Wednesday, March 13, 2013

வேட்டி மறந்த தமிழனும், பாசக்கார மதுர மக்களும்.


சென்ற மாதம் பல்வேறு திருமண நிகழ்ச்சிகளுக்காக கும்பகோணம், மதுரை மற்றும் நாமக்கல் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நீண்ட வருடங்களுக்கு பின் இந்தியாவில் வந்து செட்டில் ஆகி இருப்பதால் மிக ஆர்வத்துடன் எல்லா திருமணங்களுக்கும் சென்று வந்தேன்.

கும்பகோணத்தில் நெருங்கிய உறவினர் வீட்டு திருமணம். நல்ல வசதி படைத்தவர்கள் தான். ஆனால் மணமக்களின் பூர்வீகம் கிராமம் தான் அவர்களின் பெற்றோர்கள் இன்னமும் கிராமத்தில் தான் வாழ்கிறார்கள். இதை சொல்ல காரணம் மணமக்கள் திருமணம் மற்றும் வரவேற்பின் போது உடுத்தி இருந்த உடைகள் தான். மருந்துக்கு கூட அங்கு தமிழர் பாரம்பரியமான பட்டு வேஷ்டியோ, சேலையோ பார்க்க முடியவில்லை. மணமகன் வட நாட்டவர்கள் உடுத்தும் 'செர்வானியும்', மணமகள் டிசைனர் சாரியும் அணிந்து கொண்டு தான் தாலி கட்டிக்கொண்டனர். சாதாரண மக்கள் மற்றும் சமூகத்தில் பெரிய லெவலில் உள்ளவர்களை கூட ஏன் இந்த வட நாட்டு மோகம் பிடித்து ஆட்டுகிறது என தெரியவில்லை. அதே போல் மணமகன் மற்றும்  நெருங்கிய உறவினர்கள் ஆளுக்கு ஒரு தலை பாகை வைத்து கொண்டு ராஜஸ்தான் ராஜாக்கள் போல காட்சி அளித்தது சற்று நகைச்சுவையாக தான் தோன்றியது.

பட்டு வேஷ்டியும், காஞ்சிபுரம் பட்டு புடவைக்கும் இதெல்லாம் ஈடாகுமா?

அடுத்து மதுரையில் கலந்து கொண்ட கல்யாணம். இங்கும் அதே கதை தான். அதை விட எனக்கு புதிதாக தெரிந்தது அங்கு வந்திருந்த பெரும்பாலான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அணிந்திருந்த தங்க நகைகள் தான். அப்பாப்பா! எவ்வளவு நகைகள். இதுவரை அவ்வளவு நகைகள் அணிந்து கடவுளர் சிலைகளை தான் பார்த்திருக்கிறேன். என்னுடன் வந்திருந்த தஞ்சை நண்பர் ஒருவரும் இதை பற்றி ஆச்சிர்யமாக தான் கேட்டார். இதற்க்கு நேர் மாறாக இருந்தது நாமக்கல் திருமண நிகழ்ச்சி.

அதை பார்க்கும் முன், மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார, தென் மாவட்ட மக்களின் பாசத்தை பற்றி சொல்லத்தான் வேண்டும். மதுர பயபுள்ளைங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லை. காலை மெயின் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு டவுன் பஸ்ஸில் ஏறினேன். ஏறியதும் கண்டக்டரிடம் நான் போக வேண்டிய இடத்தை சொல்லி, வந்தால் சொல்லுமாறு கேட்டுக்கொண்டேன். கடைசியில் இது தான் சார் கடைசி ஸ்டாப்பிங். இறங்கிக்கோங்க என்றார். நான் அங்குள்ள கல்யாண மண்டப பெயரை சொல்லி அதற்க்கு வழி கேட்டேன். இதை கேட்டுக்கொண்டிருந்த பஸ் டிரைவர், தம்பி, அப்படியே பஸ்ல உக்காருங்க. இதோட சர்வீஸ் முடிஞ்சிடுச்சு. இருந்தாலும் நீங்க சொல்ற மண்டபம் பக்கம் தான் வண்டி போகுது(அதற்க்கு ஏதோ காரணம் சொன்னார். மறந்து விட்டேன்). அங்கேயே நீங்க இறங்கிக்கலாம் என்று.  அப்படியே சென்னை பல்லவன் டிரைவர், கண்டக்டர் அனுபவங்கள் நினைவுக்கு வந்தது. முகம் தெரியாத வெளி ஊர் ஆட்களிடம் இவ்வளவு பாசம் காட்டுவதை பார்த்து சற்று மிரண்டு தான் போனேன்.

