Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Friday, August 16, 2024

'துண்டு' அரசியல்

 எனது நண்பர் ஒருவர் என் பள்ளி நண்பர்கள் குழுவில் 'துண்டு' பற்றி யாரோ எழுதிய பதிவை பகிர்ந்திருந்தார். பொழுது போக்கிற்க்காக எழுதப்பட்ட பதிவு அது. அதுவே 'துண்டு' பற்றி சில வரலாற்று செய்திகளை என்னை இங்கே பகிர வைத்தது.


தமிழகத்தில் துண்டுக்கு ஒரு பெரிய அரசியல் மற்றும் சமூக வரலாறு உண்டு. சுதந்திரத்துக்கு பின் பெரிய அரசியல் கட்சிகளில் பொறுப்புகள் அனைத்தும் பெரும் பணக்காரர்கள் மற்றும் சமூகத்தில் உயரிய அந்தஸ்தில் உள்ளவர்கள் சிலரின் கைகளில் மட்டுமே இருந்து வந்தது.


அந்த காலத்தில் தான் திராவிட கட்சிகள்/கழகங்கள் உருவாகி நடுத்தர, ஏழை மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்க தொடங்கி அவர்களை


அரசியல் களத்தில் முன்னிறுத்தியது. அதன் அடையாளமாக அவர்களில் தலைவர்களை உருவாக்கியது. அவர்களை மேடை ஏற்றி அவர்களுக்கு எல்லோருக்கும் முன்னால் துண்டு அணிவித்து மரியாதை செலுத்தியது.


குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களும், ஏழைகளும் மற்றவர்களுக்கு முன் தங்கள் தோளில் துண்டு அணிய முடியாது. அப்படியே அணிந்தாலும் அவர்களை பார்த்தவுடன் அதை எடுத்து இடுப்பில் கட்டிக்கொள்ள வேண்டும் இதை ஓரளவிற்கு திராவிட கட்சிகள் மாற்றின. எல்லோரும் சமம் என்ற கோட்பாட்டில் இதன் மூலம் நடுத்தர மற்றும் ஏழை, தொழிலாள வர்க்கத்தினரை தங்கள் பக்கம் ஈர்த்தனர்.


தமிழக அரசியல் காட்சிகள் தவிர பிற மாநில காட்சிகள் மேடைகளில் இம்மாதிரி துண்டு அணிவித்து மரியாதை செய்வதை நான் பார்த்ததில்லை. இன்றும் கிராமப்புறங்களில் பெரும்பாலானோர் தவறாமல் துண்டு அணிவது பார்க்கலாம். 


துண்டுகள் பல வண்ணங்களில், வகைகளில், தரத்தில் கிடைக்கிறது. விவசாய சங்கங்களில் உள்ளவர்கள் பெரும்பாலும் பச்சை துண்டு அணிவர். புதுவுடைமை கட்சியை சேர்ந்தவர்கள் சிகப்பு துண்டும், மற்ற கழக உடன்பிறப்புகள் தங்கள் கட்சி பார்டர் போட்ட துண்டுகளையும் அணிந்து கொள்வார்கள்.


காந்தி 'சுதேசி' போராட்டத்தை அறிவித்தபோது தந்தை பெரியார் அவர்கள் தன் மனைவியுடன் தலையில் மூட்டையுடன் தெரு தெருவாக சென்று கைத்தறி ஆடை மற்றும் துண்டுகளை விற்றது வரலாறு.


என் தந்தை மூன்று வகையான துண்டு வைத்திருப்பர். வீட்டில் இருக்கும் போது சாதாரண வெள்ளை துண்டும், வெளியில் சென்றால் 'டர்கி டவல்' என்னும் சற்று மென்மையான, சிறிது வேலைப்பாடுகள் கொண்ட துண்டை பயன்படுத்துவார். இது சற்று விலையும் அதிகம். மேலும் சிகப்பு/மெரூன் வண்ணத்தில் கம்பளியால் செய்த நீண்ட ஷால் போன்று ஒன்றை குளிர் காலங்களின் போது அணிந்து கொள்வார்.


ஈரளத்துண்டு நீங்கள் எல்லோரும் அறிந்திருப்பீர்கள். நான் இதுவரை தமிழகம் தவிர வேறு எங்கும் பார்த்ததில்லை. இதை தவிர துண்டினால் வேறு சில பயன்களும் உண்டு. பயணத்தின் போது பேருந்திலோ, தொடர் வண்டியிலோ இடத்தை பிடிப்பதற்கு மிகவும் பயன்படும்.


அவன் ஏற்கெனவே துண்டு போட்டுட்டான் என சிலர் சொல்வார்கள். இதன் அர்த்தம் என்னவென்று உங்களுக்கே தெரியும்😃


மேலே குறிப்பிட்டவை அனைத்தும் நான் அறிந்த/படித்து தெரிந்து கொண்டவையே. யாரையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல.


share on:facebook

Thursday, April 11, 2013

தமிழ் ஈழம்: அறுவடைக்கு காத்திருக்கும் அரசியல் கட்சிகள்


போர் என்று ஒன்று நடந்தால் அதில் பொது மக்கள் பலியாவது சகஜம் தான் என்றவரும், அயல் நாட்டு விசயத்தில் ஓரளவு தான் தலை இட முடியும் என்று சொன்னவர்களும் தான் இன்று ஈழ பிரச்சனையில் போட்டி போட்டுக்கொண்டு அறிக்கைகளையும் போராட்டங்களையும் அறிவிக்கிறார்கள்.

ஈழப்  பிரச்னை பற்றி ஆரம்பம் முதல் நன்கு அறிந்தவர்கள் பலருக்கும் தெரிந்திருக்கும் இவர்களின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றியும், தமிழ் ஈழ பிரச்சனையில் அரசியல் லாபம் கருதி இவர்கள் அவ்வப்போது எடுத்த மாறுபட்ட நிலை பற்றியும்.

1980 களின் துவக்கத்தில் ஜெயவர்த்தனா ஆட்சியில், இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது (கவனிக்கவும்: போராளிகள் அல்ல. அனைவரும் அப்பாவி தமிழர்கள்) தமிழகம் எங்கும் மனித சங்கிலிகளும் ஈழத் தமிழர்களுக்கான அதரவுக்குரலும் ஓங்கி ஒலித்த நேரம். ஏன், இதே காங்கிரஸ் கட்சியின் தலைவியும், இந்தியாவின் பிரதமருமான, இந்திரா காந்தி அம்மையார் இலங்கையில் நடப்பது 'Genocide' ஒரு இனப்படுகொலை என பகிரங்கமாக அறிவித்தார்.

அதற்க்கு சற்றும் சளைக்காமல் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும்  அரசு சார்பில் கண்டனங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் தமிழகத்தில் பொது மக்களின் பேராதரவோடு நடத்தி  வந்தார். நான் அப்போது பள்ளியில் படித்து கொண்டிருந்தேன். ஓரளவு நன்றாக வரைய கூடியவன். பாட நேரத்தின் போதே ஒரு நோட்டு புத்தகத்தில் இலங்கையின் வரைபடத்தை வரைந்து, அதற்க்கு பக்கத்தில் ஜெயவர்த்தனா தன் கோர பற்களால் தமிழர்களின் ரத்தத்தை உறிஞ்சுவது போலவும் அதை பார்த்து இந்திய தாய் கண்ணீர் சிந்துவது போலவும் வரைந்து எல்லோரிடமும் காண்பித்தது இன்றும் என் நினைவில் உள்ளது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் அப்போதே அந்த வயதிலேயே இலங்கை தமிழர்கள் பால் கவலையும் அவர்களுக்கான தார்மீக அதரவு மனநிலையும் அரசியல் கட்சிகள் மட்டுமன்றி தமிழகம் முழுதும் நிலவியது. அதை விட முக்கிய காரணம் இப்போது போல் அரசியல் அந்த காலத்தில் அவ்வளவு நாற்றம் பிடித்ததாக இருந்ததில்லை.

ஏதோ ஒரு வகையில் (காரணங்களை எழுதினால் அது ஒரு பதிவு போல் நீண்டு விடும்) அன்றைய முதல்வர் எம்,ஜி,ஆருக்கு விடுதலை புலிகளையும், தம்பி பிரபாகரனையும் பிடித்து போக அதே காரணத்தினாலும், அரசியலில் எதிர் எதிராக இருந்த காரணத்தாலும் (நாற்பதாண்டு நண்பர் என்ற வசனமெல்லாம்  எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு எழுதியது தான்) கலைஞர் சீறி சபாரத்தினம் குழுவை ஆதரிக்க நேர்ந்தது. ஒரு காலத்தில் சீறி சபாரத்தினம் விடுதலை புலிகளால் கொல்லப்பட தமிழகம் எங்கும் 'கொலை கார பாவி  பிரபாகரா...' என்று போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டது. அதுவும் ஓர் அரசியல் தான்.

