Friday, December 25, 2009

புத்தாண்டு பிறப்பது எப்போது?



இதோ அடுத்தவாரம் இந்நேரம் புது வருடம் பிறந்திருக்கும். இன்னைக்கு உலகம் பூராவும் ஜாதி இன மொழி வேறுபாடு இல்லாம கொண்டாடுற ஒரே பண்டிகைனா அது புத்தாண்டு தினமாகத்தான் இருக்கும்.

எல்லாம் சரிதான். எப்போதுமே பழசு போயி புதுசு வந்தா எல்லாருக்கும் சந்தோசம் தான். ஆனா அந்த சந்தோசம் சில சமயம் சில பேருக்கு சோகமாவும் ஆயிடுது. அதுக்கு ஒரே காரணம் நாம தேவைல்லாம அன்றைக்கு கொடுக்கற முக்கியத்துவமும் ஏதோ அன்றைக்கு மட்டும் தான் நாம சந்தோசமா இருக்க முடியும் என்பது போலவும் சிலர் நினைத்துக்கொள்வதும் தான்.

அன்னைக்கு சந்தோசமா இருந்தா அந்த வருடம் முழுசும் சந்தோசமா இருக்கலாம்னு ஒரு சிலர் அசட்டு தனமான ஒரு விளக்கத்தையும் கொடுப்பார்கள்.

"ஒவ்வொரு நாளும் புதிய நாளே", "இன்று நாம் புதிதாய் பிறந்தோம்" என சொல்லக் கேட்டிருக்கிறோம். அந்த வகையில் புத்தாண்டு தினத்தன்று நாம் ஏற்படுத்திக்கொள்ளும் உற்சாகத்தையும், அன்பு பாராட்டுதலையும் சுறுசுறுப்பையும் நாம் ஏன் எல்லா நாட்களும் ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது?

இன்னைக்கு பிப்ரவரி-4 அதனால சந்தோசமா இருக்கக் கூடாதுன்னு யாராச்சும் சொன்னாங்களா?

அதோட இந்த நியூ இயர் அன்னைக்கு நம்ம மக்கள் பண்ற ரகளை இருக்கே. அப்பப்பா... என்னமோ அன்னைக்கு மட்டும்தான் சாமி கண்ண தொறந்து பாக்கறது போல எல்லோரும் நடு சாமத்திலே எழுந்து குளிச்சு முடிச்சு கோயிலுக்கு கிளம்பிடுறாங்க.

பெருசுங்க நடுத்தர வயசுகாரங்க இப்படினா இந்த இளவட்டங்க இருக்கே, அதுங்க இந்த பீச் ரோட்ல அடிக்கிற லூட்டி தாங்க முடியாது. அன்னக்கி மட்டும் ரோட்ல போறவங்க எல்லாம் அவங்களுக்கு சொந்தகாரங்க ஆயிடுவாங்க போல. பாக்றவன் போறவன் வரவன் எல்லோர் கையையும் பிடிச்சு பிடிச்சு ஹாப்பி நியூ இயர் சொல்வாங்க.

அதை விட கொடுமை அன்னைக்கு குடித்து விட்டு கண்ணு மண்ணு தெரியாம வண்டி ஒட்டி கடைசியில ஆஸ்பத்திரியில அட்மிட் ஆவுற சில கேசுங்களும் இருக்கு. இது இங்க மட்டும் இல்ல உலகம் பூராவும் அன்னைக்கு நடக்கிற விஷயம் தான்.

ஏன் சில வருடங்களுக்கு முன் சென்னையில் ஒரு ஹோட்டலில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஸ்விம்மிங் பூல் மீது கட்டப்பட்ட மேடை இடிந்து ஒருவர் இறந்து கூட போனார்.

இதை எல்லாம் நான் உங்களை பயமுறுத்துவதற்காக சொல்லவில்லை. மாறாக எல்லா நாளுமே நமக்கு புதிய நாளாக எண்ணி அதை வரவேற்போம். புத்தாண்டு தினத்தை போலவே ஒவ்வொரு நாளும் நாம் சுறுசுறுப்புடனும் புதிய உற்சாகத்துடனும் இருப்போம் என்று தான் கேட்டுக்கொள்கிறேன்.

எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இனி வரும் எல்லா நாளும் உங்களுக்கு இனிய நாளாகவும் என் வாழ்த்துக்கள்.
share on:facebook

Wednesday, December 23, 2009

பக்கத்து வீட்டு செல்லம்...



அமெரிக்கா சென்ற சில மாதங்களிலேயே எனக்கு அந்த ஆசை வந்து விட்டது. இந்தியாவில் இருந்தவரை அந்த மாதிரி ஆசை எனக்குள் எழுந்ததேயில்லை எனலாம். எவ்வளவு அழகா இருந்தாலும் ஜஸ்ட் பார்த்து விட்டு சென்று கொண்டேயிருப்பேன். இங்கு வந்த பிறகு தான் இவர்கள் கொஞ்சுவதையும், கட்டிப்பிடிப்பதையும் பார்த்து பார்த்து எனக்கும் அந்த ஆசை வந்தது. நமக்கும் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்று.


அப்படி நான் ஏங்கி கொண்டிருந்த ஒரு நாளில் தான் பக்கத்து பிளாட்டிற்கு புதிதாக ஒரு குடும்பம் வந்தது. டிக்ஸி என்ற அழகு தேவதையும் கூடவே.

வந்த புதிதில் என்னை பார்த்தாலே அவள் சற்று ஒதுங்கியே தான் சென்றாள். ஆனாலும் நான் விடாமல் அவளிடம் பழகும் பொருட்டு அவள் வெளியே வரும் நேரம் பார்த்து நானும் அவள் கண்ணில் படுமாறு வெளியில் வந்து நிற்பேன். சில நாட்களில் நான் எதிர்பார்த்ததை போல் அவளும் என்னை சினேகமாக பார்க்க தொடங்கி விட்டால். இருந்தும் எனக்கு அவளிடம் நெருங்கிப் பழக பயமாக இருந்தது.

என் ரூம்மேட் சந்துரு நல்ல தைரியமான ஆளு. வாட்ட சாட்டமாக இருப்பான். அவனிடம் நான் டிக்ஸி பற்றியும், எனக்கு அவள் மேல் உள்ள ஆசை பற்றியும் கூறினேன். அவளும் என்னை சிநேகமாக பார்க்க தொடங்கி இருப்பதை பற்றியும் கூறினேன்.

என்ன நினைத்தானோ அவன், "டே கண்ணா, ஒனக்கு ஏண்டா இந்த ஆசையெல்லாம். வந்தோமா வேலைய பாத்தோமானு போகாம, அது சிநேகமா பார்க்குது, மொறைச்சி பார்க்குது அது இதுன்னு ஏதாவது செஞ்சி வம்புல மாட்டிக்காத. அப்புறம் கஷ்டப்பட போறது நீதான். அவ்வளவுதான் சொல்வேன்" என்று பெரிதாக உபதேசம் செய்ய ஆரம்பித்துவிட்டான்.

ஓரிரு வாரங்கள் சென்றிருக்கும். அன்று ஞாயிற்றுகிழமை. சந்துரு வெளியில் சென்று விட்டான். நான் மட்டும் வீட்டில் தனியாக இருந்தேன் கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்தேன். திறந்து பார்த்தால், பக்கத்து பிளாட்காரர். கூடவே டிக்சியும்.

"ஒரு அவசர வேலை. என் மனைவி இன்னும் ஊரிலிருந்து வரவில்லை. இரவு நேரம் டிக்சி வீட்ல தனியாக இருக்க பயப்படுவா. கொஞ்ச நேரம் உங்க வீட்ல விட்டுட்டு போகட்டுமா? பாத்துக்க முடியுமான்னு" கேட்டவுடன் எனக்கு ஒன்னுமே புரியல. நான் எதிர்பார்க்கவே இல்லை அப்படி ஒரு சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கும் என்று. ஆஹா பழம் நழுவி பாலில் விழுது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே...

