Friday, August 16, 2024

'துண்டு' அரசியல்

 எனது நண்பர் ஒருவர் என் பள்ளி நண்பர்கள் குழுவில் 'துண்டு' பற்றி யாரோ எழுதிய பதிவை பகிர்ந்திருந்தார். பொழுது போக்கிற்க்காக எழுதப்பட்ட பதிவு அது. அதுவே 'துண்டு' பற்றி சில வரலாற்று செய்திகளை என்னை இங்கே பகிர வைத்தது.


தமிழகத்தில் துண்டுக்கு ஒரு பெரிய அரசியல் மற்றும் சமூக வரலாறு உண்டு. சுதந்திரத்துக்கு பின் பெரிய அரசியல் கட்சிகளில் பொறுப்புகள் அனைத்தும் பெரும் பணக்காரர்கள் மற்றும் சமூகத்தில் உயரிய அந்தஸ்தில் உள்ளவர்கள் சிலரின் கைகளில் மட்டுமே இருந்து வந்தது.


அந்த காலத்தில் தான் திராவிட கட்சிகள்/கழகங்கள் உருவாகி நடுத்தர, ஏழை மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்க தொடங்கி அவர்களை


அரசியல் களத்தில் முன்னிறுத்தியது. அதன் அடையாளமாக அவர்களில் தலைவர்களை உருவாக்கியது. அவர்களை மேடை ஏற்றி அவர்களுக்கு எல்லோருக்கும் முன்னால் துண்டு அணிவித்து மரியாதை செலுத்தியது.


குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களும், ஏழைகளும் மற்றவர்களுக்கு முன் தங்கள் தோளில் துண்டு அணிய முடியாது. அப்படியே அணிந்தாலும் அவர்களை பார்த்தவுடன் அதை எடுத்து இடுப்பில் கட்டிக்கொள்ள வேண்டும் இதை ஓரளவிற்கு திராவிட கட்சிகள் மாற்றின. எல்லோரும் சமம் என்ற கோட்பாட்டில் இதன் மூலம் நடுத்தர மற்றும் ஏழை, தொழிலாள வர்க்கத்தினரை தங்கள் பக்கம் ஈர்த்தனர்.


தமிழக அரசியல் காட்சிகள் தவிர பிற மாநில காட்சிகள் மேடைகளில் இம்மாதிரி துண்டு அணிவித்து மரியாதை செய்வதை நான் பார்த்ததில்லை. இன்றும் கிராமப்புறங்களில் பெரும்பாலானோர் தவறாமல் துண்டு அணிவது பார்க்கலாம். 


துண்டுகள் பல வண்ணங்களில், வகைகளில், தரத்தில் கிடைக்கிறது. விவசாய சங்கங்களில் உள்ளவர்கள் பெரும்பாலும் பச்சை துண்டு அணிவர். புதுவுடைமை கட்சியை சேர்ந்தவர்கள் சிகப்பு துண்டும், மற்ற கழக உடன்பிறப்புகள் தங்கள் கட்சி பார்டர் போட்ட துண்டுகளையும் அணிந்து கொள்வார்கள்.


காந்தி 'சுதேசி' போராட்டத்தை அறிவித்தபோது தந்தை பெரியார் அவர்கள் தன் மனைவியுடன் தலையில் மூட்டையுடன் தெரு தெருவாக சென்று கைத்தறி ஆடை மற்றும் துண்டுகளை விற்றது வரலாறு.


என் தந்தை மூன்று வகையான துண்டு வைத்திருப்பர். வீட்டில் இருக்கும் போது சாதாரண வெள்ளை துண்டும், வெளியில் சென்றால் 'டர்கி டவல்' என்னும் சற்று மென்மையான, சிறிது வேலைப்பாடுகள் கொண்ட துண்டை பயன்படுத்துவார். இது சற்று விலையும் அதிகம். மேலும் சிகப்பு/மெரூன் வண்ணத்தில் கம்பளியால் செய்த நீண்ட ஷால் போன்று ஒன்றை குளிர் காலங்களின் போது அணிந்து கொள்வார்.


ஈரளத்துண்டு நீங்கள் எல்லோரும் அறிந்திருப்பீர்கள். நான் இதுவரை தமிழகம் தவிர வேறு எங்கும் பார்த்ததில்லை. இதை தவிர துண்டினால் வேறு சில பயன்களும் உண்டு. பயணத்தின் போது பேருந்திலோ, தொடர் வண்டியிலோ இடத்தை பிடிப்பதற்கு மிகவும் பயன்படும்.


அவன் ஏற்கெனவே துண்டு போட்டுட்டான் என சிலர் சொல்வார்கள். இதன் அர்த்தம் என்னவென்று உங்களுக்கே தெரியும்😃


மேலே குறிப்பிட்டவை அனைத்தும் நான் அறிந்த/படித்து தெரிந்து கொண்டவையே. யாரையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல.


share on:facebook