Thursday, July 19, 2012

சென்னை - 2012. ஒரு NRI பார்வையில்...


சுமார் மூன்று வருடங்கள். சென்னை/தமிழகம்/இந்தியாவை விட்டு சென்று. கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு இனிய நாளில் மீண்டும் தாய் மண்ணில்.

என்ன தான் நம்ம ஊர்ல பிறந்து வளர்ந்திருந்தாலும் ஒரு சில ஆண்டுகள் வெளிநாட்டு வாசம் நம்மை பெரிதும் மாற்றிவிடுகிறது (நம் எண்ணம் மற்றும் எதிர்பார்ப்புகளில்). அதில் தவறொன்றும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. காரணம், வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் இந்தியாவை பற்றி குறை கூறுவதாக பலர் சொல்வதுண்டு. உண்மையிலேயே நாங்கள் குறை கூறவில்லை. மற்ற நாடுகளில் உள்ள வழமையை, நல்ல அரசாங்கத்தை மக்களின் பொறுப்புணர்வை இங்கு காண முடியவில்லையே என்ற ஆதங்கத்தை தான் நாங்கள் வெளிப்படுத்துகிறோம். இன்னும் சொல்லப் போனால், பெரும்பாலானவர்கள் (குறிப்பாக இந்தியர்கள்) வெளிநாடுகளில் இருந்து நல்ல விசயங்களை கற்றுக்கொண்டு வருகிறார்கள்.

முதலில் சென்னையில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்களை பார்ப்போம். ஏர்போர்ட் முதல் பாரீஸ் வரை ஒரு ரவுண்ட் வந்தால் போதும். விண்ணை முட்டும் கட்டடங்களும், எங்கு பார்த்தாலும் பாலங்களும் அப்பப்பா...நாம் சென்னையில் தான் இருக்கிறோமா? இல்லை சிங்கப்பூர் மலேசியாவிலா? என்ற சந்தேகம் தான் எழுகிறது (என்ன கூவம் வாசம் அடிக்கலையா என கேக்குறீங்களா? அது இல்லனா சென்னைக்கு அடையாளமே இல்லையே?)

அதே போல் தற்போது சென்னையின் போக்குவரத்தையே முற்றிலும் மாற்றி போட்டிருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மிகவும் கவனிக்க தக்கது. நிச்சயம் இது இன்னும் ஒரு கால் நூற்றாண்டுக்கு (போக்குவரத்தை சமாளிக்க) பயனுள்ளதாக இருக்கும். ஒரே குறை போடும் போதே இரட்டை  பாதை  அமைக்காமல் சிங்கிள் பாதை அமைத்திருப்பது தான். நிச்சயம் மீண்டும் ஒரு முறை சென்னையை நோண்டப் போகிறார்கள். ஆனால் அது நம் பேரப்  பிள்ளைகள் காலத்தில் தான் நடக்கும்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டமும், சென்னைக்கு போகும் அனைத்து NH சாலைகளும், ஊரை சுற்றி ரிங் ரோடுகளும் எல்லாம் நன்றாக தான் தெரிகிறது.  இனி குறைகளுக்கு வருவோம்.

சென்னையில் இறங்கியவுடனேயே சலிப்பை ஏற்படுத்துவது நம் ஏர்போர்ட் தான். ஆம், வெளிநாட்டு முனையத்தில் கூட சரியான முறையில் குளிர் சாதன வசதியை ஏற்படுத்தாதது. நம்மை விடுங்கள். இதமான சூழ்நிலையிலிருந்து வரும் வெளிநாட்டினரை ஒரு ஏர்போர்ட் உள்ளேயே   கசங்கி போக வைப்பது எந்த வகையில் நியாயம்? ஏர்போர்ட்டில் வசதிகள் சுத்த மோசம்.

