Wednesday, October 31, 2012

நீலம் புயல் எதிரொலி. பிரபல IT கம்பெனியின் ஒரு பகுதி சரிந்ததா?


இன்று மாலை மூன்று மணிக்கெல்லாம் 'நீலம்' காரணமாக பெரும்பாலான IT கம்பெனிகள் முன்னரே மூடி விட்டார்கள். எங்கள் கம்பெனி பஸ்ஸில் வந்து கொண்டிருந்த போது தான் அந்த காட்சியை கவனித்தேன்.

சென்னை சிறுசேரியில் உள்ள மிக பெரிய IT கம்பெனி அது. 'Elevation' என்று சொல்வார்களே. அதற்காக இக்கம்பெனியின் மேல் பறவை பறப்பது போல் இருபுறம் ரெக்கைகள் விரிந்திருப்பது போலும் மிக பெரிய இரும்பு குழாய்கள் மூலம் வடிவமைத்து இருப்பார்கள்.

நான் எதார்த்தமாக எங்கள் பஸ்ஸில் இருந்து பார்த்தபோது தான் அதை கவனித்தேன். பக்கவாட்டில் உள்ள இந்த புறா ரெக்கை போன்ற அமைப்பு கொண்ட இரும்பு குழாய்கள் அப்படியே சரித்து போய் கிடந்தன. இவை நிச்சயம் அக்கம்பெனியில் உள்ளவர்கள் கவனித்து இருப்பார்கள். ஆனால், அதை வெளி காட்டவில்லை என நினைக்கிறன். பெயர் கெட்டுவிடுமோ என்ற எண்ணமாக இருக்கலாம். ஏன் என்றால் அந்த IT கம்பெனியும் மிக பிரபலமானது. அக்கட்டிடத்தை கட்டியதும் ஒரு பிரபல நிறுவனம் தான்.

இதுவே கட்டிடத்தின் மேல் பிராமாண்டமாக இருக்கும் மிக பெரிய குழாய் அமைப்புகளுக்கு இந்த புயலில் ஏதும் ஆகி இருந்தால். நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. இம்மாதிரி கட்டிடங்கள் கட்டும் போது, அதுவும் ஒரு காலத்தில் வயல் வெளிகளாக இருந்த நிரப்பரப்பில், இம்மாதிரி மிக பெரிய கட்டிடங்கள் கட்டும் போது 'நீலம்' போன்ற புயல் மழையை  தாக்கு பிடிக்க முடியும் அளவுக்கு ஆராய்ந்து கட்டுவது நலம்.  

எப்படியாவது அவ்வாறு இரும்பு குழாய்கள் சரிந்து இருந்ததை புகைபடம் எடுத்து விடலாம் என நினைத்தேன். முடியவில்லை. அதற்குள் எங்கள் பஸ் நகர்ந்து விட்டது. என்னடா கம்பெனி பேர் சொல்லாமல் ரொம்ப பம்முறானு பாக்குறீங்களா? ரெண்டு விஷயம். நானும் ஒரு IT கம்பெனியில் வேலை பார்கிறேன். ஆதாலால், முழுதும் தெரியாமல் இன்னொரு கம்பெனியை பற்றி சொல்லக் கூடாது. இரண்டாவது இந்த ட்விட்டர்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கும் கொடுமைகள். எதை எழுதினால் என்ன கேஸ் போடுவார்கள் என்றே தெரியவில்லை. ஏன் நமக்கு ஊர் பொல்லாப்பு?  

அப்பா...கரண்ட் வந்ததும் ஒரு பதிவை போட்ட திருப்தி.

படம்: எங்கள் கம்பெனியின் வாசலில் உள்ள மரங்கள் தலை விரித்து ஆடியபோது க்ளிக்கியது.

share on:facebook

Thursday, October 25, 2012

ஊரெங்கும் வெள்ளக்காடு. 'அம்மா'வுக்காக கொட்டும் மழையில் புதிய சாலைகள்.

உலகத்திலேயே நம் தமிழக அரசியல் தலைவர்கள் தனி ரகம். அது அம்மாவாக இருந்தாலும் சரி ஐயாவாக இருந்தாலும் சரி.

சில காலம் நான் வட மாநிலங்களில் இருந்திருக்கிறேன். நம்ம ஊர் லெட்டர் பேட் கட்சியின் ஆடம்பரம் கூட பெரிய கட்சிகளின் கூட்டங்கள், அவற்றில் கலந்து கொள்ள வரும் தலைவர்களின் வரவேற்புகளில் இருக்காது. ஆனா நம்ம ஊர் அரசியல் வாதிகள் இருக்கிறார்களே?

கடந்த ஒரு வாரமாக சென்னையின் பெரும் பகுதி இடங்கள் நீரில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. ரோடு எங்கே என்று தெரியாத அளவிற்கு தண்ணீர் முழங்கால் முட்டும் தேங்கி கிடக்கிறது. பல IT கம்பெனிகள் அமைந்துள்ள OMR ரோடும் இதற்க்கு விதிவிலக்கல்ல. இத்தனைக்கும், இதற்க்கு எக்ஸ்பிரஸ் வே என்று பெயர். துரைப்பாக்கத்தில் ஆரம்பித்து சோளிங்க நல்லூர் வரை இரு புறமும், தண்ணீர் குளம் போல் தேங்கி (இன்று வரை) நிற்கிறது.

இதனால், பேருந்துகள் முதல், ஆட்டோ, பைக்குகள் வரை எல்லோரும் ஸ்லோ ரேசில் போவது போல் நகர்வதே தெரியாத அளவிற்கு அவ்வளவு மெதுவாக ஊர்ந்து கொண்டு போய் வருகிறன. அதே போல் வேளச்சேரி செல்லும் அனைத்து இணைப்பு சாலைகளும். நத்தை வேகத்தில் தினமும் பயணம். இவை எல்லாம் அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரியாதா என்ன?

இதை எல்லாம் விட்டு விட்டு, 'கிடக்கறது கிடக்கட்டும், கிழவியை தூக்கி மணையில வை' என்று பெருங்களத்தூர் - கேளம்பாக்கம் இணைப்பு சாலையை இந்த கொட்டும் மழையில் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன் என்று நான் வேறு சொல்ல வேண்டுமா? அங்கு புதிதாக அமைய உள்ள காவலர் குடியிருப்புக்கான  அடிக்கல் நாட்டு விழாவிற்கு அம்மா அவ்வழியே வருவதால்.

அது மட்டுமா? ஐம்பது அடிக்கொரு வரவேற்ப்பு பேனர், நூறு அடிக்கு ஒரு போலிஸ் என ஏரியாவே திருவிழா களையில். அவ்வழியே ரெகுலராக போய் வருபவர்களுக்கு தெரியும். ஒரு முறையாவது நீங்கள் மூக்கை பொத்திக்கொள்ளாமல் அந்த இணைப்பு சாலையை கடக்க முடியாது. ஆடு மாடு என எந்த மிருகம் இறந்து போனாலும் அங்கு தான் வந்து போட்டு விட்டு போய் விடுவார்கள். இன்று அந்த நாற்றம் எங்கு போனது என்றே தெரியவில்லை.

