Sunday, February 27, 2011

அமெரிக்க தேவாலயத்தில் மறுமணம். அசத்திய இந்து நண்பர்.


சென்ற பதிவில்  நண்பர் ஒருவரின் கிறிஸ்துவ முறை திருமண ஆசை பற்றி  எழுதி இருந்தேன். அதன் தொடர்ச்சியாக இதோ அந்த திருமண நிகழ்வு பற்றிய  ஒரு பதிவு.  

நண்பரின் கிறிஸ்தவ திருமண அழைப்பிதழில் முக்கிய குறிப்பாக திருமண நிகழ்ச்சிக்கு வருகை தரும் ஆண்கள் மற்றும்  பெண்களுக்கான  Dress Attrire இவ்வாறு  குறிப்பிடப்பட்டிருந்தது. 'Men  with  black  suits' அண்ட் 'Women dressed in White. 

ஆம், பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் திருமணம் மற்றும் துக்க  நிகழ்சிகளில்  dressing sense/attire மிக முக்கியம். பெரும்பாலும் திருமணங்களில்  பெண்கள் வெள்ளை நிறத்திலும் துக்க நிகழ்சிகளில் எல்லோருமே கருப்பு நிறத்திலும் ஆடை  அணிவார்கள். அதிலும் கோட் சூட் தான் அணிவார்கள்.     

ஆனால் நம் கலாச்சாரப்படி பெண்கள் வெள்ளை நிற  ஆடை  உடுத்த தயங்கியதால் நண்பர் பின்பு  பெண்களுக்கு ரெட் கலர்  ஓகே என தெரிவித்தார்.  ஒரு வழியாக எல்லோரும் சர்ச்சுக்கு சென்று ஆவலுடன் காத்திருந்தோம் திருமண நிகழ்ச்சியை காண.

சரியான நேரத்திற்கு முதலில் ஒரு ஜோடி கை கோர்த்த படி சார்சினுள் நுழைந்தது. முதலில் வந்த ஜோடியில் ஆண் ராணுவ உடை அணிந்திருந்தார். பின் வரிசையாக மூன்று நான்கு ஜோடிகள் ஒருவருடன் ஒருவர் கை கோர்த்தபடி மெதுவாக நடந்து சர்ச்சின் மேடையில் ஏறி ஆண்கள் வலது புறமும் அவர்களின் ஜோடிகள் இடது புறமும் வரிசைப்படி நின்றனர். சொல்ல மறந்துவிட்டேன். நம் கல்யாண ஜோடி கடைசியாக Coat suit & bridal costume ல் சிரித்தபடி மெதுவாக மேடை ஏறியது.

வழக்கம் போல் அங்கிருந்த பாதிரியார் இருவருக்கும் திருமண உறுதி மொழி  எடுக்க செய்து அவர்கள் இருவரும் அந்த கணம் முதல் கணவன்  மனைவியாக அறிவிக்கப்பட்டனர். பின் திருமண ஜோடியை ஒருவருக்கொருவர்  முத்தம் கொடுத்துக்கொள்ள கேட்டுக்கொண்டார். நண்பர் என்ன நினைத்தாரோ  இங்கிலீஷ் ஸ்டைலில் முத்தம் கொடுக்காமல் பெயருக்கு கணத்தில்  ஒரு  முத்தமிட்டதுடன் நிறுத்திக்கொண்டார். இங்கு திருமண ஜோடிகள்  முத்தமிடுவது/விட்டுக்கொண்டேயிருப்பது  என்பது ஒரு சகஜமான நிகழ்வு.

பின் அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. அப்போது தான் எங்களுக்கு ஒரு செய்தி தெரிய வந்தது. அதாவது, மணப்பெண்ணுக்கு இம்மாதிரி ஒரு திருமண ஏற்பாடு செய்திருப்பதையே சொல்லாமல் நம் நண்பர் அழைத்து  வந்துள்ளார். எல்லாத்திலும் வித்யாசமானவராய் இருப்பார் போலும்.  விருந்துக்கு பின் நடை பெற்ற இன்னொரு நிகழ்ச்சியுடன் இந்த  பதிவை  நிறைவு செய்கிறேன். 

எல்லோரும் கிளம்பி போகும் முன், அணைத்து single man களும் ஒரு  இடத்திற்கு அழைக்கப்பட்டார்கள். அந்த கும்பலை நோக்கி ஒரு பெண்  அணிந்திருந்த socks ஐ தூக்கி வீசினார்கள். அதை யார் பிடிக்கிறார்களோ  அவர்களுக்கு அடுத்து திருமணம் நடக்கும் என்பது அவர்களின்  நம்பிக்கை.  அதே போல் single woman அனைவரையும் ஒரு இடத்திற்கு வர செய்து  அவர்களை நோக்கி ஒரு பூச்செண்டை (பெண்களுக்கு மட்டும்  பூச்செண்டு,  ஆண்களுக்கு நாற்றமடிக்கும் socks என்ன கொடுமை சரவணா இது?) தூக்கி  எறிந்தார்கள்.

இறுதியாக 'toast' நடக்கும் என எல்லோரும் எதிர்பார்த்தோம். ஆனால் நண்பர் அதற்க்கு ஏற்பாடு செய்யவில்லை போலும். 'Toast' என்பது, எல்லோரும்  வைன் அல்லது ஷாம்ப் பெய்ன் ஒரு சின்ன கிண்ணத்தில் ஏந்தி  திருமண  தம்பதிகளுக்காக ஒருவருக்கொருவர் சியர்ஸ் செய்து கொள்வது. பொதுவாக திருமண ஜோடியின் நெருங்கிய உறவினர் அல்லது நண்பர்கள் இந்த டோஸ்ட்டை செய்வார்கள். நண்பரின் திருமணத்தில் அவரின் பக்கத்து வீட்டு நண்பர் அவரின் அருமை பெருமைகளை எடுத்துக்கூறி சிம்பாலிக்காக ஒரு வைன் பாட்டிலில் ஸ்பூனால் அடித்து சத்தம் வர செய்து டோஸ்ட்  செய்தார். அதாவது வைன்/ஷாம்ப்பெய்ன் பரிமாறாமலேயே!   

அத்துடன் திருமண நிகழ்ச்சி நிறைவடைந்தது. எங்களுக்கு  அன்றைய  பொழுது இனிதே போனது. நண்பருக்கு எங்களது திருமண  வாழ்த்துக்களையும் இங்கே பதிவு செய்ய விருபுகிறேன்.  வாழ்த்துக்கள் நண்பரே.  

படம் நன்றி: http://www.engagements.ca/

share on:facebook

Saturday, February 26, 2011

காரைக்குடியில் கல்யாணம். கலிபோர்னியாவில் கொண்டாட்டம்.


