Wednesday, November 30, 2011

அமெரிக்கா போறீங்களா? இத படிங்க முதல்ல...


மேலை நாடுகளுக்கு முதல் தடவை நாம் பயணம் செய்யும் போது பல விஷயங்கள் நமக்கு புதிதாக இருக்கும். அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் பெரும்பாலான பழக்க வழக்கங்கள் நமக்கு எதிர் மறையாக இருக்கும். இதற்க்கு காரணம் அமெரிக்கர்கள் இங்கிலாந்து நாட்டினர் கடை பிடிக்கும் எதையும் பின் பற்றாததுதான். அதற்க்கான காரணம் ஒரு தனி கதை.

சரி, விசயத்திற்கு வருவோம். பெரும்பாலானவர்கள் அமேரிக்கா சென்றதும்  முதலில் ஒரு ஓட்டலில் தான் தங்க நேரிடும். அப்படி ஓட்டலில் தங்கும்  போது தெரிந்து கொள்ள வேண்டிய சில விசயங்களை இப்போது பார்ப்போம்.

# வெளியூர், அதிலும் அமேரிக்கா வந்த பிறகு நாம் எல்லோரும் செய்ய  நினைக்கும் முதல் செயல், ஊருக்கு போன் செய்து நலமாக வந்து சேர்ந்து  விட்டதை தெரிவிக்க ஆசைபடுவது தான். இதில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். அமெரிக்காவில் எந்த ஒரு ஓட்டலில் இருந்து நீங்கள்  வெளிநாட்டுக்கு போன் செய்தாலும் அவ்வளவுதான். நிமிடத்திற்கு  பல  டாலர்களை நீங்கள் தொலை பேசி கட்டணமாக பின்னர் செலுத்த வேண்டி  வரும். தவிர்க்கவே முடியாத பட்சத்தில் ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு வைத்து விடுவதுதான் சிறந்தது. அதன் பிறகு காலிங் கார்டு போன்று ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு பேசுவது தான் நன்று. அதில் கூட டோல் ப்ரீ நம்பருக்கு ஓட்டலில் சார்ஜ் செய்வார்களா என்று விசாரித்து தெரிந்து வைத்துக் கொள்வது நன்று.

எனக்கு தெரிந்த நண்பர்கள் சிலர் முதலில் விபரம் தெரியாமல் இங்கு வந்து சேர்ந்த உடன் இந்தியாவிற்கு  பேசிவிட்டு பின் நூற்று கணக்கில்  டாலர்களில் டெலிபோன் பில்  கட்டிய கதை நடந்திருக்கிறது.

சென்ற பதிவில் கூறியிருந்தது போல், முதல் தடவை அமேரிக்கா சென்று இறங்கிய மறு தினம். Queue Discipline பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாமல், ஒரு கடையில் நாலைந்து பேர் Queue இல் நின்று கொண்டிருக்க, ஒரு குறிப்பிட்ட பொருள் கிடைக்குமா என்று தானே கேட்க போகிறோம் என்ற எண்ணத்தில் வரிசையை தாண்டி கவுண்டரிடம் உள்ளவரிடம் நான் சென்று கேட்க, அப்பெண்மணி என்னை கண்டு கொள்ளவேயில்லை. Excuse me..Excuse me...என்று நான் கூப்பிட்டுக் கொண்டே இருக்க கடைசியில், could you please come in Queue என்றது. அதன் பிறகு Queue என்று ஒன்று இருந்தால் அதில் கடைசி ஆளாக தான் இன்றும் நான் நிற்கிறேன்.

அதே போல் சில நேரங்களில் Queue விற்கு பக்கத்தில் ஒருவர் நின்றால் கூட அவரிடம் நீங்கள் Queue இல் நிற்கிறீர்களா என கேட்டுவிட்டு தான்  இங்கு  மக்கள்  Queue இல் சேர்ந்து கொள்வார்கள்.

அமெரிக்க தொல்லைகள் தொடரும்...

share on:facebook

Tuesday, November 29, 2011

ரஜினி அங்கிள், நீங்க எங்கே இருக்கீங்க...


சென்ற பதிவில் ரஜினியின் ஒரு முகத்தை பார்த்தோம். இந்த பதிவில் அவரின் (எனக்கு தெரிந்த) இன்னொரு முகம்.

