Monday, October 12, 2009

தாத்தா பாட்டி



நாளை தீபாவளி. வீடே கலகலப்பாக இருந்தது. எனது மூத்த மகளும், மாப்பிளையும் குழந்தை பரிவதனியை தூக்கிக்கொண்டு இன்று காலை வந்தார்கள். மாப்பிளை இங்கு பக்கத்தில் கும்பகோணத்தில் தான் இருக்கிறார். அவருக்கு அப்பா, அம்மா இல்லை. ஆதலால் தீபாவளியை எங்களுடன் வந்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.


எனது பையன் திருமணமாகி என்னுடனேயே வசிக்கிறான். அவனுடைய மகன் நகுலனுக்கும் பேத்தி பரிவதனிக்கும் எப்போதும் ஆகாது. நகுலன் பரிவதனியை விட மூத்தவன். பரிவதனி இன்னும் விளையாட்டு வயது. பேரனை காட்டிலும் பேத்திக்கு என் மீது அப்படி ஒரு பிரியம். எப்போதும் தாத்தா, தாத்தா என்று என்னையே சுற்றி சுற்றி வருவாள்.

பேரன் பேத்தி இருவரும் வீட்டில் இருந்தால் அவர்களின் சின்ன சின்ன சண்டைகளை சமாதான படுத்துவதே எனது முழு நேர வேலையாகிவிடும்.

இளைய மகளுக்கு வரன் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஒன்றும் அமையவில்லை. அவளுக்கு ஒரு குழந்தை பிறந்து அதையும் தூக்கி கொஞ்சி விட்டால் என் எல்லா ஆசைகளும் நிறைவேறிவிடும்.

வாசலில் அழைப்பு மணி கேட்டது.

"அட டே... நம்ம கல்யாண ப்ரோக்கர்".

வாங்க சாமி, வாங்க ... இப்பதான் உங்கள பத்தி நினைச்சேன்.

"எல்லாம் நல்ல சேதி தான். நீங்க தானே நல்ல வரனா இருந்தா சின்ன பாப்பாவுக்கு பாக்க சொன்னிங்க. ஒரு நல்ல வரன் வந்தது. அதான் உங்கள உடனடியா பார்த்து பேசிட்டு போகலாம்னு வந்தேன்" என்றார் ப்ரோக்கர்.

"ரொம்ப நல்லது. கொஞ்சம் வெவரமா சொல்லுங்க", என்னனு பார்ப்போம் என்றேன்.

ரொம்ப நல்ல பையன். அப்பா, அம்மா கூடத்தான் இருக்கிறார். எஞ்சினியரிங் படிப்பு. கை நிறைய சம்பளம். ஒரு கூட பொறந்த தங்கச்சி. அதுக்கும் கல்யாணம் முடிச்சாச்சு. வேற எதாவது விவரம் வேணும்னா கேளுங்க சொல்றேன்.

பார்த்தா நல்ல வரனாதான் தெரியுது. ஆனா ...

வரதச்சனை பத்தி யோசிக்கிறிங்களா? மாப்பிள்ளை வீடு அப்படி ஒன்னும் கறார் பேர்வழிகள் கிடையாது. நாம பேசி தெரிஞ்சிக்கலாம்...

"அதுக்கு இல்ல சாமி..." என்ன சொல்வது என்று எனக்கு புரியவில்லை. என்னுடைய மாப்பிள்ளைக்கு அப்பா அம்மா கிடையாது. அதனால என் மூத்த பொண்ணுக்கு எந்த பிரச்சினையும் இதுவரை இல்லை. அதே போல் என் சின்ன பொன்னுக்கும் ஒரு வரன் அமைஞ்சா நல்ல இருக்கும். இதை எப்படி ப்ரோக்கர் கிட்ட சொல்றதுனு தெரியல ...

"இன்னும் ரெண்டு மூணு வரன் பார்த்துட்டு அப்புறம் முடிவு பண்ணலாமுன்னு எனக்கு தோனுது". ப்ரோக்கரை பார்த்து கூறினேன்.