கலப்பு மனம் கேள்விப்பட்டு இருக்கிறோம். வெவேறு ஜாதியையோ  மதத்தையோ சேர்ந்தவர்கள் திருமணம் புரிந்து கொண்டால் பொதுவாக 
மணமகன் எந்த ஜாதி மதமோ அந்த பிரிவுக்கு மணமகள் மாறிவிடுவார்.
சில நேரங்களில் மணமகன் பெண்ணின் பிரிவுக்கு மாறிவிடுவார். இன்னும்  சிலர் இரண்டு மதங்களையும் அவரவர் விருப்பம்  போல் தொடர்ந்து வழிபடுவர்.

ஆனால் என்னுடைய நண்பர் ஒருவர், தமிழகத்தை சேர்ந்தவர், காரைக்குடி அவருக்கு சொந்த ஊர். இந்தியாவிற்கு சென்று திருமணம் செய்து கொண்டு திரும்பி வந்தார். அடுத்த இரு வாரங்களில் எங்கள் எல்லோருக்கும் அவரிடம் இருந்து மீண்டும் ஒரு திருமண  அழைப்பிதல் இமெயிலில்  வந்தது. முதலில் குழம்பிப்போன நான் மீண்டும் ஒரு முறை  ஈமெயில்  சப்ஜெக்டை படித்தேன்.  "My (Re) wedding invitation" என இருந்தது. மீண்டும் குழம்பி  போனேன் என சொல்வதை  விட சற்று  அதிர்ந்து போனேன் என்றே சொல்லலாம்.

அதிர்ச்சிக்கு காரணம், தாங்கள் ஆசைப்படி கிறிஸ்த்தவ ஆலயத்தில் குறிப்பிட்ட நாளில் மீண்டும் மறுமணம் செய்து கொள்ள போவதாக  அழைப்பிதழில்  குறிப்பிடப்பட்டிருந்தது  தான். 

எனக்கு தெரிந்து நண்பர் ஒரு  இந்து. அவரின் பெயர் கூட முருக கடவுளின்
இன்னொரு பெயர். மணமகள் பெயர் ஈசனின் துணைவியின் பெயர். குழப்பம்  வராமல் என்ன செய்யும். நண்பரை  உடனே கூப்பிட்டு கேட்க ஒரு  மாதிரியாக  இருந்தது. மெதுவாக அடுத்த  நாள் என்ன பாஸ் ஆச்சர்யமாக இருக்கிறது.  முருக கடவுள் பெயரை வைத்திருக்கும் நீங்கள்  கிறிஸ்துவராக இருப்பீர்கள்  என நான்  நினைக்கவே இல்லை என ஆச்சர்யமாக கேட்டேன்.

அவரோ, யார் சொன்னது நான் கிறிஸ்டியன் என்று. நான் இந்துதான் என  கூறினார். ஒ, அப்ப உங்க  வைப் கிறிஸ்டியனா  என கேட்டேன். ஐயோ அவரும் கிறிஸ்டியன் இல்லை இந்துதான்.  உங்களுக்கு இப்ப என்ன  தெரியனும்  என என்னையே திருப்பி கேட்டார். உங்களுக்கு நான் ஏன் கிறிஸ்த்தவ  தேவாலயத்தில் மீண்டும் திருமணம் செய்து  கொள்கிறேன் என்று தானே தெரியனும்? சிறு வயதிலிருந்தே கிறிஸ்தவ பள்ளியில் படித்தேன், பல  நேரங்களில் கிறிஸ்தவ உதவி  மன்றங்களில் சேர்ந்து பணியாற்றி  இருக்கிறேன். அதனால் பல கிறிஸ்தவ நண்பர்கள் எனக்கு உண்டு.  அவர்களின் திருமணதிற்கு சர்ச்சுக்கு போய் போய்  எனக்கும் அந்த ஆசை  தொற்றிக்கொண்டது. அதாவது அவர்களைப்போல் கிறிஸ்தவ முறைப்படி  திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று.

இந்தியாவில்   திருமணம் முடிந்து இங்கு வந்த பிறகு எங்கள் வீட்டருகில் உள்ள சர்ச் நிர்வாகத்திடம் இது பற்றி அனுமதி கேட்டேன். அவர்களும்  சம்மதித்தார்கள். எனக்கு சந்தோசமாக இருக்கிறது. நான் விருப்ப பட்ட மாதிரி  கிருஸ்தவ முறைப்படி  திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று சந்தோசம் பொங்க கூறினார்.

ஹ்ம்ம். மனிதர்களுக்குள் தான் எத்தனை வகையான ஆசைகள். சிலர் வித்யாசமாக ஆசைப்படுவார்கள். ஆனால் அதை அவர்களால் செய்து  முடிக்க முடிகிறதா என்பது தான் முக்கியம். நானும் சில விசயங்களுக்கு  ஆசைப்படுவேன். ஆனால் பல நேரங்களில்  என்னுடைய shyness காரணமாக  அதை செய்து பார்க்க  முடியாமல் போய் விடும். இதே நண்பரின்  கிருஸ்தவ  கல்யாணத்திற்கு போவதற்கு கூட நான் வெக்கப்படுகிறேன். நண்பரோ  இங்கு வந்து அவர்களை போல் திருமணமே செய்து கொள்கிறார். காதல் மணம், கலப்பு மணம்  போல் இதை விருப்ப மணம் என கூறலாமா?

இதோடு இந்த பதிவை முடிக்கலாம் என்று தான் இருந்தேன்.  ஆனால் இன்று நண்பரின் கிருஸ்தவ திருமண நிகழ்ச்சிக்கு போய் வந்த பிறகு அதை பற்றியும் சொல்ல வேண்டும் போல் இருக்கிறது. ஏனெனில் திருமணத்திலும் ஒரு வித்யாசத்தை செய்துள்ளார் நண்பர். அதை நாளைக்கு சொல்கிறேனே...

படம் நன்றி: hubpages.com   

share on:facebook

Wednesday, February 23, 2011

ஐ. நா. சபை அவமானம் - எல்லை தாண்டினாரா S. M. கிருஷ்ணா?


"தமிழக மீனவர்கள் கடல் எல்லையை தாண்டுவதால் தான் சுடப்படுகிறார்கள். அவர்கள் பொறுப்புடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும் - S . M . கிருஷ்ணா"

கடந்த சில வாரங்களுக்கு முன் ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் ஆண்டுக்கூட்டத்தில் உரை ஆற்றிய நம் மத்திய வெளியுறவு அமைச்சர் S .M . கிருஷ்ணா சுமார் 15      நிமிடங்களுக்கும் மேலாக   போர்ச்சுகீஸ்  நாட்டு அமைச்சர்  உரையாற்றுவதர்க்காக தயாரிக்கப்பட்ட உரையை தன்னுடைய உரை என்று நினைத்துக்கொண்டு  தொடர்ந்து வாசித்துள்ளார்.

