Tuesday, March 13, 2012

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்…



1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்...


share on:facebook

Sunday, March 11, 2012

தமிழில் ஏன் பேச வேண்டும் - நடிகர் கமல ஹாசன்

சமீபத்தில் நான் ரசித்த கமலின் பேட்டி. அவர் சொல்வது போல் ஒன்றிரண்டு முக்கிய சொற்களையாவது  நாம் தமிழில் அடிக்கடி பேச வேண்டும். அப்போது அதற்குரிய மதிப்பும், வலிமையையும் தனி தான். நான் பொதுவாக நண்பர்களிடம்/மற்றவர்களிடம் பேசும் போது பெரும்பாலும் 'வணக்கம்', நன்றி போன்ற வார்த்தைகளை உபயோகிப்பேன். அதனால் எனக்கு இன்னும் அதிக மரியாதை தான் அவர்களிடம் இருந்து கிடைக்கிறதே ஒழியே யாரும் என்னை குறைவாக மதிப்பிடுவதில்லை. 


share on:facebook

Thursday, March 8, 2012

பெண்கள் பற்றி சில வரிகள் - ஆண்கள் பற்றிய கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன...


சமீபத்தில் ஒரு பிரபலமான ஆங்கில (இந்தியாவில் இருந்து வெளியாகும்) நாளிதழில் பெண்களை பற்றி வந்திருந்த கருத்துக்கள். இதை போட்டதற்காக என்னை பெண்ணின விரோதி அப்படியெல்லாம் எழுதிடாதீங்க...அப்படி கோவம் ஏதும் இருந்தா சொல்லுங்க. அந்த பத்திரிக்கை எதுன்னு பின்னூட்டத்தில் போட்டு விடுகிறேன்.

பெண்களை பற்றிய வினோதமான அதே நேரத்தில் நகைசுவையான விஷயங்கள் என்ற தலைப்பில்...இதோ...

# பெண்கள் எப்போதும் தங்கள் கைபையை எடுக்காமல் வெளியே போவதில்லை. அதில் என்ன இருக்கும் என யாருக்கும் தெரியாது (ஏன், சில நேரங்களில் அவர்களுக்கே கூட தெரியாது). இருந்தும் அது இல்லாமல் அவர்களால் வெளியே செல்ல முடியாது. ஏதும் கையில் இல்லாமல் இருப்பது அவர்களால் முடியாது.

# எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதை ஐந்தே நிமிடத்தில் செலவு செய்ய தெரிந்த பெண்களிடம் எப்போதும் உள்ள குறை. அணிந்துகொள்ள அவர்களிடம் உருபுடியான எந்த துணியும் இல்லை என்பது தான். அதே நேரத்தில் அவர்களுடைய அலமாரிகளில் உள்ள பல செட் உடைகளை ஒரு தடவைக்கு மேல் உடுத்தி இருக்க மாட்டார்கள்.

# பெண்களால் தான் இன்று பெருமளவு டி.வி. சீரியல்கள் கல்லா கட்டுகின்றன. நமக்கெல்லாம் முட்டாள் தனமாக தெரியும் இந்த சீரியல்கள் அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. அதற்க்கு காரணம், நம்மை விட மோசமானவர்கள் இந்த உலகத்தில் உள்ளார்கள் என்ற மன திருப்தியை அவர்களுக்கு தருவது தான்.

# பெண்கள் பேரம் பேசுவதில் கில்லாடிகள் என அனைவருக்கும் தெரியும். அதிலும் ஒரு பொருளை வாங்க வேண்டாம் என அவர்கள் முடிவு செய்து விட்டால், அவர்களால் அப்பொருளுக்கு பேரம் பேசாமல் அவர்களால் இருக்க முடியாது.

# பெண்கள் தாங்கள் அணியும் எந்த உடையையும் மற்ற பெண்கள் அணிந்திருந்தால் அது அவர்களுக்கு பிடிக்காது.

# ஆண்களை விட பெண்கள் வேகமாக விபரம் ஆனவர்களாக ஆகிவிடுவார்கள்.

# பெண்களால் ஒரு நாள் முழுதும் அழகு பார்க்கும் கண்ணாடி முன் செலவு செய்ய முடியும்.

***** மேலும் சில விசயங்களை இங்கு நான் சேர்க்க வில்லை. அப்புறம் என் பெண் வாசகர்கள் (யாரும் இருந்தால்) அவர்களை நான் இழக்க நேரிடும் என்ற பயத்தினால் தான்.

