Sunday, August 18, 2013

அன்புள்ள அப்பா

அப்பா. இந்த உறவுக்கு தான் என்ன ஒரு மரியாதை, கம்பீரம், மதிப்பு. காலம் எல்லா வலியையும் ஆற்றும் என்பார்கள். என்னை பொருத்தவரை சில வலியை காலம் மட்டுதான் படுத்த முடியும். மறக்க வைக்க இயலாது.

அப்பா காலமாகி அகஸ்ட் 15 வுடன் 5 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் அவரின் நினைவும் பாசமும் இருப்பும் என் நினைவை விட்டு அகலவில்லை. அப்பாவின் சிறப்பு குணங்கள் என சிலவற்றை சொல்ல வேண்டும் என்றால், அது எல்லோருடனும் வயது வித்தியாசம் இல்லாமல் பழகுவது. தீண்டாமை ஜாதி/மதம் பிரித்து பார்க்காமை மற்றும் அவரின் எல்லோருக்கும் உதவும் குணமும் கூடவே தவறுகளை தட்டி கேட்கும் தைரியமும் தான்.

எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் மட்டுமில்லாமல் என் நண்பர்களிடம் கூட ரஜினி, கமல் என்று திரையுலகினர் ஆரம்பித்து அரசியல் வரை சுவாரசியமாக விவாதமும், சண்டையும் போடுவார். அப்போது பெரும்பாலும் நான் அப்பாவின் எதிர் பக்கத்தில் தான் இருப்பேன். நான் சிறு வயதாக இருக்கும் போது கிராமத்தில் விவசாய தொடர்புகள் இருந்தது. அப்போது எங்கள் (தஞ்சை) வீட்டிற்கு வருவதற்கு வேலை ஆட்கள் போட்டி போட்டுக்கொள்வார்கள். காரணம், மாப்பிளை அய்யா  வீட்டுக்கு போனால் நல்ல சாப்பாடு கிடைக்கும். வரும் போது சினிமா பார்க்க காசு என்று எல்லாம் தருவார்கள்  என்றுதான். அதே போல் அனைவரையும் அந்த காலத்திலேயே வீட்டிற்குள் உட்கார வைத்து தான் சாப்பாடு போடுவார்கள்.

யார், வீட்டு வாசலில் வந்து உதவி கேட்டாலும் ஏதும் இல்லை என்று வீட்டில் உள்ளவர்கள் யாரும் சொல்லிவிட கூடாது. நம்மால் முடிந்ததை தேவை படுபவர்களுக்கு செய்ய வேண்டும். போகும் போது என்னத்தை கட்டிக்கொண்டு போக போகிறோம் என அடிக்கடி கூறுவார். அதே போல், எங்கு யார் தவறு செய்தலும் அதை தட்டி கேட்க தயங்க மாட்டார்.

அதே போல் அவர் விரும்பியது போலவே கடைசி வரை வாழ்ந்தார். இருக்கிறவரை சந்தோசமாக இருக்கணும். போகும் போது பட்டுன்னு போய்டணும் என்று சொல்லிக்கொண்டிருப்பார். அதே போல் 2008 அகஸ்ட் 15 அன்று காலை தூங்கி எழுந்தவர் வழக்கம் போல் கிளீன் சேவ் செய்து குளித்து முடித்து திருநீர், குங்குமம் என்று பளிச் முகத்துடன் சாமி கும்பிட்டு காலை உணவு அருந்தியவர், வெளியே சிறிது நேரம் சென்று விட்டுவந்து, மதியம் வீட்டில் உணவருந்தி விட்டு படுக்க சென்றவர் தான்.

அதன் பிறகு நடந்தவைகளை மீண்டும் அசை போட எனக்கு மனதளவில் தெம்பில்லை.

அப்பா...நீங்கள் என்றும் எங்கள் நினைவில். அப்பா இறந்த செய்தி கேட்டு அமெரிக்காவில் உள்ள என் அமெரிக்க நண்பி ஒருவர் சொன்னது இன்னமும் நினைவில் உள்ளது. I know how difficult it is to lose a parent...

Yes it is...







share on:facebook

2 comments:

Yaathoramani.blogspot.com said...

என்னுள்ளும் என் அப்பாவின் இழப்பை
நினைவுறுத்திப் போனது தங்கள் பதிவு
பெரும்பாலும் நாம் அப்பாவை முழுமையாக உணர்ந்து
அவர்களுடன் மிகச் சரியாகப் பொருந்த முயலும் நேரத்தில்
அவர்களை இழந்துவிடுவது பெரும் துரதிஷ்டம்
நினைவுகளோடு நீங்காது வாழ்பவர் நிச்சயம்
நமக்கு நல்வழிகாட்டியாகவும் இருப்பார்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Avargal Unmaigal said...

உங்களுக்கு ஒரு நல்ல தகப்பனார் கிடைத்து இருக்கிறார் அவர் நல்லதை பலவும் கற்று தந்திருக்கிறார் அதனால்தான் அவரின் இழப்பு உங்களை மிகவும் இன்று வரை பாத்தித்து இருக்கிறது. அவரைப் போலவே நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு நல்லவைகளை விதையுங்கள். வாழ்க வளமுடன்

Post a Comment