அன்று முதல் இன்று வரை இலங்கை தமிழர்களின் நல்வாழ்க்கை இந்திய பூலோக நலன் (காக்கப்பட) சார்ந்தும், தமிழக அரசியல் கட்சிகளின் வோட்டு அரசியலிலும் கலந்து அல்லோகல்ல பட்டுக்கொண்டிருக்கிறது. இலங்கை ஒரு பலமிக்க நாடாக வந்து பிற்காலத்தில் பாகிஸ்தான் போல் இந்தியாவிற்கு தொல்லையாகி விட கூடாது என்பதில் அன்றைய இந்திய அரசுக்கு கவலை. அதற்க்கு ஒரே வழி அங்கு சுய மரியாதைக்காக போராடி வரும் குழுக்களை வலுப்படுத்தி அவர்கள் மூலம் இலங்கை அரசை பலவீனமாக்குவது மட்டுமே இந்தியாவிற்கு நல்லது என்ற 'உயர்ந்த' நோக்கோடு இந்திரா காந்தி அம்மையார் காலத்தில் இலங்கையில் சிறிய அளவில் போராடி வந்த குழுக்களை இந்தியா அழைத்து வந்து தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வைத்து ஆயுத பயிற்சியை பகிரங்கமாக கொடுத்தது.

ஆரம்பத்தில் விடுதலை புலிகள் தவிர்த்து மற்ற அனைத்து போராளிகளும் இந்திய அரசின் உதவிகளையும், ஆயுத பயிற்சியையும் இந்தியாவிலும் தமிழகத்திலும் பெற்று வந்தனர். கடைசியாக தான் விடுதலை புலிகள் அமைப்பும் சேர்ந்து கொண்டது. தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் போராளிகள் ராணுவ சீருடைகளில், 'ஜீப்' வாகனங்களில் சீறி சென்றதெல்லாம் நான் சிறுவனாக இருந்த போது பார்த்ததுண்டு. அப்போது அவர்கள் மீது தமிழகத்தில் மிகுந்த மரியாதையும் மதிப்பும் இருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ போராளி குழுக்கள் யாராக இருந்தாலும் அவர்களை விடுதலை புலிகள் என்றே தமிழகத்தில் அழைத்து வந்தனர். ஒரு வேலை வி.பு. என்ற பெயர் பொருத்தமாகவும், ஈர்பதாகவும் இருந்திருக்கலாம்.

இதற்கிடையே அன்றைய தமிழக முதல்வர் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் விடுதலை புலிகளை அழைத்து அவர்களின் போராட்டத்திற்கு 3 கோடி ரூபாய் ரொக்க பணத்தை எல்லோரும் அறிய நன்கொடையாக  வழங்கினார். அதற்கும் அப்போது எதிர்ப்பு கிளம்பியது. ஒரு கட்டத்தில் ஒரு முதல்வர் என்ற முறையில் இதை கொடுக்க எனக்கு உரிமை இல்லை என்றால் அதை என் கட்சியின் சார்பாக கொடுக்கிறேன் என்று சொல்லி தைரியமாக அறிவித்தார். பெரும் நிதிப் பற்றக்குறையில் சிக்கி தவித்த வி.பு. களுக்கு அன்றைய கால கட்டத்தில் 3 கோடி ரூபாய் மிக பெரிய பணமாக பட்டது. அதன் காரணமாகவே கடைசி வரையிலும் வி.பு. மத்தியிலும் ஈழ தமிழர்கள் மத்தியிலும் எம்.ஜி.ஆருக்கு மிக பெரிய மரியாதையும் மதிப்பும் இன்றளவும் இருந்து வருகிறது.

இப்படி கூறுவதால் எம்.ஜி.ஆர் மட்டும் தான் ஈழ மக்களுக்கு உதவி செய்தார் என்றில்லை. அதற்க்கு சற்றும் சளைக்காமல் கலைஞர் அவர்களும் பல்வேறு வகைகளில் உதவி இருக்கிறார். ஆனால் இந்த பாலாய் போன அரசியல் காரணமாக ஒவ்வொரு கால கட்டத்தில் ஈழ மக்களுக்கு உதவி செய்ததற்கு இணையாக அவர்களுக்கு கேடு வரும் போது அதை தடுக்க முடியாமலும் அல்லது அவர்களுடைய நலன்களுக்கு எதிராகவும் அவர்களுடைய அரசியல் செயல் பாடுகள் அமைந்தது தான் பெரும் கொடுமை.

இன்னும் நிறைய இருக்கு....


share on:facebook

Sunday, March 24, 2013

ரஜினியும், சொகுசு கார்களும்...


சூப்பர் ஸ்டார்  ரஜினி ராசி அப்படி. அவர் எதை பற்றியாவது பேசினாலும் பிரைச்சனை தான். பேசாவிட்டாலும் பிரச்சனைதான். சமீபத்தில் நாளிதழ்களில் வெளியான இரண்டு விஷயங்கள் மனதை சஞ்சலப்படுத்தியது. ஒன்று ரஜினி விட்ட அறிக்கை.

சமீபத்தில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து ரஜினி பெயரில் வெளியான அறிக்கை பலரையும் புருவம் உயர்த்த செய்திருக்கிறது. ரஜினியின் நெருங்கிய நண்பராகவே இருந்தாலும் அது அவருக்கும் அவர் நண்பருக்கும் இடையே உள்ள பாசம். சஞ்சய் தத்துக்காக இறைவனிடம் வேண்டும் அவர், அதை அவரிடம் நேரிடையாக தெரிவித்து இருக்கலாம். ஏன், அதை ஒரு 'press statement' ஆக வெளியிட வேண்டும் என தெரியவில்லை.

சஞ்சய் தத்துக்கும் மும்பை படுகொலைகளுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் அவர் ஆயுதங்கள் கொள்முதல் செய்ததும், வைத்திருந்ததும் சட்டப்படி குற்றம், அதை அவரும் ஒத்துக்கொண்டுள்ளார். நீதி மன்றத்திலும் அவர் மீதான குற்றம் நிரூபணம் ஆகி இருக்கிறது. அப்படி இருக்கையில் 'என் நண்பர், மீதமுள்ள தன் வாழ்நாளை நிம்மதியுடன் கழிக்க ஆண்டவனை வேண்டுகிறேன்' என்று ரஜினி அவர்கள் அறிக்கை விட்டிருப்பது சற்று ஆச்சர்யத்தை அளிக்கிறது.

உங்களுக்கு நெருங்கியவர்களுக்காக வருத்தபடுவதில் ஒன்றும் தப்பில்லை. ஆனால் பொது வாழ்வில் உள்ளவர், தமிழக மக்களால் பெரிதும் மதிக்கப்படுபவர் அதை அவர் வாழும் சமுதாயத்து மக்களின் பிரச்சனைகளுக்காகவும் ஏன் வருத்தப் படுவதில்லை என்பது தான் இப்போதைய கேள்வியே.

ஒன்று மட்டும் தெரிகிறது. சஞ்சய் தத்துக்காக தான் வருத்தப்படுவது யாருக்கோ அல்லது எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பது மட்டும் அவர் எண்ணம் என்று. என்னமோ தலைவா. நாங்கல்லாம் உங்கள் ரசிகனாக தான் இன்னமும் இருக்கிறோம். நீங்களும் திரை உலகில் சூப்பர் ஸ்டாராகவே இருந்து விட்டு போங்கள். அப்படி 'குரல்' கொடுக்க நினைத்தால் தமிழகத்திலும், தமிழர்களுக்கும் நிறையவே இதை விட பெரிய பிரச்சனைகள் இருக்கிறது. அதற்கும் ஏதாவது 'குரல்' கொடுங்கள்.

அடுத்ததாக சமீபத்தில் CBI நடத்திய ரைடும் அதில் பெரும் பணக்காரர்களிடம் சிக்கிய வெளிநாட்டு சொகுசு கார்களும். தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், பணக்காரர்கள் அவர்களிடம் பணம் இருக்கிறது. எந்த கார் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளட்டும். அதை முறைப்படி வரி செலுத்தி வாங்க வேண்டியது தானே? ஓரிரு கோடிகள் கொடுத்து 'ஹம்மர்' வண்டி வாங்கும் அவர்கள் அதோடு சேர்த்து இன்னொமொரு கோடி வரியையும் செலுத்தினால் என்ன குறைந்தா போய் விடுவீர்கள்?

