Showing posts with label சுய புராணம். Show all posts
Showing posts with label சுய புராணம். Show all posts

Tuesday, January 29, 2013

அமெரிக்க டி.வியும், அதனால் ஏற்பட்ட அவஸ்தைகளும்...


ஒரு காலத்தில் VCR, கேமரா போன்றவைகள் வெளிநாடுகளில் இருந்து அதிகம் எடுத்து/வாங்கி வரப்பட்ட பொருட்கள். தற்போது அதெல்லாம் இங்கு சர்வ சாதரணமாக கிடைப்பதால் பெரிய பெரிய டி.விக்கள்  மற்றும் லேட்டஸ்ட் மாடல் செல் போன்கள் தான் தற்போது அதிகமாக கொண்டு வருவதாக தெரிகிறது.

என்னை பொருத்தவரையில் அமெரிக்காவிலிருந்து (விலை குறைவாக இருந்தால் கூட) சில பொருட்கள் கொண்டு வருவதை தவிர்ப்பது நல்லது. அனுபவத்தில் தான் பேசுகிறேன். அதிலும் குறிப்பாக எலெக்ட்ரிக்கல் ஐட்டம்ஸ் எடுத்து வராமல் இருப்பதே சிறந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு நல்ல டீலில் கிடைத்ததே என்று ஒரு 40 இன்ச் சாம்சங் LED டி.வி. வாங்கினேன். அமெரிக்காவில் இருந்தவரை அதை நன்றாக பார்த்து என்ஜாய் செய்தோம். இந்தியாவிற்கு திரும்பி வரும்போது கையோடு டி.வியையும் கொண்டு வந்தோம். கடந்த ஆறு மாத காலமாக பிரிக்காமலே வைத்திருந்து சென்ற வாரம் தான் பாக்கிங்கில் இருந்து வெளியே எடுத்தோம்.

குழந்தைகள் அய்யா... இனி பெரிய டி.வியில் பார்க்கலாம் என சந்தோசமாக இருந்தார்கள். நானும் அப்படிதான் நினைத்தேன். அதன் பிறகு ஒவ்வொன்றாக ஆராயும் போது தான் அமெரிக்காவில் இருந்து கொண்டு வரும் டி.விக்களை இங்கு செட் செய்ய மேலும் என்னென்ன வாங்க வேண்டி இருக்கிறது என்று தெரிந்தது. அது மட்டுமா ஒவ்வொன்றின் விலையை கேட்டு, அது கிடைக்கும் இடம் தேடி அலைந்தது எல்லாம் தலையை சுற்றி பேசாமல் இங்கு வந்து ஒரு புது டி.வியை வாங்கி இருக்கலாமோ என என்னும்படி ஆயிற்று.

முதலில் அதற்கு ஸ்டெபிலைசர் வாங்க வேண்டும். 40 இன்ச் LED டி.விக்கென்றே V-Guard இல் விற்கிறார்கள். விலை அதிகம் இல்லை வெறும் 2000 சொச்சம் தான்! அடுத்ததாக 110V to 220/240V கன்வெர்ட்டர் வாங்கியாக வேண்டும். அது ஒரு ஆயிரம் ரூபாய்க்கும் மேல். சரி இதோடு விட்டால் போதும் என்று எல்லாவற்றையும் வாங்கி வந்து டி.வியை ஆன் செய்தால் ஒரே க்ரைன்ஸ்...அப்புறம் தான் நியாபகம் வந்தது அமெரிக்க டி.விக்கள் எல்லாம் NTSC format தான் சப்போர்ட் செய்யும் என்று. நம்மூரில் PAL சிஸ்டம். அப்புறம் என்ன? அதற்கு ஒரு கன்வெர்டர். இது தான் சற்று அல்ல மிகவும் விலை அதிகம். அதாவது சாதாரணமாக AV டைப் என்றால் ஆயிரத்து சொச்சம் ருபாய், அதுவே HDMI டைப் என்றால் நாலாயிரத்து சொச்சம். எல்லாம் செய்து அதை HD குவாலிட்டியில் பார்க்கவில்லை என்றால் எப்படி என்று அதற்க்கு ஒரு நாலாயிரம் செலவு. இந்த வீடியோ கன்வெர்டர் வேறு பல இடங்களில் கிடைக்கவே இல்லை.