Why don't? its my pleasure. please drop her என நான் கூறிக்கொண்டு இருக்கும் போதே டிக்சி பின்னாலிலிருந்து என்னை எட்டி பார்த்தாள். எப்போதும் பார்க்கும் அந்த சிநேகப் பார்வை அவளிடம் இல்லை. சிறிது மிரட்சி அவள் பார்வையில் கலந்திருந்ததை என்னால் காண முடிந்தது.

Ok. thank you very much. bye dixie. will come back soon என்று அவர் கிளம்பவும் டிக்சி உள்ளே நுழையவும், மறக்காமல் நான் கதவை சாத்தி தாழிட்டேன். என் பின்னே தயங்கி தயங்கி வந்தவள் திடீரென நின்று விட்டால். நான் அருகே போய் பேரை சொல்லி, டிக்சி "கம் ஆன்", பயப்படாதே, நான் உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன் என அவளின் முதுகை அப்படியே என் கைகளால் வருடியபடி உள்ளே அழைத்து வந்தேன். அவளும் அதை எதிர்பார்த்தது போல் அப்படியே அமைதியா என் கூடவே வந்தாள்.

உள்ளே வந்ததும் அவளை வாஞ்சையுடன் தழுவினேன். நான் எதிர்பார்க்கவே இல்லை. அவளுக்கும் என் மீது அவ்வளவு ஆசை இருக்குமென்று. அவளும் என்னை ஆசை தீர கொஞ்சினாள்.

அப்பா எவ்வளவு நாள் ஆசை. இந்தியாவில் இப்படி ஒரு நாயை கொஞ்ச முடியுமா? அது அப்புறம் கடிச்சு கிடிச்சு வச்சா பின்ன தொப்புள சுத்தி 16 ஊசி போட வேண்டியதுதான். இங்க உள்ள நாய்ங்க எல்லாம் பக்காவா தடுப்பூசி போட்டு வளர்கிறாங்க. அதனால எனக்கு பயமே இல்ல. எனக்குள் இருந்த நீண்ட நாள் அசை நிறைவேறிய சந்தோசத்தில் மீண்டும் ஒரு முறை டிக்சியை ஆசை தீர கொஞ்சினேன்.

ஐயோ! யாரது நாய விட்டு என்ன கடிக்க விடறது? சும்மா தமாசுக்கு தான். டிக்சிய எனக்கு புடிச்சது. உங்களுக்கு கத புடிச்சிருந்தா அப்படியே ஒரு வோட்ட போட்டுட்டு போங்க. நன்றி.
share on:facebook

Saturday, December 19, 2009

தெலுங் - ஆனா?



ஆந்திரா மீல்ஸ் மிகவும் காரசாரமானது. அதுபோலவே தனி தெலுங்கானா பிரச்சனையும் இப்போது காரசாரமான விவாதத்துக்குள்ளாகி வருகிறது. தமிழ் நாட்டில் ஆந்திரா மீல்ஸ் என்று சில இடங்களில் போர்டு பார்க்கலாம். ஆனால் நீங்கள் ஹைதராபாத் சென்றால் அங்கும் பல ஹோட்டல்களில் Andhra meals available என்று போர்டு பார்க்கலாம். ஒரே மொழி பேசுபவர்களாக இருந்தாலும் கூட அந்த அளவிற்கு ஆந்திராவின் தெலுங்கானா, கடற்கரை ஆந்திரா மற்றும் ராய சீமா என மூன்று பகுதிகளும் தனித்தன்மை வாய்ந்ததாகவே அறியப்படுகின்றன.

தனி தெலுங்கானா என்பது ஒன்றும் புதிய கோரிக்கை அல்ல. தெலுங்கானா பகுதி முன்பு Hyderabad state உடன் இணைந்த தனி மாநிலமாக இருந்ததும் பிறகு ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்ட பின்பு தான் (சுதந்திரத்திற்கு பிறகு) அது அதனுடன் இன்னைக்கப்பட்டு இப்போதுள்ள ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமாக உருபெற்றது என்பதெல்லாம் நம்மில் சிலருக்கு தெரியுமா என்பது சந்தேகமே.