இது வரை வரி ஏய்த்து வாங்கப்பட்டிருக்கும் 33 வெளிநாட்டு சொகுசு கார்களை அடையலாம் கண்டுள்ளது CBI. இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளரும், BCCI தலைவருமான ஸ்ரீனிவாசனிடம் இருந்து 11 காரும், ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி தாளாளரிடம் இருந்து 7 கார்களும், MGM க்ரூப்பில் இருந்து 2 கார்களும் இதில் அடக்கம்.

இதில் வேதனையான விசயம் என்னவென்றால்,  இன்சூரன்ஸ் இல்லை, ரோட் டாக்ஸ் கட்டவில்லை  என்று டூ வீலரில் போபவர்களிடம் ஸ்பாட் பைன் போடும் காவல் துறையினர், இல்லை என்றால் வண்டியை ஸ்டேசனுக்கு விடு, இல்லைனா நாளைக்கு வந்து கோர்ட்டுல வண்டிய எடுத்துக்க என மிரட்டுகிறார்கள். ஆனால், இந்த வரி ஏய்ப்பு செய்து வாங்கிய வெளிநாட்டு சொகுசு கார்களின் உரிமையாளர்களுக்கு மட்டும், வண்டியை அவர்கள் தொடர்ந்து உபயோகப்படுத்தலாம், அவர்களே வைத்து கொள்ளலாம். தேவை பட்டால் மட்டும் எங்களிடம் காண்பிக்க வேண்டும் என அவர்களிடமே வண்டியை விட்டு விட்டார்கள். ஹ்ம்ம்..எளியோர் என்றால் ஒரு சட்டம். வலியோர் என்றால்...




  

share on:facebook

Thursday, February 21, 2013

'ஜெ' விஸ்வரூபம் - ஆசிய விளையாட்டு போட்டிக்கு தமிழகத்தில் இடம் இல்லை


இலங்கை அரசின் போர் குற்றங்களை காரணம் காட்டியும், இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான தொடர் தமிழ் விரோத போக்கினை கண்டித்தும், இலங்கை வீரர்கள் கலந்து கொள்ளும் ஆசிய விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த தனது அரசுக்கு சற்றும் விருப்பம் இல்லை என்று இன்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ள ஆசிய விளையாட்டு போட்டி சங்கம் தடை விதிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ள முதல்வர் அவ்வாறு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இன்னமும் தனக்கு பதில் வரவில்லை என்றும் சுட்டி காட்டி உள்ளார்.

இந்த முடிவு சரியா தவறா என எனக்கு இன்னமும் புரியவில்லை. ஆனால், இப்படி ஏதாவது ஒன்றன் பின் ஒன்றாக இலங்கை அரசுக்கு பல தரப்பிலும் இருந்து நெருக்கடிகள் கொடுத்த வண்ணம் இருந்தால் மட்டுமே ஓரளவிற்கு அவர்களை அடக்க முடியும் என்பது மட்டும் என் கருத்தாகும்.

share on:facebook

Thursday, October 25, 2012

ஊரெங்கும் வெள்ளக்காடு. 'அம்மா'வுக்காக கொட்டும் மழையில் புதிய சாலைகள்.

உலகத்திலேயே நம் தமிழக அரசியல் தலைவர்கள் தனி ரகம். அது அம்மாவாக இருந்தாலும் சரி ஐயாவாக இருந்தாலும் சரி.

சில காலம் நான் வட மாநிலங்களில் இருந்திருக்கிறேன். நம்ம ஊர் லெட்டர் பேட் கட்சியின் ஆடம்பரம் கூட பெரிய கட்சிகளின் கூட்டங்கள், அவற்றில் கலந்து கொள்ள வரும் தலைவர்களின் வரவேற்புகளில் இருக்காது. ஆனா நம்ம ஊர் அரசியல் வாதிகள் இருக்கிறார்களே?

கடந்த ஒரு வாரமாக சென்னையின் பெரும் பகுதி இடங்கள் நீரில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. ரோடு எங்கே என்று தெரியாத அளவிற்கு தண்ணீர் முழங்கால் முட்டும் தேங்கி கிடக்கிறது. பல IT கம்பெனிகள் அமைந்துள்ள OMR ரோடும் இதற்க்கு விதிவிலக்கல்ல. இத்தனைக்கும், இதற்க்கு எக்ஸ்பிரஸ் வே என்று பெயர். துரைப்பாக்கத்தில் ஆரம்பித்து சோளிங்க நல்லூர் வரை இரு புறமும், தண்ணீர் குளம் போல் தேங்கி (இன்று வரை) நிற்கிறது.

இதனால், பேருந்துகள் முதல், ஆட்டோ, பைக்குகள் வரை எல்லோரும் ஸ்லோ ரேசில் போவது போல் நகர்வதே தெரியாத அளவிற்கு அவ்வளவு மெதுவாக ஊர்ந்து கொண்டு போய் வருகிறன. அதே போல் வேளச்சேரி செல்லும் அனைத்து இணைப்பு சாலைகளும். நத்தை வேகத்தில் தினமும் பயணம். இவை எல்லாம் அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரியாதா என்ன?

இதை எல்லாம் விட்டு விட்டு, 'கிடக்கறது கிடக்கட்டும், கிழவியை தூக்கி மணையில வை' என்று பெருங்களத்தூர் - கேளம்பாக்கம் இணைப்பு சாலையை இந்த கொட்டும் மழையில் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன் என்று நான் வேறு சொல்ல வேண்டுமா? அங்கு புதிதாக அமைய உள்ள காவலர் குடியிருப்புக்கான  அடிக்கல் நாட்டு விழாவிற்கு அம்மா அவ்வழியே வருவதால்.

அது மட்டுமா? ஐம்பது அடிக்கொரு வரவேற்ப்பு பேனர், நூறு அடிக்கு ஒரு போலிஸ் என ஏரியாவே திருவிழா களையில். அவ்வழியே ரெகுலராக போய் வருபவர்களுக்கு தெரியும். ஒரு முறையாவது நீங்கள் மூக்கை பொத்திக்கொள்ளாமல் அந்த இணைப்பு சாலையை கடக்க முடியாது. ஆடு மாடு என எந்த மிருகம் இறந்து போனாலும் அங்கு தான் வந்து போட்டு விட்டு போய் விடுவார்கள். இன்று அந்த நாற்றம் எங்கு போனது என்றே தெரியவில்லை.

இதே போல் யாராவது ஒரு புண்ணியவான் வேளச்சேரி சாலையிலும், OMR சாலையிலும் ஏதாவது ஒரு திறப்பு விழா, அடிக்கல் நாட்டு விழா என்று ஏற்பாடு செய்யுங்கப்பா. அங்குள்ள மக்கள் எல்லாம் உங்களை வாழ்த்துவார்கள்.

இப்படிக்கு,

தினம் தினம், தேங்கி கிடக்கும் மழை தண்ணீரால் வண்டி ஓட்ட முடியாமல் தவிக்கும் அப்பாவி குடிமகன்.   

share on:facebook

Sunday, October 7, 2012

ஆதலினால் 'ஊழல்' செய்வீர்


கடந்த இரு மாதங்களில் சென்னை டு தஞ்சாவூர் பேக் டு சென்னை என காரில் இரண்டு முறைக்கு மேல் செல்ப் டிரைவிங் செய்தேன். இந்தியாவின் பொருளாதார நிலையில் இந்த ஹை வே சாலைகள் நமக்கெல்லாம் ஒரு வரபிரசாதம் என்றே கூறலாம்.

ஆனால், ஐம்பது கிலோமீட்டருக்கு ஒரு டோல் என்று ஏறக்குறைய முன்னூறு ருபாய் டோல் கட்டணமாக நம்மிடம் தீட்டி விடுகிறார்கள். அது தான் கொஞ்சம் அதிகமாக தெரிகிறது. மற்றபடி சாலையின் ஊடே குறுக்கிடும் ஒவ்வொரு ஊரையும் கடக்க மேம்பாலங்கள், ஊருக்குள் செல்ல தனியே 'சர்வீஸ்' ரோடுகள் என்று மேலை நாட்டு சாலைகளை நினைவூட்டும் வகையில் மிகவும் அருமையாக சாலைகளை வடிவமைத்துள்ளார்கள்.

