Tuesday, January 31, 2012

இசைஞானியும் புகழ் பாடும் ஞானிகளும்

இளையராஜாவை பற்றி நான் சொல்லி மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இந்த நூற்றாண்டிலும் கட்சி தலைவர்கள், நடிகர்களுக்கு அடுத்தபடியாக தானாக கூடும் கூட்டம் என்றால் அது இளையராஜாவின்  இசை  நிகழ்ச்சிக்கு தான்.

அன்னக்கிளியில் ஆரம்பித்து 80, 90 களில் அவருக்கு இருந்த மவுசு வேறு எந்த இசை அமைப்பாளருக்கும் இருந்ததில்லை. அதே போல் இன்றும் அவரது  இசை கச்சேரிகளில் மகுடிக்கு கட்டுண்ட பாம்பாக ரசிகர்கள் அவருக்கு மரியாதையை தந்து கை தட்ட வேண்டிய நேரங்களில் மட்டும்  கைதட்டி மற்ற நேரங்களில் பள்ளி கூட பிள்ளைகள் போல் அமைதி காப்பது எனக்கு ஆச்சர்யத்தை கொடுக்கும். அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, அவரது மேடையில் பாட வரும் சீனியர் பாடகர்கள் கூட இளையராஜா முன் பள்ளி கூட பிள்ளைகள் போல் தான் அடக்கம் காட்டுவார்கள்.

இசையை இளையராஜா போல் காதலிப்பவர் யாரும் இல்லை. ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு இசை அமைத்தால் கூட அதில் இளைய ராஜாவின் முத்திரை கண்டிப்பாக எங்கோ ஒரு இடத்தில் இருக்கும். காசுக்காகவோ, விரும்பாமலோ அவர் ஒரு படத்திற்கு  இசை  அமைத் திருப்பார் என நான் நம்பவில்லை.

இவர் இப்படி என்றால், தமிழ் திரை உலகில் கோடி கட்டி பறக்கும் இன்னொரு இசை அமைப்பாளர் கடந்த  இரு  வருடங்களாக நான் தமிழ் படங்களே பார்க்கவில்லை என  (பெருமையாக!) கூறுகிறார். அப்படி என்றால் எப்படி அவரால் திரைக்கதைக்கு  ஏற்ற  இசையை தர முடியும் என எனக்கு தெரியவில்லை.

சமீபத்தில் ஜெயா டி.வியில் ஒலிபரப்பப் பட்ட இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை பார்த்தேன். எப்போதும் போல் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு பாடல் இசை அமைக்கப் பட்ட விதமும் அதற்க்கான காரணங்களும் சுவை பட கூறினார். பெரும் நட்சத்திரங்களும், ரசிகர்களும் ஒரு சில பாடல்கள்  இசைக்கப் பட்ட போது உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கியதும், தங்களை  அறியாமல் இசைக்கு தலை ஆட்டியபடி ரசித்ததும் ரசிக்க வைத்தது.

"மா" படத்திலிருந்து, ஒரு ஐந்து நிமிடம் இசை இன்றி ஒரு கட்சியை ஒளி  பரப்பி பின் அதே கட்சியை இளையராஜாவின் இசையுடன் மீண்டும் ஒளி  பரப்பியபோது தான் தெரிந்தது ஒவ்வொரு காட்சிக்கும் பின்னணி இசை  எவ்வளவு முக்கியமானது என்று. அந்த வகையில் இன்று இந்தியாவிலே  பின்னணி இசையில் இளையராஜாவை பின்னுக்கு தள்ள ஒருவர் இனி பிறந்து வந்தால் தான் உண்டு.

ஜெயா டி.வியில் நான் பார்க்கும்/பார்த்த ஒரே சமீபத்திய நிகழ்ச்சி இளைய ராஜாவின் இந்த இசை நிகழ்ச்சியை தான். நிகழ்ச்சி பற்றி இன்னும் சொல்ல  நிறைய இருக்கிறது. அதை பற்றி பார்க்கும் முன், ஒன்றே ஒன்று தான் நிகழ்ச்சி முழுதும் நெருடலாக இருந்தது. இளையராஜாவின் தீவிர ரசிகன்  என்ற முறையில் அதை இங்கே சொல்வதற்கு எனக்கு நானே உரிமை  எடுத்துக் கொள்கிறேன். அது, எல்லோரும் இளைய ராஜாவை  அளவுக்கு மீறி  புகழ்ந்தது தான். 

