தலைப்பை பார்த்துவிட்டு ஏதோ இது ஒரு சரித்திர பதிவு. புதுசா ஏதாவது தெரிந்து கொள்ளலாம் என்று நீங்கள் நினைத்து வந்திருந்தால். சாரி. சமீபத்தில் சென்னையிலிருந்து மும்பைக்கு அலுவல் நிமித்தம் செல்ல நேர்ந்தது. ஆதி மனிதனும் முதல் மனிதனும் ஒன்று தானே. அதான் தலைப்பு அப்படி.
ஓரிரு முறை மும்பைக்கு ரெயிலில் சென்று உள்ளேன். ஆனால் இதுவரை ஏ. சி. கோச்சில் சென்றதில்லை. இம்முறை 2AC பயணம். மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றேன். ஆனால் எதிர்பார்ப்பு பொய்த்தது என்றே சொல்ல வேண்டும். என்ன ஒன்று. பொதுவாக ரோட்டில் செல்லுபவர்களிடம் நாமாக போய் பேசுவதில்லை. ரெயில் பயணம் அப்படி இல்லை. நாம் பேசாவிட்டாலும் நம்முடன் வருபவர்கள் பேச ஆரம்பித்த விட்டால் நாமும் பேச ஆரம்பித்து விடுவோம்.
பக்கத்து பெர்த்தில் பயணித்தவர்கள் ஜப்பான் கம்பெனியான Fujitech lift க்கில் வேலை பார்ப்பவர்கள். சென்னைக்கு ஒரு கான்பாரன்ஸ் கலந்துக்க வந்துவிட்டு போவதாக சொன்னார்கள். Lift பற்றி பல விசயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. Lift பற்றி பேச்சு வந்ததும் அமெரிக்காவில் எம்பயர் ஸ்டேட் பில்டிங்கில் உள்ள lift பற்றியும் அதன் வேகம் பற்றியும் பேச்சு போனது. எனக்கு தெரிந்த சில தகவல்கள் கீழே...
எம்பயர் ஸ்டேட் பில்டிங்க்ளில் மொத்தம் 73 லிப்ட்கள் உண்டு. முதல் தளத்திலிருந்து 80 தளம் வரைக்கும் ஒரே நேரத்தில் பார்வையாளர்கள் பயணிக்கலாம். பின் அங்கிருந்து 86 தளத்திற்கு படிகள் வழியாகவோ வேறொரு லிப்டிலோ பயணிக்கலாம். முதல் 80 மாடிகள் சுமார் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் லிப்ட் சென்றடைந்து விடும். அட ஆமாங்க. லிப்டில் தெரியும் டிஜிடல் சிஸ்டத்தில் 5, 10, 20 என்று மாடிகள் கடந்து போவதை பார்த்து நமக்கு தானாக தலை சுத்துகிறதோ இல்லையோ, முக்கால்வாசிப் பேருக்கு நாற்பது ஐம்பதாவது மாடியை கடக்கும் போது தானாகவே, காதை அடைக்கும். தலை சுற்றும். ஏன் சில நேரத்தில் நெஞ்சை அடைப்பது போல் கூட உணர்வு ஏற்படும்.
அடுத்து நடுவே ரெயிலில் நடுவே ஏறிய ஒருவர், தமிழ், தெலுங்கு, மராத்தி ஹிந்தி என்று பிளந்து கட்டினார். ஆற்றில் மணல் அள்ளும் காண்ட்ராக்ட் தொழில் அவருக்கு. மணல் கொள்ளை பற்றி அவரே விரிவாக கூறினார். மகாராஸ்ட்ராவில் அள்ளப்படும் மணல் பிற மாநிலங்களுக்கு விற்க தடை உள்ளதாக கூறினார். நம் தமிழ் நாட்டில் அப்படி ஏதும் சட்டம் உள்ளதா என எனக்கு தெரியவில்லை. சமீபத்தில் ஏற்பட்ட ஒரு கார் விபத்தில், அவர் கார் தலை குப்புற கவிழ்ந்து, கார் கண்ணாடி உடைந்து அது அவரின் தலையின் மேற்பகுதி தோல் முக்கால்வாசி பகுதியை வழித்து போட்டுவிட்டதாம். தலை முழுதும் தற்போது வேறொரு இடத்திலிருந்து தோல் எடுத்து வைத்து தைத்திருக்கிறார்கள். கேட்கவே திகிலாக இருந்தது. ஆனால், மனுஷன் அதை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. தற்போது சிறிது சிறிதாக முடி முளைத்து வருவதாகவும் மீண்டும் தலையில் முடி முழுவதும் முளைத்து விடும் என்று தான் நம்புவதாக கூறினார். முடிக்கு என்ன மரியாதை பாருங்கள்.
ரெயில் பயணத்தில் ரொம்பவும் எதிர்பார்த்து ஏமாந்தது கேண்டீன் சமாசாரம் தான். ஓரிரு முறை பெங்களூரு சென்ற போது ரெயிலில் கேண்டீன் சாப்பாடு பிரமாதமாக இருந்தது. அந்த ஆசையில், நம்பிக்கையில் சாப்பாடு ஏதும் எடுக்காமல் சென்று விட்டேன். பான்ட்ரி இருந்த இடமும் அவர்கள் சாப்பாடு தயாரிப்பது அதை டெலிவெரி செய்யும் விதத்தையும் பார்த்து கடைசிவரை சாப்பாடு வாங்க மனம் வரவில்லை. வெளியே ஸ்டேஷனில் எங்கும் வாங்கலாம் என்றால் அங்கு அதற்க்கு மேல். எல்லாம் ஈ மொய்த்த படி.