நல்ல வேலை அந்த உரையில் ஒரு வரி '...இந்த கூட்டத்தில் இரண்டு போர்ச்சுகீஸ் மொழி பேசும் நாடுகள் இருப்பது எனக்கு சந்தோசத்தை கொடுக்கிறது...என்று இருந்துருக்கிறது. ஆனால் நம் அமைச்சருக்கோ அதை வாசித்த பிறகும் கூட தன தவறு தெரியவில்லை. நல்ல வேலையாக இதை காதில் வாங்கிய இந்திய வெளியுறவு அதிகாரி ஒருவர் சுதாரித்துக்கொண்டு அமைச்சரின் காதில் கிசு கிசுக்க, உரையை வாசிப்பதை திரு. கிருஷ்ணா நிறுத்தியுள்ளார்.

இது பற்றி கேக்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும், இது ஒரு பெரிய தவறு இல்லை, எத்தனையோ பேப்பர்கள் என் மேஜையில் கிடந்தன. அதனால் தெரியாமல் போர்ச்சுகீஸ் நாட்டு அறிக்கையை எடுத்து படித்துவிட்டேன் என சர்வ சாதாரணமாக கூறியுள்ளார்.

ஐயா அமைச்சர் அவர்களே? கண்ணுக்கு எதிர்தார்ப்போல் கிடக்கும் பேப்பரை தனித்தனியாக உங்களால் அடையாளம் காண முடியவில்லை. வெறும் நீலமாக தண்ணீர் மட்டுமே தெரியும் நடுக்கடலில் இலங்கை இந்திய எல்லையை எப்படி எங்கள் பாமர மீனவர்கள் அடையாளம் காண்பார்கள்?

அப்படி எல்லை தெரியாமல் இலங்கை கடற்பகுதிக்கு போய்விட்டால் அது ராஜா துரோக குற்றமோ உங்களுக்கு? பாக்கிஸ்தானில் அமெரிக்க  தூதரகத்தில்  வெறும்  டெக்னீசனாக  பணியாற்றிய ஒரு அமெரிக்கர், தன்னிடம் திருட முயன்ற இருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் அவரை பாக்கிஸ்தான் போலிஸ் கைது செய்ததிர்க்காக, அவரும் ஒரு தூதரக ஊழியர் தான், அவரை கிரிமினல் வழக்கிலிருந்து விடுவித்து அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும்  என அமெரிக்க அதிபர் ஒபாமா போர்க்கொடி உயர்த்தியுள்ளார். ஆனால் நம் அமைச்சரோ இலங்கை இராணுவத்திடம் சுடுபட்டு இறக்கும் மீனவர்களின் மீதே குற்றமும் குறையும் காண்கிறார். இதற்க்கு எதற்கு ஒரு வெளியுறவு துறை? அதற்க்கு ஒரு அமைச்சர்? அதுவும் ஐ. நா. சபையில் அறிக்கையை மாற்றிப்படிக்க?

சென்ற வாரம் முழுவதும் அமெரிக்க வானொலி நிகழ்சிகளில் கிருஷ்ணாவின் சொதப்பலை தொவைத்து காயப்போட்டு விட்டார்கள். அவர்கள் அனைவரும் கேலி செய்தது நடந்த தவறை கூட அல்ல, அது ஒரு தவறே இல்லை என்று கிருஷ்ணா கூறியதைத்தான்.

என்னைப் பொறுத்தவரையில் வெறும் உரையையே படித்து பார்க்காமல், மேலே கிடந்தது எடுத்துப் படித்தேன் என கூறுபவர்  நாளை இரு  நாடுகளுக்கு  இடையே போடப்படும்  ஒப்பந்தங்களை சரி பார்ப்பார் என எப்படி நம்புவது? 

     
படம் நன்றி: techlondon.co.uk 

share on:facebook

Monday, February 21, 2011

ஆறு மாதத்தில் ஒரு மில்லியன் - அமெரிக்க குழந்தைகள் சாதனை...


நம்மூருக்கு சுற்றுலா வரும் பெரும்பாலான வெளிநாட்டு பயணிகள் பஸ்சிலோ, ட்ரைனிலோ செல்லும் போது பக்கத்தில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் எப்போது பார்த்தாலும் ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டே போவார்கள். அந்த அளவிற்கு அவர்களுக்கு புத்தகம் வாசிப்பு பழக்கம் உண்டு. புத்தகம் வாசிப்பு என்பது அவர்களுக்கு ஒரு addiction என்றே சொல்லலாம். 

புத்தம் வாசிப்பதில் பெரும்பாலும் நன்மைகளே உண்டு. அதனால் உடலுக்கோ, மனதுக்கோ கெடுதல் ஏதும் கிடையாது. அதற்கும் மேலாக மனதுக்கு நிம்மதியும், அமைதியும் கிடைக்கிறது.

நான் சென்னையில் இருந்த போது அடிக்கடி  ரயில்வே  முன்  பதிவு  அலுவலகம் செல்ல நேரிடும். நம் மக்களின் பொறுமை பற்றி தான் தெரியுமே. ஐந்து நிமிடம் வரிசை நகரவில்லை என்றால் போதும் உடனே கவுண்டரில்  வேலை செய்யும் ஆட்களின் குடும்பத்தை எல்லாம் இழுத்து வசை பாட
ஆரம்பித்து விடுவார்கள்.  நான் உள்ளே செல்லும் போதே ஒரு ஆனந்த விகடனையோ குமுதத்தையோ வாங்கி சென்று விடுவேன். வரிசையில் இணைத்த பிறகு வாசிக்க தொடங்கினால்  பின் கவுண்டர் நெருங்கும் வரை பக்கத்தில் என்ன நடக்கிறதென்றே எனக்கு தெரியாது. பொழுதும் போய்விடும். நம்மை விட்டு டென்சனும் போய்விடும்.


அமெரிக்கா போன்ற நாடுகளில் பணி இடங்களில் கூட மத்திய உணவு இடைவெளியின் போது ஒரு சிலர் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு வாசிக்க தொடங்கி விடுவார்கள். இதற்கு காரணம் அவர்கள் சிறு வயதாக இருக்கும் போதே புத்தகம் வசிப்பதை ஒரு வகையான பொழுது போக்காக எடுத்துக்கொண்டு வாசிக்க தொடங்குவது தான்.

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதில் அவர்களின் பள்ளி மற்றும் நூலகத்துறைக்கு பெரும் பங்கு உண்டு.

உதாரணத்திற்கு, அமெரிக்காவில் எந்த ஒரு மாகாணத்திற்கு ஒருவர் இடம் பெயர்ந்தாலும்  அங்கு சென்ற பின் செய்யத் தவறாத ஒன்று உண்டு என்றால் அது அங்குள்ள நூலகத்திற்கு சென்று தன்னையும் தன் குடும்ப உறுப்பினர்களையும் பதிந்து கொள்வதுதான்.