பெண்களுக்கான வேறொரு பதிவு...
கவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி? - பெண்களுக்கு மட்டும்.

share on:facebook

Wednesday, March 7, 2012

சூர்யாவுக்கு ஒரு கேள்வி: சிக்கன் பிரியாணியில் இருப்பது சிக்கனா? மட்டனா?


சமீபத்தில் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியை பார்த்தேன். அட ராமா! இவ்வளவு செயற்கைத்தனமாக ஒரு நிகழ்ச்சியை எப்படி எடுக்க முடியும் என்று தான் முதலில் எண்ணத் தோன்றுகிறது.

சூர்யா சினிமாவில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளலாம். அவர் என்னதான் எனர்ஜட்டிக்க்காக பேசுவது போல் 'நடித்தாலும்' அது எடு படவே இல்லை. இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த கோன் பனேகா க்ரோர் பதியை நினைவு படுத்தும் நிகழ்சிகளை மாற்றி மாற்றி பெயரிட்டு எடுத்துக் கொண்டு இருப்பார்களோ. சுயமாக சிந்திங்கப்பா!

ஒவ்வொரு கேள்வியை கேட்டு முடித்த பின் அதற்க்கு சரியான (இதற்க்கு ஹார்வர்ட் போய் படித்திருந்தால் தான் பதில் சொல்ல முடியும்) பதிலை சொன்ன பிறகு கை தட்டுகிறார்கள் பாருங்கள். ஐயோ தாங்க முடியல. எப்படி? எப்படி சூர்யாவும், கலந்து கொண்டவரும், அதை பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களும் தங்களை மறந்து கை தட்டுகிறார்கள்.

கேள்வி இது தான்: ஒருவர் செய்வதை பார்த்து அதே போல் இன்னொருவர் செய்வதற்கு என்ன வென்று சொல்வார்கள்?

A. பேய் அடிச்சான் காப்பி.

B. பிசாசு அடிச்சான் காப்பி.

C. கொசு அடிச்சான் காப்பி.

D. ஈ அடிச்சான் காப்பி.

ஐயா, வேற கேள்வியே உங்களுக்கு கிடைக்கலியா? இல்ல நீங்க ஈ அடிச்சான் காப்பி செய்வதை எல்லோருக்கும் சொல்கிறீர்களா?

இதற்க்கு எல்லோரும் கை வேறு தட்டுகிறார்கள். சூர்யாவின் மேலும் அவரின் தந்தை நடிகர் சிவ குமாரின் மேலும் தனிப்பட்ட மதிப்பு எனக்கு உண்டு. இருவரும் உழைப்பால் தங்கள் சொந்த திறமையால் முன்னுக்கு வந்தவர்கள். ஆனால், இங்கு சூர்யா சொல்வதென்ன? ஒரு போட்டியாளரை பார்த்து அவர் கேட்கும் கேள்வி.

சூர்யா: உங்களின் ஒரு மாத சம்பளம் எவ்வளவு?
போட்டியாளர்: சுமார் பதினைந்தாயிரம்.
சூர்யா: ஒரு மாதம் நீங்கள் சம்பாதிக்க போகும் பணத்தை ஒரு பத்து நிமிடத்தில் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போக போகிறீர்கள். யாருக்கு கிடைக்கும் இந்த அதிர்ஷ்டம்.

நம்ம கேள்வி: அப்ப ஒரு மாசம் அவர் கஷ்ட பட்டு உழைத்து சம்பாதிப்பதை நீங்கள் ஏளனம் செய்கிறீர்களா? வர எல்லோருக்கும் நீங்க அவங்க அவங்க ஒரு மாச சம்பளத்தை கொடுக்க தயாரா?

அடுத்த கேள்வி: "புரட்சித் தலைவர்" என யாரை அழைப்பார்கள்?