எனக்கு தெரிந்த, நான் அறிந்தவற்றை இங்கு பதிகிறேன். தவறுகள் இருப்பின் அதை தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் திருத்தவும்.

அதற்கு முன் சுருக்கமாக சில வரலாற்று நிகழ்வுகளை பார்ப்போம். இந்தியாவில் முதல் மொழிவாரி மாநிலமாக உருவாக்கப்பட்டது ஆந்திர மாநிலம் தான். சுதந்திரத்துக்கு முன்னதாக இருந்த மெட்ராஸ் மாகாணத்திலிருந்து தெலுங்கு பேசும் மக்கள் உடைய மாவட்டங்கள் மற்றும் ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதிகளை  ஒன்றிணைத்து தனி மாநிலம் வேண்டும் என்று பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து இறந்தார்.

இதை தொடர்ந்து உடனடியாக மதராஸ் பிரசிடென்சியில் இருந்து தெலுங்கு பேசும் மக்கள் கொண்ட பகுதிகளை பிரித்து புதிய மாநிலமாக ஆந்திரா மாநிலத்தை உருவாக்க அப்போதைய பிரதமர் நேரு உத்தரவிட்டார்.

தனி தெலுங்கான வேண்டும் என்று இப்போது போராடுகிறார்களே, அந்த தெலுங்கானா பகுதி முன்பு Hyderabad state-இல் தான் இருந்து வந்தது. 1956 இல் தான் அது ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டு தற்போதுள்ள ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமாக உருவெடுத்தது. ஹைதராபாத் எங்களுக்கு தான் என இப்போது எல்லோரும் கேட்கிறார்களே, அந்த நகரம் தான் பழைய Hyderabad State-ன் தலை நகரமாக இருந்து வந்தது.

உண்மையை கூறப்போனால் ஒருங்கிணைந்த ஆந்திராவிற்கு அன்றே பல எதிர்ப்புகள் இருந்தது. குறிப்பாக தெலுங்கானா மக்கள் தாங்கள் ஆந்திராவுடன் இணைந்தால் தங்களுக்கு வாய்ப்புகளும் வருமானமும் குறைந்து போய்விடுமென அஞ்சினார்கள். இதன் காரணமாக, அவர்களை சமாதான படுத்துவதற்க்காக ஒரு சில சலுகைகளை தெலுங்கனா மக்களுக்கு வழங்குவதாக அறிவித்து அதற்காக அப்போது ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தினார்கள். அனால் அது எதுவுமே பிற்காலத்தில் நிறைவேற்ற படவில்லை என்பதற்கு ஒரே ஒரு உதாரணமே போதும்.

அதாவது ஆந்திராவின் முதல்வர் ஆந்திரா பகுதியை சேர்ந்தவராக இருந்தால் துணை முதல்வர் பதவி தெலுங்கான பகுதியை சேர்ந்தவருக்கு அளிக்க வேண்டும் (vice versa). ஆனால் அதனால்  இன்று வரை துணை முதல்வர் என்ற பதவியே ஆந்திராவில் எற்படுத்தபடவில்லை.

இதெல்லாம் இருக்கட்டும், சாப்பாட்டு மற்றும் கலாச்சாரங்களில் கூட இரு பகுதி மக்கள்ளுக்குள் சில வேறுபாடுகள் உண்டு. தெலுங்கான பகுதியில் நாம் வட இந்திய கலாசாரத்தை அதிகமாக காணலாம். தெலுங்கான பல காலமாக நிஜாம் ஆட்சியில் இருந்ததும் அதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

அனால் ஒன்று. முன்பு எந்த காரணத்திற்காக தெலுங்கானாவை ஆந்திராவுடன் இனைக்க கூடாது என கூறினார்களோ நிச்சயமாக அதே காரணங்கள் இப்போதுள்ள அரசியல் தலைவர்களுக்கு இருக்க முடியாது. இல்லையென்றால் தனி தெலுங்கானாவை ஆதரித்த எல்லோரும் இப்போது திடீரென்று அந்தர் பல்டி அடிப்பதற்கு நிச்சயமாக அவர்களின் அரசியல் நோக்கங்களே காரணம் என்பது பாமரர்க்கு கூட புரியும்.