அதே போல் ஒவ்வொரு நூலகமும் வாசிப்பு பழக்கத்தை வளர்க்கும் விதமாக பள்ளி விடுமுறை நாட்களில் ரீடிங் லாக் என்று ஒரு அட்டையை கொடுத்து ஒவ்வொரு நாளும் குறைந்தது இவ்வளவு நேரம்
குழந்தைகள் படிக்க வேண்டும் என்றும் அப்படி படித்து முடிக்கும் குழந்தைகளுக்கு சிறிய சிறிய பரிசு பொருட்களை கொடுத்து ஊக்குவிக்கிறது. இதற்க்கென்றே குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் போட்டி போட்டுக்கொண்டு படிக்கும்.

அதுமட்டுமில்லாமல் நூலகத்திற்கு குழந்தைகளுடன் பெற்றோர்களும் சேர்ந்து சென்று   படிப்பார்கள். இவையெல்லாம் குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதுடன் நூலகம் செல்லும் பழக்கத்தையும் சிறு வயது முதல் ஏற்படுத்துகிறது.

என் மகளின் பள்ளியில் மில்லியன் வோர்ட்ஸ் கிளப் என்று ஒன்று உண்டு. அதாவது லாங்குவேஜ் பாடத்தின் ஒரு பகுதியாக நாவல்கள்/கதை புத்தகங்கள் வாசிக்க வேண்டும். அப்படி படிக்கும் போது 100 பக்கங்கள் படித்தால் தோரயமாக 4200 வார்த்தைகள் படித்ததாக
கணக்கு  வைத்துக்கொள்கிறார்கள். இப்படி அவர்கள் படித்துக்கொண்டே வரும்போது ஒரு ஒரு மில்லியன் வார்த்தைகள் படித்து விட்டால் அவர்கள் மில்லியன் வோர்ட்ஸ் கிளப்பில் உறுப்பினராகி விடுகிறார்கள். அதே போல் அடுத்து டூ மில்லியன் கிளப்பிலும் சேரலாம்.

பொதுவாக பெரும்பாலான ஹைஸ்கூல் மாணவர்கள் இம்மாதிரி மில்லியன்
வோர்ட்ஸ் கிளப்பிலோ அல்லது டூ மில்லியன் வோர்ட்ஸ் கிளப்பிலோ இரண்டு மூன்று ஆண்டுகளில் உறுப்பினறாகிவிடுவார்கள்.  இப்படிதான்
குழந்தைகளின் வாசிப்பு பழக்கத்தை அங்கு வளர்க்கிறார்கள்.  ஆறே மாதத்தில் என் மகள் கூட மில்லியன் வோர்ட்ஸ் கிளப்பில் இடம் பிடித்து விட்டாள். தற்போது டூ மில்லியன் கிளப்பில் சேர வேண்டும் என்று எப்போதும் புத்தகமும் கையுமாக அலைகிறாள்.

சிறுவயது முதலே புத்தகம் வாசிப்பு பழக்கம் எனக்கு உண்டு. அதற்காக நான் பெரிய இலக்கியவாதி என்றோ  கம்ப ராமாயணத்தை கரைத்துக் குடித்தவன் என்றோ நினைத்து விடாதீர்கள். என்னை பொறுத்தவரை அனைத்து வகையான புத்தகங்களையும் படிக்க பார்க்க வேண்டும். பின் நமக்கு எது பிடிக்கிறதோ அது மாதிரியான புத்தகங்களை தொடர்ந்து படிக்கலாம். சங்கராச்சாரி 'யார்'? முதல் அர்த்தமுள்ள இந்து மதம் வரை. குத்தூசி முதல் குமுதம் வரை என்னை பொறுத்த வரை எல்லாமே எனக்கு புத்தகம் தான்.

நான் சிறு வயதாக இருந்த போது அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் புத்தகம் வாங்க மாட்டார்கள். பக்கத்து வீட்டிற்க்கு குமுதம் வருகிறதோ இல்லையோ சனிக்கிழமை காலை நான் போய் அவர்கள் வீட்டின் கதவை தட்டி விடுவேன். அன்று ஆரம்பித்த வாசிப்பு பழக்கம் இன்று வரை என்னை தொடர்ந்து வருகிறது. அதில் ஒரு சந்தோசம் நிம்மதி எனக்கு.

பிள்ளைகள் பாட புத்தகம் வாசிப்பது தவிர பிற நல்ல புத்தகங்கள் கொடுத்து வாசிக்க கற்று கொடுங்கள். இன்று மேதைகளாக உள்ள பலரும் நல்ல  புத்தகங்களை வாசித்தவர்களே.


படம் நன்றி: potosearch.com   
தகவல் நன்றி: என் மகளுக்கு

share on:facebook

Friday, February 18, 2011

'Rajini - Entertainer of the decade' - ஒரு ரசிகனின் வாழ்த்தும் வினாவும்?


ரஜினி - இந்த ஒரு பெயருக்கு தான் என்ன ஒரு வசீகரம், புகழ், பெருமை. இன்று உள்ள இளைய சினிமா ரசிகர்களுக்கு விஜய், சூர்யா, அஜீத், கார்த்திக், விசால், தனுஷ் என்று பல நட்சத்திரங்கள் இருகிறார்கள். ஆனால் நாங்கள் சினிமா பார்க்க தொடங்கிய காலத்தில் எங்களுக்கு ரஜினி கமலை தவிர வேறு யாரும் பெரிய நடிகர்களாக தெரியவில்லை.  

அப்படிப்பட்ட ரஜினிக்கு தான் சமீபத்தில் NDTV - Entertainer of  the decade என்ற மிக பெரிய விருதை தந்து கவுரவித்து இருக்கிறது. 
பொதுவாகவே வட இந்திய சினிமா உலகம் தான் இன்றளவும் இந்திய சினிமாவின் முகமாக இந்தியா முழுமையும் வெளி நாடுகளிலும் 
இருந்து வருகிறது. என்ன தான் தென் இந்திய படங்கள் தரமாகவும் பிரமாண்டமாகவும் எடுத்தாலும்  அது அவர்களிடம் பேசப் படுவதில்லை. இது இந்தியா தாண்டி வெளி நாட்டிற்கும் பொருந்தும்.

அந்த வகையில், வட இந்திய தொலைக்காட்சி ஒன்று எந்திரனை பாராட்டியும், ரஜினியை NDTV - Entertainer of  the decade என்று கவுரவித்தும் பாராட்டி பட்டம் தந்தது ஒரு அறிய நிகழ்வே. இதில் வழக்கம் போலவே ரஜினி எளிமை காட்டியிருந்தாலும் வழக்கத்திற்கு மாறாக சம்மந்தம் சமந்தமில்லாமல் பேசாமல் அமைதியாக இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. 