நல்ல வேலை, நிலவுக்கு போன ஆம் ஸ்ட்ராங், நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், சேகுவாரா என கஷ்டப் படுத்தாமல் அதில் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் பெயரையும் சேர்த்தீர்கள்.

சிக்கன் பிரியாணியில் இருப்பது சிக்கனா? மட்டனா? பண்ணி கறியா அல்லது மாட்டுக் கறியா என கேட்காமல் போனார்கள். சொல்ல முடியாது. அடுத்த நிகழ்ச்சியில் இந்த கேள்வியை எதிர் பார்க்கலாம். நாபகம் வைத்துக் கொள்ளுங்கள் மக்களே! சிக்கன் பிரியாணியில் இருப்பது "சிக்கன்" தான். இது தெரிய வில்லை என்றால், அப்புறம் நீங்கள் பொது வாக்கெடுப்புக்கு விட வேண்டி இருக்கும்.

போட்டியாளர்களின் வீடு, குடும்பம் என அனைத்தையும் காண்பிக்கிறார்கள். அதே போல் போட்டியை நடத்துபவர்களின் குடும்பம், வீடு அனைத்தையும் காண்பித்தால் நல்லது. அப்போது தெரியும் நமக்கு. ஒரு லட்சம் இரண்டு லட்சத்தை கொடுத்து விட்டு எத்தனை கோடிகளில் அவர்கள் புரள்கிறார்கள் என்று.

மணி சார், ஜீனியஸ் சார் என்று உயிரற்ற பொருட்களுக்கெல்லாம் ஒரு பெயர். சரியான காமெடி. சூர்யா பார்த்துக் கொண்டிருக்கும் அந்த மடிக் கணணி கூட ஒரு பொம்மை கணணியாக இருக்கக் கூடும். பின்னால் இருந்து கொண்டு யாரோ டிஸ்ப்ளேவில் விடைகளையும் அடுத்த கேள்வியையும் நமக்கு கலர் புல்லாக காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

அப்புறம் ஒரு கேள்வி கேட்டார்கள் பாருங்கள். நிச்சயம் இந்த கேள்வியை 'காப்டன்' அவர்களை மனதில் வைத்து தான் சூர்யா கேட்டிருப்பார் என நினைக்கிறேன். கேள்வி இது தான்.

திருநெல்வேலி எதற்கு பெயர் போனது?

A. இட்லிக்கா?

B. சட்னிக்கா?

C. சாம்பாருக்கா?

D. அல்வாவுக்கா?

ஆமா, அப்புறம். நம்ம காப்டன் ஒரு முறை பேட்டியின் போது உணர்ச்சி வசப்பட்டு சொன்னது (அவர் எப்போது தான் உணர்ச்சி வச பட வில்லை). திருநெல்வேலிக்கே அல்வாவா? DMDK கே சவாலா? என்று. அதை மனதில் வைத்து தான் இந்த கேள்வியை வைத்திருப்பார்கள் என நினைக்கிறேன்.


நல்லவேளை. திருநெல்வேலி என்றதும் நினைவுக்கு அருவாளா? ஜாதி சண்டையா? முரட்டு மீசையா? இல்ல ஒஸ்தி சிம்புவின் திருநெல்வேலி தமிழா? என்று கேட்கவில்லை.


போங்கப்பா. போய் புள்ள குட்டிங்களை படிக்க வைங்க. ஏதாவது நாலு பள்ளியை சேர்ந்த குழந்தைகளை கூப்பிட்டு அவர்களுக்கு அறிவு சார்ந்த "குவிஸ்" போட்டிகளை நடத்துங்கள். நல்ல பரிசுகளை பெரிய அறிவு ஜீவிகளை வைத்து கொடுங்கள். நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் பார்க்கும். அவர்களின் பெற்றோர்கள் சேர்த்து தான். அப்ப போட்டுக்குங்க. உங்க கிரைண்டர் மிக்சி விளம்பரங்களை.

குழந்தைகள், கல்வி பற்றிய மேலும் சில பதிவுகள் ...

அமெரிக்க அரசு பள்ளிகள் சிறந்தவையா? 

ஆறு மாதத்தில் ஒரு மில்லியன் - அமெரிக்க குழந்தைகள் சாதனை...

share on:facebook

Tuesday, March 6, 2012

எப்படி இருந்த நான் இப்படி ஆக போகிறேன் - எஸ். வி. சேகர் சிறப்பு (போட்டோ) பேட்டி..

