Monday, April 22, 2013

ஹாரன் அவஸ்தைகள்...

அமெரிக்காவில் இருந்த வரை என் சின்ன பெண்ணுக்கு அடக்க முடியாத ஆசை என்று ஒன்று உண்டென்றால் அது கார் ஹாரனை அடித்து பார்ப்பது தான். ஒவ்வொரு முறையும் வெளியில் இருந்து வீட்டுக்கு வந்து சேர்ந்து காரை நிறுத்தும் போதும், அப்பா ஒரே ஒரு தடவை ஹாரனை அடித்து கொள்ளட்டுமா என கெஞ்சி கெஞ்சி கேட்பாள். ஒவ்வொரு தடவையும் என் பதில் 'நோ மா...' என்றாகவே இருக்கும். காரணம் அங்கு காரணம் இல்லாமல் யாரும் கார் ஹாரனை அடிக்க மாட்டார்கள். அடிக்கவும் கூடாது.

இந்தியாவிற்கு இடையில் வந்திருந்த போது இங்கு சாலைகளில் ஓயாமல் கேட்கும் கார் ஹாரன் சத்தம் கேட்டு கேட்டு, மீண்டும் அமெரிக்கா சென்ற பின்னர் அங்கு கார் ஹாரன் சத்தத்தையே கேட்க முடியாமற் போனது அவளுக்கு என்னமோ அதன் மீது ஒரு ஆசையை ஏற்படுத்தி விட்டது போலும். ஆம், அமெரிக்கா மட்டுமன்றி பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் தேவை இல்லாமல் கார் ஹாரனை அடிக்க மாட்டார்கள். ஏன், ஹாரனை அடிக்கவே மாட்டார்கள் என்று கூட கூறலாம். அங்குள்ள கார்களில் பயன்படாத ஒரு 'பார்ட்' என்றால் அது ஹாரன் பட்டனாக தான் இருக்கும். சில கார்களில் அது 'ட்ராஷ்க்கு' செல்லும் வரை அது உபயோக படாமலே போக வாய்ப்புண்டு.

அப்புறம் எப்படி டிராபிக்கில் சைடு வாங்கும் போதும், எதிரே வண்டிகள் வரும் போதும், அடுத்த வாகனத்தை ஓரம் போகவோ, இடித்து விடாமல் எச்சரிக்கையோ செய்வது என கேட்பவர்களுக்கு, இம்மாதிரியான சூழ்நிலைகள் அங்கு பெரும்பாலும் ஏற்படாது. காரணம் எல்லோரும் அங்கு 'லேன் டிசிப்ளினை' பாலோ செய்வார்கள், செய்ய வேண்டும். ஆகையால் ஒரு வண்டியை ஓவர் டேக் செய்ய வேண்டும் என்றால் தேவையான இடைவெளி விட்டு அடுத்த லேனுக்கு மாறி அங்கிருந்து தான் மீண்டும் நம் லேனுக்குள் செல்லலாம். அது மட்டுமில்லாமல் வேகத்திற்கு ஏற்ப பல லேன்கள் இருப்பதால் அதில் பெரிய சிரமமும் இருக்காது. இண்டிகேட்டரை சரியாக உபயோகப்படுத்தினாலே பெரும்பாலும் போதுமானது. உண்மையிலேயே ஒரு விபத்து நிகழ போகிறது உங்கள் பக்கத்து வண்டி உங்களை இடிக்க போகிறார். அவரை எச்சரிக்கை செய்ய வேண்டும் என்ற காரணங்களுக்காக  மட்டும் தான் ஹாரனை அடிக்கலாம், அடிக்க வேண்டும்.

இருந்தும் சில நேரங்களில் யாராவது ஹாரன் சப்தம் எழுப்புவார்கள். அது பெரும்பாலும் நம்மை எரிச்சல் ஊட்டும் சக வாகன ஓட்டியை நம்மூரில் 'போடா பரதேசி' என்றோ 'வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா' என்றோ நாம் இங்கு திட்டுவோமே அதற்க்கு பதிலாக அங்கு ஹாரன் அடிப்பார்கள். சுருக்கமாக சொல்லப்போனால் அங்கு ஒருவரை திட்ட வேண்டும் என்றால் ஹாரன் தான் அடிக்க முடியும். ஆனால் அதுவும் அங்கு தவறு தான். அமெரிக்க காவல் துறையே இதை பற்றி அறிவுரை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். யாராவது தங்களை எரிச்சல் ஊட்டும் அளவிற்கு வண்டி ஓட்டினாலும் ஹாரன் அடிக்காதீர்கள். அது அவர்களை மேலும் எரிச்சல் ஊட்டும். சிலர் இன்னும் முரட்டுதனமாகி உங்களை தாக்க கூட கூடும் என்று. நமக்கு எரிச்சல் வரும் நேரத்தில் இந்த அறிவுரை எல்லாம் எங்கு நினைவுக்கு வரும். நானே பல முறை இது மாதிரி சந்தர்பங்களில் ஹாரன் அடித்துளேன். திட்ட முடியாதே வேறு என்ன செய்வது?

