Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

Tuesday, December 4, 2012

அதிரடி அயல்நாட்டு சட்டங்கள். அதிர்ச்சியில் இந்திய பெற்றோர்கள்.

//நான் ஒரு முறை இம்மாதிரி பிரச்சனையில் மாட்ட வேண்டியது. நல்ல வேலை தப்பித்தேன்//

நேற்று நார்வே நீதிமன்றம் ஒன்று தங்கள் குழந்தையை கொடுமை படுத்தினார்கள் என்பதற்காக அக்குழந்தையின் இந்திய பெற்றோருக்கு தந்தைக்கு 18 மாதமும் தாய்க்கு 15 மாதமும் சிறை தண்டனை வழங்கி உள்ளது. இது பெரும்பாலானோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அயல் நாடுகளில் பல வருடங்கள் குடும்பத்துடன் வாழ்ந்த எனக்கே இது சற்று பயத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மேலே போவதற்கு முன், இந்தியாவிலிருந்து வெளி நாடு செல்லும் நண்பர்கள் யாராக இருந்தாலும் அந் நாட்டிற்கு செல்லும் முன், அந்நாட்டின்  முக்கியமான சட்ட திட்டங்களை, வரைமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இன்று எல்லா இடங்களிலும் இந்தியர்கள் தமிழர்கள் இருக்கிறார்கள். அதனால் அது ஒன்றும் பெரிய காரியமில்லை.

உதாரணத்திற்கு சிங்கப்பூர் மலேசியாவில் சுத்தம் மிக முக்கியம். நம்மூர் மாதிரி ரோட்டில் பேப்பர் அது இது என்று எதை போட்டாலும் 500 டாலர் 1000 டாலர் என்று பைன் போடுவார்கள் என்று தெரியும். சவூதி போன்ற நாடுகளில் மற்ற மதங்களின் வழிபாடுகள் தடை செய்யப்பட்டுள்ளது என தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதற்காக கடுமையான சட்டங்கள் உண்டு.

ஏன் நாம் மட்டும் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லையா? நாம் பெற்ற குழந்தைகளை நமக்கு கண்டிக்க, அடிக்க உரிமை இல்லையா என சிலர் கேட்கலாம். எந்த நாடாக இருந்தாலும் அங்குள்ள சட்டங்கள் அங்குள்ள பிரச்சனைகளின் அடிப்படையில் தான் உருவாக்கி இருப்பார்கள். அப்படி பார்க்கும் போது, மேலை நாடுகளில் பரவலாக குழந்தை கொடுமைகள் உண்டு. அதற்க்கு காரணம் அவர்களுக்கு குழந்தைகள் மேல் பாசம் இல்லை என்றில்லை. இன்னும் சொல்லப்போனால் நம்மை விட அவர்கள் அதிக நேரம் குழந்தைகளுடன் செலவிடுவார்கள். ஆனால், தனி மனித சுதந்திரம், விருப்பு வெறுப்பு என வரும்போது குழந்தை பாசம் அங்கே குறுக்கே வராது.

விவாகரத்து என்பது அங்கு சர்வ சாதாரணம். கணவன் மனைவியிடையே பிரச்னை உருவாகும் போது நம்மை போல் என் குழந்தைக்காக, குடும்பத்திற்காக தான் நான் பொறுத்து போகிறேன் அப்படி இப்படி எல்லாம் வசனம் பேசிக்கொண்டு இருக்க மாட்டார்கள் அவர்கள். அப்போது இந்த குழந்தை பாசமும் குறுக்கே வராது. கோர்ட் உத்தரவு படி யாராவது ஒருவர் பராமரிப்பில் குழந்தை வளரும். பெற்றோர் மட்டுமல்ல, குழந்தைகளும் இதை சாதரணமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

அவ்வாறு பெற்றோர் பிரியும் போது நம்மூர் போலவே அப்பவோ அம்மாவோ மறுமணம் செய்து கொள்ளும் போது 'சித்தி/சித்தப்பா' கொடுமைகளை சில குழந்தைகள் சந்திக்க நேரிடும். அது மட்டுமின்றி 'சைல்ட் அப்யூசர்ஸ்' நிறைய பேர் அங்கு இருப்பார்கள். அம்மாதிரி கொடுமைகளை தண்டிக்க மேலை நாட்டு அரசுகள் கடுமையான சட்ட திட்டங்களை பின்பற்றுகின்றன. இதில் தான் நம் இந்திய பெற்றோர்கள் விட்டில் பூச்சி போல் மாட்டிக்கொள்கிறார்கள்.

மேலை நாட்டில் உள்ள சட்டங்களை நாம் குறை கூறவும் முடியாது. அதே சமயம் அவர்களை போல் திட்டாமல், அடிக்காமல் நாம் குழந்தைகளை வளர்க்க முடியாது வளர்க்கவும் தெரியாது. நமக்கு ஒழுக்கம் அதிலும் நம் குழந்தைகள் ஒழுக்கமாக வளருவதற்காக நாம் என்ன வேண்டுமானாலும் செய்வோம். ஆனால், அங்கோ, ஐந்து வயது குழந்தைக்கே தனி பெட் ரூம். அந்த ரூமிற்குள் செல்ல பெற்றோரே பெர்மிஷன் கேட்க வேண்டும்/தட்டிவிட்டு செல்ல வேண்டும். அப்படி பட்ட தனிமனித சுதந்திரம் உள்ள நாடுகள் அவைகள்.

ஆனால் இந்த குறிப்பிட்ட கைது/தண்டனை சம்பவம் பல சந்தேங்கங்களை கிளப்புகிறது. குழந்தை தன்னை பெற்றோர்கள் திட்டினார்கள், ஒழுங்காக நடக்கவிட்டால் இந்தியா திருப்பி அனுப்பி விடுவோம் என மிரட்டினார்கள் என்பதையெல்லாம் எப்படி குழந்தை கொடுமை என்று எடுத்துக்கொண்டார்கள் என தெரியவில்லை. எந்த நாட்டிலும் குழந்தைகளை சாதரணமாக (அதாவது பொது இடத்தில் அல்லாமல்) திட்டுவது ஒன்றும் பெரிய குற்றமில்லை. அதே போல் கண்டிப்பதும். பிசிகல் அப்யூஸ் தான் குற்றமாக கருதப்படும்.

அதே போல் சம்பவம் நடந்து ஆறு மதங்களுக்கு மேல் அதுவும் குழந்தைகள் தற்போது இந்தியாவில் உள்ள போது இம்மாதிரி பெற்றோர்களை சிறையில் அடைப்பது அநியாயம். இரண்டும் விபரம் அறியா குழந்தைகள். அவைகள்  அம்மா அப்பாவை பார்க்காமல் தவித்து விடாதா? அதிபட்சம் அவர்கள் வெர்பல் அப்யூஸ் செய்தததாக புகார் வந்திருந்தால் அவர்களை கூப்பிட்டு முதலில் ஒரு வார்னிங் செய்திருக்கலாம்.

முதலில் பெற்றோர்கள் திட்டினார்கள் என கூறிய அந்நாட்டு போலீஸ் தற்போது குழந்தை மீது காயங்களும் தழும்புகளும் இருந்தது என கூறுகிறது. குழந்தைகள் ஆறு மாதமாக இந்தியாவில் இருக்கும் போது இவ்வாறு குற்றச்சாட்டு வைப்பது பல சந்தேகங்களை கிளப்புகிறது. எது எப்படியோ, மக்களுக்காக தான் சட்டங்கள். அது எந்த நாடாக இருந்தாலும். இந்த பிரச்சனயை பொறுத்த வரை குழந்தையை திட்டினார்கள் என்பதற்கு சிறை தண்டனை என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அக் குழந்தைகளுக்காவது பெற்றோர் இருவரையும் உடனடியாக நார்வே அரசு விடுதலை செய்ய வேண்டும். அது தான் என் வேண்டுதலும் விருப்பமும்.