இதே போல் யாராவது ஒரு புண்ணியவான் வேளச்சேரி சாலையிலும், OMR சாலையிலும் ஏதாவது ஒரு திறப்பு விழா, அடிக்கல் நாட்டு விழா என்று ஏற்பாடு செய்யுங்கப்பா. அங்குள்ள மக்கள் எல்லாம் உங்களை வாழ்த்துவார்கள்.

இப்படிக்கு,

தினம் தினம், தேங்கி கிடக்கும் மழை தண்ணீரால் வண்டி ஓட்ட முடியாமல் தவிக்கும் அப்பாவி குடிமகன்.   

share on:facebook

Wednesday, October 24, 2012

நண்பேண்டா - இனிப்பும் உழைப்பும். தஞ்சையின் பிரபல தொழில் அதிபர்.


 உலகில் மற்ற அனைத்து உறவுகளும் ஏதோ ஒரு காரணத்தால் நம்மால் மட்டுமே முடிவு செய்யப் படுவதில்லை. அன்னை, தந்தை, அக்காள், அண்ணன் ஏன் மனைவி கூட நம்மால் மட்டுமே தேர்ந்தெடுக்க முடியாது. நண்பர்களை தவிர.

அதிலும் பள்ளி கல்லூரி கால நண்பர்கள். அவர்களுக்கு என்று ஒரு தனி சிறப்பு உண்டு. வேலையில் சேர்ந்த பிறகு ஏற்படும் நட்புகள் வேறு. அவர்களிடம் எல்லாவற்றையும் நாம் பகிர்ந்து கொள்ள முடியாது. ஸ்டேடஸ், ஈகோ, கவுரவம் என பல காரணங்கள் அதற்குள் வரும். ஆனால், பால்ய நண்பர்கள் அப்படி இல்லை. அவன் சாப்பாட்டை நாம் சாப்பிட்டு, காசில்லாத போது சிறிதும் யோசிக்காமல் மாம்ஸ், ஒரு அஞ்சு ரூபா இருந்தா கொடேன் என்று கேட்டு விடுவோம்.

அப்படி ஒரு பால்ய நண்பரை கடந்த மாதம் சந்திக்க நேர்ந்தது. ஒரே ஊர் என்றாலும் எப்பவாவது இந்தியா வந்து கொண்டிருந்த போது அவ(ரை)னை சந்திக்கும் வாய்ப்பு பெரும்பாலும் கிடைத்ததில்லை. அதற்க்கு கரணம் அவர் தற்போது ஒரு மிக பெரிய தொழில் அதிபர். சென்ற முறை தஞ்சை சென்றிருந்த போது அவரின் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிக்கொண்டு திரும்பும்போது எதிரே நண்பர் வந்தார். பார்த்தவுடன் சிறிது மலைத்து நின்று விட்டு, பிறகு சுதாரித்து என்னை அடையாளம் கண்டு கொண்ட பின், அவரின் முகத்தில் சந்தோசத்தை பார்க்க வேண்டுமே. எனக்கும் தான்.

கைகளை இறுக பிடித்துக் கொண்டு பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டிருக்கையிலேயே, அவரை சுற்றி ஓரிரு முக்கியஸ்தர்கள் எதற்கோ அவருக்காக கத்துக் கொண்டிருப்பதை உணர்ந்து, சரிப்பா, நீ எப்ப ப்ரீயா இருப்பனு சொல்லு. நான் வந்து பார்கிறேன் என்றேன். நண்பர் அதை பற்றியெல்லாம் கவலை படாமல், தன்னுடன் இருந்தவர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைக்க தொடங்கிவிட்டார்.

இவன் என்னுடன் பள்ளியில் படித்தவன். என்னுடைய பெஸ்ட் பிரண்டு. ரொம்ப வருடங்களுக்கு பின் மீண்டும் சந்திக்கிறோம் என்று பழைய கதைகளை சிறிது நேரம் எல்லோருடனும் பகிர தொடங்கி விட்டார். பரிட்சையில் காப்பி அடித்தது முதல், கட் அடித்து விட்டு சினிமா போனது வரை.

நாங்கள் எல்லாம் அதை படித்து, இதை படித்து, எங்கெங்கோ சென்று ஒரு வருடத்தில் சம்பாதித்ததை, சம்பாதித்துக் கொண்டிருப்பதை, நண்பர் தன தொழில் மூலம் ஓரிரு மணி நேரத்தில் கல்லா கட்டிவிடுவார். அது மட்டுமில்லை. இன்று தஞ்சை நகரில், முக்கியமான ஒரு தொழில் அதிபர். பிராதான தொழிலான 'ஸ்வீட் ஸ்டால்' தவிர, பழமுதிர்சோலை, கல்யாண மண்டபம் என்று அவரின் தொழில் சாம்ராஜ்யம் பரந்து விரிந்து கிடக்கிறது.

இவை எல்லாவற்றுக்கும் காரணம், உழைப்பு உழைப்பு உழைப்பு மட்டும் தான். பள்ளி நாட்களிலேயே, பள்ளி விட்டு வீடு திரும்பினாலும், மீண்டும் பள்ளிக்கு வரும் முன்பும், ஸ்வீட் தயாரிப்பில் தானும் உட்கார்ந்து, அதன் தொழில் நுட்பங்களை நன்கு கற்றுக்கொண்ட நண்பர் இன்றும் அவ்வப்போது ஸ்வீட் போடும் போது தானும் தொழிலாளர்களுடன் சேர்ந்து வேலை செய்வதை பார்த்திருக்கிறேன்.

தீபாவளி  மற்ற பண்டிகைகளின் போது தஞ்சை ரயில்வே நிலையம் அருகே உள்ள நண்பரின் ஸ்வீட் ஸ்டால் வழியே செல்லும் பேருந்துகள் கூட சில சமயம் நிறுத்தப்பட்டு டிரைவர், கண்டக்டர், பிரயாணிகள் என அனைவரும் அவரின் கடையில் இனிப்புகளை வாங்கி செல்வர். இவை எல்லாவற்றுக்கும் காரணம், தரமான இனிப்பு, கார வகைகள் நியாயமான விலையில் கிடைப்பதே. உதாரணத்திற்கு, சென்னையில் உள்ள பிரபல இனிப்பு கடைகளின் விலைகளை ஒப்பிட்டால், இங்கு அதில் சரி பாதி தான் இருக்கும்.

பெரிய தொழில் அதிபர் மட்டுமன்றி நண்பர் பலருக்கு வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் படிப்புக்கு மட்டுமன்றி பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். நண்பர்களை பற்றி பெருமையாக சொல்லிக் கொள்வதில் யாருக்கு தான் பெருமை இல்லை. அந்த வகையில், தஞ்சை 'பாம்பே' ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர் என் நண்பர் என்பதில் எனக்கும் பெருமை தான்.

தஞ்சை சென்றால், பாம்பே ஸ்வீட் ஸ்டாலில் இனிப்பு வகைகளை வாங்கி சுவைத்து பாருங்கள். அடுத்த முறை தஞ்சை சென்றால் மீண்டும் வாங்காமல் வர மாட்டீர்கள். பாம்பே ஸ்வீட்டில் எனக்கு மிகவும் பிடித்தது, சந்திரகலா மற்றும் ட்ரை குலோப்ஜாமுன். குடிப்பதற்கு பாதாம் கீர்.