எப்படி இருந்த நான்...



 இப்படி ஆக போகிறேன் ...


செய்தி: எஸ்.வி.சேகர் அ.தி.மு.கவில் சேர போகிறார். 

share on:facebook

Sunday, March 4, 2012

அமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்


நம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் கொண்டு செல்வது சகஜம். கேரளத்தில் இதை யாரும் தவறாக நினைக்க மாட்டார்கள். ஆனால், அதே போல் தமிழகத்தில் பெண்கள் உடை அணிய முடியாது. அது போல் தான் ஒவ்வொரு கலாச்சாரமும். இது நாட்டிற்கு நாடு பெரும் அளவில் மாறு படுகிறது. இதை நான் கூறுவதற்கு காரணம், அமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள் என்று தான் கூறியுள்ளேனே தவிர அவர்கள் அவ்வாறு செய்வது தவறு என நான் கூற வரவில்லை.

# எல்லாவற்றிலும் டீசன்சி பார்க்கும் அமெரிக்கர்கள் சளி பிடித்தால் மட்டும் கையில் உள்ள நாப்கின்னை வைத்துக் கொண்டு எங்கு இருந்தாலும் அதை பற்றி கவலைப் படாமல் அதுவும் சத்தம் போட்டு மூக்கை சிந்துவது எனக்கு கொஞ்சம் கூட பிடிப்பதில்லை. வேலை செய்யும் இடம், கழிவறை, சாப்பிடும் போது என கொஞ்சமும் இடம், பொருள் பார்க்காமல் மிகவும் சத்தத்துடன் அவர்கள் மூக்கை சுத்தம் செய்வது, அப்பப்பா தாங்க முடியாது.

# குழந்தை பருவம். அது யாருக்கும் திரும்ப கிடைக்காது. அதே போல் தான் இளம் தாய் தந்தையர். ஐந்தறிவு உள்ள மிருக இனங்கள் கூட தங்கள் குட்டியை அவை பெரியவை ஆகும் வரை தங்களுடனே அனைத்துக் கொண்டு தூங்கும். அதே போல் தான் நம் நாட்டிலும். ஆனால், இங்கு பிறந்த ஓரிரு மாதங்களிலேயே குழந்தையை தனியாக படுக்க வைத்து விடுவார்கள். குழந்தை அழுதால் அதை தெரிந்து கொள்ள அந்த தனியறையில் ஒரு சென்சார் பொருத்தி குழந்தை அழுதால் அப்போது மட்டும் போய் பார்த்துக் கொள்வார்கள். தாயின் அரவணைப்பு அதிகம் கிடைக்காமல் இருக்கும் குழந்தைகளை நினைக்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கும்.

# பொது மருத்துவ மனை மருத்துவம் இல்லாதது அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு பெரிய குறை. அங்கும் ஏழைகளும், ரோட்டில் வாழ்பவர்களும் உண்டு. அவர்களுக்கு முடியாமல் போனால் நம்மூர் பெரிய ஆஸ்பத்திரி போல் இங்கு எதுவும் இல்லை. இன்சூரன்ஸ் இருந்தால் தான் எந்த வைத்தியமும் கிடைக்கும். அந்த வகையில் அமெரிக்காவில் இருபது சதவிகத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் இன்சூரன்ஸ் வசதி இன்றி இருக்கின்றன. எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கும் அரசு வசதி அற்றவர்களுக்கு இலவச மருத்துவ வசதி மட்டும் செய்து கொடுக்க வில்லை.

# எல்லாவற்றிலும் சுத்தம் பார்க்கும் இவர்கள், 'நள தமயந்தி' படத்தில் மாதவன் கூறுவது போல், இவ்வளவு பெரிய பிளைட்டில் ஒரு சின்ன சொம்பு வைக்க கூடாத என கேட்பார். அது போல் கழிவறையில் தண்ணீர் வைக்காமல் பேப்பரை வைத்து சுத்தம் செய்து கொள்வது. அவர்களுக்கு அது பழக்கமாக இருந்தாலும். அப்பப்பா நினைத்துப் பாருங்கள். அதிலும் அலுவலகமாக இருந்தால் கூட அது வந்து விட்டால் அவர்களுக்கு அடக்க தெரியாது. ஓடி போய்விட்டு திரும்பவும் வந்து சீட்டில் உட்கார்ந்து விடுவார்கள் (தற்போது அவர்கள் சுத்தம் செய்யும் முறையை நினைத்துக் கொள்ளுங்கள்).  

