Thursday, April 11, 2013

தமிழ் ஈழம்: அறுவடைக்கு காத்திருக்கும் அரசியல் கட்சிகள்


போர் என்று ஒன்று நடந்தால் அதில் பொது மக்கள் பலியாவது சகஜம் தான் என்றவரும், அயல் நாட்டு விசயத்தில் ஓரளவு தான் தலை இட முடியும் என்று சொன்னவர்களும் தான் இன்று ஈழ பிரச்சனையில் போட்டி போட்டுக்கொண்டு அறிக்கைகளையும் போராட்டங்களையும் அறிவிக்கிறார்கள்.

ஈழப்  பிரச்னை பற்றி ஆரம்பம் முதல் நன்கு அறிந்தவர்கள் பலருக்கும் தெரிந்திருக்கும் இவர்களின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றியும், தமிழ் ஈழ பிரச்சனையில் அரசியல் லாபம் கருதி இவர்கள் அவ்வப்போது எடுத்த மாறுபட்ட நிலை பற்றியும்.

1980 களின் துவக்கத்தில் ஜெயவர்த்தனா ஆட்சியில், இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது (கவனிக்கவும்: போராளிகள் அல்ல. அனைவரும் அப்பாவி தமிழர்கள்) தமிழகம் எங்கும் மனித சங்கிலிகளும் ஈழத் தமிழர்களுக்கான அதரவுக்குரலும் ஓங்கி ஒலித்த நேரம். ஏன், இதே காங்கிரஸ் கட்சியின் தலைவியும், இந்தியாவின் பிரதமருமான, இந்திரா காந்தி அம்மையார் இலங்கையில் நடப்பது 'Genocide' ஒரு இனப்படுகொலை என பகிரங்கமாக அறிவித்தார்.

அதற்க்கு சற்றும் சளைக்காமல் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும்  அரசு சார்பில் கண்டனங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் தமிழகத்தில் பொது மக்களின் பேராதரவோடு நடத்தி  வந்தார். நான் அப்போது பள்ளியில் படித்து கொண்டிருந்தேன். ஓரளவு நன்றாக வரைய கூடியவன். பாட நேரத்தின் போதே ஒரு நோட்டு புத்தகத்தில் இலங்கையின் வரைபடத்தை வரைந்து, அதற்க்கு பக்கத்தில் ஜெயவர்த்தனா தன் கோர பற்களால் தமிழர்களின் ரத்தத்தை உறிஞ்சுவது போலவும் அதை பார்த்து இந்திய தாய் கண்ணீர் சிந்துவது போலவும் வரைந்து எல்லோரிடமும் காண்பித்தது இன்றும் என் நினைவில் உள்ளது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் அப்போதே அந்த வயதிலேயே இலங்கை தமிழர்கள் பால் கவலையும் அவர்களுக்கான தார்மீக அதரவு மனநிலையும் அரசியல் கட்சிகள் மட்டுமன்றி தமிழகம் முழுதும் நிலவியது. அதை விட முக்கிய காரணம் இப்போது போல் அரசியல் அந்த காலத்தில் அவ்வளவு நாற்றம் பிடித்ததாக இருந்ததில்லை.

ஏதோ ஒரு வகையில் (காரணங்களை எழுதினால் அது ஒரு பதிவு போல் நீண்டு விடும்) அன்றைய முதல்வர் எம்,ஜி,ஆருக்கு விடுதலை புலிகளையும், தம்பி பிரபாகரனையும் பிடித்து போக அதே காரணத்தினாலும், அரசியலில் எதிர் எதிராக இருந்த காரணத்தாலும் (நாற்பதாண்டு நண்பர் என்ற வசனமெல்லாம்  எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு எழுதியது தான்) கலைஞர் சீறி சபாரத்தினம் குழுவை ஆதரிக்க நேர்ந்தது. ஒரு காலத்தில் சீறி சபாரத்தினம் விடுதலை புலிகளால் கொல்லப்பட தமிழகம் எங்கும் 'கொலை கார பாவி  பிரபாகரா...' என்று போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டது. அதுவும் ஓர் அரசியல் தான்.

