உஜ்ஜயினி : மத்திய பிரதேச மாநிலத்தில், அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பியூன் வீட்டில், லோக் ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய சோதனையில், 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள், அவருக்கு சொந்தமாக இருப்பதற்கான ஆவணங்கள் சிக்கின.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் பியூனாக பணிபுரிபவர் நரேந்திர தேஸ்முக், 53. இவரது வீட்டில், லோக் ஆயுக்தா அதிகாரிகளைக் கொண்ட 15 பேர் குழு, நேற்று முன்தினம் சோதனை நடத்துவதற்காக சென்றது. வீட்டில் இருந்தவர்கள், அவர்களை அனுமதிக்கவில்லை. நுழைவாயிலில் உள்ள கேட் பூட்டப்பட்டது.
அதிகாரிகள் உள்ளே நுழைந்து விடாமல் இருப்பதற்காக, தேஸ்முக்கின் வீட்டில் வளர்க்கப்படும் நாயும், கேட் அருகே நிறுத்தப்பட்டது. இதனால், 20 நிமிடங்களுக்கு மேல், அதிகாரிகள் வெளியில் நிற்க வேண்டியதாகி விட்டது. இந்த இடைப்பட்ட நேரத்தில், தேஸ்முக்கின் மனைவி, சில நகைகள், முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை பின்பக்க வழி மூலமாக, பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கொடுக்க முயற்சித்தார். வீட்டுக்குள் புகுந்த அதிகாரிகள், ஒவ்வொரு அறையாக சோதனையிட்டனர்.
அப்போது, ஆடம்பரமான விலை உயர்ந்த பொருட்கள் அங்கு இருந்ததை கண்டு ஆச்சர்யப்பட்டனர். நவீன வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடம்பர நாற்காலிகள், மேஜைகள், படுக்கைகள் ஆகியவை வீட்டில் இருந்தன. மேலும், தேஸ்முக்கிற்கு சொந்தமாக இரண்டு ஆடம்பர வீடுகள், ஒரு கோழிப் பண்ணை, கோழிக் கறிக்கடை, மகாராஷ்டிர மாநிலத்தில் ஐந்து ஏக்கர் நிலம், மும்பையில் உள்ள சொகுசு ஓட்டலில் பங்குதாரர், 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்கள், வங்கிகளில் 16 லட்சம் டிபாசிட் மற்றும் நகைகள் உட்பட 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள், இவருக்கு சொந்தமாக இருப்பதற்கான ஆவணங்கள் சிக்கின.
இதுகுறித்து லோக் ஆயுக்தா அதிகாரிகள் கூறுகையில், "தேஸ்முக் கடந்த 1980ல் பணிக்கு சேர்ந்தார். பதவி உயர்வுக்கு இவர் பெயர் சில முறை பரிந்துரைக்கப்பட்டது. ஆனாலும், ஊழல் புகார்கள் காரணமாக பதவி உயர்வு கிடைக்கவில்லை. இவர் வாங்கும் சம்பளம் மிகக் குறைவு. குறைவான சம்பளத்தை வைத்துக் கொண்டு, இந்தளவுக்கு சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்படும்' என்றனர்.
நன்றி: தினமலர் செய்தி.
share on:facebook