Friday, December 31, 2010

Happy New Year - 2011




Wish You All a Very Happy and Prosperous New Year - 2011


2000 மாவது ஆண்டாக இருந்தாலும், 2011 ஆக இருந்தாலும் ஏன், 3000 மாவது ஆண்டாக இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களின் புதுவருட பாட்டு இதுவாகத்தான் இருக்கும்.


மீண்டும் அனைவருக்கும் என் இனிய 2001 புது வருட நல்வாழ்த்துக்கள்.





என்றும் அன்புடன்....
share on:facebook

Tuesday, December 28, 2010

2010 - Top 10 'எல்லாமே பெரிசுதான்'


சென்ற 2010 - Top 10 'எல்லாமே பெரிசுதான்' பதிவில் என்னை கவர்ந்த, பாதித்த சில செய்திகளில் முதல் ஐந்தை பதிந்தேன். அவற்றில் மீதி ஐந்து இதோ...

பீகார் தேர்தல் முடிவு:
பீகாரில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என ஓரளவிற்கு அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் எதிர்க்கட்சிகளான ராஸ்ட்ரிய ஜனதா தளமும் அகில இந்தியா கட்சியான காங்கிரசும் இந்த அளவிற்கு மண்ணை கவ்வும் என யாரும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள் - லல்லுவும் ராகுல் காந்தியும் சேர்த்து. பீகாரில் நிதீஷ் குமார் பெற்ற இந்த மாபெரும் வெற்றி இந்திய அரசியலில் நிச்சயம் ஒரு திருப்புமுனைதான்.


முற்றிலும் ஜாதியை அடிப்படையாகவும், வன்முறையை வழிகாட்டியாகவும் வைத்தே அரசியல் நடக்கும் பீகாரில், வளர்ச்சியையும், சட்டம் ஒழுங்கை (ஓரளவிற்கு) நிலை நாட்டியத்தை வைத்து மட்டுமே நிதீஷ் குமார் வெற்றி பெற்றார் என்றால் இந்தியாவில் மேலும் பின்தங்கியுள்ள மாநிலங்களும் முன்னேற வாய்ப்புண்டு என்பதை நாட்டு மக்களுக்கும் இதர அரசியல்வாதிகளுக்கும் உணர்த்திய பெருமை நிதீஷ் குமாரையே சாரும்.

CNN - Hero of the year:
இந்த வருடம் CNN நடத்திய Hero of the year தேர்வில் தமிழகத்தை சேர்ந்த நாராயணன் சங்கரன் முதல் பத்து பேரில் ஒருவராக தேர்வானது தமிழர்கள்/இந்தியர்களான நமக்கெல்லாம் கிடைத்த மிக பெரிய பெருமை என்றுதான் சொல்லவேண்டும்.


இறுதியாக நடந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் நாராயணன் சங்கரனால் முதல் இடத்தை பிடிக்க முடியவில்லை என்றாலும் அவரின் சேவையை பாராட்டி அவரை அமெரிக்காவிற்கு அழைத்து கவுரவித்ததுடன் $ 25,௦௦௦ அமெரிக்க டாலர்கள் பணமுடிப்பையும் வழங்கியது. சக அமெரிக்கர்கள் கூட 'who is this Sankaran' என அவரைபற்றியும் நம் மதுரையை பற்றியும் கேட்கும் அளவிற்கு தனி மனித சேவையில் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தவர் சங்கரன் நாராயணன்.

ஆ (சாமி) நித்யானந்தாவின் லீலைகள் (Villian of the Year):
உலகம் பூராவும் போலி சாமியார்களின் அட்டூழியங்கள் அவ்வப்போது அரங்கேறி கொண்டிருந்தாலும் மேல்வர்க்க மக்களிடமும் மீடியாக்களிடமும் சற்று அதிகமாகவே செல்வாக்கு பெற்றிருந்த நித்யானந்தாவின் லீலைகள் வெளியே தெரிந்த போது அந்த அதிர்ச்சி சற்று அதிகமாகவே இருந்தது.

தன்னை தானே சாமி என்று சொல்லிக்கொண்டு துறவறத்துக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் பளபளக்கும் கார்களிலும் பகட்டான குடில்களிலும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் கூடவே சிஷ்யைகளை கொண்டிருக்கும் இம்மாதிரியான ஆட்களால் நம் சமூகத்திற்கு மட்டும் அல்ல துறவறம் என்ற அந்த புனிதமான அறத்திற்கே அவப்பெயர் ஏற்படுத்திவிடுமோ என்ற ஐயமே தற்போது மிஞ்சுகிறது.

மழையில் நனைந்த தமிழகம்:
கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு வருடமும் வஞ்சனை இல்லாமல் தமிழகத்தில் மழை பொழிந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால் கிடைக்கும் நீரை சேமித்து வைக்கவோ சீர்படுத்தி அகற்றவோ வழியில்லாமல் அரசாங்கம் இன்னும் உறங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அதிலும் தலை நகர் சென்னையில் கேட்கவே வேண்டாம். திரும்பிய பக்கமெல்லாம் தெப்பம் போல் மழை நீரில் வாகனங்கள் மிதந்து கொண்டு செல்கின்றன. ஆனால் அரசியல்வாதிகள் குடியிருக்கும் பகுதிகளில் மட்டும் துடைத்து விட்டாற்போல் பளிச்சென்று சாலைகள். ஹ்ம்ம் என்றுதான் இவர்கள் திருந்துவார்களோ.


தலைவர்களின் உயிருக்கு விடுதலைப்புலிகள் குறி:
இந்த ஆண்டின் மிக பெரிய காமெடி இதுவாகத்தான் இருக்கு வேண்டும். இலங்கை இன பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டது முதல் இன்றுவரை இலங்கை தமிழர்களை வைத்தே அரசியல் செய்து வந்த தமிழக அரசியல்வாதிகள் இன்று விடுதலை புலிகள் என்ற இயக்கமே இல்லாமல் போனபிறகும் கூட அவர்களை வைத்து இன்னும் அரசியல் செய்கிறார்கள்.

தமிழகம் வரும் பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு விடுதலை புலிகளால் ஆபத்து என திடீரென்று ஒரு அறிக்கை வெளியாகிறது. இன்னும் பத்தாண்டுகள் கழித்து கூட ஏதாவது ஒரு பிரச்சனையை திசை திருப்ப இதே கதையை கட்டி விடுவார்கள் போலிருக்கிறது.
 
ஹையா, எல்லோருக்கும் முன் நான்தான் 2010 - ஒரு சிறப்பு கண்ணோட்டம் போட்டேனாக்கும் (!?). ஆமா நீங்க எப்ப போட போறீங்க?

படம் நன்றி: bostom.com
share on:facebook

Friday, December 24, 2010

2010 - Top 10


2010 ஆம் ஆண்டு எல்லாமே பெருசுதான்...

2G ஸ்பெக்ட்ரம்:
சுமார் ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் கோடி ரூபாய் (1,75,000, 000,000) ஊழல் நடந்திருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் இது எல்லாம் யூகத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளதாகவும், ஒரு தனி நபரால் இந்தளவு எல்லாம் ஊழல் செய்ய முடியாது என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள்.

அப்படி என்றால் ஒரு நாலு பேர் அல்லது நாற்பது பேர் அட நாலாயிரம் பேர் சேர்ந்து செய்தால் பரவாயில்லை என கூறுகிறார்களா? இல்லை மேலே கூறிய தொகையில் ஒரு லட்சத்தை எடுத்துவிட்டு எழுபத்தையாயிரம் ஊழல் என்றால் ஒத்துக்கொள்வார்களா?