அன்று முதல் இன்று வரை இலங்கை தமிழர்களின் நல்வாழ்க்கை இந்திய பூலோக நலன் (காக்கப்பட) சார்ந்தும், தமிழக அரசியல் கட்சிகளின் வோட்டு அரசியலிலும் கலந்து அல்லோகல்ல பட்டுக்கொண்டிருக்கிறது. இலங்கை ஒரு பலமிக்க நாடாக வந்து பிற்காலத்தில் பாகிஸ்தான் போல் இந்தியாவிற்கு தொல்லையாகி விட கூடாது என்பதில் அன்றைய இந்திய அரசுக்கு கவலை. அதற்க்கு ஒரே வழி அங்கு சுய மரியாதைக்காக போராடி வரும் குழுக்களை வலுப்படுத்தி அவர்கள் மூலம் இலங்கை அரசை பலவீனமாக்குவது மட்டுமே இந்தியாவிற்கு நல்லது என்ற 'உயர்ந்த' நோக்கோடு இந்திரா காந்தி அம்மையார் காலத்தில் இலங்கையில் சிறிய அளவில் போராடி வந்த குழுக்களை இந்தியா அழைத்து வந்து தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வைத்து ஆயுத பயிற்சியை பகிரங்கமாக கொடுத்தது.

ஆரம்பத்தில் விடுதலை புலிகள் தவிர்த்து மற்ற அனைத்து போராளிகளும் இந்திய அரசின் உதவிகளையும், ஆயுத பயிற்சியையும் இந்தியாவிலும் தமிழகத்திலும் பெற்று வந்தனர். கடைசியாக தான் விடுதலை புலிகள் அமைப்பும் சேர்ந்து கொண்டது. தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் போராளிகள் ராணுவ சீருடைகளில், 'ஜீப்' வாகனங்களில் சீறி சென்றதெல்லாம் நான் சிறுவனாக இருந்த போது பார்த்ததுண்டு. அப்போது அவர்கள் மீது தமிழகத்தில் மிகுந்த மரியாதையும் மதிப்பும் இருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ போராளி குழுக்கள் யாராக இருந்தாலும் அவர்களை விடுதலை புலிகள் என்றே தமிழகத்தில் அழைத்து வந்தனர். ஒரு வேலை வி.பு. என்ற பெயர் பொருத்தமாகவும், ஈர்பதாகவும் இருந்திருக்கலாம்.

இதற்கிடையே அன்றைய தமிழக முதல்வர் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் விடுதலை புலிகளை அழைத்து அவர்களின் போராட்டத்திற்கு 3 கோடி ரூபாய் ரொக்க பணத்தை எல்லோரும் அறிய நன்கொடையாக  வழங்கினார். அதற்கும் அப்போது எதிர்ப்பு கிளம்பியது. ஒரு கட்டத்தில் ஒரு முதல்வர் என்ற முறையில் இதை கொடுக்க எனக்கு உரிமை இல்லை என்றால் அதை என் கட்சியின் சார்பாக கொடுக்கிறேன் என்று சொல்லி தைரியமாக அறிவித்தார். பெரும் நிதிப் பற்றக்குறையில் சிக்கி தவித்த வி.பு. களுக்கு அன்றைய கால கட்டத்தில் 3 கோடி ரூபாய் மிக பெரிய பணமாக பட்டது. அதன் காரணமாகவே கடைசி வரையிலும் வி.பு. மத்தியிலும் ஈழ தமிழர்கள் மத்தியிலும் எம்.ஜி.ஆருக்கு மிக பெரிய மரியாதையும் மதிப்பும் இன்றளவும் இருந்து வருகிறது.

இப்படி கூறுவதால் எம்.ஜி.ஆர் மட்டும் தான் ஈழ மக்களுக்கு உதவி செய்தார் என்றில்லை. அதற்க்கு சற்றும் சளைக்காமல் கலைஞர் அவர்களும் பல்வேறு வகைகளில் உதவி இருக்கிறார். ஆனால் இந்த பாலாய் போன அரசியல் காரணமாக ஒவ்வொரு கால கட்டத்தில் ஈழ மக்களுக்கு உதவி செய்ததற்கு இணையாக அவர்களுக்கு கேடு வரும் போது அதை தடுக்க முடியாமலும் அல்லது அவர்களுடைய நலன்களுக்கு எதிராகவும் அவர்களுடைய அரசியல் செயல் பாடுகள் அமைந்தது தான் பெரும் கொடுமை.

