Thursday, April 11, 2013

தமிழ் ஈழம்: அறுவடைக்கு காத்திருக்கும் அரசியல் கட்சிகள்


போர் என்று ஒன்று நடந்தால் அதில் பொது மக்கள் பலியாவது சகஜம் தான் என்றவரும், அயல் நாட்டு விசயத்தில் ஓரளவு தான் தலை இட முடியும் என்று சொன்னவர்களும் தான் இன்று ஈழ பிரச்சனையில் போட்டி போட்டுக்கொண்டு அறிக்கைகளையும் போராட்டங்களையும் அறிவிக்கிறார்கள்.

ஈழப்  பிரச்னை பற்றி ஆரம்பம் முதல் நன்கு அறிந்தவர்கள் பலருக்கும் தெரிந்திருக்கும் இவர்களின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றியும், தமிழ் ஈழ பிரச்சனையில் அரசியல் லாபம் கருதி இவர்கள் அவ்வப்போது எடுத்த மாறுபட்ட நிலை பற்றியும்.

1980 களின் துவக்கத்தில் ஜெயவர்த்தனா ஆட்சியில், இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது (கவனிக்கவும்: போராளிகள் அல்ல. அனைவரும் அப்பாவி தமிழர்கள்) தமிழகம் எங்கும் மனித சங்கிலிகளும் ஈழத் தமிழர்களுக்கான அதரவுக்குரலும் ஓங்கி ஒலித்த நேரம். ஏன், இதே காங்கிரஸ் கட்சியின் தலைவியும், இந்தியாவின் பிரதமருமான, இந்திரா காந்தி அம்மையார் இலங்கையில் நடப்பது 'Genocide' ஒரு இனப்படுகொலை என பகிரங்கமாக அறிவித்தார்.

அதற்க்கு சற்றும் சளைக்காமல் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும்  அரசு சார்பில் கண்டனங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் தமிழகத்தில் பொது மக்களின் பேராதரவோடு நடத்தி  வந்தார். நான் அப்போது பள்ளியில் படித்து கொண்டிருந்தேன். ஓரளவு நன்றாக வரைய கூடியவன். பாட நேரத்தின் போதே ஒரு நோட்டு புத்தகத்தில் இலங்கையின் வரைபடத்தை வரைந்து, அதற்க்கு பக்கத்தில் ஜெயவர்த்தனா தன் கோர பற்களால் தமிழர்களின் ரத்தத்தை உறிஞ்சுவது போலவும் அதை பார்த்து இந்திய தாய் கண்ணீர் சிந்துவது போலவும் வரைந்து எல்லோரிடமும் காண்பித்தது இன்றும் என் நினைவில் உள்ளது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் அப்போதே அந்த வயதிலேயே இலங்கை தமிழர்கள் பால் கவலையும் அவர்களுக்கான தார்மீக அதரவு மனநிலையும் அரசியல் கட்சிகள் மட்டுமன்றி தமிழகம் முழுதும் நிலவியது. அதை விட முக்கிய காரணம் இப்போது போல் அரசியல் அந்த காலத்தில் அவ்வளவு நாற்றம் பிடித்ததாக இருந்ததில்லை.

ஏதோ ஒரு வகையில் (காரணங்களை எழுதினால் அது ஒரு பதிவு போல் நீண்டு விடும்) அன்றைய முதல்வர் எம்,ஜி,ஆருக்கு விடுதலை புலிகளையும், தம்பி பிரபாகரனையும் பிடித்து போக அதே காரணத்தினாலும், அரசியலில் எதிர் எதிராக இருந்த காரணத்தாலும் (நாற்பதாண்டு நண்பர் என்ற வசனமெல்லாம்  எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு எழுதியது தான்) கலைஞர் சீறி சபாரத்தினம் குழுவை ஆதரிக்க நேர்ந்தது. ஒரு காலத்தில் சீறி சபாரத்தினம் விடுதலை புலிகளால் கொல்லப்பட தமிழகம் எங்கும் 'கொலை கார பாவி  பிரபாகரா...' என்று போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டது. அதுவும் ஓர் அரசியல் தான்.

