Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Monday, February 21, 2011

ஆறு மாதத்தில் ஒரு மில்லியன் - அமெரிக்க குழந்தைகள் சாதனை...


நம்மூருக்கு சுற்றுலா வரும் பெரும்பாலான வெளிநாட்டு பயணிகள் பஸ்சிலோ, ட்ரைனிலோ செல்லும் போது பக்கத்தில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் எப்போது பார்த்தாலும் ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டே போவார்கள். அந்த அளவிற்கு அவர்களுக்கு புத்தகம் வாசிப்பு பழக்கம் உண்டு. புத்தகம் வாசிப்பு என்பது அவர்களுக்கு ஒரு addiction என்றே சொல்லலாம். 

புத்தம் வாசிப்பதில் பெரும்பாலும் நன்மைகளே உண்டு. அதனால் உடலுக்கோ, மனதுக்கோ கெடுதல் ஏதும் கிடையாது. அதற்கும் மேலாக மனதுக்கு நிம்மதியும், அமைதியும் கிடைக்கிறது.

நான் சென்னையில் இருந்த போது அடிக்கடி  ரயில்வே  முன்  பதிவு  அலுவலகம் செல்ல நேரிடும். நம் மக்களின் பொறுமை பற்றி தான் தெரியுமே. ஐந்து நிமிடம் வரிசை நகரவில்லை என்றால் போதும் உடனே கவுண்டரில்  வேலை செய்யும் ஆட்களின் குடும்பத்தை எல்லாம் இழுத்து வசை பாட
ஆரம்பித்து விடுவார்கள்.  நான் உள்ளே செல்லும் போதே ஒரு ஆனந்த விகடனையோ குமுதத்தையோ வாங்கி சென்று விடுவேன். வரிசையில் இணைத்த பிறகு வாசிக்க தொடங்கினால்  பின் கவுண்டர் நெருங்கும் வரை பக்கத்தில் என்ன நடக்கிறதென்றே எனக்கு தெரியாது. பொழுதும் போய்விடும். நம்மை விட்டு டென்சனும் போய்விடும்.


அமெரிக்கா போன்ற நாடுகளில் பணி இடங்களில் கூட மத்திய உணவு இடைவெளியின் போது ஒரு சிலர் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு வாசிக்க தொடங்கி விடுவார்கள். இதற்கு காரணம் அவர்கள் சிறு வயதாக இருக்கும் போதே புத்தகம் வசிப்பதை ஒரு வகையான பொழுது போக்காக எடுத்துக்கொண்டு வாசிக்க தொடங்குவது தான்.

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதில் அவர்களின் பள்ளி மற்றும் நூலகத்துறைக்கு பெரும் பங்கு உண்டு.

உதாரணத்திற்கு, அமெரிக்காவில் எந்த ஒரு மாகாணத்திற்கு ஒருவர் இடம் பெயர்ந்தாலும்  அங்கு சென்ற பின் செய்யத் தவறாத ஒன்று உண்டு என்றால் அது அங்குள்ள நூலகத்திற்கு சென்று தன்னையும் தன் குடும்ப உறுப்பினர்களையும் பதிந்து கொள்வதுதான்.

அதே போல் ஒவ்வொரு நூலகமும் வாசிப்பு பழக்கத்தை வளர்க்கும் விதமாக பள்ளி விடுமுறை நாட்களில் ரீடிங் லாக் என்று ஒரு அட்டையை கொடுத்து ஒவ்வொரு நாளும் குறைந்தது இவ்வளவு நேரம்
குழந்தைகள் படிக்க வேண்டும் என்றும் அப்படி படித்து முடிக்கும் குழந்தைகளுக்கு சிறிய சிறிய பரிசு பொருட்களை கொடுத்து ஊக்குவிக்கிறது. இதற்க்கென்றே குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் போட்டி போட்டுக்கொண்டு படிக்கும்.

