Monday, June 27, 2011

இந்த வார (அரசியல்) காமெடி.


காமெடி # 1 : குப்புற தள்ளிய குதிரை மண்ணையும் அள்ளி போட்டதாம். அது  போல் தான்  தற்போது அமெரிக்கா கூறுவது. ஈராக்கு மீது படை எடுத்து  அதனால் அந்த நாடே  தற்போது சிதறி சின்னா பின்னமானபின், அமெரிக்க  செனட்டர் ஒருவர் இராக்  போரினால் அமெரிக்காவிற்கு பல கோடி ருபாய்  செலவாகி போனதால், எண்ணெய்  வளமிக்க நாடான ஈராக், அமெரிக்கா  போருக்கு செலவழித்த அனைத்து  பணத்தையும் இராக் தற்போது திரும்பி தர  வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.  இதை எங்கு போய் முட்டி  கொள்வது.   

காமெடி # 2 : தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்ற பின் பள்ளிகளின்  கட்டண உயர்வை கட்டுபடுத்துவது தொடர்பாக கேள்வி எழுந்த போது,  இதுவரை பெற்றோர்கள் தரப்பிலிருந்து அரசுக்கு எந்த ஒரு கோரிக்கையும்  முறையாக வரவில்லை. அப்படி யாராவது முறையாக கம்ப்ளைன்ட்  கொடுத்தால் அதை அரசு பரிசீலிக்கும் என்கிறார். ஆமா, தி.மு.க. அரசின் பல நல்ல திட்டங்களை எல்லாம் தற்போது தூக்கி வருகிறீர்களே.  இதற்க்கெல்லாம் யாராவது முறையாக கம்ளைன்ட் குடுத்தார்களா என்ன?       

காமெடி # 3 : புதிய தலைமை செயலத்தை புறக்கணிக்கும் முதல்வர் ஜெயலலிதா தி.மு.க. அரசு கட்டி உள்ள மேம்பாலங்கள் வழியாக போவதை  தவிர்க்க வேண்டும் என திரு. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இப்படியே  ஒவ்வொரு ஆட்சி மாறும் போதும் மற்றவர்கள் செய்ததை அடுத்து வருபவர்  புறக்கணிக்கும் நிலை வந்தால் அடுத்து மக்கள் உங்கள் இருவரையும் சேர்த்தே  புறக்கணிக்கும் காலம் நிச்சயம் வரும். ஆமா சொல்லிப்புட்டேன். 

காமெடி # 4 : கருப்பு பணத்திற்காக போராடி வரும் அண்ணா ஹசாரே  அவர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கை பற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ்  கட்சி,  பொதுநல வாதிகளின்  கோரிக்கைகளுக்கெல்லாம் மத்திய அரசு செவி கொடுக்க வேண்டாம் என அருள் மொழி பாவித்திருக்கிறது.  அட பாவிகளா! அப்ப சுயநல வாதிகளின் கோரிக்கைகளைத்தான்  நிறைவேத்துவீர்களோ?    

காமெடி # 5 : ஆங், கருப்பு பணம்னு சொன்னவுடன் தான் இன்னொன்னு  ஜாபகத்துக்கு  வருது. இது மஞ்சள் இல்ல காவி பணம்னு வச்சுக்குங்களேன்.  ஆந்திராவில் சாய்பாபா காலமானபின் அவரின் டிரஸ்ட்டில் இருந்து கோடிக்கணக்கான  ருபாய்  கடத்தப்பட, டிரஸ்ட்டை  சேர்ந்தவர்கள் தற்போது அரசிடம் இதை பற்றி முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் ஆனால் அதே சமயம் இந்த விவகாரத்தில் டிரஸ்ட்டை  சேர்ந்தவர்களை பலிகடாவாக ஆக்கிவிட கூடாது எனவும் கருத்து  தெரிவித்துள்ளார்கள். பணம் கடத்தப்பட்டதே டிரஸ்ட்டிலிருந்து தான். ஆனால்  இதில் டிரஸ்ட்டை சேர்ந்தவர்களை பலிகடா ஆக்க கூடாதாம்.  என்ன  கொடுமை சரவணா இது?