விக்கி லீக்ஸ்:
அமெரிக்க அரசாங்க ரகசியங்களை கசிய விட்ட விக்கி லீக்ஸ் இணையதள ஆசிரியருக்கு லண்டன் ஐ கோர்ட் ஜாமீன் வழங்கியது. இருந்தும் அவரால் உடனே விடுதலையாக முடியவில்லை. அவர் ஜாமீனில் செல்ல 200,000 (1,60,00,000 ரூபாய்) இங்கிலாந்து பவுண்டுகளை பணமாக கட்ட வேண்டும் என விதித்த நிபந்தனைதான். இதை ஏற்பாடு செய்ய அவரது ஆதரவாளர்களுக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு மேல் ஆனது.


ஜூலியன் அசான்ஜிடம் சுமார் 250,000 ரகசிய ஆவணங்கள் இருக்கிறது. ஒரு வேளை ஒரு ஆவணத்திற்கு ஒருபவுண்ட் என பினையதொகையை கணக்கு செய்திருப்பாரோ அந்த நீதிபதி!


கோவை குழந்தைகள் கடத்தி கொலை:
கல்நெஞ்சம் படைத்தவர்கள் கூட அந்த குழந்தைகளின் (அக்கா தம்பியாக சேர்ந்திருந்த) புகைப்படங்களை பார்த்தபிறகு அவர்களை ஒருவன் பணத்திற்காக கொலை செய்தான் என்பதை நம்ப மாட்டார்கள். தமிழகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பில் ஒரு மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவம். குற்றம் செய்தவர்களுக்கு உடனடி தண்டனையும் கிடைத்தது.


குற்றம் செய்தவர்களை என்கவுண்டரில் சுட்டு கொன்றதை பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டால் கூட இதே போல் குழந்தை கடத்துபவர்கள் எல்லோரையும் போலீசார் சுட்டு கொள்வார்களா? அப்படியே செய்தாலும் அதை எப்போதும் மக்கள் ஏற்றுகொள்வார்களா? முறையான தண்டனையே என்றும் சரியான தீர்வு.


எந்திரன் வெற்றி:
நடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பது விபரம் அறிந்தவர்களுக்கு தெரியும். அதிலும் எல்லா தரப்பினரும் பார்த்து ரசிக்கும் அளவுக்கு ஈர்ப்பது என்பது இன்னும் அரிது. அந்த வகையில் அறுபது வயதிலும் நான்கு தலைமுறை தாண்டி இன்னும் பழைய ரசிகர்களையும் புதிய ரசிகர்களையும் தொடர்ந்து ஈர்த்துவரும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் மிகப் பெரிய வெற்றி படம் 'எந்திரன்'. இந்திய திரைப்பட வரலாற்றில் எதிர்பார்ப்பிலும் வசூலிலும் ஒரு மிக பெரிய சாதனை படைத்த தமிழ் திரைப்படம்.  அமெரிக்கா போன்ற நாடுகளில் அதற்கு கிடைத்த வரவேற்பும், வசூலுமே அந்த சாதனைக்கு ஓர் சாட்சி.

அதே சூப்பர் ஸ்டார், இனி கலை சேவையாக தன் மீது மக்களுக்கு உள்ள ஈர்ப்பை பயன்படுத்தி வாழ்ந்து மறைந்த மக்கள் தலைவர்களின் வாழ்கை வரலாற்றை தன் கதாபாத்திரமாக ஏற்றுக்கொண்டு குறைந்தது ஒரு சில படங்கள் நடித்து கொடுப்பாரேயானால் அதை விட இந்நாட்டு மக்களுக்கு சிறந்த வகையில் சேவை செய்ய வேண்டியதில்லை. தனக்கு மக்கள் கொடுத்த பேருக்கும் புகழுக்கும் நன்றிக்கடனாக திருப்பி கொடுக்க இதைவிட ஒரு நல்ல விஷயம் வேறு இருக்கப்போவதில்லை ஹ்ம்ம். ஆசை பட எல்லோருக்கும் உரிமையுண்டு. எனக்கும் தான்.


ஒபாமாவின் இந்தியா வருகை:
ஒபாமா காந்தியையும் மார்டின் லூதர் கிங்கையும் தன் குருவாக ஏற்றுக்கொண்டவர். ஒரு மிக சிறந்த பேச்சாளர். மெத்த படித்த அமெரிக்க மக்களையே தன் பேச்சாற்றலால் மயக்கும் மந்திரம் தெரிந்தவர். எதிர்பார்த்தது போலவே அவருடைய இந்திய வருகை பெறும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் சேர்த்தே தந்தது.


இது எல்லாவற்றையும் விட அவருக்காக தலை நகர் டில்லியில் பாதுகாப்பு என்ற பெயரில் அவர் செல்லும் வழி எங்கிலும் ரோட்டோரமாக இருந்த அனைத்து மரங்களும் வெட்டி வீழ்த்தப்பட்டன. தென்னை மரங்களில் இருந்த தேங்காய்கள் கூட தப்பவில்லை. இந்திய கடலோரத்தை சுற்றி இரண்டு பெரிய போர்க்கப்பல்கள் நாற்பதுக்கும் மேற்ப்பட்ட கடற்படை ரோந்து கப்பல்கள், தினம் 600 கோடி ரூபாய் செலவில் பல்லாயிரக்கணக்கான காவலர்கள் என அவருக்கும் அவருடன் பயணித்த 3000 மேற்பட்ட அவருடைய பரிவாரத்துக்கும் செலவிடப்பட்டதாக செய்திகள் கூறின.

என்னுடைய ஒரே ஆதங்கம், இன்றைய ஹைடெக் உலகத்தில் ஒரு வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவர் எல்லாவற்றையும் செய்திருக்க முடியுமே. நம் நாட்டில் கரும்பலகை கழிப்பிட வசதி இன்றி இருக்கும் எத்தனையோ பள்ளிகளுக்கு அவருக்காக செலவிடப்பட்ட தொகையில் ஒரு பகுதியை செலவிட்டிருந்தால் கூட போதும். பல்லாயிரக்கணக்கான ஏழை மாணவர்கள் பயனடைந்து இருப்பார்கள்.


Top 10 - ல் மீதி தொடரும்...

படம் நன்றி : boston.com
share on:facebook

Wednesday, December 22, 2010

Let it snow...Let it snow...



பனிபொழிவு. நான் மிகவும் பார்த்து ரசித்து அனுபவிக்கும் ஒன்று. நண்பர் சாயை தொடர்ந்து நானும் நானே எடுத்த சில புகைப்படங்களை இங்கு இணைத்துள்ளேன்.





பனிப்பொழிவில் பல வகை உண்டு. சில சமயம் ரவையை போல் பொடி பொடியாக பெய்யும். சிறிய மரக்கிளைகளில் அது ஒட்டிக்கொண்டிருப்பதே அழகு.




சில சமயம் பெரிய அளவில் பொத் பொத்தென்று பனி விழும். ஒரு அரை மணி நேரத்தில் தரை எல்லாம் வெண்மை பூசிவிடும்.



பல தடவைகள் மரங்களில் தொத்திக்கொண்டு இருக்கும் பனியின் அழகை ரசிக்கவே சும்மாவேனும் காரை எடுத்துக்கொண்டு சுற்றுவேன்.


மிசிசிப்பி ஆறு பனிக்காலத்தில் அப்படியே உறைந்து அங்குள்ள சிறிய கப்பல் ஒன்று தரையில் தெரியும் கட்டடம் போல் காட்சி அளிக்கிறது.



சில நேரங்களில் வெள்ளையும் கொள்ளை அழகுதான்.


சென்னையில் இருந்தால் மழை பெய்வதை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும்(வீட்டுக்குள்ளிருந்து தான்).
share on:facebook

Saturday, December 18, 2010

நெஞ்சு பொறுக்குதில்லையே தோழா...



நெஞ்சு பொறுக்குதில்லையே.

நெஞ்சு பொறுக்குதில்லையே தோழா...
மாறிவரும் நம் சமுதாய உணர்வுகளை நினைந்துவிட்டால்.


சமத்துவமும், சமதர்மமும் ஒன்று சேர்ந்து
சோஷலிச பாதை நோக்கி செல்லும்
நம் ஒன்று பட்ட இந்தியாவில்
பாபர் மசூதி-ராமர் கோவில் பிரச்சனையா?

தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் - கடவுள்.
பிறகு எங்கே ராமருக்கு பிறந்த இடம் - தனித்து அயோத்தியில்?

நெஞ்சு பொறுக்குதில்லையே தோழா...
மாறிவரும் நம் சமுதாய உணர்வுகளை நினைந்துவிட்டால்.


உலக நாடுகளின் பிரச்சினை - பெட்ரோலிய பொருட்களின் பற்றாக்குறை  பற்றிய ஆராய்ச்சியில். இந்திய நாட்டின் பிரச்சினை மசூதியை மீண்டும் கட்டலாமா கூடாதா என்பதில்.

ஒருபுறம் கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் கொடுமைபடும் பாட்டாளிகள். மறுபுறம் ஏசியிலும், ஏழடுக்கு மாளிகையிலும்
ஏட்டை புரட்டி நோட்டை என்னும் ஏகாதிபத்தியங்கள்.

மாற்றம் தர வேண்டிய மந்திரி சபைகளோ மாதமொருமுறை மாறும் அவலம் நமக்கு.

நெஞ்சு பொறுக்குதில்லையே தோழா...
மாறிவரும் நம் சமுதாய உணர்வுகளை நினைந்துவிட்டால்.


வருடத்துக்கொருமுறை தேர்தல்
மாதத்துக்கொருமுறை  பந்த்
வாரத்துக்கொருமுறை கடையடைப்பு

பொருட்களின் உற்பத்தி பெருக்குவது எப்படி?
மக்கள் உற்பத்தியில் உயர்வு கண்டதுதான் பலன்.

மலிவு விலை மது தேடி கணவன்.
ஏறிவரும் அதிகவிலை அத்தியாவசிய பொருள் தேடி மணைவி.

நெஞ்சு பொறுக்குதில்லையே தோழா...
மாறிவரும் நம் சமுதாய உணர்வுகளை நினைந்துவிட்டால்.


இன்றைய மாணவர்கள் நாளைய இந்திய மன்னர்கள்.
ஆனால் இவர்களுக்குள் ஏற்படும் சந்தேகம் - நாளை புதுப்படம் ரிலீஸ் ஆகுமா - ஆகாதா என்பதே.

இவர்களுக்குள் ஏற்படும் போட்டி நடிகைகளின் வயது குறைவா - அதிகமா என்பதில்தான்.

இவர்கள் எங்கே வெல்லப்போகிறார்கள் ஒலிம்பிக் தங்கத்தை?

நெஞ்சு பொறுக்குதில்லையே தோழா...
மாறிவரும் நம் சமுதாய உணர்வுகளை நினைந்துவிட்டால்.

*=========================================*
பி.கு. 1990 - களின் ஆரம்பம் என நினைக்கிறேன். என்னுடைய உறவுகார பெண் ஒருவர் தஞ்சை மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற போட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்காக என்னிடம் ஏதாவது ஒன்றை எழுதி தருமாறு கேட்டார். அதற்காக எழுதிய கவிதை(!) தான் இது. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். இந்த கவிதைக்கு பரிசாக (முதல் பரிசா என்பது ஞாபகம் இல்லை) பாரதியாரின் பாடல்கள் என்ற புத்தகமும் ஒன்று பரிசாக கிடைத்தது. 

*========================================*


பொருட்குற்றம், இலக்கனக்குற்றம், பிழை எதுவாக இருந்தாலும் பொருத்துக்கொண்டதற்கு நன்றி. 

 
share on:facebook

Wednesday, December 8, 2010

லண்டன் டு பாரிஸ்.


ஆக்காஷவாணி, செய்திகள் வாசிப்பது "சரோஜ் நாராயண்சாமி". - தற்போது உள்ள சூரியம் எப். எம்., சந்திரன் எப். எம். எல்லாம் வருவதற்கு முன் அகில இந்திய வானொலி மட்டும் கோலோச்சிக்கொண்டிருந்த போது டெல்லி அலைவரிசையில் தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்த இவரின் குரலுக்கு பலர் ரசிகர்களாக இருந்தார்கள். அப்படி ஒரு தமிழ் உச்சரிப்பு, கணீரென்ற குரல் வளம்.

இனி என்னைப்பற்றி: செய்திகள் சுவாசிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இணையம், செய்தித்தாள், தொலைக்காட்சி என்று எதுவாக இருந்தாலும் மாய்ந்து மாய்ந்து செய்திகளை படிக்கும் பழக்கம் எனக்கு. அதில் என்னை கவர்ந்த சுவாரிசியமான செய்திகள் இருந்தால் அதை எல்லோரிடமும் பகிர்ந்தும் கொள்வேன்.

சரி இப்ப தலைப்பிற்கு வருகிறேன்...லண்டன் டு பாரிஸ்.

லண்டன்: சமீபத்தில் லண்டனுக்கு சென்ற இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு நாட்டு அதிபராக இருந்தும் விமான நிலைய புற வாசல் வழியாக வெளியே செல்லும் நிலைமை ஏற்பட்டது.

அதுமட்டுமில்லை. அவர் கலந்து கொள்வதாக இருந்த ஆக்ஸ்போர்ட் யூனியன் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. இது எல்லாவற்றுக்கும் காரணம் லண்டனில் உள்ள தமிழர்கள். இலங்கை இனப்போராட்டத்தில் அவர் நடத்திய படுகொலைகளை கண்டித்து கொட்டும் பணியையும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கில் அவர்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்ததுதான்.

எனக்கு தெரிந்து எந்த ஒரு நாட்டு அதிபரும் இது மாதிரியான ஒரு எதிர்ப்பை தங்கள் பதவிக்காலத்தில் சந்தித்து இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். வீர்கள் அணிவகுப்பு மரியாதை, அமைச்சர்கள் வரவேற்பு என இருந்திருக்க வேண்டிய ஒரு நாட்டு அதிபரின் பயணம் இப்படி ஆகிப்போனதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

போர் முடிந்து இரண்டு ஆண்டு ஆகியும் இன்னமும் இலங்கை தமிழர்களுக்குள் தகித்துக்கொண்டிருக்கும் நெருப்பு அவர்களின் போராட்டமும் பிரச்சனைகளும் இன்னமும் தீரவில்லை என்றே காட்டுகிறது.

பாரிஸ்: பாரிசிலிருந்து ஜூலை 2000 ஆம் ஆண்டு கிளம்பிய (Concord) கான்கோர்டு விமானம் ஒன்று கிளம்பிய சில நிமிடங்களிலேயே தீ பிடித்து வெடித்து சிதறியது. அந்த விபத்திற்கு காரணம் கான்கொர்டு விமானம் கிளம்புவதற்கு முன் கிளம்பிய காண்டினண்டல் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து கழன்று விழுந்த ஒரு சிறு இரும்புத்துண்டு. ரன்வேயில் விழுந்து கிடந்த அந்த சிறு இரும்புத் துண்டு கான்கோர்டு விமானத்தின் டயர்களை கிழித்து, கிழிந்து விழுந்த அந்த டயர் துண்டுகள் விமானத்தின் பெட்ரோல் டாங்க்கை சென்று தாக்கி ஓட்டை போட்டதால் தான் இந்த மாபெரும் விபத்து ஏற்பட்டது என்று இறுதியாக அறிவித்துள்ளார்கள்.

இவ்விபத்திற்கு காரணமானவர்கள் என்று காண்டினெண்டல் ஏர்லைன்சில் வேலை பார்த்த மெக்கானிக் ஒருவருக்கும் மற்றும் ஒருவருக்கும் அபராதமும் கடும் சிறை தண்டனையும் அளித்துள்ளார்கள்.

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என கூறுவார்கள். இங்கு அதுவே பல பேரின் உயிரை எடுத்துள்ளது.