அதே நேரத்தில் சாலை குறியீடுகள் ஒரு சில இடங்களில் மிகவும் குழப்புவதாக உள்ளது. ஓரளவு அந்த சாலையில் போய் வந்தவர்களால் மட்டுமே சரியாக குறியீடுகளை புரிந்து கொள்ள முடியும். இதை அவசியம் நெடுஞ்சாலைத்துறை சரி செய்ய வேண்டும். எங்கோ சென்று பிரியும் சாலைக்கு வெகு தொலைவில் குறியீடுகளும், அதே போல் சாலை பிரியும் இடத்தின் வெகு அருகில் குறியீடுகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

'லேன்' டிசிபிளின் பயன்கள் பற்றி எத்தனை ஓட்டுனர்களுக்கு தெரியும் என தெரியவில்லை. வெறுமனே 'Follow Lane Disipline' என ஆங்காங்கு போர்டுகள் வைப்பதினால் ஒன்றும் பயன் இல்லை. அவ்வப்போது நெடுஞ்சாலையில் வரும் வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு அதன் பயன்களை விளக்க வேண்டும். ஆனால், தற்போது பெரும்பாலான இடங்களில் இருவழி சாலைகளும் ஒரு வழியில் இரு லேன்களுக்கு மேல் இருப்பதால் வாகன ஓட்டிகளே தெரிந்தோ தெரியாமலோ 'லேன்' டிசிப்ளினை பின் பற்றுகிறார்கள்.

லேன் டிசிப்ளினை பின் பற்றினால் நிச்சயம் விபத்துகள் குறையும். குறிப்பாக நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் எல்லோரும் சென்று கொண்டிருக்கும் போது எதிரே போகும் வண்டிகளை தாண்டிச்செல்லும் போது மிகவும் உதவும். ஆமா? லேன் டிசிப்ளின் அப்படின்னா என்னான்னு கேக்குறவங்களுக்கு, அது ஒன்னும் பெரிய கம்ப சூத்திரம் இல்லைங்க. சாலையில் மூன்று லேன்கள் இருந்தால் லேனுக்குள்ளே வண்டி ஓட்ட பலகனும்க. இரண்டு லேன்களை பிரிக்கும் கோட்டின் நடுவே வண்டி ஓட்டக்கூடாது. அதே போல் கன ரக வாகனங்கள் இடது ஓரமாகவும் சிறிய, வேகமாக செல்லும் வாகனங்கள் வலது ஓரமாகவும் செல்ல வேண்டும். ஊருக்குள் செல்லும் முன்பே இடது ஓரத்திற்கு வந்து விட வேண்டும். கடைசி நேரத்தில் லேன் மாறுவது ஆபத்தில் முடியும்.   

மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகம் சாலை வசதிகளில் முன்னோக்கி இருக்கிறது என்று தாராளமாக சொல்லலாம். ஹை வேக்கள் மட்டுமின்றி சென்னைக்குள்ளும் பறக்கும் ரயில்கள், மெட்ரோ ரயில்கள், தடுக்கி விழுந்தால் பாலங்கள் என கட்டுமானத்தில் நாம் நிச்சயம் முன்னேறி இருக்கிறோம். ஒரு காலத்தில் மும்பை போன்ற மாநகரங்களை பார்த்து மலைத்து போய் இருக்கிறேன். பெரிய பெரிய பாலங்கள், நிறைய ஹை வேக்கள் என்று. தற்போது மற்ற பின்தங்கிய மாநிலங்களில் இருந்து வரும் மக்கள் சென்னை, தமிழகத்தையும் அப்படி தான் பார்ப்பார்கள் (இன்னமும் குண்டும் குழியுமான சாலைகளில் போய் வந்து கொண்டிருக்கும் பலர் உறுமுவது கேட்கிறது. ஏதோ பொதுவாக சொல்றேங்க..)

நெடுஞ்சாலைகளில் இன்னமும் ஒரு பெரிய குறை உண்டென்றால் அது 'ரெஸ்ட் ஏரியா' மற்றும் உணவகங்கள் தான். சென்னை தாண்டியவுடன் ஆங்காங்கே ஒரு சில ரெஸ்ட் ஏரியாக்கள் கண்ணில் பட்டது. ஆனால் அவைகளை சாலையிலிருந்து பார்க்கும் போதே அங்கு சுத்தமோ, பாதுகாப்போ இருப்பது போல் தெரியவில்லை. அதே போல் ஊருக்குள் சென்றால் தான் நல்ல உணவகங்கள் கிடைக்கின்றன. மற்றவை எல்லாமே அவ்வளவு நன்றாக இல்லை. அப்படியே இருந்தாலும் விலைகள் யானை விலை குதிரை விலை தான். பெரிய பெரிய நிறுவனங்களிடம் இந்த 'ரெஸ்ட் ஏரியா', சாலை யோர உணவகங்களை கொடுத்தால் ஓரளவு பராமரிப்பும் நல்ல உணவும் கிடைக்கும் என நினைக்கிறன்.

ஆமா, இதெல்லாம் சொல்றீங்களே, அதற்கும் தலைப்புக்கும் என்ன சம்மந்தம் என கேகுறீங்களா? தமிழக சாலை வசதிகளை பார்த்து வியந்த நேரத்தில் லோக்கல் அரசியல்வாதி ஒருவரிடமும் ஒரு நெடுஞ்சாலை துறை பொறியாளரிடமும், சாலை வசதிகளில் தமிழகம் முனைப்பு கட்டுவதற்கு ஏதும் கரணம் இருக்கிறதா என கேட்டேன். அதற்க்கு அவர்கள் சொன்ன பதில்...

மற்ற எதில் ஊழல் செய்தாலும் அது மக்களை கோபம் அடைய செய்யும். சாலை, மேம்பாலங்கள் போடுவதில் ஊழல் நடந்தாலும் மக்களுக்கு அது நேரிடையாக உபயோகப் படுவதால் மக்கள் அதில் நடக்கும் ஊழல்களை பற்றி அவ்வளவாக கண்டு கொள்வதில்லை. அது மட்டும் இல்லாமல் இதில் கிடைக்கும் (காண்ட்ராக்ட்) கமிஷனும், சாலை பராமரிப்பு என தொடர்ந்து கிடைக்கும் காண்ட்ராக்ட்களும் தமிழக அரசியல் வாதிகளை ரொம்பவே இதில் ஈர்த்து விட்டதாக கூறினார்கள். அப்புறம் என்னங்க? அப்படியாவது (அப்படிதான்) நமக்கு  நம்மைகள் கிடைக்கிறது என்றால் 'ஊழல் செய்து விட்டு போகட்டுமே'.

share on:facebook

Sunday, May 13, 2012

படிப்பு: ஆறாவது பெயில். பதவி: மாநில IT (தகவல் தொழில் நுட்ப) அமைச்சர்.


நான் ஒன்னும் அப்படி சொல்லலீங்க. கீழே உள்ள தினமலர் செய்தி தான் அப்படி சொல்லுது. இது தொடர்பாக இன்று தினமலரின் இணைய தளத்தில் வந்துள்ள செய்தி கீழே...


தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், தவறான கல்வித்தகுதியை அரசுக்கு அளித்துள்ளதாக, அ.தி.மு.க.,வினர் குற்றம்சாட்டி, முதல்வருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., முக்கூர் சுப்பிரமணியன். இவர், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக உள்ளார். இவரது கல்வித்தகுதி, புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

6ம் வகுப்பு பெயில்:முக்கூர் சுப்பிரமணியன், 2009ம் ஆண்டு ஆரணி லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். அப்போது, வேட்பு மனு தாக்கல் செய்த, அபிடவிட்டில் செய்யாறு தாலுகா, கொருக்கை, அரசு மேல்நிலைப் பள்ளியில், 1972 ஏப்ரல் 21ம் தேதி, ஆறாம் வகுப்பு படித்து பெயிலானவர் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அபிடவிட் விவரம், தற்போது இந்திய தேர்தல் கமிஷன் வெப்சைட்டிலும் உள்ளது.

கடந்த, 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், செய்யாறு தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது, தாக்கல் செய்த வேட்பு மனுவில் (2011 மார்ச் 11ம் தேதி), தமிழ்நாடு திறந்த வெளி பல்கலையில், பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருவதாக குறிப்பிட்டு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விவரம், தமிழக தேர்தல் கமிஷன் வெப்சைட்டில் உள்ளன.முக்கூர் சுப்பிரமணியன் கொடுத்த தகவலின்படி, 2009-10 கல்வியாண்டில் முதலாமாண்டும், 2010-11 இரண்டாம் ஆண்டும், 2011-12 கல்வியாண்டில் மூன்றாம் ஆண்டும் படித்திருக்க முடியும். 