பிரணாய் ராய் ரஜினியை விழா மேடைக்கு வரவேற்றபோது 'தன்னடக்கத்தின் உருவம், தாராள குணம் படைத்தவர், இமாலய வெற்றிக்கு சொந்தக்காரர் என்றும், 'ஒரு நல்ல உள்ளம் படைத்த  மனிதாபிமானி என்றும் வரவேற்று பேசுகையில், 2010 இல் ஒரு திரை படம் காலை 4 மணிக்கு திரையிடப்பட்டு அது வரிசையாக அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது ஒன்றே போதும் அதன் 
வெற்றியையும் அவரின் புகழையும் பறைசாற்ற என்ற போது அரங்கமே கை தட்டி ஆராதித்தது.  

ஆனால் நிகழ்ச்சியின் போது பிரணாய் ராய் 'உங்கள் படங்களில் மிக பெரிய படைப்பாக எதை கருதுகிறீர்கள்' என ரஜினியிடம் கேட்டதற்கு, 'I hope so far ROBO is the best' என கூறியதை தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

ஒரு காலத்தில் ரஜினி படமென்றால் பெண்கள் பார்க்க போக மாட்டார்கள். குழந்தைகளையும் படம் பார்க்க அனுப்ப மாட்டார்கள். அதே ரஜினி, ஆறிலிருந்து அறுபது வரை, ஸ்ரீ ராகவேந்திரர், கை கொடுக்கும் கை என சிறந்த படங்களை தந்து தானும் ஒரு சிறந்த நடிகர் என்று நிருபித்த காரணத்தினாலும், தன்னுடைய வசீகரத்தாலும் தான் இன்றும் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் அவ்வாறான அவரின் சிறந்த படைப்புகளையெல்லாம் விட்டு விட்டு எந்திரனை தன் சிறந்த படைப்பாக கூறியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.   

பரட்டைக்கு முன், அலெக்ஸ் பாண்டியனுக்கு முன், பில்லா பாட்சாவிற்கு முன் எங்களுக்கு ரோபோவும் சிட்டியும் ஒன்றுமே இல்லை. அது காகிதத்தில் செய்த ஒரு பிரமாண்ட டைடானிக். அவ்வளவுதான். 

அதே போல் மேடை ஏறி ரஜினிக்கு வாழ்த்து கூற வந்தவர்கள் எல்லாம் கத்ரினா கைப்பும், த்ரிக்சா போன்றவர்கள் தான் (ப. சிதம்பரம் தவிர்த்து). ஏன் பிரணாய் சார் உங்களுக்கு வேறு யாரும் கிடைக்கலையா, இல்லை தமிழகத்திலிருந்து வரும் கலைஞனுக்கு இது போதும் என நினைத்து விட்டீர்களா?     

அதே போல் கடைசியாக, தனக்கு கிடைத்த பேர் புகழ் எல்லாவற்றுக்கும் காரணம் என்னை இயக்கிய இயக்குனர்கள், படமெடுத்த தயாரிப்பாளர்கள் அவர்களை இயக்கிய அந்த ஆண்டவன் என எல்லோரையும் கூறிவிட்டு எங்களை மறந்து போனாயே தலைவா? இது உனக்கே நியாயமா? சரி அடுத்த படம் ரிலீஸ் ஆகும்போது எப்படி இருந்தாலும் எங்களை நாபகம் வரும். அப்போ சந்தோசப் பட்டுக்கொள்கிறோம். ஆமா எப்போ அடுத்த படம் தலைவா? 



share on:facebook

Thursday, February 17, 2011

கலைஞர் டி. வி. ஆபீசில் சி. பி. ஐ. அதிரடி ரெய்டு. விடிய விடிய சோதனை.


தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து  இருக்க முடியாது. அதே நேரத்தில் ஒரு முதல்வரின் குடும்பத்தோடு சம்பத்தப்பட்ட நிறுவனத்தில் பண 
பரிவர்த்தனை மற்றும் நாடே பேசப்பட்ட ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுடன் 
தொடர்பு படுத்தி சி. பி. ஐ. ரெய்டு நடத்துகிறதென்றால் நமக்கு நாமே கிள்ளிப் 
பார்த்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.

அதுவும் மத்திய அரசில் கூட்டணி பொறுப்பு வகிக்கிற ஒரு கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள அந் நிறுவனத்தின் அலுவலகத்தில் விடிய விடிய ரெய்டு. என்னால் நம்ப முடியவில்லை. நாம் இருப்பது இந்தியாவில் தானா?

நள்ளிரவு ஆரம்பித்த சி. பி. ஐ. ரெய்டு காலை ஐந்து மணி வரை தொடர்ந்ததாகவும், பத்துக்கும் மேற்ப்பட்ட சி. பி. ஐ. அதிகாரிகள் ஆவன சோதனையில் ஈடுப்பட்டதாகவும் செய்திகள்
தெரிவிக்கின்றன. அதே போல் கலைஞர் டி. வி.யின் நிர்வாக இயக்குனர் திரு. சரத் குமாரின் இல்லத்திலும் ரெய்டு நடந்ததாக தெரிகிறது.       

சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் கலைஞர் டி. வி. நிர்வாகத்தில் கலந்துள்ளதாக சி. பி. ஐ. சந்தேகிக்கிறது.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள கலைஞர் டி. வி. நிர்வாகம், எங்களிடம் எல்லா கணக்கு வழக்குகளும் முறையாக உள்ளது. நாங்கள் தவறு ஏதும் செய்யவில்லை என தெரிவித்துள்ளது.

இதே போல் போபோர்ஸ், காமன் வெல்த் கேம்ஸ், பிறந்தநாள்  அன்பளிப்பாக பெறப்பட்ட வெளிநாட்டு டாலர்கள் என  எந்த ஊழல் நடந்தாலும் முதலில் அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் ரெய்டு நடத்தி கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரையும் விசாரிக்க வேண்டும்.
 
கடைசியில் இந்த சோதனையை தேர்தலுக்கு அதிக தொகுதிகள் கேட்டு பெற பயன்படுத்தும் ஆயுதமாக ஆக்கி விடாமல் இருந்தால் சரி. அரசியலில் எதுவும் நடக்கலாம். அங்கு நிரந்தர நண்பர்களும் இல்லை, பகைவர்களும் இல்லை. கவுண்டமணி பாணியில் சொன்னால், "அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா".
 
சரி, சரி, நீங்க வர தேர்தலில யாருக்கு வேணா வோட்டு  போடுங்க. இப்ப இந்த சூடான நியூசுக்கு உங்க வோட்ட எனக்கு போட்டுடுங்க...



share on:facebook

Tuesday, February 15, 2011

என் அருகில் நீ இருந்தால்? - ஊனத்தை ஊனமாக்கிய நடன ஜோடிகள்.



இருபது முப்பது பேர் புடைசூழ மூன்று நிமிட பாடலை முப்பது நாட்கள் ஷூட்டிங் செய்து, ஒவ்வொரு பிட்டாக அதை சேர்த்து காண்பிக்கும் போது, இவை அனைத்தும் நம் உள் மனதுக்கு தெரிந்தாலும் கூட அதை திரையில் காணும்போது நம்மையும் அறியாமல் கை தட்டியோ விசில் அடித்தோ அதை ஆராவாரம் செய்கிறோம்.