இது பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு. அடுத்த நாள் ரஜினியின் பிறந்த நாள். அதற்கு முதல் நாள் மாலை ரஜினியை சந்திக்க அவரின் போயஸ் கார்டன் வீட்டிற்கு சென்றோம். குறிப்பிட்ட சில ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் சென்று இருந்ததால் சகல  மரியாதைகளுடன் ரஜினி வீட்டின் வரவேற்பரையில் காத்திருந்தோம்.

மாலை நேரம் கடந்து இரவு ஆரம்பித்தது. அவ்வப்போது தலைமை மன்ற  நிர்வாகியோ வேறு எவரோ வந்து சார் இப்ப வந்துடுவார், டப்பின்  லேட்டாகிவிட்டது. சற்று பொறுங்கள். சார் வந்தவுடன் பார்த்து விட்டு போய்  விடலாம் என்று அவ்வப்போது நாங்கள் போரடித்து விடாமல் இருக்க  சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ரஜினியை நேரில் பார்க்க போகிறோம்,  அதுவும் கூட்டத்தோடு கோவிந்தாவாக இல்லாமல் குறிப்பிட்ட சிலரோடு  நெருக்கத்தில் பார்க்க போகிறோம் என்ற உணர்வில் மாலையாவது, இரவாவது  எதுவும் எங்களுக்கு சலிப்பாக தெரியவில்லை. இது எல்லாவற்றுக்கும் மேலாக  திருமதி. லதா ரஜினியே ஒரு முறை வந்து, சார் இப்ப வந்துடுவாங்க, கொஞ்சம்  பொறுத்துக்கோங்க என்று கூறிவிட்டு போனார்.

அநேகமாக நள்ளிரவுக்கு சில மணித்துளிகள் முன் ரஜினியின் கார், வீட்டின் முன் வந்து நின்றது. தலைவர் காரை விட்டு கீழே இறங்கி கிடு கிடுவென்று நடந்து வீட்டிற்க்குள் போகும் முன் வரவேற்பரையை எட்டி  பார்த்தவர், நாங்கள் கும்பலாக உட்கார்ந்திருப்பதை பார்த்து விட்டு,  அவருக்கே உரித்தான ஸ்டைலுடன், பைவ் மினிட்ஸ் மா, இப்ப வந்துடுறன்  என்று உள்ளே சென்றவர், ஒரு பத்து பதினைந்து நிமிடம் கழித்து எங்களை  வந்து  சந்தித்தார்.

எங்களை காத்திருக்க வைத்ததிற்கு ஒரு முறைக்கு மேல்  மன்னிப்பு  கேட்டுக்கொண்டு, வழக்கமான விசாரிப்புகள் முடிந்த பின்  எங்களிடம்  இருந்து பிறந்த நாள் பரிசாக நாங்கள் எடுத்து சென்ற மாலை  மற்றும்  நினைவு கேடயத்தையும் பெற்று கொண்டார். தொடர்ந்து, "ஏற்கனவே  ரொம்ப லேட் ஆயுடுச்சு" நீங்கள் காலையில் மீண்டும் வந்தால் ரொம்ப  கூட்டம்  இருக்கும். அதனால் இப்பவே நாம் போட்டோ எடுத்து கொள்ளலாம்  என்று  அங்கிருந்த போடோ கிராபரை அழைத்து ஒவ்வொருடனும்  தனியாகவும், மொத்த குழுவுடனும் அலுக்காமல் போடோவுக்கு போஸ்  கொடுத்தார். இன்று அதையெல்லாம் ஒரு சாதாரண ரசிகனால் நினைத்து பார்க்க முடியுமா? ரஜினியை விடுங்கள். ஒரு சாதாரண முன்னணி நடிகரிடம் கூட இத்தகைய விருந்தோம்பலை நாம் எதிர்பார்க்க முடியாது.

இதையெல்லாம் இங்கு சொல்வதற்கு காரணம், ரஜினி ஒன்றும் அப்போது சாதாரண நடிகர் இல்லை. அன்றும் அவர் சூப்பர் ஸ்டார் தான். இருந்தும்  ரசிகர்களுக்கும் அவருக்கும் அன்று பெரிய இடைவெளி இல்லை. ஆனால் இன்று? அவருக்கு என்று ஒரு வட்டத்தை அவர் உருவாக்கி கொண்டார் அல்லது அவரை அறியாமல் ஒரு வட்டம் அவரை சுற்றி உருவாகி அவரை ரசிகர்களிடம் இருந்து பிரித்து வைக்கிறது. அந்த வட்டத்தினுள் வேறு யாரும் அல்ல, எல்லோரும் எனக்கு நண்பர்கள் என்று சொன்னாலும் அவரை சுற்றி உள்ள ஒரு சில சுய நல கூட்டம் தான். அவர்கள் ஒன்று  சினிமாவை சேர்ந்த பெரிய புள்ளிகள் அல்லது ஏதாவது ஒரு அரசியல் கட்சியுனுடைய தலைவர்கள். இவற்றை எல்லாம் உடைத்து கொண்டு ரஜினி வெளியே வர வேண்டும் என்பது தான் பெரும்பாலான ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