அவரது இசையை பற்றியும், அந்தந்த பாடல் இசை அமைக்கப் பட்ட விதம்/சிறப்பை பற்றியும்  விரிவாக எடுத்துக் கூறினாலே  போதும், அவரின் சிறப்பை அறிந்து கொள்ள. அதை விடுத்து, அடிக்கடி  அவரை புகழ் பாடியது அவருக்கே பிடித்ததா என்று எனக்கு தெரியவில்லை.

இன்னும் வரும்...

இசை பற்றிய மற்றொரு பதிவு மயக்க வைக்கும் இசை - பேத்தோவன் ஓர் ஆச்சர்யம்
    

share on:facebook

Monday, January 30, 2012

கொள்ளை கொள்ளும் அமெரிக்க போலீஸ்.


அமெரிக்காவில் உங்களை மிகவும் கவர்ந்த மூன்று விஷயங்கள் எது என்று என்னிடம் கேட்டால் அதில் அங்குள்ள சுத்தம், கண்ணியம், கட்டுமான வசதி இவற்றை விட அமெரிக்க போலீஸ் துறையும் அமெரிக்க போலீசாருமே என்னை மிகவும் கவர்ந்தது என்று சொல்வேன்.அமெரிக்க போலீசாருக்கு பன்முக பயிற்சி அளிக்கப் படுவதுடன், அவர்களின் உடல் மற்றும் மன தகுதிகள் தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு அதற்கு தங்குந்தவாறு அவர்களுக்கு பணி ஒதுக்கப் படுகிறது. 

பொதுவாக பணியில் இருக்கும் போது அவர்கள் ஷாப்பிங் போன்றவற்றில்  ஈடு பட மாட்டார்கள். அப்படியே ஓட்டல் மற்றும் கன்வீனியன்ஸ் ஸ்டோருக்கு  வந்தால் கூட வரிசையில் தான் வருவார்கள். இந்த ஐயா வறாரு, ஐயாவுக்கு  மொதல கொடுத்து அனுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அது மட்டுமின்றி  பொது இடங்களில் அவர்களை பார்த்தால் பள்ளி கூட குழந்தைகள் கடைக்கு சென்றால் தயங்கி நிற்பதை போல் தயங்கி வெட்கத்துடன் தான் நிற்பார்கள். தாங்கள் போலீஸ் என்பதால் பொது மக்கள் தங்களுக்கு முக்கியவத்துவம் கொடுத்து விடுவார்களோ அல்லது அவர்களுக்கு தங்களால் ஏதும் தர்மசங்கடம் ஏற்பட்டு விடுமோ என்பதுதான் அவர்களின் தயக்கத்திற்கு காரணம் என்பது  நான் புரிந்து வைத்துள்ளது.

அதே போல் எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப் படுகிறது. குழந்தை வதை  புகாருக்கும், போதை பொருள் பற்றிய புகாருக்கும் அவர்கள் எவ்வாறு  வித்தியாசமாக அணுக வேண்டும் என்று சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. எப்படி பட்ட குற்றசாட்டாக இருந்தாலும் குற்றம் சட்டப்பட்டவர்  போலீசாருடன் ஒத்துழைத்தால் அவர்கள் மேல் விரலை கூட வைக்க  மாட்டார்கள். டிராபிக் வயலேஷன் போன்ற குற்ற சாட்டுகளுக்கு அபராதம்  போட்டு விட்டு "டிக்கெட்" கொடுக்கும் போது "Have a nice day" என்று கூற மறக்க மாட்டார்கள்.