      

share on:facebook

Tuesday, October 16, 2012

இவர் எல்லாம் ஒரு பதிவரா?


ரொம்ப நாளா இவர் கிட்ட நறுக்குன்னு நாலு கேள்வி கேட்கனும்னு காத்துக்கிட்டு இருந்தேன். இப்போ 'பவர் ஸ்டார்' வேற கோர்ட்டு கேசுன்னு ஆள் சிக்க மாட்டேன்குறாரா. அதான் இவர் மாட்டிக்கிட்டார்.

ஆதி. ம: நீங்க பிரபல பதிவரா? பிரபலமாகிக் கொண்டிருக்கும் பதிவரா?

மொக்க பதிவர்: ரெண்டுமே இல்லீங்க. நான் ஒரு பதிவர். நாலு பேராவது என் பதிவுகளை படிகிறார்கள். அது மட்டும் நிச்சயம்.

ஆதி. ம: பதிவு எழுத ஆரம்பிச்சு எத்தன வருசமாச்சு? எத்தன பதிவுகள் இது வரைக்கும் எழுதி இருக்கீங்க?

மொ. ப: மூணு வருஷம் முடிஞ்சிடுச்சு. இது வரைக்கும் இருநூத்தி ஐம்பதுக்கும் மேல்.பதிவுகள் போட்டாச்சு.

ஆதி. ம: நீங்கள் எழுதியதில் உங்களுக்கு மிகவும் பிடித்த பதிவு எது?

மொ. ப: வாகன விபத்துக்கள் பற்றிய இந்த பதிவும், இதய நலன் பற்றிய இந்த பதிவும் எனக்கு மிகவும் பிடித்ததாகும். வாகன விபத்து பற்றிய பதிவு நான் பதிவெழுத வந்த காலத்தில் எழுதியது. இருந்தும் அதற்க்கு நல்ல வரவேற்பும் பாராட்டுதல்களும் கிடைத்தது எனக்கு நல்ல ஊக்கத்தை தந்தது.

அதே போல் இதய நலன் பற்றிய பதிவும் நானே ரசித்து ரசித்து படித்திருக்கிறேன். அது தவிர ஒரு பிரபல பதிவர் இப்பதிவை பற்றி வலைச்சரத்திலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆதி. ம: நீங்க ஹிட்டுக்காக பதிவு எழுதுறீங்களா? இல்ல உங்களுக்கு பிடிச்சத எழுதுறீங்களா?

மொ. ப: இரண்டுமே. எல்லா பதிவர்களுக்கும் உள்ள பிரச்சனைதான் எனக்கும். நல்ல பதிவை போட்டாலும் அதன் தலைப்பு வசீகரமாக இல்லாவிட்டால் சீந்துவாரில்லை(பிரபல பதிவர்களின் பதிவுகள் இதற்க்கு விதிவிலக்கு). அதனால் நல்லதையும் எனக்கு பிடித்ததையும் எழுதினாலும் தலைப்புக்காக நான் அதிக நேரம் செலவு செய்ய வேண்டியதாகிறது.

ஆதி. ம: அமா, நீங்க வேற யாருடைய பதிவுகளுக்கும் பின்னூட்டம் வழக்கமா போடறதில்லையாமே? நீங்க அப்படி என்ன பெரிய பதிவரா?

மொ. ப: அட, நீங்க வேறங்க. நான் எனக்கு வர பின்னூட்டத்திற்கே பதில் பின்னூட்டம் சில சமயங்களில் என்னால் போட முடிவதில்லை. இப்படி சொல்வதால் நீங்க தப்பா நினைக்க கூடாது. என்னுடைய அலுவல் பொறுப்பு, வீட்டு வேலைகள் காரணமாக எனக்கு பதிவுகள் எழுதவே நேரம் கிடைப்பதில்லை. காலை 9 முதல் மாலை 6.30 வரை அலுவலக பனியில் சில நேரம் எழுந்து போய் தண்ணீர் குடிக்க கூட முடிவதில்லை. இது தவிர போக்குவரத்தில் மட்டும் 4 மணி நேரம் போய் விடுகிறது. இதன் பின் வீட்டுக்கு வந்து குழந்தைகள், வீட்டு வேலைகள் என்று. அப்பப்பா...இப்ப சொல்லுங்க நான் ரொம்ப பிஸியா இல்லையானு... 

இருந்தும் என்னுடைய பதிவுகளை படித்து தொடர்ந்து பின்னோட்டம் இடும் பல பதிவர்களுக்கு இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆதி. ம: உங்களுடைய பதிவுகளில் அதிகம் அமெரிக்காவை பற்றி தான் இருப்பதாகவும், அதிலும் சில, இந்தியர்களையும், இந்தியாவையும் குறைத்து மதிப்பிடுவதாகும் ஒரு சிலர் கருதுகிறார்கள். இதை பற்றி உங்கள் விளக்கம் என்ன?

மொ. ப: உங்களுக்கு தெரிந்ததைதானே எழுத முடியும். நான் கடந்த 8-10 வருடங்களாக அயல் நாடுகளில் அதிகம் வசித்திருக்கிறேன் அங்கு நான் பார்த்த நல்ல விசயங்களை (பெரும்பாலும்) தான் எழுதி இருக்கிறேன். நல்லது எங்கே யார்கிட்டே இருந்தாலும் அதை பாராட்டுவதிலும் பின் பற்றுவதிலும் ஒன்னும் தப்பு இல்லையே? நம்ம கிட்ட தெரிந்தோ, தெரியாமலோ   ஒட்டிக்கொண்ட தவறான பழக்க வழக்கங்களை ஒத்துக் கொள்வதில் ஒன்று தவறில்லையே?

அதே போல் அமெரிக்காவை பற்றியும் IT ஐ பற்றியும் எழுதும் போது அதற்க்கு நல்ல வரவேற்ப்பு கிடைப்பதும், அமெரிக்கா பற்றி அதிகம் எழுதுவதற்கு காரணம். மற்ற படி, சினிமா தவிர நாட்டு நடப்பு, அரசியல் என்று எழுதிக்கொண்டு தான் இருக்கிறேன்.

ஆதி. ம: நீங்கள் எழுதிய ஒரு பதிவு தவறானது என்றோ அல்லது அதற்க்கு கண்டனங்கள் வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

மொ. ப: அப்படி ஒன்றும் எனக்கு பெரிதாக ஏற்பட்டதில்லை. ஒரு முறை சரியாக 'ஹோம் வொர்க்' செய்யாமல் அமெரிக்க வீட்டுக் கடன் பற்றி ஒரு பதிவு போட்டு விட்டேன். சக பதிவர் ஆதாரங்களுடன் அதை தவறென்று சுட்டிக் காட்டிய பிறகு அதை உடனே நீக்கி விட்டேன். தமிழ் மேல் எனக்கு அதிகம் ஆர்வம் இருந்தாலும், தமிழில் அவ்வளவு சுத்தம் கிடையாது. சில நேரங்களில் அம்மாதிரி தவறுகளை சிலர் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். அவ்வளவு தான்.

