Wednesday, December 16, 2009

கோவா கொடுமை


ஒரு காலத்தில் உலகின் மிக அழகான கடற்கரைகளில் ஒன்று என பெயரெடுத்த கோவா பீச் இன்று கொலை மற்றும் கற்பழிப்புகளின் கூடாரமாக மாறிவிட்டது.

இதை தடுக்க வேண்டிய காவல்துறை செயல் இழந்து விட்டதாக அம் மாநில சுற்றுலா துறை அமைச்சரே குற்றம் சாட்டுகிறார்.

அதே நேரத்தில் மாநில முதலமைச்சரோ, இரவில் பெண்கள் வெளியே செல்வதால் தான் இம்மாதிரி குற்றங்கள் நடக்கிறது. அவர்கள் இரவு நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் எல்லோருக்கும் காவல்துறை பாதுகாப்பு அளிக்க முடியாது என அருள் பாவித்துள்ளார். நான் கேட்கிறேன், மக்களை காக்க தான் காவல் துறையும், அரசாங்கமும். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத உங்களுக்கு மட்டும் ஏன் 24 மணி நேர z, z+, black cat  பாதுகாப்பு  எல்லாம்?

உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ளத் தானே மக்கள் வரிப்பணத்தில் எல்லா வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். மக்கள் மட்டும் என்ன இளிச்சவாயர்களா?

மக்களையே பார்த்து பயப்படும் நீங்கள் எல்லாம் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? அப்படி பயமாக இருந்தால் இனி தலைமை செயலகத்திலோ அல்லது உங்கள் வீட்டில் மட்டும் அரசாங்க பணிகளை ஆற்றுங்கள். நீங்கள் தெரு  தெருவாக  சுற்றுவதால் தானே  உங்களுக்கு  பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் பாதுகாப்பு குறைக்கபடுகிறது. இனி நீங்களும் வெளியே  செல்வதை  தவிருங்கள். ஏனென்றால் எல்லோருக்கும் காவல்துறை  பாதுகாப்பு  அளிக்க  முடியாது.

ஒரு காங்கிரஸ் எம்.பியோ பாராளுமன்றத்தில், "கற்பழிக்கப்பட்ட பெண்கள் எல்லோரும் பல ஆண்களுடன் சுற்றியவர்கள். ஆகவே இம் மாதிரி கற்பழிப்பு வழக்குகளை ஒரே மாதிரியான கண்ணோட்டத்துடன் காவல் துறையும் அரசும் அணுகக்கூடாது" என பேசியுள்ளார்.

அட கடவுளே, இவர்களையெல்லாம் என்ன செய்வது. மனைவியாகவே இருந்தாலும் அவளுக்கு விருப்பமில்லை என்றால் அவளை கட்டாயப்படுத்தவோ வற்புறுத்தவோ கூடாது என்கிறது சட்டம். ஆனால் இவர்கள் ஆண் நண்பர்கள் இருந்தால் அப் பெண் கற்பழிக்கப்பட்டதை  நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள கூடாது என உபதேசிக்கிறார்கள்.

இதில் முக்கியமான விஷயம் இந்த மாதிரி குற்றங்களில் சம்மந்தப்பட்டவர்களாக  கை காட்டப்பட்டவர்கள் பெரும்பாலும் அரசியலிலோ அல்லது அரசின் உயர் பதவி வகிப்பவர்களின் வாரிசுகள் தான்.

கோவாவிற்கு  வரும் வெளிநாட்டினர் ஒண்ணும் சன்யாசிகள் அல்ல. அவர்கள் இங்கு வருவதே கடற்கரையில் சன் பாத் எடுப்பதற்கும் தங்கள் விடுமுறையை அனுபவிக்கவும் தான்.

அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழ்நிலையை அங்குள்ள அரசு ஏற்படுத்தவில்லை என்றால் சுற்றுலாவையே பெரிதும் நம்பி இருக்கும் கோவாவின் வருவாய் குறைவது மட்டுமில்லாமல் நம் நாட்டின் மானமும் கப்பலேரிவிடும்.

இது கோவா சம்மந்தப்பட்ட பிரச்சனை மட்டுமில்லை. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடையே  கோவா பாதுகாப்பற்றது என தெரிய வந்தால் அது  இந்தியாவின்  சுற்றுலாதுறையையே பெரிதும் பாதிக்கும்.

ஒரு பெண் தன் உடல் முழுவதும் நகைகளை அணிந்து கொண்டு என்று நடு இரவில் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் தனியே நடக்க முடியுமோ அன்று தான் நம் நாடு உண்மையான சுதந்திரம் பெற்றதற்கு சமம் என்றார் காந்தி.

ஆனால் இன்று ஒரு நல்ல புடவையை அணிந்து கொண்டு கூட பகல் நேரத்திலேயே தனியாக நடக்க முடியாத நிலைமை. குற்றவாளிகளும், கொலைகாரர்களும் தேர்தலில் ஜெயிக்கும் வரை நம் நாட்டில் இம்மாதிரி குற்றங்கள்  நடப்பதை யாராலும் தடுக்க முடியாது.

கடைசியாக வந்த தகவல்: சமீபத்தில் ரஷிய சுற்றுலா பெண் மானபங்கப்படுத்த பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பெயிலில் வந்த குற்றவாளி தலைமறைவாகிவிட்டார்.
share on:facebook

4 comments:

CS. Mohan Kumar said...

நான் கூட குடும்பத்தோட ஒரு தடவை கோவா போகணும்னு ப்ளான் வச்சிருக்கேன். போகலாமில்லே?? :)))

என்ன தல வர வர நம்ம ப்ளாக் பக்கம் உங்களை காணவே இல்ல??

ஆதி மனிதன் said...

வருகைக்கு நன்றி மோகன். நான் முன்பே குறிப்பிட்டதுபோல் தற்காலிக பனி இடமாற்றத்தின் காரணமாக ஓரிரு மாதங்களாக எனக்கு வலையில் எழுதவோ, பின்னூட்டமிடவோ வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்பொழுதுதான் சற்று உள்ளே வந்துள்ளேன். மற்றபடி நேரம் கிடைக்கும் போதெல்லாம் சைலண்டாக எல்லா பதிவுகளையும் மேய்ந்து கொண்டுதான் இருக்கிறேன்.

ஸ்ரீராம். said...

ரொம்பக் கோவமா இருக்கீங்க போல...!

சைலண்டா மேஞ்சு பயனில்லீங்க...வந்துபோன அடையாளம் தந்துட்டுப் போங்க...

கிருபாநந்தினி said...

\\அட கடவுளே, இவர்களையெல்லாம் என்ன செய்வது. மனைவியாகவே இருந்தாலும் அவளுக்கு விருப்பமில்லை என்றால் அவளை கட்டாயப்படுத்தவோ வற்புறுத்தவோ கூடாது என்கிறது சட்டம். ஆனால் இவர்கள் ஆண் நண்பர்கள் இருந்தால் அப் பெண் கற்பழிக்கப்பட்டதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள கூடாது என உபதேசிக்கிறார்கள்.// இப்படியெல்லாங்கூடவா உபதேசிக்கிறாய்ங்க? அடங்கொய்யால!

Post a Comment