இன்னும் சொல்லப் போனால், விசாரணையின் போது, குற்றம்  சாட்டப் பட்டவர் போலீசிடம் சிகரட்டோ அல்லது காபியோ கேட்டு வாங்கி  குடிப்பார்கள். அதே போல் இங்கு போலீசாரிடம் பொது மக்கள் தாங்களே  வழிய போய் தான் சம்பவத்தை நேரில் பார்த்ததாகவும் கோர்டில் வந்து சாட்சி  சொல்ல தயார் என்றும் கூறுவதை பார்த்திருக்கிறேன்.     

லஞ்சம். அப்படி என்றால் என்னவென்று இவர்களுக்கு தெரியாது. அப்படியே நீங்கள் தர முயன்றால் உங்களுக்கு உடனே "காப்பு" தான். ஒருவரை விசாரிக்க செல்லும் முன் எப்போதும் அவர்களிடம் உள்ள "ரெக்கார்டரை"  ஆன் செய்து விட்டு தான் பேச ஆரம்பிப்பார்கள். அது  மட்டுமில்லாமல், இங்கு போலீசாரிடம் பொய் சொல்வது மிக பெரிய குற்றம். அதே போல் இங்கு போலீசாரிடம் கொடுத்த வாக்கு மூலத்தையும் நீங்கள் நீதி மன்றத்தில்  மாற்றவோ மறுக்கவோ முடியாது. 

உடலில் குண்டு துளைக்காத உடை அணியாமல் பணிக்கு இவர்கள் செல்லுவது கிடையாது. அதே போல் நடந்து செல்லும் போதும், விசாரித்துக் கொண்டிருக்கும் போதும் அடிக்கடி தாங்கள் ரிவால்வரை தொட்டுக் கொண்டே இருப்பார்கள். அந்த அளவிற்கு எப்போதும் முன்ஜாக்கிரதையுடன் செயல்படுவார்கள். போலீசாரின் உயிர் அமெரிக்க அரசாங்கத்திற்கு மிக முக்கியமானது. அவர்களின் உயிருக்கு ஆபத்து என்றால் யாரையும் முன்  அனுமதி கேட்க வேண்டியதில்லை. டப் டப் டப் தான். அதே போல் ஒரு  போலீசாருக்கு காயம் ஏற்படுத்துவது என்பது, இமாலய குற்றம்.   

இப்போது சொல்லுங்கள். அமெரிக்க போலீஸ் நம் மனதை கொள்ளை கொள்கிறார்களா இல்லையா?

இன்னும் வரும்...

அமெரிக்க போலீஸ் பற்றிய மற்ற பதிவுகள்: 

911 - அமெரிக்காவின் மூன்றெழுத்து மந்திரம்.

இதுதாண்டா போலீஸ்...

share on:facebook

Thursday, January 26, 2012

இணைய வசதி இன்றி இயங்கும் உலகின் முதல் வலைத்தளம். ஆல் அபவுட் ரஜினி.காம்


சூப்பர் ஸ்டார் ரஜினியின் வலைதளத்தை வளைய வர (பிரவுஸ்) இணைய வசதி தேவை இல்லை என நான் கூறியபோது, என்ன இது இன்னொரு ரஜினி  ஜோக்கா? என்று தான் அனைவரும் கேட்டார்கள். கொஞ்சம் கூட அது சத்தியமா இல்லையா என்று யாரும் யோசிக்க கூட இல்லை.

ஆனால், அது முற்றிலும் உண்மை. ஆம், ரஜினியின் இணைய தளத்தை வளைய வர இணைய தள வசதி தேவை இல்லை. அது மட்டுமில்லை, இணையத்தில் நீங்கள் இணைத்திருந்தால் வலைதளத்தை வளைய வர முடியாது. இணைய இணைப்பை துண்டித்தால் மட்டும் உங்களால் அவரின் வலைதளத்தை சுற்றி பார்க்க முடியும்.