கான்கொர்டு பற்றிய சுவாரசியமான சில தகவல்கள்:

* இது ஒரு அதிவேக விமானம். சாதாரண தொலை தூர விமானங்களை காட்டிலும் இது இருமடங்கு வேகம் செல்லக்கூடியது. பாரிசிலிருந்து நியூயார்க் செல்ல வெறும் மூன்று மணி நேரம்தான். சாதாரண விமானங்கள் சுமார் 8 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.

* மற்ற விமானங்கள் 30,000 அடி உயரத்தில் பறந்தால் இது 60,000 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும். விமானங்கள் பறக்கும் உயரத்திற்கு தகுந்தாற்போல் தான் அதன் வேகம் இருக்கும்.

* அதே போல் பயணக் கட்டணமும் மற்ற விமானத்தை விட பன்மடங்கு அதிகம்.

* கான்கொர்டு விமானம் ஒரே ஒரு முறைதான் விபத்துக்குள்ளாகியது. அது ஜூலை 2000 ஆண்டு நடந்த இந்த ஒரு விபத்து தான்.

மீண்டும் புதிய செய்திகளுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது...ஆதி.
share on:facebook

Sunday, December 5, 2010

வாடகை சைக்கிள்


வாடகை சைக்கிள்.

நான் சிறு வயதாக இருந்த போது தெருவுக்கு ஒரு வாடகை சைக்கிள் கடையாவது இருக்கும். அப்போதெல்லாம் சற்று வசதியானவர்கள் மட்டுமே ஸ்கூட்டரோ பைக்கோ வைத்திருப்பார்கள். அதுவும் ஒன்று பஜாஜ் செட்டாக் அல்லது இண்டு சுசூகி போன்று ஒன்று இரண்டு வகைகளை தான் பார்க்க முடியும். பிறகு டி வி எஸ் 50 வந்த பிறகு ஓரளவு கீழ்தட்டு மக்களும் வாங்கும் வகையிலும் இருந்தது.


இப்போதெல்லாம் பைசாவிற்கு வழியில்லை என்றாலும் பல்சர் வண்டி வாங்கிவிடுகிறார்கள். சரி மீண்டும் வாடகை சைக்கிள் விசயத்திற்கு வருவோம். எங்கள் தெருவில் ஒரு வாடகை சைக்கிள் கடை உண்டு. சனி ஞாயிறு என்றால் அங்கு படை எடுத்து சென்று விடுவோம்.


எல்லாம் அங்குள்ள ஒன்றிரண்டு சிறிய சைக்கிளை வாடகைக்கு எடுத்து ஓட்டுவதற்கு தான். நாம் போகும் முன்பே வேற ஒருத்தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்று விட்டால் அவன் வரும் வரை அங்கேயே உக்கார்ந்து இருக்க வேண்டி இருக்கும். அவன் எப்ப வருவான் எப்ப வருவான் என்று அடிக்கு ஒரு தரம் வெளியே எட்டி எட்டி பார்த்துக்கொண்டே இருப்போம். ஒரு வழியாக அவன் வந்து ஸ்டைலாக நிறுத்திய அடுத்த நொடி அந்த சைக்கிளை பெற ஒரு போரே நடக்கும்.


இதில் சில விசமிகள் சைக்கிளை திரும்ப விடுவது போன்று வந்து "அண்ணே மணி என்னாச்சுனே" என கேட்பான். மணியை சொன்னவுடன் அப்படியா சரி அப்ப இன்னும் அரை மணி நேரம் எனக்கு காசு இருக்கு என திரும்பவும் பறந்து விடுவான். மணிக்கு ஒரு ரூபாயோ என்னமோ. எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. சிலர் வேண்டும் என்றே வீட்டில் ஒரு மணி நேரத்திற்கு கொடுக்கும் காசில் ஐந்து பத்து பைசாவிற்கு மிட்டாய் வாங்கி சாப்பிட்டு விட்டு கடைகாரரிடம், "அண்ணே, பத்து பைசா கீழ எங்கயோ விழுந்துடுச்சுன்னே" என பரிதாபமாக பார்ப்பான். அவரும் சரி சரி வுட்டுட்டு போ என்பார்.


இதையெல்லாம் விட இன்றும் என் மனதில் பாரமாக தோன்றும் காட்சி அக் கடையில் வேலை பார்த்த எங்கள் வயது சிறுவன் ஒருவன். அவன் பெயர் தற்போது ஞாபகம் இல்லை. சைக்கிள் கடை ஓனரிடம் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை தலையில் குட்டு வாங்கிக்கொண்டே இருப்பான். எப்பொழுதும் அழுக்கு சட்டையும் அழுக்கு அரை கால் டிராயரும் அணிந்து கொண்டு சைக்கிள் டூயுப் பஞ்சர் பார்ப்பது, சைக்கிளுக்கு காற்றடிப்பது போன்ற வேலைகளை காலையிலிருந்து மாலை வரை அசராமல் பார்ப்பான்.


பொழுது முழுவதும் சைக்கிள்களோடு உறவாடி கொண்டிருந்தாலும் காலையும் மாலையும் தன் கால்களே தனக்கு உதவி என நடந்தே வீட்டிற்கு போய் வந்து கொண்டிருப்பான். ஒரு தடவை கூட எங்களை போல் அவன் வயதிற்கு ஏற்ற சிறிய சைக்கிளை எடுத்துக்கொண்டு சுற்றி பார்த்ததில்லை. ஆனால் கடைகார அண்ணாச்சியும் நல்லவர் தான். நாள் முழுதும் வேலை வாங்கினாலும், குட்டினாலும் மதியம் அவனுடன் சேர்ந்து தான் சாப்பிடுவார். கறி குழம்பு ஆனாலும் மீன் குழம்பு ஆனாலும் அவனுக்கு கொடுத்துவிட்டு மீதி இருந்தால் தான் அவர் சாப்பிடுவார். கோபம் இருக்கும் இடத்தில் தானே குணம் இருக்கும்.


சற்று வளர்ந்த பின்பு வெளி இடங்களுக்கு போகும்போது குறிப்பிட்ட இடத்திற்கு பேருந்தில் சென்றுவிட்டு அங்கிருக்கும் சைக்கிள் கடை ஒன்றில் சைக்கிளை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வோம். அப்போதெல்லாம் மினி பேருந்து, ஆட்டோ, கால் டாக்சிகள் இல்லை. பேருந்து செல்லாத இடமாக இருந்தால் வாடகை சைக்கிள் தான் ஒரே சிறந்த வழி.


வெளி ஊராகவோ தெருவாகவோ இருந்தால் ஆள் தெரியாமல் சைக்கிள் கொடுக்க மாட்டார்கள். யாரவது தெரிந்தவர் சொன்னால்தான் கொடுப்பார்கள். சிறு வயதில் சைக்கிள் ஓட்டுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். தஞ்சையிலிருந்து நானும் என் நண்பனும் (ஒவ்வொரு பயணத்திலும் ஒவ்வொரு நண்பன் சேருவான்) சைக்கிளிலேயே திருச்சி வரை சென்று வருவோம். அதுவும் நேர் வழியில் செல்லாமல், தஞ்சையிலிருந்து திருவையாறு சென்று அங்கிருந்து கல்லணை, துவாக்குடி என்று ஊர் முழுவதும் சுற்றி திருச்சி செல்வோம்.


அது போல் எங்கள் உறவினர்கள் வீட்டுக்கு நீடாமங்கலத்திற்கு சைக்கிளிலே செல்வோம். ஏழாவது எட்டாவது படிக்கும் வயதாக இருந்ததால் சில சமயம் அவர்கள் என்னப்பா? வீட்ல சொல்லிட்டுதானே வந்தே? என ஆச்சிரியமாக கேப்பார்கள்.


