சமீபத்தில் விஜய் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர்களை வைத்து 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சியை சூர்யா நடத்தினார். அதில் பங்கேற்ற 'நீயா நானா' புகழ் திரு. கோபிநாத் சிறப்பாக விளையாடி பதினாறு லட்சம் வென்றார்.
இடை இடையே திரு. சூர்யா கேட்ட கேள்விகளுக்கு உணர்வு பூர்வமாக பதில் அளித்தார். எல்லாம் நன்றாக தான் போய்கிட்டு இருந்தது. திடீரென்று ஆடியன்சை பார்த்து, இனிமே வெளிநாடுகளுக்கு போய் இன்னொருத்தன் கிட்ட கையேந்தி வேலை செய்யறதை விட்டுட்டு அவங்களை போல் உலகமே பேர் சொல்லும் மாதிரி எதையாவது ஒன்றை (ஒரு ப்ராடக்டை) புதுசா கண்டு பிடிங்கப்பா. அப்பத்தான் இந்தியா முன்னேறும் என்றார். தொடர்ந்து என்னப்பா கண்டு பிடிப்பீங்களா? என்று விடை கிடைக்காத ஒரு கேள்வியும் கேட்டார்.
அவர் IT நண்பர்களை மனதில் வைத்துதான் அதை சொன்னார் என்பதற்கு வேறு விளக்கங்கள் தேவை இல்லை. எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. அமெரிக்காவில் IT இல் வேலை பார்ப்பவர்களை பற்றி பலரும் ஒரு குத்தலாக தான் பேசுகிறார்கள். அதற்க்கு காரணம் அவர்களால் அவ்வாறு கண்டம் விட்டு கண்டம் சென்று மிகவும் சொகுசாகவும், மரியாதையாகவும் வாழ வழி இல்லை என்ற பொறமையையை தவிர வேறு ஒன்றும் இல்லை.
நான் ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லி இருந்தது போல், அமெரிக்காவிற்கு யாரும் வெத்தலை பாக்கு வைத்து அழைப்பதில்லை. இங்கு வரும் இந்தியர்கள் அனைவரும் இந்தியாவில் கஷ்டப்பட்டு படித்து, போட்டி நிறைந்த இந்த உலகில் தங்களுக்கு உள்ள தகுதியின் அடிப்படையில் முண்டி அடித்து தான் இங்கு வந்து சேருகிறார்கள். "Career" என்று சொல்வார்களே. அதில் ஒரு மைல் கல்லாகத்தான் அமெரிக்கா செல்லும் வாய்ப்பை IT இல் உள்ளவர்கள் கருதுகிறார்கள். பாங்க்கில் வேலை செய்யும் ஊழியர்கள் மானேஜர் போன்ற பதவி உயர்வுகள் கிடைக்கும் போது பெரும்பாலும் வெளி ஊர்கள் அல்லது மாநிலங்களுக்கு டிரான்ஸ்பர் செய்யப் படுகிறார்கள். அது போல் தான் IT மக்கள் வெளி நாடுகளுக்கு டிரான்ஸ்பர் செய்யப் படுகிறார்கள். இதை எப்படி நம் நாட்டை விட்டுவிட்டு அடுத்தவனுக்கு சேவகம் செய்வதாக பார்க்கிறார்களோ தெரியவில்லை.
அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களில் அதிக பட்சம் பத்து/பதினைந்து சதவிகிதம் பேர் கூட அங்கேயே செட்டில் ஆவதில்லை. ஒரு கட்டத்தில் பெரும்பாலானோர் இந்தியா திரும்பி விடுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இப்போது தான் நம்மிடையே கணிப்பொறி மற்றும் அது சம்மந்தப் பட்ட அறிவு பெரும்பாலான மக்களிடையே பரவி வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் நம்மிடையே ஒரு பில் கேட்ஸ்சோ ஸ்டீவ் ஜாப்ஸ்சோ நிச்சயம் உருவாவார்கள். அதற்க்கு இந்த தலைமுறையின் கணணி அறிவு நிச்சயம் அடுத்த தலைமுறையை மேலும் அறிவாளிகளாக்க பயன்படும்.
கடைசியாக நிகழ்ச்சியில் பார்வையாளர்களை பார்த்து கோபிநாத் கேட்ட கேள்வியை அவரிடமே நான் கேட்க நினைக்கிறேன்.
ஆமா, 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நீங்களா கண்டுபிடித்த நிகழ்ச்சியா? பல நாடுகளில், மொழிகளில் நடத்தப் பட்ட, நடந்து கொண்டு இருக்கிற நிகழ்ச்சியை தானே நீங்கள் காப்பி அடிக்கிறீர்கள். நீங்க எப்போது இது மாதிரி ஒரு நிகழ்ச்சியை கண்டுபிடித்து உலகம் பூரா உள்ள மற்ற நாட்டு தொலைகாட்சிகள் உங்களை பின்பற்ற வைக்க போகிறீர்கள். சொல்வது எல்லாம் ஈசிதான் சார். அதை நாம செய்து பார்த்தா தான் கஷ்டம் தெரியும்.
இந்தியர்கள் தான் முதன் முதலில் அனைவரும் இலவசமாக பயன்படுத்தும் வகையில் முதன் முதலில் இன்டர்நெட் பேஸ்ட் ஈமெயில் வசதியை கண்டு பிடித்து அதை செயல் படுத்தினார்கள். அது தான் தற்போதுள்ள மைக்ரோ சாப்ட் 'ஹாட் மெயில்'. ஆரம்பித்த சில ஆண்டுகளில் நல்ல விலை கிடைத்தவுடன் அதை மைக்ரோ சாப்ட்டிடம் விற்று விட்டார்கள். நாம ஏற்கனவே கண்டு பிடித்து விட்டோம் சார். இன்னும் நிறைய கண்டு பிடிப்போம்...
share on:facebook