இன்னும் நிறைய இருக்கு....


share on:facebook

Sunday, March 24, 2013

ரஜினியும், சொகுசு கார்களும்...


சூப்பர் ஸ்டார்  ரஜினி ராசி அப்படி. அவர் எதை பற்றியாவது பேசினாலும் பிரைச்சனை தான். பேசாவிட்டாலும் பிரச்சனைதான். சமீபத்தில் நாளிதழ்களில் வெளியான இரண்டு விஷயங்கள் மனதை சஞ்சலப்படுத்தியது. ஒன்று ரஜினி விட்ட அறிக்கை.

சமீபத்தில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து ரஜினி பெயரில் வெளியான அறிக்கை பலரையும் புருவம் உயர்த்த செய்திருக்கிறது. ரஜினியின் நெருங்கிய நண்பராகவே இருந்தாலும் அது அவருக்கும் அவர் நண்பருக்கும் இடையே உள்ள பாசம். சஞ்சய் தத்துக்காக இறைவனிடம் வேண்டும் அவர், அதை அவரிடம் நேரிடையாக தெரிவித்து இருக்கலாம். ஏன், அதை ஒரு 'press statement' ஆக வெளியிட வேண்டும் என தெரியவில்லை.

சஞ்சய் தத்துக்கும் மும்பை படுகொலைகளுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் அவர் ஆயுதங்கள் கொள்முதல் செய்ததும், வைத்திருந்ததும் சட்டப்படி குற்றம், அதை அவரும் ஒத்துக்கொண்டுள்ளார். நீதி மன்றத்திலும் அவர் மீதான குற்றம் நிரூபணம் ஆகி இருக்கிறது. அப்படி இருக்கையில் 'என் நண்பர், மீதமுள்ள தன் வாழ்நாளை நிம்மதியுடன் கழிக்க ஆண்டவனை வேண்டுகிறேன்' என்று ரஜினி அவர்கள் அறிக்கை விட்டிருப்பது சற்று ஆச்சர்யத்தை அளிக்கிறது.

உங்களுக்கு நெருங்கியவர்களுக்காக வருத்தபடுவதில் ஒன்றும் தப்பில்லை. ஆனால் பொது வாழ்வில் உள்ளவர், தமிழக மக்களால் பெரிதும் மதிக்கப்படுபவர் அதை அவர் வாழும் சமுதாயத்து மக்களின் பிரச்சனைகளுக்காகவும் ஏன் வருத்தப் படுவதில்லை என்பது தான் இப்போதைய கேள்வியே.

ஒன்று மட்டும் தெரிகிறது. சஞ்சய் தத்துக்காக தான் வருத்தப்படுவது யாருக்கோ அல்லது எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பது மட்டும் அவர் எண்ணம் என்று. என்னமோ தலைவா. நாங்கல்லாம் உங்கள் ரசிகனாக தான் இன்னமும் இருக்கிறோம். நீங்களும் திரை உலகில் சூப்பர் ஸ்டாராகவே இருந்து விட்டு போங்கள். அப்படி 'குரல்' கொடுக்க நினைத்தால் தமிழகத்திலும், தமிழர்களுக்கும் நிறையவே இதை விட பெரிய பிரச்சனைகள் இருக்கிறது. அதற்கும் ஏதாவது 'குரல்' கொடுங்கள்.

அடுத்ததாக சமீபத்தில் CBI நடத்திய ரைடும் அதில் பெரும் பணக்காரர்களிடம் சிக்கிய வெளிநாட்டு சொகுசு கார்களும். தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், பணக்காரர்கள் அவர்களிடம் பணம் இருக்கிறது. எந்த கார் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளட்டும். அதை முறைப்படி வரி செலுத்தி வாங்க வேண்டியது தானே? ஓரிரு கோடிகள் கொடுத்து 'ஹம்மர்' வண்டி வாங்கும் அவர்கள் அதோடு சேர்த்து இன்னொமொரு கோடி வரியையும் செலுத்தினால் என்ன குறைந்தா போய் விடுவீர்கள்?

