Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Sunday, October 27, 2013

மாட்டு வண்டி: தார் குச்சியும் லாந்தர் விளக்கும்.


எத்தனை பேருக்கு மாட்டு வண்டி பயணமும் அதை ஓட்டும் அனுபவமும் கிடைத்திருக்கும் என எனக்கு தெரியவில்லை. 80 களில் எங்கள் வீட்டிற்க்கு கிராமத்துடன் நேரடி தொடர்பும் விவசாயமும் இருந்தது. காலப்போக்கில் இப்போது விவசாயம் இல்லை. ஆனால் கிராமத்துடன் ஆன தொடர்பு ஓரளவிற்கு இருக்கிறது.

அப்போது நான் 5-6 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிந்திருப்பேன். ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை ஊரிலிருந்து டவுனுக்கு (அப்படி தான் தஞ்சை நகரத்தில் உள்ள எங்கள் வீட்டை சொல்வார்கள்) மாட்டு வண்டியில் தஞ்சையில் எங்கள் வீட்டில் வளர்த்த நான்கைந்து மாடு கன்றுகளுக்கு வைக்கோலும், வீட்டிற்க்கு தேவையான நெல்/உளுந்து வகையறாக்களும் வந்து சேரும். போகும் போது அதே வண்டியில் வீட்டில் வளர்த்த மாடுகள் மூலம் சேர்ந்திருக்கும் இயற்க்கை உரமான சாணி எருவை கிராமத்து வயல்களில் தெளிக்க எடுத்து செல்வார்கள்.

தஞ்சையில் வண்டி டேரா போட்டிருக்கும் ஒன்றிரண்டு நாட்களில் கெஞ்சி கூத்தாடி ஓரிரு முறையேனும் அதை எடுத்து எங்கள் தெருக்களில் ஒட்டி விடுவேன். அதில் அப்படி பட்ட சந்தோசம் எனக்கு.

இப்போ என் காரில் இருக்கும் பவர் steering எனக்கு பெரிய ஆச்சர்யத்தை தருவதில்லை. ஆனால் அந்த ரெட்டை மாட்டு வண்டியை சாலைகளில் திருப்பும் போது ஒரு மாடு நடையை குறைத்த பின் மற்றொரு மாடு அழகாக திரும்பும் பாருங்கள். அப்போது அதை செய்ய லாவகமாக உதாரனத்திற்க்கு, வலது பக்கம் திரும்ப வேண்டும் எனில், வலது மாட்டின் கயிற்றை இழுத்து பிடித்து இடது புற மாட்டின் கயிறை லூசாக விட்டு அதை லேசாக குச்சியால் தட்டி கொடுக்கும் போது, கயிற்றை இழுத்து பிடித்த மாடு, கயிறு இறுகும் காரணத்தால் கழுத்தோடு சேர்த்து தலையை சற்றே ஒரு புறமாக மேலே தூக்கிக் கொண்டு நடையை உள் வாங்கும். அப்போது அடுத்த மாட்டை பார்த்து, 'சீக்கிரம் நீயும் திரும்பு' என்பது போல் பார்க்கும். உடனே இடது புற மாடு பலது புறம் திரும்பி நடக்க ஆரம்பிக்கும். நான்கைந்து அடி சென்ற பின் இழுத்து பிடித்த ஒரு மாட்டின் கயிறாய் லூசாக விட்டோமானால் தானாக இரண்டு மாடுகளும் நேர் கோட்டிற்கு வந்து விடும்.   

அப்போதெல்லாம் இன்று உள்ள அளவிற்கு டூ வீலரோ கார்களோ கிடையாது. அப்போ போக்குவரத்து காவலர் எப்படி 'பைன்' போடுவார்? என நீங்கள் கேட்பது தெரிகிறது. அப்ப யார் மாட்டுவாங்கனு கேடீங்கனா, இந்த மாட்டு வண்டி ஓட்டுபவர்கள் தான. ஆம், மாட்டை விரைவாக ஓட்டுவதற்கு 'தார் குச்சி' என்று ஒன்றை உபயோகிப்பார்கள். அதாவது குச்சியின் ஒரு முனையில் கூர்மையான ஆணி போன்ற ஒரு பொருளை இணைத்து விடுவர். பின் அதை கொண்டு மாட்டின் தொடை பாகத்தில் மாற்றி மாற்றி குத்தும் போது மாடு வேகம் பிடிக்கும். இது அன்றைய காலகட்டத்திலேயே  தடை செய்யப்பட்ட ஒன்று. ஆனால், தார் குச்சியால் குத்தாமல் மாடு மேடான பகுதிகளில் மற்றும் அதிக பாரம் இருப்பின் நகராது. பெரும்பாலானோர் தார் குச்சியை உபயோகப்படுத்துவார்.

அப்புறம் என்ன? ஒவ்வொரு முறையும் மாட்டு வண்டிகளை மறித்து, வண்டி முழுதும், அது முழுதும் வைக்கோல் ஏற்றி இருந்தால் கூட தார் ஊசி இருக்கிறதா என தேடி தேடி பைன் போடுவார்கள். வண்டி காரர்களும், நாம் ட்ராபிக்கை கண்டவுடன் செல் போனை மறைப்பது போல், தார் குச்சியை மறைத்துக் கொண்டே இருப்பார்கள்.

அடுத்ததாக மாட்டு வண்டி இரவில் சென்றால் அதற்க்கு 'ஹெட் லைட்' அவசியம் இருக்க வேண்டும். எங்கள் ஊரில் அதற்க்கு லாந்தர் விளக்கு என்போம். அதை எறிய விட்டு வண்டியின் அடியில் கட்டி விட வேண்டும். அதனால் ஒன்றும் பெரிதாக வெளிச்சம் வந்து விட போவதில்லை. இருப்பினும், சாலை விளக்குகளே இல்லாத கிராம சாலைகளில் செல்லும் போது இந்த அடியில் கட்டிய லாந்தர் விளக்கு ஓரளவு வெளிச்சத்தை கொடுக்கும். இந்த லாந்தர் விளக்கை கட்ட வில்லை என்றாலும் பைன் தான்.

தஞ்சையிலிருந்து ஊருக்கு வண்டி கிளம்பும் போது வண்டி ஓட்டிகளிடம், தார் குச்சி வேண்டாம்பா, லாந்தர் விளக்குல என்னை இருக்கானு பாத்துக்குங்க என்று திரும்பி திரும்பி சொல்லி அனுப்பி விட்டாலும், அவ்வப்போது, போலீசில் மாட்டிக்கொள்வர்கள். மாட்டு வண்டி பயணம், அதுவும் இரவில் பயணம் செய்வது ஒரு அலாதி அனுபவம். வேறொரு பதிவில் அதை பகிர்கிறேன்.





share on:facebook

Thursday, October 24, 2013

அமெரிக்காவிலிருந்து TV கொண்டு வரீங்களா? அப்ப இத படிங்க மொதல.



பல லேட்டஸ்ட் மாடல் மின்னணு பொருட்கள் தற்போது இந்தியாவிலேயே குறைந்த விலைக்கு கிடைத்தாலும் ஒரு சில பொருட்கள் அமெரிக்காவில் இன்னமும் சீப் தான். அந்த வகையில் LED மற்றும் Smart டிவிக்கள் அமெரிக்காவில் விலை மிக குறைவு. அத்துடன் அங்கு நாம் பயன்படுத்தி இருப்போம். அதை இங்கு கொண்டுவருவதால் நமக்கு இரட்டை லாபம்.

அதிலும் 40 இன்ச் வரை எடுத்து வரப்படும் டிவிக்களுக்கு கஸ்டம்ஸ் ஒன்றும் டியூட்டி கட்ட சொல்லுவதில்லை (சமீபத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததால் டியூட்டி போடுவதாக கேள்வி. இருந்தும் கூட இந்திய விலையை ஒப்பிட்டால் லாபம் தான்). ஆனால் இங்கு வந்த பிறகு அதற்க்கு சில வேலைகளை செய்தால் தான் படம் பார்க்க முடியும்.

