Showing posts with label தஞ்சாவூர். Show all posts
Showing posts with label தஞ்சாவூர். Show all posts

Friday, February 22, 2013

பிப்ரவரி - 24 : ஏழைகளுக்கு என்ன பயன்?

தலைப்பை பார்த்து நீங்க வேற ஏதாவது கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை.

எனது நண்பரும் தஞ்சை பாம்பே ஸ்வீட் ஸ்டால் உரிமையாளருமான திரு. மணி அவர்கள் வருடந்தோறும் தன் தந்தையின் நினைவாக அவரின் பெயரில் செயல்படும் அறக்கட்டளை சார்பாக 'இலவச கண் சிகிர்ச்சை' முகாமை கடந்த பல வருடங்களாக நடத்தி வருகிறார். அதை பற்றிய விளம்பரம் தான் கீழே உள்ளது.


தஞ்சையை சுற்றியுள்ள கிராமபுறங்களில்  வீடு வீடாக சென்று ஏழை எளியவர்களை இலவச கண் பரிசோதனைக்கும், அதன் பிறகு தேவை எனில் மருத்துவர்கள் ஆலோசனை பேரில் கண் அறுவை சிகிர்சையும் செய்து கொள்ள அவரின் அறக்கட்டளை இந்த வார இறுதியில் ஏற்பாடு செய்துள்ளது.

இது பற்றி ஒரு முறை நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த போது, பொதுவாக கிராமத்தில் நீங்கள் இருதய பரிசோதனை, பீபி, சுகர் எல்லாம் செக் பண்றீங்களா? அப்படின்னு கேட்டா, அட போப்பா, அதெல்லாம் நமக்கு வராது என சர்வ சாதரணமாக சொல்லி விடுவார்கள். அதே, ஐயா, உங்க கண்ணா டெஸ்ட் பண்ணி கொள்கிறீர்களா? இல்லைனா பிறகு பிரச்னை ஆச்சுனா பாக்க கொள்ள சிரமமா போய்டும்னு சொன்னா போதும். உடனே கவலைப்பட்டு ஆமாப்பா கண்ணு கொஞ்ச நாளா பிரச்னை பண்ணுது. அத பாக்கணும்னு  உடனே கிளம்பி விடுவார்கள். அந்த அளவிற்கு அவர்கள் கண்களுக்கு முக்கியவுத்துவம் கொடுகிறார்கள். அதுவே எங்கள் முகாமுக்கு பெரிய வரவேற்ப்பும், ஆர்வத்தையும் கொடுப்பதாக கூறினார்.

நமக்கு தெரிந்து நம் வீட்டில் வேலை செய்வோர், நமக்கு தெரிந்த எளியோர் எத்தனையோ பேர் இருப்பார்கள். அவர்களுக்கு எல்லாம் நம்மால் உதவ முடியாவிட்டாலும் இது போன்ற செய்திகளை அவர்களுக்கு தெரிவித்தால் போதும். அதுவே நாம் அவர்களுக்கு செய்யும் உதவி. எங்கள் வீட்டில் வேலை செய்யும் ஒரு அம்மாவிற்கு இந்த தகவலை நாங்கள் சொல்லி விட்டோம்.

நீங்களும் சொல்வீர்கள் தானே? நன்றி.




share on:facebook

Wednesday, October 24, 2012

நண்பேண்டா - இனிப்பும் உழைப்பும். தஞ்சையின் பிரபல தொழில் அதிபர்.


 உலகில் மற்ற அனைத்து உறவுகளும் ஏதோ ஒரு காரணத்தால் நம்மால் மட்டுமே முடிவு செய்யப் படுவதில்லை. அன்னை, தந்தை, அக்காள், அண்ணன் ஏன் மனைவி கூட நம்மால் மட்டுமே தேர்ந்தெடுக்க முடியாது. நண்பர்களை தவிர.