அதை விட முக்கியம். வெளி நாடு செல்லும் பெற்றோர்கள் அந்நாட்டு சட்ட திட்டங்களை தெரிந்து கொண்டு அதன் படி நடப்பது. நான் ஒரு முறை இம்மாதிரி பிரச்சனையில் மாட்ட வேண்டியது. நல்ல வேலை தப்பித்தேன். முடிந்தால் தனி பதிவாக போடுகிறேன். 

share on:facebook

Tuesday, May 1, 2012

காபூலில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: அமெரிக்க அதிபர் ஒபாமா உயிர் தப்பினார்

தற்போது தினமலர் இணைய தளத்தில் பார்த்த செய்தி. தலைப்பை பார்த்தவுடன் சற்று அதிர்ச்சி ஆகி விட்டேன். வேறு எந்த செய்தி தாளிலும் பெரிதாக ஒன்றும் போடவில்லை. இது உண்மையா?  

காபூல் : அல்குவைதா இயக்க தலைவர் பின் லேடனின் முதலாம் ஆண்டு நி‌னைவு தினத்தில் ஆப்கானில் குண்டு வெடிப்பு நிகழ்‌ந்தது. இச்சம்பவத்திற்கு தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஒபாமா ரகசிய பயணம் : அல்குவைதா இ‌யக்கத்தினர் ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அதன் முன்னாள் தலைவர் பின்லேடனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அவ் வியக்கத்தினரால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா ரகசிய பயணமாக ஆப்கான் சென்றிருந்தார்.அங்கு தலைநகர் காபூலில் அதிபர் ஹர்சாயை சந்தித்து நிதியுதவி , மற்றும் படைகளை படிப்படியாக குறைப்பது உட்பட பல்வேறு ஆலோசனைகள் மற்றும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். ‌தொடர்ந்த அமெரிக்க ராணுவத்திரின் மத்தியில் பேசிய அதிபர் இந்தாண்டு இறுதிக்குள் படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும் என கூறினார்.

உளவுத்துறை எச்சரிக்கை : அல்குவைதா இயக்கத்தின் முன்னாள் தலைவர் பின்லாடனின் நினைவு தினத்தை முன்னிட்டு தீவரவாதிகள் திடீர் தாக்குதலி்ல் ஈடுபடக்கூடும் என அமெரிக் உளவுத்துறை ஆப்கானிஸ்தானின் போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

தீவிரவாதிகள் தாக்குதல் : அதிபர் ஒபாமா தனது ஒருநாள் பயணத்தை முடித்து விட்டு திரும்பிய சிறிது நேரத்தில் ஆப்கானி்ன் கிழக்கு மாகாண தலைநகரில் அமெரிக்க தூதரகம் அமைந்து ள்ள கிரீன்வில்லேஜ் வணிக வளாகத்தி்ல் தாக்குதல் நடத்தினர். அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினருக்கும் கடும் சண்டை ஏற்பட்டது. இத் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக முதல் கட்ட அறிக்கயில் தெரிய வந்துள்ளது.

மற்றொரு தாக்குதல்: ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் நடத்திய தாக்குதலுக்கு தாலிபான் அமைப்பினர் பொறுப்பேற்ற நிலையில் மேற்கு பகுதியில் குடியிருப்நு வளாக பகுதியில் சக்தி வாய்நத குண்டு வெடிப்பு நிகழ்‌ந்துள்ளது. இச்சம்பவத்தில் சுமார் 6 பேர் வரை பலியாகியிருக்க கூடும் என தலைமை போலீசார் அயூப் சாலங்கி தெரிவித்தார்.

share on:facebook

Sunday, March 25, 2012

இலங்கை தமிழர் பிரச்னை : நீலிக் கண்ணீர் வடிக்கும் ஆங்கில நாளேடுகள்.


சென்ற பதிவில் இலங்கை தமிழர் பிரச்சனையில் நம்மூர் ஆங்கில நாளேடுகளின் இரட்டை வேடம் பற்றி எழுதி இருந்தேன். இந்து பத்திரிக்கை தான் அப்படி என்றால் தற்போது தென்னகத்தில் வேகமாக வளர்ந்து வரும் டைம்ஸ் ஆப் இந்தியாவும் அப்படிதான். இது இன்னும் மோசமாக தனது கருத்தை வெளியிட்டு உள்ளது.

நான் முன்பே கூறியிருந்தது போல் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு ஆரம்பம் முதல் நாம் (இந்தியா) தான் காரணம். நம் சுய நலன்களுக்காக அவர்களை பாடாய் படுத்தி இன்று நடு தெருவில் நிறுத்தி இருக்கிறோம். அது மட்டுமன்றி தமிழ் இனத்தின் ஜனத்தொகையில் பாதிக்கும் மேல் பலிகொடுத்து விட்டோம்.

டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள கருத்தின் படி இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததால் ஆசிய கண்டத்தில் நாம் மட்டும் தனித்து விடப் பட்டோமாம். அதற்க்கு தமிழகம் தான் காரணமாம். நம் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷுடன் ஒன்று சேராமல் நாம் போனதற்கு தமிழர்கள் தான் காரணமாம். தெரியாமல் தான் கேட்கிறேன், இவர்கள் எல்லாம் நமக்கு என்ன நட்பு தேசங்களா என்ன? அருணாசலம் எங்கள் நாட்டை சேர்ந்தது என்று சீனாவும், ஜம்மு காஸ்மீர் எங்களது என்று பாகிஸ்தானும், இந்தியவிற்க்குள் ஊருடுவும் தீவிரவாதிகள் அனைவரும் பங்களாதேஷ் மூலமும் தான் வருகிறார்கள்.

இவர்களுடன் சேர்ந்து நாம் இலங்கைக்கு அதரவாக ஓட்டளிக்க வேண்டுமாம். இது என்ன நியாயம் என தெரியவில்லை. அது மட்டும்மல்ல, இலங்கைக்கு உலக நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தால் அதனால் இலங்கை தமிழர்கள் தான் பாதிக்கப் பட போகிறார்களாம். என்ன இலங்கையில் வாழும் தமிழர்கள் கார் வாங்கவும், இறக்குமதியாகும் பொருட்களையும் வாங்கவும்  முடியாமல் அழ போகிறார்களா? அந்த நிலைமையிலா அவர்கள் இருக்கிறார்கள்?

இலங்கை அதிபர் ராஜபக்சேவை விட இவர்கள் தான் இலங்கையை பற்றி அதிகம் கவலை படுகிறார்கள். உண்மையை சொல்லப் போனால் விடுதலை புலிகள் நல்லவர்களோ கெட்டவர்களோ அவர்கள் இருந்தவரை நம் இந்திய பூலோக நலன்கள் காக்கப் பட்டது. சீனாக்காரனோ வேறு யாரோ இலங்கையில் காலடி வைக்க தயங்கினார்கள். ஆனால், இன்று அவர்களுக்கு எல்லாம் சிகப்பு கம்பள விரிப்பு. இதை எல்லாம் மறைக்கத்தான் எப்போது பார்த்தாலும் புலிகள் அகண்ட தமிழ் ஈழம் அடைய தமிழகத்தை தங்களுடன் இணைக்கும் திட்டம் போட்டுள்ளார்கள் என்று இவர்களாக ஒரு கதையை அவ்வப்போது பரப்பி அவர்களை இந்தியாவின் எதிரியாக எப்போதுமே பார்க்கப் பட வைத்ததாக விபரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.


எது எப்படியோ, அமெரிக்க தீர்மானத்தால் இலங்கை தமிழர்களுக்கு ஒரு நல்லது நடந்தால் போதும். அப்படியே நம்புவோமாக.

தொடர்புடைய பதிவுகள்...