முதல் வேலையாக 110 டு 220 வோல்டேஜ் கன்வெர்டர் வாங்கி விடுங்கள். அதோடு சேர்த்து நீங்கள் எத்தனை இன்ச் டிவி கொண்டு வருகிறீர்களோ அதற்கென உள்ள ஸ்டெபிலைசர் வாங்கி விடுங்கள். இது எல்லாம் இருந்தால் கூட அமெரிக்க டிவி இங்கு வேலை செய்யாது. காரணம் அமெரிக்க டிவிக்கள் NTSC சிஸ்டத்திலும் இந்திய டிவிக்கள் PAL என்ற வேறொரு தொழில் நுட்பத்தில் வேலை செய்யக்கூடியவை. அமெரிக்க டிவியை இங்கு வெறுமனே கனெக்க்ஷன் கொடுத்தால் இருபது வருடத்திற்கு முன் கருப்பு வெள்ளை டிவியில் புள்ளி புள்ளியாக படம் தெரியுமே, அது போல் தான் பார்க்க முடியும்.

அப்ப என்ன செய்யறதுன்னு கேக்குறீங்களா? இரண்டு வழிகள் உண்டு. ஒன்று நீங்கள் இன்னும் ஒரு கன்வெர்டர் வாங்க வேண்டும். அதாவது NTSC டு PAL கன்வெர்டர். அல்லது HD வசதியுடன் உள்ள டிஷ் கனெக்க்ஷன் எடுக்க வேண்டும். இங்கு தான் மீண்டும் ஒரு பிரச்சனை. அதாவது அமெரிக்க டிவிக்கள் 60 Hz இல் வடிவமைக்கப் பட்டது. இந்திய டிவிக்களோ 50 Hz கொண்டவை. சோ, நீங்கள் HD கனெக்க்ஷன் வாங்கும் போது உங்களது HD பாக்ஸில் இந்த செட்டிங்கை மாற்ற வேண்டும். அது என்ன அவ்ளோ பெரிய மேட்டரான்னு கேட்டீங்கனா. இல்லீங்க, அது உங்கள் HD பாக்ஸை செட்டப் செய்ய வரும் டெக்னீஷியனை பொறுத்து தான்.

இதில் வீடியோகானின் D2H கனெக்க்ஷன் எடுத்தால் மட்டும் தானாக Hz செட் ஆகி விடுமாம். ஆனால் நான் TATASKY HD எடுத்து விட்டு படாத பாடு பட்டுவிட்டேன். முதலில் TATASKY யில் 60 Hz வசதியே இல்லை. சமீபத்தில் தான் இந்த வசதியை கொண்டு வந்துள்ளார்கள். 60 Hz செட்டப் எப்படி செய்வது என்பது அவர்களின் technician எவருக்கும் தெரியவில்லை. கனெக்க்ஷன் கொடுத்த பிறகு 'mode not supported' என்று மட்டும் தான் டிவியில் தெரிகிறது. வேறு ஒன்றும் தெரியவில்லை. பின் technician ஐ அனுப்பி விட்டு google முழுதும் மேய்ந்து மேலும் நண்பர்களிடம் அவர்களின் அனுபவங்களை கேட்ட பிறகு தான் 60 Hz எப்படி செட்டப் செய்வது என தெரிந்தது.

மறு நாள் மீண்டும் அதே technician ஐ வரவழைத்து நான் ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல அவர் செய்து முடித்தார். TATASKY போன்ற பெரிய நிறுவனங்கள் ஒரு வசதியை கொண்டு வந்த பின் அதை எப்படி install செய்வது என்று கூட அவர்களின் technician களுக்கு சொல்லி கொடுக்கவில்லை. இவர்களுக்காக நான் இரண்டு மூன்று மணி நேரம் இணையத்தில் தேடி எப்படி செய்வது என சொல்ல வேண்டி உள்ளது.

சரி அப்ப நீங்க எப்ப அமெரிக்காவிலிருந்து டிவி எடுத்து வர போறீங்க?


 




share on:facebook

Sunday, October 20, 2013

காணாமல் போன என் ஐ-போன்


கடந்த சனியன்று தி. நகர் சென்றேன். ஒரு சில பொருட்கள் வாங்க வேண்டும் என்று. டிராபிக், பார்க்கிங் பிராப்ளம் இவற்றை தவிர்க்க மாநகர பேருந்தில் பயணித்தேன். ரொம்பவும் ஜாக்கிரதை  உணர்வுடன் பர்ஸ்சை பின் பாக்கட்டிலிருந்து முன் பாக்கட்டிற்கு மாற்றி இருந்தேன். அலை பேசி மட்டும் எப்போதும் போல் பெல்டில் மாட்டக்கூடிய பவுச்சுடன் பத்திரமாக முன் பக்கம்.

சில நேரங்களில் மாநகர பேருந்து பயணம் மிகவும் வசதியாக எனக்கு தெரிகிறது. நெற்குன்றத்திலிருந்து நேராக தி. நகருக்கு ஜஸ்ட் ஒன்பது ரூபாய் செலவில் சென்று விடலாம். தி. நகர் பேருந்து நிறுத்தத்தை அடையும் முன்பே ரங்கநாதன் தெரு சந்திப்பில் இறங்கி விட்டேன். போக வேண்டிய இடம் முன்னாலேயே கடந்து விட்டதால் மீண்டும் திரும்பி நடந்தேன்.

ஐநூறு அடி நடந்திருப்பேன். தி. நகர் பேருந்தில் வர எவ்வளவு நேரம் ஆனது என்று யோசித்தபடியே நடந்தேன். தி. நகர் கூட்டத்தில் கையில்  வாட்சை வேறு ஏன் கட்டிக்கொண்டு செல்ல வேண்டும் என்ற அதீத ஜாக்கிரதையால் அன்று அதையும் கலட்டி வைத்து விட்டு தான் வந்தேன். சரி நேரம் தற்போது என்னவென்று பார்ப்போம் என்று ஐபோன் பவுச்சை ஓபன் பண்ண கையை வைத்தேன். அப்படியே ஒரு வினாடி உலகமே இருண்டு விட்டது. உடலில் உள்ள ஐம்புலன்களும் வேலை செய்ய மறுத்து விட்டன. ஆம். பவுச் ஏற்கனவே ஓபன் ஆகி இருந்தது. உள்ளே போன் இல்லை.

ஓரிரு வினாடிகள் சுதாரிப்பதற்குள் மண்டைக்குள்ளே என்னனவோ ஓடுகிறது. உள்ளே இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட போடோக்கள், காண்டாக்ட்டுகள், நோட்பேட் அப்டேட்ஸ் அது இதுவென்று அய்யகோ...என்ன செய்வேன். போன் மட்டும் போனால் பரவாயில்லை. அதிலிலுள்ள டேட்டா தான் மிகவும் முக்கியம். அதை விட முன்பக்கம் வைத்து இருந்த ஒரு போனை கூட நம்மால் பத்திரமாக பாதுகாக்க முடியவில்லையே என்று என் மீதே எனக்கு ஏற்பட்ட கோவம், அவமானம்.

வீட்டில் சாமி இல்லை என்று மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு வந்தேனே. இனி வாழ்க்கை பூராவும், சாமியை திட்டினீங்கள அதான் சாமி தண்டனை கொடுத்துடுச்சு என்று சொல்லி சொல்லி காட்டுவார்களே என்ற கவலை. இதை எப்படி குழந்தைகளிடம் முதலில் சொல்வது. அப்படி பத்திரமா போகணும், இப்படி பத்திரமா வச்சுக்கணும்னு எல்லாம் எங்களுக்கு சொல்வீங்களே இப்போ நீங்க...?

போலீஸ் பீட் போய் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்றால் அது ஒரு ஐநூறு அடி தாண்டி இருந்தது. அங்கு போவதற்குள் என் போனை எடுத்தவன் தப்பித்து விடுவானே. சரி, அவசர உதவி எண்ணுக்கு அழைக்கலாம? ஹூஹூம்..என்ன செய்வது என்று யோசித்த கணத்தில். இது நடந்தது எல்லாம் ஓரிரு வினாடிகளில் தான். ஏதோ ஒன்று உள் மண்டைக்குள் உறுத்தியது. அது இப்போ, இப்போ தான் இந்த விநாடி தான் நம்ம போன் திருடு போய் விட்டது என்று ஏதோ ஒரு உள்ளுணர்வு சொல்லியது. அதை உடனே என் மூளை ஏற்றது.