ஹாரனை அடிப்பதை இன்னொமொரு சுவாரசியமான விசயத்திற்கும் அங்கு பயன் படுத்துவார்கள். அதாவது ஒரு கோரிக்கை என்றால் அதை நான்கு ஐந்து பேர் சிக்னல் அருகே கைகளில் பதாகைகளை ஏந்தியபடி நிற்பார்கள். அந்த பதாகைகளில் அவர்களுடைய கோரிக்கைகள் அச்சடிக்கப்பட்டிருக்கும். அதன் கீழேயே கோரிக்கைக்கு அதரவு தெரிவிப்பவர்கள் ஹாரன் அடிக்குமாறு எழுதப்பட்டிருக்கும். அதாவது கமல் ரசிகர்கள் 'விஸ்வரூபம்' தடையை நீக்குமாறு கோரிக்கை வைத்தால் அதை நீங்கள் ஆதரித்தால் சிக்னலை கடக்கும் முன் ஒரு 5 வினாடிகளுக்கு தொடர்ந்து ஹாரன் எழுப்பியபடி கடந்து செல்வார்கள்.

இங்கு காரணமே இல்லாமல் நம் கைகள் தன்னிச்சையாக அவ்வப்போது ஹாரனை அடித்துக்கொண்டே இருக்கிறது. ஏன், எதற்கு அடிக்கிறோம் என்றே தெரியாமல் ஹாரன் அடித்துக்கொண்டே செல்பவர்களை பல முறை பார்த்துள்ளேன்/கேட்டுள்ளேன். மற்ற எந்த பொலுஷனை விட இந்த நாய்ஸ் பொலுஷன் மிகுந்த எரிச்சலையும் ஸ்ட்ரெஸ்சையும் ஏற்படுத்தும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இப்போது தான் 'ஹாரன் அடிக்காதீர்கள். காதுகளை கொல்லாதீர்கள்' என ஆங்காங்கே பொது நலன் கருதி பேனர்கள் வைத்துள்ளார்கள். இதற்க்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்து இந்த நாய்ஸ் பொலுஷனை நாம் மட்டு படுத்த வேண்டும்.

அதே போல் தான் வண்டிகளில் 'ஹை பீம்' லைட் பயன்பாடும். நம் ஊரில்  அநேகமாக 99 சதவீகித வண்டிகள் இரவில் 'ஹை பீம்' போட்டு தான் போகின்றன. அது மட்டும் இல்லாமல் எவ்வளவு பவர்புல் வாட்ஸ் போட முடியுமோ அந்த அளவிற்கு போட்டுக் கொண்டு தான் மட்டும் சரியாக சென்றால் போதும் மற்றவர் சொர்கத்திற்கு போனால் என்ன நரகத்திற்கு போனால் என்ற என்ற மனப்பான்மை. நானும் ஆரம்பத்தில் மாருதியில் ஒரிஜினலாக வந்த சாதாரண பல்பை தான் உபயோக படுத்தி வந்தேன். ஆனால் எதிரே TVS 50 வந்தால் கூட கண் தெரியாமல் போனது. அதன் பிறகு நானும் சற்று கூடுதல் பவர் உள்ள பல்பை மாட்டிக்கொண்டேன்.

மேற்கத்திய நாடுகளில் அப்படி இல்லை. எவ்வப்போது 'ஹை பீம்' போடலாம், போட வேண்டும் என்று வரைமுறை உள்ளது. அதே போல் நம் இஷ்டத்திற்கு அந்த வண்டிக்கென்று பரிந்துரைக்கப்பட்ட பல்பின் வாட்சை விட அதிகமாக போட கூடாது. அதனால் பெரும்பாலும் இரவு நெடும் தூரம் பயணம் செய்தாலும் கண்கள் அயர்ச்சி அடையாது. வண்டி ஓட்டுவதும் சிரமம் இல்லை. ஒரு சிலர் அவர்களுக்கு சைடு கொடுத்தாலோ, நின்று வழி விட்டாலோ அதற்க்கு நன்றியாக ஒரு விநாடி 'ஹை பீம்' போட்டு சிம்பலிக்காக நன்றி கூறுவார்கள். அது தான் அங்கு ஹை பீம் பயன்பாட்டின் அதிக பட்ச பயன்பாடு.