இது வரை வரி ஏய்த்து வாங்கப்பட்டிருக்கும் 33 வெளிநாட்டு சொகுசு கார்களை அடையலாம் கண்டுள்ளது CBI. இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளரும், BCCI தலைவருமான ஸ்ரீனிவாசனிடம் இருந்து 11 காரும், ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி தாளாளரிடம் இருந்து 7 கார்களும், MGM க்ரூப்பில் இருந்து 2 கார்களும் இதில் அடக்கம்.

இதில் வேதனையான விசயம் என்னவென்றால்,  இன்சூரன்ஸ் இல்லை, ரோட் டாக்ஸ் கட்டவில்லை  என்று டூ வீலரில் போபவர்களிடம் ஸ்பாட் பைன் போடும் காவல் துறையினர், இல்லை என்றால் வண்டியை ஸ்டேசனுக்கு விடு, இல்லைனா நாளைக்கு வந்து கோர்ட்டுல வண்டிய எடுத்துக்க என மிரட்டுகிறார்கள். ஆனால், இந்த வரி ஏய்ப்பு செய்து வாங்கிய வெளிநாட்டு சொகுசு கார்களின் உரிமையாளர்களுக்கு மட்டும், வண்டியை அவர்கள் தொடர்ந்து உபயோகப்படுத்தலாம், அவர்களே வைத்து கொள்ளலாம். தேவை பட்டால் மட்டும் எங்களிடம் காண்பிக்க வேண்டும் என அவர்களிடமே வண்டியை விட்டு விட்டார்கள். ஹ்ம்ம்..எளியோர் என்றால் ஒரு சட்டம். வலியோர் என்றால்...




  

share on:facebook

Wednesday, March 13, 2013

வேட்டி மறந்த தமிழனும், பாசக்கார மதுர மக்களும்.


சென்ற மாதம் பல்வேறு திருமண நிகழ்ச்சிகளுக்காக கும்பகோணம், மதுரை மற்றும் நாமக்கல் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நீண்ட வருடங்களுக்கு பின் இந்தியாவில் வந்து செட்டில் ஆகி இருப்பதால் மிக ஆர்வத்துடன் எல்லா திருமணங்களுக்கும் சென்று வந்தேன்.

கும்பகோணத்தில் நெருங்கிய உறவினர் வீட்டு திருமணம். நல்ல வசதி படைத்தவர்கள் தான். ஆனால் மணமக்களின் பூர்வீகம் கிராமம் தான் அவர்களின் பெற்றோர்கள் இன்னமும் கிராமத்தில் தான் வாழ்கிறார்கள். இதை சொல்ல காரணம் மணமக்கள் திருமணம் மற்றும் வரவேற்பின் போது உடுத்தி இருந்த உடைகள் தான். மருந்துக்கு கூட அங்கு தமிழர் பாரம்பரியமான பட்டு வேஷ்டியோ, சேலையோ பார்க்க முடியவில்லை. மணமகன் வட நாட்டவர்கள் உடுத்தும் 'செர்வானியும்', மணமகள் டிசைனர் சாரியும் அணிந்து கொண்டு தான் தாலி கட்டிக்கொண்டனர். சாதாரண மக்கள் மற்றும் சமூகத்தில் பெரிய லெவலில் உள்ளவர்களை கூட ஏன் இந்த வட நாட்டு மோகம் பிடித்து ஆட்டுகிறது என தெரியவில்லை. அதே போல் மணமகன் மற்றும்  நெருங்கிய உறவினர்கள் ஆளுக்கு ஒரு தலை பாகை வைத்து கொண்டு ராஜஸ்தான் ராஜாக்கள் போல காட்சி அளித்தது சற்று நகைச்சுவையாக தான் தோன்றியது.

பட்டு வேஷ்டியும், காஞ்சிபுரம் பட்டு புடவைக்கும் இதெல்லாம் ஈடாகுமா?

அடுத்து மதுரையில் கலந்து கொண்ட கல்யாணம். இங்கும் அதே கதை தான். அதை விட எனக்கு புதிதாக தெரிந்தது அங்கு வந்திருந்த பெரும்பாலான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அணிந்திருந்த தங்க நகைகள் தான். அப்பாப்பா! எவ்வளவு நகைகள். இதுவரை அவ்வளவு நகைகள் அணிந்து கடவுளர் சிலைகளை தான் பார்த்திருக்கிறேன். என்னுடன் வந்திருந்த தஞ்சை நண்பர் ஒருவரும் இதை பற்றி ஆச்சிர்யமாக தான் கேட்டார். இதற்க்கு நேர் மாறாக இருந்தது நாமக்கல் திருமண நிகழ்ச்சி.