"சரி அப்புறம் உங்க விருப்பம். நா அடுத்து நல்ல வரன் ஏதும் வந்தா அதையும் எடுத்துகிட்டு வரேன்".

ப்ரோக்கரை வழி அனுப்பிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தேன். எதிரே பேத்தி மதிவதனி தாத்தா என அழுதபடியே ஓடி வந்து என்னை கட்டி அணைத்தால்.

"என்னடா தங்கம்? நகுலன் அடிச்சனா"?

இல்ல தாத்தா... அவன் சைக்கிள நான் கேட்டேன். தர மாட்டேங்கிறான். எனக்கும் சைக்கிள் வேனும்ம்ம்... என்று அழுகையை தொடர்ந்தாள்.

சரிம்மா நா உனக்கும் சைக்கிள் வாங்கி தரேன். சரியா... இப்ப அழுகையை நிப்பாட்டு.

"போ தாத்தா... அவனுக்கு மட்டும் ரெண்டு தாத்தா இருக்காங்க. அவன் எப்பவும் உன்கூடயே இருக்கான். அதான் அவன் கேட்டதலாம் அவனுக்கு கிடைக்குது. எனக்கு எங்க வீட்டுல தாத்தாவே இல்ல. எனக்கும் என் கூடயே ஒரு தாத்தா வேனும்ம்ம்... என்று அழுகையை இன்னும் கூட்டினால்.

அவளை எப்படி சமாதான படுத்துவது என்றே தெரியவில்லை. ஒரு வழியாக பேரனிடம் இருந்து சைகிளை அவளுக்கு வாங்கி கொடுத்ததும் ஓரளவு சமாதனம் ஆனாள்.

ஆனால் எனக்கு தான் ஏதோ ஒன்று சமாதானமாகாமல் மனதிற்குள் உறுத்திக்கொண்டே இருந்தது.

அலைபேசியை எடுத்து கல்யாண ப்ரோகரை அழைத்தேன்.

"ஹலோ... சாமியா? நான் தான் பேசுரேன். சின்ன பொண்ணுக்கு ஒரு வரன் காமிச்சிங்கலே காலைல... அந்த வரனையே பார்த்துருவோம். சாயங்காலம் வாங்க".

மனதிற்குள் சற்று பாரம் குறைந்தது போல் இருந்தது. என் பேர குழந்தைகளுக்கு இனி "ரெண்டு தாத்தா" வேண்டும்.
share on:facebook

8 comments:

ஸ்ரீராம். said...

அப்பனுக்குப் பாடம் சொன்ன இடம் போல தாத்தாவுக்கு பாடம் சொன்ன பேரக் குழந்தைகள்....?!

ஆதி மனிதன் said...

வாங்க ஸ்ரீராம். பின்னூட்டத்துக்கு நன்றி. நல்ல விஷயம் யார் மூலம் வந்தாலும் வரவேற்க வேண்டியதுதானே.

அ. நம்பி said...

கதையின் முடிவு நன்று.

ஆதி மனிதன் said...

நன்றி நம்பி அவர்களே. தங்களின் தமிழ் புலமைக்கு முன் நானெல்லாம் ஒரு மாணவனுக்கு சமம்.

sriram said...

முயற்சிக்கு வாழ்த்துக்கள், எனக்கெல்லாம் கத எழுதற தெகிரியம் என்னிக்கும் வராது, முழுக்க பேச்சுத் தமிழில் எழுதுங்க மற்றும் இன்னும் எளிமையான பெயர்களை தெரிவு செய்யுங்க..
தொடர்ந்து எழுதுங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ஆதி மனிதன் said...

வருகை மற்றும் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம். மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன் (ஐயோ, பேச்சுத் தமிழ் வர மாடேங்குதே ...?)

Madhavan Srinivasagopalan said...

good story & message.

ஆதி மனிதன் said...

நன்றி Maddy.

Post a Comment