சடாரென்று திரும்பி எதிர் திசையில் நடக்க துவங்கியவன், அரக்க பரக்க சுற்றும் முற்றும் எதிரே வந்தவர்களை எல்லாம் திருடர்களாகவே பார்த்தேன். ஒரு இரண்டடி நடந்திருப்பேன். எதிரே வந்தவர்களில் ஒருவர், கையில் ஒரு போனை வைத்துக்கொண்டு  ஏதோ செய்து கொண்டே நடந்து கொண்டிருந்தார். என்னையும் அறியாமல் என் கை அவரின் கையை பற்றியது. ஏய்....என்று சிறிது மிரட்டலான அதட்டல், என்னை கேட்காமல் என் குரல் அவ(ரை)னை மிரட்டி இருக்க வேண்டும்.

சார், இது உங்களுதா என்று என் போனை, ஆம். அது என் போனே தான். என்னிடமே நீட்டினார். கீழே கிடந்துச்சு என்று என்னிடம் மறு பேச்சு பேசாமல் கொடுத்து விட்டு எந்த சஞ்சலமும் இல்லாமல் தன் நடையை தொடர்ந்தார். ஒரு கணம் என் கண்களால் என்னையே நம்ப முடியவில்லை. மீண்டும் மீண்டும் என் போனை பார்த்தபடியே என் கண்கள் கலங்கி விட்டன. அடுத்த நிமிடமே பவுச்சுடன் எடுத்து முன் பாக்கட்டில் வைத்து விட்டு நடையை தொடர்ந்தேன்.

உண்மையிலேயே நான் நடந்து சென்ற போது போன் பவுச்சை விட்டு கீழே விழுந்து, அதை அவர் எடுத்து என்ன செய்வது ஏது செய்வது என்று நினைத்துக் நடந்து வந்த அந்த தருணத்தில் தான் அவர் என் எதிரே தென் பட்டாரா? அவர் திருடியது போலும் எனக்கு முழுமையாக தோன்றவில்லை. பின் ஏன் போனை கொடுத்து விட்டு நிற்காமல் சென்று விட்டார்? ஒரு வேளை அவர் நல்லவராக இருந்து, நாம் அவரை தவறாக நினைத்து போலீஸில் சொல்லி விடுவோமோ என்று பயந்து அவர் வேறு ஏதும் சொல்லாமல் நடையை கட்டி விட்டாரா? இல்லை அவன் செல் போன் திருடனே தானா?  ஒன்றுமே புரியவில்லை இன்னமும்.

எப்படியோ...காணமல் போன மிக முக்கியமான ஒரு பொருள், அதும் தி.நகர் போன்ற இடத்தில், தீபாவளி நேரத்தில். திரும்பி கிடைத்தது என்றால்?

Oh My God... 

share on:facebook

Monday, April 22, 2013

ஹாரன் அவஸ்தைகள்...

அமெரிக்காவில் இருந்த வரை என் சின்ன பெண்ணுக்கு அடக்க முடியாத ஆசை என்று ஒன்று உண்டென்றால் அது கார் ஹாரனை அடித்து பார்ப்பது தான். ஒவ்வொரு முறையும் வெளியில் இருந்து வீட்டுக்கு வந்து சேர்ந்து காரை நிறுத்தும் போதும், அப்பா ஒரே ஒரு தடவை ஹாரனை அடித்து கொள்ளட்டுமா என கெஞ்சி கெஞ்சி கேட்பாள். ஒவ்வொரு தடவையும் என் பதில் 'நோ மா...' என்றாகவே இருக்கும். காரணம் அங்கு காரணம் இல்லாமல் யாரும் கார் ஹாரனை அடிக்க மாட்டார்கள். அடிக்கவும் கூடாது.

இந்தியாவிற்கு இடையில் வந்திருந்த போது இங்கு சாலைகளில் ஓயாமல் கேட்கும் கார் ஹாரன் சத்தம் கேட்டு கேட்டு, மீண்டும் அமெரிக்கா சென்ற பின்னர் அங்கு கார் ஹாரன் சத்தத்தையே கேட்க முடியாமற் போனது அவளுக்கு என்னமோ அதன் மீது ஒரு ஆசையை ஏற்படுத்தி விட்டது போலும். ஆம், அமெரிக்கா மட்டுமன்றி பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் தேவை இல்லாமல் கார் ஹாரனை அடிக்க மாட்டார்கள். ஏன், ஹாரனை அடிக்கவே மாட்டார்கள் என்று கூட கூறலாம். அங்குள்ள கார்களில் பயன்படாத ஒரு 'பார்ட்' என்றால் அது ஹாரன் பட்டனாக தான் இருக்கும். சில கார்களில் அது 'ட்ராஷ்க்கு' செல்லும் வரை அது உபயோக படாமலே போக வாய்ப்புண்டு.

அப்புறம் எப்படி டிராபிக்கில் சைடு வாங்கும் போதும், எதிரே வண்டிகள் வரும் போதும், அடுத்த வாகனத்தை ஓரம் போகவோ, இடித்து விடாமல் எச்சரிக்கையோ செய்வது என கேட்பவர்களுக்கு, இம்மாதிரியான சூழ்நிலைகள் அங்கு பெரும்பாலும் ஏற்படாது. காரணம் எல்லோரும் அங்கு 'லேன் டிசிப்ளினை' பாலோ செய்வார்கள், செய்ய வேண்டும். ஆகையால் ஒரு வண்டியை ஓவர் டேக் செய்ய வேண்டும் என்றால் தேவையான இடைவெளி விட்டு அடுத்த லேனுக்கு மாறி அங்கிருந்து தான் மீண்டும் நம் லேனுக்குள் செல்லலாம். அது மட்டுமில்லாமல் வேகத்திற்கு ஏற்ப பல லேன்கள் இருப்பதால் அதில் பெரிய சிரமமும் இருக்காது. இண்டிகேட்டரை சரியாக உபயோகப்படுத்தினாலே பெரும்பாலும் போதுமானது. உண்மையிலேயே ஒரு விபத்து நிகழ போகிறது உங்கள் பக்கத்து வண்டி உங்களை இடிக்க போகிறார். அவரை எச்சரிக்கை செய்ய வேண்டும் என்ற காரணங்களுக்காக  மட்டும் தான் ஹாரனை அடிக்கலாம், அடிக்க வேண்டும்.

இருந்தும் சில நேரங்களில் யாராவது ஹாரன் சப்தம் எழுப்புவார்கள். அது பெரும்பாலும் நம்மை எரிச்சல் ஊட்டும் சக வாகன ஓட்டியை நம்மூரில் 'போடா பரதேசி' என்றோ 'வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா' என்றோ நாம் இங்கு திட்டுவோமே அதற்க்கு பதிலாக அங்கு ஹாரன் அடிப்பார்கள். சுருக்கமாக சொல்லப்போனால் அங்கு ஒருவரை திட்ட வேண்டும் என்றால் ஹாரன் தான் அடிக்க முடியும். ஆனால் அதுவும் அங்கு தவறு தான். அமெரிக்க காவல் துறையே இதை பற்றி அறிவுரை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். யாராவது தங்களை எரிச்சல் ஊட்டும் அளவிற்கு வண்டி ஓட்டினாலும் ஹாரன் அடிக்காதீர்கள். அது அவர்களை மேலும் எரிச்சல் ஊட்டும். சிலர் இன்னும் முரட்டுதனமாகி உங்களை தாக்க கூட கூடும் என்று. நமக்கு எரிச்சல் வரும் நேரத்தில் இந்த அறிவுரை எல்லாம் எங்கு நினைவுக்கு வரும். நானே பல முறை இது மாதிரி சந்தர்பங்களில் ஹாரன் அடித்துளேன். திட்ட முடியாதே வேறு என்ன செய்வது?