அதை பார்க்கும் முன், மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார, தென் மாவட்ட மக்களின் பாசத்தை பற்றி சொல்லத்தான் வேண்டும். மதுர பயபுள்ளைங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லை. காலை மெயின் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு டவுன் பஸ்ஸில் ஏறினேன். ஏறியதும் கண்டக்டரிடம் நான் போக வேண்டிய இடத்தை சொல்லி, வந்தால் சொல்லுமாறு கேட்டுக்கொண்டேன். கடைசியில் இது தான் சார் கடைசி ஸ்டாப்பிங். இறங்கிக்கோங்க என்றார். நான் அங்குள்ள கல்யாண மண்டப பெயரை சொல்லி அதற்க்கு வழி கேட்டேன். இதை கேட்டுக்கொண்டிருந்த பஸ் டிரைவர், தம்பி, அப்படியே பஸ்ல உக்காருங்க. இதோட சர்வீஸ் முடிஞ்சிடுச்சு. இருந்தாலும் நீங்க சொல்ற மண்டபம் பக்கம் தான் வண்டி போகுது(அதற்க்கு ஏதோ காரணம் சொன்னார். மறந்து விட்டேன்). அங்கேயே நீங்க இறங்கிக்கலாம் என்று.  அப்படியே சென்னை பல்லவன் டிரைவர், கண்டக்டர் அனுபவங்கள் நினைவுக்கு வந்தது. முகம் தெரியாத வெளி ஊர் ஆட்களிடம் இவ்வளவு பாசம் காட்டுவதை பார்த்து சற்று மிரண்டு தான் போனேன்.

நாமக்கல் திருமணம் மிகவும் வித்தியாசமானது. ஆம், அங்கு பெரும்பாலானோர் நல்ல வசதியுடன் இருந்தாலும், சோ சிம்பிள். நண்பரின் திருமண வரவேற்ப்புக்கு வந்தவர்களில் ஒருவர் கூட இரண்டு செயினுக்கு மேல் அணிந்திருக்கவில்லை. அதுவும் சாதாரண ஒரு தாலி செயின் அதோடு சேர்த்து இன்னொரு செயின். அவ்வளவு தான். இத்தனைக்கும் வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் நல்ல வசதி படைத்தவர்கள். உள்ளூர் நண்பர் ஒருவரிடம் இதை பற்றி கேட்டேன். அவர் சொன்னது. இங்கு அப்படித்தானுங்க. சும்மா கைலி கட்டிக்கிட்டு போறாரேன்னு நினைச்சுடாதீங்க. அவருக்கு ஒரு பத்து லாரி இருக்கும். பெரிதாக யாரும் தங்கள் வசதியை உடை, நகைகள் மூலம் காட்டிக் கொள்ள மாட்டார்கள் என்றார்.

ஹ்ம்ம்...வெளியில் சென்றால் தான் எத்தனை அனுபவங்கள்.



share on:facebook

Friday, February 22, 2013

பிப்ரவரி - 24 : ஏழைகளுக்கு என்ன பயன்?

தலைப்பை பார்த்து நீங்க வேற ஏதாவது கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை.

எனது நண்பரும் தஞ்சை பாம்பே ஸ்வீட் ஸ்டால் உரிமையாளருமான திரு. மணி அவர்கள் வருடந்தோறும் தன் தந்தையின் நினைவாக அவரின் பெயரில் செயல்படும் அறக்கட்டளை சார்பாக 'இலவச கண் சிகிர்ச்சை' முகாமை கடந்த பல வருடங்களாக நடத்தி வருகிறார். அதை பற்றிய விளம்பரம் தான் கீழே உள்ளது.


தஞ்சையை சுற்றியுள்ள கிராமபுறங்களில்  வீடு வீடாக சென்று ஏழை எளியவர்களை இலவச கண் பரிசோதனைக்கும், அதன் பிறகு தேவை எனில் மருத்துவர்கள் ஆலோசனை பேரில் கண் அறுவை சிகிர்சையும் செய்து கொள்ள அவரின் அறக்கட்டளை இந்த வார இறுதியில் ஏற்பாடு செய்துள்ளது.