ஒரு வழியாக எல்லாம் வாங்கி சேர்த்து டி.வி. தற்போது நன்றாக வேலை செய்கிறது. இதில் கூத்து என்னவென்றால் இது எல்லாம் டி.வியை வாங்கும் போதே தெரிந்த விஷயம் தான். புதிதாக வாங்கி ஒரு வருடத்திற்குள்ளாக அதை அங்கே விட்டு விட்டு வர மனமில்லாத காரணத்தால் இங்கு கொண்டு வரும்படியானது. எப்படி பார்த்தாலும் விலையும் இந்தியாவை விட கம்மிதான். ஆனால் அதற்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கி செட் செய்வது தான் பெரிய வேலையாக உள்ளது. இப்போ டி.வி. HD quality என்பதால் dish connection ம் HD பாக்கேஜ் வாங்கும்படி ஆயிற்று. அதற்கு மாதம் 100 ருபாய் எக்ஸ்ட்ரா. விதி வலியது. என்ன செய்ய!










        

share on:facebook

Thursday, January 10, 2013

இன்டீரியர் டெகரேஷன் செய்யும் போது கவனிக்க வேண்டியது என்னென்ன?


வீட்டு இன்டீரியர் வேலைகளுக்கு ஒரு சதுர அடிக்கு 1000/1100 ருபாய் செலவாகுமாம். இது தான் நான் முதன் முதலில் சென்னையில் விசாரித்த போது கிடைத்த தகவல். அப்படியென்றால் எங்கள் வீட்டிற்க்கு இரண்டு துயிலறையிலும் இரண்டு அலமாரிகள், சமையல் அறையில் தேவையான அடுக்குகள் மற்றும் வரவேற்பறையில் அலங்கார பொருட்கள்/புத்தகங்கள் வைக்க ஒரு  பெரிய செல்ப் என மொத்தம் 500/600 அடிக்கு வேலைகள் இருக்கிறது என்றால் ஐந்து/ஆறு லட்சம் செலவாகும் என்று கணக்கு போட்டு பார்த்தவுடன் சற்று அதிர்ந்து தான் போய் விட்டேன்.

அம்மாவிற்கு இம்மாதிரியான விசயங்களில் ஓரளவு அனுபவம் இருப்பதால் அவரிடம் கேட்டேன். பிறகு இரண்டு பேரும் உட்கார்ந்து தோராயமாக கணக்கு போட்டோம். பொருட்களுக்கு மட்டும் எவ்வளவு செலவாகும்? ஆசாரியர்கள் இம்மாதிரியான வேலைகளுக்கு எவ்வளவு சார்ஜ் செய்கிறார்கள் என சிறிதாக ஹோம் வொர்க் செய்து பார்த்தோம். எப்படி பார்த்தாலும் இவர்கள் சொல்லும் 1000 த்தை தொடவே இல்லை. சரி நாமே பொருட்களை வாங்கி கொடுத்து ஆசாரி வைத்து வேலைகளை செய்வோம் என களத்தில் இறங்கி இன்றோடு ஒரு மாதம் ஆகிறது.

90% சதவிகித வேலைகள் முடித்தாயிற்று. பெரும்பாலும் இம்மாதிரியான விசயங்களில் எனக்கு அறிவு கொஞ்சம் கம்மி. அண்ணனுக்கு எல்லா விசயமும் தெரியும். அதே நேரத்தில் எவ்வளவு நாட்களுக்கு அவரையே தொந்தரவு செய்வது என்று நான் எடுத்த சின்ன ரிஸ்க் ஓரளவு நன்றாக போனது. அது மட்டும் இல்லாமல் இம்மாதிரியான வேலைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? எதை உபயோகிக்க வேண்டும்/கூடாது என பலவற்றை தெரிந்து கொள்ள முடிந்தது.