அதை விட கொடுமை, எல்லா பெர்த்திலும் நீக்க மற நிறைந்திருந்த கரப்பான் பூச்சிகள் தான். ஈ, கொசு, வியர்வைக்கு பயந்து AC கோச்சில் சென்றால் அங்கு கரப்பான் பூச்சிகள் எல்லோருக்கும் முன்னே ரிசர்வேஷனில் கடை ஸ்டேஷன் வரை பயணித்து கொண்டிருக்கின்றன.
ஆங், சொல்ல மறந்து விட்டேனே, நீண்ட நாட்களுக்கு பிறகு, ஒரு மிக பிரபலமான தமிழ் நாவல் ஒன்றை இந்த பயணத்தில் படிக்க முடிவு செய்து படிக்க ஆரம்பித்தேன். டச்ப்ச்து 'மோகமுள்'. சுதந்திரத்திற்கு முந்தய காலக்கட்டத்தில் சொல்லப்பட்டதான ஒரு நாவல். பலர் இந்த நாவலை முன்பே படித்திருக்கலாம். அதனால் அதை பெருமையாக நான் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. முடித்தபின் பார்ப்போம்.
ஒரு வழியாக தானேயில் விடியற்காலை மூன்று மணிக்கு இறங்கி வந்து ஆட்டோவை நான் தேடும் முன், அவராகவே வந்த ஆட்டோ டிரைவரிடம் நான் போக வேண்டிய இடத்தை கூறினேன். மறு பேச்சின்றி என்னை ஏறச் சொன்ன அடுத்த நிமிடம் வண்டியை ஸ்டார்ட் செய்தவுடன் அவர் செய்த முதல் காரியம் ஆட்டோ மீட்டரை ஆன் செய்ததுதான். நன்றாக கேளுங்கள் நண்பர்களே. நான் செல்ல வேண்டிய இடத்தில் எங்கும் சுற்றாமல் நேர் வழியில் சென்று நான் இறங்கிய பின் மீட்டரை பார்த்து, இரவு நேரமாதலால் ஒரு புக்கை காண்பித்து இரவு பயணத்திற்கு 1 1/2 மடங்கு கட்டணம் என்பதை எடுத்து கூறி ஒரு ரூபாய் கூட அதிகமாக கேட்காமல் சரியான தொகையை மட்டும் வாங்கி சென்றார். 'முருகா' நாம் மும்பையில் பிறந்திருக்க கூடாதா என ஒரு கணம் நினைத்துக் கொண்டேன். இதற்காகவே, மும்பை ஆட்டோ காரர்களுக்கு ஒரு மிக 'பெரிய சல்யூட்.
*** அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த கரப்பான் பூசிகளை போட்டோ எடுக்க முயன்றேன். லைட்டிங் சரி இல்லாததால் முடியவில்லை. யப்பா இந்த கரப்பான் பூச்சிகளை நினைத்தால் தான் மீண்டும் ஒரு முறை ரெயிலில் போக பயமாக இருக்கிறது.
share on:facebook
9 comments:
நல்லதொரு பயண பகிர்வு...
தொடர வாழ்த்துக்கள்...
நன்றி...
ac கோச் ல போனதில்ல என்பதால் இந்த தடவ 2AC இரண்டு ஏசி ல போயிட்டு போல ..ஹி ஹி ஹி ..
ஆதி மனிதன் அப்படின்னு பேர வச்சிட்டு கரப்பானுக்கு பயபடறீங்க...
சுவாரசிய அனுபவங்கள்...
சரளமான எழுத்து நடையில் நல்ல பயண கட்டுரை!
எலி இல்லையா???
நன்றி தனபாலன்.
ஆமாம். இராஜராஜேஸ்வரி.
@வரலாற்று சுவடுகள்
//சரளமான எழுத்து நடையில் நல்ல பயண கட்டுரை!//
அப்படீங்களா? நன்றிங்க.
@அமுதா கிருஷ்ணா said...
//எலி இல்லையா???//
ஒரு வேலை கோவை நேரம் சொன்ன மாதிரி இந்த ஆதி மனிதனை பார்த்துட்டு எலிகள் எல்லாம் எங்கே நம்மள இன்னைக்கு டிபன் ஆகிடுவானோ என பயந்து ஓடிடுச்சோ என்னவோ?
@கோவை நேரம் said...
//ac கோச் ல போனதில்ல என்பதால் இந்த தடவ 2AC இரண்டு ஏசி ல போயிட்டு போல ..ஹி ஹி ஹி ..//
காசு கொடுத்த நமக்கு ஒரு பெர்த். ஆனா பாருங்க. இதுக மட்டும் ஒவ்வொரு பெர்த்தா ஓடி விளையாண்டுக்கிட்டு இருக்குதுங்க. கேக்க ஆளே இல்ல.
Post a Comment