ஆதி. ம: இந்த தமிழ்மணம் ரேன்க், வோட்டு, நட்சத்திர பதிவர் இது பற்றியெல்லாம்...

மொ. ப: நீங்க வேறங்க. ரேசில் கலந்து கொள்பவர்களுக்கு தான் முதல், இரண்டாவது இடத்தை பற்றி எல்லாம் கவலை வேண்டும். நாமலாம் ஒதுங்கி நின்னு வேடிக்கை பாக்குறவங்க. யார்ட்ட போய் என்ன கேள்வி கேக்குறீங்க. அப்புறம் இந்த தமிழ்மண வோட்டு. யாரும் எனக்கு வழக்கமா போடறதும் இல்ல. நானும் கேட்டுக்கிட்டது இல்ல. இது மூலமா வேணா அந்த கோரிக்கையை வைக்கிறேன். பதிவு நல்லா இருந்தா முடிஞ்சா வோட்டு போடுங்க.

ஆதி. ம: சாரி சார். நீங்களே 'ரொம்ப பிசியான' ஆளு. அதனால கடைசியா ஒரு கேள்வி. நீங்க ஏன் இன்னும் உங்க அடையாளத்தை (முகத்தை) காண்பிக்க மாட்டேன்குறீங்க?

மொ. ப: ஓபனா சொல்லப் போனால், வெட்கம் தான் சார். ஏதோ ஒரு காரணத்துக்காக முதலில் அடையாளத்தை காண்பிக்கவில்லை. அதன் பிறகு தற்போது அதே பழகி போனதால் புதுசா முகத்த காண்பிப்பதற்கு என்னவோ போல இருக்கு. இன்னும் சொல்லப்போனால் பத்திரிக்கைகளில் கூட ஒவ்வொரு கட்டுரையோ, செய்திகளோ வந்தால் அதை யார் எழுதினார் என்று போட்டோ போட்டா போடுகிறார்கள். நமக்கு தேவை விஷயம். அவ்வளவுதான் அப்படி எடுத்துக் கொளுங்களேன்.

ஆதி. ம: ரொம்ப நன்றி சார். கடைசியா பதிவுலகத்துக்கு ஏதாவது சொல்ல விரும்புறீங்களா?

மொ. ப: ஹி ஹி ஹி ...அந்த அளவுக்கு நான் இன்னும் வளரலீங்க. அதே நேரத்தில் இந்த மூன்று வருடங்களாக என் பதிவுகளை எப்போதும், அவ்வப்போதும், எப்பவோ ஒரு முறையும் படிக்கும், படித்து வரும் பதிவர்களுக்கும் வசககர்களுக்கும் ஒரே வேண்டுகோள்.

ஆதிமனிதனை பற்றி தங்களின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் மிகவும் வரவேற்கிறேன். நிச்சயம் அது எனக்கு ஒரு ஊக்கத்தையும் குறைகள் இருந்தால் திருத்திக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமையும்.

இப்படிக்கு, இதுவரை ஆதிமனிதனின் மனசாட்சியா பேசிக் கொண்டிருந்த மொக்க பதிவர். நன்றி நன்றி நன்றி....


share on:facebook

Wednesday, October 10, 2012

தீபாவளிக்கு ரயில், பஸ்ஸில் டிக்கெட் கிடைக்கவில்லையா? இதோ இருக்கு மாற்று வழி.

வருடத்திற்கு இரண்டு தீபாவளி வந்தால் முதலில் சந்தோசப் படுபவர்கள் ஆம்னி பஸ் காரர்களாகத்தான் இருப்பார்கள். பின்ன என்னங்க? சென்னை டூ தஞ்சாவூர் ஒரு டிக்கெட் இன்றைய நிலவரப்படி ரூபாய் 1100  ஐ தாண்டிவிட்டது (பொதுவாக 350-400 ருபாய் தான் இருக்கும்).

ரெயில் கதை நமக்கு தெரிந்ததுதான். மூன்று மாதங்களுக்கு முன்பே விண்டோ ஓபன் ஆன பத்து பதினைந்து நிமிடங்களில் அனைத்து டிக்கெட்களும் தீர்ந்து போய் விட்டன. அதே நிலைமை தான் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திலும். பல்வேறு காரணங்களால் இந்த இரண்டையும் கோட்டை விட்டு விட்டு தற்போது எப்படி தீபாவளிக்கு போவதென்று தலையை முட்டிக் கொண்டபோது தான் நமக்கு பொறி தட்டியது.

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் சென்னையிலிருந்து கிளம்பி நம்ம ஊருக்கு டிக்கெட் போடாமல் பக்கத்தில் உள்ள சின்ன சின்ன ஊர்கள் ஒவ்வொன்றாக தேடி பார்த்தேன். அதிலும் சிறிது ஏமாற்றம் தான். அதையும் விடுத்து அதிக போக்குவரத்து அல்லாத நடுத்தர ஊர்களை ஒவ்வொன்றாக போட்டு பார்த்ததில். அய்யா, சென்னை டூ அரியலூர் வரை டிக்கெட் கிடைத்தது. அதுவும் கூட முன் பக்க இருக்கைகள் கிடைத்தன.

அரியலூரிலிருந்து தஞ்சை சுமார் நாற்பது கிலோ மீட்டர்கள்தான். அடுத்த லோக்கல் பஸ் பிடித்தால் ஒரு மணி நேரத்தில் ஊர் போய் விடலாம். நால்வருக்கும் சேர்த்து எண்ணூறு ரூபாய்தான் டிக்கெட் செலவு ஆனது. செமி டீலக்ஸ் பஸ். எப்படியாக இருந்தாலும் ஆம்னி பஸ் நிலைமையும்  அன்று அப்படிதான் இருக்கும். கண்ட கண்ட பஸ்களை கொண்டு வந்து ட்ரிப் அடிப்பார்கள். அது மட்டும் இல்லாமல் ஊர் போகும் வரை எவ்வளவு பேரை ஏற்ற முடியுமோ அவ்வளவு பேரை ஏற்றிக் கொ(ல்)ள்வார்கள். அதற்க்கு இது எவ்வளவோ தேவலை.

என்ன மக்களே. உங்களுக்கும் டிக்கெட் பிரச்னை இருந்தால் இது மாதிரி முயற்சித்து பாருங்களேன். All the best.

share on:facebook

Tuesday, October 9, 2012

பொரித்தால் புழு கூட முறுகலாதான் இருக்கும் - KFC சிக்கன் பீஸில் புழுக்கள்


பதிவின் தலைப்பையும் மேலே உள்ள படத்தில் உள்ள வாசகத்தையும் ஒரு முறை திரும்பி படித்து பாருங்கள்! இது வரை நான் தேர்ந்தெடுத்த எந்த ஒரு படத்துக்கும், பதிவுக்கும் இப்படி ஒரு  அர்த்தம் கிடைத்ததில்லை.