அன்று முதல் இன்று வரை இலங்கை தமிழர்களின் நல்வாழ்க்கை இந்திய பூலோக நலன் (காக்கப்பட) சார்ந்தும், தமிழக அரசியல் கட்சிகளின் வோட்டு அரசியலிலும் கலந்து அல்லோகல்ல பட்டுக்கொண்டிருக்கிறது. இலங்கை ஒரு பலமிக்க நாடாக வந்து பிற்காலத்தில் பாகிஸ்தான் போல் இந்தியாவிற்கு தொல்லையாகி விட கூடாது என்பதில் அன்றைய இந்திய அரசுக்கு கவலை. அதற்க்கு ஒரே வழி அங்கு சுய மரியாதைக்காக போராடி வரும் குழுக்களை வலுப்படுத்தி அவர்கள் மூலம் இலங்கை அரசை பலவீனமாக்குவது மட்டுமே இந்தியாவிற்கு நல்லது என்ற 'உயர்ந்த' நோக்கோடு இந்திரா காந்தி அம்மையார் காலத்தில் இலங்கையில் சிறிய அளவில் போராடி வந்த குழுக்களை இந்தியா அழைத்து வந்து தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வைத்து ஆயுத பயிற்சியை பகிரங்கமாக கொடுத்தது.

ஆரம்பத்தில் விடுதலை புலிகள் தவிர்த்து மற்ற அனைத்து போராளிகளும் இந்திய அரசின் உதவிகளையும், ஆயுத பயிற்சியையும் இந்தியாவிலும் தமிழகத்திலும் பெற்று வந்தனர். கடைசியாக தான் விடுதலை புலிகள் அமைப்பும் சேர்ந்து கொண்டது. தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் போராளிகள் ராணுவ சீருடைகளில், 'ஜீப்' வாகனங்களில் சீறி சென்றதெல்லாம் நான் சிறுவனாக இருந்த போது பார்த்ததுண்டு. அப்போது அவர்கள் மீது தமிழகத்தில் மிகுந்த மரியாதையும் மதிப்பும் இருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ போராளி குழுக்கள் யாராக இருந்தாலும் அவர்களை விடுதலை புலிகள் என்றே தமிழகத்தில் அழைத்து வந்தனர். ஒரு வேலை வி.பு. என்ற பெயர் பொருத்தமாகவும், ஈர்பதாகவும் இருந்திருக்கலாம்.

இதற்கிடையே அன்றைய தமிழக முதல்வர் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் விடுதலை புலிகளை அழைத்து அவர்களின் போராட்டத்திற்கு 3 கோடி ரூபாய் ரொக்க பணத்தை எல்லோரும் அறிய நன்கொடையாக  வழங்கினார். அதற்கும் அப்போது எதிர்ப்பு கிளம்பியது. ஒரு கட்டத்தில் ஒரு முதல்வர் என்ற முறையில் இதை கொடுக்க எனக்கு உரிமை இல்லை என்றால் அதை என் கட்சியின் சார்பாக கொடுக்கிறேன் என்று சொல்லி தைரியமாக அறிவித்தார். பெரும் நிதிப் பற்றக்குறையில் சிக்கி தவித்த வி.பு. களுக்கு அன்றைய கால கட்டத்தில் 3 கோடி ரூபாய் மிக பெரிய பணமாக பட்டது. அதன் காரணமாகவே கடைசி வரையிலும் வி.பு. மத்தியிலும் ஈழ தமிழர்கள் மத்தியிலும் எம்.ஜி.ஆருக்கு மிக பெரிய மரியாதையும் மதிப்பும் இன்றளவும் இருந்து வருகிறது.

இப்படி கூறுவதால் எம்.ஜி.ஆர் மட்டும் தான் ஈழ மக்களுக்கு உதவி செய்தார் என்றில்லை. அதற்க்கு சற்றும் சளைக்காமல் கலைஞர் அவர்களும் பல்வேறு வகைகளில் உதவி இருக்கிறார். ஆனால் இந்த பாலாய் போன அரசியல் காரணமாக ஒவ்வொரு கால கட்டத்தில் ஈழ மக்களுக்கு உதவி செய்ததற்கு இணையாக அவர்களுக்கு கேடு வரும் போது அதை தடுக்க முடியாமலும் அல்லது அவர்களுடைய நலன்களுக்கு எதிராகவும் அவர்களுடைய அரசியல் செயல் பாடுகள் அமைந்தது தான் பெரும் கொடுமை.

இன்னும் நிறைய இருக்கு....


share on:facebook

No comments:

Post a Comment