இங்கே பாருங்கள், எனக்கு நீ துணை, உனக்கு நான் துணை என, ஒரு கால் இல்லாதவர் ஒரு கை இல்லாதவரின் துணை கொண்டு தொடர்ச்சியாக சாகச நடனம் புரிவதை. இதை பார்த்து ரசித்து கை தட்டுபவர்களின் முகத்தில் கூட ஒரு வித இறுக்கம் இருப்பதை காண முடிகிறது. ஹ்ம்ம்...நாமலாம் எல்லாம் இருந்தால் கூட?



நன்றி : youtube 

share on:facebook

Saturday, February 12, 2011

வாலண்டைன்ஸ் டே - விளங்காத பய புள்ளைங்க


வாலண்டைன்ஸ் டே - இதை காதலர் தினம் என கூறுவதையே என்னால்  ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒருவர் அடுத்தவர் மீது தாம் வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டும் தினமாகவே மேலை நாடுகள் பலவற்றிலும்  கொண்டாடப்படுகிறது.

வாலண்டைன்ஸ் டே ஏன், எப்படி உருவானது என்பது ஓரளவிற்கு எல்லோருக்கும் தெரியும். இரு காதலர்களுக்காக பாதிரியார் ஒருவர் உதவப் போய் பிறகு அந்த சர்ச்சையில் பாதிரியார் கொல்லப்பட, அவரின் நினைவாகவும் காதலின் புனிதத்தை போற்றும் விதமாகவுமே இது கொண்டாடப்பட வேண்டும். அதுவும் இம்மாதிரியான கொண்டாட்டங்கள் வளர்ந்த மேலை நாடுகளில் சகஜமாக எடுத்துக் கொல்லப்பட்ட ஒன்றாகும்.

ஆனால் அதை எப்படி இந்தியாவில் எடுத்துக்கொண்டு கொண்டாடுகிறார்கள் என்பதில் தான் பிரச்சனையே.  கேரளத்தில் பாவாடை போன்ற ஒரு முண்டும் மேலே ரவிக்கையும் அதன் மேல் சில சமயம் மட்டும் துண்டு போன்ற ஒன்றை போட்டுக்கொள்வது அங்குள்ள கலாச்சாரம். அதே மாதிரி தமிழ் நாட்டு பெண்கள் உலா வந்தால் நம்மால் ஏற்று கொள்ள முடியுமா?

அது போல் தான் இந்தியாவில் நாம் வாலண்டைன்ஸ் டே கொண்டாட நினைப்பதும். மேலை நாடுகளில் வாலண்டைன்ஸ் டே வெறும் காதலர் தின கொண்டாட்டமாக மட்டுமே பார்ப்பதில்லை. உண்மையில் சொல்லப்போனால் அவர்களுக்கு காதலை சொல்ல
வாலண்டைன்ஸ் டே வரை காத்திருக்க வேண்டியதில்லை. அங்கு பள்ளி கல்லூரியில் மாணவ மாணவிகள் தங்களுக்கு
மிகவும் பிடித்த சக பள்ளி தோழர்களுக்கோ தோழிகளுக்கோ சாக்லேட்  கொடுத்தோ வாழ்த்து
அட்டைகள் கொடுத்தோ வாலண்டைன்ஸ் டேயை கொண்டாடுகிறார்கள். அது மட்டுமில்லாமல் கணவன் மணைவி தங்கள் அன்பை பிறருக்கு வெளி படுத்தவும் கொண்டாடுகிறார்கள். சிறுவர் சிறுமியர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு தங்களின் அன்பை வெளிப்படுத்த அவர்களுக்கு சாக்லேட் அல்லது வாழ்த்து அட்டைகள் கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்த வாலண்டைன்ஸ் டேயை கொண்டாடுகிறார்கள். இவர்களோடு சேர்ந்து காதலர்களும் அடக்கம். என் குழந்தை கூட ஒவ்வொரு வாலண்டைன்ஸ் டே அன்றும் ஒரு சாக்லேட் அல்லது வாழ்த்து அட்டை தானே தயாரித்து எனக்கு 'Dad, you are my valentine' என எனக்கு கொடுப்பாள்.

இதை விட்டு விட்டு வாலண்டைன்ஸ் டே கொண்டாடுகிறோம் என்று நம் வீட்டு பிள்ளைகள் கடலோரத்திலும் காபி ஷாப்பிலும் தங்கள் காதலர்களுடன் கொஞ்சி மகிழ்வதை எப்படி நம்மால் ஏற்று கொள்ள முடியும்? இதெல்லாம் நம் கலாசாரத்திற்கும் நம்மை சுற்றி உள்ள சமூக பண்பாட்டுக்கும் நிச்சயம் ஏற்புடையதாக இருக்காது. பள்ளியிலேயே பாய் பிரென்ட் கேர்ள் பிரென்ட் என்பது பழகிப்போன ஒன்றாக இருக்கும் கலாச்சாரத்திற்கு வேண்டுமானால் இது ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் நமக்கு? அதிலும் வாலண்டைன்ஸ் டே என்பதை நமக்கே உரித்தான மொழிபெயர்ப்பு வழக்கில் அதை காதலர் தினமாக ஆக்கி கேவலப்படுத்திவிட்டார்கள்.

சமீபத்தில் திருமணமான என் நண்பரின் தம்பி ஒருவர் மூன்று மாத பிசினஸ் விசாவில் அமெரிக்கா வந்து விட்டு இந்திய திரும்பியுள்ளார். அமெரிக்காவில் அவர் பார்த்த பழகிய பலதரப்பட்ட மனிதர்கள் அவரிடம் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டன. இந்தியா திரும்பிய பின்னர் எல்லோரையும் பார்த்து  அவர் ஹல்லோ சொல்வதும் சிரிப்பதும் மிக பெரிய பிரச்சனையாகி போய்விட்டது. தன் வீட்டுக்கு வரும் பால்காரரிடம்  திடீரென்று ஒரு நாள் காலை 'என்னப்பா சவுக்கியமா இருக்கியா? வீட்ல எல்லோரும் சவுக்கியமா? என கேக்க போக அவர், 'ஏன் சார் இந்த மாசம் பால் காசு கொடுக்க லேட் ஆகுமா? என கேட்டிருக்கிறார்.

அதே போல் வீட்டு வேளை செய்யும் அம்மாளிடம் நலம் விசாரிக்க அவர், 'எண்ணா சார்? அம்மா ஏதும் வெளி ஊருக்கு போயிருக்குதா? என ஒரு மாதிரியாக கேட்டிருக்கிறார். இதையெல்லாம் கேள்விப்பட்ட என் நண்பர் தன் தம்பியை கூப்பிட்டு இதெல்லாம் அமெரிக்காவில் தான் சரிப்படும். இங்கே நீ போறவன் வரவனை எல்லாம் பார்த்து சிரித்தால் உன்னை அப்புறம் பயித்தியகாரனாக ஆக்கிவிடுவார்கள் என கூயுள்ளார்.