கொஞ்சம் புத்திசாலியாக இருந்தால் இந்நேரம் நீங்கள் ஊகித்திருக்கலாம். ஆம், ரஜினியின் வலைதளத்திற்கு செல்ல மட்டும் கண்டிப்பாக உங்களுக்கு இணைய வசதி தேவை. ஆனால், அதன் பிறகு இணையத்திலிருந்து நீங்கள் வெளி வந்தால் தான் உங்களால் மேற் கொண்டு தளத்தை சுற்றி வர முடியும். 

www.allaboutrajini.com என்ற வலைதளத்திற்கு சென்றால் உடனே "It runs on Rajini Power” என்ற வாசகத்துடன், உடனே உங்களை இணைய தளத்திலிருந்து வெளியே வருமாறு அறிவுரை காத்திருக்கும். அதுவரை உங்களால் மற்ற பக்கங்களை சென்று காண முடியாது. இணைய இணைப்பை துண்டித்து விட்டு உள்ளே சென்றால் "story of the legend" , "inside scoops" , "behind-the-scenes action" என்று பல சுவாரசியமான விஷயங்கள் நமக்காக காத்திருக்கின்றன.

இந்த வலைதளத்தை உருவாக்கியுள்ள  வெப்சட்னியின் இயக்குனர் குர்பாக்ஸ் சிங், ரஜினி என்னும் மாபெரும் நடிகருக்காக இதை அர்ப்பணிப்பதாக தெரிவித்து உள்ளார். 

ஆயிரக் கணக்கில்  ஹிட்டுகளை அள்ளி வரும் இந்த தளம் மற்ற சமூக வலை தளங்களிலும் (Facebook, Twitter) அதிக அளவில் பகிரப் பட்டுள்ளது. பின்னணியில் வேலை செய்யும் கடினமான அல்காரிதம் மூலம் இது சாத்தியப்பட்டதாகவும், பல முறை முயன்று கடைசியில் இதற்க்கான பிரோக்ராம்மை எழுதியதாக தெரிவிக்கிறார் சிங். மேலும் இது தான் உலகில் முதன் முதலில் இணைய வசதி இல்லாமல் இயங்கும் முதல் வலை தளம் என்றும் பெருமை கொள்கிறார்.

நீங்களும் பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று கூறுங்கள். அப்புறம் மறந்து விடாதீர்கள். இணையத்தை விட்டு வெளியே வந்தால் தான் நீங்கள் தளத்தை சுற்றி பார்க்க முடியும்.


share on:facebook

Tuesday, January 24, 2012

போலீஸ் சோதனையில் IT மக்களுக்கு விதி விலக்கு.- ஹைதராபாத் போலீஸ் அதிரடி.

என்ன மக்களே. எல்லாரும் நல்லா இருக்கீங்களா? ஒரு சந்தோசமான விஷயம் சொல்ல போறேன். நம்ம ஊரு விஷயம் இல்லனாலும் பக்கத்து மாநிலத்து விஷயம். நம்ம ஊருக்கும் வரதுக்கு ரொம்ப நாள் ஆகாது. சேதி இது தான்.

ஏதோ ஒரு சினிமாவுல விவேக் கோயில் குருக்களா இருப்பாரு. டூ வீலர்ல போகும் போது ட்ராபிக் போலீஸ் ஒருத்தர் அவர நிறுத்தி லைசன்ஸ் இருக்கா, இன்சூரன்ஸ் இருக்கா என ஒவ்வொன்றாக கேட்க அவரும் ஒவ்வொன்றாக எடுத்து காட்டுவார். எல்லாம் இருந்தும் போலீஸ் அவரை  விடாமல், உனக்கு எட்டு போட தெரியுமா? என கேட்டு எட்டு போட  சொல்லுவார். நகைச்சுவைக்கா இதை காட்டினாலும் பல இடங்களில் போலீஸ் அந்த அளவிற்கு டூ வீலர் டிரைவர்களுக்கு தொடர்ந்து இம்சை கொடுத்து தான் வருகிறார்கள்.

இந்த கொடுமைக்கெல்லாம் விடிவாக ஹைதிராபாத் காவல் துறை ஒரு புதிய முறையை கொண்டு வந்து உள்ளது. அதாவது "நோ அப்ஜக்சன்  சர்டிபிகடே" போல் டூ வீலர்களில் ஒட்டிக்கொள்ளும் மாதிரி ஒரு சிறப்பு ஸ்டிக்கரை  அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஸ்டிக்கரை வண்டியில் கண்ணில் படும் படி ஒட்டிவிட்டால் போதும். அனாவசியமாக லைசன்ஸ் இருக்கா, இன்சூரன்ஸ் இருக்கா என டிராபிக் போலீஸ் உங்களை தடுத்து  நிறுத்தாது. 