KFC எனப்படும் மேற்கெத்திய உணவகத்தின் திருவனந்தபுரத்து கிளையில் நேற்று பரிமாறப்பட்ட சிக்கன் பீச்களில் இருந்து புழுக்கள் வெளிவந்ததாக செய்தி வெளி வந்தது சற்று என்ன மிகவும் அதிர்ச்சியாகவே இருந்தது.

முதலில் ஒன்றை நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இங்கு செயல்படும் KFC, McDonald's, Pizza hut, போன்ற எல்லா உணவகங்களும் நம்மூர் லோக்கல் மக்கள் வைத்து நடத்துவது தான். அங்கு போய் சாப்பிடுவதினாலோ, அம்மாதிரி ஜன்க் புட் எனப்படும் உடலுக்கு கெடுதலான உணவை அடிக்கடி குடும்பத்தோடோ, குழந்தைகளுடனோ போய் சாப்பிடுவதால் நாம் ஒன்றும் அமெரிக்கர், ஐரோப்பியர்கள் ஆகி விட முடியாது.

நிச்சயம் ஓரிரு முறை பல்வேறு உணவு வகைகளை ருசித்து பார்க்க வேண்டும் என்ற அளவில் இந்த உணவு வகைகளை உண்ணலாம். அதை விடுத்து, வறட்டு கவுரவுத்துக்காகவும், பெருமைக்காகவும் சாப்பிட்டால்  இம்மாதிரி பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.

நம்ம ஊரு நாட்டுக்கோழி குழம்பு, அதுவும் வீட்டில் பெண்கள் மிளகாய், மல்லி என்று கைப்பட அரைத்து வைத்த குழம்பு என்றால் அதற்க்கு இந்த KFC சிக்கன் கிட்ட வர முடியுமா? மேலை நாட்டினரே இப்போதெல்லாம் இயற்கை உணவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். சமீபத்திய ஆய்வின் படி இயற்கை உணவை பெரும்பாலும் விநியோகிக்கும் 'சப் வே' தான் மிக சிறந்த உணவகமாக அறிவிக்கப் பட்டுள்ளது. மிக மோசமான உணவகங்களாக McDonald போன்றவைகள் இடம் பெற்றிருந்தன.

வெளி நாடுகளில் இம்மாதிரி உணவுகளை ஜன்க் புட் என்று தான் கூறுவார்கள். அங்கு சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் அவசரத்திற்காகவோ, குறைந்த விலையில் உணவை முடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவோ, இல்லை குழந்தைகள் அவர்களுக்கு பொம்மைகள் கிடைக்கும் என்பதற்காகவோ வற்புறுத்தி கூட்டிக் கொண்டு போனால் தான் உண்டு. எந்த ஒரு பார்ட்டிக்கும் அங்கு McDonald 's கூட்டிக் கொண்டு போக மாட்டார்கள்.

ஆனால் நம் மக்கள் தான் அதை ஒரு 'ஸ்டேடஸ் சிம்பலாக' இங்கு எடுத்துக் கொள்கிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரண்டு மூன்று முறை எங்கள் பிராஜக்ட் டீமில் KFC யில் ஆர்டர் செய்துள்ளார்கள். அவர்களுக்கு இந்த செய்தி தெரிந்தால் அடுத்த முறை ஆர்டர் செய்வார்களா என தெரியவில்லை. அதில் 'டீசண்டாக' சாப்பிட வேண்டும் என்று சிக்கன் பீஸ்களை பிய்த்து கூட சாப்பிடாமல், வாயிலிருந்து எடுக்காமல் அப்படியே கடித்து மென்று சாப்பிட்டால் அப்புறம் எப்படி உள்ளே புழுக்கள் இருப்பது தெரியும்?

இது எங்கோ நடந்த ஒரு சம்பவமாக நாம் பார்க்க முடியாது. ஏனென்றால் இதே போல் ஒரு சம்பவம் ஓரிரு மாதத்திற்கு முன் இதே கேரளாவில் நடந்து ஒரு பொறியாளர் 'புட் பாய்சனால்' இறந்தே விட்டார். அது மட்டுமன்றி இங்கு தயாரிக்கப் படும் பெரும்பாலான உணவு வகைகள் 'ப்ரோசன்' செய்யப்பட்டு பாதுகாக்கப் படுபவை. நம்மூரில் நிலவும் கரண்ட் கட்டில் இவர்கள் ஜெனரேட்டர்கள் வைத்து பிரீசரை ஆனில் வைத்திருப்பார்களா என தெரியவில்லை.

சமீபத்தில் பீசா ஹட் அருகே காத்திருந்த போது ஒரு முதிய தம்பதியினர் பீசா ஹட்டில் சாப்பிட உட்காருவதற்கு இடம் கிடைக்காமல் வெகு நேரம் காத்திருந்து திரும்பி சென்றதை பார்த்து சற்று ஆச்சர்யமாக தான் இருந்தது. ஹ்ம்ம் எல்லோருக்கும் மெல்லிய வெளிச்சத்தில் ஆயிரம் ருபாய் கொடுத்து இரண்டு மூன்று சிக்கன் பீஸ்கள் சாப்பிட ஆசை வந்து விட்டது.

என்னைப் பொறுத்தவரை நான்வெஜ் என்றால் வீட்டில் சமைக்கப் பட்டதற்கு ஈடு இணை ஏதுமில்லை. குறிப்பாக நாள் பட்டு போன இறைச்சியாக இருக்குமோ? நேற்றைய குழம்பாக இருக்குமோ என அஞ்ச தேவையில்லை.

லேட்டஸ்ட் அப்டேட்: முதல் கட்ட விசாரணையில், ஸ்டாக் செய்யப்பட்டிருந்த கோழி இறைச்சிகள் ஐந்து மாதத்திற்கும் மேற்பட்டவையாக இருக்கலாம் என சந்தேகப் படுகிறார்கள். அதே நேரத்தில் 270 டிகிரி வெப்பத்தில் இறைச்சிகளை நாங்கள் வேக வைக்கும் போது புழுக்கள் உயிருடன் இருக்க வாய்ப்பே இல்லை என்று KFC ஐ சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  


share on:facebook

Monday, October 8, 2012

IT நிறுவனங்களும் பெண்களின் ஆடை குறைப்பும்


எனக்கு தெரிந்து ஆண்களின் கால்கள் கவர்ச்சி பகுதி இல்லை. ஆனால், இந்த IT நிறுவனங்கள் எங்கிருந்து தான் கண்டு பிடித்தார்களோ? யார் சொல்லிக் கொடுத்தார்களோ? ஆண்கள் இப்படி உடை அணிய வேண்டும். அது வெளியே தெரிய கூடாது. இது வெளியே தெரியகூடாது என ஆண் ஊழியர்களை மட்டும் காய்த்து விடுகிறார்கள்.

பின்ன என்னங்க? திங்கள் முதல் வெள்ளி வரை பார்மல்ஸ் இல்லை பிசினஸ் காஷுவல்ஸ் என்று கழுத்து முதல் கால்வரை மூடிக் கொண்டு அது பத்தாதுன்னு கழுத்து மேல் பட்டன் வரை போட்டிருக்க வேண்டுமாம். அடிக்கும் நூறு டிகிரி வெயிலில் தினமும் ஷூ வேறு போட்டுக் கொள்ள வேண்டும். இது எல்லாம் ஆண் ஊழியர்களுக்கு மட்டும் தான். பெண் ஊழியர்களுக்கு?