சைக்கிள் கடைகளை பற்றி சொல்லும் போது தஞ்சையில் இருந்த மிகவும் பிரபலமான "மனோகரன்" சைக்கிள் கடை பற்றி கூறித்தான் ஆகவேண்டும். தஞ்சையிலுள்ள நாஞ்சிக்கோட்டை சாலையில் மனோகரன் சைக்கிள் கடை மிகவும் பிரபலம். இப்போது இருக்கா என தெரியவில்லை. அவர் மட்டும் தான் சுமார் நூறு சைக்கிள்கள் அப்போதே வைத்திருந்தார். சைக்கிள் எடுப்போர் பெயர், எடுக்கும் நேரம் ஆகியவற்றை ஒரு நோட்டில் குறிப்பதற்கென்றே ஒருவர் இருப்பார். திரும்ப கொடுக்கும் சைக்கிள்களில் எல்லா பாகமும் இருக்கிறதா என செக் செய்ய மட்டும் இன்னொருவர் இருப்பார். அவரின் கடையில் ஆயுதபூஜை கொண்டாட்டங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். இருக்காதா பின்னே? நூறு சைக்கிள்கள் ஆச்சே!

அதே போல் இருதயபுரம் போஸ்ட் அபீஸ் பக்கம் "இயேசு" சைக்கிள் கடை என்று ஒன்று இருந்தது. அவரிடம் இருந்த அனைத்து சைகிள்களுமே ஓட்டை தான். இருந்தாலும் நல்ல சைக்கிள்கள் உள்ள பக்கத்து கடையில் எடுக்காமல் அவரிடம் தான் வந்து எல்லோரும் சைக்கிள் எடுப்பார்கள். எல்லாம் பழக்க வழக்கத்தினால் நடக்கும் வியாபாரம்.

ரயிலடி ஆஞ்சநேயர் கோவில் எதிரே உள்ள G.M. சைக்கிள் மார்ட் சைக்கிள் உதிரி பாகங்களுக்கு மிகவும் பிரபலம். கடை சிறியதாக இருந்தாலும் பாரம்பரியமாக அந்த கடையை வைத்துள்ளார்கள். அவர்களுக்கென்றே வாடிக்கையாளர்கள் உண்டு. விலை எதுவாக இருந்தாலும் வாங்கும் ஆளுக்கேற்றவாறு அதிகபட்சம் விலையை குறைத்தே விற்பனை செய்வார்கள். தற்போதும் அக்கடை உள்ளது.

ஹீரோ சைக்கிள்கள் அப்போது பிரபலம். அதே போல் இப்போதுள்ள B.S.A. சைக்கிள்கள் சற்று அதிக விலை உள்ள சைக்கிள்கள்.

சிறுவர்களாகிய எங்களுக்கென்று சைக்கிள் எல்லாம் அப்போது வாங்கி கொடுத்ததில்லை. இப்போது என் பிள்ளைகள் இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே சைக்கிள் கேட்டு அடம் செய்து வாங்கிவிட்டார்கள்.

சைக்கிள்கள் பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதன் தொடர்ச்சியா அதையும் எழுதலாம் என உள்ளேன். சரி ஜூட்...
share on:facebook

Monday, November 8, 2010

ஆளில்லாமல் இயங்கும் கார்




சிறு வயதில் குரங்கு பெடல் போட்டுக்கொண்டு சைக்கிள் ஒட்டி பழகும் போது அடிக்கடி கீழே விழுவேன். அப்போது என் அண்ணன் கூறுவார் "நீ என்னைக்கு சைக்கிள் பழகி என்னைக்கு நீயா ஓட்ட போகிறாயோ" என்று.

அதற்கு நான் கூறுவேன், "எனக்கு கார் வாங்கி குடுங்க, உடனே ஒட்டி காட்டுறேன்" என்று. அதெப்படி என்று அவர் கேட்கும் முன்பே என்னுடைய பதில், கார்ல நாலு சக்கரம் இருக்குல்ல அப்புறம் எப்படி அது கீழ விழும். அதனால நான் கீழ விழாமலே ஒட்டிடுவேன்ல? என்று.

அப்படி பார்க்கபோனா ப்ளைட் ஓட்டுவது இன்னும் ஈஸி. எதிரே எந்த வாகனும் வராது. சிக்னல் இல்ல, ஒன் வே இல்ல. படுத்துக்கிட்டே வண்டி ஓட்டலாம். ஆம் அதனால் தான் தற்போது பெரும்பாலான நாடுகள் தங்கள் ராணுவம் மற்றும் உளவு வேலைகளுக்கு ஆளில்லா விமானங்களை உபயோகிக்க தொடங்கி உள்ளது.

சரி விசயத்திற்கு வருவோம். கூடிய சீக்கிரம் ஒட்டுனரில்லா (ஆளில்லா) கார்கள் வரபோகின்றன.

பத்து வருடங்களுக்கு முன் மேலை நாடுகளில் கூட GPS உபயோகம் அவ்வளவாக இல்லை. GPS போன்ற கருவிகள் பற்றி செய்திகள் வந்த போதெல்லாம் அதன் மேல் மக்களுக்கும் அவ்வளவு நம்பிக்கை இல்லை. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்லவேண்டிய முகவரியை பதிவு செய்தால் கூட, திடீரென்று நாம் திசை மாறி சென்றுவிட்டால் மீண்டும் சரியான திசையை GPS கருவி காட்டுமா? செல்லுமிடத்தை தாண்டி சென்று விட்டால் மீண்டும் திரும்பி வர பாதை காட்டுமா? என்ற கேள்விகள் எல்லாம் எழுந்தன.

ஆனால் இப்போது GPS உபயோகிப்பவர்களுக்கு தெரியும், அதனுடைய பயன், முக்கியத்துவம் மற்றும் புத்திசாலித்தனத்தை பற்றி. ஒரு சந்தை மறந்து அடுத்த சந்திற்குள் நுழைந்து விட்டால் கூட. "அண்ணா திரும்பி மூணாம் சந்துல நுழைந்து பிள்ளையார் கோவில் பக்கமா திரும்பி நேரா போ" என்று கூறி நம் ரூட்டை நேராக்கி விடும். அது மட்டுமா? எங்கெங்கு பெட்ரோல் பன்க் இருக்கு, எங்கு சூடா மசால் வடை (Mc donald's)  கிடைக்கும் என அனைத்து தகவல்களை நாம் செல்லும் இடமெல்லாம் அவ்வப்போது தரவல்ல தீர்க்க தரிசியாக  மாறி உள்ளது.  
தற்போது கூகுல் (Google) நிறுவனம் ஆளில்லாமல் இயங்கும் கார்களை இயக்கி சாதனை புரிந்துள்ளது. சமீபத்தில் வெளியான தகவலின்படி, கூகுல் நிறுவனம் ஏற்கனவே சுமார் ஏழு ஆளில்லா கார்களை களத்தில் (ரோடுகளில்) விட்டு தங்களது சோதனையை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார்கள். ஒவ்வொரு காரும் சுமார் 1,000 மைல்கள் எந்த விதமான மனித குறுக்கீடும் இல்லாமல் சரியான பாதையில் சரியான சரியாக இலக்கை சென்று அடைந்து உள்ளன.

அதே நேரத்தில் சோதனையின் போது காரினுள் யாரும் இல்லாமல் இல்லை. ஒரு வேலை கார் தானாக இயங்கும் போது தவறு ஏதும் நேரும் பட்சத்தில் விபத்தாகிவிடாமல் தடுக்க உண்மையில் டிரைவர் சீட்டில் ஒருவரும், ஒரு மெக்கானிக் மற்றும் பின் இருக்கையில் ஒருவரும் சோதனை ஓட்டத்தின் போது இருந்திருக்கிறார்கள். இருப்பினும் இது ஒரு மிக பெறும் சாதனையாக கருதப்படுகிறது. அதில் ஒரு கார், சான் பிரான்சிஸ்கோவின்  மிகவும் வளைவு நெளிவு உள்ள லோம்பார்ட் தெரு வழியாக சவாரி செய்துள்ளது.

இம்மாதிரியான கார்கள் உடனே மார்கெட்டுக்கு வர வாய்ப்பிலை என்றாலும் கூட  பிற்காலத்தில் விஞ்சான வளர்ச்சியின் முதிர்ச்சியாக நடைமுறையில் மிகவும் சாத்தியமாகவே தெரிகிறது. தற்போது GPS பயன்பாடு போல்.          