அதே நேரம், ஸ்டிக்கர் இருக்கும் காரணத்தால் அதிக வேகம், குடித்து விட்டு வண்டி ஓட்டுவது போன்ற மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் கண்டிப்பாக அவைகளுக்கு இந்த சலுகைகள் பொருந்தாது எனவும் காவல் துறை தெரிவித்துள்ளது. ஸ்டிக்கர்கள்  வழங்கும் முன் சம்பந்தப்பட்ட டூ வீலர்காரர்களிடம் எல்லா ஆவணங்களையும்  பெற்று சரி பார்த்த பிறகு தான் காவல் துறை இச் ஸ்டிக்கர்களை வழங்க உள்ளது. மேலும் டூ வீலர்காரர்களுக்கு வாகன பாதுகாப்பு பற்றி சிறப்பு  பயிற்சியும் வழங்க போவதாக தெரிவித்துள்ளார்கள்.  

இதெல்லாம் சந்தோசமான விஷயம் தான். ஆனால், முக்கியமான ஒன்றை  நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இந்த ஸ்டிக்கர் முறையை முதன்  முதலாக  அமுல் படுத்த போவது ஹைதராபத்தில் உள்ள மிக பெரிய IT  பார்க்குகள்  நிறைந்துள்ள ஹய் டெக் சிட்டியில் தான். தினமும் IT   கம்பனிகளுக்கு செல்லும் டூ வீலர் காரர்கள் வாகன  சோதனையில்  சிக்குவதால் அவர்கள் வேலைக்கு செல்வது தாமதமாவதால் அதை  தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்ம், ஏழை சொல் அம்பலத்தில் ஏறுமா? IT காரர்கள் சொன்னால் எல்லாம் நடக்கிறது.

share on:facebook

Thursday, January 19, 2012

இட்லிவடையும் நானும்

ஐந்து ஆண்டுகளுக்கு முன் என் நண்பர் ஒருவர் இட்லிவடை ப்ளாக் பற்றி சொல்லி படிக்க சொன்னார். அப்போது தான் முதன் முதலில் ப்ளாக் என்று ஒன்று இருப்பதே எனக்கு தெரியும். அதுவரை செய்தித் தாள்களையும் வார  ஏடுகளை மட்டுமே படித்து படித்து போரடித்த வேளையில் முழு சுதந்திரத்தோடு ப்ளாகில் எழுதப்படும் பதிவுகளை படிக்க ஆரம்பித்தது  சுவாரசியமாக இருந்தது. அதிலும் இட்லிவடையில் அப்போது வந்த பதிவுகள் நக்கலும் கேலியும் நிறைந்ததாக இருக்கும்.

பிறகு ஒன்றிரண்டு ஆண்டுகள் கண்ணில் பட்ட எல்லா பிளாகுகளையும் படித்து வந்தேன். பிளாகுகள் அனைத்திலும் பல்வேறு சுவாரசியங்கள்  உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு வகை. பிறகு நாமும் பிளாக் எழுதினால் என்னவென்று தோன்றியது. ஆரம்பத்தில் ஒரு பதிவை எழுதி அதை பத்து  தடவை படித்து பார்த்து மீண்டும் மீண்டும் திருத்தி கடைசியில் வெளியிட  அரை நாள் ஆகிப்போகும். இப்போதெல்லாம் அப்படி இல்லை. விஷயம்  இருந்தால் கட கடவென்று எழுதி தள்ளி விட முடிகிறது.

ரொம்ப நாள் இந்த ஹிட் கவுன்ட், ராங்கிங் பற்றியெல்லாம் கவலைப்  பட்டதில்லை(இப்பவும் ஓரளவு அப்படிதான்). இருந்தாலும் எப்படி தலைப்பு வைத்தால் அதிக பேர் படிப்பார்கள் (அல்லது அட்லீஸ்ட் க்ளிக் செய்வார்கள் - அது போதுமே கவுன்ட் எகிற!) என்று ஓரளவு கணிக்க முடிகிறது. என்  பிளாக்கை பொறுத்தவரையில் அமெரிக்க செய்திகள், IT சம்பத்தப் பட்ட செய்திகள் நல்ல வரவேற்ப்பை பெறுகின்றன.