இதன்படி, 2012ம் ஆண்டு நடந்த தேர்வில், மூன்றாம் ஆண்டு தேர்வு எழுத தகுதி உடையவராகிறார். அதற்கான ரிசல்ட் வரும், ஜூன் மாதத்துக்கு பின் தெரியவரும். மேலும், இவர் மூன்று ஆண்டுகளும் தேர்வு எழுதி இருந்து, அனைத்து தேர்விலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அவர் பி.ஏ., முடித்ததாக கருதப்படும்.

பி.ஏ., பாஸ்?தமிழக அரசு சார்பில், வெளியிடப்படும் அமைச்சரின் விவரங்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் விவரங்கள் அடங்கிய வெப்சைட்டில், அவருடைய கல்வித்தகுதி, பி.ஏ., என குறிப்பிடப்பட்டுள்ளது."அமைச்சராக உள்ள ஒருவர், அரசுக்கு தன் கல்வியின் விவரங்களை தவறாக கூறியுள்ளார். மேலும், அவருடைய கல்வித்தகுதியை முதல்வருக்கு, தவறாக தெரிவித்துள்ளார். எனவே, இதுகுறித்து முதல்வருக்கு புகார் மனுவை அனுப்ப உள்ளோம்' என, அமைச்சரின், எதிர் கோஷ்டி, அ.தி.மு.க., வினர் கூறி வருகின்றனர்.

மேலும், அமைச்சரின் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் கூறுகையில், "2009ம் ஆண்டு பி.ஏ., முதலாமாண்டு தேர்வு எழுதியது உண்மை. அதில், ஒரு பாடத்தில் கூட தேர்ச்சி பெறவில்லை. 
இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு தேர்வு எழுதவே செல்லவே இல்லை. அப்படி இருக்க அவர் எவ்வாறு, பி.ஏ., தேர்ச்சி பெற்றிருக்க முடியும்' என, கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் கல்வி வளர, தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை கொண்டு வரும் நிலையில், அமைச்சர் இது போன்று ஈடுபட்டு வருவது கேலிக்குரியது என, அ.தி.மு.க., வினர் புலம்பி வருகின்றனர். திடீரென எழுந்துள்ள புகாரால், அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியத்துக்கு, சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

எனக்கு தெரியாது:இதுகுறித்து, அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் கூறியதாவது:தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில், நான் பி.ஏ., படித்து வருகிறேன். முதல் இரண்டாண்டு தேர்வு எழுதியுள்ளேன். மூன்றாம் ஆண்டு தேர்வு எழுதவில்லை. பி.ஏ., பட்டப்படிப்பு முழுவதும் முடிக்கவில்லை. அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள வெப்சைட்டில், கல்வித்தகுதி என்ன வெளியிடப்பட்டுள்ளது என, எனக்கு தெரியாது. இதுகுறித்து விசாரிக்கிறேன்.இவ்வாறு கூறினார்.

share on:facebook

Thursday, March 15, 2012

தமிழகத்தின் (ஒரே) ஒளி விளக்கு !

I Like this ....



share on:facebook

Tuesday, March 6, 2012

எப்படி இருந்த நான் இப்படி ஆக போகிறேன் - எஸ். வி. சேகர் சிறப்பு (போட்டோ) பேட்டி..

எப்படி இருந்த நான்...



 இப்படி ஆக போகிறேன் ...


செய்தி: எஸ்.வி.சேகர் அ.தி.மு.கவில் சேர போகிறார். 

share on:facebook

Tuesday, February 28, 2012

(சசிகலா) நடராஜன் உயிருக்கு ஆபத்து?



நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய, சசிகலா கணவர் நடராஜன் உள்ளிட்ட மூவருக்கு, ஒருநாள் போலீஸ் கஸ்டடி கொடுத்து, தஞ்சை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், விசாரணையின் போது, மாஜிஸ்திரேட் முன்னிலையில் நடராஜன் கூறுகையில், "நில அபகரிப்பு புகார் முற்றிலும் பொய்யானது. அரசியல் உள்நோக்கத்துடன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனக்கும், புகாருக்கும் சம்பந்தமில்லை. என்னைக் கைது செய்து விட்டுத்தான் போலீசார் எப்.ஐ.ஆரையே தயார் செய்தனர். கடந்த தி.மு.க., ஆட்சியிலேயே டிரஸ்ட் மூலமாக முள்ளிவாய்க்கால் நினைவக தூண் கட்டப்பட்டு வருகிறது. அதில் உறுப்பினராகக்கூட நான் இல்லை. எனக்கு சம்பந்தமில்லாத வழக்கில், என்னை போலீசார் சேர்த்துள்ளனர். தற்போது என்கவுன்டர்களை போலீசார் நடத்தி வருகின்றனர். அதனால் என்னையும் என்கவுன்டரில் கொல்ல வாய்ப்புள்ளது. எனது உயிருக்கு போலீசாரால் பாதுகாப்பு இல்லை. அதனால், என்னை போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க அனுமதிக்கக்கூடாது,' என்று எதிர்ப்புத் தெரிவித்து உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன், பெங்களூரு நீதி மன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கில், இந்த வழக்கிற்கும் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் எந்த சமந்தமும் இல்லை என கூறி திருமதி. சசிகலா கதறி அழுததாக செய்தி வந்திருந்தது.

ஹ்ம்ம்...இன்னும் என்னவெல்லாம் அரங்கேற போகிறதோ? எல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய மற்ற பதிவு...நில அபகரிப்பு வழக்கில் சசிகலா நடராஜன் கைது

share on:facebook

Saturday, February 18, 2012

நில அபகரிப்பு வழக்கில் சசிகலா நடராஜன் கைது



சென்னை: நில அபகரிப்பு வழக்கில் சசிகலா கணவர்நடராஜன் தஞ்சை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. இவரது கணவர் நடராஜன். சசிகலாவும், அவரது உறவினர்களும், கட்சியிலும் , ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாக கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி சசிகலா, அவரது கணவனர் நடராஜன், திவாகரன், தினகரன், ராவணன். பாஸ்கரன், வெங்கடேசன், ராஜராஜன், குலோத்துங்கன் உள்ளிட்ட பலரை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி ஜெயலலிதா உத்தரவிட்டார்.இதனையடுத்து போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேறிய சசிகலா தனது உறவினர் இளவரசி வீட்டில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் வீடு இடிப்பு புகாரின் பேரில் சசிகலா சகோதரர் திவாகரன், திருவாரூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். உறவினரான ராவணன், மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார்.

இந்நிலையில் தற்போது நில அபகரிப்பு புகாரின் பேரில் சசிகலா கணவர் நடராஜனும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூரை சேர்ந்த ராமலிங்கம் என்பவர், தஞ்சை போலீசாரிடம் கொடுத்த புகாரில், தஞ்சையின் பிரதான இடத்தில் உள்ள தனக்கு சொந்தமான 15 ஆயிரம் சதுர அடி நிலத்தை நடராஜன் தூண்டுதலின் பேரில் சிலர் ஆக்கிரமித்து கொண்டதாகவும், இடத்தை திருப்பி கேட்டபோது நடராஜனுடன் சேர்ந்து சிலர் தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார். இதன் பேரில் தஞ்சை டி.ஐ.ஜி., அமல்ராஜ் தலைமையிலான போலீசார் பெசன்ட் நகரில் உள்ள வீட்டிலிருந்த நடராஜன் மற்றும் ஒருவரை அழைத்து சென்றனர்.

நன்றி: தினமலர் செய்தி.

share on:facebook

Wednesday, February 1, 2012

கேப்டனுக்கு ஆப்பு. விரைவில் சிறை? அரசு நடவடிக்கை.

எந்த நேரத்தில் "காப்டனுக்கு ஆப்பு. அரசு நடவடிக்கை. விரைவில் சிறை" என  தலைப்பிட்டு இந்த பதிவை போட்டேனோ. நேற்று தமிழக சட்ட மன்றத்தில்  நடை பெற்ற நிகழ்வுகளை பார்க்கும் போது மேலே உள்ள தலைப்பு உண்மை  ஆகிவிடுமோ என எண்ணத் தோன்றுகிறது.    

ஆனால் ஒன்று. சட்ட சபையில் நடந்த விவாதத்தில்(சண்டையில்),  முதல்வர் பொறுப்பில் இருக்கும் ஜெயலலிதா என்னமோ ஒரு கட்சி பொது  கூடத்தில் எதிர் கட்சியை சவால் விட்டு பேசுவது போல் விஜயகாந்த்தை  நோக்கி பேசியதும், அதன் பிறகு அக்கட்சியினரை பார்த்து விஜயகாந்த்  ஏதோ சினிமாவில் வில்லன்களை பார்த்து சவால் விடுவது போல் நடந்து  கொண்டதும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக சபாநாயகர் எதிர் கட்சியினரை மன்றத்தை விட்டு வெளியேற்ற உத்தரவிட்ட தொனியில்  தெரிந்த அலட்சியமும், இவை எல்லாவற்றையும் பார்க்கும் போது  இவர்களை சட்ட மன்றத்திற்கு அனுப்பியதற்கு நாம் தான் வருத்தப் பட  வேண்டும்,  வேதனைப் பட வேண்டும்.