ஹாரனை அடிப்பதை இன்னொமொரு சுவாரசியமான விசயத்திற்கும் அங்கு பயன் படுத்துவார்கள். அதாவது ஒரு கோரிக்கை என்றால் அதை நான்கு ஐந்து பேர் சிக்னல் அருகே கைகளில் பதாகைகளை ஏந்தியபடி நிற்பார்கள். அந்த பதாகைகளில் அவர்களுடைய கோரிக்கைகள் அச்சடிக்கப்பட்டிருக்கும். அதன் கீழேயே கோரிக்கைக்கு அதரவு தெரிவிப்பவர்கள் ஹாரன் அடிக்குமாறு எழுதப்பட்டிருக்கும். அதாவது கமல் ரசிகர்கள் 'விஸ்வரூபம்' தடையை நீக்குமாறு கோரிக்கை வைத்தால் அதை நீங்கள் ஆதரித்தால் சிக்னலை கடக்கும் முன் ஒரு 5 வினாடிகளுக்கு தொடர்ந்து ஹாரன் எழுப்பியபடி கடந்து செல்வார்கள்.

இங்கு காரணமே இல்லாமல் நம் கைகள் தன்னிச்சையாக அவ்வப்போது ஹாரனை அடித்துக்கொண்டே இருக்கிறது. ஏன், எதற்கு அடிக்கிறோம் என்றே தெரியாமல் ஹாரன் அடித்துக்கொண்டே செல்பவர்களை பல முறை பார்த்துள்ளேன்/கேட்டுள்ளேன். மற்ற எந்த பொலுஷனை விட இந்த நாய்ஸ் பொலுஷன் மிகுந்த எரிச்சலையும் ஸ்ட்ரெஸ்சையும் ஏற்படுத்தும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இப்போது தான் 'ஹாரன் அடிக்காதீர்கள். காதுகளை கொல்லாதீர்கள்' என ஆங்காங்கே பொது நலன் கருதி பேனர்கள் வைத்துள்ளார்கள். இதற்க்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்து இந்த நாய்ஸ் பொலுஷனை நாம் மட்டு படுத்த வேண்டும்.

அதே போல் தான் வண்டிகளில் 'ஹை பீம்' லைட் பயன்பாடும். நம் ஊரில்  அநேகமாக 99 சதவீகித வண்டிகள் இரவில் 'ஹை பீம்' போட்டு தான் போகின்றன. அது மட்டும் இல்லாமல் எவ்வளவு பவர்புல் வாட்ஸ் போட முடியுமோ அந்த அளவிற்கு போட்டுக் கொண்டு தான் மட்டும் சரியாக சென்றால் போதும் மற்றவர் சொர்கத்திற்கு போனால் என்ன நரகத்திற்கு போனால் என்ற என்ற மனப்பான்மை. நானும் ஆரம்பத்தில் மாருதியில் ஒரிஜினலாக வந்த சாதாரண பல்பை தான் உபயோக படுத்தி வந்தேன். ஆனால் எதிரே TVS 50 வந்தால் கூட கண் தெரியாமல் போனது. அதன் பிறகு நானும் சற்று கூடுதல் பவர் உள்ள பல்பை மாட்டிக்கொண்டேன்.

மேற்கத்திய நாடுகளில் அப்படி இல்லை. எவ்வப்போது 'ஹை பீம்' போடலாம், போட வேண்டும் என்று வரைமுறை உள்ளது. அதே போல் நம் இஷ்டத்திற்கு அந்த வண்டிக்கென்று பரிந்துரைக்கப்பட்ட பல்பின் வாட்சை விட அதிகமாக போட கூடாது. அதனால் பெரும்பாலும் இரவு நெடும் தூரம் பயணம் செய்தாலும் கண்கள் அயர்ச்சி அடையாது. வண்டி ஓட்டுவதும் சிரமம் இல்லை. ஒரு சிலர் அவர்களுக்கு சைடு கொடுத்தாலோ, நின்று வழி விட்டாலோ அதற்க்கு நன்றியாக ஒரு விநாடி 'ஹை பீம்' போட்டு சிம்பலிக்காக நன்றி கூறுவார்கள். அது தான் அங்கு ஹை பீம் பயன்பாட்டின் அதிக பட்ச பயன்பாடு.

பவர்புல் பல்ப் மற்றும் 'ஹை பீம்' வெளிச்சத்தினாலேயே பல விபத்துக்கள் நடக்கின்றன. இதற்கும் அரசு கடுமையான விதிமுறைகளை கொண்டு வர வேண்டும். எல்லோரும் பொறுப்புணர்வுடன் ஒரே மாதிரியான அளவு வெளிச்சத்தை உபயோக படுத்தினால் மட்டுமே இப்பிரச்னைக்கும் தீர்வு காண முடியும்.


share on:facebook

Thursday, September 20, 2012

'ஆன்சைட்டா' அந்தப்புரமா?. IT படுத்தும் பாடு பார்ட் - 2



கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆயிட்டா எல்லா பெண்களையும் மற்ற பெண்கள் துளைத்து எடுக்கும் கேள்வி, என்ன 'விஷேசம் ஏதும் இல்லையா' என்பது. அது போல் IT யில் வேலைக்கு சேர்ந்த சில வருடங்களில் எல்லோரும் கேக்கும் கேள்வி. 'எப்போ ஆன்சைட்'? அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை. அது போல் ஆன்சைட் போகதவருக்கு IT யில் மதிப்பில்லை.

சென்ற பதிவில் IT கம்பெனிகளில் வேலையில் சேர்வது அவ்வளவு ஒன்றும் சுலபமான காரியமில்லை என்பதை கூறி இருந்தேன். இந்த பதிவில் அப்படியே ஒரு வழியாக வேலையில் சேர்ந்து விட்டாலும் அதோடு வாழ்க்கையில் செட்டில் ஆகி விட முடியுமா என்பதை பார்ப்போம்.

முதல் பாராவில் கூறி இருந்தது போல், எப்படி ஒரு நடிகன் தன் வாழ் நாள் கனவாக 'ஆஸ்கார்' விருதை பெற்றிட வேண்டும் என நினைப்பானோ, எப்படி ஒரு அரசியல் கட்சியின் தலைவருக்கு மாநில முதல்வர் பதவியோ அது போல் தான் பெரும்பாலான IT ஊழியர்களுக்கு 'ஆன்சைட்' கனவு.

'ஆன்சைட்' என்பது பெரும்பாலும் IT யில் வேலை பார்ப்பவர்கள் உபயோகப்படுத்தும் சொல். அது வேறொன்றும் இல்லை. அமெரிக்கவோ அல்லது பிற ஊர்களுக்கோ வேலை நிமித்தம் செல்வதை தான் 'ஆன்சைட்' போவதாக சொல்வார்கள். இதற்கு காரணம். நாம் வேலை பார்ப்பதே அவர்களுக்காக தான். அவர்கள் இடத்திற்கே சென்று வேலை பார்ப்பதை. On site என்று கூறுவார்கள்.

ஆன்சைட் வாய்ப்பு என்பது பெரும்பாலும் அவரவரின் அதிர்ஷ்டம் மற்றும் திறைமையை பொறுத்து. சில நேரங்களில் ஒன்னும் தெரியாதவன் ஒரே மாதத்தில் ஆன்சைட் செல்வான் சிலருக்கோ அதற்க்கு பல வருடங்கள் ஆகும். சரி அப்படி என்னதான் இருக்கு அந்த ஆன்சைட்டில் என கேப்பவர்களுக்கு...

# நல்ல சம்பளம் (இந்தியாவை ஒப்பிடும் போது)
# தான் பார்க்கும் வேலைக்கு ஒரு அங்கீகாரமாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
# தன் வேலையில் மேலும் முன்னேற இதுவும் ஒரு வாய்ப்பு.
# மனைவி குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு அமெரிக்கா/இங்கிலாந்து  போன்ற வளர்ந்த நாடுகளில் போய் சுற்றி பார்க்கும்/வசிக்கும் வாய்ப்பை தரும்.
# இவை எல்லாவற்றுக்கும் மேலாக குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஒட்டிக் கொண்டிராமல் உலகம் சுற்றும் வாய்ப்பு கிடைக்கும் போது அதனால் கிடைக்கும் அனுபவங்கள் ஏராளம் ஏராளம்.