இலங்கை தமிழர் பிரச்னை: ஆங்கில நாளிதழ்களின் குள்ள நரித்தனம்.

போர் குற்றம்: தூக்கு தண்டனையை முன்னிறுத்தும் அமெரிக்கா.

share on:facebook

Thursday, March 22, 2012

இலங்கை தமிழர் பிரச்னை: ஆங்கில நாளிதழ்களின் குள்ள நரித்தனம்.


'Genocide' என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் அர்த்தம் தேடினால் ஆப்பரிக்க நாடுகளுக்கு அடுத்தபடியாக இலங்கை அரசு தான் பொருத்தமான உதாரணமாக இருக்கும். ஆனால், இலங்கை தமிழர்கள் ஆப்ரிக்க நாட்டவர்களை போல் காட்டு வாசிகள் இல்லை. படிப்பு, வியாபாரம், அரசியல் என்று பல துறைகளிலும் இலங்கையில் கோலோச்சினார்கள். ஆனால், அதுவே அவர்களுக்கு ஆபத்தாக கடைசியில் முடிந்தது.

ஆரம்பம் முதல் இலங்கை தமிழர் பிரச்னை இந்த அளவிற்கு வளர காரணம்  தமிழக அரசியல் வாதிகளும் இந்திய அரசாங்கமும் தான் என்பது விபரம்  அறிந்தவர்களுக்கு தெரியும். தமிழக அரசியல் வாதிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக பிரச்சனையை ஊதி பெருக்கினார்கள் என்றால் இந்திய அரசு முற்றிலும் சுயநல போக்குடன் இந்தியாவின் பூலோக நலனுக்காக ஒரு இனத்திற்கு எதிராக ஆரம்பம் முதல் செயல் பட்டது.

இப்போது இந்த அரசியல் தலைவர்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு இந்தியாவில் உள்ள ஆங்கில நாளிதழ்கள் நடந்து கொள்கின்றன. அதற்க்கு காரணம் சுயநலமும், வியாபார நோக்கமுமும் தான்.

ஒரு காலத்தில் 'தி ஹிந்து' நாளிதழும், அதன் ஆசிரியர் திரு. ராமும் எல்லோராலும் மதிக்கப் பட்டவர்கள். குறிப்பாக திரு. ராம் அவர்கள் தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாகவும், பொது நல வாதியாகவும் அடிக்கடி காட்டிக் கொள்வார். ஆனால், ஊர் உலகத்தை பற்றி எல்லாம் எழுதும் அவர் மீதே நில மோசடி வழக்கு உள்ளது. இலங்கையில் நடந்த போரை பற்றி எல்லோரும் எழுதிக் கொண்டிருந்த நேரத்தில் இவர் பக்கம் பக்கமாக தனது நாளிதழில், புகைப் படத்துடன் இலங்கை அரசு எவ்வாறு தமிழ் அகதிகளை சிறப்பாக 'கேம்ப்' புகளில் கவனித்துக் கொள்கிறது என்று ஊருக்கு ஒப்பாரி வைத்தார். முள் வேலிக்குள், டெண்டிர்க்குள் அப்பாவி மக்களை அடைத்து வைத்திருப்பதற்கு ஒரு பாராட்டுப் பத்திரம்.


இலங்கை அரசின் விருந்தினராகவே கவனிக்கப் பட்ட திரு. ராமிற்கு இலங்கை அரசை பற்றி புகழ்ந்து எழுதுவதும், அதன் அதிபர் ராஜபக்சேவை நேர்காணல் செய்வதுமையே தனது தலையாய கடமையாக கொண்டிருந்தார். இவை எல்லாவற்றுக்கும் காரணம், அவருக்கு இலங்கை அரசு கொடுத்த விருதும், அவரின் பத்திரிக்கையை இலங்கையில் அச்சடித்து விநியோகம் செய்ய அனுமதி அளித்ததும் தான் என்பது பரவலான குற்றச்சாட்டு.

இது எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு கட்டத்தில் இந்தியாவின் ஒரு அங்கமான அருணாச்சல பிரதேசத்தில் சீனாவின் போக்குக்கு அதரவாக நடக்க ஆரம்பித்தார். கேரள மீனவர் ஒருவர் சுடப்பட்டு இறந்தார் என்பதற்காக இத்தாலிய கப்பலை கையகப் படுத்தி கப்பல் ஊழியர்களை கைது செய்து இரு நாட்டு உறவு பாழாய் போகும் அளவிற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்க்கு காரணம், இந்த ஆங்கில பத்திரிக்கைகளின் ஊளை தான். ஆனால், தினம் தினம் இலங்கை ராணுவம் இந்திய மீனவர்களை தாக்கிக் கொண்டு இருக்கிறது. அது பற்றி எந்த ஒரு ஆங்கில பத்திரிக்கையும் மருந்துக்கு கூட செய்தி வெளியிடுவதில்லை.


தி.ஹிந்துவிற்கு அடுத்த படியாக, தற்போது இலங்கை தமிழர் நலனுக்கு எதிராக நரித்தனம் செய்ய ஆரம்பித்திருக்கும் அடுத்த பத்திரிகை ...அது பற்றி அடுத்த பதிவில்...

இலங்கை பிரச்னை பற்றிய வேறு சில பதிவுகள்...

ஒரு ராஜீவ் காந்தி, இரு ராஜபக்க்ஷே = ?

போர் குற்றம்: தூக்கு தண்டனையை முன்னிறுத்தும் அமெரிக்கா.


share on:facebook

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி ! இந்தியா உள்பட 24 நாடுகள் ஆதரவாக ஓட்டளிப்பு



ஜெனீவா: ஐநா.,மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஏற்று கொள்ளப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்பட 24 நாடுகள் ஒட்டளித்துள்ளன. முடிவில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கையில் நடந்த புலிகள் ஒழிப்பு நடவடிக்கையில் இறுதிக்கட்ட போரில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாகவும், இங்கு நடந்த போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா தரப்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் தொடர்பான விவாதங்கள் கடுமையாக நடந்தன. இந்த விவாதம் முடிந்த நிலையில் சற்று முன்பு நடந்த ஓட்டடெடுப்பில் இந்தியா, உள்ளிட்ட 24 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தன. சீனா, ரஷ்யா உள்ளிட்ட 15 நாடுகள் எதிர்த்தன. 8 நாடுகள் வாக்களிக்கவில்லை.

இலங்கையில் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த ஆணையம் நியமிக்கப்பட்டிருந்தது. கற்ற பாடங்கள், நல்லிணக்க குழு என்ற குழுவை இலங்கை அரசு நியமித்தது. ஆணையத்தின் பரிந்துரையை செயல்படுத்த வலியுறுத்தியே அமெரிக்கா இந்த தீர்மானத்தை கொண்டு வந்தது. தற்போது இந்த தீர்மானம் வெற்றியடைந்திருப்பதால் இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை சர்வதேச நாடுகள் விதிக்கும். இதனால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தடைபடும்.

வாக்குறுதியை நிறைவேற்றினார் பிரதமர்: கடந்த வாரம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என பார்லி.,யில் தமிழக எம்.பி.,க்கள் குரல் எழுப்பினர், இந்நேரத்தில் பதில் அளித்த பிரதமர் இலங்கை எதிரான தீர்மானத்தில் அமெரிக்காவை ஆதரிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்திருந்தார் . இதன்படி இந்தியா தமிழர்கள் ஆசையை நிறைவேற்றியிருக்கிறது.

தீர்மானத்திற்கு ஆதரவளித்த நாடுகள் பட்டியல்: ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பெனின், கேமரூன், சிலி, கோஸ்டாரிகா, செக் குடியரசு, கவுதமாலா, ஹங்கேரி, இந்தியா, இத்தாலி, லிபியா, மொரிஷியஸ், மெக்சிகோ, நைஜிரியா, நார்வே, பெரு, போலந்து, மால்டோவா, ருமேனியா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் உருகுவே.