share on:facebook

Friday, June 24, 2011

15 பைசா கார்டு


புறாவில் செய்தி அனுப்பிய காலம் போய் அஞ்சல் அட்டை, கூரியர், பேக்ஸ்,  ஈமெயில் என்று உலகம் எங்கோ போய் கொண்டிருந்தாலும் உலகில் இன்னமும் பெரும்பாலான  பொது ஜனங்கள் தபால் சேவையை நம்பியும் உபயோகித்தும்  வருகிறார்கள். 

இந்தியாவில் ஆண்டாண்டு காலமாக 15 பைசா கார்டு சேவையில் இருந்து வந்தது. இந்தியாவிலேயே குறைந்த செலவில் அதிக பயன் கொடுக்கும் ஒரே பொருள் 15 பைசா தபால் கார்டு தான். என்னுடைய நண்பர் ஒருவர் தபால் பட்டுவாடா சேவையில் பணிபுரிந்தவர். அவர் கூறும்போது,  எங்கோ வெளி ஊரிலோ, வேறு மாநிலங்களிலோ வேலை செய்து தன்  குடும்பத்தை காப்பாற்றும் பிள்ளைகள் தன் வயதான தாய் தந்தைக்கு   ஒரு 15  பைசா கார்டில் சென்டிமீட்டர் விடாமல் ஆடு மாடு உட்பட அனைத்து  சொந்தங்களையும் விசாரித்து எழுதி இருப்பார். ஆனால் அந்த  கடிதத்தை  மீண்டும் மீண்டும் படித்து காட்ட சொல்லி என்னிடம் கேட்பார்கள்.  அந்த 15 பைசா கார்டு அவர்களுக்கு தந்த சந்தோசம் இப்பல்லாம் வெப்  கேமராவில்  என் பிள்ளைகளிடம் நேருக்கு நேர் பேசிக்கொண்டால் கூட எனக்கு கிடைக்க மாட்டேன்கிறது என்கிறார். 

இன்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கூட தபால் சேவையை பேணி காக்க   வேண்டும் என எல்லோரும் போராடி வருகிறார்கள். அமெரிக்காவில் கார்  இல்லாத வீடு கூட பார்த்துவிடலாம். ஆனால் தபால் பெட்டி இல்லாத வீட்டை  பார்க்க முடியாது. அதுவும் புறா கூண்டு போல் அழகாக இருக்கும். நம்மூர்  போலவே மழை, வெயில், பனி என்று எந்த சூழ்நிலையிலும் தபால் சேவை  தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் அமெரிக்காவில், junk mail என்று  கூறுவார்கள். அது போல் நமக்கு தேவை இல்லாத பல விளம்பர  ஏடுகளும் வந்து விழுந்து கொண்டே இருக்கும். நம்மூராக இருந்தால் பழைய  பேப்பருக்கு போட்டாலே நல்ல வருமானம் பார்க்கலாம்.

அபார்ட்மென்ட் வீடுகளில் சிறிது சிறிதாக பெட்டிகள் கொண்ட பெரிய தபால் பெட்டி இருக்கும். தபால் விநியோகிப்பவர் மாஸ்டர் கீயை பயன்படுத்தி எல்லோர் தபாலையும் பிரித்து போடுவார்.



தற்போது பல நவீனங்கள் தபால் சேவையில் வந்து விட்டது. Tracking System  மூலம் நாடுகள் கடந்து போகும் தபால் கூட எந்த நாட்டில் தற்போது  சென்றடைந்துள்ளது என்பதை கூட தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது.  ஐரோப்பா போன்ற மேலை நாடுகளில் தபால் சேவைகள்  தனியாரிடமும், தபால் வில்லைகளுக்கு பதிலாக கை பேசியிலேயே பணம்  செலுத்தி  பெறும் என்னை உறையில் குறித்து விட்டால் போதும் என்ற வசதியும்  உள்ளது. அதுவே  தபால்  தலை ஆகிவிடும். இங்கிலாந்தில் ஆங்காங்கு  ரோட்டோரத்தில் இருக்கும்  சிகப்பு நிற தபால் பெட்டிகள் ஒரு தனி அழகு. 
   