அந்த அறிய கட்சியை பார்க்க தவறியவர்கள் இங்கே பார்க்கலாம்... 



காணொளி நன்றி: நக்கீரன் வெப் டி.வி.

share on:facebook

Wednesday, December 28, 2011

ஜெவும், அழகிரியும் ஒன்னு. தமிழர்கள் வாயில் மண்ணு.

என்ன கொடுமை சார் இது. ஒரு பிரதமர் வராரு. அவரை மாநில ஆளுநர், முதல் அமைச்சர் சந்திச்சு கை கொடுப்பதை மறைத்துக்கொண்டு ஒரு வீடியோ போடோகிராபர் வீடியோ எடுப்பதை பார்த்து அருகில் உள்ள மற்ற போடோகிராபர்கள். யோவ், செக்கூரிட்டி, ஹல்லோ, சார், நகருயா என பல்வேறு குரல்கள். இந்த கூச்சல்களுக்கு மத்தியில் ஒரு பிரதமர், முதல்வர் மற்றும் கவர்னர் நடந்து முன்னே செல்கிறார்கள்.

அதுக்கு அப்புறம் நடந்தது தாங்க இந்த கொடுமை. மாநிலத்தில் எதிர் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பிரதமருக்கு சால்வை மரியாதை செய்து விட்டு பக்கத்தில் நிற்கும் ஒரு மாநில முதல்வரை கண்டு கொள்ளவேயில்லை. அதை சற்றும் பொறுத்துக் கொள்ள முடியாத முதல்வர் உடனே அங்கிருந்து (பிரதமரை அம்போ என்று விட்டு விட்டு) சென்று விடுகிறார். அட, பிரதமரிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல்.

இந்த லட்சணத்தில் இவர்கள் கூடங்குளம், முல்லை பெரியார் பிரச்சனையில் ஒன்றாக சேர்ந்து! தமிழக மக்களுக்கு என்ன செய்து விட போகிறார்கள்.

காணொளி உதவி. நக்கீரனுக்கு நன்றி.


share on:facebook

Monday, December 19, 2011

சசிகலா அ. தி. மு. க. விலிருந்து நீக்கம். கனவா இல்ல நினைவா?

அ.தி.மு.க.,வில் இருந்து சசிகலா திடீர் நீக்கம் - போயஸ் தோட்டத்தில் இருந்தும் வெளியேற்றம்.


செய்தி.

share on:facebook

Wednesday, December 7, 2011

(முல்லை) பெரியாரும் (ஐயப்ப) பக்த்தர்களும்


முல்லை பெரியார் அணை பிரச்சனையால் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் ஐயப்ப பக்தர்கள் படும் பாடு எல்லோருக்கும் தெரிந்ததே. வாடிக்கையாளர்கள் வரவால் தான் ஒரு வியாபாரம் செழிக்கும். அது போல் பக்தர்கள் வருகையால் தான் ஒரு திருத்தலம் புகழ் பெற முடியும். தமிழக ஐயப்ப பக்தர்கள் ஒரு வருடம் சபரி மலைக்கு செல்வதை நிறுத்தினாலே போதும். அடுத்த வருடம் சபரி மலையை நிர்வகிக்க கேரளா அரசிடம் டப்பு இருக்காது. இவை எல்லாம் தெரிந்திருந்தும் கேரளா அரசு தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு ஏற்படும் இன்னலை கண்டும் காணாமல் இருக்கிறதென்றால் அவர்களுக்கு சரியான பாடம் கற்ப்பிக்க வேண்டும்.

அதற்காக இங்கு தமிழகத்தில் உள்ள கேரளா வர்த்தக நிறுவனங்கள் மீதும் மலையாளிகள் மீதும் தாக்குதல் நடத்தி தான் நம் கண்டனத்தை தெரிவிக்க  வேண்டும் என்று இல்லை. சமீபத்தில் சபரி மலை செல்லும் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகளால்தவித்த தமிழக பக்தர் ஒருவர்,  இனி நாங்கள் சபரி மலை சென்று ஐயப்பனை தரிசிக்க  போவதில்லை.  தமிழ் உணர்வுடன் இங்கு உள்ள (அவர் சொன்ன ஊர் பெயர் நினைவில்லை)  ஐயப்பன் கோவிலுக்கே  சென்று விரதத்தை முடித்துக் கொள்ளப் போகிறோம்  என்று தெரிவித்தார்.  என்ன உன்னதமான ஒரு புத்திசாலித்தனமான முடிவு.

பொதுவாகவே தமிழர்களுக்கு சகிப்புத்தன்மை  அதிகம்.  அதனால் தவறு  ஒன்றும் இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து ஐயப்ப சேவா சங்கங்களும் உடனே கூடி சபரி மலை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் அடுத்த வருடத்தில் இருந்து நாங்கள் யாரும் சபரி மலைக்கு வர மாட்டோம். இங்குள்ள பழனிக்கோ, குன்றக்குடிக்கோ விரதம் இருந்து காவடி எடுப்போம் என்று ஒரு அறிக்கை விடட்டும். அது போதும், கேரளா அரசு அணை கட்டும் பேச்சை கூட எடுக்காது.

தமிழகத்திற்க்கும் கர்நாடகத்திற்கும் இடையே உள்ள தண்ணீர் பிரச்னை வேறு.  ஆனால் முல்லை பெரியாறு அணை பிரச்னை வேறு. ஆயிரம் ஆண்டுகளை கடந்து இன்றும் கல்லணை உறுதியாக உள்ள போது சுமார் நூறு  வருடங்களுக்கு முன் கட்டிய அணை எவ்வாறு பலமிழந்து போகும்.  சுப்ரீம்  கோர்ட் முதல் அனைத்து வல்லுனர்களும் அணையின் பலத்தை பற்றி அறிக்கை கொடுத்தும் கூட கேரளா அரசு அடம் பிடிப்பது சண்டித்தனம்  என்பதை தவிர வேறு என்ன?

கேரளா அரசுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்றால், தமிழகத்திலுள்ள அனைத்து கேரளா நிறுவனங்களையும் (குறிப்பாக தொண்ணூறு சதவிகத்திற்க்கும் மேலான டீ கடைகளை) தமிழர்கள் புறக்கணித்தால் போதும். கேரளா அரசுக்கு மலையாளிகளே நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். பொருளாதார ரீதியாக அடித்தால் போதும் ஒரு மாநில அரசு என்ன ஒரு நாட்டையே வீழ்த்தி விட முடியும்.

உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதத்தை தவிர்ப்போம். பொருளாதார ரீதியாக கேரளா அரசை மிரட்டுவோம்.  

share on:facebook

Wednesday, November 23, 2011

ஜெயலலிதா "பெயில்"




செய்தி: பெங்களூரு நீதிமன்றத்தில் நான்கு நாட்களில் கேட்கப்பட்ட ஆயிரத்து முன்னூற்று  முப்பத்தொன்பது கேள்விகளில் பெரும்பாலான கேள்விகளுக்கு "தெரியாது", "மறந்து போயிற்று" என்று தமிழக முதல்வர் பதில்.

இப்ப சொல்லுங்க, ஜெயலலிதா மேடம் "பெயில்" தானே?

share on:facebook

Friday, November 18, 2011

ஜெ...கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்


ஆட்சிக்கு வந்து முழுதாக ஆறு மாதங்கள் தான் ஆகின்றன. அதற்குள் தமிழக முதல்வர் எடுத்த முக்கிய முடிவுகள் அனைத்துமே மக்கள் விரோத  அல்லது மக்களை வருத்தப்பட வைக்கும் விசயங்களே.

எடுத்தவுடனே சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதில் காட்டிய தயக்கமும்  அதனால் பள்ளி சென்றும் குழந்தைகள் படிக்க முடியாத சூழ்நிலையால்  படித்தவர் முதல் பாமரர் வரை தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் மீது எரிச்சல் ஏற்பட்டது.

பிறகு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்ற போவதாக அறிவித்தது. எங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். வேலை இல்லாத ..... எதையோ எடுத்து .....தானாம் என்று. அது போல் தான் இருக்கு இந்த அரசும். பணியாற்ற வேண்டிய பணிகள் பல இருந்தும் ஒன்றுக்கும்  உதவாத இது போன்ற காரியங்களில் ஈடுபடுவது.