இலங்கைக்கு ஆதரவாக ஓட்டளித்த நாடுகள் பட்டியல்: வங்கதேசம், சீனா, காங்கோ, கியூபா, ஈக்வடார், இந்தோனேஷியா, குவைத், மாலத்தீவுகள், மவுரிடானியா, பிலிப்பைன்ஸ், கத்தார், ரஷ்யா, சவுதி அரேபியா, தாய்லாந்து மற்றும் உகாண்டா.

ஓட்டெடுப்பை புறக்கணித்த நாடுகள் பட்டியல்: அங்கோலா, போஸ்ட்வானா, பர்கினோ பாசோ, ஜிபூடி, ஜோர்டான், கிர்கிஸ்தான், மலேசியா மற்றும் செனகல்.

நன்றி: தினமலர்.காம் செய்தி.

share on:facebook

Wednesday, March 21, 2012

போர் குற்றம்: தூக்கு தண்டனையை முன்னிறுத்தும் அமெரிக்கா.


போர் குற்றம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐ. நாவில் அமெரிக்க அரசு தீர்மானம் கொண்டு வந்திருக்கும் இவ்வேளையில், ஆப்கானிஸ்தானில்  ராணுவ பணியில்  இருந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் கடந்த ஆண்டு ஒன்றும் அறியாத அப்பாவி பொது மக்கள் பதினாறு பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் அவரின் மீது அமெரிக்க ராணுவ நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.

இவ்வழக்கில் அவருக்கு அதிக பட்ச தண்டனையாக தூக்கு தண்டனையை வழங்க ஏதுவாக பிராசுகூஷன் தரப்பில் தற்போது வழக்கை தயார் செய்து  வருவதாக சமீபத்து செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஐம்பது ஆண்டுகளில் இதுவரை எந்த ஒரு அமெரிக்க ராணுவ நீதிமன்றமும் யாருக்கும் தூக்கு தண்டனை வழங்கியதில்லை என்றாலும் இந்த முறை வழக்கின் தன்மையை கருதி ராணுவ தரப்பில் குற்றம் சாட்டப் பட்ட ராணுவ வீரருக்கு தூக்கு தண்டனை வாங்கி தர முயற்சிப்பதாக சொல்லப் படுகிறது.

அதற்க்கு சொல்லப் படும் முக்கிய காரணம், போரில் நேரடியாக சம்பந்தப் படாதவர்கள் அதிலும் சுட்டுக் கொள்ளப் பட்ட பதினாறு பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் பதினைந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் ஆவர். இது மன்னிக்கப் பட முடியாத குற்றம் என்று காரணம் கூறப் படுகிறது.

இந்த செய்தி தான் தற்போது இலங்கையில் ராஜபக்க்ஷே சகோதரர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. இல்லையா பின்னே? அப்பாவி மக்கள் பதினாறு பேரை சுட்டுக் கொன்ற ஒருவரே தூக்கு தண்டனையை எதிர்  நோக்கி இருக்கும் சமயத்தில் லட்சக் கணக்கான அப்பாவி பொது மக்கள்  குழந்தைகள், பெரியோர்களை ஈவு இரக்க மின்றி கொலை செய்ய காரணமான   ராஜபக்க்ஷே சகோதரர்களின் நிலைமை என்னாகும்?

காமெடி # 1 
மன்மோகன் சிங்: இலங்கைக்கு எதிரான அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிப்பது சம்பந்தமாக சப்பை கட்டு கட்டி வரும் நம் இந்திய பிரதமர், தீர்மானத்தின் நகல் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. அது கிடைத்ததும் அது பற்றி ஆராய்ந்து நல்லதொரு முடிவு எடுக்கப் படும் என கூறி உள்ளார். அட ராமா? தீர்மானம் என்ன தபால் கார்டிலா அமெரிக்காவிலிருந்து வந்து கொண்டிருக்கிறது. உலகமே  அதை பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொது நம் பிரதமருக்கு மட்டும் அது பற்றி ஒன்னும் தெரியவில்லை. வேறு எது தான் தெரியும் இவருக்கு?

காமெடி # 2:
அ.தி.மு.க., தி.மு.க : இலங்கை தமிழர்கள் மீது திடீர் கரிசனம் காட்டும் அ.தி.மு.க, இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கும்  வகையில் பாராளுமன்றத்தில் ஒரு திருத்த தீர்மானம் கொண்டு வந்தது.  இந்த தீர்மானம் வோட்டெடுப்புக்கு விடும் நேரம் தி.மு.க. உறுப்பினர்கள்  அனைவரும் நைசாக வெளி நடப்பு செய்து விட்டார்கள். போர் என்றால் அதில் பொது மக்களும் சாகத் தான் செய்வார்கள் என திருவாய் மலர்ந்த  புரட்சித் தலைவியும், அரை நாளில் உண்ணாவிரதம் இருந்த தமிழின  தலைவர், போர் முடிந்து விட்டது. தூவானம் விட சற்று நாளாகும் என கூறிய  பிறகு தான் அனைத்து தமிழர்களும் கொத்து கொத்தாக செத்து மடிந்தார்கள். 
 
இவர்களை நம்புவதை விட எங்கோ இருக்கும் அமெரிக்கா காரனை  தாராளமாக நம்பலாம்.

போர் குற்றம் பற்றிய காணொளியை இங்கே காணலாம்...


share on:facebook

Tuesday, March 20, 2012

இந்திய பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்த நார்வே அரசு - குற்றச்சாட்டும், திருப்பமும்.

குழந்தைகளுக்கு கையால் சாப்பாடு ஊட்டினர். அவர்களை தங்களுடன் படுக்கையில் ஒன்றாக தூங்க வைத்தனர். இது தான் நார்வே அரசின் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டுக்காக மூன்று மாதங்களுக்கு முன் நார்வேயில் வாழும் இந்திய பெற்றோர்களிடம் இருந்து அவர்களின் மூன்று மற்றும் ஒரு வயது குழந்தையை பிரித்து அவர்களை நார்வே அரசின் குழந்தைகள் நல்வாழ்வு மையத்தில் ஒப்படைத்தது நார்வே அரசு.

கடந்த சில மாதங்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த வழக்கு  இந்திய வெளி உறவு துறை மற்றும் நார்வே அரசுக்கு பெரும் தர்ம  சங்கடத்தை ஏற்படுத்தியது. வழக்கம் போல் நம் இந்திய மீடியாவும் பேனை பெருச்சாளி ஆக்கி நார்வே அரசை ஒரு அரக்கத்தனமாக சித்தரித்து மேலும்  பரபரப்பை ஏற்படுத்தியது. நார்வே அரசு ஆரம்பத்தில் இருந்து இதை மறுத்து வந்தாலும் யாரும் நம்பத் தயாராக இல்லை.

இந்நிலையில், குழந்தைகளை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் இந்திய அரசு முயற்சி எடுத்துக் கொண்டிருக்க குழந்தைகளின் மாமா குழந்தைக்கு இந்தியாவில் கார்டியனாக இருப்பதற்கு சம்மதம் தெரிவித்து இருந்தார். இவை எல்லாம் நேற்று வரை. இன்று திடீர் திருப்பமாக குழந்தையின் தந்தையே குழந்தைகள் நார்வேயின் குழந்தைகள் நல்வாழ்வு மையத்தில் இருப்பதையே தாம் விரும்புவதாகவும், தன் மனைவி ஒரு கொடுமைக் காரி எனவும், பல நேரங்களில் தன்னை அடிக்கடி  அடித்து துன்புறுத்தியதாகவும்,  குழந்தைகளுக்காக இவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டதாகவும்  தற்போது  தெரிவித்துள்ளார். 