நான் படித்து முடித்த பிறகு என் நண்பன்னுக்கு முதன் முதலில் BSF  வேலை கிடைத்தது. அப்போது பீகார், டெல்லி என அவன் வேலை  செய்து  கொண்டிருந்த போது நான் அவனுக்கும் அவன் எனக்கும் இன்லாந்து கவர்  மூலம் லெட்டர் எழுதிக் கொள்வோம். ஒவ்வொரு முறையும் அவனிடம் இருந்து  ஒரு லெட்டர் வரும்போது அவ்வளவு சந்தோசமாக இருக்கும். பிறகு நான்  அமெரிக்கா வந்த பிறகு கூட சில காலம் என் அம்மாவிற்கு  கடிதம் எழுதும்  பழக்கம் இருந்தது. என் அம்மா சில கடிதங்களை இன்னமும்  வைத்துள்ளார்கள். அடிக்கடி என்னிடம் நான் எழுதிய பழைய  கடிதத்தில் இருந்ததை கூறுவார்கள். அப்படியா எழுதி இருந்தேன் என ஆவலுடன் கேட்பேன்.

நீங்களும் ஒரு முறை வாய்ப்பு கிடைத்தால் உங்கள் உறவுகள், நண்பர்களுக்கு  ஒரு கடிதம் எழுதிப்பாருங்களேன். உங்களுக்கும் அவங்களுக்கும் நிச்சயம் ஒரு மாற்றமான சந்தோசம் கிடைக்கும்//ஆனால் கடிதம் உறவுகளை  வலுப்படுத்துவதாகவே இருக்கட்டும்//.

இப்படிக்கு,
ஆதிமனிதன்.   


share on:facebook

Sunday, June 19, 2011

சந்தி சிரிக்கும் சமச்சீர் கல்வி


சமச்சீர் கல்வியை தொடர வேண்டுமா வேண்டாமா அல்லது சமச்சீர் கல்வி திட்டத்த்தில் மாற்றங்கள் வேண்டுமா என்பது பற்றி ஆராய உச்ச நீதி மன்றம் அளித்த உத்தரவின் படி தமிழக அரசு சமீபத்தில் குழு ஒன்றை அமைத்தது.

இந்த குழுவில் இடம் பெற்ற ஒன்பது பேரில் மூவர் சென்னையில் பெரும்பாலும் மேல்தட்டு மக்களின் பிள்ளைகள் படிக்கும் CBSE  பள்ளிகளின் தாளாளர்கள்/நிர்வாகிகள். ஒருவர் DAV பள்ளியின் நிர்வாகி ஜெயதேவ், இன்னொருவர் பத்மா சேஷாத்திரி பள்ளியின் நிர்வாகி Y.G. பார்த்தசாரதி. மற்றொருவர் ஒரு தனியார்  மெட்ரிகுலேஷன் பள்ளியின்  நிர்வாகி. 

சமச்சீர் கல்வியின் மூலம் பயன் பெறப்போவது பெரும்பாலும் அரசு பள்ளிகளின் மாணவர்கள்தான். அவர்களின் தரத்தை மேம்படுத்தவே அரசு இத்திட்டத்தை கொண்டுவந்தது. அப்படியானால் இந்த குழுவில் அரசு பள்ளிகளின் ஆசிரியர்களே உறுபினர்களாக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கு முதலில் எதிர்ப்பு  தெரிவித்தவர்களே மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகிகள்தான். அப்படியிருக்க அரசு அமைத்த குழுவில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் CBSE பள்ளியின் நிர்வாகிகளை குழுவில் இடம் பெற செய்தது மிக பெரிய  தவறு  மட்டுமில்லாமல் சமச்சீர் கல்வியை தடுக்க நடக்கும் ஒரு சதியாகவே  இதை  நான் பார்க்கிறேன்.  

