரூரன், மாதேவி. தொடர்ந்து வாருங்கள்.

malar said...

நல்ல பதிவு...நல்ல தகவல்களுடன் கூடிய பதிவு.

Vidhoosh said...

:) good post.

ஆதி மனிதன் said...

//பலா பட்டறை said... வேண்டுகோளுக்கு மதிப்பளித்து இடுகை இட்டதற்கு நன்றி.//

அடியேன் பாக்கியம்.

//விஷயம் எல்லோருக்கும் பரவட்டும். //

பரவுவதாக தெரிகிறது...

//maddy73 said... தூங்கிக்கொண்டிருக்கும் மக்களை தட்டி எழுப்பும் பதிவு.//

உண்மையிலேவா? ரொம்ப புகழ்றீங்க. கூச்சமா இருக்கு.

ஆதி மனிதன் said...

வருகைக்கு நன்றி விதூஷ். தொடர்ந்து வாருங்கள்.

சந்தனமுல்லை said...

சுவாரசியமான இடுகைங்க...பயனுள்ள தகவல்களுடன்!

Madhavan Srinivasagopalan said...

//maddy73 said... "தூங்கிக்கொண்டிருக்கும் மக்களை தட்டி எழுப்பும் பதிவு.' &
ஆதி மனிதன் said..."உண்மையிலேவா? ரொம்ப புகழ்றீங்க. கூச்சமா இருக்கு".//

Probably, by the time you posted this article(US day time) it might have been night time in INDIA, hence said so..

இதுக்கு பேருதான் 'உள்குத்தோ'?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

உங்க கூட காரில் வந்த பிலீங்..
நல்லாயிருக்கு....

ஆமா.. ஆதிமனிதனுக்கு டிரைவிங்க லைசென்ஸ் இருக்குங்களா?...

கிருபாநந்தினி said...

ரொம்ப அற்புதமான பதிவுங்ணா! இங்கே டிராஃபிக் ரூல்ஸா, கிலோ என்ன விலைன்னு கேப்பாங்களே?

ஆதி மனிதன் said...

//பட்டாபட்டி.. said... உங்க கூட காரில் வந்த பிலீங்..நல்லாயிருக்கு....//

முன் சீட்லயா பின் சீட்லயா?

//ஆமா.. ஆதிமனிதனுக்கு டிரைவிங்க லைசென்ஸ் இருக்குங்களா?...//

கண்டிப்பா. ஊருக்கு (நாட்டுக்கு) ஒரு லைசென்ஸ் வச்சிருக்கேனாக்கும்.

ஆதி மனிதன் said...

//கிருபாநந்தினி said... இங்கே டிராஃபிக் ரூல்ஸா, கிலோ என்ன விலைன்னு கேப்பாங்களே? //

அப்படி கேட்டாலாவது பரவாயில்லை. அப்படினா என்னாணுல மக்கள் கேக்குறாங்க!

கண்ணகி said...

நல்ல பதிவு..

ஆதி மனிதன் said...

வருகில் மற்றும் பின்னூட்டத்திற்கு நன்றி மலர், சந்தனமுல்லை, கண்ணகி. தொடர்ந்து வாருங்கள்.

சிங்கக்குட்டி said...

சூப்பர்...நல்ல சிந்தனை மற்றும் அருமையான கருத்துக்கள்.

ஆதி மனிதன் said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சிங்கக்குட்டி. தொடர்ந்து வாருங்கள்.

பின்னோக்கி said...

டிராபிக் ரூல்சை, உங்களின் அனுபவத்தின் வழியாக வித்தியாசமாக சொல்லியிருக்கிறீர்கள். அமெரிக்காவில் கார் ஓட்டிய அனுபவத்தை தருகிறது இந்த பதிவு. அமெரிக்காவில் ரூல்சை பின்பற்றி ஓட்டுபவர் கூட, நம் ஊரில், ரூல்ஸ் மீறுவது உண்மை. காரணம் தெரியவில்லை.

பின்னோக்கி said...

//சிங்கக்குட்டி. தொடர்ந்து வாருங்கள்.

என்ன ஒரு தைரியம் உங்களுக்கு :)

cheena (சீனா) said...

அன்பின் ஆதி மனிதன் - அருமையான விதி முறைகள் - அவற்றை கடைப்பிடிக்கும் மனிதர்கள் - கடைப்பிடிக்க வைக்கும் சுழ்நிலை - கட்டுப்பாடு - ம்ம்ம்ம் - நாம் இப்படியே தான் இங்கு இருக்க வேண்டும். இருப்பினும் சாலை விதிகளை மதிக்கலாமே - கடைப்பிடிக்க முயலலாமே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ஆதி மனிதன் said...

வருகைக்கு நன்றி சீனா. மீண்டும் வருக.

Anonymous said...

nalla karuthu

Post a Comment