அடுத்து சமீபத்தில், முந்தய அரசு நியமித்த ஒரே காரணத்திற்க்காக பதிமூன்றாயிரத்திர்க்கும் மேற்பட்ட கிராம நல பணியாளர்களை  மூன்றாவது முறையாக வீட்டுக்கு அனுப்பியது எல்லோரையும் பரிதாப பட வைத்தது. என்ன தான் அவர்களால் அரசுக்கு எந்த பலனும் இல்லை என்றாலும் திடீரென்று அரசு பணியில் உள்ள ஒருவரை வீட்டுக்கு அனுப்பினால் அதை நம்பி வாழ்க்கையை ஓட்டும் அவர்களின் வாழ்வில் மண் அள்ளி போடுவதற்கு சமம்.

தற்போது எல்லாவற்றுக்கும் சிகரமாக மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலையை தாறு மாறாக ஏற்றி இருப்பது மீண்டும் அவருடைய ஆட்சிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட் ஆன மாதிரியே தெரிகிறது. என்ன? இந்த தடவை ஆரம்பத்திலே கவுன்ட் டவுன் ஆரம்பித்து விட்டது.

ஊருக்கு போகும் போது எழுவது ருபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள்  திரும்பும் போது நூற்றி இருபது ரூபாய் பஸ்சுக்கு கொடுக்க வேண்டும் என்றால் யாருக்கு தான் கஷ்டமாக தெரியாது. இன்றும் நம் ஊரில் காசை எண்ணி எண்ணி செலவு செய்பவர்களும் பயணத்துக்கான டிக்கெட் காசை தவிர டீ குடிக்க கூட காசில்லாமல் பயணம் செய்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இவர்களை பற்றி எல்லாம் இந்த அரசு நினைத்து பார்க்க வேண்டாமா?

அடுத்து பால் விலையை லிட்டருக்கு ஆறு ருபாய் உயர்த்தியது. இதனால்  பெரிதும் பாதிக்கப்படுவது ஏழை எளியவர்களே. பால் விலை உயர்வினால் இயல்பாகவே கடைகளில் டீ, காப்பி விலைகள் உயர்த்தப்படும். அது மட்டுமில்லாமல் ஏழை நடுத்தர பணக்காரர்கள் என அனைவரையும் பாதிக்கும் ஒரு விலை ஏற்றம் இது.

மின் கட்டணமும் வேறு உயர்த்த போகிறார்களாம். அதற்கு சொன்ன காரணம் தான் சிரிப்பை வரவழைத்தது. பிரதமர் மண்மோகன் சிங் நான் சொல்வாதை கேக்க மாட்டார் என அன்னை சோனியா சொன்னால் அதை  உங்களால் நம்ப முடியுமா? அது போல் தான் முதல்வர் கூறியிருப்பது.  மின்சார வாரியம்  தனியே இயங்கும் ஒரு வாரியம். அது மின்சார  கட்டணத்தை உயர்த்தினால்  அதை என்னால் (தமிழக அரசால்) தடுக்க  முடியாது என கூறுவது. 

Sky rocketing price hike என்று சொல்லக்கூடிய இந்த வரலாறு காணாத விலை ஏற்றம். அதுவும் இரவோடு இரவாக மூன்று அத்தியாவிச பொருட்களின் மீது. இதனால் மக்கள் எவ்வளவு கஷ்ட படுவார்கள் என முதல்வர் தெரிந்து கொள்ள வேண்டுமானால்...

அடுத்த ஒரு மாதத்திற்கு அவருக்கு வரும் சம்பளத்தை மட்டுமே வைத்து (அது ஒரு லட்சமாக இருந்தால் கூட) அவருடைய எல்லா செலவுகளையும் அதை வைத்தே அவர் செய்து கொள்ள வேண்டும். வீட்டுக்கு பால் வாங்குவதிலிருந்து, அவர் தினமும்! தலைமைச்செயலகம்  செல்ல தன்  காருக்கு  பெட்ரோல் போடுவது வரை. ஒரு மாதம் கழித்து சொல்லட்டும்.  அவரால் அவரின் சம்பளத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு மாதத்தை  ஓட்ட முடிந்ததா என்று.

எப்படியோ நான்கரை வருடம் கழித்து இவர்களை வீட்டுக்கு அனுப்ப எதிர் கட்சியினர் பெரிதாக ஒன்றும்  கஷ்ட பட வேண்டியது இல்லை.  ஆல்ரெடி கவுன்ட் டவுன் ஸ்டார்டட்.    

share on:facebook

Tuesday, November 8, 2011

கன்னடர்களுக்காக கவலை படும் ஜெயலலிதா

தலைப்பை பார்த்து கன்னட சகோதர சகோதிரிகள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

சொத்து குவிப்பு வழக்கில் நூறு முறைக்கு மேல் வாய்தா வாங்கி இருக்கும் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா தற்போது தொடர்ந்து ஆஜர் ஆவதிலிருந்து தப்பிக்க புதிய வழி ஒன்றை தேர்ந்தெடுத்து  உள்ளார். அதாவது இவர் விசாரணைக்காக பெங்களூரு செல்வதால்,   இவருக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாட்டால் பெங்களூரு பொது மக்கள் மிகவும் சிரமத்துக்கு  ஆளாகிறார்களாம். அதனால் இவர் நீதி மன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமாம். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா  தெரியல. 

அப்ப தினமும் இவர் தலைமை செயலகம் செல்வதற்காக போயஸ்  கார்டனிலிருந்து தலைமை செயலகம் வரை நிறுத்தப்படும் போக்குவரத்தால் சென்னை மக்கள் கொளுத்தும் வெயிலில் நடு வழியில் நிறுத்தி வைக்கப்படுவது அவர்களுக்கு சுகமான அனுபவத்தை தருகிறதா?

குற்ரம் சுமத்தப்பட்டவராக கோர்ட்டு விசாரணைக்கு செல்லும் இவரின்  காரில் தேசிய கொடி பறப்பதும், வழி நெடுக காவலுக்கு நிற்கும் காவல் துறை  உயர் அதிகாரிகள் மிலிடரி சல்யூட் அடிப்பதும் எந்த வகையில் சட்டப்படி சரி     என்று தெரியவில்லை. இவ்வாறு செய்வது இவருக்கு எதிராக வாதாட  போகும் வக்கீல், மற்றும் இவருக்கு எதிராக சாட்சியம் சொல்லப்போகும்  சாட்சிகள் ஆகியோரை மறைமுகமாக பயமுறுத்துவது போலாகாதா.

என்னை பொறுத்தவரை தமிழக முதல்வர் மீது குற்றம் மட்டும் தான் சுமத்தப்பட்டிருக்கிறது. இறுதி தீர்ப்பு வரும் வரை அவர் குற்றமற்றவராக தான் கருத வேண்டும். அப்படி இருக்கையில், இவர் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து தான் ஆட்சி செய்யும் நாட்டு மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அல்லவா திகழவேண்டும்? 

என்னமோ போங்க. அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி. புரட்சி தலைவிக்கு ஏதாவது ஒரு நல்ல பட்டம் சொல்லுங்கள் கொடுத்து விடுவோம். 

share on:facebook

Wednesday, October 19, 2011

தைரியலட்சுமி செல்வி ஜெயலலிதா


ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சர், இருபத்திநான்கு மணி நேரமும் கருப்பு பூனை பாதுகாப்புடன் உலா வருபவர். அவர், பக்கத்து மாநிலத்தில் நடக்கும் ஒரு நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர் ஆவதற்கு பாதுகாப்பு இல்லை என நேரில் ஆஜர் ஆவதற்கு விலக்கு அளிக்க கோருகிறார். என்ன கொடுமை  சரவணா இது?

கர்நாடகா மாநிலம் அப்படி ஒன்றும் தீவிரவாதிகளோ நக்சலைட்டுகளோ நிறைந்த மாநிலம் அல்ல. அதே போல் இவருக்கும் தற்போது எந்த ஒரு தீவிரவாத கும்பலின் அச்சுறுத்தலும் இருப்பதாக நமக்கு தெரியவில்லை. இப்படியெல்லாம் சொல்வதற்கு ஒரே காரணம் நாட்களை கடத்தி வழக்கையே ஒன்றும் இல்லாமல் செய்வதற்கு தவிர வேறு ஒன்றும் இல்லை.