தெலுங்கான பிரிந்தாலும் ஆந்திராவுடன் இனைந்திருந்தாலும் அரசியலும் அரசியல்வாதிகளும் திருந்தாத வரை முன்னேற்றம் என்பது அவர்களுக்கு பகல் கனவுதான்.
share on:facebook

Wednesday, December 16, 2009

கோவா கொடுமை


ஒரு காலத்தில் உலகின் மிக அழகான கடற்கரைகளில் ஒன்று என பெயரெடுத்த கோவா பீச் இன்று கொலை மற்றும் கற்பழிப்புகளின் கூடாரமாக மாறிவிட்டது.

இதை தடுக்க வேண்டிய காவல்துறை செயல் இழந்து விட்டதாக அம் மாநில சுற்றுலா துறை அமைச்சரே குற்றம் சாட்டுகிறார்.

அதே நேரத்தில் மாநில முதலமைச்சரோ, இரவில் பெண்கள் வெளியே செல்வதால் தான் இம்மாதிரி குற்றங்கள் நடக்கிறது. அவர்கள் இரவு நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் எல்லோருக்கும் காவல்துறை பாதுகாப்பு அளிக்க முடியாது என அருள் பாவித்துள்ளார். நான் கேட்கிறேன், மக்களை காக்க தான் காவல் துறையும், அரசாங்கமும். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத உங்களுக்கு மட்டும் ஏன் 24 மணி நேர z, z+, black cat  பாதுகாப்பு  எல்லாம்?

உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ளத் தானே மக்கள் வரிப்பணத்தில் எல்லா வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். மக்கள் மட்டும் என்ன இளிச்சவாயர்களா?

மக்களையே பார்த்து பயப்படும் நீங்கள் எல்லாம் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? அப்படி பயமாக இருந்தால் இனி தலைமை செயலகத்திலோ அல்லது உங்கள் வீட்டில் மட்டும் அரசாங்க பணிகளை ஆற்றுங்கள். நீங்கள் தெரு  தெருவாக  சுற்றுவதால் தானே  உங்களுக்கு  பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் பாதுகாப்பு குறைக்கபடுகிறது. இனி நீங்களும் வெளியே  செல்வதை  தவிருங்கள். ஏனென்றால் எல்லோருக்கும் காவல்துறை  பாதுகாப்பு  அளிக்க  முடியாது.

ஒரு காங்கிரஸ் எம்.பியோ பாராளுமன்றத்தில், "கற்பழிக்கப்பட்ட பெண்கள் எல்லோரும் பல ஆண்களுடன் சுற்றியவர்கள். ஆகவே இம் மாதிரி கற்பழிப்பு வழக்குகளை ஒரே மாதிரியான கண்ணோட்டத்துடன் காவல் துறையும் அரசும் அணுகக்கூடாது" என பேசியுள்ளார்.

அட கடவுளே, இவர்களையெல்லாம் என்ன செய்வது. மனைவியாகவே இருந்தாலும் அவளுக்கு விருப்பமில்லை என்றால் அவளை கட்டாயப்படுத்தவோ வற்புறுத்தவோ கூடாது என்கிறது சட்டம். ஆனால் இவர்கள் ஆண் நண்பர்கள் இருந்தால் அப் பெண் கற்பழிக்கப்பட்டதை  நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள கூடாது என உபதேசிக்கிறார்கள்.

இதில் முக்கியமான விஷயம் இந்த மாதிரி குற்றங்களில் சம்மந்தப்பட்டவர்களாக  கை காட்டப்பட்டவர்கள் பெரும்பாலும் அரசியலிலோ அல்லது அரசின் உயர் பதவி வகிப்பவர்களின் வாரிசுகள் தான்.