இதையெல்லாம் விட இந்த ஜெயதேவும் Y.G. பார்த்தசாரதியும் யார்?  எத்தனையோ பேராசிரியர்கள், கல்வியாளர்கள் தமிழகத்தில் இருக்கும்  போது சாதாரண  குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் சேர்ந்து படிக்க  முடியாத இந்த பள்ளிகளின் நிர்வாகிகள் எப்படி சமச்சீர் கல்வியை பற்றி ஆராயும் ஒரு கமிட்டிக்கு உறுப்பினர் ஆக முடியும்? 

Y.G. பார்த்தசாரதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும்  நெருக்கம் என்பது ஊரறிந்த செய்தி. தனிப்பட்ட முறையில் அவரை பற்றி நான் இங்கு விமர்சிக்கவில்லை. ஆனால் தள்ளாத வயதில் தள்ளு வண்டியில்  வரும் நிலையில் உள்ள ஒருவரை கொண்டு வந்து இன்றைய சூழ்நிலைக்கு  ஏற்ற கல்வி முறை எது என முடிவு செய்ய சொல்வது எந்த வகையில் நியாயம்.  இவரெல்லாம் தமிழ் மொழியில் பேசுவதே அபூர்வம். இவரைக்கொண்டு  அடித்தட்டு மக்களின் கல்வி பயன்பாட்டை பற்றி கேட்டால்  பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்கு என்று சொன்ன  கதையாகிவிடும். 

இந்த கமிட்டியையே ஒரு கல்வியாளர் குழுதானே தேர்வு செய்திருக்க  வேண்டும். அதுவும் தமிழக அரசு சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பாக இருக்கும் போது. தமிழக அரசின் செயல் எப்படி இருக்கிறது என்றால், தொட்டியையும்  ஆட்டி விட்டுக்கொண்டு பிள்ளையையும் கிள்ளும் கதை என்று சொல்லுவார்கள். அப்படிதான் இருக்கிறது.    

கடைசியாக வந்த செய்தி: தமிழக அரசு விநியோகிக்க இருக்கும் புத்தகங்களில் உள்ள சில பக்கங்கள்  கிழிக்கப்படுவதும் சில பக்கங்களில் உள்ள பாராக்கள் அழிக்கபடுவதும்...  ஐயோ இந்த அரசியல்வாதிகள் திருந்தவே மாட்டார்களா? இதில் அய்யன்  திருவள்ளுவர் சிலை படம் போட்டிருக்கும் படத்தை மறைக்க ஸ்டிக்கர் வேறு ஒட்டுகிறார்கள் போலும்.

ஆண்டவனே வந்தாலும் கூட இந்த அரசியல்வாதிகளிடம் இருந்து  நாட்டை காப்பாற்ற முடியாது...


share on:facebook

Wednesday, June 15, 2011

அழகர் சாமியின் குதிரை - வெற்றிக்குதிரை


சமீபத்தில் வெளியான 'அழகர் சாமியின் குதிரை' பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த சில வருடங்களாக இம்மாதிரி கிராமிய மனத்துடன் குறைந்த பட்ஜெட்டில் நல்ல திரைக்கதையுடன் குடும்பத்துடன் எல்லோரும் உட்கார்ந்து பார்க்குமளவு அவ்வப்போது படங்கள் வெளிவருவது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.

குறிப்பாக அழகர் சாமியின் குதிரையில் எல்லாமே நன்றாக அமைந்திருந்தது. கிராம கோவில் திருவிழாக்களை பல படங்களில்  காண்பித்திருந்தாலும் இதில் ஒரு திருவிழாவை நடத்துவதற்கு முன்  நடைபெறும் நன்கொடை வசூலில் ஆரம்பித்து அதன் பிறகு திருவிழாவிற்கு   வந்து சேரும் உறவுகளை காண்பிப்பது வரை அனைத்திலும் இயக்குனரின் ஈடுபாடு பளிச்சென்று தெரிகிறது.