வேலை முழுதும் பிளைவுட் மற்றும் மைக்கா மூலம் செய்திருக்கிறோம். மைக்காவிற்கு பதிலாக பிளைவுட் மற்றும் விநியரும் உபயோக படுத்தலாம். அப்படி செய்தால் ஒரிஜினல் மரத்தாலான மாதிரி பார்வைக்கு நன்றாக இருக்கும். ஆனால் அதில் வார்னிஷ் அடிப்பது போன்ற மற்ற வேலைகள் உண்டு. ஆதலால் அதை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு மைக்காவுக்கு தாவி விட்டோம்.

முதலில் பிளைவுட். இது சதுர அடி 20 ரூ 30 ருபாய் என்று தொடங்கி 100 ரூபாய்க்கும் மேல் கிடைகிறது. பிராண்டட் எல்லாம் 100 ரூபாய் அளவிற்கு விற்கிறது. நல்லா ஸ்ட்ராங்கா இருக்கும். ஆனால் இதில் தான் ஒரு சூட்சமம் இருக்கிறது. எல்லா வேலைகளுக்கும் இம்மாதிரியான முதல் தர பிளைவுட் போட கூடாது. உதாரணமாக லாப்ட் என்று சொல்லக்கூடிய இடங்களில் கதவுகள் போடும் போது அதிக வெய்ட்டான பிளைவுட் உபயோகபடுத்தினால் கொஞ்ச நாள் கழித்து கதவுகள் இறங்கி விட வாய்ப்புண்டு. நல்ல தரமான பிளைவுட் போட வேண்டும் என்று நினைத்தால் ஒரு சதுர அடி 60 ரூ, 70 ரூபாய்க்கு உள்ளதை வாங்கினால் போதும். அதே போல் லாப்ட் பொதுவாக ரூம் உள்ளே இருப்பதால் அதற்க்கு வாட்டர் ப்ரூப் மெட்டீரியல் தேவை இல்லை. சமையலறை போன்ற இடங்களுக்கு வாட்டர் ப்ரூப் மெட்டீரியல் அவசியம் தேவை.

நாங்கள் சமையலறை மற்றும் ஷோ கேஸ்சிற்கு மட்டும் வாட்டர் ப்ரூப் முதல் தர மைக்கா போட்டோம். மற்றவை எல்லாம் நடு தரம். அதாவது சதுர அடி 70 ரூபாய்க்கு.

பெரும்பாலான பிளைவுட் விற்கும் கடைகள் பிராண்டட் பொருட்களை விற்க ஆர்வம் காட்டுவதில்லை அதற்க்கு பதிலாக அவர்களாக ஒரு பிராண்ட் வைத்துக்கொண்டு இதை போடுங்கள் சார், அதை போடுங்கள் சார். இது பிராண்டட் மாதிரியே ஸ்ட்ராங்காக இருக்கும். விலையும் கம்மி என்று கூறி அவர்கள் பொருட்களை விற்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். தரமான பிளைவுட் என்றால் நன்கு கனமாக, ஒரு நுனியில் இருந்து பார்த்தால் நேராக (வளைவு இல்லாமல்) இருக்க வேண்டும்.

அடுத்ததாக மைக்கா. இதுவும் லோக்கல் முதல் பிராண்டட் வரை பல கம்பெனிகள் உள்ளது. விலை வித்தியாசமும் அப்படியே. கம்பெனி மைக்கா ஒரு சீட் (8*4 அடி) 600 முதல் ஆயிரம் தாண்டியும் கிடைக்கிறது. நாங்கள் வெளி புறத்திற்கு கம்பெனி மைக்காவும் உள்ளே போடும் தட்டுகளுக்கு half white என்று சொல்லக்கூடிய வெள்ளை நிற சாதாரண மைக்காவும் உபயோகபடுத்தினோம்.

இம்மாதிரி பிளைவுட் மைக்கா வேலைகள் எதுவாக இருந்தாலும் அதன் durability  மைக்கா எதை வைத்து ஓட்டப்படுகிறது/எவ்வாறு ஒட்டப்படுகிறது?  ப்ளைவுட்/மைக்காவின் தரம் மற்றும் சீதோசன நிலை/உபயோகப்படுத்தும் முறை பொறுத்தே அமைகிறது(இன்னும் ஏதாவது இருக்கா)?.