கோவாவிற்கு  வரும் வெளிநாட்டினர் ஒண்ணும் சன்யாசிகள் அல்ல. அவர்கள் இங்கு வருவதே கடற்கரையில் சன் பாத் எடுப்பதற்கும் தங்கள் விடுமுறையை அனுபவிக்கவும் தான்.

அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழ்நிலையை அங்குள்ள அரசு ஏற்படுத்தவில்லை என்றால் சுற்றுலாவையே பெரிதும் நம்பி இருக்கும் கோவாவின் வருவாய் குறைவது மட்டுமில்லாமல் நம் நாட்டின் மானமும் கப்பலேரிவிடும்.

இது கோவா சம்மந்தப்பட்ட பிரச்சனை மட்டுமில்லை. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடையே  கோவா பாதுகாப்பற்றது என தெரிய வந்தால் அது  இந்தியாவின்  சுற்றுலாதுறையையே பெரிதும் பாதிக்கும்.

ஒரு பெண் தன் உடல் முழுவதும் நகைகளை அணிந்து கொண்டு என்று நடு இரவில் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் தனியே நடக்க முடியுமோ அன்று தான் நம் நாடு உண்மையான சுதந்திரம் பெற்றதற்கு சமம் என்றார் காந்தி.

ஆனால் இன்று ஒரு நல்ல புடவையை அணிந்து கொண்டு கூட பகல் நேரத்திலேயே தனியாக நடக்க முடியாத நிலைமை. குற்றவாளிகளும், கொலைகாரர்களும் தேர்தலில் ஜெயிக்கும் வரை நம் நாட்டில் இம்மாதிரி குற்றங்கள்  நடப்பதை யாராலும் தடுக்க முடியாது.

கடைசியாக வந்த தகவல்: சமீபத்தில் ரஷிய சுற்றுலா பெண் மானபங்கப்படுத்த பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பெயிலில் வந்த குற்றவாளி தலைமறைவாகிவிட்டார்.
share on:facebook

Saturday, December 12, 2009

மும்பை திரையுலகமே திரண்டு வந்து...



இன்று மாலை 4 மணிக்கு….காணத் தவறாதீர்கள். மும்பை திரையுலகமே திரண்டு வந்து...கிரிகெட் நாயகன் சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு நடத்தும் பாராட்டு விழா... இணைந்து வழங்குவோர்...

இப்படியெலாம் நான் சொல்வேன் என்று நீங்கள் நினைத்தால் சந்தேகமே இல்லை. நீங்கள் நிச்சயம் பச்சை தமிழன் தான்.

ஆம் இந்தி திரையுலக நட்சத்திரங்கள் சார்பில் சில நாட்களுக்கு முன் சச்சினுக்கு மும்பையில் பாராட்டு விழா நடந்தது. அவர் விளையாட வந்து 20 வருடங்கள் ஆனதை கொண்டாடும் வகையில் இந்த பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தது இந்திய தொழில் ஜாம்பாவான் முகேஷ் அம்பானி தம்பதியினர். அதுவும் அவர்கள் வீட்டிலேயே.

ஆனால் நீங்கள் நினைப்பது போல் ஞாயிறு மாலை 4 மணிக்கு ….காணத் தவறாதீர்கள். தமிழ் திரையுலகமே திரண்டு வந்து ….இப்படி ஓயாமல் வரும் அறிவிப்புகளும் அதை தொடர்ந்து சின்னத் திரையில் நாம் பார்த்து பார்த்து சலித்து போன ஆட்டம் பாட்டங்களுக்கு இடையே நடந்த பாராட்டு விழா அல்ல அது.

எந்த ஒரு பந்தாவோ பகட்டோ இல்லாமல் மிகவும் எளிமையாக இருந்தது அந்த விழா.

இத்தனைக்கும் மும்பை திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரங்களும், கிரிகெட் உலகின் முன்னாள் இந்நாள் முண்ணனி வீரர்களும் பங்குகொண்டு சிறப்பித்து இருந்தார்கள் .

நடிக்க வந்து 25 வருடங்கள் … நடிக்க ஆரம்பித்து 10 வருடங்கள் என எல்லாத்துக்கும் விருது கொடுக்கும், பாராட்டு விழா நடத்தும் காலமிது.