படம் முழுவதிலும் ஹிரோ ஹீரோயின் பத்து வார்த்தைகளுக்கு மேல் பேசியிருந்தால் அதுவே அதிகம். காட்சிகளும் சூழ்நிலைகளுமே திரைகதையை வழிநடத்தி செல்கிறது. சுவிசிலும் ஸ்காட்லாந்திலும்  கதைக்கு  சம்மந்தமே இல்லாமல் கதாநாயகன், நாயகி ஆடிப்படுவதை  பார்த்து பார்த்து அலுத்து போயிருந்த நமக்கு சைக்கிளில் வைத்தே ஒரு பாடல் (காதல்) காட்சியை  படமாக்கியிருந்தது புதுமை அருமை.

இரண்டு ஹிரோக்களுமே கதைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இன்ச் இன்ச்சாக மேக்கப்பை ஏத்தி திரையில் பள பலப்பாகவே ஹிரோக்களை  பார்த்த நமக்கு திரையில் வரும் கிராமத்து இளைஞன் மற்றும்  இரண்டாவது ஹிரோவின் (குதிரையின் சொந்தக்காரர்) தேர்வு கதைக்கு மிகவும் பொருந்தி இருக்கிறது. கதாநாயகிகள் தேர்வும் அசத்தல். 

சோகம், வெறுப்பு, கிராமத்து சண்டை, காதல் என்று இயல்பாக போகும்  கதையில்  ஆங்காங்கே சிறிது நகைச்சுவையும் மூட நம்பிக்கைக்கு  எதிரான கருத்துக்களும் என்று கதை சிறிது கூட தொய்வில்லாமல் நகர்ந்து செல்கின்றன. 

உள்ளூர் காவல் தெய்வம் (குதிரை) சிலை காணாமல் போன பின் திடீரென்று ஊருக்குள் வரும் ஒரு நிஜ குதிரையை ஊர்க்காரர்கள் தங்கள் காவல் தெய்வமே உயிருடன் வந்துவிட்டதாக எண்ணி கொண்டாடும் நேரத்தில் நிஜ குதிரையின் சொந்தக்காரர் வந்து தன் குதிரையை மீட்பதே கதை.  இதில் குதிரை காணாமல் போனதால் நின்று போன அவரின்  திருமணமும் குதிரையை கிராமத்து மக்களிடமிருந்து மீட்க முயற்சிக்கும் இலைஞனின் காதலும் நிறைவேறியதா என்பதே மீதிக்கதை.

படம் பார்த்த பிறகும் பளிச்சென்று நினைவில் நிற்பவை.

#சின்னஞ்சிறு  குழந்தைகளை  வேலைக்கு அனுப்பும் போது பெற்றோர்கள் படும் வேதனை.

#கோவில் நன்கொடை என வரும்போது அவரவர்களும் தங்களால் கொடுக்க முடிந்த நன்கொடையை தரும் காட்சிகள்.

#மென்மையான தங்கள் காதலை ஊருக்கு பயந்து அடுத்தவர்களுக்கு தெரியாமல் கண்களாலேயே பேசிக்கொள்ளும் காதல் பாசை.

#தன் ஒரே சொத்தான பொதி சுமக்கும் கழுதை மீது அதன் சொந்தக்காரர் வைத்திருக்கும் பாசம்.

#காவல் தெய்வ குதிரை காணாமல் போக காரணமாக இருந்த உள்ளூர் சிற்பியின் வறுமை. 

#படத்தின் முடிவில் கதைக்கு ஏற்றவாறு மக்களின் மூடநம்பிக்கைக்கு வைக்கும் வேட்டு.

