Tuesday, May 15, 2012

பழைய பேப்பர், பாத்திரங்களுக்கு அமெரிக்க டாலர்...


பழைய பேப்பர், பாத்திரங்களுக்கு பேரிச்சம்பழம்... பள்ளி பொது தேர்வு முடிந்தவுடன் நம்மூரில் இப்படி கத்தியபடி அடிக்கடி சைக்கிளில் தெரு தெருவாக சுற்றி வருவார்கள். சிறுவனாக இருக்கும் போது இதற்க்காகவென்றே ஒரு நோட்டு விடாமல் எழுதிய பக்கங்களை கிழித்து அதை சேமித்து பழைய பேப்பருக்கு போட்டு அந்த பணத்தை அம்மாவிடம் வாங்கிக்கொண்டு சினிமாவுக்கு சென்று விடுவேன்.

வழக்கம் போல் இதற்கும் ஒரு அமெரிக்க கதை இருக்குமே என்கிறீர்களா?... ஆம். குறிப்பிட்ட பழக்கவழக்கங்களில் நாம் ஊறிப் போகும்போது அதற்க்கு நேர் மாறாக ஏதாவது ஒன்றை பார்த்தால் சில நேரங்களில் ஆச்சர்யமாகவும் சில சமயம் அருவருப்பாகவும் கூட இருக்கும். பன்றி கறியை சாப்பிடுவர்களை பார்த்து நமக்கு குமட்டினால், கோழி கறி சாப்பிடும் நம்மை பார்த்து சைவர்களுக்கு குமட்டும். அது போல் தான் இதுவும்.

அமெரிக்காவில் மிகவும் பிரபலமானது 'கராஜ் சேல்ஸ்'. அதாவது, உங்கள் வீட்டில் உங்களுக்கு உபயோகம் இல்லாமல் அல்லது பழசாகிப் போய் அதை நீங்கள் உபயோக படுத்தாமல் இருந்தால் அம்மாதிரி வீட்டில் உள்ள எல்லாவற்றையும் திரட்டி அதை அவர்கள் வீட்டின் முன் விற்பனைக்காக கடை பரப்பி விடுவார்கள். கராஜ் என்பது பொதுவாக கார் நிறுத்தும் இடத்தை குறிக்கும். அங்கு தான் அமெரிக்கர்கள் பலரும் அனைத்து தட்டு முட்டு சாமான்களையும் போட்டு வைத்திருப்பார்கள். அதனால் தானோ என்னவோ இப்பெயர். சில சமயங்களில் நமக்கு வேறு எங்கும் கிடைக்காத பொருட்கள் இம்மாதிரி கராஜ் சேல்சில் கிடைக்கும். வீட்டில் உள்ள பெரியவர் குழந்தைகள் என அனைவரும் இதை ஒவ்வொரு வருடமும் குளிர்காலம் முடிந்து வெயில் காலம் ஆரம்பிக்கும் போது மிகுந்த சந்தோசத்துடன் செய்வார்கள்.

சில வீடுகளில் வீதிக்கு வந்திருக்கும் பொருட்களை ஒரு லாரியில்  ஏற்றலாம். அவ்வளவு இருக்கும். சிலர் இதற்கென்று ஒரிஜினல் கல்லா பெட்டி வைத்து வியாபாரம் செய்வார்கள். தெருவை சுற்றி கராஜ் சேல் பற்றி விளம்பர பதாதைகள் ஒட்டி விடுவார்கள். இம்மாதிரி இடத்தில் பொருள் வாங்குகிறோமே என யாரும் வெட்க பட மாட்டார்கள். அமெரிக்கர்கள் எதற்கு தான் வெட்கப் பட்டார்கள் என கேட்கிறீர்களா?

ஆம், உபயோகித்த உடைகள், செருப்புகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என ஆரம்பித்து பெண்கள் உபயோகப் படுத்திய (நன்கு இண்டஸ்டரியல் வாஷ் செய்யப்பட பின்) உள்ளாடைகள் கூட அங்கு கிடைக்கும்.