பவர்புல் பல்ப் மற்றும் 'ஹை பீம்' வெளிச்சத்தினாலேயே பல விபத்துக்கள் நடக்கின்றன. இதற்கும் அரசு கடுமையான விதிமுறைகளை கொண்டு வர வேண்டும். எல்லோரும் பொறுப்புணர்வுடன் ஒரே மாதிரியான அளவு வெளிச்சத்தை உபயோக படுத்தினால் மட்டுமே இப்பிரச்னைக்கும் தீர்வு காண முடியும்.


share on:facebook

11 comments:

Avargal Unmaigal said...

சில சமயங்களில் அவசரத்துக்கு ஹாரன் அடிக்க வேண்டுமென்றால் அது எங்கு இருக்கிறது என சில விநாடிகளாவது யோசிக்க வேண்டி இருக்கிறது ஹும்ம்ம்ம்ம்ம்

திண்டுக்கல் தனபாலன் said...

பதாகை கோரிக்கை சுவாரசியம்... சாலை முதற்கொண்டு மாற வேண்டியவைகள் / மாற வேண்டியவர்கள் இங்கு பல உள்ளன...

கவியாழி கண்ணதாசன் said...

சுருக்கமாக சொல்லப்போனால் அங்கு ஒருவரை திட்ட வேண்டும் என்றால் ஹாரன் தான் .ஹை-பீம் விளக்கும் வாகனத்தை செலுத்தும்போது எரிச்சலைத்தான் தருகிறது.இந்த உண்மையை எல்லோரும் உணர வேண்டும்.நல்ல பயனுள்ள தகவல்

பழனி. கந்தசாமி said...

டாக்சி டிரைவர்கள் ஹார்ன் மீது கையை வைத்துக்கொண்டேதான் ஓட்டுவார்கள்.

அமுதா கிருஷ்ணா said...

சிக்னலில் நிற்கும் போது கூட ஹாரன் அடிப்பார்கள் நம் மக்கள்.அப்படி எங்கடா அவசரமா போறீங்க..

ஆதி மனிதன் said...

@Avargal Unmaigal said...
//சில சமயங்களில் அவசரத்துக்கு ஹாரன் அடிக்க வேண்டுமென்றால் அது எங்கு இருக்கிறது என சில விநாடிகளாவது யோசிக்க வேண்டி இருக்கிறது//

சரியாக சொன்னீர்கள்...ஹா ஹா ஹா ...

ஆதி மனிதன் said...

@திண்டுக்கல் தனபாலன் said...
//பதாகை கோரிக்கை சுவாரசியம்..//

ஆம் தனபாலன். அப்படிப்பட்ட நேரங்களில் தான் ஹாரன் சத்தத்தை அங்கு தொடர்ந்து கேட்க முடியும்.

ஆதி மனிதன் said...

நன்றி கவியாழி கண்ணதாசன்.

ஆதி மனிதன் said...

@பழனி. கந்தசாமி said...
//டாக்சி டிரைவர்கள் ஹார்ன் மீது கையை வைத்துக்கொண்டேதான் ஓட்டுவார்கள்.//

அவர்களாவது அடுத்த சவாரியை பிடிக்க பறப்பார்கள். நம் டூ வீலர் மக்கள். அவர்களும் அப்படிதான். கொய்ங் என்று ஹரனை அடித்த படியே தான் போவர்கள்.

ஆதி மனிதன் said...

@அமுதா கிருஷ்ணா said...
//சிக்னலில் நிற்கும் போது கூட ஹாரன் அடிப்பார்கள் நம் மக்கள்.அப்படி எங்கடா அவசரமா போறீங்க..//

ஹி ஹி ஹி ...அதை தான் நானும் ஒருவரையாவது நிறுத்தி கேட்க வேண்டும் என்று ஆசை.

வெங்கட் நாகராஜ் said...

சாதாரண ஹார்ன் ஆவது பரவாயில்லை.... சிலர் பலவிதமான குரல்களில்/ஒலிகளில் வைத்திருப்பது இன்னும் கடுப்பேற்றும்...

நீங்கள் டூ வீலரில் சென்று கொண்டிருக்கும்போது பின்னாடி திடீரென எருமை உருமும் சத்தம் கேட்டு எங்கே எமன் தான் எருமை மேலே வந்துவிட்டானோ என பயத்தோடு திரும்பினால், அங்கே ஒரு பைக்கில் மனித ரூபத்தில் எமன் இருப்பார்! என்ன ரசனையோ.

Post a Comment