அமெரிக்காவில் என்னுடைய மானேஜருக்கு ஒரே கவலை, அவரின் மகனுக்கு ஒரு நல்ல கேர்ள் பிரண்டு கிடைக்கவில்லை என்று. மக்களே நம்புங்கள். அவர் கூறியது இதுதான். அவன் சுத்த வேஸ்ட்டு. அவனோடு படிக்கும் எல்லா பையன்களுக்கும் கேர்ள் பிரண்டு இருக்கிறார்கள். இவனுக்கு மட்டும் ஒன்றும் அமைய மாட்டேன்கிறது' என்று புலம்பினார். காதலும் காதலர்களும் அங்கு சகஜம் என்பதைவிட அது தான் அவர்கள் தேர்ந்தெடுத்தத் பாதை. எந்த பெற்றோரும்  அங்கு தங்கள் பிள்ளைகளுக்கு வரன் பார்ப்பதில்லை நம்மைப்போல்.

ஆகவே வாலண்டைன்ஸ் டே கொண்டாடுங்கள் - இந்தியாவில். காதலர்கள் தவிர்த்து.


share on:facebook

Monday, February 7, 2011

பீனட்சும் (கடலையும்) பக்கத்து சீட் பெண்ணும்...



இது நடந்தது சில வருடங்களுக்கு முன்...

லாஸ் ஏஞ்சலஸ்சிலிருந்து  சிகாகோவிற்கு ஒரு அவசர வேலையாக   விமானத்தில் சென்றிருந்தேன். அப்போதுதான் உள்நாட்டு விமான சேவையில் இலவச மீல்ஸ் வழங்கும் சேவையை நிறுத்தி இருந்தார்கள். காசு கொடுத்தால் மட்டுமே கேட்டது கிடைக்கும். அப்படியில்லை என்றால் அதிகபட்சம் சிறு கடலை பாக்கெட்டும் ஒரு சோடாவும்/ஜூசும் மட்டுமே இலவசமாக கொடுப்பார்கள்.  அப்படியான ஒரு சூழ்நிலையில்தான் என் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த அம்மணியுடன் எனக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது. இப்போது அதை நினைத்தாலும் எனக்கு சற்று வெக்கமாகவே இருக்கிறது. நாம் அப்படி செய்திருக்க கூடாதோ என்று. சரி சரி, ரொம்ப கற்பனை பண்ணிக்கிடாதீங்க. மேலே படிங்க...

விமானம் கிளம்பிய சிறிது நேரத்துக்கெல்லாம் வழக்கம் போல ஒருவர் வறண்ட சிரிப்பை வலுக்கட்டாயமாக வரவழைத்துக்கொண்டு எல்லோருக்கும் பீனட்சையும் (கடலை) சோடா/ஜூசையும் விநியோகித்துக் கொண்டே வந்தார்.  நானும் ஒரு பாக்கெட்டை வாங்கி  கொறிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் பயணக் களைப்பில் கண்கள் சொருக சற்று நேரம் கண் அயர்ந்தேன்.

அங்கு தான் தவறே ஏற்பட்டிருக்க வேண்டும். விமானம் குலுங்கியதில் திடும் என கண் முழித்த நான் சிகாகோ சென்றடைய இன்னும் சில மணி நேரம் இருப்பதை நினைத்து, நேரத்தை ஓட்ட என் கடலை பொட்டலத்தில் கை விட்டு இரண்டை எடுத்து என் வாயில் போட்டு அரைத்தேன்.  அதே சமயம் என் பக்கத்து சீட் பெண் என்னை பார்த்து சிநேகமாக ஒரு சிரிப்பை உதிர்த்தார். நானும் பதிலுக்கு ஒரு மாதிரியாக சிரித்து வைத்தேன். சிறிது நேரம் சென்றிருக்கும். பக்கத்து சீட் பெண் என் கடலை பாக்கெட்டில் கை விட்டு அவளும் இரண்டு கடலையை எடுத்து சாப்பிட்டார். சரி ரொம்ப பசியாக இருப்பார் போலும். மேலும் நம்முடனே பயணம் செய்கிறார். அதனால் உரிமை எடுத்துக்கொண்டார் போலும் என நானும் ஒரு நமட்டு சிரிப்பை உதிர்த்து வைத்தேன். ஹ்ம்ம். பெண் என்றால் நமக்கு தான் என்ன ஒரு தாராள குணம்.

சற்று நேரத்துக்கெல்லாம் மீண்டும் அப்பெண் என்னிடம் இருந்து ஒன்றிரண்டு கடலையை எடுத்து ஒவ்வொன்றாக தன் வாயில் போட்டு ரசித்து ருசித்து சாப்பிட ஆரம்பித்தார். எனக்கு தற்சமயம் சற்று கோபம் வந்தது. என்னதான் இருந்தாலும் ஒரு தடவை ஓசி எடுக்கலாம். அதற்காக அடுத்தவன் பொருளுக்கு அளவுக்கு அதிகமாக ஆசைபடலாமா? அதுவும் கேக்காமலே. சரி பெண்ணென்றால் பேயும் இறங்கும் என்பார்கள். நாம் இறங்காமலா?

அப்போதுதான் எனக்கு அந்த ஐடியா தோன்றியது. சரி, கடலையை வைத்தால் தானே அவர் எடுத்து எடுத்து சாப்பிடுகிறார். ஒரே வாயில் மீதமுள்ள எல்லாவற்றையும் நாம் உள்ளே தள்ளிவிட்டால்? நொடி கூட தாமதிக்காமல் கடலை பொட்டலத்தை எடுத்து கையில் கவுத்து மீதமிருந்த ஒன்றிரண்டு கடலைகளையும் ஒரே வாயில் உள்ளே தள்ளினேன்.

பிறகு  பக்கத்து சீட் பெண்ணை பார்த்து நக்கலாக ஒரு சிரிப்பு  சிரித்தேன். அவளோ சற்று ஆச்சர்யம் கலந்த அதே நேரத்தில் ஒரு சிநேகப் புன்னகையுடன் மீண்டும் என்னைப் பார்த்து சிரித்தாள். நம்மை பார்த்து என்ன இளிச்சவாயன் என நினைத்தாளா? என்று எகத்தாளமாக ஒரு பார்வை பார்த்துக்கொண்டே 'Excuse me' என்றவாறே அவளை தாண்டி டாய்லெட்   பக்கம் சென்றேன்.