# திருமணத்தின் போது என்னமோ வானுலக தேவதை தேவனை கை பிடித்தது போல் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து சந்தோசத்தின் உச்சியில் கண்ணீர் விட்டு திருமணம் செய்து கொள்ளும் இவர்கள், அடுத்த ஆறு மாதத்தில் என்னமோ திருவிழா முடிந்து போவது போல் ஒருவருக் கொருவர் கை காட்டி விட்டு பிரிந்து போவதும், சில நேரங்களில் குழந்தை இருந்தால் கூட அவர்களை பற்றி கவலை படாமல் சின்ன சின்ன விசயங்களுக்காக விவாகரத்து வங்கிக் கொள்வதும் இவர்களுக்கு சர்வ சாதாரணம். அலுவலகம் வீடு என எல்லாவற்றிலும் அவர்கள் மாட்டி இருக்கும் படங்களில் காட்டி இருக்கும் இறுக்கம் எப்படி அவ்வளவு எளிதில் விரிசலாகி போகிறது என்பது எனக்கு இன்னமும் புரியாத மர்மம்.

அட ஐந்து முடிஞ்சிடுச்சே?

அமெரிக்க கஷ்டங்கள் மேலும் சில ...

அட சே அமெரிக்கா...பாகம் - 1 : டாக்டர்கள் பிரச்னை.

அமெரிக்காவில் அதிகம் சம்பாதிப்பவர்கள்?

share on:facebook

Thursday, March 1, 2012

இந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்

எத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousewife.com பற்றி கேள்விப் பட்டேன். இந்தியா பற்றி ஒரு வெளி நாட்டவரின் பார்வையில் இருந்து பார்க்கும் போது சற்று வித்தியாசமாக தான் இருக்கிறது.

அமெரிக்கா பற்றி நான் எழுதும் பதிவுகள் எத்தனை பேருக்கு பிடிக்கிறது அல்லது படிக்க சுவாரசியமாக இருக்கிறது என எனக்கு தெரியாது. ஆனால், ஆஸ்திரேலியா விலிருந்து  சமூக சேவை செய்ய கொல்கட்டா சென்று அங்கு ஒரு நைட் கிளப்பில் DJ வாக இருந்த இந்தியரை திருமணம் செய்து கொண்டபின் மும்பையிலேயே குடும்பமாக செட்டில் ஆகி விட்ட "ஷறேல்' தன்னுடைய  whiteindianhousewife.com மூலம் இந்தியாவை பற்றி அவர் எழுதும் பதிவுகளும் (ஆங்கிலத்தில் தான்), அவர் எழுதிய புத்தகங்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அவரின் பதிவுகளில் ஒன்று இரண்டு சாம்பிளுக்காக (தமிழாக்க சுருக்கம் கீழே) ...

5 Things About India that Attract Me

என்னுடைய தற்போதைய வசதியான வாழ்க்கையை விட்டு விட்டு இந்தியா சென்றதை பார்த்து சிலர் நான் பைத்தியம் என்று கூட நினைப்பார்கள். ஆனால், என் கணவரை காதலிக்க தொடங்கும் முன்னே நான் இந்தியாவை காதலிக்க தொடங்கி விட்டேன் என்று கூறும் அவர், தான் முதன் முறை 2000 ஆம் ஆண்டு இந்தியா சென்ற போது இந்தியாவின் பரந்த, ஆழமான  முழு  வாழ்க்கை முறையை பார்த்து மனதை பறி கொடுத்து விட்டதாக எழுதி  இருக்கிறார்.

இந்தியாவை அவருக்கு பிடித்ததற்கான ஐந்து காரணங்கள் கீழே...