அனால் சச்சினுக்கு நடந்த இந்த பாராட்டு விழா நிச்சயம் வித்தியாசமானது. விழாவில் கலந்து கொண்ட அனைவரும் சச்சினின் ஆட்டத்திறைமை பற்றியும் அவரின் சாதனைகள் பற்றியும் அளவோடு பாராட்டியதை நாம் மட்டுமல்ல சச்சினும் அதை ரசிக்ககூடிய அளவுதான் இருந்ததே தவிர அவரை நெளிய வைக்கவில்லை.

திரையுலக நட்சத்திரங்கள் கூடி இருந்தாலும் அங்கு குத்து பாட்டோ ஆட்டமோ இல்லை. மிகவும் ப்ரோபஷனலாக விழா நடை பெற்றது . நிகழ்ச்சியை ஒளிபரப்பிய CNN-IBN தொலைக்காட்சியும் நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு இடையிடையே நிகழ்ச்சியை வழங்குவோர், இணைந்து வழங்குவோர், துணிந்து வழங்குவோர் என்று மூன்று நான்கு மணி நேரம் இழுத்து வெறுப்பு ஏற்றாமல் தொடர்ந்து ரசிக்கும்படி செய்தார்கள்.

அதேபோல் இந்தியோ ஆங்கிலமோ அதை கொலை செய்வதற்கென்றே உள்ள தொகுப்பாளரோ/தொகுப்பாளினியோ இல்லாமல் அவரவர் மைக் பிடித்து தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.

சச்சின் செஞ்சுரி அடிப்பதற்கு காரணம் பந்தா அல்லது அவரின் மட்டையா என்று பட்டி மன்றமும் அவர்கள் நடத்தவில்லை.

நம்ம ஊரில் பாராட்டு பெரும் நாயகனை விட அவரை பாராட்ட நடக்கும் விழாவின் முன்னிலை, பின்னிலை, தலைமை, சிறப்புரை ஆற்றுபவர்களின் பேச்சிலேயே நமக்கு தூக்கம் வந்து விடும். ஆனால், அன்றைய விழாவை நடத்தியது முகேஷ் அம்பானி என்றாலும் கூட  அவரை புகழ்ந்து ஒருவர் கூட ஒரு வார்த்தை பேசவில்லை. எல்லோரும் சச்சினை பற்றி மட்டுமே பேசினார்கள்.

முகேஷ் அம்பானி பேசும்போது, "இது உங்கள் பிறந்தநாள் இல்லை ஆகவே நான் நீங்கள் நூறு வருடம் இருநூறு வருடம் வாழவேண்டும் என்று நான் தற்போது வாழ்த்த வரவில்லை. நீங்கள் 100 செஞ்சூரி 200 செஞ்சூரி எடுத்து எங்கள் எல்லோரையும் மகிழ்விக்க வேண்டும்" என வாழ்த்தினார்.

ஏற்புரை ஆற்றிய சச்சின் கூட மிகவும் சுருக்கமாக அதே நேரத்தில் அடக்கமாக தந்து நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

சச்சின் பேசும்போது தனது தந்தை அவரிடம் கூறிய அறிவுரை ஒன்றை எடுத்துக்கூறினார். "நீ சிறந்த வீரனாக இருந்தால் உனக்கு எல்லா புகழும் கிடைக்கும். அனால் அது நீ சிறப்பாக விளையாண்டு கொண்டிருக்கும் வரை மட்டுமே. ஆனால் நீ ஒரு சிறந்த மனிதனாக வாழ்ந்தால் உனது புகழ் எப்போதும் இருக்கும்" என்று. கடைசியில் நிச்சயமாக கண்ணை பொத்திக் கொண்டு அவர் அழவில்லை.

என்னது? ஹலோ... ஒரு நிமிஷம்... சன் டிவியில் FEFSI திரைப்பட விழா போடா போறாங்களாம். நா அப்புறமா உங்கள பார்க்கிறேன்.
share on:facebook