அப்படி பட்ட ஆன்சைட் வாய்ப்புகள் இப்போது நிறைய இருந்தாலும் ஆன்சைட் பயணம் என்பது முன்பு போல் இப்போது இல்லை. முன்பு யார் வேண்டுமானாலும் (கம்பெனி நினைத்தால்) ஆன்சைட் போகலாம். இப்போது அமெரிக்கா மற்ற நாடுகளில் வீசா வழங்குவதில் நிறைய கெடுபிடிகள் கொண்டு வந்து விட்டார்கள். ஒரு முறை போய் விட்டு வரவே சிலருக்கு மூச்சு முட்டுகிறது. இந்த மாதிரியான சூழ்நிலையில் எனக்கு கிடைத்த வாய்ப்புகளை தற்போது நினைத்தாலும் பெருமையாகவும், திருப்தியாகவும் இருக்கிறது.

'ஆன்சைட்' பயணம் பொதுவாக இரு வகை படும். 1. ஷார்ட் டெர்ம் என சொல்லப்படுகிற குறுகிய கால பயணம். 2. லாங் டெர்ம் என சொல்லப்படுகிற நீண்ட கால பயணம். இரண்டு வகையிலும் வசதிகளும் உள்ளன. சிரமங்களும் உள்ளன. அவைகளை பார்க்கும் முன், அந்த காலத்தில் ராஜாக்கள், ஊரில் உள்ள மிக சிறந்த அழகியையோ அல்லது பணக்கார நாட்டு ராஜாவின் இளவரசியையோ பெரும் பணம், பொருள் நாடு என்று திருமணம் செய்திருந்தாலும் அரண்மனைக்கு அப்பால் ஒரு அந்தபுரம் கட்டாயம் இருக்கும்.

அதற்கு காரணம், அந்தபுரத்தில் கிடைக்கும் உல்லாசமும், கவலை, பொறுப்புகள் இல்லாத வாழ்க்கையும், அந்தபுரத்தில் இருக்கும் தருணம் வரை நாடு, வீடு என அனைத்துப் பொறுப்பையும் யாராவது ஒருவர் பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்திருப்பார். அந்த மாதிரி தான் ஆன்சைட் பயணங்களும் எங்களுக்கு (யாராவது இப்படி சொன்னதுக்கு சண்டைக்கு வரதா இருந்தா, நீங்க ஆன்சைட்ல எங்க எப்படி இருக்கீங்கன்னு விலா வாரியா சொல்லுங்க. அதுக்கப்புறம் பார்ப்போம் உங்க பக்கம் நியாயம் இருக்கானு).

ஐயா, தலைப்புக்கு சரியான விளக்கம் கொடுத்தாச்சு...இப்போ ஜூட்....அடுத்த பதிவில் மேலும் படுத்தலாம்...

தொடர்புடைய பதிவுகள்...

IT (வேலை) படுத்தும் பாடு...


share on:facebook

Thursday, August 23, 2012

IT (வேலை) படுத்தும் பாடு 

ஒவ்வொரு தொழிலிலும் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. உதாரணத்திற்கு சினிமாவை எடுத்துக் கொண்டால் நடிகர்/நடிகையர் எல்லோரும் சந்தோசமாக வாழ்வதாக நாம் நினைத்தால் அதை விட முட்டாள்தனம் வேறு ஏதும் இல்லை.

அது போல் தான் இந்த IT  துறையும். பணம் வேண்டுமானால் அவர்கள் ஒரு மாவட்ட கலெக்டரை விட அதிகம் சம்பாதிக்கலாம். நடிகர்களை போல பல நாடுகள் சுற்றி பார்க்கலாம். ஆனால் அவை ஒன்றொன்றுக்கும் அவர்கள் படும் பாடும் இழப்பதும் அதிகம்.

முதலில் IT யில் வேலை கிடைப்பது ஒன்றும் முன் போல் சாதாரண விஷயம் இல்லை. எல்லோரும் புத்திசாலிகளாக பிறப்பதில்லை. அதி புத்திசாலி மாணவர்கள் சிலரை தவிர மற்ற எல்லோரும் இந்த வேளையில் சேருவதற்கு படும் பாடு அவர்களிடம் கேட்டால் தான் தெரியும். வருடத்திற்கு ஒன்றரை லட்சம் மாணவர்களுக்கு மேல் தமிழகத்திலிருந்து மட்டும் இஞ்சினியர்களாக வெளியே வருகிறார்கள். இவர்களில் ஐந்தில் ஒரு பகுதி மாணவர்கள் கூட நேரடியாக வேலை வாய்ப்பு பெறுவதில்லை.

மற்ற எல்லோரும் குறைந்தது ஆறு மாதத்திலிருந்து இரண்டு வருடம் மூன்று வருடம் படாத பாடு பட்டு தான் இத்துறைக்குள் நுழைய முடிகிறது. இந்த காலத்தில் இவர்கள் அதை படித்தால் வேலை கிடைக்கும் இதை படித்தால் வேலை கிடைக்கும் என்று பணம் செலவழித்து படிப்பதும், ஒவ்வொரு கம்பெனியாக நேர்முகத் தேர்வுக்கு அலைவதை போல் ஒரு கொடுமை வேறொன்றும் இல்லை. இதை விட பெரிய கொடுமை இவர்களோடு படித்த மற்ற மாணவர்கள் நல்ல கம்பெனிகளில் வேலைக்கு சேர்ந்திருந்தால் மற்றவர்களாலும், வீட்டில் உள்ளவர்களாலும் இவர்களுக்குள் ஏற்படும் குற்ற உணர்ச்சி தாங்க முடியாதது. இவை எல்லாம் இவர்களின் தன்னம்பிக்கையை சில நேரம் பதம் பார்த்து விடும்.

இதெல்லாம் முடிந்து ஒரு வழியாக வேலை கிடைத்தது என்றால் அது நிச்சயம் உள்ளூரில் இருக்காது. ஏன், நம் மாநிலத்தில் கூட இருக்காது. பெங்களூரு, மும்பை என அனுப்பி விடுவார்கள். அங்கு நமக்கு இந்தியும் தெரியாமல் முகங்களையும் தெரியாமல் ஓரிரு ஆண்டு வேலை பார்த்த பிறகு தான் 'டிரான்ஸ்பர்' என்ற பேச்சையே எடுக்க முடியும். அநேகமாக தற்போது எல்லா கம்பெனிகளும் இரண்டு வருடத்திற்காவது 'பான்ட்' போட்டு விடுவார்கள். நம்மூரிலேயே வேறொரு வேலை கிடைத்தாலும் இடையில் மாற முடியாது.

இதையெல்லாம் சமாளித்து ஓரளவு ஸ்டெடி ஆகும் போது அவன்லாம் அமேரிக்கா போகிறான் ஆஸ்ட்ரேலியா போகிறான் நீ எப்ப போக போற என்று அடுத்தட கட்ட 'பியர் பிரஷர்' வந்து விடும். சும்மாவா, பக்கத்து சீட்டு காரன் ஒரு மூணு மாதம் அமேரிக்கா போயிட்டு வந்ததிற்கே கைல ஐபோன் ஐபாட்னு சுத்திக்கிட்டு அலைஞ்சா நம்மால சும்மா இருக்க முடியுமா? அடுத்த போராட்டம் எப்படியாவது 'ஆன் - சைட்', அதாங்க அமேரிக்கா அல்லது வேறு நாடு போறதுக்கு என்னவெல்லாம் பண்ணனும்னு ராவும் பகலும் நேரம் பார்க்காம பிராஜக்ட் மேனேஜர் சொல்ற வேலையெல்லாம் பாத்துக் கொடுக்கணும்.

ஒரு வழியா எவனோ ஒருத்தன் கல்யாணத்திற்கு இந்தியா வரான்னு அந்த கேப்புல நமக்கு ஒரு சான்ஸ் கிடைத்து அமேரிக்கா போனா அது மட்டும் சும்மாவா? அமேரிக்கா போறது அப்படி என்ன கஷ்டமான்னு கேகுறீங்களா? சொர்கத்துக்கே டிக்கெட்  வாங்கி போயிட்டு வந்துடலாம். ஆனா இந்த அமேரிக்கா போறது அப்படி ஒன்னும் ஈசி இல்லீங்கோ...

அதை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்...