அதிலும் பள்ளி கல்லூரி கால நண்பர்கள். அவர்களுக்கு என்று ஒரு தனி சிறப்பு உண்டு. வேலையில் சேர்ந்த பிறகு ஏற்படும் நட்புகள் வேறு. அவர்களிடம் எல்லாவற்றையும் நாம் பகிர்ந்து கொள்ள முடியாது. ஸ்டேடஸ், ஈகோ, கவுரவம் என பல காரணங்கள் அதற்குள் வரும். ஆனால், பால்ய நண்பர்கள் அப்படி இல்லை. அவன் சாப்பாட்டை நாம் சாப்பிட்டு, காசில்லாத போது சிறிதும் யோசிக்காமல் மாம்ஸ், ஒரு அஞ்சு ரூபா இருந்தா கொடேன் என்று கேட்டு விடுவோம்.

அப்படி ஒரு பால்ய நண்பரை கடந்த மாதம் சந்திக்க நேர்ந்தது. ஒரே ஊர் என்றாலும் எப்பவாவது இந்தியா வந்து கொண்டிருந்த போது அவ(ரை)னை சந்திக்கும் வாய்ப்பு பெரும்பாலும் கிடைத்ததில்லை. அதற்க்கு கரணம் அவர் தற்போது ஒரு மிக பெரிய தொழில் அதிபர். சென்ற முறை தஞ்சை சென்றிருந்த போது அவரின் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிக்கொண்டு திரும்பும்போது எதிரே நண்பர் வந்தார். பார்த்தவுடன் சிறிது மலைத்து நின்று விட்டு, பிறகு சுதாரித்து என்னை அடையாளம் கண்டு கொண்ட பின், அவரின் முகத்தில் சந்தோசத்தை பார்க்க வேண்டுமே. எனக்கும் தான்.

கைகளை இறுக பிடித்துக் கொண்டு பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டிருக்கையிலேயே, அவரை சுற்றி ஓரிரு முக்கியஸ்தர்கள் எதற்கோ அவருக்காக கத்துக் கொண்டிருப்பதை உணர்ந்து, சரிப்பா, நீ எப்ப ப்ரீயா இருப்பனு சொல்லு. நான் வந்து பார்கிறேன் என்றேன். நண்பர் அதை பற்றியெல்லாம் கவலை படாமல், தன்னுடன் இருந்தவர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைக்க தொடங்கிவிட்டார்.

இவன் என்னுடன் பள்ளியில் படித்தவன். என்னுடைய பெஸ்ட் பிரண்டு. ரொம்ப வருடங்களுக்கு பின் மீண்டும் சந்திக்கிறோம் என்று பழைய கதைகளை சிறிது நேரம் எல்லோருடனும் பகிர தொடங்கி விட்டார். பரிட்சையில் காப்பி அடித்தது முதல், கட் அடித்து விட்டு சினிமா போனது வரை.

நாங்கள் எல்லாம் அதை படித்து, இதை படித்து, எங்கெங்கோ சென்று ஒரு வருடத்தில் சம்பாதித்ததை, சம்பாதித்துக் கொண்டிருப்பதை, நண்பர் தன தொழில் மூலம் ஓரிரு மணி நேரத்தில் கல்லா கட்டிவிடுவார். அது மட்டுமில்லை. இன்று தஞ்சை நகரில், முக்கியமான ஒரு தொழில் அதிபர். பிராதான தொழிலான 'ஸ்வீட் ஸ்டால்' தவிர, பழமுதிர்சோலை, கல்யாண மண்டபம் என்று அவரின் தொழில் சாம்ராஜ்யம் பரந்து விரிந்து கிடக்கிறது.

இவை எல்லாவற்றுக்கும் காரணம், உழைப்பு உழைப்பு உழைப்பு மட்டும் தான். பள்ளி நாட்களிலேயே, பள்ளி விட்டு வீடு திரும்பினாலும், மீண்டும் பள்ளிக்கு வரும் முன்பும், ஸ்வீட் தயாரிப்பில் தானும் உட்கார்ந்து, அதன் தொழில் நுட்பங்களை நன்கு கற்றுக்கொண்ட நண்பர் இன்றும் அவ்வப்போது ஸ்வீட் போடும் போது தானும் தொழிலாளர்களுடன் சேர்ந்து வேலை செய்வதை பார்த்திருக்கிறேன்.