இளையராஜாவின் இசை அருமை. இயக்குனர் சுசீந்திரன் பாராட்டுக்குரியவர். படத்தில் வரும் இரண்டு (பெயர் தெரியாத - பிரபலமாகாத) ஹிரோக்கள் ஹிரோயின்கள்  மற்றும் நிஜ குதிரை என்று அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

வாய்ப்பு கிடைத்தால் அவசியம் பாருங்கள். நல்ல படம். 


share on:facebook

Monday, June 13, 2011

சன் டி.வி. கொலை கொள்ளை செய்திகள்


சமீப காலமாக சன் டி.வி. செய்திகளை பார்த்தால் தமிழ்நாட்டில் எங்கும்  கொலையும் கொள்ளையும் விபத்துகளும் மட்டுமே நடந்துகொண்டிருப்பது  போல் ஒரு தோற்றம் தெரிகிறது. அரை மணி நேர செய்தியில் விளம்பர நேரம்  போக ஒரு பதினைந்து நிமிடங்கள் மட்டுமே செய்திகள் வாசிக்கப்படுவதில்  தற்போதெல்லாம் குறைந்தது இரண்டு கொலை மற்றும் திருட்டு விபத்து  செய்திகள் மட்டுமே தவறாமல் இடம் பெறுகின்றன. இது எல்லாமே  ஆட்சி மாற்றத்துக்கு  பிறகு ஏற்பட்ட மாற்றங்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் 2G ஸ்பெக்ட்ரம் விவகாரம் தினம் தினம் பற்றி எரிகின்ற போதும், உச்சக்கட்ட நெருப்பாக தி.மு.க. தலைவர்  கலைஞர் அவர்களின் மகளும் எம்.பியுமான கனிமொழி கைதாகி தொடர்ந்து  ஜாமீன் மறுக்கப்பட்ட போதும் அதை பற்றி ஒரு வரி செய்தி கூட சன்  தொலைக்காட்சியின் செய்திகளில் வருவதில்லை. பூனை கண்களை  மூடிவிட்டால் உலகமே இருண்டு விட்டதாக நினைக்குமாம். அது போல்  தான் இதுவும். 

இம்மாதிரி முக்கிய விஷயங்கள் எதுவும் வராமல் அங்கு  100 பவுன்  கொள்ளை. இங்கு ஒருவர் கொலை, இருவேறு விபத்துகளில்  என்று என்னமோ இதுநாள் வரை தமிழகத்தில் எங்குமே திருட்டோ  கொள்ளையோ  நடக்காதது போல் தொடர்ந்து செய்தி வெளியிட்டு  வருகிறார்கள். என்ன நியாயமோ  என்ன தர்மமோ. ஆளுக்கொரு சானல்  வைத்துக்கொண்டு ஒன்று அறிக்கை  வசிப்பது போல் (ஜெயா டி.வி.) அல்லது  மூச்சுக்கு முன்னூறு தடவை காப்டன்  காப்டன் என்று காப்டன் டி.வியில் (வடிவேலு சொன்னதுபோல் எதற்கு  காப்டனாக  இருந்தாரோ)  வெறுப்பேத்துகிறார்கள். நல்ல வேலை வசந்த்  டி.வி., சிலம்பு டி.வி எல்லாம் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை.  இல்லையென்றால்  அவ்வளவுதான்.            

அதே போல் ஒவ்வொரு கட்சி ஆட்சிக்கு வரும் போதும் என்னமோ அரசை குத்தகைக்கு எடுத்தது போல் ஆளும் கட்சி அதரவு/நடத்தும் டி.வி. சானல்களுக்கு மட்டும் முதலமைச்சர் மற்றும் முக்கிய அதிகாரிகள் பேட்டி கொடுப்பது, அரசு விளம்பரங்கள் அதிகம் கிடைப்பது என்று இந்த சானல் தொல்லைகள் தாங்க முடியவில்லை. 

ஒரு காலத்தில் தூர்தர்சன்  அரசாங்க செலவில் செய்து கொண்டிருந்த சேவையை (சோப்பு போடுவதை) இப்போது தனியார் தொலைகாட்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அரசு தொலைகாட்சிக்கும் தனியார் தொலைகாட்சிக்கும் இது தான் வேறுபாடு. நமக்கு உண்மையை தெரிந்து கொள்ள கால விரயம். அதாவது இரண்டுக்கு மேற்பட்ட தொலைக்காட்சியை  பார்த்தால்தான் உண்மையை தெரிந்து கொள்ள முடிகிறது.  