நாமக்கல் திருமணம் மிகவும் வித்தியாசமானது. ஆம், அங்கு பெரும்பாலானோர் நல்ல வசதியுடன் இருந்தாலும், சோ சிம்பிள். நண்பரின் திருமண வரவேற்ப்புக்கு வந்தவர்களில் ஒருவர் கூட இரண்டு செயினுக்கு மேல் அணிந்திருக்கவில்லை. அதுவும் சாதாரண ஒரு தாலி செயின் அதோடு சேர்த்து இன்னொரு செயின். அவ்வளவு தான். இத்தனைக்கும் வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் நல்ல வசதி படைத்தவர்கள். உள்ளூர் நண்பர் ஒருவரிடம் இதை பற்றி கேட்டேன். அவர் சொன்னது. இங்கு அப்படித்தானுங்க. சும்மா கைலி கட்டிக்கிட்டு போறாரேன்னு நினைச்சுடாதீங்க. அவருக்கு ஒரு பத்து லாரி இருக்கும். பெரிதாக யாரும் தங்கள் வசதியை உடை, நகைகள் மூலம் காட்டிக் கொள்ள மாட்டார்கள் என்றார்.

ஹ்ம்ம்...வெளியில் சென்றால் தான் எத்தனை அனுபவங்கள்.



share on:facebook

10 comments:

SathyaPriyan said...

அருமையான தொகுப்பு. இம்மாதிரி அனுபவங்களுக்கு தான் மனம் ஏங்குகிறது.

GIS said...

வெளியில் சென்றால் தான் எத்தனை அனுபவங்கள்.
Well said, that is India (tamilnadu). In US, there is no difference in dress or their behaviour...

திண்டுக்கல் தனபாலன் said...

மதுரையில் மீனாட்சியின் ஆட்சி...!?

துளசி கோபால் said...

உடையில் தமிழ்ப்பண்பாடு கலாச்சாரம் எல்லாம் யாருமே பார்க்கமாட்டாங்க. அவை எல்லாம் (அரசியல்) மேடைகளுக்கு மட்ட்டுமே:(

ஆதி மனிதன் said...

நன்றி சத்யப்ரியன். உண்மை.

ஆதி மனிதன் said...

//In US, there is no difference in dress or their behaviour...//

Thanks GIS. Yes I also felt the same. Its stereo type over there.

ஆதி மனிதன் said...

//மதுரையில் மீனாட்சியின் ஆட்சி...!?//

நன்றி தனபாலன். ஹி ஹி ஹி ...

ஆதி மனிதன் said...

//அவை எல்லாம் (அரசியல்) மேடைகளுக்கு மட்ட்டுமே:(//

ஆமாம் அம்மா. ஆனால் நான் முடிந்தவரை திருமணங்களுக்கு வேட்டி சட்டைதான் போடுவேன். அது எனக்கு ரொம்ப பிடிக்கும் (சிறுவயதில் இருந்தே).

pudugaithendral said...

அருமையான தொகுப்பு..

ADHI VENKAT said...

எல்லா இடத்திலும் இந்த வடநாட்டு மோகம் தான்...:)

அடிக்கும் வெய்யிலில் ஜிகுஜிகு புடவைகளும், கழுத்து நிறைய நகைகளும் பார்க்கும் போதே வேதனையாக இருக்கும்..:)

Post a Comment