   

share on:facebook

Wednesday, July 27, 2011

கோடை விடுமுறை கொண்டாட்டங்கள் - சாண்டியாகோ சபாரி பார்க்


இந்தியாவில், சென்னையில் இருக்கும் போது பக்கத்தில் உள்ள கிண்டி பார்க்கையோ வண்டலூர் மிருககாட்சி சலையையோ பார்க்க முடிவதில்லை. காரணம் பல. அதில் ஒன்று நம்மூரில் அடிக்கும் வெயில் மற்றும் போக்குவரத்தில் உள்ள சிரமங்கள். அல்லது நமக்கே உள்ள சோம்பேறித்தனம் அல்லது கஞ்சத்தனம்.

அதே நேரம் வெளிநாட்டில் பிழைப்புக்காக வரும்போது (அதுவும் நல்ல சம்பளத்தில்) அந்த நாட்டில் உள்ள முக்கியமான சுற்றுலா தளங்களை ஒன்று விடாமல் பலரும் பார்த்துவிடுவது இயல்பு. இதற்கும் பல காரணங்கள். பல விஷயங்கள் பிரமிப்பாகவும், விட்டால் திரும்ப பார்க்க முடியுமா என்கிற எண்ணமும், அங்குள்ளவர்களின் வெகேஷன் போகின்ற மனப்பான்மை நம்மையும் தொற்றிக்கொள்வது ஒரு காரணம். இது   எல்லாவற்றையும் விட அங்குள்ள சொகுசான வாழ்க்கைமுறை, சுத்தம், சுலபமான போக்குவரத்து வசதிகள் என எல்லாமும் எல்லா இடங்களையும் சுற்றி  பார்க்க   வைத்துவிடுகிறது. 

இந்த கோடைக்கால விடுமுறைக்காக கலிபோர்னியாவின் சாண்டியாகோ நகரத்தில் உள்ள மிகவும் பிரபலமான "San diego Safari Park" சென்றோம். 1800  ஏக்கர் பரப்பளவில் 3000 மேற்ப்பட்ட விலங்குகள். வருடத்திற்க்கு  20 லட்சத்திற்கு  மேற்ப்பட்ட பார்வையாளர்கள் என மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு திறந்த வெளி மிருககாட்சி சாலை அது.

கூண்டுக்குள்ளேயே பெரும்பாலும் மிருகங்களை பார்த்து பழக்கப்பட்ட நமக்கு திறந்த வெளியில் பல வகையான மிருங்கங்கள் உலவி வருவதை பார்த்த போது மிகவும் சந்தோசமாக இருந்தது. அதைவிட சில இடங்களில் நாம் அவைகளை நெருங்கி தொட்டு பார்த்து ரசிக்க முடிவது இன்னும் அருமை.

உள்ளே நுழையும் போது பலதரப்பட்ட சின்ன சின்ன விலங்குகள், பறவைகள் என ஆரம்பித்து உள்ளே நுழைந்தவுடனேயே திறந்த வெளியில் (சிறிய தடுப்பு வேலிக்குள்தான்) சிங்கத்தை காட்டி பயமுறுத்தி விடுகிறார்கள்.

சபாரி பார்க் முழுவதையும் வெவேறு தீம்களில் பிரித்து வன விலங்குகளை வளர்த்து வருகிறார்கள். கொரில்லா பாரெஸ்ட், ஆப்ரிக்கன் அவுட் போஸ்ட்  என பல பெயர்களில். இவை எல்லாவற்றையும் சுற்றி பார்க்க பல வழிகள் உண்டு. உங்கள் வசதிக்கேற்ப(பர்சின் கனத்திற்க்கேர்ப்பவும்). பொதுவாக  ட்ராம் எனப்படும் வரிசையாக கோர்க்கப்பட்ட வண்டியில் ஏறி உட்கார்ந்தால் அந்த வண்டியிலேயே முக்கால்வாசி பார்க்கை சுற்றி காட்டி விடுவார்கள். இதை விட்டால், வேன் அல்லது தனி ஜீப்பிலும் போய் சுற்றிபார்க்கலாம். அதேபோல் கயிற்றில் தொங்கியபடியோ அல்லது ரோல்லிங் சபாரி எனப்படும்(தசாவதாரம் படத்தில் காட்டி உள்ளார்கள்) வாகனத்திலும் நீங்கள் சுற்றி பார்க்கலாம்.

அமெரிக்காவில் எனக்கு மிகவும் பிடித்தது அவர்கள் சுத்தத்தை கடை பிடிக்கும் விதம்தான். அதனாலேயே எங்கு நீங்கள் பயணம் செய்தாலும் அதனால் எந்த பிரச்னையும் வராது. அவ்வளவு பெரிய பார்க்கில் ஒரு சின்ன குப்பையை கூட பார்க்க முடியாது. அதே போல் மிருகங்களிடமும் அதிக பட்ச மரியாதையையையும் அன்பையும் காட்டுவார்கள். ரொம்ப நேரமாக புலிகள் சரணாலயத்தில் இரண்டு மூன்று புலிகள் தூக்கத்திலிருந்து எழுந்திரிக்கவேயில்லை. இருந்தும் எல்லோரும் அதை அமைதியாக நின்று பார்த்துவிட்டு போய்க்கொண்டே இருந்தார்கள்.
  
அப்பா, சரியான ஆந்த கண்ணுடா!

அழகான வண்ண கிளிகள் உள்ள பார்வை கூடத்தில் சிறிய கிண்ணத்தில் உணவை கொண்டு சென்றால் (பார்வை கூடம் இலவசம் ஆனால் உணவுக்கின்னம் $3) அனைத்து கிளிகளும் உணவுக்காக நம் மீது வந்து  உட்கார்ந்து  உணவை உன்ன பழக்கி வைத்துள்ளார்கள். உணவு காலியானவுடன் எல்லாம் பறந்து சென்று விடுகிறது. அப்பதானே அவர்களுக்கு பிசினெஸ்.

இதுதான் கி(லி)ளியா...  


அப்புறம் யாரு நம்ம சிங்க ராஜாதான். சும்மா எப்படி கம்பீரமா இருக்காருன்னு பாருங்க. சும்மா இருபதடி தூரத்தில் சிறிய வேலிக்கு பின் நம்மையே முறைத்து பார்கிறார் பாருங்கள்.


இங்க இரையை தேடி சீட்டா...

கண்ணுக்கு குளிர்ச்சியாக அழகான கொக்குகள்...

ஓவியம் போன்ற மான்கள்.  

நான் வளர்கிறேனே மம்மி...

எனக்கும் லிப்ட் தாங்களேன்...

என் செல்ல குட்டி...

ஐயைய...சீ....எவ்வளவோ முயற்சி செய்தேன். முன்பக்கம்  படம் எடுக்க முடியவில்லை. 

நாங்கள் சென்ற நாளன்றுதான் சீட்டா ரன் என இரண்டே வயதான சீட்டா ஒன்றை பார்வையாளர்கள் முன் ஓடவிட்டு காட்டினார்கள். அப்பப்பா...என்ன ஒரு வேகம். 0 கிலோ மீட்டர் ஸ்பீடில் ஆரம்பித்து 110 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்தது... அந்த சீட்டா இங்கே...


யானை கூட்டம்னா இதுதானோ...

அப்புறம் வழக்கம் போல ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்...   

அப்புறம் வரட்டா....பை. பை....முடிஞ்சா இந்தப்பக்கம் வந்து நீங்களும் சபாரி பார்க்கை ஒரு முறை பார்த்துவிட்டு போங்கள்.
 

share on:facebook

Thursday, January 28, 2010

படுக்கையறையில் சிக்கி குழந்தை தவிப்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர் - செய்தி

இது நடந்து ஓரிரு மாதங்கள் இருக்கும். இன்று அது சமந்தப்பட்ட ஒரு செய்தியை படித்தவுடன் தான் ஒரு விழிப்புணர்வு பதிவாக நாமும் இதை போட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இனி நடந்தது என்ன ...?

வேலை விசயமாக அடிக்கடி வெளியூர் செல்லும் வழக்கம்  உள்ளவன் நான். அப்படி  போகையில்  அலை  பேசியில் மனைவி மகளுடன் குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பேசும் பழக்கம் உண்டு (இல்லனாலும் விட்ருவாங்களா  என்ன?). அப்படி பேசுகையில் என் மனைவியோ/மகளோ பேசும் விதத்தை வைத்தே அங்க வூட்ல என்ன விசேசம்னு ஓரளவுக்கு நான் கணிச்சுடுவேன்(ரொம்ப தான் புத்திசாலின்னு எனக்கு நினைப்பு).