இதற்க்கு ஆதாரமாக தாங்கள் பல முறை குடும்ப பிரச்சனைகளுக்காக கவுன்சிலிங் சென்றதையும் கூறியுள்ளார். மேலும் நார்வே அரசுத் தரப்பில், அக்குழந்தைகள் கடுமையான மன சிதைவுக்கு ஆளாகி உள்ளதாகவும், பெற்றோர்கள் அடிக்கடி சண்டை இட்டு கொண்டதும், கை கலப்பில் இறங்கியதும் அச் சிறு குழந்தைகளை பெரிதும் பாதித்ததால் அவர்களுக்கு  பெற்றோர்கள் மீது இருந்த பாச பிணைப்பு உடைந்து சிதைந்து போய்  விட்டதாக  குற்றம் சாட்டி உள்ளனர்.

கடைசியாக குழந்தைகளை இந்தியாவில் தத்து எடுத்து பார்த்துக் கொள்வதாக கூறி இருந்த குழந்தைகளின் மாமாவும் இன்று தன் முடிவில் இருந்து பின் வாங்கி உள்ளார். அவர் கூறுகையில், குழந்தைகளுக்கு தற்போது உள்ள வசதியான சூழ்நிலையை தன்னால் தர இயலாது என தான்  பயப்படுவதாக தெரிவித்துள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தையின் தந்தையே தன் குழந்தைகள் நார்வே வளர்பகத்தில் வளருவதையே தாம் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த உண்மை எல்லாம் வெளி வருவதற்கு முன்பே இந்திய அரசியல் வாதிகளும் (பி. ஜே. பியின் சுஸ்மா சுவராஜ் உட்பட), பத்திரிகை, தொலைகாட்சிகளும் நார்வே அரசை ஒரு நரகசுரன் போல் சித்தரித்து முடித்து விட்டன.

* நார்வே குழந்தைகள் காப்பகம் என சொன்னாலும், அவர்கள் ஒரு இந்திய குடும்பத்தின் பராமரிப்பில் தான் உள்ளனர் என்பது ஒரு கூடுதல்  செய்தி. இதிலிருந்தே தெரியவில்லையா? நார்வே அரசுக்கு குழந்தைகள்  மீது உள்ள அக்கறை.  


share on:facebook

Sunday, March 18, 2012

அமெரிக்க டிரைவிங் லைசன்ஸ் அவ(வி)திகள்: பாகம் - 1


உங்களிடம் ஒருவர் வந்து நம்மூர் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் எதற்கும் லஞ்சம் வாங்குவதில்லை என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் நம்பத்தான் வேண்டும் நீங்கள். ஆம், ஆனால் ஒரே ஒரே வித்யாசம். நம்மூர் என்று நான் சொன்னது அமெரிக்காவில் உள்ள எந்த ஒரு நகரத்தின் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை (DMV).

அமெரிக்காவில் DMV என்று சொல்லப் படுகின்ற நம்மூர் வட்டார போக்குவரத்து அலுவலக செயல்பாடுகள் பற்றி ஒரு பதிவு போட வேண்டும் என்பது என் நீண்ட நாளைய ஆசை. அதை பற்றி எழுதுவதால் உடனே இந்தியாவை பற்றி குறை கூறுவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். ஒரு ஆதங்கத்தில் தான் இதை எழுதுகிறேன். 

அமெரிக்காவில் டிரைவிங் லைசன்ஸ் என்பது நம்மூர் ரேஷன் அட்டையை போன்ற மிக முக்கியமான ஒரு ஆவணம். வண்டி ஓட்டும் உரிமையை தருவதை விட ஓட்டுனர் அடையாள அட்டை இங்கு ஒரு முக்கியமான அடையாள அட்டையாக (identity card) கையாளப் படுகிறது. பாங்கில் அக்கவுன்ட் ஓபன் பண்ணுவது முதல், ஹோட்டலில் ரூம் போடுவது வரை இங்கு ஓட்டுனர் உரிமையையை தான் அடையாள அட்டையாக உபயோகிக்கிறார்கள். அதுவும் இல்லாமல் கார் ஓட்ட முடியாது என்பது இங்கு ஒரு கால் இல்லாதவன் போல் ஆகும். ஆகவே ஓட்டுனர் உரிமை பெறுவது என்பது இங்கு நம்மூர் எஸ். எஸ். எல். சி. தேர்வு எழுதி பாஸாவது போல.

அப்படி பட்ட முக்கியவத்துவம் வாய்ந்த ஓட்டுனர் உரிமையை பெறுவதற்கு இங்கு ஒரு பைசா லஞ்சமாக கொடுக்க வேண்டியதில்லை. பெரும்பாலானோர் முதலில் எழுத்து தேர்வு எழுத வேண்டும். ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு விதிமுறை இருந்தாலும் பொதுவாக நாற்பது கேள்விகள் இருக்கும். அதில் குறைந்த பட்சம் முப்பத்தி நாலு கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தால் தான் 'பயிற்சி' ஓட்டுனர் உரிமை தருவார்கள்.

எழுத்து தேர்விற்கு ஏதோ பப்ளிக் எக்ஸ்சாமுக்கு தயாராவது போல் போக்கு வரத்து விதிகள் அனைத்தையும் ஒன்று விடாமல் படித்து மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். பத்து வருடம் அமெரிக்காவில் கார் ஒட்டி இருந்தாலும் இன்னொரு மாகாணத்திற்கு செல்லும் போது அங்கு எழுத்து தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் இருப்பதால் அதை பாசாகாமல் நமக்கு ரெகுலர் லைசன்ஸ் கிடைக்காது. ஆன்லைன், பழைய வினாத்தாள்கள் என எல்லாவற்றையும் படித்து பார்க்க வேண்டும்.

எழுத்து தேர்வில் தேர்வாகி விட்டால் அவர்களுக்கு பயிற்சி ஓட்டுனர் உரிமை தருவார்கள். பயிற்சி ஓட்டுனர் உரிமை வைத்திருப்பவர்கள் 'L' போர்ட் எல்லாம் போட்டுக் கொண்டு காரை ஓட்ட வேண்டியதில்லை. அதே நேரம் உரிய லைசன்ஸ் வைத்திருக்கும் ஒருவர் வண்டி ஓட்டுபவரின் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும்.

அமெரிக்காவில் பொதுவாக மக்கள் அதிகம் காணப்படும் இடங்களில் 'DMV' அலுவலகமும் ஒன்று. ஆனால், நம்மூர் மாதிரி உள்ளே நுழைவதற்கு அரை கிலோ மீட்டார் முன்பே புரோக்கர்களையும், தரகர்களையும் பார்க்க முடியாது. உரிய பயிற்சி ஓட்டுனர் லைசன்ஸ், வாகனத்திற்கான காப்பீடு, பதிவு அட்டை ஆகியவற்றுடன் லைசன்ஸ் வைத்திருக்கும் ஒருவருடன் சென்றால் தான் 'ரோடு டெஸ்ட்' எடுத்துக் கொள்ள முடியும். டெஸ்ட் எடுக்கும் முன், காரின் முக்கியமான கருவிகள், செயல்பாடுகளை காண்பிக்க, செயல்படுத்த சொல்லி கேட்பார்கள். அதற்கும் மதிப்பெண் உண்டு. அதன் பிறகே கண்காணிப்பாளர் உங்களுடன் அமர்ந்து வண்டியை ஓட்டச் சொல்லி கேட்பார்.

அதன் பிறகு ரோடு டெஸ்ட் எப்படி இருக்கும். அது அடுத்த பதிவில்...

அமெரிக்க போலீஸ் பற்றி கொள்ளை கொள்ளும் அமெரிக்க போலீஸ்.