அடுத்து ரஜினியும், ரஜினி ரசிகர் மன்றங்களும்...

share on:facebook

Monday, November 28, 2011

Black Friday - வான்கோழி வறுவலும், வாங்கிய பொருட்களும்


"Thanks giving day" - அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் இறுதி வாரத்தில் கொண்டாடப்படும் ஒரு விழா. பல நூறு ஆண்டுகளுக்கு முன்  அமெரிக்கா வந்தேறிய குடியேறிகளுக்கு (சிகப்பு இந்தியர்கள் தான்  அமெரிக்காவின் பூர்வ குடிமக்கள்), விவசாயம் செய்யவும், வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்ளவும் கற்று கொடுத்த சிகப்பிந்தியர்களுக்கு நன்றி  தெரிவிக்கும் வகையில் உருவாக்க பட்ட நாள் தான் தேங்க்ஸ் கிவிங் டே. இது ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் நாலாவது வியாழன் அன்று அனுசரிக்கப்படும். 


நம்மூரில் பிள்ளையார் சதுர்த்தி அன்று கொழுக்கட்டை செய்வது போல், இங்கு தேங்க்ஸ் கிவிங் டே அன்று வான்கோழி விருந்து வழக்கம். முழு வான்கோழியை அப்படியே குடைந்து, அதனுள் மசாலா வகையறாக்களை   திணித்து, ஓவனில் வேக வைத்த பிறகு அப்படியே கேக்கை கட் செய்வது  போல் துண்டு  துண்டாக வெட்டி எடுத்து சாப்பிடுவார்கள். இது தான் தேங்க்ஸ்  கிவிங்  டேயின் மெயின்  மெனு. மற்றபடி ட்ரிங்க்ஸ், டி.வி., பூட் பால் கேம்ஸ்  என  அன்று பல வீடுகளில் உற்சாகம் களைகட்டும்.

இதை எல்லாம் விட பெரிய கொண்டாட்டம், ஷாப்பிங் தான். ஆம், தேங்க்ஸ் கிவிங் டேவிற்கு அடுத்த நாள் (தேங்க்ஸ் கிவிங் டே அன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும்).  "Black Friday" என்று  அழைப்பார்கள். அன்று நம்மூர் ஆடித்தள்ளுபடியை விட பல மடங்கு மேலான தள்ளுபடியில் எல்லா பொருட்களும் மலிவான விலையில் கிடைக்கும். குறிப்பாக  எலெக்ட்ரானிக் சாதனங்கள். 100 டாலர் பெறுமானமான பொருளை 50 டாலருக்கு தந்து, அதை  நாம் வாங்க போக, மேலும்  200 டாலர்களுக்கு வேறு பொருட்களை வாங்கி  வந்து விடுவோம். இது தான் வியாபார உத்தி.

சில பொருட்கள் அடிமாட்டு விலைக்கு கிடைக்கும். அப்பொருள்களை வாங்க முதலில் வரும் 10 அல்லது 50 பேருக்கு மட்டும் கூப்பன் தருவார்கள். இதை வாங்க நடுங்கும் குளிரில் முதல் நாள் மாலையே சென்று வரிசையில் நிற்பார்கள். பொதுவாக கடை நள்ளிரவு 12 மணிக்கோ  அல்லது விடியற்காலையோ திறக்கப்படும்.