1. India is Untamed - எங்கு பார்த்தாலும் எப்போதும் ஏதாவது ஒன்று புதுசாக இருந்து கொண்டே இருக்கும். அதனால் வாழ்க்கை போரடிக்காது. மிகவும் சுவாரசியமாக போய்க் கொண்டே இருக்கும்.

2. Incense - இந்திய ஊது பத்திகள் மற்றும் நறு மணங்கள் தன்னை எப்போதும்  புத்துணர்ச்சியுடன் வைத்த்திருப்பதாகவும், காலை, மாலை மற்றும் இரவு  நேரங்களில்  அதை ஏற்றி வைத்து நறு மணத்தை அனுபவிப்பது இன்னமும்  அவருக்கு புது குதூகலத்தை குடுப்பதாக கூறுகிறார்.

3. Mystery - இந்தியா பழமையான நாடு. அங்கு கண்டு பிடிக்கவும் தெரிந்து கொள்ளவும் நிறைய உள்ளது. அதன் வரலாறு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் இவை எல்லாம் இந்தியா அவ்வப்போது சிறிது சிறிதாக தான் வெளி படுத்தும். அதனால் இந்தியா பற்றி நான் இன்னும் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் என்னை இந்தியாவில் இருக்க தூன்றுகிறது.

4. Spirituality - நான் ஒரு மதவாதி இல்லை. ஆனால், ஒரு நம்பிக்கைவாதி. என்னுடைய பெற்றோர் எனக்கு எந்த மதத்தையும் சொல்லி தரவில்லை. ஆனால், இந்தியா வந்த பிறகு இந்தியர்களின் கடவுள் மீதான நெருக்கத்தை  கண்டு வியந்தேன். கடவுள் எங்கும்  இருக்கிறார் என்பதற்கு இந்தியா தான் சிறந்த எடுத்துக் காட்டு. அதிலும் ஹிந்து மதத்தில் கடவுளை காண பல  வழிகள் உள்ளது. அது மனதுக்கும் உடம்பிற்கும் ஏற்றதான ஒரு மதம் என்று கூறுகிறார். இந்தியா தான் தனக்கு வாழ்க்கை என்றால் என்ன? மரணம்  என்றால் என்ன என்பதை முழுவதுமாக தெரிந்து கொள்ள உதவியதாக  குறிப்பிடுகிறார்.

5. Clothes - நான் இந்திய உடைகளை மிகவும் விரும்புவேன். அதன் வண்ணங்கள், வடிவமைப்பு, ஆபரணங்கள் மற்றும் உடை அலங்காரங்கள்  எனக்குள் ஒரு பெரிய மாற்றத்திற்கு உருவாக்கியது என்கிறார்.

Should I Move To India? என்ற பதிவில் இந்தியா செல்லலாமா என்ற அவருடைய வாசகர்களின் கேள்விகளுக்கு அவருடைய அனுபவத்தின் பேரில் பதில் அளித்துள்ளார். இந்தியாவிற்கு சுற்றுலா செல்வதற்கும் அங்கேயே சென்று வாழ்வதற்கும் நிறைய வித்தாயசம் உள்ளதாக தெரிவித்துள்ளார். உண்மைதானே.

இந்தியா ஏன் செல்ல வேண்டும் என அவர் சொல்லும் காரணங்கள்...

# ஒரு புதிய வாழ்க்கையை தொடங்க...
# புதிய அனுபவங்களை அனுபவிக்க...
# ஏனென்றால் உங்களுக்கு இந்தியாவின் கலாச்சாரம் பிடித்து இருக்கிறது...

இந்தியா ஏன் செல்ல வேண்டாம் என அவர் சொல்லும் காரணங்கள்...

# உங்களுடைய தற்போதைய பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதற்காக ....
# உங்களுடைய தற்போதைய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்காக...
இன்னும் நிறைய இருக்கிறது அவருடைய வலை தளத்தில்...பிடித்தால் படித்துப் பாருங்கள்.
 
பி. கு. படத்தில் இருப்பது 'ஷறேல்'  அல்ல. 

அமெரிக்கா பற்றி எனக்கு பிடித்த சில பதிவுகள்.

அனுபவி ராசா அனுபவி - அமெரிக்க(ர்) ஆசைகள்

கொள்ளை கொள்ளும் அமெரிக்க போலீஸ்.

share on:facebook