அவையெல்லாம் எது எப்படி என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்...

படத்தில் உள்ளது எங்கள் வீட்டின் சமையல் அறை அல்ல.

share on:facebook

Tuesday, December 18, 2012

12/12 ரஜினியை நேரில் சந்தித்த அனுபவம் + பிறந்த நாள் செய்தி


ரஜினியை அவரின் முப்பத்தி ஏழாவது பிறந்த தினத்தன்று ரசிகர் மன்ற நண்பர்களுடன் சந்தித்து வாழ்த்து கூறினோம். பிறந்த நாள் அன்று கூட்டம் நிறைய இருக்கும் என்று அதற்கு முன் தினம் இரவே அவரது வீட்டில் சந்தித்து பிறந்த நாள் நினைவு பரிசு ஒன்றையும் வழங்கினோம்.

இரவு பதினோரு மணிவரை டப்பிங்கில் (மிஸ்டர் பாரத் என்று நினைக்கிறன்) இருந்து விட்டு வீடு திரும்பியவர் நாங்கள் மாலையிலிருந்து அவரை காண காத்திருக்கிறோம் என அறிந்து வீட்டிற்க்குள் நுழையும் முன் ஒரு நிமிடம் திரும்பி வந்து வரவேற்பறையில் காத்திருந்த எங்களை பார்த்து அவருக்கே உரித்தான ஸ்டைலில் என்னமா கண்ணு? எல்லோரும் சவுக்கியமா? என கேட்டு விட்டு. இதோ ஒரு அஞ்சு நிமிஷம், வந்துடுறேன் என விடு விடுவென்று உள்ளே சென்றவர், அடுத்த சில மணித்துளிகளில் மீண்டும் பிரஷாக வந்து எங்களுடன் ஒரு பத்து நிமிடங்கள் பேசி இருந்து விட்டு நாங்கள் கொண்டு வந்திருந்த பிறந்த நாள் பரிசுகளை பெற்றுக்கொண்டு, எல்லோரும் பார்த்து பத்திரமா ஊருக்கு போங்க அது தான் எனக்கு முக்கியம் என விடை பெற்று சென்றார்.

ரஜினி பிறந்த 12/12 நாளுக்கு அடுத்த வாரம் 19/12 என் பிறந்த நாளாக்கும். எனக்கு மட்டுமல்ல. தி.மு.க. வின் பொது செயலாளர் பேராசிரியர் அவர்களுக்கும் அன்று தான் பிறந்த நாள். இதை விட ஒரு சிறப்பு அம்சம் என் அண்ணனுக்கும் அன்று தான் பிறந்த நாள். அப்படியென்றால் நீங்கள் இரட்டை பிறவியா என கேட்பவர்களுக்கு? இல்லை, எனக்கும் என் அண்ணனுக்கும் மூன்று வயது வித்தியாசம். ஆம், என் அண்ணன் பிறந்து சரியாக மூன்று வருடங்கள் கழித்து அதே மாதம் அதே  தேதியில் நான் பிறந்தேன்.

சிறு வயதாக இருக்கும் போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், அம்மாவின் பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு என்று சாக்லேட்டுகள் இருவருமாக சேர்ந்து எடுத்து சென்றால் எனக்கு ஏற்படும் ஒரே கவலை இருவருக்கும் சேர்த்து ஒரே பரிசு கொடுத்து விட்டால் யார் அதை எடுத்துக்கொள்வது என்று தான். அதன் பிறகு பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வீட்டில் ஸ்வீட் செய்வதோடு நின்று விட்டது. இருந்தாலும் இன்று வரை பிறந்த நாளை மகிழ்வுடன் வீட்டிற்குள்ளே கொண்டாடி வருகிறோம். தற்போதெல்லாம் குழந்தைகள் ஏதாவது ஒரு பிறந்த நாள் பரிசு (எனக்கு தெரியாமல்) வாங்கி வைத்து பிறந்த நாள் அன்று பரிசாக எனக்கு தருகிறார்கள். சென்ற முறை என் பெரிய மகள் ஒரு அழகான வாட்ச் வாங்கி கொடுத்தாள் (அவள் சேமிப்பிலிருந்து). இந்த முறை என்ன கிடைக்கும் என ஆவலாக உள்ளேன்.