அப்படி ஒரு நாள் பேசும் போதுதான் என் மனைவியிடம் சற்று சுரத்து கம்மியாக காணப்பட்டது. என்ன விஷயம் என்று கிண்டி கிளறின பிறகு தான் உண்மை வெளியே வந்தது. எங்கள் அப்பார்ட்மென்ட்  4 அடுக்குகளை கொண்டது. எங்கள் பிளாட் 3- வது  மாடியில் இருக்கிறது. வீட்டிற்குள் நுழையும் மெயின் டோர் ஆட்டோ லாக் சிஸ்டம் கொண்டது. அதாவது சாவியே இல்லாமல் வெளியிலிருந்து வேகமாக இழுத்து சாத்தினால் கதவு தானாக லாக் ஆகிவிடும்.

எங்கள் வீட்டு பாத்ரூம் கதவின் உள்  தாழ்ப்பாள் சற்று உயரத்தில்  இருந்ததால்  என் இளைய மகளுக்கு அது எட்டாது. ஆகவே  எப்போதும் அவள் என் மனைவியிடம் வெளியே தாழ்பாள் போடச் சொல்லி உள்ளே அவள் குளிப்பது தான் வழக்கம். அவளுக்கு அது விளையாட்டு கூட. நாங்களும்  அதை விளையாட்டாக எடுத்துக்கொண்டு அது  போலவே  அவளுக்காக  வெளியில்  லாக்  செய்வோம்.
 
இந்த மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில் தான் அன்று என் மூத்த மகள் வெளியே விளையாட போய் விட்டாள். என் மனைவி துணிகளை காய போட மேல் மாடிக்கு சென்று விட்டார். பாத்ரூம் உள்ளே என் சின்ன மகள் குளித்துக்கொண்டிருக்கிறாள், கதவு வெளியில் தாழிட்டபடி.

என் மனைவி மாடிக்கு சென்ற சிறுது நேரத்தில் பலத்த காற்றொன்று அடிக்க, மெயின் டோர்  ஆட்டோ லாக் ஆகிவிட்டது. திரும்பி வந்த என் மனைவி உள்ளே செல்ல முடியவில்லை. குளித்துக் கொண்டிருந்த என் இளைய மகள் வெளியே வர முடியவில்லை.

பாத்ரூம் பக்கத்திலேயே ots(over to sky)இருப்பதால் மேல் வீட்டு பாத்ரூம் அருகில் இருந்து சத்தமாக என் மகளிடம் பயப்படாதே, அழுகாதே அம்மா சீக்கிரம் கதவை திறந்து விடுகிறேன் என என்  மனைவி கூவிக் (அழுது) கொண்டு இருக்கும் போதே பக்கத்தில் உள்ளவர்கள் அங்குள்ள ஒரு யலக்ட்ரிசியனை அழைத்து வந்து கதவை திறக்கும் வழியை தேடினார்கள். 

பிறகு அங்கிருந்த ஒருவரின் ஆலோசனைப்படி, மேல் மாடியில் உள்ள பிளாட்டில் இருந்து ஒரு கயிறு மூலம்  எங்கள் வீட்டின் பால்கனி அருகே யலக்ட்ரிசியனை இறங்க (தொங்க) செய்து அங்கிருந்தபடியே பால்கனி கிரில் டோர் பூட்டை  அறுத்து அதன்  மூலம்  எங்கள் ஹாலுக்குள் செல்ல முடிவானது (எங்கள் வீட்டின் ஹாலுக்கும் பால்கனிக்கும் இடையில் பிரெஞ்சு  டோர் தான். நல்ல  வேலை  அதை அன்று  லாக்  செய்யவில்லை. இல்லை என்றால்  பிரெஞ்சு  டோரின் பூட்டையோ/க்ளாசையோ அன்று உடைக்கவேண்டி இருந்திருக்கும்).

அதன்படியே அவரும் கயிற்றில் தொங்கியபடியே மிகவும்  கஷ்ட்டப்பட்டு பால்கனி கிரில் டோர் பூட்டை அறுத்து பிறகு அதன் மூலம் ஹாலுக்குள் நுழைந்து என் மகளுக்கு பாத்ரூம் கதவை திறந்து  விட பிறகுதான் என்  மகள்  வெளியே  வர முடிந்தது. பிறகு உள்ளிருந்தபடி மெயின்  டோர் லாக்கையும் ரிலீஸ் செய்து  கதவை திறந்து விட்டார்.

அதிலிருந்து மரியாதையா ஒரு கீயை எப்போதும் பக்கத்து வீட்டில் கொடுத்து வைத்துள்ளோம். பின்னால் தான் தெரியவந்தது இது எங்கள் வீட்டில் மட்டுமில்லை இன்னும் சில பிளாட்களிலும் இது போல் முன்பு நடந்துள்ளது என்று.

ஆகவே நண்பர்களே, எனக்கு தெரிந்து இந்த ஆட்டோ லாக்கினால் ஒன்றும் பெரிய பயனில்லை; சாவி போடாமல் பூட்டை பூட்டுவதை தவிர. ஆனால் சாவி உள்ளே மாட்டிக்கொண்டால் பின்னர் பெரும்பாடுதான். அனுபவத்த சொல்லியாச்சு. மத்தபடி நீங்களே முடிவு பண்ணிக்குங்க. ஆட்டோ  லாக் வேணுமா வேணாமானு.

நல்ல பதிவுனா நீங்க எப்பவும் வோட்ட போட்டுடுவிங்க. அப்ப இதுக்கும் அப்படியே போட்டுடுங்க.

* மேலே உள்ள தலைப்பு சில தினங்களுக்கு முன் செய்தியாக வந்தது.
share on:facebook

Thursday, September 24, 2009



Economy class = மாட்டு வண்டி



அமெரிக்காவுல உள்ளவனெல்லாம் பணக்காரனும் இல்ல... ஆப்ரிகாவுல இருக்கிறவெனல்லாம் ஏழையும் இல்லை...

இது நிறைய பேருக்கு தெரிவது இல்லை. இல்லைனா நம்ம மத்திய இணை அமைச்சர் சசி தாரூரின் "மாட்டு வண்டி" பேச்சிக்கு இவ்வளவு விமர்சனகள் வந்திருக்காதுனு என் தனிப்பட்ட அபிப்பிராயம்.

நானெலாம் ஒரு காலத்தில் மாட்டுவண்டியில் போனவன்தாங்க. ஏதோ அப்படி இப்படின்னு படிச்துனால பின்னால டிரைன்ல போற அளவுக்கு முன்னேறி, பல நாள் உக்காந்துகிட்டே (துண்டு போட்டு புடிச்சு இடத்துலதான்) மெட்ராஸ் மும்பைனு போன அனுபவமும் இருக்குங்க.

இப்படி வானத்துல மட்டுமே ப்லைடையும் ஹெலிகாப்டரையும் அண்ணாந்து பார்த்துகிட்டு இருந்தவனுக்கும் அடிச்துங்க ஒரு யோகம். அதாங்க IT கம்பனியில வேலை.

அதுக்கப்புறம் நிறைய தடவ நானும் பிளைடுல பறந்துருக்கங்க (economy class-ல தான்). எத்தனவாட்டி எத பண்ணாலும் அந்த மொத அனுபவம் இருக்கே .. அப்பப்பா.. (நீங்க எதையாவுது நினைச்சுகிட்டா நான் பொறுப்பில்லைங்கோ...)

அப்படிதாங்க என் மொதல் பிளைட் அனுபவம். அம்மா, அப்பா, மாமான்னு ஒரு பெரிய கூட்டமே நம்மள வழி அனுப்ப வந்திருந்தாங்க. நானும் ஏதோ சாதிக்கவே பிறந்தவன் மாதிரி எல்லாருக்கும் TATA, BYE, BYE சொல்லிட்டு உள்ள போனேங்க. எல்லா சோதனைகளையும் முடித்து சற்று காத்திருப்புக்குப்பின் ஒரு வழியா பிளைட்ல வலது கால எடுத்து வச்சப்போ என்னைய நானே எண்ணி பெருமைபட்டுக்கொண்டேன். ஆகா நம்மளும் ஏரோப்பிலேன் ஏறிட்டம்லனு.