தீபாவளி  மற்ற பண்டிகைகளின் போது தஞ்சை ரயில்வே நிலையம் அருகே உள்ள நண்பரின் ஸ்வீட் ஸ்டால் வழியே செல்லும் பேருந்துகள் கூட சில சமயம் நிறுத்தப்பட்டு டிரைவர், கண்டக்டர், பிரயாணிகள் என அனைவரும் அவரின் கடையில் இனிப்புகளை வாங்கி செல்வர். இவை எல்லாவற்றுக்கும் காரணம், தரமான இனிப்பு, கார வகைகள் நியாயமான விலையில் கிடைப்பதே. உதாரணத்திற்கு, சென்னையில் உள்ள பிரபல இனிப்பு கடைகளின் விலைகளை ஒப்பிட்டால், இங்கு அதில் சரி பாதி தான் இருக்கும்.

பெரிய தொழில் அதிபர் மட்டுமன்றி நண்பர் பலருக்கு வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் படிப்புக்கு மட்டுமன்றி பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். நண்பர்களை பற்றி பெருமையாக சொல்லிக் கொள்வதில் யாருக்கு தான் பெருமை இல்லை. அந்த வகையில், தஞ்சை 'பாம்பே' ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர் என் நண்பர் என்பதில் எனக்கும் பெருமை தான்.

தஞ்சை சென்றால், பாம்பே ஸ்வீட் ஸ்டாலில் இனிப்பு வகைகளை வாங்கி சுவைத்து பாருங்கள். அடுத்த முறை தஞ்சை சென்றால் மீண்டும் வாங்காமல் வர மாட்டீர்கள். பாம்பே ஸ்வீட்டில் எனக்கு மிகவும் பிடித்தது, சந்திரகலா மற்றும் ட்ரை குலோப்ஜாமுன். குடிப்பதற்கு பாதாம் கீர்.




      

share on:facebook

Thursday, February 23, 2012

உலகின் மிக பெரிய பீரங்கி - தஞ்சையின் பெருமை

உலகின் சக்தி வாய்ந்த பீரங்கி வேண்டுமானால் தற்போது அமெரிக்கா ஜப்பான் போன்ற நாடுகளில் இருக்கலாம். ஆனால், நான்கு  நூற்றாண்டுகளுக்கு முன் உலகின் மிக பெரிய பீரங்கியை உருவாக்கி அதை  தன நாட்டு பாதுகாப்புக்கு உபயோகித்தது தஞ்சையை சேர்ந்த அரசர் ஒருவர் தான்.

தஞ்சை கீழ அலங்கத்தில் அமைந்துள்ள பீரங்கி மேட்டில் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கும் இந்த பீரங்கி அப்போது தஞ்சையை ஆண்ட  ரகுநாத  நாயக்கால் 1920 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. எதிரிகளிடமிருந்து  நாட்டை காப்பாற்றி கொள்ள வடிவமைக்கப் பட்ட இந்த பீரங்கி டானிஷ்  (டென்மார்க்) தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப் பட்டது.

சுமார் 26 அடி நீளமும், 22 டன் எடை கொண்ட இந்த பீரங்கி போர்ஜ் வெல்டிங்  மூலம்  செய்யப்பட்டது. போர்ஜ் வெல்டிங், காஸ்டிங் மூலம் செய்யப்படும்  பொருளை  விட மிகவும் வலுவானதாக இருக்கும். அதுவே இத்தனை   நூற்றாண்டுகள் ஆகியும் இப்பீரங்கி இன்றும் மலையிலும் வெயிலிலும்     காய்ந்தாலும் துரு பிடிக்காமல் இருக்க காரணம்.

சுமார் 300 மில்லி மீட்டர் வெளி சுற்றளவும் 150 மில்லி மீட்டர் உள் சுற்றளவும் கொண்ட இப்பீரங்கியை தூக்க எட்டு வளையங்கள் மேலே  பொருத்தப் பட்டுள்ளன (அவற்றில் தற்போது இரண்டு வளையங்கள் மட்டுமே உள்ளன). 43 இரும்பு பட்டைகளும், 94 வலையங்களினாலும்  உருவாக்கப் பட்டுள்ள இப்பீரங்கி, எதிரிகள் தஞ்சையின் கீழ வாசல்  வழியாக நுழைவதை தடுக்க இந்த இடத்தை தேர்ந்தெடுத்து  அமைத்துள்ளார்கள்.