எனக்கு இன்னும் ஆச்சர்யமான விஷயம் சில பிளாகர்களுக்கு கிடைக்கும்  ஹிட்டும், அவர்கள் பதிவுக்கு போடப்படும் பின்னூட்டங்களும் தான். நமக்கு  ஒரு வாரத்தில்/மாதத்தில் கிடைக்கும் ஹிட்டுகளும், பின்னூட்டங்களும் ஒரு சிலரின் பதிவுகளுக்கு ஒரே நாளில் கிடைத்து விடும். இதற்க்கெல்லாம்  காரணம் ஒன்றும் பெரிசில்லை. கல்யாணத்தில் மொய் வைப்பது போல்தான்.  நாம எவ்வளவு அடுத்த கல்யாணத்திற்கு வைக்கிறமோ அதை வைத்து தான் நமக்கு திரும்ப கிடைக்கும். நான் படிக்கும் பிளாக்குகளை விரல் வைத்து  எண்ணி விடலாம். அப்படியே படித்தாலும் நேரமின்மை காரணமாக தொடர்ந்து  அடுத்தவர் பதிவுகளுக்கு பின்னோட்டம் போட முடியவில்லை.    

இருப்பினும், இப்போது பிளாக் படிப்பதற்கும், பதிவு போடுவதற்கும் தொடர்ந்து நேரம் ஒதுக்குகிறேன். காரணம், நமக்கு மகிழ்ச்சி தரும் சில விசயங்களை நம்மால் பல காரணங்களால் செய்ய முடிவதில்லை. ஆனால் பிளாக் எழுதுவதற்கு நமக்கு தேவை அரை மணியோ ஒரு மணி நேரமோ. அதில் நமக்கு ஒரு திருப்தி கிடைகிறது. இதில் யாருக்கும் எந்த  கஷ்டமும்  இல்லை(ஒரு வேலை நம் பதிவை பற்றி தெரியாமல் படிப்பவர்களுக்கு இருக்கலாம்). அந்த வகையில் பிளாகர்களுக்கு இந்த வசதியை இலவசமாக தரும் கூகுல் ஆண்டவரையும் இன்ன பிற இலவச வலைதளங்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க வேண்டும்.

மேலும் ஆதிமனிதன், அடுத்த வீட்டுக்காரன் என எப்படி பெயர் வைத்து எழுதினாலும், பிடிக்குதோ சில  சமயம் பிடிக்கலையோ நம் பதிவுகளை படிக்கும் எண்ணற்ற பதிவர்களுக்கும்  இப்பதிவின் மூலம் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

    

share on:facebook

Tuesday, January 17, 2012

கேப்டனுக்கு ஆப்பு. அரசு நடவடிக்கை. விரைவில் சிறை?

சமீபத்தில் இத்தாலி அருகே கடலில் மூழ்கிய சொகுசு கப்பலின் காப்டன் பிரான்செஸ்கோ வீட்டு காவலில் வைக்கப் பட்டுள்ளார். அவர் மீது கப்பல் பயணிகளை காப்பாற்றாமல் கப்பலை விட்டு வெளியேறியது, பலர் இறக்க  காரணமானது என கடுமையான குற்றச் சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ளது.

கடந்த வாரம் விபத்துக்கு உள்ளான சொகுசு கப்பலின் காப்டன் கப்பலில் பயணித்த அனைத்து பயணிகளும் பத்திரமாக கப்பலிலிருந்து வெளியேற்ற படுவதற்கு முன் கப்பலின் காப்டன் என்ற முறையில் கப்பலை விட்டு வெளியேறி விட்டார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இத்தாலிய சட்டப்படி இக்குற்றத்திற்கு 11 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