அமெரிக்க அரசு பள்ளிகள் பற்றி அமெரிக்க அரசு பள்ளிகள் சிறந்தவையா?

share on:facebook

Wednesday, March 14, 2012

ஒரு ராஜீவ் காந்தி, இரு ராஜபக்க்ஷே = ?



லேசான மனம் படைத்தவர்கள் இதை தயவு செய்து பார்க்க வேண்டாம்...


share on:facebook

Tuesday, January 17, 2012

கேப்டனுக்கு ஆப்பு. அரசு நடவடிக்கை. விரைவில் சிறை?

சமீபத்தில் இத்தாலி அருகே கடலில் மூழ்கிய சொகுசு கப்பலின் காப்டன் பிரான்செஸ்கோ வீட்டு காவலில் வைக்கப் பட்டுள்ளார். அவர் மீது கப்பல் பயணிகளை காப்பாற்றாமல் கப்பலை விட்டு வெளியேறியது, பலர் இறக்க  காரணமானது என கடுமையான குற்றச் சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ளது.

கடந்த வாரம் விபத்துக்கு உள்ளான சொகுசு கப்பலின் காப்டன் கப்பலில் பயணித்த அனைத்து பயணிகளும் பத்திரமாக கப்பலிலிருந்து வெளியேற்ற படுவதற்கு முன் கப்பலின் காப்டன் என்ற முறையில் கப்பலை விட்டு வெளியேறி விட்டார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இத்தாலிய சட்டப்படி இக்குற்றத்திற்கு 11 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

விபத்து பற்றி முதலில் செய்தி அறிந்த இத்தாலிய காவல் துறை கடலோர பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்ததும், கடலோர காவல் படை கப்பலின் காப்டனை தொடர்பு கொண்டு பயணிகளின் பாத்து காப்பு பற்றி கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால், காப்டன் பிரான்செஸ்கோ அவர்களுக்கு முறையான பதில் அளிக்காமல் எல்லா பயணிகளும் பத்திரமாக வெளியேறும் வரை கப்பலை விட்டு வெளியேறக் கூடாது என்ற காவல் படையின் உத்தரவையும் மீறி பயணிகள் அனைவரையும் தண்ணீரில் தத்தளிக்க விட்டு அவர் மட்டும் கப்பலை விட்டு வெளியேறி உள்ளதாக சொல்லப்படுகிறது.

காப்டன் பிரான்செஸ்கோவுக்கும் காவல் படைக்கும் இடையே நடந்த  உரையாடல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் காப்டன் பிரான்செஸ்கோவை உடனடியாக கப்பலுக்குள் சென்று அங்கு மொத்தம் எத்தனை பேர் இருக்கிறார்கள், சிறியவர்கள் வயதானவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் தெரிவிக்குமாறு கேட்டதற்கு அவர், இங்கு ஒரே இருட்டாக இருக்கிறது. ஆதலால் நான் ஒன்றும் செய்ய முடியாது. நான் வெளியே போகிறேன் என்று கூறி இருக்கிறார். அதற்க்கு காவல் படை அதிகாரி, நீங்கள் இப்போ வெளியே போய் உங்கள் வீட்டுக்கா போக போகிறீர்கள்?  உடனடியாக நீங்கள் கப்பலுக்குள் சென்று அங்குள்ள பயணிகளை பாதுகாக்க  நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீங்கள் வெளியே வந்தாலும் நாங்கள்  உங்களை உள்ள தள்ள வேண்டி இருக்கும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.  

இக்கப்பலில் பயணித்த 4200 பேரில் பெரும்பாலானோர் சிறு படகுகள் மூலமும், மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் காப்பாற்ற பட்டு உள்ளனர். இருப்பினும் இன்னும் 50 பேருக்கு மேல் காணவில்லை. 11 பேரின் உடல்கள் இதுவரை கடலில் இருந்து கண்டெடுக்கப் பட்டுள்ளது. டைடானிக்  கப்பல் விபத்துக்குள்ளானது போலவே இச் சோகச் சம்பவமும் நடை பெற்று உள்ளது. 

பொதுவாக இவ்வாறு சொகுசு பயணம் போகும் பல மேலை நாட்டவர்களை  இவ்விபத்து பெரிதும் கிலியை கிளப்பி உள்ளது. இம்ம், இவ்விபத்தையும் அதில் பலியானோர் எண்ணிக்கையையும் நம்மூரில் ஏற்பட்ட விபத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் இங்கு இழப்பு மிகவும் குறைவே. இருந்தும் விபத்துக்கு பொறுப்பானவர்களுக்கு அளிக்கப் படும் தண்டனையை பொறுத்தே மீண்டும் அம்மாதிரி விபத்து எதிர் காலத்தில் நேராவண்ணம் தடுக்க இயலும் என்பதை இத்தாலி போன்ற அரசுகள்  நன்றாக அறிந்து வைத்துள்ளன என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.

share on:facebook

Wednesday, September 14, 2011

சுனாமியின் சுயரூபம். கார் கேமராவில் பதிவான நேரடி காட்சிகள்.



நன்றி: youtube 

share on:facebook

Sunday, July 31, 2011

வாடகை கார்


ஒரு காலத்தில் கார்களை காண்பதே அபூர்வமாக இருக்கும்.  நான் சிறுவனாக  இருந்த போது எங்கள் தெருவிலேயே (10 வீதிகளை கொண்டது)  மொத்தம்  மூன்று பேரிடம் தான் கார் இருந்தது. ஒரு டாக்டர்(பீயட்) , எங்கள்  ஏரியாவின்  ஓனர்(அம்பசிடர்) மற்றும் ஜமீந்தார்(ப்ளைன் மூத்) ஒருவரிடம் மட்டும் தான்.

அது போல் டிராவல்ஸ் என்றெல்லாம் ஒன்றும் இருந்ததில்லை. ஒரே ஒரு டாக்சி ஸ்டாண்ட் மருத்துவ கல்லூரி அருகே இருக்கும். அதில் அதிகமாக இருப்பது, மஞ்சள் கருப்பு கலரில் உள்ள அம்பாசிடர் கார்கள் தான். அதை கண்டாலே எனக்கு  கிலியாகிவிடும். ஏனென்றால் அது பெரும்பாலும்  இறந்தவர்களை  எடுத்துக்கொண்டு  போவதற்கு தான் உபயோகிக்கப்படும்.   இப்போதெல்லாம்   காலம் மாறிவிட்டது. கார் இல்லாத வீடுகளையோ  டாக்ஸி  ஸ்டான்ட் இல்லாத ஏரியாவையோ பார்க்க முடிவதில்லை. சரி  விசயத்திற்கு  வருவோம்.  அமேரிக்கா போன்ற மேலை நாடுகளில் உள்ள  வசதிகளில்  மெடிக்கல்  இந்சூரன்சிற்கு பிறகு என்னை மிகவும் கவர்ந்தது  ரெண்டல் கார்  பாலிசி தான்.     

அமெரிக்காவில் ரெண்டல் கார் என்பது மிகவும் வசதியான ஒரு சேவை எனலாம்.  e -Enterprise, AVIS, hertz என பல கார்பரேட் நிறுவனங்கள் இந்த  சேவையை வழங்கி வருகின்றன. ஒரு மேஜர் கிரெடிட் கார்டு, உங்கள்  ஓட்டுனர் உரிமை இவை இரண்டும் இருந்தால் போதும். உங்களுக்கு  விருப்பமான காரை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். கட்டணம்  நீங்கள் தேர்வு செய்யும் காரைப்பொருத்தும், நாட்களைப்பொருத்தும்  இருக்கும். உதாரணமாக ஐந்து பேர் பயணம் செய்யக்கூடிய சாதாரண
ரக காருக்கு ஒரு நாளைக்கு 15 - 20 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும்.  பெட்ரோல், இன்சூரன்ஸ் செலவு உங்களுடையது.

