Tuesday, April 3, 2012

அமெரிக்காவின் அரிவாள் கலாச்சாரம்.


தமிழ் சினிமாவில் திருநெல்வேலி என்று வந்தாலே அதனுடன் மறக்காமல் அரிவாளையும் சேர்த்து விடுவார்கள். அந்த அளவிற்கு வீட்டுக்கு வீடு திருநெல்வேலியில் அரிவாள் வைத்திருப்பார்களா என்று எனக்கு தெரியாது. ஆனால், அமெரிக்காவில் பெரும்பாலானோர் வீட்டில் துப்பாக்கி வைத்திருப்பார்கள்.

பெரும்பாலானோர் தற்காப்புக்காக மட்டுமே வைத்திருந்தாலும், சில சமயங்களில் அதுவே தவறாக கையாளப் படும்போது அப்பாவி உயிர்கள் பலியாகின்றன. அமெரிக்காவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வருடத்திற்கு ஒரு முறையேனும் யாராவது ஒருவர் பள்ளி/அலுவலகம்/பொது இடம் என்று கூட பார்க்காமல் எதாவது ஒரு பிரச்சனைக்காக தங்கள் துப்பாக்கியால் ஏதும் அறியா பொதுமக்களை சுட்டு தள்ளி விடுகிறார்கள்.

1999 கொலம்பியன் ஹை ஸ்கூலில் மாணவர் ஒருவர் இவ்வாறு கண்மூடி தனமாக சுட்டதில் சக மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். உடனே அமெரிக்க அரசு துப்பாக்கி லைசன்ஸ் மற்றும் சட்ட திட்டங்களை கடுமை ஆக்குவதாக அறிவித்தது. அவ்வளவுதான். அதனால் ஒன்றும் பெரிய மற்றம் இல்லை.

கடந்த சில மாதங்களில் மட்டும் கலிபோர்னியாவின் லாஸ் ஏன்ஜெலஸ் நகரில் இரண்டு துப்பாக்கி சூடு சம்பவங்கள். ஒருவர் துப்பாக்கியுடன் ஒரு சலூனில் நுழைந்து அங்கிருந்த ஐந்துக்கும் மேற் பட்டவர்களை கண் மூடி சுட்டதில் அனைவரும் பலி. தனது மனைவிக்கும் தனக்குமான கருத்து வேறுபாடில் தன் பிள்ளைகளை கோர்ட் மனைவியின் பாதுகாப்பில் விட்டு விட்டதில் ஆத்திரமடைந்து அவரின் மனைவியை பலி வாங்க சுட்டதில் மற்ற ஐந்து பேரும் பலியானார்கள்.


அதே போல் நான் பணியாற்றும் நிறுவனத்தின் ஒரு கட்டடத்தில் தற்போதைய ஊழியர் ஒருவரே தன் மேலதிகாரியின் மேல் இருந்த கோபத்தின் காரணமாக அவரையும் அவருடன் மீட்டிங்கில் இருந்த இன்னொரு மேலாளரையும் மிக அருகில் இருந்து சுட்டுக் கொன்று விட்டார். இரண்டு நாட்களுக்கு முன் ஒக்லாந்து மாகாணத்தில் ஒரு மாணவர் தன் ஆசிரியர் சக மாணவர்களின் மேலிருந்த கோபத்தில் துப்பாக்கியை எடுத்து அவர்களையும் சேர்த்து ஏழு பேரை சுட்டுக் கொன்று விட்டார்.

இவை எல்லாவற்றுக்கும் காரணம் அமெரிக்காவில் துப்பாக்கி வைத்துக் கொள்ள எளிதான சட்ட நடை முறைகளும், எல்லோரும் வைத்திருப்பதால் தாமும் வைத்திருக்க வேண்டிய கட்டாயமுமே ஆகும். வீட்டில் பெரியோர்கள் தங்கள் துப்பாக்கியை பத்திரமாக வைத்திருந்தாலும் சில நேரங்களில் அது அவர்களின் குழந்தைகள் கைக்கு எளிதாக கிடைத்து விடுவது தான் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணம்.

சமீபத்தில் ஒரு பள்ளி மாணவரின் கைப்பையில் இருந்து துப்பாக்கி வெடிக்க, அதை பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, தன்னை பிடிக்காத சக மாணவர்களினால் தனக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தினால் தான் எப்போதுமே தன் தந்தையின் துப்பாக்கியை அவருக்கு தெரியாமல் தினமும் பள்ளிக்கு எடுத்து வந்ததாக அம் மாணவர் தெரிவித்துள்ளார்.  

இந்த கட்டடத்திற்குள் துப்பாக்கிகள் அனுமதி கிடையாது என்ற அறிவிப்பு பலகையை பல நிறுவனங்களில் காணலாம். அமெரிக்காவில் ஒருவர் மீது கோவம் வந்தால் அவரிடம் அனாவசியமாக சண்டை போடுவது என்பது வேண்டாத வேலை. ஆம், யாரிடம் துப்பாக்கி இருக்கும் என்றே தெரியாது. அட அப்போது இல்லாவிட்டாலும் எந்த நேரமும் நம் மீது கோவம் வந்து தன் துப்பாக்கியை எடுத்து வந்து மீண்டும் நம்மை சுடும் அபாயம் எப்போதும் உண்டு.  கத்தி இருந்தால் கத்தியால் குத்துவார்கள். ஒன்றும் இல்லாவிட்டால் வெறும் கையால் குத்துவார்கள். துப்பாக்கி இருந்தால் ....யம்மாடி நமக்கு இந்த விளையாட்டே வேண்டாம். 

share on:facebook

No comments:

Post a Comment