இப்போதெல்லாம் பிறந்த நாள் வரும் போது கூடவே நமக்கு வயதாகிறது என்ற நினைப்பும் கேட்காமலேயே வந்து விடுகிறது. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு மனிதனுக்கு அப்படியே மீண்டும் வயது குறைந்து கொண்டே போனால் எப்படி இருக்கும்? சைக்கிளுக்கு கால் எட்டாமல் மூன்று காலில் ஓட்டுவதும், டீன் ஏஜ் பருவத்தில் கோ-எட் பள்ளியில் படிப்பதும், கல்லூரி என்றால் கட் அடித்து விட்டு சினிமா/பிரண்ட்ஸ் வீட்டுக்கு போவதற்கு தான் என்று அந்த கட்டுபாடற்ற வாழ்க்கை இனி கிடைக்குமா?

ஹ்ம்ம்...இப்படி ஆசை படுவது தான் மனிதன் முதிச்சி அடைய காரணமாமே?

ரஜினி பதிவுகள்...

McDonald's இட்லி வடை. ருசித்து சாப்பிட்டார் ரஜினி.

இணைய வசதி இன்றி இயங்கும் உலகின் முதல் வலைத்தளம். ஆல் அபவுட் ரஜினி.காம்

ரஜினி அங்கிள், நீங்க எங்கே இருக்கீங்க...

share on:facebook

Thursday, September 20, 2012

'ஆன்சைட்டா' அந்தப்புரமா?. IT படுத்தும் பாடு பார்ட் - 2



கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆயிட்டா எல்லா பெண்களையும் மற்ற பெண்கள் துளைத்து எடுக்கும் கேள்வி, என்ன 'விஷேசம் ஏதும் இல்லையா' என்பது. அது போல் IT யில் வேலைக்கு சேர்ந்த சில வருடங்களில் எல்லோரும் கேக்கும் கேள்வி. 'எப்போ ஆன்சைட்'? அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை. அது போல் ஆன்சைட் போகதவருக்கு IT யில் மதிப்பில்லை.

சென்ற பதிவில் IT கம்பெனிகளில் வேலையில் சேர்வது அவ்வளவு ஒன்றும் சுலபமான காரியமில்லை என்பதை கூறி இருந்தேன். இந்த பதிவில் அப்படியே ஒரு வழியாக வேலையில் சேர்ந்து விட்டாலும் அதோடு வாழ்க்கையில் செட்டில் ஆகி விட முடியுமா என்பதை பார்ப்போம்.

முதல் பாராவில் கூறி இருந்தது போல், எப்படி ஒரு நடிகன் தன் வாழ் நாள் கனவாக 'ஆஸ்கார்' விருதை பெற்றிட வேண்டும் என நினைப்பானோ, எப்படி ஒரு அரசியல் கட்சியின் தலைவருக்கு மாநில முதல்வர் பதவியோ அது போல் தான் பெரும்பாலான IT ஊழியர்களுக்கு 'ஆன்சைட்' கனவு.

'ஆன்சைட்' என்பது பெரும்பாலும் IT யில் வேலை பார்ப்பவர்கள் உபயோகப்படுத்தும் சொல். அது வேறொன்றும் இல்லை. அமெரிக்கவோ அல்லது பிற ஊர்களுக்கோ வேலை நிமித்தம் செல்வதை தான் 'ஆன்சைட்' போவதாக சொல்வார்கள். இதற்கு காரணம். நாம் வேலை பார்ப்பதே அவர்களுக்காக தான். அவர்கள் இடத்திற்கே சென்று வேலை பார்ப்பதை. On site என்று கூறுவார்கள்.