ம்ம்... கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் என்பது எல்லாம், அவர்களுக்கு சாதகமாக உள்ளதை பேசுவதற்கும் சொல்வதற்கும் அதே சமயம் அவர்களுக்கு பாதகமானவற்றை மறைப்பதற்கும் உள்ள சுதந்திரத்தை குறிப்பது தான் போலும்.


share on:facebook

Wednesday, June 8, 2011

குறுக்கு சந்தில் இருந்து அமெரிக்க குடியுரிமை


இது முற்றிலும் உண்மையான என்னுடைய நெருங்கிய உறவினரின் வெற்றிப்பாதையை விவரிக்கும் ஒரு சிறிய தொகுப்பு.

இன்று பெருமளவில் அமெரிக்காவில் நல்ல சம்பளத்துடன் கவுரவமான வேலை பார்ப்பவர்களில் இந்தியர்களும் அடக்கம். இது எல்லாவற்றுக்கும் காரணம் நம்முடைய கடுமையான உழைப்பும் நமக்குள் ஏற்படுத்திக்கொள்ளும் லட்சியமே ஆகும்.

அப்படித்தான் என் அத்தை பையனும் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து தன் சொந்த உழைப்பினாலும் முயற்சியினாலும் ஒரு குறுக்கு சந்தில்  குடிசை வீட்டில் தன்னுடைய பள்ளிப்படிப்பை தமிழ் வழி வழிக்கல்வியில்  பயின்றவர் இன்று அமெரிக்காவில் குடியுரிமை பெற்று தனக்கென்று  ஒரு இரண்டு மாடி சொந்த பங்களாவில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அவருக்கு அவரின் மனைவிக்கு என்று தனித்தனி உயர் ரக கார்களுடன்  அனைத்து வசதிகளுடன் வாழ்ந்து  வருகிறார். 

இதற்கு எல்லாம் காரணம், அவருடைய திட்டமிடலும் லட்சியத்தை அடைய  அவர் எடுத்துக்கொண்ட முயற்சியும் தன்னம்பிக்கையும் தான். அரசு பள்ளியில் தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் பிறகு அரசு  I.T.I. யில்  டிப்ளமோ முடித்தார். தன்னுடைய திறமையால் சென்னையில் ஒரு பிரபலமான தொழிற்சாலையில் சாதாரண வேலையில் முதலில் அமர்ந்தார். அப்போதே தொலைதூர கல்வியில் நேரடியாக ஒரு முதுநிலை பட்டடத்தை பெற்று தன்னுடைய தகுதியை வளர்த்துக்கொண்டார்.

நன்கு தொழில் கற்றுக்கொண்ட நிலையில் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்து விட்டு தன் சொந்த செலவில் மலேசியா சென்றவர்  ஓரிரு வருடங்களில் அந்த வேலையையும் விட்டுவிட்டு  அன்றைய  தினத்தில் தனது அனுபவத்தை வைத்து தானே அடுத்த நல்ல  கம்பெனியில்  கூடுதல் சம்பளத்தில் வேலையில் சேர்ந்தார். 

அவரிடம், "சரி, அங்கிருந்து நீங்கள் எப்படி அமெரிக்க வந்தீர்கள் என்று  கதையை கேட்டால்", சரி, வெளிநாட்டிற்கு வந்து ஒரு நல்ல வேலையிலும்   இருந்தாகிவிட்டது. இனி உலகத்தில் இதை விட எது நல்ல நாடு  இருக்கிறது என ஆய்வு செய்தேன். எனக்கு ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும்  கண் முன் தெரிந்தது. உடனே ஆஸ்திரேலியாவிற்கு வேலை தேட முடிவு செய்தேன். அதே போல் என்னுடைய தகுதிக்கும் அனுபவத்திற்கும் தகுந்த வேலை கிடைத்தது. உடனே மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியா குடி  பெயர்ந்தேன். அந்த நேரத்தில் எனக்கு மலேசிய   PR ம் இருந்தது என தொடர்ந்தவர், ஆஸ்திரேலியா வந்த பிறகு எனக்கு திருமண  ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்தன. எனக்கு மனைவியாக வருபவரும் என்னை  போல் நல்ல உழைப்பாளியாகவும்    லட்சியம் உடையவராகவும் இருக்க  வேண்டும் என நினைத்தேன்.