சற்று நேரத்தில் திரும்பி என் இருக்கைக்கு வந்து அமர எத்தனிக்கையில்தான் அது என் கண்ணில் பட்டது. சடு சடு வென்று ஒவ்வொன்றாக எல்லாம் என் மூளைக்குள் சென்று உரைத்தது. அடச் சே, இப்படி நாம் நடந்துகொண்டோமே. இருந்தும் இப்பெண் நம்மை பார்த்து ஒவ்வொரு தடவையும் எவ்வளவு சிநேகமாக சிரித்தாள். என்னை நினைத்து நானே வெக்கப்பட்டுக்கொண்டேன். அதே நேரத்தில் அவளின் பெருந்தன்மையையும் பொறுமையையும் நினைத்து பொறமைப்பட்டேன். 

ஆம். அந்த நேரம் வரை என்னுடைய கடலை பொட்டலம் என நான் நினைத்துக்கொண்டிருந்தது உண்மையில் அவளின் பொட்டலம். என் கடலை பொட்டலம் நான் தூங்கி வழிந்த போது என்னை அறியாமல் நான் கீழே தள்ளி விட்டு உள்ளேன்.

உண்மையில் அப்பெண்ணின் கடலையைதான் நான் இதுவரை என்னுடையது என எண்ணி எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறேன். 'என்ன கொடுமை சரவணன் சார்' இது?

புடிச்சிருந்தா கடலை... 'சாரி'. அப்படியே உங்கள் வோட்டை போடுங்களேன்...நன்றி.


share on:facebook

Saturday, February 5, 2011

ஜப்பானில் ரஜினி: ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்


ஜப்பானில் ரஜினி: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என நாம் அறிந்ததே. ஆனால் இந்த அளவிற்கு ஜப்பான் போன்ற நாடுகளில் அவர் பிரபலமாகவும், அவருக்கு என்று ஒரு பெரிய ரசிகக்கூட்டம் இருப்பதும் ஆச்சர்யமாக உள்ளது. ஜப்பானில் நடந்த ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் ரஜினியை போல் ஒருவர் வேடமணிந்து ரஜினி பாடலை ஜப்பானிய மொழியில் பாடி ஆடி அசத்தியுள்ளார் பாருங்கள்.



கண்ணை நம்பாதே - லேசர் ஒளி காட்சிகள்: சமீபத்தில் இந்த லேசர் ஒளி காட்சியை நெட்டில் கண்டு ரசித்தேன். என்ன ஒரு கற்பனை, என்ன ஒரு தொழில்நுட்பம்.



மேலே உள்ள இரண்டுமே நெட்டில் பார்த்து ரசித்த(சுட்ட)து. நன்றி youtube.

அன்புடன்...


share on:facebook

Wednesday, February 2, 2011

தோணியும் தோட்டாக்களும்...



உலகில் பல வருடங்களாக தீர்வு காணப்படாமல் இருக்கும் இன பிரச்சனைகளில் ஒன்று இலங்கை தமிழர் பிரச்னை. நாம் விரும்பியோ விரும்பாமலோ ஒரு வழியாக கடந்த சில வருடங்களுக்கு அது ஒரு முடிவுக்கு வந்தது(போல் இருந்தது).

ஆனால் மழை விட்டும் தூவானம் விடாதது போல், தமிழக மீனவர் பிரச்சனை மட்டும் இன்னும் தீரவேயில்லை. இலங்கையில் தமிழர் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது, புலிகளுக்கும் மற்ற போராளிகளுக்கும் தமிழக மீனவர்கள் டீசல் கடத்துகிறார்கள், பொருட்கள் சப்பளை செய்கிறார்கள், புலிகளுக்கும் தமிழக மீனவர்களுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என பல காரணங்களை கூறிக்கொண்டு தமிழக மீனவர்களை குருவி சுடுவது போல் சுட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் தற்போது இலங்கையில் போரும் இல்லை போராளிகளும் இல்லை. இருந்தும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது மட்டும் நிற்கவில்லை. இதில் அதிகம் பாதிக்கப்படுவது சிறு மற்றும் ஏழை மீனவர்களே. பெரிய லாஞ்சர் மற்றும் விசை படகுகள் கூட இலங்கை ராணுவத்தினரிடம் சிக்குவதில்லை. ஆனால் சிறிய தோணிகளில் செல்லும் மீனவர்களே இலங்கை கடற்படையினரின் தோட்டாக்களுக்கு இரையாகிறார்கள்.

உலகில் ராணுவ பலத்தில் நான்காவது நிலையில் இருக்கும் இந்திய ராணுவமோ, கடற்படையோ சமாதானப்புறாக்களாக கைகட்டி எல்லவற்றையும் இன்னமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. அப்படி என்னதான் இலங்கையிடம் நமக்கு பயமோ தெரியவில்லை.

இதில் ஒவ்வொரு முறையும் மீனவர்கள் சுடப்படும் போது மாநில மற்றும் மத்திய அரசுகள் கடிதம் எழுதுவதும், கண்டனம் தெரிவிப்பதும் மட்டுமே தங்கள் கடமை என நிறுத்திக்கொள்கிறது. நமக்கெல்லாம் எதற்கு ஒரு கடற்படை? ஒரு ராணுவ மந்திரி அல்லது ஒரு வெளியுறவு அமைச்சர் என புரியவில்லை.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே அப்படி ஒன்றும் மிகப் பெரிய கடற் பகுதி இல்லை. ராமேஸ்வரத்திலிருந்து எட்டிப்பார்த்தால் இலங்கை தெரியும் என்பார்கள். அப்படிப்பட்ட ஒரு சிறிய பகுதியை, நம் நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்கும், நமக்கு உரிமையுள்ள கடற்பகுதியை தங்கள் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வக்கில்லை என்றால் நாம் அதற்காக வெக்கப்பட வேண்டும்.

தற்போது பிரதமரை சந்தித்த தமிழக முதல்வர் பிரதமருக்கு தமிழக மீனவர் பிரச்னை பற்றி அதிகம் தெரியாது. நான் தான் எடுத்து கூறியுள்ளேன் என்கிறார். ஹ்ம்ம். இவர்களை நம்பினால் என்னாவது.

எப்படியோ ஏதோ ஒரு வகையில் நம் மீனவர் பிரச்னை தீர்ந்தால் போதும். அந்த வகையில் ஆன்லைன் மூலமாக நம் நாட்டு அரசுக்கு தமிழக மீனவர் படுகொலையை தடுத்து நிறுத்த கோரிக்கை வைக்கும் வகையில் புண்ணியவான்கள் சிலர் முயற்சி எடுத்து உள்ளார்கள். நாமும் அதில் பங்கு பெறலாமே. கீழே உள்ள லின்க்கை சொடுக்கி இரண்டே விபரங்களை கொடுத்தால் போதும். கோரிக்கையின் எண்ணிக்கையில் ஒன்று கூடி விடும். பிளீஸ்...

தமிழக மீனவர்களை காக்க இங்கே சொடுக்கவும்...

பாடம் உதவி: freepoto.com

நன்றியுடன்....






share on:facebook