அவர்கள் சேலையில் ஆரம்பித்து வெஸ்டர்ன் பார்மல்ஸ் வரை அவர்கள் விருப்பப் பட்டதை அணிந்து கொள்ளலாம். ஷூ போட வேண்டிய கட்டாயம் இல்லை. கை வைத்த சட்டை அணிய வேண்டிய ரூல்ஸ் இல்லை. வார நாட்களில் ஜீன்சை தவிர எது வேண்டுமானாலும் அணிந்து செல்லலாம்.

அட இதுவாவது பரவாயில்லீங்க. வெள்ளிக்கிழமை அன்று காஷூவல்ஸ் என்று தான் பேர். அது பெண்களுக்கு மட்டும் தான். ஆண்கள் 'டீ' ஷர்ட் போடலாம். ஆனால் அது காலர் வைத்ததாக இருக்க வேண்டும். அப்படியே காலர் வைத்த 'டீ' ஷர்ட் போட்டாலும், அதில் எந்த வித வாசகமோ, படங்களோ இருக்க கூடாது. அதிலும் குறிப்பாக மற்ற கம்பெனிகளின் லோகோ இருக்கவே கூடாது.

ஆனால், பெண்கள் மட்டும் ஸ்லீவ்லெஸ் பனியன்கள் அணிந்து வரலாம். டிசைன் போட்ட பனியன்கள் அணிந்து வரலாம். முக்கியமாக காலில் செருப்பு போட்டுக் கொண்டு வரலாம். தெரியாம தான் கேக்குறேன். பெண்கள் ஸ்லீவ்லெஸ் போட்டால் அது கவர்ச்சி இல்லை. ஆண்கள் காலர் இல்லாத 'டீ' ஷர்ட் போட்டால் அது மட்டும் கவர்ச்சியா? செருப்பு அணிந்து வருவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் அப்படி என்ன வித்தியாசத்தை கண்டு பிடித்தார்களோ? செருப்பு அணிந்து வருவது பார்மல்ஸ் இல்லை என்றால் பெண்கள் மட்டும் எப்படி செருப்பு அணிந்து வரலாம்?

இது மட்டுமா? ஷிப்டில் வேலை பார்த்தால், வேலை முடிந்து வீட்டிற்கு 'கேப்' இல் போகும் போது பெண்களாக இருந்தால் அவர்கள் வீட்டு வாசற்படியில் இறக்கி விட வேண்டும். இது நிச்சயம் செய்ய வேண்டியது தான். ஆனால் அதே நேரத்தில் அதுவே ஆண்களாக இருந்தால் தெரு முக்கு தான். அது நடு சாமமாக இருந்தாலும் 'கேப்' டிரைவர், சார் ஜென்ட்ஸ் எல்லாம் தெரு முனையில் இறக்கி விட்டால் போதும்னு அட்மின்ல சொல்லிட்டாங்க அப்படின்பார். ஏன் தெரு நாய்கள் ஆண்களை கடிக்காதா? இல்லை தெருவோர பள்ளங்கள் பெண்கள் விழுவதற்கு மட்டும் தானா?

நான் என்னா சொல்றேன். பெண்களுக்கு என்று நிச்சயம் சில சலுகைகள் வேண்டியது தான். ஆனால், இந்த மாதிரி உடை விசயத்திலும், பாதுகாப்பு விசயத்திலும், நாங்கள் பெண்களுக்கு சலுகைகள் வேண்டாம்னு சொல்லலை. எங்களுக்கும் அத தாங்கனுதான் சொல்றோம்.

ஹ்ம்ம்...இதெல்லாம் கேக்கறத்துக்கு யாருமே இல்லையா? அது யாருப்பா அது? போடா போடா புண்ணாக்கு பாட்ட இப்ப போடுறது?

IT - Is it only for women?
  

share on:facebook

Sunday, October 7, 2012

ஆதலினால் 'ஊழல்' செய்வீர்


கடந்த இரு மாதங்களில் சென்னை டு தஞ்சாவூர் பேக் டு சென்னை என காரில் இரண்டு முறைக்கு மேல் செல்ப் டிரைவிங் செய்தேன். இந்தியாவின் பொருளாதார நிலையில் இந்த ஹை வே சாலைகள் நமக்கெல்லாம் ஒரு வரபிரசாதம் என்றே கூறலாம்.

ஆனால், ஐம்பது கிலோமீட்டருக்கு ஒரு டோல் என்று ஏறக்குறைய முன்னூறு ருபாய் டோல் கட்டணமாக நம்மிடம் தீட்டி விடுகிறார்கள். அது தான் கொஞ்சம் அதிகமாக தெரிகிறது. மற்றபடி சாலையின் ஊடே குறுக்கிடும் ஒவ்வொரு ஊரையும் கடக்க மேம்பாலங்கள், ஊருக்குள் செல்ல தனியே 'சர்வீஸ்' ரோடுகள் என்று மேலை நாட்டு சாலைகளை நினைவூட்டும் வகையில் மிகவும் அருமையாக சாலைகளை வடிவமைத்துள்ளார்கள்.

அதே நேரத்தில் சாலை குறியீடுகள் ஒரு சில இடங்களில் மிகவும் குழப்புவதாக உள்ளது. ஓரளவு அந்த சாலையில் போய் வந்தவர்களால் மட்டுமே சரியாக குறியீடுகளை புரிந்து கொள்ள முடியும். இதை அவசியம் நெடுஞ்சாலைத்துறை சரி செய்ய வேண்டும். எங்கோ சென்று பிரியும் சாலைக்கு வெகு தொலைவில் குறியீடுகளும், அதே போல் சாலை பிரியும் இடத்தின் வெகு அருகில் குறியீடுகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

'லேன்' டிசிபிளின் பயன்கள் பற்றி எத்தனை ஓட்டுனர்களுக்கு தெரியும் என தெரியவில்லை. வெறுமனே 'Follow Lane Disipline' என ஆங்காங்கு போர்டுகள் வைப்பதினால் ஒன்றும் பயன் இல்லை. அவ்வப்போது நெடுஞ்சாலையில் வரும் வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு அதன் பயன்களை விளக்க வேண்டும். ஆனால், தற்போது பெரும்பாலான இடங்களில் இருவழி சாலைகளும் ஒரு வழியில் இரு லேன்களுக்கு மேல் இருப்பதால் வாகன ஓட்டிகளே தெரிந்தோ தெரியாமலோ 'லேன்' டிசிப்ளினை பின் பற்றுகிறார்கள்.