ரெண்டல் கார்கள் பொதுவாக புதிதாகவே இருக்கும். அதாவது ஓரிரு  வருடங்களுக்கு மேல் ஆன கார்களை ரெண்டல் கம்பெனிகளில் பார்ப்பது அரிது. அதே போல் மைலேஜும் 50 - 70 ஆயிரத்தை தாண்டி இருக்காது.  வண்டியை நீங்கள் வாடகைக்கு எடுக்கும் போது எப்படி கொடுக்கிறார்களோ  அதே போல் நீங்கள் திரும்பி கொடுக்க வேண்டும். உங்களை  வைத்துக்கொண்டே வண்டியை ஒரு முறை வலம் வந்து ஏதாவது ஸ்க்ராட்ச்  அல்லது நசுங்கல் இருந்தால் அதை குறித்து கொள்வார்கள், அதே போல் புல்  டான்க் பெட்ரோல் நிரப்பி கொடுப்பார்கள். நீங்கள் கொடுக்கும்  போது அதே போல் பெட்ரோலை நிரப்பி கொடுத்து விட வேண்டும்.

அமெரிக்காவில் வெளியூர் அல்லது வெகு தூரம் பயணிக்க வேண்டுமானால்  பெரும்பாலானவர்கள் வாடகை கார்களையே தேர்ந்தெடுப்பார்கள். இதற்கு  முக்கிய  காரணம் வாடகை கார்கள் புதியவைகளாக இருப்பதால் பயணத்தின் நடுவில் பெரும்பாலும் சிக்கல் ஏதும் ஏற்படாது. அப்படியே வந்தாலும் அதை  வாடகை கார் கம்பெனி பார்த்துக்கொள்ளும். அதே போல் இங்கு உங்கள் காரை  பிற்காலத்தில் விற்க வேண்டுமானால் எல்லோரும் கார் எவ்வளவு  மைலேஜ் போயிருக்கிறது என்பதை முக்கியமாக பார்ப்பார்கள். ஆகையால்  உங்கள் காரில் வெகு தூரம் செல்வதால் ஏற்படும் மைலேஜ் மற்றும்  தேய்மானத்தை கணக்கில் கொண்டால் அது நீங்கள் வாடகை கருக்கு செலவு  செய்வதை விட மேலாக இருக்கும். இதுவும் வாடகை காரை மிகவும்  விரும்பி எடுப்பதற்கு ஒரு காரணம். மற்றொன்று நீங்கள் விரும்பும் கார் மாடல்களை வாடகைக்கு எடுத்து நீங்களே ஒட்டி உங்கள் ஆசையை  பூர்த்தி  செய்து கொள்ளலாம்(வாடகை கார் என எந்த அடையாளமும்  வெளியில் இருக்காது).   

இம்மாதிரி வாடகை கார் வழிமுறைகள் இங்கு பெருமளவில் வெற்றி  பெற்றதற்கு இங்குள்ள பெரும்பாலான மக்களின் நேர்மையும் கடுமையான  சட்ட திட்டங்களும் ஒரு காரணம். வாடகை காரில் அந்த காரின்  மேனுவல்ஸ் (manuals) டூல்ஸ் உட்பட எல்லாம் அப்படியே லெதர் பாக்கில்  வைக்கப்பட்டிருந்தாலும் அதை யாரும் எடுத்து சென்று விட மாட்டார்கள். அதே போல் காரை நாமே ஒட்டுவதால் நம் குடும்பத்துடன் செல்லும்   போது  நமக்கும் ப்ரைவசியும் இருக்கும்.

தற்போது இந்தியாவிலும் முன்னே கூறியிருந்தது போல் மெடிகல் இன்சூரன்ஸ்  பிரபலமாகி வருகிறது. அதே போல் இம்மாதிரி வாடகை கார் கம்பெனிகளும்  வந்தால் சூப்பராக இருக்கும். ஹ்ம்ம் கனவு நினைவாகுமா?    

வாடகை சைக்கிள் பற்றிய என் முந்தைய பதிவு இங்கே...



share on:facebook

Tuesday, April 26, 2011

கிளே பாம் - உலக போரில் எதிரிகளை கொல்ல பயன்படுத்தப்பட்ட கொசுக்கள்


"இந்த கொசுத்தொல்ல தாங்கமுடியல சாமி". கவுண்டமணியின் பிரபலமான  காமெடி வசனம் இது. ஆனால் இந்த கொசுக்களை வைத்து இரண்டாம்  உலகப்போரில்  ஒரு யுத்தமே நடந்துள்ளது.

இரண்டாம் உலகப்போரின் போது கிளே பாம்  என்று சொல்லக்கூடிய ஒரு ஒரு பாம்மை ஜப்பானியர்கள் சீனாவின் ராணுவ  மையங்களின் மீது  போட்டுள்ளார்கள். இந்த பாமில் அடக்கி வைக்கப்பட்ட எல்லாமே கொசுக்கள்  தான்.  கொசுக்கள் என்றால் சாதாரண கொசுக்கள் இல்லை. பிளாக் பிளேக் என்று சொல்லக்கூடிய உயிர்கொல்லி வியாதியான பிளேக் நோய் கிருமிகள்  செலுத்தப்பட்ட கொசுக்கள். இந்த கொசு ஒரு முறை கடித்தால் அடுத்த சில  நாட்களில் மர்கயா தான். இதே போல் ஒரு கிளே பாம்மை அமெரிக்காவின்  கலிபோர்னிய மாகாணத்திலும் போடுவதாக ஒரு பிளான் இருந்ததாம். ஆனால் அதை செயல்படுத்தும் முன்பே இரண்டாம் உலகப்போர்  முடிந்துவிட்டதாம்.  

பண்டைய காலத்து போர்களிலும் இம்மாதிரி விஷ வண்டுகள், தேள் போன்ற  ஜந்துக்களை எதிரிகளின் கூடாரம் நோக்கி விடுவதும் அதன் மூலம்  எதிரிப்படையை நாசப்படுத்துவதும் ஒரு போர் கலையாக இருந்துள்ளது.  

தற்போது அமெரிக்க ராணுவம், வண்ணத்து பூச்சிகளாக வளரும் முன்  அவை  "லாவா" எனப்படும் புழு போன்ற நிலையில் இருக்கும் போதே சிறிய  மைக்ரோ சிப்புகளை வைத்து  "லாவா" வண்ணத்துப்பூச்சி  ஆனபின் உள்ளே  இருக்கும் மைக்ரோ சிப்பின் மூலம் வண்ணத்துப்பூச்சியின்  நடமாட்டத்தை  கண்காணிக்கும் ஆராய்ச்சி நடை பெறுவதாகவும் இது வெற்றி  பெற்றால்  இம்மாதிரி வண்ணத்துப்பூச்சிகளை வைத்து எதிரிகளின்  அசைவுகளை  கண்காணிக்க ராணுவம் முடிவு செய்துள்ளதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது. ம்ம்...டெக்னிக் எல்லாம் பழசுதான். டெக்னாலஜி மட்டும் புதுசு.

இன்னொமொரு கொசு கதை விரைவில்...

share on:facebook

Monday, April 25, 2011

தள்ளு தள்ளு முக்கி தள்ளு - இது சீனா ஸ்டைல்.


நெட்டில் ரசித்தது...



இதுக்கு நம்ம பாண்டியனும் பல்லவனும் சோழனும் (நான் எக்ஸ்பிரெஸ் ரயிலை சொல்கிறேன்) எவ்வளவோ தேவலை போலிருக்கு.

share on:facebook

Tuesday, March 22, 2011

பீனிக்ஸ் தேசம் - வியக்க வைக்கும் ஜப்பானியர்கள்.