அதுமட்டுமில்லாமல் நூலகத்திற்கு குழந்தைகளுடன் பெற்றோர்களும் சேர்ந்து சென்று   படிப்பார்கள். இவையெல்லாம் குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதுடன் நூலகம் செல்லும் பழக்கத்தையும் சிறு வயது முதல் ஏற்படுத்துகிறது.

என் மகளின் பள்ளியில் மில்லியன் வோர்ட்ஸ் கிளப் என்று ஒன்று உண்டு. அதாவது லாங்குவேஜ் பாடத்தின் ஒரு பகுதியாக நாவல்கள்/கதை புத்தகங்கள் வாசிக்க வேண்டும். அப்படி படிக்கும் போது 100 பக்கங்கள் படித்தால் தோரயமாக 4200 வார்த்தைகள் படித்ததாக
கணக்கு  வைத்துக்கொள்கிறார்கள். இப்படி அவர்கள் படித்துக்கொண்டே வரும்போது ஒரு ஒரு மில்லியன் வார்த்தைகள் படித்து விட்டால் அவர்கள் மில்லியன் வோர்ட்ஸ் கிளப்பில் உறுப்பினராகி விடுகிறார்கள். அதே போல் அடுத்து டூ மில்லியன் கிளப்பிலும் சேரலாம்.

பொதுவாக பெரும்பாலான ஹைஸ்கூல் மாணவர்கள் இம்மாதிரி மில்லியன்
வோர்ட்ஸ் கிளப்பிலோ அல்லது டூ மில்லியன் வோர்ட்ஸ் கிளப்பிலோ இரண்டு மூன்று ஆண்டுகளில் உறுப்பினறாகிவிடுவார்கள்.  இப்படிதான்
குழந்தைகளின் வாசிப்பு பழக்கத்தை அங்கு வளர்க்கிறார்கள்.  ஆறே மாதத்தில் என் மகள் கூட மில்லியன் வோர்ட்ஸ் கிளப்பில் இடம் பிடித்து விட்டாள். தற்போது டூ மில்லியன் கிளப்பில் சேர வேண்டும் என்று எப்போதும் புத்தகமும் கையுமாக அலைகிறாள்.

சிறுவயது முதலே புத்தகம் வாசிப்பு பழக்கம் எனக்கு உண்டு. அதற்காக நான் பெரிய இலக்கியவாதி என்றோ  கம்ப ராமாயணத்தை கரைத்துக் குடித்தவன் என்றோ நினைத்து விடாதீர்கள். என்னை பொறுத்தவரை அனைத்து வகையான புத்தகங்களையும் படிக்க பார்க்க வேண்டும். பின் நமக்கு எது பிடிக்கிறதோ அது மாதிரியான புத்தகங்களை தொடர்ந்து படிக்கலாம். சங்கராச்சாரி 'யார்'? முதல் அர்த்தமுள்ள இந்து மதம் வரை. குத்தூசி முதல் குமுதம் வரை என்னை பொறுத்த வரை எல்லாமே எனக்கு புத்தகம் தான்.

நான் சிறு வயதாக இருந்த போது அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் புத்தகம் வாங்க மாட்டார்கள். பக்கத்து வீட்டிற்க்கு குமுதம் வருகிறதோ இல்லையோ சனிக்கிழமை காலை நான் போய் அவர்கள் வீட்டின் கதவை தட்டி விடுவேன். அன்று ஆரம்பித்த வாசிப்பு பழக்கம் இன்று வரை என்னை தொடர்ந்து வருகிறது. அதில் ஒரு சந்தோசம் நிம்மதி எனக்கு.

பிள்ளைகள் பாட புத்தகம் வாசிப்பது தவிர பிற நல்ல புத்தகங்கள் கொடுத்து வாசிக்க கற்று கொடுங்கள். இன்று மேதைகளாக உள்ள பலரும் நல்ல  புத்தகங்களை வாசித்தவர்களே.


படம் நன்றி: potosearch.com   
தகவல் நன்றி: என் மகளுக்கு

share on:facebook