சமச்சீர் கல்வியை தொடர வேண்டுமா வேண்டாமா அல்லது சமச்சீர் கல்வி திட்டத்த்தில் மாற்றங்கள் வேண்டுமா என்பது பற்றி ஆராய உச்ச நீதி மன்றம் அளித்த உத்தரவின் படி தமிழக அரசு சமீபத்தில் குழு ஒன்றை அமைத்தது.
இந்த குழுவில் இடம் பெற்ற ஒன்பது பேரில் மூவர் சென்னையில் பெரும்பாலும் மேல்தட்டு மக்களின் பிள்ளைகள் படிக்கும் CBSE பள்ளிகளின் தாளாளர்கள்/நிர்வாகிகள். ஒருவர் DAV பள்ளியின் நிர்வாகி ஜெயதேவ், இன்னொருவர் பத்மா சேஷாத்திரி பள்ளியின் நிர்வாகி Y.G. பார்த்தசாரதி. மற்றொருவர் ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியின் நிர்வாகி.
சமச்சீர் கல்வியின் மூலம் பயன் பெறப்போவது பெரும்பாலும் அரசு பள்ளிகளின் மாணவர்கள்தான். அவர்களின் தரத்தை மேம்படுத்தவே அரசு இத்திட்டத்தை கொண்டுவந்தது. அப்படியானால் இந்த குழுவில் அரசு பள்ளிகளின் ஆசிரியர்களே உறுபினர்களாக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர்களே மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகிகள்தான். அப்படியிருக்க அரசு அமைத்த குழுவில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் CBSE பள்ளியின் நிர்வாகிகளை குழுவில் இடம் பெற செய்தது மிக பெரிய தவறு மட்டுமில்லாமல் சமச்சீர் கல்வியை தடுக்க நடக்கும் ஒரு சதியாகவே இதை நான் பார்க்கிறேன்.
இதையெல்லாம் விட இந்த ஜெயதேவும் Y.G. பார்த்தசாரதியும் யார்? எத்தனையோ பேராசிரியர்கள், கல்வியாளர்கள் தமிழகத்தில் இருக்கும் போது சாதாரண குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் சேர்ந்து படிக்க முடியாத இந்த பள்ளிகளின் நிர்வாகிகள் எப்படி சமச்சீர் கல்வியை பற்றி ஆராயும் ஒரு கமிட்டிக்கு உறுப்பினர் ஆக முடியும்?
Y.G. பார்த்தசாரதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கம் என்பது ஊரறிந்த செய்தி. தனிப்பட்ட முறையில் அவரை பற்றி நான் இங்கு விமர்சிக்கவில்லை. ஆனால் தள்ளாத வயதில் தள்ளு வண்டியில் வரும் நிலையில் உள்ள ஒருவரை கொண்டு வந்து இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற கல்வி முறை எது என முடிவு செய்ய சொல்வது எந்த வகையில் நியாயம். இவரெல்லாம் தமிழ் மொழியில் பேசுவதே அபூர்வம். இவரைக்கொண்டு அடித்தட்டு மக்களின் கல்வி பயன்பாட்டை பற்றி கேட்டால் பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்கு என்று சொன்ன கதையாகிவிடும்.
இந்த கமிட்டியையே ஒரு கல்வியாளர் குழுதானே தேர்வு செய்திருக்க வேண்டும். அதுவும் தமிழக அரசு சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பாக இருக்கும் போது. தமிழக அரசின் செயல் எப்படி இருக்கிறது என்றால், தொட்டியையும் ஆட்டி விட்டுக்கொண்டு பிள்ளையையும் கிள்ளும் கதை என்று சொல்லுவார்கள். அப்படிதான் இருக்கிறது.
கடைசியாக வந்த செய்தி: தமிழக அரசு விநியோகிக்க இருக்கும் புத்தகங்களில் உள்ள சில பக்கங்கள் கிழிக்கப்படுவதும் சில பக்கங்களில் உள்ள பாராக்கள் அழிக்கபடுவதும்... ஐயோ இந்த அரசியல்வாதிகள் திருந்தவே மாட்டார்களா? இதில் அய்யன் திருவள்ளுவர் சிலை படம் போட்டிருக்கும் படத்தை மறைக்க ஸ்டிக்கர் வேறு ஒட்டுகிறார்கள் போலும்.
ஆண்டவனே வந்தாலும் கூட இந்த அரசியல்வாதிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற முடியாது...
share on:facebook
1 comment:
அந்த குழுவில் இருப்பவர்களை பார்த்தால் இந்த சமச்சசீர் வருமா வராதா என்று குழப்பம் நீடிக்கிறது...
அரசின் செயல்பாடுகள் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது..
Post a Comment