அடுத்த பெரிய அதிர்ச்சி விலைவாசி ஏற்றம். அப்பப்பா...தமிழகம் வந்து கூட டாலரில் செலவு செய்வது போல் இருந்தது. இரண்டு மூன்று வருடங்களில் என்ன ஒரு விலை வாசி உயர்வு! சாமானியர்கள் எப்படி சமாளிக்கிறார்களோ தெரியவில்லை. சென்ற முறை வந்தபோது பதினைந்து ரூபாய்க்கும் குறைவாக விற்ற ஒரு சாதா தோசை இன்று முப்பத்தைந்து ரூபாய்க்கும் மேல். ஒரு இட்லி ஒன்பது ரூபாய்! நூறு ரூபாயில் குடும்பத்துடன் சரவணா பவன் சென்று டிபன் சாப்பிட்டதெல்லாம் உண்மையா என கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது.


அடுத்து செல் போன் உபயோகம். வந்து இரண்டு நாட்கள் கழித்து தான் என்னால் ஒரு சிம் கார்ட் போட முடிந்தது. அதுவரை அண்ணன், அம்மா என்று யாருடனும் பேச மிகுந்த சிரமப் பட்டேன் தெருவில் ஒரு STD பூத் கூட பார்க்க முடியவில்லை. முச்சந்திக்கு முச்சந்தி மருந்து (TASMAC) கடைகள் தான் காண முடிந்தது. மருந்துக்கு கூட ஒரு டெலிபோன் பூத்தை பார்க்க முடியவில்லை. எல்லோர் கையிலும் செல் போன் அப்புறம் எதற்கு டெலி போன் பூத்? மற்ற எல்லா எலெக்டிரானிக் பிசினசை விட சிறந்தது ஒரு செல்போன் சம்பந்தப் பட்ட கடை வைப்பது தான்.


எங்கள் அலுவலகம் அமைந்துள்ள சிறுசேரி பக்கம் சென்றால் இது தமிழ் நாடு தானா? நாம் சென்னையில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் நிச்சயம் ஏற்படும். எங்கு பார்த்தாலும் விண்ணை முட்டும் அடுக்கு மாடி கட்டடங்கள். இனி சிறுசேரி ஒரு IT ஹப் என்று சொல்வதை விட ஒரு ரெசிடன்சியல் ஹப்  என்றே கூறலாம். ஆமா, எங்கிருந்து தான் இவ்ளோ வீடுகளுக்கும் ஆள் வருவாங்க?

சென்ற வாரம் பைக்கில் சென்னையை ஒரு சுற்று சுற்றினேன். நன்றாக இருந்தது. எனக்கென்னவோ எங்கு பார்த்தாலும் ஒரு வழிப் பாதையாக மாற்றி இருப்பது நன்றாகவே படுகிறது. அட் லீஸ்ட் போக்குவரத்து அந்த பாதையில் தடங்கல் இல்லாமல் போகிறது. இதை நிரந்தரமாக ஆக்கி விடலாம் என்பது என் எண்ணம்.

அப்படி சுற்றி பார்க்கையில் நம் புதிய தலைமை செயலக கட்டடத்தையும், அண்ணா நூற்றாண்டு நூலக கட்டடத்தையும் வெளியில் இருந்து பார்க்கும் வாய்ப்பு  கிடைத்தது. உண்மையிலேயே இரண்டும் ஒரு காலத்தில் நிச்சயம் சென்னைக்கு ஒரு 'லான்ட் மார்க்' ஆக வாய்ப்புண்டு. ஆனால், சட்டசபை கட்டடத்தின் உபயோகம் ஒரு கேள்விக் குறியாக ஆகி இருப்பதாக தெரிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அண்ணா நூலகம் எப்படியோ தப்பித்துக் கொண்டதில் ஒரு சந்தோசம்.

அமெரிக்காவில் பொது உபயோகத்திற்கான புதிய கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களில் 'ஸ்மைல் ப்ளீஸ் ', Your tax money at work என்று ஒரு வாசகம் பார்த்ததாக நியாபகம். இங்கு நம்மூரில்?!?! மக்கள் வரிப்பணத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளை  செலவழித்து காட்டப்படும் கட்டடங்களின் நிலைமைகளை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது.

இன்னும் வரும்... 

share on:facebook