இது பற்றி ஒரு முறை நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த போது, பொதுவாக கிராமத்தில் நீங்கள் இருதய பரிசோதனை, பீபி, சுகர் எல்லாம் செக் பண்றீங்களா? அப்படின்னு கேட்டா, அட போப்பா, அதெல்லாம் நமக்கு வராது என சர்வ சாதரணமாக சொல்லி விடுவார்கள். அதே, ஐயா, உங்க கண்ணா டெஸ்ட் பண்ணி கொள்கிறீர்களா? இல்லைனா பிறகு பிரச்னை ஆச்சுனா பாக்க கொள்ள சிரமமா போய்டும்னு சொன்னா போதும். உடனே கவலைப்பட்டு ஆமாப்பா கண்ணு கொஞ்ச நாளா பிரச்னை பண்ணுது. அத பாக்கணும்னு  உடனே கிளம்பி விடுவார்கள். அந்த அளவிற்கு அவர்கள் கண்களுக்கு முக்கியவுத்துவம் கொடுகிறார்கள். அதுவே எங்கள் முகாமுக்கு பெரிய வரவேற்ப்பும், ஆர்வத்தையும் கொடுப்பதாக கூறினார்.

நமக்கு தெரிந்து நம் வீட்டில் வேலை செய்வோர், நமக்கு தெரிந்த எளியோர் எத்தனையோ பேர் இருப்பார்கள். அவர்களுக்கு எல்லாம் நம்மால் உதவ முடியாவிட்டாலும் இது போன்ற செய்திகளை அவர்களுக்கு தெரிவித்தால் போதும். அதுவே நாம் அவர்களுக்கு செய்யும் உதவி. எங்கள் வீட்டில் வேலை செய்யும் ஒரு அம்மாவிற்கு இந்த தகவலை நாங்கள் சொல்லி விட்டோம்.

நீங்களும் சொல்வீர்கள் தானே? நன்றி.




share on:facebook

Thursday, February 21, 2013

'ஜெ' விஸ்வரூபம் - ஆசிய விளையாட்டு போட்டிக்கு தமிழகத்தில் இடம் இல்லை


இலங்கை அரசின் போர் குற்றங்களை காரணம் காட்டியும், இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான தொடர் தமிழ் விரோத போக்கினை கண்டித்தும், இலங்கை வீரர்கள் கலந்து கொள்ளும் ஆசிய விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த தனது அரசுக்கு சற்றும் விருப்பம் இல்லை என்று இன்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ள ஆசிய விளையாட்டு போட்டி சங்கம் தடை விதிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ள முதல்வர் அவ்வாறு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இன்னமும் தனக்கு பதில் வரவில்லை என்றும் சுட்டி காட்டி உள்ளார்.

இந்த முடிவு சரியா தவறா என எனக்கு இன்னமும் புரியவில்லை. ஆனால், இப்படி ஏதாவது ஒன்றன் பின் ஒன்றாக இலங்கை அரசுக்கு பல தரப்பிலும் இருந்து நெருக்கடிகள் கொடுத்த வண்ணம் இருந்தால் மட்டுமே ஓரளவிற்கு அவர்களை அடக்க முடியும் என்பது மட்டும் என் கருத்தாகும்.

share on:facebook

Thursday, February 7, 2013

அமெரிக்க வாழ்க்கை: அதிகம் விரும்புவது ஆண்களா அல்லது பெண்களா?


இந்த பதிவு பெண்களை தவறாகவோ தரம் தாழ்த்தியோ எழுதும் எண்ணத்தில் எழுதப்படவில்லை. நான் கண்ட/கேட்டவற்றை வைத்து தான் இதை பகிர்கிறேன்.

அமெரிக்க வாழ்க்கை அனுபவம் என்பது இரண்டு வகை. ஒன்று தனியாகவோ/அல்லது கணவன் மனைவியாக அங்கு வாழ்வது. இரண்டாவது குழந்தைகளுடன் ஒரு முழு குடும்பமாக அங்கு இருப்பது. என்னை பொறுத்த வரையில் தனியாகவும் குடும்பமாகவும் அங்கு இருக்கும் வாய்ப்புகள்  கிடைத்தது. இதில் அதிக சுவாரசியம்/அனுபவங்கள் குடும்பத்துடன் இருந்த போது தான்(நம்பிட்டேன்...என்று வீட்டு அம்மணி சொல்வது கேட்கிறது).