அதே போல் நான் பார்த்த ஒரு பெண் நர்சிங் படித்து விட்டு அமெரிக்கா போய் வேலை பார்க்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு அதற்காக நான்கு  வருடங்களாக தொடர்ந்து முயற்சி செய்து கொண்டுள்ளது என்னை  கவர்ந்தது. உடனே அந்த பெண்ணிடம் நான் ஆஸ்திரேலியா குடியுரிமை வாங்கிவிட்டேன்.  திருமணமான பின் உன்னை ஆஸ்திரேலியா அழைத்து  செல்கிறேன்.  உனக்கு சம்மதமா என கேட்டேன். ஆனால் அவர் அதற்கு  ஒத்துக்கொள்ளவில்லை.  என்னுடைய கனவு நான் அமெரிக்காவிற்கு செல்ல வேண்டும் என்பதே.  அதனால் நான் ஆஸ்திரேலியா வரமாட்டேன் என்று நான் சிறிதும்  எதிர்பார்க்காததை பதிலாக தந்தார். ஆகா,  இதுதான் நமக்கு ஏத்த  பெண் என்று, சரி இப்போது என்னுடன் ஆஸ்திரேலியா வா. அங்கிருந்து  மீண்டும்  அமெரிகாவிற்கு நீ முயற்சி செய். கிடைத்தால்  இருவரும்  செல்வோம் என சமாதானப்படுத்தி ஒரு வழியாக என் திருமணம் நடந்தது.       

திருமணமான சில வருடங்களிலேயே ஆஸ்திரேலியா குடியுரிமை இருந்ததால் சுலபமாக அமெரிக்கா விசாவும் விரைவில் கிரீன் கார்டும் கிடைத்தது. நாங்கள் விரும்பின வாழ்க்கை கிடைத்து நன்றாக வாழ்கிறோம். இவ்வளவு வசதிகள் இங்கு அனுபவித்தாலும் என் குழந்தைக்கு பத்து/பதினைந்து வயதாகும் போது நங்கள் இந்தியா சென்று விட தீர்மானித்துள்ளோம் என முடித்தார்.

என்னுடைய பல வருட அமெரிக்கா இங்கிலாந்து வாசத்தின் போது என்னுடன் வேலை பார்த்த அமெரிக்கரோ ஆங்கிலேயரோ, அவர்களின்  வீடு கூட அவ்வளவு வசதிகளுடன் நான் பார்த்ததில்லை. ஆனால் சாதாரண  குடிசை வீட்டில் வாழ்க்கையை ஆரம்பித்த என் உறவினர் இன்று கழுத்தை  சுளுக்க வைக்கும் உயர்ந்த பங்களா, பின்பக்கம் தோட்டம் மற்றும் லான்,  சினிமாவில் காண்பிப்பது போல் ஒரு மாஸ்டர் பெட்ரூம்,   விருந்தினர்களுக்கு என்று இரண்டுக்கும் மேற்ப்பட்ட தனி தனி பெட்ரூம் என சகல வசதிகளுடன் அமெரிக்காவில் வாழ்கிறார் என்றால். அப்பப்பா, என்ன  ஒரு வளர்ச்சி. ஒரு கிராமம் போன்ற நகரத்திலிருந்து எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் தன சொந்த திறமையும் நம்பிக்கையையும் வைத்து இந்த அளவிற்கு வளர்ந்த என் அத்தை மகனை என்னால் மனமார பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

கணவு காணுங்கள். காலம் வசப்படும்.


share on:facebook