கடந்த சில வருடங்களாக ஆன்லைன் விற்பனையும் சூடு பிறக்கிறது. ஐந்தாறு வருடங்களுக்கு முன் நானும் இந்த மாதிரி முதல் நாள் மாலையே சென்று, நடுங்கும் குளிரில் காத்திருந்து நல்ல நல்ல பொருட்களை  அடிமாட்டு விலைக்கு வாங்கியதுண்டு. தற்போது அந்த ஸ்பிரிட் குறைந்துவிட்டது. இருந்தும் இந்த ஆண்டு இரவு முழுதும் ஷாப்பிங் செய்ததில் என் பர்சு இளைத்தது என்பதை விட வீடு நிறைந்தது என்றே சொல்லலாம். குழந்தைகளுக்கு எல்லாம் அப்படி ஒரு சந்தோசம். இருக்காதா பின்னே?

ஆமா அப்படி என்ன பொருள் வாங்கினீங்க என்று கேப்பவர்கள் காத்திருக்கவும்...


share on:facebook

Thursday, November 24, 2011

இருபது லட்சம் ஹிட்ஸ் - Why this kolaveri ...Di உலகம் முழுவதும் பிரபலம்.



"3" படத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் இருபது லட்சம் ஹிட்ஸ். "தி இந்து" நாளிதழில் முதல் பக்கத்தில் விமர்சனம். இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மொழி வானொலிகளிலும் பாடல் ஒலிபரப்பு. இதுவரை  சமீப காலத்தில்  எந்த ஒரு தமிழ் சினிமா பாடலுக்கும் கிடைக்காத  ஒரு  வரவேற்ப்பு  Why this kolaveri ...Di பாடலுக்கு கிடைத்து இருக்கிறது.

முதல் தடவை Why this kolaveri ...Di பாடலை கேட்ட போது என்ன பாடல் இது என்று தான் நான் நினைத்தேன்(இப்போதும்). ஆனால், மாற்றமாக ஒன்றை  தந்தால் மக்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்பதற்கு இந்த பாடலின் ஹிட் ஒரு  உதாரணம். 

இது பெண்களையும், ஆங்கிலம் பேசுபவர்களையும் அவமானப் படுத்துவதாக அமைந்திருக்கிறது என்ற குற்றசாட்டு எழுதுள்ள  வேலையில்,  அப்படி ஏதும் இல்லை என்கிறார் 3 படத்தின் இயக்குனர்  ஐஸ்வர்யா தனுஷ். தனுஷ் "ஆடுகளத்தில்" முன்பு உடைந்த ஆங்கிலத்தில் பேசியது அவருடைய காரக்டருக்கு நன்றாக இருந்தது. அது போல் முயற்சித்தால் என்ன என்று நினைத்தோம். அவ்வளவு தான். வேறொன்றுமில்லை என்கிறார்.

பத்து நிமிடத்தில் டியுன் போட்டு இருபது நிமிடத்தில் இப்பாடலை பதிவு  செய்திருக்கிறார்கள். இந்தியா மட்டுமல்ல, இங்கு அமெரிக்காவில் கூட என்னுடைய வட இந்திய நண்பர்கள் இப்பாடலை கேட்டுவிட்டு மிகவும் நன்றாக இருக்கிறது என்றார்கள். 

பாடலை கேட்க இங்கே சொடுக்கவும்.

share on:facebook

Wednesday, November 23, 2011

ஜெயலலிதா "பெயில்"




செய்தி: பெங்களூரு நீதிமன்றத்தில் நான்கு நாட்களில் கேட்கப்பட்ட ஆயிரத்து முன்னூற்று  முப்பத்தொன்பது கேள்விகளில் பெரும்பாலான கேள்விகளுக்கு "தெரியாது", "மறந்து போயிற்று" என்று தமிழக முதல்வர் பதில்.

இப்ப சொல்லுங்க, ஜெயலலிதா மேடம் "பெயில்" தானே?

share on:facebook

Tuesday, November 22, 2011

ரஜினியின் மூன்று முகம் - ஒரு ரசிகனின் பார்வை

தமிழ் திரை உலகில் ரஜினி வில்லனாக உலா வந்த நேரம். நாங்கள் சிறுவர்களாக இருந்த போது ரஜினி படம் என்றால் எப்போதும் "நோ"  தான். அவன் கெட்டவன், அவன் படத்துக்கெல்லாம் போக கூடாது  என்று தான் பெரியவர்கள் சொல்வார்கள்(இன்றைய ரஜினி ரசிகர்கள் கோபித்து  கொள்ள கூடாது).