இந்த பீரங்கி மேடு தொல்பொருள் துறையின் கீழ்  வந்தாலும் அவற்றின் சட்ட திட்டங்கள் எதுவும் பின்பற்ற படுவதாக தெரியவில்லை. உதரணமாக, சரியான வெளிச்சம் இல்லாத காரணத்தால் இரவில் சமூக விரோதிகளாலும், சுற்றிலும் ஆடு மாடுகள் வளர்க்கப்பட்டு வருவதாலும் இப்பீரங்கி மேடையின் அழகும் பாரம்பரியமும் அழிந்து கொண்டு வருகிறது.   இம்மேடையின் மீதிருந்து தஞ்சையின் நாயக் அரண்மனையையும், அதன் அருகே அமைந்துள்ள ராஜா காலத்து ஏழடுக்கு  மாளிகையையும் காண முடியும்.

தஞ்சை செல்லும் வாய்ப்பு கிடைத்தால் பழைய பேருந்து நிலையத்திலிருந்து  சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த பீரங்கி மேடையை சென்று  பாருங்கள். நானூறு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்  நம் மூதாதையர்களின்  அறிவையும், திறனையும் எளிதில் அறிந்து கொள்ளலாம்.

படம் உதவி: கூகுல் ஆண்டவர்.

தஞ்சை பற்றிய மற்ற பதிவுகள் இதோ...

சொர்க்கமே என்றாலும்...தரணி போற்றும் தஞ்சை தொடர்

சொர்க்கமே என்றாலும்...அது நம்மூர போலாகுமா...



share on:facebook

Saturday, April 2, 2011

சொர்க்கமே என்றாலும்...தரணி போற்றும் தஞ்சை தொடர்


தஞ்சையில் உள்ளூர் சிறப்புகள் பல உண்டு. போன வாரம் அதில் சிலவற்றை  குறிப்பிட்டு இருந்தேன். இந்த வாரம் நான்  சொல்லப்போவது  ராமலிங்கம் டீ  கடை  மற்றும் குனகுடிதாசன் சர்பத் பற்றி.

தஞ்சை மேரீஸ் கார்னரில் ராமலிங்கம் டீ கடை மிகவும் பிரபலம். ஒரு வீட்டின் காம்பவுண்டுக்குள் சிறிய இடத்தில் டீ போடுவது போன்றவைகளை வைத்துக்கொண்டு பொதுவாக பிளாட்பாரத்தை அடைத்துக்கொண்டு தான் இந்த டீ கடை பல வருடங்களாக செயல்பட்டது(கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கடை மூடப்பட்டதாக கேள்வி). இங்கு ஒரு முறை நீங்கள் டீ சாபிட்டீர்கள் என்றால் பிறகு வேறு எங்கும் டீ சாப்பிட உங்களுக்கு தோணாது. டீ கிளாசில் நுரையை தவிர்த்து பார்த்தால் அரை கிளாஸ் தான் டீ இருக்கும். ஆனால் சுட சுட நன்கு நிறை கட்டிய பாலில் தயாரிக்கப்பட்ட அந்த டீயை நாலு மடக்கு சாப்பிட்டால் போதும். நாள் முழுதும் டீயின் சுவை உங்கள் நாவிலே ஒட்டிக்கொண்டிருக்கும். அந்த சுவைக்கு காரணம், தண்ணீர் கலக்காத பாலை  நாள் முழுதும் நிறை கட்டி (பாலை மிதமான சூட்டில் கொதிக்க வைத்துக்கொண்டே இருக்கும் போது அதன் மொத்த அளவு குறைந்து விடும். ஆனால் மீதமுள்ள  பால் மிகவும் ஸ்ட்ராங்காக ஆகி விடும்) அதை ஒரு ஸ்பூனோ  இரண்டு ஸ்பூனோ உங்கள் டீயில் கலப்பதுதான்.  இருபத்து நாலு மணி நேரமும் கடை எப்போதும் கூட்டமாகவே இருக்கும். அதிலும் இரவு இரண்டாம் ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பும் போது அங்கு ஒரு டீ அடித்து விட்டு கிளம்பினால்...சும்மா சுகமா இருக்கும்.