விபத்து பற்றி முதலில் செய்தி அறிந்த இத்தாலிய காவல் துறை கடலோர பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்ததும், கடலோர காவல் படை கப்பலின் காப்டனை தொடர்பு கொண்டு பயணிகளின் பாத்து காப்பு பற்றி கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால், காப்டன் பிரான்செஸ்கோ அவர்களுக்கு முறையான பதில் அளிக்காமல் எல்லா பயணிகளும் பத்திரமாக வெளியேறும் வரை கப்பலை விட்டு வெளியேறக் கூடாது என்ற காவல் படையின் உத்தரவையும் மீறி பயணிகள் அனைவரையும் தண்ணீரில் தத்தளிக்க விட்டு அவர் மட்டும் கப்பலை விட்டு வெளியேறி உள்ளதாக சொல்லப்படுகிறது.

காப்டன் பிரான்செஸ்கோவுக்கும் காவல் படைக்கும் இடையே நடந்த  உரையாடல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் காப்டன் பிரான்செஸ்கோவை உடனடியாக கப்பலுக்குள் சென்று அங்கு மொத்தம் எத்தனை பேர் இருக்கிறார்கள், சிறியவர்கள் வயதானவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் தெரிவிக்குமாறு கேட்டதற்கு அவர், இங்கு ஒரே இருட்டாக இருக்கிறது. ஆதலால் நான் ஒன்றும் செய்ய முடியாது. நான் வெளியே போகிறேன் என்று கூறி இருக்கிறார். அதற்க்கு காவல் படை அதிகாரி, நீங்கள் இப்போ வெளியே போய் உங்கள் வீட்டுக்கா போக போகிறீர்கள்?  உடனடியாக நீங்கள் கப்பலுக்குள் சென்று அங்குள்ள பயணிகளை பாதுகாக்க  நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீங்கள் வெளியே வந்தாலும் நாங்கள்  உங்களை உள்ள தள்ள வேண்டி இருக்கும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.  

இக்கப்பலில் பயணித்த 4200 பேரில் பெரும்பாலானோர் சிறு படகுகள் மூலமும், மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் காப்பாற்ற பட்டு உள்ளனர். இருப்பினும் இன்னும் 50 பேருக்கு மேல் காணவில்லை. 11 பேரின் உடல்கள் இதுவரை கடலில் இருந்து கண்டெடுக்கப் பட்டுள்ளது. டைடானிக்  கப்பல் விபத்துக்குள்ளானது போலவே இச் சோகச் சம்பவமும் நடை பெற்று உள்ளது. 

பொதுவாக இவ்வாறு சொகுசு பயணம் போகும் பல மேலை நாட்டவர்களை  இவ்விபத்து பெரிதும் கிலியை கிளப்பி உள்ளது. இம்ம், இவ்விபத்தையும் அதில் பலியானோர் எண்ணிக்கையையும் நம்மூரில் ஏற்பட்ட விபத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் இங்கு இழப்பு மிகவும் குறைவே. இருந்தும் விபத்துக்கு பொறுப்பானவர்களுக்கு அளிக்கப் படும் தண்டனையை பொறுத்தே மீண்டும் அம்மாதிரி விபத்து எதிர் காலத்தில் நேராவண்ணம் தடுக்க இயலும் என்பதை இத்தாலி போன்ற அரசுகள்  நன்றாக அறிந்து வைத்துள்ளன என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.

share on:facebook

Monday, January 16, 2012

பொங்கல் வாழ்த்து கூற மறுத்த நடிகர் திரு. நாசர்.

முதலில் என்னமோ 'என்ன இவரு பெரிசா பேச வந்துட்டாரு' என்பது மாதிரி தான் தோன்றியது. ஆனால் போக போக அவர் கூறியதை கேட்டு சற்றே நிமிர்ந்து உட்கார வைத்தது. சுத்திர தினம் நாம் கொண்டாடுவதை பற்றி அவர் எழுப்பிய கேள்விகளில் தான் எத்தனை உண்மைகள் புதைந்து கிடக்கின்றன? இனி எதற்கேனும் வாழ்த்துக்கள் கூறும் முன் எனக்குள் ஒரு கேள்வி எழுவது நிச்சயம்.




நன்றி: Indiaglitz

share on:facebook