சரி அதற்குள் போகும் முன் இந்திய பெண்களுக்கு அமெரிக்கா அதிகம் பிடிப்பதற்கான காரணங்களை இப்போது பார்ப்போம். மேலோட்டமாக சொல்லப்போனால் அங்கு அவர்களுக்கு வீட்டில்/மற்றும் வெளியிலும் கிடைக்கும் சுதந்திரம் தான் அமெரிக்க வாழ்க்கை பிடித்து போக முக்கிய காரணம். அதை தவிர எனக்கு தெரிந்து சில குறிப்பிட்ட காரணங்களை தான் கீழே குறிப்பிட்டுளேன்.

# உடைகள்: சென்னையை தாண்டி ஒரு பெண் ஜீன்ஸ் அணிந்து வெளியில் நடந்தால் அதை பொதுஜனம் எப்படி பார்ப்பார்கள் என நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனால் அங்கு அவர்களுக்கு பிடித்தமான உடைகளை (இந்திய பெண்களை பொறுத்த வரையில் பெரும்பாலானோர் கவுரவமான உடைகளை தான் அணிவர்) அணிந்து கொள்ளலாம். யாரும் கேள்வி கேட்க போவதில்லை. சில ஊர்களில் அங்கிருக்கும் குளிருக்கும் வெயிலுக்கும் ஜீன்ஸ் மற்றும் ஸ்கர்ட்ஸ் அவசியமும் கூட. அதே போல் அவர்களுக்கான உடைகளும் சற்று சல்லிசு தான். இங்கு ஒரு பட்டுபுடவை வாங்கும் காசுக்கு அங்கு ஒரு டசன் உடைகளை வாங்கி விடலாம். நமக்கும் காசு மிச்சம் தானே!

# பெர்சனல் டைம்: பெண்களுக்கு அங்கு நல்ல பெர்சனல் டைம் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் எந்திரங்கள் இருப்பதாலும், வீட்டை பெருக்க, சுத்தம் செய்ய என்று பெரிதாக ஒன்றும் இல்லாததால் (அமெரிக்காவில் பெரும்பாலான வீடுகளில் ஆண்கள் தான் வீட்டை  (vacuum cleaning) சுத்தம் செய்வார்கள் ஹி..  ஹி... ஹி...) அவர்களுக்கென்று நிறைய நேரம் கிடைக்கும். இதற்க்கு இன்னமொரு முக்கிய காரணம், பள்ளி செல்லும் குழந்தைகள் இருந்தால் பெரும்பாலும் அவர்களுக்கு வீட்டு பாடங்கள் குறைவாகவே இருக்கும் அல்லது இருக்கவே இருக்காது. அப்படியே இருந்தாலும் அதை அவர்களே தான் செய்து கொள்ள வேண்டும். அம்மாக்கள் துணை தேவை படாது.

#குக்கிங்: அடுத்ததாக சமையல். இது ஒரு பொருட்டே இல்லை அமெரிக்காவில். இதை விட வேறு என்ன வேண்டும் அவர்களுக்கு? ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள்/பழங்களை ஒரு தடவை வாங்கி வந்தால் போதும். தண்ணீரில் கழுவ கூட தேவை இல்லை. அப்படியே நறுக்கி போட்டு சமைத்து விடலாம். பத்திரங்கள் கழுவுவது போன்ற வேலைகளும் அதிக கஷ்டமில்லை. டிஷ் வாஷர் இருக்கையிலே. ஒரு கட்டத்தில் சாண்ட் விச், பீட்சா, நூடுல்ஸ், பாஸ்டா என அவ்வப்போது சாப்பிட பழக்கி கொள்வதால் தினமும் மூன்று வேளையும் சமைக்க வேண்டும் என்ற கொடுமை அங்கு அவர்களுக்கு கிடையாது.   

