Wednesday, April 25, 2012

யூனிவர்சல் ஸ்டுடியோஸ் ஒரு ஜாலி டூர் - நீங்களும் வாங்க...


கலிபோர்னியா எப்படி IT கம்பெனிகளுக்கு பிரபலமானதோ அதே போல் பொழுது போக்கு அம்சங்களுக்கும் பிரபலம். குறிப்பாக லாஸ் ஏஞ்சலஸில் அமைந்துள்ள டிஸ்னி லான்ட் மற்றும் யூனிவர்சல் ஸ்டுடியோஸ் போன்றவைகள் வாழ்க்கையில் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்.

யூனிவர்சல் ஸ்டுடியோஸ் - பெரும்பாலானோர் தெரிந்துவைத்திருப்பார்கள். இந்தியாவில் பாலிவுட், கோலிவுட் எல்லாம் அமெரிக்காவில் உள்ள ஹாலிவுட்டை குறிக்கும் விதமாகவே பெயர் வைத்து அழைக்கப் படுகிறது. அப்படிப்பட்ட ஹாலிவுட்டில் தான் யூனிவர்சல் ஸ்டுடியோவும் அமைந்துள்ளது. இந்த ஸ்டுடியோவை முழுதும் சுற்றி பார்க்க குறைந்தது ஒரு வாரம் ஆகும். 

ஸ்டுடியோவில் உள்ள முக்கியமான பகுதிகளை மட்டும் இப்போது  பார்க்கலாம். ஸ்டுடியோ முழுதையும் ஓரளவு சுற்றி பார்க்க வசதியாக 'யூனிவர்சல் டூர்' என்று ஒரு பெரிய ட்ராமில் உட்கார வைத்து சுற்றி காண்பிக்கிறார்கள். இந்த பாதையில் ஸ்டுடியோவில் நிரந்தரமாக செட்-அப் செய்யப்பட்ட குடியிருப்பு பகுதிகள், மற்ற வகையான கட்டடங்கள் போன்ற எல்லாம் முகப்பு மட்டும் வடிவமைத்து இருப்பார்கள். பின் பக்கம் பார்த்தால் ஒன்றுமே இருக்காது. தேவைக்கு ஏற்றாற்போல் வண்ணம் மற்றும் அமைப்பை மாற்றிக் கொள்வார்கள் போலும். அது தவிர பிரபலாமான ஆங்கிலப் படங்கள் தயாரித்த போது போட்ட செட்களும் அங்கு பார்க்கலாம். இதை தவிர ரெக்கார்டிங் தியேட்டர் மற்ற திரைப்பட தயாரிப்பு சம்பந்தப் பட்ட கட்டிடங்களை வரிசையாக வெளியில் இருந்து பார்க்கலாம்.  

இதே 'டூரில்', ஹை-டெக் கார் நடனம் ஒன்றை பார்க்கலாம். பார்க் செய்யப்பட்டது போல் முதலில் தெரியும் இரண்டு கார்கள் திடீரென்று உயரே எழும்பி இடையிடையே கொழுந்து விட்டு எழும்பும் தீ சுவாளைகளுக்கு மத்தியில் நடனமாடும். அடுத்த சிறிது தூரத்தில், டிராம் நிறுத்தப் படும். திடீரென்று ஏற்பட்ட வானிலை மாற்றத்தின் காரணமாக மழை வந்தாலும் வரலாம். அதலால், பயணிகள் சற்று நனைய வாய்ப்புண்டு என்ற அறிவிப்பை தொடர்ந்து, வானில் மின்னலும், இடியோசையும் கேட்கும். ஒ..மழைதான் வந்துவிட்டதோ என நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போதே திடீரென்று சுற்றிலும் உள்ள பழைய கால கட்டடங்களிலிருந்து வெள்ளம் கதவுகளை பிளந்து கொண்டு பெருக்கெடுத்து ஓடி வரும். அதே போல் வானத்திலிருந்து மழை பொத்துக் கொண்டு ஊற்றும். எல்லாமே அர்டிபிசியல். அடுத்த சில நிமிடங்களில் நம் வண்டி நகரும் முன் அந்த இடமே மழை பொழிந்தது போல் தெரியாத அளவிற்கு பழைய நிலைமைக்கு காட்சி அளிக்கும். அந்த அளவிற்கு பார்த்து பார்த்து செட் அப் செய்திருப்பார்கள்.

அடுத்து ஒரு சிறிய ஓடையை நம் வண்டி கடந்து செல்லும். அப்போது 'ஜாவ்ஸ்' திரைப் படத்தில் வந்த 'சீன்' போல் திடீரென்று ஒரு சிறிய ஷார்க் தண்ணீரில் இழுந்து வெளியே வந்து நம்மை பயமுறுத்தும். இப்படி ஒவ்வொன்றாக நம்மை வியப்பிற்கும், பிரம்மிப்பிற்க்கும் அழைத்துச் செல்லும். இவை அனைத்தையும் நம்முடன் வரும் அறிவிப்பாளர் நமக்கு விரிவாக வர்ணனை கொடுத்துக் கொண்டே வருவார். ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளுக்கு என தனி தனியாக டிராம் வண்டிகள் உண்டு. நாம் பார்த்து ஏறி உட்கார வேண்டும்.

இதை தொடர்ந்து காணப் போகும் காட்சி தான் தற்போது மிக பிரபலம். கடந்த பல வருடங்களாக வைத்திருந்த ஒரு 'தீம்மை' தற்போது உள்ள தொழில் நுட்ப வசதியுடன் மாற்றி அமைத்து மிகவும் சிறப்பாக அமைத்திருக்கிறார்கள். அது...அடுத்த பதிவில்.

யூனிவர்சல் ஸ்டுடியோ பக்கம் வந்தால் நம்ம வீட்டுக்கும் வாங்க. பக்கத்தில் தான் நான் வசிக்கிறேன்.

share on:facebook

3 comments:

கோவை நேரம் said...

ஓஹோ...நீங்கள் அங்கு தான் வசிக்கிறீர்களா..?எதோ உங்க மூலம் இதெல்லாம் தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி

CS. Mohan Kumar said...

எனக்கும் பார்க்க ஆசை தான் முடியுமான்னு தெரியலை

இராஜராஜேஸ்வரி said...

சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

Post a Comment