அப்படியே ஆளில்லா கார்கள் இல்லையென்றால் கூட, அமெரிக்கா போன்ற நாடுகளில் மனித குறுக்கீடுகள் அதிகம் இல்லாத அதே நேரத்தில் மிக நீண்ட தூர பிரயாணங்களில் ஆட்டோ பைலட் மாதிரி செயல் பட கூடிய கார்கள் மிக விரைவில் வருவதற்கான சாத்தியங்கள் தெரிகிறது.

அதில் ஒன்று, சமீபத்தில் போர்ட் கம்பெனி தயாரித்துக் கொண்டிருக்கும் கார் வகை. இந்த வகை கார்கள் அதனை சுற்றி நடக்கும் அல்லது தெரியும் விசயங்களை 360 degrees கோணத்தில் படம் பிடிப்பது மட்டுமில்லாமல் அதனை வைத்து கார் ஓட்டுனருக்கு அவ்வப்போது சிக்னல்களை கொடுத்துக் கொண்டே இருக்கும். இதை பற்றி ஆராச்சியாளர்கள் கூறும் போது, குடித்துவிட்டோ, தூக்க கலக்கத்திலோ கார் ஓட்டுபவர்களை காட்டிலும், ரோபோ டிரைவர்கள் மிகவும் பாதுகாப்பானவையே என்று.

அதிலும் ரோட்டில் ஓடும் அனைத்து வாகனங்களும் ரோபோவினால் இயக்கப்படும்போது அவைகளை நெட் வொர்க்கிர்க்குள் கொண்டு வருவது மிகவும் சுலபம் என்றும் கூறுகிறார்கள்.

ஹ்ம்ம். எல்லாம் சாத்தியமே. முயற்சி செய்யும் பட்சத்தில்...
share on:facebook

Friday, November 5, 2010

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

share on:facebook

Wednesday, November 3, 2010

போடுங்கம்மா ஒட்டு...

 
தமிழக தேர்தல் திருவிழாவின் போது ஒரு பத்திரிகை நிருபருக்கும் வாக்காளர்களுக்கும் இடையே நடந்த உரையாடல்.

நிருபர்: நீங்க யாருக்கு பாட்டி இந்த தேர்தல்ல வோட்டு போட போறீங்க?
பாட்டி: நான் ரெட்டை எல கட்சி. எம். ஜி. ஆருக்கு தான் வோட்டு போடுவேன்.

நிருபர்: ஐயா நீங்க எந்த கட்சிக்கு வோட்டு போட போறீங்க?
ஐயா: நான் பரம்பரை காங்கிரஸ்காரன். எங்க பரம்பரையே காங்கிரசுக்கு தான் வோட்டு போடும்.

நிருபர்: என்ன சார்? நீங்க இந்த எலெக்சன்ல எந்த கட்சிக்கு வோட்டு போட போறீங்க?
வாக்காளர்: முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் ஆறாவது முறையா முதல்வர் ஆகணும். அதனால அவருக்கு தான் என் வோட்டு.

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த இடை தேர்தல்களின் போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும். இதோ...

Reporter: Hello madame, To whom you are going to vote in this election?
Madame: I am going to vote for the republicans because the unemployment rate is rising and the democrats didn't do anything on that.

Reporter: Hi, Why do you want to vote democrats?
Mr. Voter: Because I don't want our government to spend too much in wars which is affecting our economy in a very bad way.

Reporter: Hi, You said that you are 87 now? Which party you are going to vote in this election.
Old lady: I use to vote for democrats before but now in this election, I am going to elect an republican because I don't want to have any more cuts in Medicare.

ஆக பரம்பரை பரம்பரையா, எனக்கு எம். ஜி. ஆரை பிடிக்கும். நான் எப்பவுமே உதய சூரியன் தான் என்று சொல்லிக் கொண்டிராமல் நாட்டு நலன்களை மையமாக வைத்து என்று நாம் சிந்தித்து வோட்டு போட போகிறோமோ அன்றே நம் நாடு உருப்பட வழி கிடைத்தது போல்தான்.

இனி சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க இடை தேர்தல்கள் பற்றி சில குறிப்புகள்...

பரபரப்பான அமெரிக்க இடை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிவுகள் பலரும் எதிர்பார்த்தபடியே குடியரசு கட்சிக்கு சாதகமாகவும் ஜனநாயக கட்சிக்கு சரிவாகவும் அமைந்துள்ளது.

பாபி ஜிந்தாலுக்கு பிறகு மீண்டும் ஒரு இந்திய வம்சாவளி பெண்மணி (Nimrata Randhawa) நிம்ரதா ரன்டவா என்பவர் தெற்கு கரோலினா மாநிலத்திற்கு கவர்னராக (நம் நாட்டில் முதல்மந்திரிக்கு சமம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  மேலும் தெற்கு கரோலினா மாநிலத்தின் முதல் பெண் கவர்னர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

அரை டஜனுக்கு மேல் இந்திய வம்சாவளியினர் இந்த தேர்தல்களில் போட்டியிட்டனர். பெரும்பாலானவர்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிட்டதால் குடியரசுக் கட்சிக்கு சார்பாக அடித்த சூறாவளி காற்றில் காணாமல் போய்விட்டார்கள்.

அமெரிக்க வரலாற்றில் இதுவரை இரு இந்திய வம்சாவளியினர் (Dalip Singh Saund in 1956, and Bobby Jindal before he become as Governor in 2004) சட்டம் இயற்றும் (US House of Representatives ) பதவியில் இருந்துள்ளனர்.

இதனால் எல்லாம் இந்தியாவிற்கோ அல்லது அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கோ ஏதும் நன்மை ஏற்பட போவதாய் எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் ஒரு நல்ல ஆரம்பம். வாழ்க இந்தியர்கள் - வெளி நாடுகளில்.  

- ஆதிமனிதன்.
share on:facebook

Friday, October 29, 2010

அன்னமிட்ட கை


ஆயிரத்தில் ஒருவன், அன்னமிட்ட கை. இன்னும் என்ன சொல்லி வேண்டுமானாலும் இவரை அழைக்கலாம். ரோட்டில் கலைந்த முடியும், அழுக்கேறிய உடலும் மன நலம் குன்றியவராகவும் ஒருவரை கண்டால் சராசரி மனிதனாய் நகர்ந்து போகும் இந்த உலகில், அவர்களை ஒவ்வொரு நாளும் தேடி சென்று உணவளிப்பது மட்டுமல்லாமல், அதை உணவு என்று கூட தெரியாமல் தட்டிவிடவும் தள்ளிவைப்பவர்களுக்கும் தன் கையாலேயே ஊட்டியும் விடும் இவர்  ஆயிரத்தில் ஒருவன் அல்ல லட்சத்தில் ஒருவன் என்று கூட சொல்லலாம், பின்னல் வரும் காரணங்களுக்காக.

நாராயணன் கிருஷ்ணன்(29) - இந்த பெயர் இன்று உலகம் பூராவும் உச்சரிக்கப் படுகிறது. காரணம் உங்களில் சிலருக்கு தெரிந்து இருக்கலாம். தெரியாதவர்களுக்கு இதோ...

நாராயணன் ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தலைமை சமையல்காரர் (Chief Chef). அதுமட்டுமில்லாமல் தன் தொழிலில் பல பதக்கங்களை குவித்தவர். Swiss நாட்டில் தனக்கு கிடைத்த வேலையில் சேருவதற்கு முன் தன் சொந்த ஊருக்கு செல்வதற்காக ரயில் நிலையம் வந்தவர் அங்கு பிளாட்பாரம் ஓரத்தில் புத்தி பேதலித்த பெரியவர் ஒருவர் தன் மலத்தையே தான் எடுத்து தின்னும் அவலத்தை நேரில் கண்ட போது அதிர்ச்சியானார்(இதை எழுதும்போதே எனக்கு உமட்டல் வருகிறது என்பதை உண்மையுடன் ஒத்துக்கொள்கிறேன்).