அடுத்ததாக குணங்குடி தாசன் சர்பத்: தஞ்சை கீழவாசலில் குணங்குடி தாசன் சர்பத் ஸ்டால் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து உண்டு. இங்கு  அவர்களே சர்பத்துக்கான மூலப் பொருளை தயார் செய்கிறார்கள். கடையின்  முன்பு சில்லறை வியாபாரமாக கோடை காலங்களில் சர்பத் வியாபாரம்  கொடிகட்டி பறக்கும். வரிசையாக ஒரு 20 - 30 கிளாசுகளை வைத்து  ஒன்றன்பின் ஒன்றாக ஒரு 10 நிமிடத்தில் சர்பத் பானத்திற்கு தேவையான  ஐஸ் போடுவதில்  ஆரம்பித்து, பின் பால் ஊற்றி, சர்பத் மிக்ஸ் கலந்து,  பாதாம் சேர்ப்பது வரை அதை பார்த்துக்கொண்டே கூட்டம் பொறுமையாக  தங்கள் சர்பத் கிளாசுக்காக காத்திருக்கும். சர்பத் ரெடியான அடுத்த நொடி  எல்லா சர்பத்களும் விற்று தீர்ந்து விடும். நல்ல வெயில் காலத்தில் சில்லென்று அவர்கள் தரும் சர்பத்தை நாளெல்லாம் சாப்பிட்டுக்கொண்டே  இருக்கலாம். விலையும் அதிகம் கிடையாது. இங்கிருந்து சர்பத் பாட்டில்களை  வாங்கி வந்து நம் வீட்டிலேயே நாம் சர்பத் செய்து கொள்ளலாம்.  அவ்வளவு  நன்றாக இருக்கும். அடுத்த முறை நீங்கள் தஞ்சை சென்றால் தஞ்சை பழைய  பேருந்து நிலையம் அருகில் உள்ள கீழவாசல் சென்று குணங்குடி தாசன் சர்பத்தை பருகி பாருங்கள்.   

சிறப்புகள் தொடரும்... 

share on:facebook

Saturday, March 26, 2011

சொர்க்கமே என்றாலும்...அது நம்மூர போலாகுமா...


உங்களுக்கு எந்த ஊர் என்று யாராவது என்னிடம் கேட்டால் தஞ்சாவூர் என சொல்லிக்கொள்வதில் நான் மிகவும் பெருமைகொள்வேன். தஞ்சையை  பற்றி நான் சொல்லி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.  இந்தியாவிற்கே படியளக்க கூடிய நெற்கலஞ்சியமாகட்டும்,  அங்குள்ள  பெரிய கோவிலோ, புகழ் மிக்க சரசுவதி மஹால் நூலகமோ,  அல்லது அருகில் உள்ள நாகூர் மற்றும் வேளாங்கண்ணி என எல்லா  மதத்திற்குமான திருத்தலங்கள் என எல்லாமும் எல்லோரும் அறிந்ததே. 

இதைதவிர உள்ளூர் சிறப்பாக உள்ள சில விசயங்களை இங்கு பகிர்கிறேன். தஞ்சை நகரில் மற்ற ஊர்களைப்போலவே அனைத்து விதமான  வியாபாரங்களும் தொழில்களும் உண்டு. ஆனால் அதில் ஒரு தனி  சிறப்பு என்னவென்றால் குறிப்பிட்ட ஒவ்வொரு தொழிலும் ஒரு நிறுவனம் மட்டும் என்றுமே வாடிக்கையாளர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும்.

முதலில் இனிப்புடன் ஆரம்பிப்போம் - பாம்பே ஸ்வீட் ஸ்டால்

தஞ்சையில் இனிப்பு வகைகள் என்றாலே தஞ்சை மற்றும் சுற்று வட்டார மக்களுக்கு நினைவில் வருவது 'பாம்பே ஸ்வீட் ஸ்டால்' தான். ஒரு காலத்தில் சிறிய அளவில் இனிப்பு பலகாரங்கள் வியாபாரம் செய்துவந்த 'சேட்' என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்,    தன்னுடைய  கடுமையான உழைப்பாலும் இனிப்பு வகைகளின் தரத்தாலும் ஒரு மிக பெரிய வியாபார சாம்ராஜ்யத்தையே உருவாக்கினார். அவரின் மறைவிற்கு பிறகும் அவருடைய மகன் திரு. மணி அவர்கள் அவரைவிட பலமடங்காக அதை விரிவாக்கி இருக்கிறார்.

