எத்தனை பேருக்கு மாட்டு வண்டி பயணமும் அதை ஓட்டும் அனுபவமும் கிடைத்திருக்கும் என எனக்கு தெரியவில்லை. 80 களில் எங்கள் வீட்டிற்க்கு கிராமத்துடன் நேரடி தொடர்பும் விவசாயமும் இருந்தது. காலப்போக்கில் இப்போது விவசாயம் இல்லை. ஆனால் கிராமத்துடன் ஆன தொடர்பு ஓரளவிற்கு இருக்கிறது.
அப்போது நான் 5-6 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிந்திருப்பேன். ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை ஊரிலிருந்து டவுனுக்கு (அப்படி தான் தஞ்சை நகரத்தில் உள்ள எங்கள் வீட்டை சொல்வார்கள்) மாட்டு வண்டியில் தஞ்சையில் எங்கள் வீட்டில் வளர்த்த நான்கைந்து மாடு கன்றுகளுக்கு வைக்கோலும், வீட்டிற்க்கு தேவையான நெல்/உளுந்து வகையறாக்களும் வந்து சேரும். போகும் போது அதே வண்டியில் வீட்டில் வளர்த்த மாடுகள் மூலம் சேர்ந்திருக்கும் இயற்க்கை உரமான சாணி எருவை கிராமத்து வயல்களில் தெளிக்க எடுத்து செல்வார்கள்.
தஞ்சையில் வண்டி டேரா போட்டிருக்கும் ஒன்றிரண்டு நாட்களில் கெஞ்சி கூத்தாடி ஓரிரு முறையேனும் அதை எடுத்து எங்கள் தெருக்களில் ஒட்டி விடுவேன். அதில் அப்படி பட்ட சந்தோசம் எனக்கு.
இப்போ என் காரில் இருக்கும் பவர் steering எனக்கு பெரிய ஆச்சர்யத்தை தருவதில்லை. ஆனால் அந்த ரெட்டை மாட்டு வண்டியை சாலைகளில் திருப்பும் போது ஒரு மாடு நடையை குறைத்த பின் மற்றொரு மாடு அழகாக திரும்பும் பாருங்கள். அப்போது அதை செய்ய லாவகமாக உதாரனத்திற்க்கு, வலது பக்கம் திரும்ப வேண்டும் எனில், வலது மாட்டின் கயிற்றை இழுத்து பிடித்து இடது புற மாட்டின் கயிறை லூசாக விட்டு அதை லேசாக குச்சியால் தட்டி கொடுக்கும் போது, கயிற்றை இழுத்து பிடித்த மாடு, கயிறு இறுகும் காரணத்தால் கழுத்தோடு சேர்த்து தலையை சற்றே ஒரு புறமாக மேலே தூக்கிக் கொண்டு நடையை உள் வாங்கும். அப்போது அடுத்த மாட்டை பார்த்து, 'சீக்கிரம் நீயும் திரும்பு' என்பது போல் பார்க்கும். உடனே இடது புற மாடு பலது புறம் திரும்பி நடக்க ஆரம்பிக்கும். நான்கைந்து அடி சென்ற பின் இழுத்து பிடித்த ஒரு மாட்டின் கயிறாய் லூசாக விட்டோமானால் தானாக இரண்டு மாடுகளும் நேர் கோட்டிற்கு வந்து விடும்.
அப்போதெல்லாம் இன்று உள்ள அளவிற்கு டூ வீலரோ கார்களோ கிடையாது. அப்போ போக்குவரத்து காவலர் எப்படி 'பைன்' போடுவார்? என நீங்கள் கேட்பது தெரிகிறது. அப்ப யார் மாட்டுவாங்கனு கேடீங்கனா, இந்த மாட்டு வண்டி ஓட்டுபவர்கள் தான. ஆம், மாட்டை விரைவாக ஓட்டுவதற்கு 'தார் குச்சி' என்று ஒன்றை உபயோகிப்பார்கள். அதாவது குச்சியின் ஒரு முனையில் கூர்மையான ஆணி போன்ற ஒரு பொருளை இணைத்து விடுவர். பின் அதை கொண்டு மாட்டின் தொடை பாகத்தில் மாற்றி மாற்றி குத்தும் போது மாடு வேகம் பிடிக்கும். இது அன்றைய காலகட்டத்திலேயே தடை செய்யப்பட்ட ஒன்று. ஆனால், தார் குச்சியால் குத்தாமல் மாடு மேடான பகுதிகளில் மற்றும் அதிக பாரம் இருப்பின் நகராது. பெரும்பாலானோர் தார் குச்சியை உபயோகப்படுத்துவார்.
அப்புறம் என்ன? ஒவ்வொரு முறையும் மாட்டு வண்டிகளை மறித்து, வண்டி முழுதும், அது முழுதும் வைக்கோல் ஏற்றி இருந்தால் கூட தார் ஊசி இருக்கிறதா என தேடி தேடி பைன் போடுவார்கள். வண்டி காரர்களும், நாம் ட்ராபிக்கை கண்டவுடன் செல் போனை மறைப்பது போல், தார் குச்சியை மறைத்துக் கொண்டே இருப்பார்கள்.
அடுத்ததாக மாட்டு வண்டி இரவில் சென்றால் அதற்க்கு 'ஹெட் லைட்' அவசியம் இருக்க வேண்டும். எங்கள் ஊரில் அதற்க்கு லாந்தர் விளக்கு என்போம். அதை எறிய விட்டு வண்டியின் அடியில் கட்டி விட வேண்டும். அதனால் ஒன்றும் பெரிதாக வெளிச்சம் வந்து விட போவதில்லை. இருப்பினும், சாலை விளக்குகளே இல்லாத கிராம சாலைகளில் செல்லும் போது இந்த அடியில் கட்டிய லாந்தர் விளக்கு ஓரளவு வெளிச்சத்தை கொடுக்கும். இந்த லாந்தர் விளக்கை கட்ட வில்லை என்றாலும் பைன் தான்.
தஞ்சையிலிருந்து ஊருக்கு வண்டி கிளம்பும் போது வண்டி ஓட்டிகளிடம், தார் குச்சி வேண்டாம்பா, லாந்தர் விளக்குல என்னை இருக்கானு பாத்துக்குங்க என்று திரும்பி திரும்பி சொல்லி அனுப்பி விட்டாலும், அவ்வப்போது, போலீசில் மாட்டிக்கொள்வர்கள். மாட்டு வண்டி பயணம், அதுவும் இரவில் பயணம் செய்வது ஒரு அலாதி அனுபவம். வேறொரு பதிவில் அதை பகிர்கிறேன்.
share on:facebook