ஆன்சைட் வாய்ப்பு என்பது பெரும்பாலும் அவரவரின் அதிர்ஷ்டம் மற்றும் திறைமையை பொறுத்து. சில நேரங்களில் ஒன்னும் தெரியாதவன் ஒரே மாதத்தில் ஆன்சைட் செல்வான் சிலருக்கோ அதற்க்கு பல வருடங்கள் ஆகும். சரி அப்படி என்னதான் இருக்கு அந்த ஆன்சைட்டில் என கேப்பவர்களுக்கு...

# நல்ல சம்பளம் (இந்தியாவை ஒப்பிடும் போது)
# தான் பார்க்கும் வேலைக்கு ஒரு அங்கீகாரமாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
# தன் வேலையில் மேலும் முன்னேற இதுவும் ஒரு வாய்ப்பு.
# மனைவி குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு அமெரிக்கா/இங்கிலாந்து  போன்ற வளர்ந்த நாடுகளில் போய் சுற்றி பார்க்கும்/வசிக்கும் வாய்ப்பை தரும்.
# இவை எல்லாவற்றுக்கும் மேலாக குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஒட்டிக் கொண்டிராமல் உலகம் சுற்றும் வாய்ப்பு கிடைக்கும் போது அதனால் கிடைக்கும் அனுபவங்கள் ஏராளம் ஏராளம்.

அப்படி பட்ட ஆன்சைட் வாய்ப்புகள் இப்போது நிறைய இருந்தாலும் ஆன்சைட் பயணம் என்பது முன்பு போல் இப்போது இல்லை. முன்பு யார் வேண்டுமானாலும் (கம்பெனி நினைத்தால்) ஆன்சைட் போகலாம். இப்போது அமெரிக்கா மற்ற நாடுகளில் வீசா வழங்குவதில் நிறைய கெடுபிடிகள் கொண்டு வந்து விட்டார்கள். ஒரு முறை போய் விட்டு வரவே சிலருக்கு மூச்சு முட்டுகிறது. இந்த மாதிரியான சூழ்நிலையில் எனக்கு கிடைத்த வாய்ப்புகளை தற்போது நினைத்தாலும் பெருமையாகவும், திருப்தியாகவும் இருக்கிறது.

'ஆன்சைட்' பயணம் பொதுவாக இரு வகை படும். 1. ஷார்ட் டெர்ம் என சொல்லப்படுகிற குறுகிய கால பயணம். 2. லாங் டெர்ம் என சொல்லப்படுகிற நீண்ட கால பயணம். இரண்டு வகையிலும் வசதிகளும் உள்ளன. சிரமங்களும் உள்ளன. அவைகளை பார்க்கும் முன், அந்த காலத்தில் ராஜாக்கள், ஊரில் உள்ள மிக சிறந்த அழகியையோ அல்லது பணக்கார நாட்டு ராஜாவின் இளவரசியையோ பெரும் பணம், பொருள் நாடு என்று திருமணம் செய்திருந்தாலும் அரண்மனைக்கு அப்பால் ஒரு அந்தபுரம் கட்டாயம் இருக்கும்.

அதற்கு காரணம், அந்தபுரத்தில் கிடைக்கும் உல்லாசமும், கவலை, பொறுப்புகள் இல்லாத வாழ்க்கையும், அந்தபுரத்தில் இருக்கும் தருணம் வரை நாடு, வீடு என அனைத்துப் பொறுப்பையும் யாராவது ஒருவர் பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்திருப்பார். அந்த மாதிரி தான் ஆன்சைட் பயணங்களும் எங்களுக்கு (யாராவது இப்படி சொன்னதுக்கு சண்டைக்கு வரதா இருந்தா, நீங்க ஆன்சைட்ல எங்க எப்படி இருக்கீங்கன்னு விலா வாரியா சொல்லுங்க. அதுக்கப்புறம் பார்ப்போம் உங்க பக்கம் நியாயம் இருக்கானு).

ஐயா, தலைப்புக்கு சரியான விளக்கம் கொடுத்தாச்சு...இப்போ ஜூட்....அடுத்த பதிவில் மேலும் படுத்தலாம்...

தொடர்புடைய பதிவுகள்...

IT (வேலை) படுத்தும் பாடு...


share on:facebook