மே 18. உலகெங்கும் உள்ள தமிழர்கள் மறக்க முடியாத நாள். ஆம், மூன்று ஆண்டுகளுக்கு முன், இதே நாள், இதே வாரத்தில் தான் இலங்கையில் உள்ள தமிழ் இனத்தின் குரல் முறிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. யாரும் அற்ற அனாதைகள் என கூறுவார்களே. அதற்க்கு உண்மையான உதாரணம் இன்று இலங்கையில் உள்ள மிச்சம் சொச்சம் உள்ள தமிழர்கள் தான். இதை சொல்வதற்கு நான் விடுதலை புலிகளின் ஆதரவாளனாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
தமிழ் இனமே செத்து போன பிறகு இன்று தமிழ் ஈழம் தான் இலங்கை தமிழர்களுக்கு ஒரே தீர்வு என முழக்கமிடும் முன்னாள் முதல்வரும், ராஜ பக்சே கூண்டில் ஏற்றப் பட வேண்டும் என்று குரல் கொடுக்கும் இந்நாள் முதல்வரும், இவர்கள் எல்லாம் உலகத்தில் உள்ள எல்லா தமிழர்களும் ஒட்டு மொத்த குரலில் இலங்கையில் உள்ள எங்கள் உறவுகளை காப்பாற்றுங்கள் என குரல் கொடுத்த போது எங்கு போனார்கள் என தெரியவில்லை.
உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் ஒரே குரலில் இலங்கை தமிழர்களின் இறுதி நாட்களின் போது கண்ணீர் விட்டு கதறி கேட்டார்களே, போரை நிறுத்துங்கள் என்று, அதுவரை உலகையே அச்சுறுத்தி வந்த விடுதலை புலிகளின் இயக்கமும் தங்கள் ஆயுதங்களை மவுநிக்கிறோம் என்று அறிவித்தார்களே, அப்போது எங்கு போனார்கள் இந்த அரசியல் வாதிகள். அப்போது மட்டும் செவிடாகிப் போன இவர்கள் இப்போது மீண்டும் இலங்கை தமிழர் நலன் பற்றி பேசுவது யாரை ஏமாற்றும் செயல். குண்டு மழை பொழிந்து குற்றுயிரும் கொலை உயிருமாய் தமிழர்கள் அங்கு தத்தளித்து கொண்டிருக்க இங்கு முன்னாள் மத்திய அரசில் பதவி தேடியும், தேர்தல் தோல்விக்கு பிறகு கோடை நாட்டில் ரெஸ்ட் எடுக்கவும் இவர்கள் சென்றதை யாரும் மறந்து விட மாட்டார்கள்.
விடுதலை புலிகள் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகள் உண்டு. அதில் உண்மையும் உண்டு. அப்படி பார்த்தால் இன்று உலகில் பல நாடுகள் அரசு தீவிரவாதத்தின் கீழ் தான் உள்ளது. எந்த நாடாக இருந்தாலும் ஒரு அரசுக்கு எதிராக பலமாக ஒரு இயக்கம் வளர்ந்தால் அதை ஜன நாயகம் பார்த்து கட்டுப் படுத்துவதில்லை. தீவிரவாதம் என தலைப்பு கொடுத்து தலையை கிள்ளி தான் எறிகின்றன.
இலங்கை அரசுக்கு எதிராக சின்ன சின்ன எதிர்ப்பு போரட்டங்களையும், தாக்குதல்களையும் நடத்தி வந்த தமிழ் குழுக்களை தமிழக அரசியல்வாதிகளும், இந்திய அரசும் தங்கள் சுய நலம், பூலோக நலனுக்காகவே அவர்களை அழைத்து வந்து இந்தியாவெங்கும் பல மாநிலங்களில் வைத்து அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்து, ஆயுதங்கள் கொடுத்து இலங்கை அரசுக்கு எதிராக ஒரு மிக பெரிய சக்தியாக உருவாக காரணமென்றால் அம்மாதிரியான தீவிரவாதத்தை வளர்த்ததும் ஒரு தீவிரவாத செயல்தான்.
அதே தமிழ் குழுக்கள் வளர்ந்து மிக பெரிய பலம் பெற்ற பின் எங்கே அவர்களால் நமக்கு பிரச்னை வந்துவிடுமோ என அஞ்சி இந்திய அரசு அவர்களுக்குள் சகோதர சண்டை மூட்டி அதுவே கடைசியில் ஒட்டு மொத்த தமிழின அழிவுக்கு காரணமானதற்கு நம் சுய நலம் அன்றி வேறென்ன? இவையெல்லாம் ஆரம்பம் முதல் ஈழ பிரச்சனையை ஆழ்ந்து கவனித்து வருபவர்களுக்கு தெரியும்.
எங்கு மக்கள் ஒடுக்கப் படுகிறார்களோ அங்கு நிச்சயம் புரட்சிகள் வெடிக்கும். புரட்சிகள் எப்போதும் பூக்களால் அலங்கரிக்கப் படுவதில்லை. நேப்பாளத்தில் புரட்சி வெடித்தது. மன்னராட்சி தூக்கி எறியப்பட்டு புரட்சியாளர்கள் நாட்டை பிடித்தார்கள். இன்று அவர்களை உலக நாடுகள் அங்கீகரிக்க வில்லையா? நேபாள புரட்சியாளர்கள் மட்டும் என்ன பூப் பந்தையா கையில் எடுத்தார்கள். அவ்வளவு ஏன், கடந்த ஓராண்டாக எகிப்த்து முதல் பல்வேறு நாடுகளில் உலக நாடுகளால் அங்கீகரிக்கப் பட்ட ஆட்சியாளர்கள் தானே ஆட்சி செய்து வந்தார்கள். அந்த நாடுகள் எல்லாம் 'Sovereign' ஸ்டேட்ஸ் தானே. அங்கு மட்டும் புரட்சி எப்படி அனுமதிக்கப் பட்டது. புரட்சியாளர்கள் அது வரை ஆட்சி செய்து வந்த ஆட்சியாளர்களை எல்லோரும் பார்க்க படு கொலை செய்தார்களே. அதுவெல்லாம் தீவிரவாதம் இல்லையா?
ஒரு இனத்தையே முற்றிலும் அழித்தால் தான் தீவிரவாத்தை ஒழிக்க முடியும் என்றால் அப்புறம் உலகில் எந்த இனமும் வாழ வாய்ப்பில்லை.
இந்த நூற்றாண்டின் ஹோலோகாஸ்ட் முள்ளி வாய்க்கால் படுகொலைகள். முள்ளி வாய்க்காலில் கொத்து கொத்தாய் மடிந்து போன என் தமிழ் உறவுகளுக்கும், இந்த நூற்றாண்டின் ஹோலோகாஸ்டில் உயிர் பிழைத்து இன்னமும் கொட்டடிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் ஆதரவற்ற தமிழ் இனத்திற்கு என்னுடைய வீர வணக்கங்கள்.
share on:facebook