தரமும், தங்கம் போல் இனிப்புகளை அளந்து பார்க்காமல் எப்பவுமே கூடுதலாக அள்ளி அள்ளி போட்டு  கொடுப்பதும் மக்களின் வரவேற்ப்பை  பெற்றதற்கான முக்கிய காரணம். தீபாவளி போன்ற நேரங்களில் வெளியூர்  செல்லும் பேருந்துகள் ஸ்வீட் ஸ்டால் முன் நிறுத்தி டிரைவர் கண்டக்டர்  பயணிகள்  என அனைவரும் ஸ்வீட்ஸ் வாங்குவது ஆச்சர்யமான ஒன்றாகும்.  இது எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்வீட் ஸ்டாலின் மறைந்த உரிமையாளரும்  அவரின் மகனும் வெளியே தெரியாமல் பல பேரின் படிப்புக்கும் நல்ல  காரியங்கள் பலவற்றுக்கும்  உதவுவது சிலருக்கு மட்டுமே தெரியும்.  தஞ்சை சென்றால் ஒரு  முறை அவசியம் அங்கு ஸ்வீட் வாங்கி சாப்பிட்டு பாருங்கள். குறிப்பாக  அவர்களின் சோமாசா + பாதாம் கீர் மிகவும்  ருசிமிக்கவை.  

உயிர் காக்கும் மருந்தகம் - ஸ்டேட் மெடிக்கல்ஸ்.

தஞ்சையில் மருத்துவக்கல்லூரி இருப்பதால் டாக்டர்களுக்கு பஞ்சமே இல்லை. தஞ்சை தெற்கு அலங்கத்தில் உள்ள கிளினிக்குகளில் பணியாற்றும் டாக்டர்களை கணக்கெடுத்தால் மட்டுமே மற்ற எல்லா ஊர்களிலும் உள்ள டாக்டர்களின் எண்ணிக்கையை தாண்டி விடுவார்கள். அதே போல் மருந்தகங்களும்.

எத்தனையோ புது மருந்தகங்கள் வந்தாலும் கூட ரயிலடி அருகில் உள்ள ஸ்டேட் மெடிகல்ஸ் மிகவும் பெயர் பெற்றது. இதன் உரிமையாளர் கூட ஒரு காலத்தில் சிறிய அளவில் மட்டுமே நடத்தி வந்தார். பிறகு அவரின் மகன் திரு. நேரு பொறுப்பேற்றபின் அவரின் உழைப்பு மற்றும் வாடிக்கையாளர்களை  கவனிக்கும்/கவரும் பண்பின் காரணமாக மக்கள்  தலைவலி மாத்திரை வேண்டும் என்றால் கூட அரை மணி நேரம் காத்திருந்து  வங்கி செல்வார்கள். கடையை அடைத்து கூட்டம் இல்லாமல் நான் ஒரு நாள்  கூட பார்த்ததில்லை. சாதாரண உடல் உபாதைகளுக்கெல்லாம் அவரே சரியான  ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் தருவார். அதே நேரத்தில் மற்ற  விசயங்களுக்கு முறையாக இதை நீங்கள் டாக்டரிடம் தான் காட்ட வேண்டும்  எனவும் கூற தவற மாட்டார். ஒரு ருபாய் இரண்டு ருபாய் குறைவாக இருந்தால்  கூட எற்றுக்கொள்வார். ஏழைகளாக இருந்தால் கணக்கு பார்க்க மாட்டார். அவரின் சிரித்த முகமும், வாங்க சார், என்னம்மா வேணும் என்று அவர் அன்பாக கேட்கும் அழகே தனி. 

தவறாமல் ஒரு முறை அங்கு சென்று வாருங்கள் என கூற மாட்டேன்.  ஏனென்றால் அது மருந்து கடை ஆயிற்றே.  

சிறப்புகள் தொடரும்...




share on:facebook