லேன் டிசிப்ளினை பின் பற்றினால் நிச்சயம் விபத்துகள் குறையும். குறிப்பாக நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் எல்லோரும் சென்று கொண்டிருக்கும் போது எதிரே போகும் வண்டிகளை தாண்டிச்செல்லும் போது மிகவும் உதவும். ஆமா? லேன் டிசிப்ளின் அப்படின்னா என்னான்னு கேக்குறவங்களுக்கு, அது ஒன்னும் பெரிய கம்ப சூத்திரம் இல்லைங்க. சாலையில் மூன்று லேன்கள் இருந்தால் லேனுக்குள்ளே வண்டி ஓட்ட பலகனும்க. இரண்டு லேன்களை பிரிக்கும் கோட்டின் நடுவே வண்டி ஓட்டக்கூடாது. அதே போல் கன ரக வாகனங்கள் இடது ஓரமாகவும் சிறிய, வேகமாக செல்லும் வாகனங்கள் வலது ஓரமாகவும் செல்ல வேண்டும். ஊருக்குள் செல்லும் முன்பே இடது ஓரத்திற்கு வந்து விட வேண்டும். கடைசி நேரத்தில் லேன் மாறுவது ஆபத்தில் முடியும்.   

மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகம் சாலை வசதிகளில் முன்னோக்கி இருக்கிறது என்று தாராளமாக சொல்லலாம். ஹை வேக்கள் மட்டுமின்றி சென்னைக்குள்ளும் பறக்கும் ரயில்கள், மெட்ரோ ரயில்கள், தடுக்கி விழுந்தால் பாலங்கள் என கட்டுமானத்தில் நாம் நிச்சயம் முன்னேறி இருக்கிறோம். ஒரு காலத்தில் மும்பை போன்ற மாநகரங்களை பார்த்து மலைத்து போய் இருக்கிறேன். பெரிய பெரிய பாலங்கள், நிறைய ஹை வேக்கள் என்று. தற்போது மற்ற பின்தங்கிய மாநிலங்களில் இருந்து வரும் மக்கள் சென்னை, தமிழகத்தையும் அப்படி தான் பார்ப்பார்கள் (இன்னமும் குண்டும் குழியுமான சாலைகளில் போய் வந்து கொண்டிருக்கும் பலர் உறுமுவது கேட்கிறது. ஏதோ பொதுவாக சொல்றேங்க..)

நெடுஞ்சாலைகளில் இன்னமும் ஒரு பெரிய குறை உண்டென்றால் அது 'ரெஸ்ட் ஏரியா' மற்றும் உணவகங்கள் தான். சென்னை தாண்டியவுடன் ஆங்காங்கே ஒரு சில ரெஸ்ட் ஏரியாக்கள் கண்ணில் பட்டது. ஆனால் அவைகளை சாலையிலிருந்து பார்க்கும் போதே அங்கு சுத்தமோ, பாதுகாப்போ இருப்பது போல் தெரியவில்லை. அதே போல் ஊருக்குள் சென்றால் தான் நல்ல உணவகங்கள் கிடைக்கின்றன. மற்றவை எல்லாமே அவ்வளவு நன்றாக இல்லை. அப்படியே இருந்தாலும் விலைகள் யானை விலை குதிரை விலை தான். பெரிய பெரிய நிறுவனங்களிடம் இந்த 'ரெஸ்ட் ஏரியா', சாலை யோர உணவகங்களை கொடுத்தால் ஓரளவு பராமரிப்பும் நல்ல உணவும் கிடைக்கும் என நினைக்கிறன்.

ஆமா, இதெல்லாம் சொல்றீங்களே, அதற்கும் தலைப்புக்கும் என்ன சம்மந்தம் என கேகுறீங்களா? தமிழக சாலை வசதிகளை பார்த்து வியந்த நேரத்தில் லோக்கல் அரசியல்வாதி ஒருவரிடமும் ஒரு நெடுஞ்சாலை துறை பொறியாளரிடமும், சாலை வசதிகளில் தமிழகம் முனைப்பு கட்டுவதற்கு ஏதும் கரணம் இருக்கிறதா என கேட்டேன். அதற்க்கு அவர்கள் சொன்ன பதில்...

மற்ற எதில் ஊழல் செய்தாலும் அது மக்களை கோபம் அடைய செய்யும். சாலை, மேம்பாலங்கள் போடுவதில் ஊழல் நடந்தாலும் மக்களுக்கு அது நேரிடையாக உபயோகப் படுவதால் மக்கள் அதில் நடக்கும் ஊழல்களை பற்றி அவ்வளவாக கண்டு கொள்வதில்லை. அது மட்டும் இல்லாமல் இதில் கிடைக்கும் (காண்ட்ராக்ட்) கமிஷனும், சாலை பராமரிப்பு என தொடர்ந்து கிடைக்கும் காண்ட்ராக்ட்களும் தமிழக அரசியல் வாதிகளை ரொம்பவே இதில் ஈர்த்து விட்டதாக கூறினார்கள். அப்புறம் என்னங்க? அப்படியாவது (அப்படிதான்) நமக்கு  நம்மைகள் கிடைக்கிறது என்றால் 'ஊழல் செய்து விட்டு போகட்டுமே'.

share on:facebook

Tuesday, October 2, 2012

'அம்மா' ப்ராஜக்ட்.

கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக நாம் தினமும் உபயோகிக்கும் கிரெடிட் கார்ட் முதற்கொண்டு, அமெரிக்கர்கள் பயன்படுத்தும் மின்சாரத்தை முறையாக பராமரிப்பது வரை  பல உயர் தொழில்நுட்ப ப்ராஜக்ட்களில் இரவு பகல் பாராமல் பணியாற்றி வந்திருந்தாலும், அம்மா அப்பாவின் அருகில் இருந்து அவர்களின் சின்ன சின்ன தேவைகளை நிறைவேற்றி தர முடியவில்லையே என்ற ஆதங்கம் நிறையவே இருந்தது. நீண்ட காலத்திற்கு பிறகு இந்தியா வந்து 'செட்டில்' ஆனதிற்கு அதுவும் ஒரு காரணம்.

என்ன தான் பெற்றோர்களுக்கு நல்ல வீடு, வசதிகள், கார், கலர் டி.வி என வாங்கி கொடுத்திருந்தாலும் அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் அதுவல்ல. அவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் ஒரே விஷயம் தங்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகள் என அவர்களோடு ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டு, கதை பேசி எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அது நிறைவேறியதில் மனதுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. காலாண்டு விடுமுறை முழுதும் குழந்தைகள் தங்கள் அம்மாச்சி, அப்பாயி, பெரியப்பா வீடு என மாறி மாறி எல்லோருடனும் ஒன்றாக இருந்து சாப்பிட்டு, பொழுது போக்கி, தூங்கியதை அவர்கள் மட்டுமல்ல பாட்டி, தாத்தாக்களும் நன்றாக 'என்ஜாய்' செய்தார்கள்.

அப்பா உயிருடன் இருந்தவரை ஒவ்வொரு தீபாவளி, பொங்கல் திருநாளின் போதும் லண்டனிலிருந்தோ, கலிபோர்னியாவில் இருந்தோ வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளும் போது திருவிழா பற்றி விசாரித்தால், என்னாப்பா தீபாவளி, பொங்கல். நீங்கள் இல்லாதது தான் எங்களுக்கு பெரிய குறை. நீங்கள் எல்லாம் திரும்பி வந்து ஒண்ணா இருந்தாலே போதும். அப்புறம் தினம் தினம் தீபாவளி தான் என ஒரு முறை இரு முறை அல்ல, ஒவ்வொரு முறையும் சொல்லுவார்.