முகம்: 1

16 வயதினிலே "பரட்டை" ஆகட்டும், மூன்று  முடிச்சு வில்லன் காரக்டர்  ஆகட்டும். நம்பியார், அசோகன் காலத்திற்கு  பிறகு வில்லன் என்றால் ரஜினி, ரஜினி என்றால் வில்லன் என்றால்  மிகையாகாது. அதிலும் மூன்று  முடிச்சில், நீச்சல் தெரியாத கமலஹாசனை  தண்ணீரில் விழும் போது அதை பற்றி சிறிதும் அலட்டிக்கொள்ளாத ரஜினி, ஸ்ரீதேவி எவ்வளவோ கெஞ்சியும் தனக்கு நீச்சல் தெரியாது என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு துடுப்பை போட்டபடி "மனநிலைகள்  யாருடனோ, மாயவனின்  விதிவலைகள்.." என்று முகத்தை அவ்வளவு  இறுக்கமாக வைத்துக்கொண்டு  பாடும் பாடல் காட்சியில் யாருக்குமே  ரஜினியை பிடிக்காது. இப்போது உள்ள  அனைத்து வில்லன்களும் அப்படி  ஒரு கெட்ட! பெயர் வாங்க  ரொம்ப கஷ்ட  பட வேண்டும். 

அதன் பிறகு ஹீரோ ரோல் பண்ண ஆரம்பித்த பிறகு, அவருடைய ஸ்டைலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தமிழக சினிமா ரசிகர்கள் அடிமை ஆக ஆரம்பித்தார்கள். குழந்தைகளிடம் ரஜினி ஸ்டைல் பாப்புலராக  ஆரம்பித்தது. எதார்த்தமாக  கையை காலை தூக்கினால் கூட அது என்ன? ரஜினி ஸ்டைலா? என எல்லோரும் கேட்க ஆரம்பித்தார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்த காலக்கட்டத்திலேயே (இன்றும் அவர் முன்னணி ஹீரோ தான்) அவருடைய  நூறாவது படமாக "ராகவேந்தர்" வெளிவந்தது. இது தமிழக தாய்மார்களிடம் பெரும்  வரவேற்பையும், ரஜினியை பற்றிய மாற்று கருத்தையும் உருவாக்கியது.

அன்றிலிருந்து சிறுவர்களுக்கு மட்டுமல்ல. பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் ரஜினியை ரசிக்க ஆரம்பித்தார்கள். ரஜினி படமென்றால் வீட்டில் உள்ள அனைவரும் உட்கார்ந்து பார்க்கலாம்  என்ற அளவில் அவரை பற்றிய கண்ணோட்டம் மாறியது. அதன்பிறகு வந்த படங்களில் காரக்டர் ரோல், கிராமத்தான், காமெடி ரோல் என பல வேடங்கள் ஏற்று தான் ஒரு முழு நடிகன் என நிரூபிக்க ஆரம்பித்தார். அவருடைய  படங்கள் பெரும்பாலும் நன்றாகவே ஓடின.

80 களின் இறுதியில் தனக்கென தமிழகத்தில் ஒரு பெரும் படையையே ரசிகர்களாக உருவாக்கி வைத்திருந்தார் ரஜினி. அன்றைய காலக்கட்டத்தில் ரஜினியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு (பாக்கியம்) எனக்கு கிடைத்தது. அவருடைய போயஸ் கார்டன் இல்லத்திலேயே.

தொடரும்...
  

share on:facebook

Monday, November 21, 2011

அமெரிக்காவிற்கு (முதல் முறையாக) செல்கிறீர்களா - தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.


பொதுவாகவே வெளியூரோ அல்லது வெளி மாநிலத்திற்கோ நாம் செல்லும்  முன் அவ்வூரை பற்றி ஆவலுடன் நாம் தெரிந்து கொள்வோம். இந்தியாவிற்குள்  பயணம் மேற்கொள்ளும் போதே இது மிக அத்தியாவிசமான ஒன்று. நூறு  இருநூறு மைல்களுக்கு  அப்பால் சென்றாலே மொழி வேறு, கலாச்சாரம் வேறு. உணவும் உடைகள்  கூட வேறுபடும். இதனால் பயன்களும் உண்டு,  பிரச்சனைகளும்  உண்டு.  அப்படி இருக்கையில் இரு கண்டங்கள்  தாண்டி  ஆங்கிலம் ஒன்றையே  துணையாக கொண்டு அமெரிக்கா  போன்ற  நாடுகளுக்கு முதல் முறை  செல்லும்  போது அந்நாட்டின் கலாச்சாரம், உணவு, உடைகளை பற்றி நாம் தெரிந்து (பயணத்திற்கு முன்பே) கொள்வது  நமக்கு பல வகைகளில் உதவும். ஏதோ என்னால் ஆன சிறு முயற்சி... சிலருக்கு அது பலன்  அளிக்குமானால் கூட அதுவே  எனக்கு பெரு மகிழ்ச்சி.

# அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் "Queue Discipline" என்று சொல்ல  கூடிய வரிசை நெறிமுறையை கடை பிடிப்பது மிக அவசியம். எங்கு  சென்றாலும் இதை கடை பிடிப்பது அவசியம். எல்லோரும் வரிசையில்  நிற்கும் போதும் நீங்கள் மட்டும் இடையில் புகுந்தால், ஒன்று எல்லோரும்  உங்களை  சத்தம் போட்டு உள்ளே விட மாட்டார்கள். இது கூட  பரவாயில்லை. சில இடங்களில்  யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.  ஆனால் அவர்கள் உங்களை  பார்க்கும் பார்வை இருக்கிறதே. நாக்கை  பிடிங்கிக்கொண்டு சாகலாம் போல்  இருக்கும். வரிசையின் நடுவே  செல்பவர்களை புழுவை போல் பார்ப்பார்கள்.  எல்லாவற்றையும் விட  முக்கியமானது வரிசை என்றால் நூறு பேர் இருக்க  வேண்டும் என்றில்லை.  ஒருவர் உங்களுக்கு முன் நின்றால் கூட அது வரிசைதான். அவர் காரியம்  முடிந்து நகன்ற பிறகு தான் நீங்கள் முன்னால் செல்ல வேண்டும். அது  ஒன்றுக்கும் உதவாத அரை நொடி கேள்வியாக இருந்தால் கூட*.

# அடுத்ததாக "Courtesy". ஒரு நிறுவனத்திற்கு உள்ளே செல்லும் போதோ, இல்லை எந்த ஒரு இடத்திலும் கதவை திறந்து கொண்டு உள்ளே போகும் போது அடுத்து யாராவது வந்தால் அவருக்காக கதவை பிடித்து கொண்டு  நிற்க வேண்டும். ஆம். அதுதான் நாம் கடை பிடிக்க வேண்டிய மரியாதை.  இன்னும் சொல்ல போனால், நமக்கு பின்னால் ஒருவர் வந்தால், அவருக்காக கதவை திறந்து விட்டு அவர் உள்ளே சென்ற பிறகு தான் நாம் செல்ல வேண்டும். சினிமா தியேட்டர் போன்ற இடங்களில் கூட வரிசையாக மக்கள் உள்ளே செல்லும் போது அடுத்து பின்னால் வருபவர் மேல் கதவு சென்று அறைந்து விட கூடாது என்பதற்காக ஒவ்வொருவரம் கதவை தங்கள் கையால்  தாங்கி தாங்கி செல்வர். பாதுகாப்பு நிறைந்த கட்டடங்களுக்கு  மட்டும் இது பொருந்தாது**.

# "Please, Thanks". இது தான் நீங்கள் அதிகமாக உபயோகிக்கும் வார்த்தையாக இருக்கும். ஆம், எதற்கு எடுத்தாலும் நாம் பிளீஸ் என்றும் தாங்க்ஸ் என்றும் சொல்ல  வேண்டும். ஒரு பேருந்தில் ஏறி டிக்கெட் எடுக்க வேண்டும்   என்றால்  கூட நடத்துனரிடம் ஒன் டவுன் டவுன் "ப்ளீஸ்" என்று தான் கேக்க வேண்டும்.  பேருந்தை விட்டு இறங்கும் போது மறக்காமல் ஓட்டுனருக்கு  "தாங்க்ஸ்"  சொல்ல  வேண்டும்***.

* நான் முதல் முறை அமெரிக்கா சென்ற போது "Queue Discipline" தெரியாமல்  பெற்ற அனுபவம்.

** Courtesy - இங்கு கடைபிடித்த மரியாதையை எனது இந்திய அலுவலகத்தில் கடைபிடித்ததால் கிடைத்த "சம்மன்".

*** "பிளீஸ்" சொல்லாததால் இங்கிலாந்தில் எனக்கு கிடைத்த அனுபவம்.  இவையெல்லாம் அடுத்த பதிவில். 

இன்னும் பல சுவராசியங்கள் அடுத்த பதிவில்... 

share on:facebook