என்ன நினைத்தாரோ, ரயில் பிடித்து ஊருக்கு சென்றவர் திரும்பவும் Swiss நாட்டுக்கு செல்லவேயில்லை. இனி தன் வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் இம்மாதிரி மனிதர்களுக்கு உணவளிப்பது ஒன்றே என்ற முடிவுக்கு வந்தார். அன்றிலிருந்து (2003 முதல்) இன்றுவரை பன்னிரண்டு லட்சத்திற்கும் அதிகமான உணவு பொட்டலங்களை தானே (தனது அக்சயா தொண்டு நிறுவனத்தின் மூலம்) சமைத்து பொட்டலம் கட்டி அதை ஒரு வேனில் எடுத்துக்கொண்டு ஊர் ஊராக தெரு தெருவாக மனநலம் குன்றியவர்கள் வயதானவர்கள் என எல்லோருக்கும் கொடுத்து உதவுகிறார்.

தற்போது இவரின் இந்த சேவையை பாராட்டி அமெரிக்க போன்ற நாடுகளில் பெருமளவு பார்க்கப்படும் CNN
தொலைக்காட்சி, தனி மனித சேவையில் உலகின் தலை சிறந்த மனிதரை (உலகில் ஒவ்வொரு நாளும் மாற்றத்தை கொண்டுவரும் - “everyday individuals who are changing the world”)  தேர்வு செய்ய அமைத்த கமிட்டி பரிந்துரைத்த 10, 000 நபர்களில் இருந்து முதல் பத்து பேரில் ஒருவராக நாராயணனை உலகில் 100 க்கு மேலான நாடுகளில் உள்ள CNN பார்வையாளர்கள் தேர்ந்தெடுத்து உள்ளார்கள்.

இதற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நவம்பர் 25 தேதி ஒரு விழா எடுத்து கவரவிக்கப்போகிறது CNN. அத்துடன் $ 25,000 பணமுடிப்பும் அளிக்கிறது. அதே நேரத்தில் தலை சிறந்த பத்து பேரில் ஒருவரை online voting மூலம் தேர்ந்தெடுத்து அவரை "CNN - Hero of the year" ஆக அறிவிக்கிறது. அப்படி அறிவிக்கப்படுபவர்க்கு 100, 000 அமெரிக்க டாலர்கள் பணமுடிப்பாக அளிக்கிறது.

நாராயணனின் தற்போதைய ஒரே கவலை, தங்களுக்கு கிடைக்கும் உதவிகள் மூலம் சராசரியாக ஒரு மாதத்திற்கு 22 நாட்களுக்கு மட்டும் தான் இம்மாதிரி ஆதரவற்றவர்களுக்கு உணவு அழிக்க முடிகிறது.

என்னுடைய ஒரே வேண்டுகோள் உங்களுக்கெல்லாம் என்னவென்றால், நம்மால் இந்தளவு ஒரு தியாக சிந்தனையுடன் வாழ்கையை அர்பணிக்க முடியாவிட்டாலும், பெரிய அளவில் பண உதவிகள் செய்ய முடியாவிட்டாலும் கூட கீழே உள்ள சுட்டி மூலம் நமது நாராயணனை தேர்வு செய்தால் அவர் CNN அறிவிக்கப்போகும் "Hero of the Year" ஆக தேர்வாகிவிட்டால் அவரின் தொண்டு உலக நாடுகளுக்கெல்லாம் தெரிவது மட்டுமில்லாமல் அவரின் இந்த பனி இன்னும் சிறப்பாக தொடர நாம் நமது பங்கை அளித்த மன நிறைவாவது கிடைக்கும்.

எனக்கு கீழே ஓட்டளிக்க நான் கேட்கவில்லை. ஆனால் இங்கு கிளிக் செய்து நாராயணனுக்கு ஓட்டளிக்க மறந்து விடாதீர்கள். நன்றி.

மேலும் விபரங்கள் ஆங்கிலத்தில் அறிய : இங்கே சொடுக்கவும்.

படம் நன்றி: The Hindu      
share on:facebook

Saturday, October 23, 2010

சும்மா அதிருதல!



சும்மா அதிருதல!

வலைப்பூவில் எழுத ஆரம்பித்து 10 வருடங்கள். 
வாரத்திற்கு குறைந்தது 250 முதல் 300 பதிவுகள்.
மாதத்திற்கு 10, 00, 000 ஹிட்டுகள்.
சென்ற வருடத்தில் ஒரே நாளில் மட்டும் 10, 00, 000 ஹிட்டுகள்.

என்ன சார் வாய பொளக்குறீங்க. அட போங்க சார். மாசத்திற்கு ஒரு பதிவு போடறதுக்கே இங்க தடுங்கினத்தம் போடறேன். இதல்லாம் Andrew Sullivan அவர்களின் சாதனைகள்.

பதிவுலகம், இணையத்தளம் என எல்லோரும் உபயோகப்படுத்த துவங்காத காலக்கட்டம் அது.  The Daily Dish என்று அவர் பிளாக் எழுத ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகின்றன. நேற்று அவருடைய பிளாக்கில் என்ன எழுதினார் என்று அவருக்கே ஞாபகம் இருப்பதில்லை. 

தனது 27 வது வயதில்  The New Republic என்ற நாளிதழில் ஒரு இளைய பத்திரிகையாளராக சேர்ந்த ஆண்டரு தான் எழுதும் விசயங்களை எல்லோரும் படிக்கும் வகையில் என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில் தான் தன்னுடைய techie நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவரிடம் தன்னுடைய ஆசையை வெளியிட அவரும் இவருக்காக ஒரு இணையதளத்தை உருவாக்கி அதில் பதிந்து கொண்டிருந்தார். சில காலம் கழித்து என்ன நினைத்தாரோ தன் பத்திரிக்கை நண்பரிடம் எனக்கு இதை விட முக்கியமான வேலைகள் இருக்கிறது. பிளாக்கர் பிளாகிங் என புதிதாக ஒன்று வந்துள்ளது. அதில் எப்படி பதிய வேண்டும் என சொல்லித் தருகிறேன். நீங்களே போட்டுக் கொள்ளுங்கள் என கூறிவிட்டார். அப்படி எழுத ஆரம்பித்ததுதான் இன்று உலகில் அதிகம் வாசிக்கப்படும் ஒரு வலைதளமாக The Daily Dish மாறி உள்ளது.

தான் எழுதும் கட்டுரை மற்றும் எதுவாக இருந்தாலும் அதை படிக்கும் வாசகர்கள் அதற்கு  உடனே கமென்ட்/விமர்சனம் போட்டு அதை தானும் படிக்கும் வாய்ப்பை இந்த வலைதளம்  வழங்கியதை பார்த்து வியந்து போன Sullivan அதை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இனி எதிர்காலத்தில் பத்திரிக்கைகளை விட இது தான் பிரபலமாக போகின்றன என அறிந்து கொண்டார். அன்று முதல் இன்று வரை அவரின் வலைதளத்தில் எழுதியதை நிறுத்தவில்லை. வருடத்திற்கு இரு வார விடுமுறை எடுத்துக் கொள்வதை தவிர. 

நாமெல்லாம் நாளுக்கு ஹூஹூம் வாரத்திற்கு ஒரு பதிவு போடவே தினறிக்கொண்டு இருக்கும் போது,  
வார நாட்களிலும், வார இறுதிகளிலும் குறைந்தது இருபது நிமிடத்துக்கு ஒரு முறை தன் பிளாக்கில் எழுதும் இவர், உண்மையில் அவரின் வலைத்தளத்தில் உருவாகும் traffic மற்றும் update களை சமாளிக்க முடியாமல் தினமும் திணறுகிறார்.