எல்லாம் நல்லாதாங்க இருந்துச்சு ப்ளைட் உள்ளார போற வரைக்கும்.


அம்மணிகள் சொன்ன வணக்கத்துக்கு எல்லாம் பதில் வணக்கம் சொல்லிவிட்டு உள்ள பார்த்தா! அட அட இதுவல்லவோ ஏரோப்ளேன், இப்படி சோபா மாதிரி சீட்டுல உக்காந்து போன அமெரிக்க என்ன அன்டார்டிகாவுகே போகலாம்முனு என்னோட சீட்ட தேடினா அந்த வரிசை வரவேயில்ல. திடீர்னு ஸ்க்ரீன் ஒன்னு நம்ம மறச்சது.

திரு.. திருன்னு... முழிச்சிக்கிட்டு நின்னத பார்த்து Excuse me ... அப்படின்னு ஒரு airhostess கூப்பிட்டு May I help you அப்படின்னுச்சு. அப்பாடான்னு என்னுடைய டிக்கெட்டை காண்பித்து எங்க இருக்குனு கேட்டேன். திரையை விலகிவிட்டு உள்ளே போகும்படி கூறினார். என்னடாது train-ல மாதிரி உள்ளே கூபே ஏதும் இருக்குதோன்னு ஆசையா உள்ளே நுழைஞ்சா... என்னமோ கவுண்டர் கட்டி வுட்ட மாதிரி வரிசையா சீட்டுங்க தெரிஞ்சது. அட நம்ம பல்லவன்ல கூட ரெண்டு வரிசைக்கு நடுவுல நல்ல இடைவெளி இருக்கும்க. ஆனா இங்க என்னடானா ஒரு ஆளு கொஞ்சம் கணமா இருந்தா நேரா நடக்க முடியாதுங்க. அவ்வளவு சின்ன பாதை.

சரின்னு ஒருவழியா என்னோட சீட்ட கண்டுபுடிச்சு உக்கார போனா அது மூணு சீட்டுக்கு நடுவுலையா இருக்கணும். சன்னல் பக்கம் உட்கார்ந்து இருந்தவரு எப்படி உள்ள போயிருப்பாருனு (அவ்வளவு குண்டு) நினைச்சுகிட்டு இருக்கும் போதே முதல் சீட்ல இருந்த பொண்ணு (ஹிஹி...பொண்ணு) எழுந்து எனக்கு வழி விட்டது. தேங்க்ஸ் சொல்லிவிட்டு ஒரு வழியா என்னை சரிபடித்திக்கிட்டு உக்கார்ந்தேன்.

அப்பாடி... இந்த ticketing, immigiration, customs எல்லாம் முடித்து வருவதற்குள் தாவு தீர்ந்துடிச்சு. இந்த எகனாமி கிளாஸ் அவ்ளோ கேவலமா என்ன? நாமல்லாம் கால்கடுக்க கியூல நின்னா இந்த first class மக்கள் மட்டும் ஜம்முனு நிக்காம போய்டே இருக்கானுக...

கொஞ்சம் தண்ணி குடிக்கணும் போல இருந்தது. எதிர்பட்ட airhostess-கிட்ட கொஞ்சம் தண்ணி கேட்டேன். சிறிது (10 நிமிஷம்...) கழித்து தம்மாதுண்டு கப்ல கொண்டு வந்து கொடுத்துச்சு. அது தொண்டைய கூட நனைக்கல. மடக்கு மடகுன்னு ரெண்டு வாய்ல குடிச்சுட்டு One more cup please-னு திரும்பவும் கேட்டா அது என்னமோ என்னைய வித்யாசமா பாத்துச்சு (பாரின்ல ஒரு கப் ட்ரிங்க்ஸ்ச ஒரு மணி நேரம் குடிபானுகனு என் நண்பன் சொன்னது இப்பதான் ஞாபகத்துக்கு வந்துச்சு).

ஒரு வழியா flight கிளம்புவதாக அறிவிப்பு வர ஊர்ல உள்ள எல்லா சாமியையும் வேண்டிக்குட்டு கண்ணை மூடினேன். அப்பா! என்ன ஒரு வேகம். அது கிளம்பின வேகத்துல எனக்கு அடிவயிறு கலங்கிடுச்சு. மேலேர்ந்து பார்த்தால் அட நம்ம சென்னை கூட ரொம்ப அழகா தெரியுதுங்க! அதுவும் நம்ம கடற்கரை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. Flight இப்போ மேக மூட்டத்தினூடே செல்வதை என்னால் காண முடிந்தது.

அப்போதானா எனக்கு ...ச்சா வர வேண்டும். பக்கத்தில் உள்ள பெண்ணிடம் excuse me சொல்லிவிட்டு எழ எத்தனித்தேன். எங்கிருந்தோ வந்த பணிப்பெண் மேலே உள்ள பெல்ட் sign-ஐ கண்பித்து என்னை எழ கூடாது என சைகையாலேயே கூற எனக்கு எப்படி சொல்வதென்றே தெயரியவில்லை. என்னடாது நமக்கு வந்த சோதனை காலம்... ஓடுற டிரைன்லையே ..னுக்கு அடிச்ச நம்மை இப்ப இப்படி கொடுமை படுத்துராங்களேனு நொந்துகிட்டே மீண்டும் உக்கார்ந்தேன்.

ஒரு வழியா சிறிது நேரம் கழித்து பெல்ட் sign அணைய எழுந்திருச்சி அவசரமா toilet நோக்கி போனா அங்கன எனக்கு முன்ன ஒரு அஞ்சு பேர் லைன்ல நிக்குரானுங்க.


ஆத்திரத்த அடக்கினாலும் ..... அடக்க முடியுங்களா? ஒரு வழியா காத்திருந்து உள்ள போயி வெளியே வரத்துக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு எனக்கு. இனி ஊர் போய் சேரும்வரை பாத்ரூம் பக்கமே வரக்கூடாது ஒரு முடிவோட என் சீட்டுக்கு சென்று அமர்ந்தேன்.

சிறுது நேரத்தில் உணவு பரிமாறப்பட்டது. யப்பா சாமி ... அந்த துக்குநோண்டு எடத்துல முன்னாடி சாப்பாடு பிளேட்ட வச்சிக்குட்டு ஒன்னு ஒண்ணா எடுத்து எப்படித்தான் சாபிடறதோ... இதுல cheese-எ வெண்ணைன்னு எடுத்து சாதத்தில் கலந்ததும், bun-ஐ சாம்பாரில் நனைத்து சாப்பிட்டதும் தனி கதை. எப்படியோ ஒன்பது மணி நேர பயணம் முடிஞ்சு மீண்டும் ஏர்போர்ட் போய் சேர்ந்தபோது எனக்கு இந்த கேள்விகள் தான் எழுந்தது.

1. சசி தாரூர் economy class-அ cattle class-னு சொன்னது சரிதானோ?***
2. Economy கிளாஸ்-இல் வசதியா பயணம் செய்ய வாய்ப்பே இல்லையா?
3. First class இட வசதியை கொஞ்சம் குறைத்து economy class-இல் கொஞ்சம் கூடுதல் இட வசதியை ஏற்படுத்த கூடாதா?
4. இந்த பதிவ பார்த்தா சசி தாரூர் எனக்கு நன்றி சொல்வாரா?

***நான் வண்டிய தாங்க சொல்றேன் பயணிகள அல்ல.

என்னை பொறுத்தவரை நீண்ட தூர விமான பயணம் அதிலும் economy கிளாஸ்-இல் பயணம் செய்வது ரொம்ப கொடுமை. அதை மாட்டு வண்டியோடு ஒப்பிடுவது கூடவே கூடாது. மாட்டு வண்டி பயணம் என்பது ஒரு த்ரிலான சுகமான அனுபவம். அதை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும்.

ரொம்ப படுத்திட்டேனோ? மொதோ பதிவு. நல்லா இருந்தா வாழ்த்துங்கள் வளர்கிறேன். குற்றம் குறை இருந்தால் எடுத்து சொல்லுங்கள் திருத்திக்கிறேன்.  நன்றி. 

- ஆதிமனிதன்

share on:facebook