2004 க்கு பிறகு சுமார் நான்கு ஆண்டுகள் பல்வேறு காரணங்களால் அப்பா, அம்மாவோடு சேர்ந்து பண்டிகைகள் கொண்டாட முடியாமல் போய் விட்டது.  2008 இல் மீண்டும் இந்தியா திரும்பினோம். வந்து சிறிது காலம் இருக்கலாம் என முடிவு செய்து வந்தோம். ஓரிரு மாதங்கள் சென்றிருக்கும். இன்னும் ஓரிரு மாதங்களில்  தீபாவளி அடுத்து பொங்கல் என மனது கொண்டாட்டங்களுக்கு தயாரானது. 'நினைத்ததெல்லாம் நடந்து விட்டால், தெய்வம் ஏதுமில்லை...' என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, இடையிலேயே தந்தை திடீரென்று காலமாகி விட்டார். இந்த வயதிலும் உலகமே இருண்டு விட்டது போன்று ஒரு உணர்வு. பெற்றோரில் ஒருவரை இழப்பது என்பது எவ்வளவு பெரிய சோகம் என்று அன்று  தான் உணர்ந்தேன்.    

அதன் பிறகு சிறிது காலம் கழித்து மீண்டும் அமெரிக்க பயணம். இம்முறை அப்பாவின் இழப்பை மறப்பதற்காகவும், அம்மாவை அழைத்துக் கொண்டு போய் அவர்களுக்கு ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்பதும் ஒரு காரணம். வேலை காரணங்களால் இந்தியாவில் அம்மாவுடன் கூட இருந்து கவனிக்க முடியாமல் போனதை சரி செய்ய அவர்களை அமெரிக்கா அழைத்துக் கொண்டேன். கூடுமானவரை எல்லா இடங்களையும் சுற்றி காண்பித்தோம். அவர்களுக்கும் குழந்தைகளை தினமும் பள்ளிக்கு கொண்டு விடுவது, அமெரிக்கா வந்திருக்கும் மற்ற பெற்றோர்களுடன் வாக்கிங் போவது என நன்றாகவே அவர்களுக்கு பொழுது போனது.

அப்பா இருந்திருந்தால் அவர்களையும் அழைத்து வந்திருக்கலாம் என அவ்வப்போது வருத்தப் படுவார்கள். அவர்களே மீண்டும், அப்பாவுக்கெல்லாம்  இங்க வந்தால் ரொம்ப கஷ்டம்பா. அவர்களுக்கு போர் அடித்து விடும் என  பின்னர் சமாதானம் ஆகி கொள்வார்கள்.
 
'அம்மா'. நினைவு தெரிந்த நாளிலிருந்து எனது ஒரே முன் உதாரணம். உழைப்பு, எளிமை, தியாகம் என எங்கள் குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு  அவரின் பங்களிப்பு மிக பெரிது. அப்பா, அம்மா இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தும் கூட மற்ற குடும்ப சுமைகளால் சற்று கஷ்ட பட்டே எங்களை எல்லாம் வளர்த்தார்கள். எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை 'அம்மா' தான் பேமிலி ஹெட். வரவு செலவில் தொடங்கி, ஒரு புது கனெக்க்ஷன், சொத்து வாங்கினால் கூட அது அம்மா பெயரில் தான் வாங்குவோம். அப்பாவுக்கும் அதில் தான் விருப்பம்.

இன்று வரை அம்மாவை எங்காவது 'ஆட்டோவில்' கூப்பிட்டுக் கொண்டு போவதென்றால் ரொம்ப கஷ்டம் தான். ஆட்டோவில் ஏறக்கூடாது என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தார்கள். நாங்கள் எல்லாம் சென்னை வருவதற்கு முன்பே அவர்கள் சென்னை வந்தால், எக்மோரில் இருந்து சாந்தோம், T நகர் என்று எங்கு சென்றாலும் MTC பஸ் தான். எல்லாம் காசை மிச்சப் படுத்தவேண்டும் என்று தான். ஆட்டோவில் சென்றால் அதிகம் செலவாகும் என்று ஆட்டோவில் ஏறவே மாட்டார்கள். அதுமட்டுமிலாமல் பாதுகாப்பு கருதியும் ஏறமாட்டார்கள்.

அவ்வளவு கஷ்டத்திலும் படிப்பு ஒன்று தான் அழியா சொத்து என்று மூன்று பிள்ளைகளையும் LKG முதல் பட்ட மேற் படிப்பு வரை ஆங்கில வழிக்கல்வியிலேயே படிக்க வைத்தார்கள். அதே போல் படிப்பு விசயத்தில் அவருடைய விருப்பத்தை எங்களிடம் திணிக்கவில்லை. எங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை படிக்க வைத்தார்கள். அப்படிதான் காமர்ஸ் குரூப் எடுத்த நான் பின்னர் கம்ப்யூடர் சயின்ஸ் எஞ்சினியராக மாறினேன். பர்ஸ்ட் க்ரூப் எடுத்த என் அண்ணன் பின்னர் ஆங்கில பாடத்தில் 'டாக்டரேட்' முடித்தார்.    

எதையோ சொல்ல வந்து எது எதையோ எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆங், கடந்த ஓரிரு மாதங்களாக அம்மாவுடன் கூடவே இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது மட்டும் இல்லாமல், அவர்களுக்கு உள்ள சின்ன சின்ன உடல் பிரச்சனைகளுக்காக மருத்துவர்களிடம் அழைத்துக் கொண்டு போவதும், சிகிர்ச்சை எடுத்துக்கொள்ள உதவியதும் மனதுக்கு மிகுந்த சந்தோசத்தை கொடுத்தது. இன்னும் சின்ன சின்ன ஆசைகள் அவர்களுக்கு நிறைய. எல்லாம், நாமே வியக்கும் விஷயங்கள். இந்த வயதிலும் அதை செய்ய வேண்டும், இதை செய்ய வேண்டும் என்று ஒரு பெரிய லிஸ்டே வைத்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்பதே என் தற்போதைய ஆசை.

சமீபத்தில் மனைவிக்கு உடல் நிலை சற்று சரி இல்லாமல் போன போது நான் ஊரில் இல்லாத நேரத்தில் ஒரு ஆண் பிள்ளை போல் டாக்டர், கிளினிக் என எல்லா இடத்திற்கும் அவர்களை அழைத்துக் கொண்டுபோய், அப்பப்பா... அது உங்களால் தான் முடியும்மா. அதன் பிறகு மருத்துவர்களின் அறிவுரை படி என் மனைவி ரெஸ்ட் எடுத்துக் கொள்ள மாமா வீட்டிற்கு செல்ல ஒரு மாதத்திற்கு  மேல் மூன்று (ஹி ஹி ஹி என்னையும் சேர்த்து) குழந்தைகளையும் சற்றும் சலிக்காமல் இடையிடையே உங்களுக்கு ஏற்பட்ட கண் வலிக்கிடையே நாள் முழுதும் பார்த்துகொண்டது. என்ன தவம் செய்தேனோ அம்மா. தங்களை தாயாக நான் 'பெற்றதற்கு' ?

share on:facebook