#நட்பு: நம்மூரிலேயே அவர்களது நட்பு வட்டாரம் பெரிதாக தான் இருக்கும். அங்கு கேட்க வேண்டுமா? எங்கள் கம்பெனியில் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட பணியாளர்கள் என்னுடன் பணியாற்றினாலும் எல்லோரையும் எனக்கு தெரியாது. ஆனால் அவர்களுக்கு துணைவியார் இருந்தால் அவர்கள் அனைவரும் நண்பி(பர்)களாக எல்லோரையும் தெரிந்து வைத்து இருப்பார்கள். நாம் வீட்டுக்கு வந்து அலுவலகத்தில் நடந்த கதையை சொல்லி முடிக்கும் முன்பே இது தான் எங்களுக்கு தெரியுமே. ரேஷ்மா சொன்னாள், ரேகா சொன்னாள் என்று சொல்லி நமக்கு பல்பு கொடுத்து விடுவார்கள்.

#டிரைவிங் த்ரில்: அடுத்ததாக டிரைவிங் சான்ஸ். நம்மூரில் சைக்கிள் ஓட்ட திண்டாடுவான் கூட அமெரிக்காவில் ஒரே வாரத்தில் கார் ஒட்டி விடுவான். அந்த அளவுக்கு டிரைவிங் அங்கு பழகுவதற்கும் ஓட்டுவதற்கும் ஈசி. அந்த வகையில் கார் ஓட்ட கற்றுக் கொண்டால் போதும். பெண்களுக்கு அங்கு டிரைவிங் செய்வது ரொம்ப பிடிக்கும். இந்தியா போனால் மீண்டும் கார் ஓட்ட முடியுமோ முடியாதோ என்ற எண்ணத்தில் எப்போதும், நான் தான் காரை ஓட்டுவேன் என்று விடாபிடியாக நம்மிடம் காரை பிடுங்கி ஓட்டும் போது  அவர்களுக்கு கிடைக்கும் சந்தோசம் ஒரு பட்டு புடவை வாங்கி கொடுத்தால் கூட கிடைக்காது என்றே எண்ணத் தோன்றும்.

#தனி குடித்தனம்(No offensive!): இது எல்லாவற்றுக்கும் மேலாக, அவர்கள் பொதுவாக விரும்பும் தனி குடித்தனம். அதாவது மாமனார், மாமியார், நாத்தனார் என்ற எந்த பிச்சு பிடுங்கல் இல்லாமல் தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று எந்த பிரச்னையும் இல்லாமல்(!) வாழலாம் என்ற சூழ்நிலை.

#தன்னம்பிக்கை: எனக்கு தெரிந்து நண்பர்கள் வீட்டிலும் சரி, என் வீட்டிலும் சரி, முதல் தடவை அமெரிக்கா சென்ற போது அவர்களிடம் இருந்த பயம், தன்னம்பிக்கை இன்மை, கூச்ச சுபாவம் எல்லாம் அடுத்த முறை காணமல் போய் விட்டது. இது அவர்களே ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம்.

இப்போ சொல்லுங்கள் அமெரிக்க வாழ்க்கை பெண்களுக்கு அதிகம் பிடிக்குமா பிடிக்காதா என்று? ஆமாம், ஆண்களை பற்றி கூறவேயில்லை என்பவர்கள் அடுத்த பதிவு வரை காத்திருக்க வேண்டுகிறேன்...

இதை கூட நீங்கள் விரும்பி படிக்கலாம்...

இந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்...

ஊர் உலகமெல்லாம் சண்டை போடும் அமெரிக்காவில் வீட்டில் சண்டை போட முடியாது.







share on:facebook

திருச்சியில் குஷ்பு மீது திடீர் தாக்குதல்


திருச்சி: தி.மு.க.,வின் அடுத்த தலைவர் குறித்து கருத்து தெரிவித்த குஷ்பு வின் வீடு மற்றும் கார் தாக்கப்பட்ட நிலையில், திருமணத்திற்காக திருச்சி வந்திருந்த குஷ்பு மீது தி.மு.க.,வினர் செருப்பு வீசி தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த குஷ்பு , வராண்டாவில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு புகுந்த தி.மு.க.,வினர் குஷ்பு மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். இன்று மாலை தி.மு.க., கட்சிக்கூட்டம் திருச்சியில் நடக்கவுள்ளது. அதில் பங்கேற்க குஷ்பு வரும்பட்சத்தில் மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி: dinamalar.com

share on:facebook