இத்தனைக்கும் பாதுகாப்பு காரணங்களுக்காக நீதி மன்ற வளாகத்தையே மாற்றி விட்டார்கள். அது தவிர, விமான நிலையத்திலிருந்து நீதி மன்றத்திற்கு செல்ல தனி பாதுகாப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனம் வேறு. இவையெல்லாம் மீறி அப்படி என்ன பாதுகாப்பு இவருக்கு வேண்டும் என தெரியவில்லை. இல்லை கர்நாடக மாநில அரசையும், காவல் துறையையும் வேறு ஒரு மாநில முதல் அமைச்சருக்கு பாதுகாப்பு அளிக்க கூட துப்பு இல்லை என கூற வருகிறார்களா?

இந்த A.K. 47 , கருப்பு பூனை பாதுகாப்பெல்லாம் இந்திய அரசியல்  வாதிகளுக்கு மட்டும் தான். அமெரிக்க ஜனாதிபதியோ போகும் வழியில்  உள்ள சாலையோர ரெஸ்டாரன்ட்டில் இறங்கி மக்களோடு மக்களாக பர்கர்  வாங்கி சாப்பிடுகிறார். அமெரிக்க ஜனாதிபதிக்கு இல்லாத அச்சுறுத்தலா  நம்மூர் மாநில முதல் அமைச்சருக்கு இருந்து விட போகிறது? இன்னும் சொல்லப்போனால் நம்மூரை போல் பொழுதுக்கும் A.K. 47 துப்பாக்கிகளோடும், கருப்பு பூனை பாதுகாப்போடும் எந்த ஒரு நாட்டு அமைச்சர்களோ, முதல்வர்களோ, பிரதமர், ஜனாதிபதிகளையோ நான் பார்த்ததில்லை.

இதில் இன்னொரு காரணம் வேறு நீதி மன்றத்தில் தெரிவித்து இருக்கிறார்கள். அதாவது, புதிதாக ஏற்பாடு செய்யப்பட்ட நீதிமன்ற  வளாகத்தில், புதிதாக பெயின்ட் அடித்திருப்பதாகவும், அது முதல்வருக்கு  ஒத்துக்கொள்ளாது எனவும் அதனால் இரு வாரங்களுக்கு விசாரணையை  தள்ளிப்போட வேண்டுமாம். இன்னும் என்னவெல்லாம் சொல்லப்போகிறார்களோ?

சரி, நாளையே ஒரு வெள்ளம், விபத்து என ஏதாவது (அப்படி ஏதும் நடந்து விடக்கூடாது) ஒரு அவசர நிலை ஏற்பட்டால் இப்போது கூறியது போல் 96 மணிநேர அவகாசம் எடுத்துக்கொண்டு தான் ஒரு மாநில முதல்வர்  பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்று பார்ப்பாரா?

நல்ல வேலை இவை எல்லாவற்றையும் நிராகரித்த நீதி மன்றங்கள் நாளைக்குள் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறபித்துள்ளது. பொதுவாக இம்மாதிரி விசயங்களில் நீதி மன்றங்கள் சற்று கடுமையாகவே உத்தரவு பிறப்பிக்கும். ஆனால் அப்படி ஒன்றும் இந்த உத்தரவில் தெரியவில்லை.  அதற்கு மேல் நாம் கூறக்கூடாது. பிறகு அது நீதிமன்ற அவமதிப்பாக  போய்விடும். அதனால் ஜூட்....

கடைசியா வந்த செய்தி : ஒரு வழியாக முதல்வர் நீதிமன்றத்தில் ஆஜர் என்று.



share on:facebook

Monday, October 10, 2011

குருட்டு மந்திரி, செவிட்டு அதிகாரி, ஊமை பிரதமர்

அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு நாள் மும்பைக்கு வருகை தந்ததிற்காக சாலையோரம் இருந்த ஐநூறுக்கும் மேற்ப்பட்ட தென்னை மரங்களை மொட்டை அடித்தார்கள். பத்துக்கும் மேற்ப்பட்ட போர் விமானங்களும்,  இருநூறுக்கும் மேற்பட்ட கடற்படை காவல் படகுகளும், கப்பல்களும் அவரின் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட்டன.

இங்கே தமிழக மீனவர்கள் தினந்தோறும் பிழைப்புக்காக  கூப்பிடும் தூரத்தில் உள்ள கச்சத்தீவிற்கு மீன் பிடிக்க செல்லும் போது இலங்கை இராணுவத்தாலும், இலங்கை மீனவர்களாலும் தாக்கப்பட்டும், அவர்களின் பொருட்கள் சூறையாடப்பட்டும் வருகின்றன. இது பற்றி தமிழக அரசோ, மத்திய அரசோ கண்டு கொள்வதே இல்லை.

விடுதலை புலிகள் ஆதிக்கம் இருந்தவரை எல்லா பழியையும் அவர்கள் மேல் போட்டார்கள். தமிழக மீனவர்களையும் விடுதலை புலிகளையும் இனம் காண முடியவில்லை. தமிழக மீனவர்கள் விடுதலை புலிகளுக்கு பொருட்கள் கடத்துகிறார்கள் என கூறிக்கொண்டு சுட்டுத்தள்ளினார்கள்.  இப்போது அவர்களுக்கு காரணம் சொல்ல ஏதுமில்லை. இருந்தும் சுடுகிறார்கள். கேள்வி கேக்க யாரும் இல்லை என்ற காரணத்தால்.  நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் ஒன்றாக கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் போதே இப்படி தாக்கப்படுகிறார்களே. இலங்கையில் யாரும் இல்லாத அனாதைகளாக வாழும் தமிழர்கள் நிலை என்னவாக இருக்கும்? 

நக்சலைட்டுகள் ஆபத்து நிறைந்த பகுதிகளில் பொது மக்களுக்கு ஆயுதம்  வழங்குகிறது அரசே. அது போல் தமிழக மீனவர்களுக்கும் ஆயுதம் வழங்கினால் ஒரு வேலை இம்மாதிரி மீனவர்கள் தாக்கப்படுவது நிற்குமோ?  இல்லை, கட்சத்தீவும் அதை சுற்றி உள்ள பகுதிகளும் ஒரு சில கிலோ  மீட்டர்கள்  சுற்றளவு தான். அப்படி இருக்கையில் அதன் அருகே இந்திய கடலோர காவல்  படை  படகுகள் ஒன்றிரண்டை அங்கு சுற்றி வர செய்தாலே  போதும். இந்த பிரச்சனைக்கு எளிதில் தீர்வு கண்டு விடலாம். இந்தியாவை பொறுத்தவரை இலங்கை ஒரு சுண்டைக்காய் தான். எல்லா விசயத்திலும். இருந்தும் என்ன காரணத்தால் யாரும் ஏதும் செய்ய மாட்டேன் என்கிறார்கள் என்பது ஒரு புதிராகவே உள்ளது.

இதே குஜராத்தை சேர்ந்த மீனவர்கள் இவ்வாறு தாக்கப்பட்டால் சும்மா இருந்து விடுமா மத்திய மாநில அரசுகள்? சண் டி.வி. மற்ற தமிழக  சானல்கள் தவிர எந்த ஒரு வட நாட்டு செய்தி சானல்களும் இது பற்றி வாய்  திறப்பதே இல்லை. இது இன்னொரு கொடுமை. 

இன்றைய  காலத்தில் தமிழக மீனவர்கள் ஒரு வீடியோ கேமராவில் இலங்கை ராணுவம் தாக்குதல் நடக்கும் போது அதை பதிவு செய்து பத்திரிக்கைகளுக்கு கொடுத்தால் அது நல்லதொரு பயனை தரும். இல்லை எது எதற்கோ ஸ்டிங் ஆப்பரேஷன் செய்து எல்லாவற்றையும்  அம்பலப்படுத்தும் பத்திரிக்கையாளர்கள் ஒரு முறை இம்மாதிரி ஒரு ஆப்பரேஷன் செய்து மக்களுக்கு உண்மைகளை வெளி கொண்டு  வந்தால் நன்றாக இருக்கும். நடக்குமா என் ஆசை?

இது எதுவுமே தேவை இல்லை. ஆமாம், தலைப்பு என்ன? 

குருட்டு  மந்திரி, செவிட்டு அதிகாரிகள், ஊமை பிரதமர். இவர்கள் தங்கள்  கண்கள், காதுகள் மற்றும் வாயை திறந்தால் போதும். செய்வார்களா?

கடைசியாக கேட்ட செய்தி: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடப்பதை  பற்றி பேச்சு வார்த்தை நடத்த இந்திய வெளியுறவு அதிகாரிகள் இலங்கையில் இருக்கும் போதே மீண்டும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டார்கள்.

share on:facebook