கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆயிட்டா எல்லா பெண்களையும் மற்ற பெண்கள் துளைத்து எடுக்கும் கேள்வி, என்ன 'விஷேசம் ஏதும் இல்லையா' என்பது. அது போல் IT யில் வேலைக்கு சேர்ந்த சில வருடங்களில் எல்லோரும் கேக்கும் கேள்வி. 'எப்போ ஆன்சைட்'? அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை. அது போல் ஆன்சைட் போகதவருக்கு IT யில் மதிப்பில்லை.
சென்ற பதிவில் IT கம்பெனிகளில் வேலையில் சேர்வது அவ்வளவு ஒன்றும் சுலபமான காரியமில்லை என்பதை கூறி இருந்தேன். இந்த பதிவில் அப்படியே ஒரு வழியாக வேலையில் சேர்ந்து விட்டாலும் அதோடு வாழ்க்கையில் செட்டில் ஆகி விட முடியுமா என்பதை பார்ப்போம்.
முதல் பாராவில் கூறி இருந்தது போல், எப்படி ஒரு நடிகன் தன் வாழ் நாள் கனவாக 'ஆஸ்கார்' விருதை பெற்றிட வேண்டும் என நினைப்பானோ, எப்படி ஒரு அரசியல் கட்சியின் தலைவருக்கு மாநில முதல்வர் பதவியோ அது போல் தான் பெரும்பாலான IT ஊழியர்களுக்கு 'ஆன்சைட்' கனவு.
'ஆன்சைட்' என்பது பெரும்பாலும் IT யில் வேலை பார்ப்பவர்கள் உபயோகப்படுத்தும் சொல். அது வேறொன்றும் இல்லை. அமெரிக்கவோ அல்லது பிற ஊர்களுக்கோ வேலை நிமித்தம் செல்வதை தான் 'ஆன்சைட்' போவதாக சொல்வார்கள். இதற்கு காரணம். நாம் வேலை பார்ப்பதே அவர்களுக்காக தான். அவர்கள் இடத்திற்கே சென்று வேலை பார்ப்பதை. On site என்று கூறுவார்கள்.
ஆன்சைட் வாய்ப்பு என்பது பெரும்பாலும் அவரவரின் அதிர்ஷ்டம் மற்றும் திறைமையை பொறுத்து. சில நேரங்களில் ஒன்னும் தெரியாதவன் ஒரே மாதத்தில் ஆன்சைட் செல்வான் சிலருக்கோ அதற்க்கு பல வருடங்கள் ஆகும். சரி அப்படி என்னதான் இருக்கு அந்த ஆன்சைட்டில் என கேப்பவர்களுக்கு...
# நல்ல சம்பளம் (இந்தியாவை ஒப்பிடும் போது)
# தான் பார்க்கும் வேலைக்கு ஒரு அங்கீகாரமாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
# தன் வேலையில் மேலும் முன்னேற இதுவும் ஒரு வாய்ப்பு.
# மனைவி குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு அமெரிக்கா/இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் போய் சுற்றி பார்க்கும்/வசிக்கும் வாய்ப்பை தரும்.
# இவை எல்லாவற்றுக்கும் மேலாக குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஒட்டிக் கொண்டிராமல் உலகம் சுற்றும் வாய்ப்பு கிடைக்கும் போது அதனால் கிடைக்கும் அனுபவங்கள் ஏராளம் ஏராளம்.
அப்படி பட்ட ஆன்சைட் வாய்ப்புகள் இப்போது நிறைய இருந்தாலும் ஆன்சைட் பயணம் என்பது முன்பு போல் இப்போது இல்லை. முன்பு யார் வேண்டுமானாலும் (கம்பெனி நினைத்தால்) ஆன்சைட் போகலாம். இப்போது அமெரிக்கா மற்ற நாடுகளில் வீசா வழங்குவதில் நிறைய கெடுபிடிகள் கொண்டு வந்து விட்டார்கள். ஒரு முறை போய் விட்டு வரவே சிலருக்கு மூச்சு முட்டுகிறது. இந்த மாதிரியான சூழ்நிலையில் எனக்கு கிடைத்த வாய்ப்புகளை தற்போது நினைத்தாலும் பெருமையாகவும், திருப்தியாகவும் இருக்கிறது.
'ஆன்சைட்' பயணம் பொதுவாக இரு வகை படும். 1. ஷார்ட் டெர்ம் என சொல்லப்படுகிற குறுகிய கால பயணம். 2. லாங் டெர்ம் என சொல்லப்படுகிற நீண்ட கால பயணம். இரண்டு வகையிலும் வசதிகளும் உள்ளன. சிரமங்களும் உள்ளன. அவைகளை பார்க்கும் முன், அந்த காலத்தில் ராஜாக்கள், ஊரில் உள்ள மிக சிறந்த அழகியையோ அல்லது பணக்கார நாட்டு ராஜாவின் இளவரசியையோ பெரும் பணம், பொருள் நாடு என்று திருமணம் செய்திருந்தாலும் அரண்மனைக்கு அப்பால் ஒரு அந்தபுரம் கட்டாயம் இருக்கும்.
அதற்கு காரணம், அந்தபுரத்தில் கிடைக்கும் உல்லாசமும், கவலை, பொறுப்புகள் இல்லாத வாழ்க்கையும், அந்தபுரத்தில் இருக்கும் தருணம் வரை நாடு, வீடு என அனைத்துப் பொறுப்பையும் யாராவது ஒருவர் பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்திருப்பார். அந்த மாதிரி தான் ஆன்சைட் பயணங்களும் எங்களுக்கு (யாராவது இப்படி சொன்னதுக்கு சண்டைக்கு வரதா இருந்தா, நீங்க ஆன்சைட்ல எங்க எப்படி இருக்கீங்கன்னு விலா வாரியா சொல்லுங்க. அதுக்கப்புறம் பார்ப்போம் உங்க பக்கம் நியாயம் இருக்கானு).
ஐயா, தலைப்புக்கு சரியான விளக்கம் கொடுத்தாச்சு...இப்போ ஜூட்....அடுத்த பதிவில் மேலும் படுத்தலாம்...
தொடர்புடைய பதிவுகள்...
IT (வேலை) படுத்தும் பாடு...
share on:facebook