2001 செப்டம்பர் 11. யாரும் மறக்க முடியாத நாள். உலகில் தங்களை மிஞ்ச மீற யாரும் இல்லை என்ற மெதப்புடனும் தெம்புடனும் இருந்த அமெரிக்காவையே  அதன் வர்த்தக தலை நகரமாக விளங்கிய நியூயார்க் நகரத்தில் வானோக்கி  இருந்த   இரட்டை கோபுரங்களை தீவிரவாதிகள் விமானத்தால் மோதி  சிதைத்ததை யாராலும்   நியாயப்படுத்த முடியாது.  அதே சமயம் தீவிரவாத  தாக்குதல் நடந்தவுடன்  பேரிடர்  மேலாண்மை  என  சொல்லப்படுகின்ற  Disaster Management எல்லாம்  தெரிந்து அறிந்து புரிந்து வைத்திருந்தும், அமெரிக்க  அரசும் மக்களும் அதை எதிர் கொள்வதில் தோல்வியைத்தான் தழுவினார்கள்.

நியூயார்க் நகர வீதிகளில் மக்கள் அலறி அடித்துக்கொண்டு  ஓடியதும், தொலைபேசிகளும், கைபேசிகளும் செயல் இழந்து போய்,  ஆங்காங்கே மக்கள் எப்படி தங்கள் வீடுகளுக்கு திரும்பி போவது என  தெரியாமல் விழி பிதுங்கி நின்ற போது, அமெரிக்காவில் இப்படியா? அமெரிக்க மக்கள் இப்படியா என அனைவரும் ஆச்சர்யப்பட்டார்கள்.

இன்று அதை விட பேரழிவு, அதுவும் இயற்கையின் சீரழிவு, யாராலும்  கட்டுப்படுத்த முடியாத சுனாமி, பூகம்பம், அணு கசிவு எனவு நினைத்து  பார்க்க முடியாத அளவிற்கு ஜப்பான் மிகப் பெரும் இயற்க்கை பேரிடரை  சந்தித்துக்  கொண்டு இருக்கிறது. ஆனால் ஜப்பானிய மக்கள் என்றும்  போல் இன்றும் மனம்  தளராமல், அரண்டு போகாமல் எல்லாவற்றையும்  எதிர் கொண்டு வருகிறார்கள்.

ஜப்பானில் பூகம்பம் ஏற்பட்ட போது அங்கிருந்த லண்டன்  பத்திரிக்கையாளர் ஒருவர் தனது அனுபவத்தை இப்படி கூறுகிறார். பூகம்பம்  வந்தபோது நான் ஒரு ரெயில் நிலையத்தை விட்டு வெளியே வந்து கொண்டு இருந்தேன். அப்போது பிளாட்பாரம் நகர்வதை போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. சரி, ரெயில் வேகமாக நகர்ந்து செல்வது தான் அப்படி ஒரு உணர்வை எனக்கு ஏற்படுத்தியதோ என நினைத்துக் கொண்டு நான் சென்று கொண்டு இருந்த போதே, அருகே தெரிந்த தொலைக்கட்சியில் பூகம்பம் ஏற்பட்டிருப்பதையும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு  செல்லுமாறும் அறிவிப்பு வந்தது கொண்டிருந்தது.

எனக்கு உடனே  படபடப்பு தொற்றிக்கொண்டது. ஆனால் என்னை  சுற்றி உள்ள எல்லோரும்  அமைதியாக அதே சமயத்தில்  வேகமாக  பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரத் தொடங்கினார்கள்.  எங்கும் ஒரு கூச்சலோ மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடுவதையோ என்னால் காண முடியவில்லை. ஏதோ பள்ளி குழந்தைகள் ஆசிரியர் கூறினால் எப்படி தங்கள் வகுப்பறைகளுக்கு அமைதியாக வேகமாக  செல்வார்களோ அதே ஒழுங்குடன் அனைவரையும் பார்க்க  முடிந்தது. என கூறியுள்ளார்.

மேலும் வானை தொடும் கட்டடங்கள் ஜெல்லியை போல் ஆடியபோது கூட  அதை  பார்த்து யாரும் மிரளவில்லை. ஒன்று அவர்கள் கட்டட கலையின் மீது  அவர்களுக்கு உள்ள நம்பிக்கை(நம்மூரில் மழைக்கு ஒதுங்கினால் கூட  கட்டடம் ஸ்ட்ராங்கா என பார்த்துவிட்டு தான் ஒதுங்க வேண்டும்).  இன்னொன்று அவர்கள் அந்த  அளவிற்கு தங்களை தயார்  படுத்திக்கொண்டுள்ளார்கள். நண்பர் ஒருவர் குறிப்பிட்டதைப்போல் சுனாமியின் போது  ஆங்காங்கு  பொருட்கள் கிடந்தபோதும் தெருக்கள் வெறிச்சோடி கிடந்த  போதும் ஒரு திருட்டு கொள்ளை அங்கு நடக்கவில்லை.
நம்மூரில் நாலு நாள் மழைக்கே பள்ளி அலுவலகங்களுக்கு விடுமுறை  விட்டு விடுவார்கள். ஜப்பானில் நில நடுக்கத்திற்கு அடுத்த நாளே டொயோடோ   கம்பெனி  தங்கள் தொழில் உற்பத்தியை தொடங்கி விட்டார்கள்.  ஜப்பானியர்களுக்கு தங்கள் நாட்டின் மீதும் தங்கள் மீதும் அதீத நம்பிக்கை. அணு கசிவின் காரணமாக குறிப்பிட்ட பகுதியில் உள்ள மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அரசு  அறிவுறித்தியது.  ஒருவரும் ஏன் என்றோ முடியாது என்றோ  கூறவில்லை. அனைவரும்  அப்படியே வீட்டுக்குள் முடங்கிப்  போனார்கள்.

பிற நாடுகளில் பேரழிவுகள் ஏற்பட்ட போது உதவிக்காக எல்லோரிடமும்  கை நீட்டினார்கள்(அமெரிக்க உட்பட). ஆனால் இன்றுவரை ஜப்பான் பெரிதாக  எந்த உதவியையும் உலக நாடுகளில் இருந்து கேட்கவில்லை.  இதை  அமெரிக்காவில் உள்ள ரெட் கிராஸ் தெரிவிக்கிறது.  எங்களுக்கு என்ன  மாதிரியான உதவி ஜப்பானுக்கு தேவைபடுகிறது என்றே  தெரியவில்லை.  ஜப்பான்  ஒரு வளமிக்க நாடு. அது குறிப்பிட்டு  ஏதாவது  உதவி கேட்டால் தான் நாங்கள் செய்ய முடியும் என  அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

தற்போது ஒரே நேரத்தில் ஏற்பட்ட சுனாமி, நில நடுக்கம் மிக  பெரிய அளவிலான அணு கசிவு ஆகிய சோதனைகளில் இருந்து ஜப்பான் வழக்கம் போல் மீண்டு வந்து விட்டால் அவர்களை வெல்ல  உலகத்தில் வேறு யாரும் கிடையாது.

ஜப்பானியர்கள் உலகத்திற்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறார்கள். இந்த பேரழிவில் இருந்தும் அவர்கள் மீண்டும் மீண்டு வருவார்கள் என நம்புவோம் ஆக.

கடந்த சில வருடங்களுக்கு முன் ஜப்பான் செல்ல எனக்கு வாய்ப்பு வந்தது.  குறுகிய  கால பயணம் என்பதாலும், அங்கு அடிக்கடி ஏற்படும் நில  நடுக்கம், ஆங்கில  கல்வி முறை போதனை அதிகம் இல்லாதது  போன்ற  காரணங்களால் அதை தவிர்த்து விட்டேன். நானும் ஒரு சராசரி இந்தியன் தானே!   

ஆமாம் Seismologist என்றால் யார் என்று தெரியுமா உங்களுக்கு? Google  பண்ணாமல்  முடிந்தால் பின்னூட்டத்தில் போடுங்கள். நன்றி.

share on:facebook