அதே போல் அமெரிக்காவில் பழைய கார்களுக்கும் ஒரு மார்க்கெட் உண்டு. பழைய கார்களை வாங்க விற்க என்றே பல வலை தளங்கள் உண்டு. உங்கள் பழைய கரை நீங்கள் விற்க வேண்டும் என்றால் kbb.com போன்ற வலை தளங்களில் உங்கள் காரை பற்றிய எல்லா விபரங்களையும் அளித்தால் போதும். உங்கள் காரின் தற்போதைய சந்தை மதிப்பு என்ன வென்று காட்டி விடும். வாங்குபவர்களும் பெரும்பாலும் kbb.com மதிப்பு பார்த்து தான் வாங்குவார்கள். குறிப்பாக உங்கள் காரின் பிராண்ட், தயாரித்த வருடம், அதுவரை ஓடியுள்ள மைல்கள், காரில் உள்ள வசதிகளை பொறுத்து காரின் விலையை நிர்னைப்பார்கள்.

அமெரிக்காவில் ஸ்பீடா மீட்டரை யாரும் மாற்றிவைக்க முடியாது. அப்படி செய்தால் அது கடுமையான குற்றம். அது மட்டுமன்றி ஒவ்வொரு வண்டிக்கும் இங்கு ஹிஸ்டரி பராமரிக்கப் படும். வண்டி வாங்கும் நாள் முதல் ஒவ்வொரு முக்கிய நிகழ்வும் இங்கு தானாக பதிவு செய்யப் படுகிறது. அதாவது ஸ்பீடா மீட்டரில் அவ்வப்போது தெரியும் வண்டி ஓடிய அளவும் சேர்த்து. அந்த வகையில் பெரிதாக நாம் ஏமாந்து விட  முடியாது.

அமெரிக்க வாழ் இந்தியர்களை பொறுத்தவரையில் பெரும்பாலானோர் இரண்டு/மூன்று வருடம் முதல் ஆறு வருடங்கள் வரை அமெரிக்காவில் தொடர்ந்து வேலை செய்யும் வைப்பு கிடைக்கும் (கிரீன் கார்ட் நபர்கள் கணக்கில் இல்லை). இவர்களில் பெரும்பாலானோர் வீட்டிற்கு தேவையான சோபா, டைனிங் டேபிள், கார் என பலவற்றை செகண்ட் சேல்சில் தான் எடுப்பார்கள். ஒன்று இவர்கள் வேலை பார்க்கும் கம்பெனியில் உள்ளவர்கள் மூலம் இவர்களுக்கு தேவையான பொருட்கள் பற்றிய விபரம் கிடைக்கும் அல்லது இதற்கென்று உள்ள வலைத்தளங்கள் மூலம் பார்த்துக் கொள்ளலாம்.

இவை எல்லாவற்றையும் விட அமெரிக்காவில் வீட்டை காலி செய்யும் போது ஒரு பொருளையும் அங்கு விட்டு வர முடியாது. அதாவது சில பொருட்களை நாம் குப்பை தொட்டி அருகே கூட வைத்து விட்டு வர முடியாது. எல்லாவற்றையும் பொருளுக்கு தகுந்த மாதிரி முறையாக 'டிஸ்போஸ்' செய்ய வேண்டும். உதாரணமாக நம்மூர் போல் பாட்டரி, ஆயில் வேஸ்ட், மின்சார பல்புகளை போன்றவற்றை குப்பை தொட்டியில்  தூக்கி போட்டு விட முடியாது. அவைகளை அந்தந்த மாகாண சட்டப்படி  முறையாக 'டிஸ்போ' செய்ய வேண்டும். இல்லை என்றால் அதற்கும் அபராதம் தான்.
ஆக மொத்தம், புதிதாக அமெரிக்கா செல்லும் போதும் கஷ்டம். பின் அமெரிக்காவை விட்டு செல்லும் போதும் கஷ்டம் தான். அங்கு இருக்கும் வரைதான் எல்லா வாழ்வும், வசதியும்.

share on:facebook

2 comments:

Unknown said...

nalla muyarchi br

CS. Mohan Kumar said...

தலைப்பிலேயே மக்களை உள்ளே எழுப்பது எப்படி இந்த தலைப்பில் ஒரு பதிவு எழுதுங்க ஆதி மனிதன். தலைப்பு வைப்பதில் உங்களிடம் நிறைய கத்து க்க வேண்டி இருக்கு

Post a Comment