Wednesday, October 21, 2009

70 Vs 90ஹி ஹி ...தலைப்பை பாத்து தப்பா கற்பனை பண்ணிக்காதிங்க.

70 களில் நான் சிறுவனாக இருந்த போதும் இப்போது அதே வயதில் உள்ள சிறுவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் சூழல் எப்படி எல்லாம் மாறி இருக்கிறது என்பதையும் பதிவு செய்ய விரும்பினேன்.

இதை படித்துவிட்டு 60 களில் பெரியவர்களாக இருந்தவர்கள் தங்களுடைய வாழ்க்கைமுறையை பின்னூட்டமிட்டால் இன்னும் சுவாரசியம் கூடும் என்றும் நம்புகிறேன்.

இனி 70-களின்...

* நடுவில் ஒரு மண்ணெண்ணெய் விளக்கை வைத்துக் கொண்டு அம்மா எங்கள் எல்லோருக்கும் பாடம் சொல்லிக் கொடுப்பார்.

* ரேடியோவில் கவாஸ்கர் எப்பொழுதாவது அடிக்கும் செஞ்சுரிக்கு எல்லோரும் கை தட்டுவோம்.

* மன்மத லீலை சினிமா போஸ்டர்களை பார்த்தால் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்வோம்.

* கோலி, கிரிக்கெட், பட்டம், ஹாக்கி என அனைத்து விளையாட்டுகளையும் சீசன் வாரியாக விளையாடுவோம்.

* பொங்கல் விழாக் காலங்களில் அடுத்தவர் மீது மஞ்சள் தண்ணி தெளித்து விளையாடுவோம்.

* எங்கள் தெருவில் ஒரே ஒருவர் வீட்டில் மட்டும் இருந்த கருப்பு வெள்ளை டி.வி-இல் கொசு மொய்த்தது போல் தெரியும் சினிமா படங்களை பார்த்து ரசித்தது.

* ஊரில் இருந்து தாத்தா பாட்டி வரும் போது கொண்டு வரும் முறுக்கு, அதிரசம் பலகாரங்களுக்காக சண்டை போட்டுக் கொண்டது.

* "தந்தி" என்ற குரல் கேட்கும் போதெல்லாம் அம்மா ஏன் பதற்றமாகிறார்கள் என தெரியாமல் விழிப்போம்.

* மின்சாரம் போகும் போது, தெரு விளக்குகள் மற்றும் பெரிய வீட்டு விளக்குகள் அணையும் போது, "ஹே எங்க வீட்டுல மட்டும் கரண்ட் இருக்கே" என மண்ணெண்ணெய் விளக்கை கைகளால் அரவணைத்துக் கொள்வோம்.

* வீட்டில் விளையும் வெண்டைகாய், கத்திரிக்கா காய்களை தினம் காலை எழுந்தவுடன் பார்த்து மகிழ்வோம்.


இனி 90-களின்...

* காலையில் எழுந்தவுடன் சுட்டி டி. வி./போகோ டி. வி. பார்கிறார்கள்.

* தினமும் பள்ளிக்கு அவசர அவசரமாக கிளம்பி அட்டோவுக்காக அரைமணி நேரமாக வீட்டுக்கு வெளியே காத்திருக்கிறார்கள்.

* வேகாத வெயிலில் டையும் ஷூவும் அணிந்து பள்ளியில் வெந்து போகிறார்கள்.

* வீட்டுக்கு வந்தபின் நூடுல்சும், பிஸ்கட்டும் சாப்பிட்டு ஊதி போகிறார்கள்.

* இடைப்பட்ட நேரங்களில் வாக்மேன் எம்.பி,த்ரி கேட்டு காதை புண்ணாக்கி கொள்கிறார்கள்.

* சித்திரையில் ஏ.சி போட்டுக்கொண்டு மார்கழியில் வெளியே குளிர்கிறது என்று மப்ளர் கட்டிக்கொள்கிறார்கள்.

* சுப்ரபாதமும், கந்த சஸ்டி கவசமும் போய், நாக்க மூக்க ஒலிக்கும் தேநீர் கடைகள்.

* ஓடி ஆடும் விளையாட்டுக்களை மறந்து விட்டு ஜிம்முக்கு செல்லும் சிறுவர்கள்.

* நிலா சோறின் இன்பம் தெரியாமல் இருட்டில் உக்கார்ந்து பீட்சா சாப்பிடுகிறார்கள்.

* நுரை ததும்பும் சூடான பசும் பாலை அருந்த வழியில்லாமல் ஆடை நீக்கிய ஆவின் பாலை பிரீசரில் வைத்து பின் சூடாக்கி குடிக்கிறார்கள்.

நினைவுகள் தொடரும் ...

share on:facebook

9 comments:

sriram said...

ஆதிமனிதன்,
நீங்க 60கள் என்று எதை சொல்கிறீர்கள்? 1960 தானே?
அப்படியென்றால்,அறுபதுகளில் காவஸ்கர் இந்திய அணியில் இல்லை, மன்மத் லீலை படம் வெளிவரவில்லை, இந்திய இல்லங்களில் டிவி பொட்டி இல்லை, கரண்ட் கூட நிறைய வீட்டில் இல்லை, வேணா எழுபதுகள் என்று மாற்றி விடுங்களேன்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ஆதி மனிதன் said...

திருத்திவிட்டேன் ஸ்ரீராம். அது 70-களில் என்றுதான் இருக்க வேண்டும். நான் பிறந்தது 60-களின் கடைசியில். அதனால் ஏற்பட்ட குழப்பம் தான் இது. சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

ஸ்ரீராம். said...

70 களில் பிரபல விளையாட்டு கிட்டிப்புள்! கிரிக்கெட் எங்கேயாவது விளையாடுவார்கள்.
இப்போது கிட்டிப்புள் என்றால் என்னவென்றே தெரியாது. கிரிக்கெட் எங்கும் பிரபலம்.

Anonymous said...

ஹி ஹி ... நா கூட என்னமோன்னு நினைச்சேன். இப்படி கவுத்துட்டீங்களே.

Mohan Kumar said...

நல்லா இருக்கு ஆதி மனிதன். அடுத்ததும் தொடர்ந்து எழுதுங்க

நேசமுடன்

மோகன் குமார்

ஆதி மனிதன் said...

இன்பத்தேன் வந்து பாயுது காதிணிலே...

தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி திரு. மோகன்குமார் அவர்களே.

விரைவில் மீண்டும் எழுத முயற்சி செய்கிறேன் ...

maddy73 said...

what a 'feeling' ?

ஸ்ரீ.... said...

மீண்டும் இளம்பருவத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள். நன்றி. இயன்றால், எனது நினைவுகளையும் இடுகையாகத் தருகிறேன்.

ஸ்ரீ....

ஆகாயமனிதன்.. said...

70 JJ !
90 MK !

Post a Comment