ஒரு பதிவை போட்டுவிட்டு ஒரு மணி நேரத்துக்கொருமுறை ஓபன் செய்து ஏதும் கமென்ட் வந்திருக்கான்னு நாம பார்துக்கிட்டுருக்கோம். இவரோ
தற்போது நான்கு பேர் கொண்ட சிறு குழுவை அமர்த்தி தன்னுடைய பிளாக்கை பராமரித்துக்கொண்டலும் இவருக்கு பின் 
என்னாகும் என்று இவரின் follower ஒருவரிடம் கேட்டால் "If Andrew dies, it dies" என எழுதி இருக்கிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியலில் ஆர்வம் காட்டி எழுதி வரும் Sullivan தான் ஒரு அரசியல் அநாதை என்கிறார்.

அப்பாடி, Sullivan புண்ணியத்தில் இன்று நான் ஒரு பதிவு போட்டாகிவிட்டது.
share on:facebook

Sunday, October 17, 2010

கதை அல்ல நிஜம்...

இன்று காலை எழுந்ததும் அநேகமாக எல்லோரும் அவர்களின் குல தெய்வங்களை நிச்சயம் கும்பிட்டிருப்பார்கள். இந்தியாவின் தென் மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் சூலூர்பேட்டா என்கிற ஒரு சிறிய நகரத்திற்கு அருகில் இந்தியாவின் ஏவுகணை ஏவும் தளமான ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து முதல் முதலாக நிலவிற்கு மனிதரில்லாத ஒரு உயரினத்தை ஏவுகணையில் வைத்து  அனுப்ப எல்லாம் தயார் நிலையில் உள்ளது. சரியாக காலை 10:10 விண்ணில் சீறிப்பாய எல்லா ஏற்பாடுகளும் தயார். மற்ற எல்லோரைவிடவும் எனக்கு டென்ஷன் அதிகம் இருப்பதில் ஆச்சிர்யம் ஒன்றுமில்லை. ஏனெனில் நான் தான் அந்த பிராஜக்டின் தலைமை பொறியாளர்.


நேரம் 10:00 மணி. ஏவு தளத்தில் எல்லாவற்றையும் ஒரு முறை சுற்றி வந்து, தலைமை விஞ்சாநியிடம் என்ன சார் எல்லாம் ரெடி தானே 10:09 கவுன்ட் டவுன் ஸ்டார்ட் பண்ணிடலாம்ல என கேட்டேன். கண்டிப்பாக சார். எந்த பிரச்னையும் இல்ல. எல்லாம் சரியாய் போய்கிட்டு இருக்கு என்றார். வெரி குட் என்றபடியே எல்லா விஞ்சாநிகளும் அமர்திருந்த வட்ட வரிசையில் நாடு நாயமாக சென்று என்னுடைய இருக்கையில் அமர்ந்து எதிரே மிக பெரிய திரையில் வட்டமும் புள்ளியுமாய் தெரியும் பிரபஞ்சத்தின் வரைபடங்களை மேய்ந்து கொண்டிருந்தேன்.

அடுத்த ஓரிரு மணித்துளிகளில் தலைமை கண்காணிப்பாளரின் அறிவிப்பை தொடர்ந்து ஏவுகணை செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் ஸ்டார்ட் ஆகியது. 10.. 9.. 8.. 7.. 6.. 5.. 4.. 3.. 2.. 1.. 0 FIRE என்ற அடுத்த நிமிடம் எல்லோரும் சற்று அண்ணாந்து பார்க்க ஆரம்பித்தார்கள். ஏவுகணையின் அடியில் வெளியான நெருப்பிற்கும் அதனுடைய சூட்டிற்கும் சற்றும் எதிர்பார்க்காத அளவில் ஏவுகணை மேலே எழும்பவேயில்லை. ஒரு கணத்தில் அனைவரின் முகமும் சுண்டி ஒருவரை ஒருவர் ஒரு வித இலாமை பார்வையுடன் பார்த்துக்கொண்டனர். ஏன், எப்படி, என்ன ஆச்சு...எங்கும் கேள்விகள். சரியான பதில் தான் இல்லை.
 
கவலை தோய்ந்த முகத்துடன் எதிரில் தெரிந்த திரையையும், ஒருவருக்கொருவர் குழுமி குழுமி பேசிக்கொள்வதையும் பார்த்துக்கொண்டு செய்வதறியாது நின்றுகொண்டிருந்த பொழுதுதான் சற்று கார 
சாரமான சத்தமும் யாரோ யாரையோ அதட்டும் சத்தமும் கேட்டு அங்கு என்ன நடக்கிறது என அறியும் பொருட்டு எனது இருக்கையை விட்டு எழுந்து அங்கு சென்றேன். 
 
என்ன சார்? என்ன இங்கு சத்தம். என்ன நடக்கிறது இங்கே?
 
சார் நாம்ப எல்லோரும் உங்களையும் சேர்த்து ஏவுகணை கிளம்பாததற்கு என்ன காரணம்னு முழிச்சிக்கிட்டு இருக்கோம். ஒன்னுமே புரியலை. இவரு நம்ம டிபார்ட்மெண்ட சுத்தம் பண்றவரு. இவரு ஏவுகணை கிளம்ப ஐடியா சொல்றாராம். கேளுங்க சார் ஜோக்க என்று ஒரு பொறியாளர் கூறியவுடன் அங்கிருந்த நிலைமையையும் மறந்து எல்லோரும் சிரித்து விட்டார்கள். 
 
சார் எல்லோரும் சற்று அமைதியா இருக்கிங்களா? யாரையும் கொறச்சி எடை போட கூடாது. 
 
ஹல்லோ என்னோட என் ஆபிஸ்க்கு வாங்க என்றபடியே அவரை அழைத்துக்கொண்டு என் அறையில் நுழைந்து கதவை மூடிக் கொண்டேன்.     
 
இப்ப சொல்லுங்க மிஸ்டர் ...
 
சார் என் பேரு பெருமாள்,...
 
ஓகே பெருமாள். இப்ப நீங்க இங்க என்ன பண்றீங்க ஏதுன்லாம் கேக்க எனக்கு டயம் கிடையாது. சொல்லுங்க எப்படி அந்த ஏவுகணையை பறக்க வைக்கலாம்?
 
சார் அது வந்து....
-------------------------
-------------
------
 
என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு? அப்படி செஞ்சா ராக்கெட் பரந்துடுமா?
 
கண்டிப்பா சார். ஒரு வாட்டி ட்ரை தான் பண்ணுங்களேன்.
 
இறுதியாக மிஸ்டர் பெருமாள் கூறியபடி ஒரு காரியத்தை செய்தவுடன் ராகெட் எல்லோரும் அண்ணாந்து பார்பதற்குள் வின்னிர்க்கே  சென்று மறைந்து விட்டது.
 
அப்படி என்ன தான் மிஸ்டர் பெருமாள் ஐடியா சொல்லி இருப்பார். முடிந்தால்/தெரிந்தால் பின்நூட்டத்தில் போடுங்களேன்.

                                               **************************

சொல்லுங்க மிஸ்டர் பெருமாள். எங்களால நம்பவே முடியல. நீங்க சொன்னபடியே ராகெட்ட கீழ கொஞ்சம் சாய்த்து  மேல தூக்கினவுடன் உடனே  மேலே கிளம்பிடுச்சே!

நாங்க எல்லோரும் என்ன செய்யறதுன்னு தெரியாம தவிச்சிக்கிட்டு இருந்தப்ப உங்களுக்கு மட்டும் எப்படி இந்த ஐடியா வந்துச்சு?

சார். எங்க கிராமத்துல எங்க ஸ்கூல் வாத்தியார் கிட்ட மட்டும் தான் ஸ்கூட்டர் ஒண்ணு இருந்துச்சு. அத அவர் எப்ப ஸ்டார்ட் செஞ்சாலும் ஸ்டார்ட் ஆகாது. உடனே அத கீழ ஒருபுறமா சாய்த்து  பிறகு நிமிர்த்தி ஒரு உதை விட்டார்னா உடனே வண்டி கிளம்பிடும். அதே டெக்னிக்க  தான் நான் இங்கயும் உங்ககிட்ட சொன்னேன். அது வொர்க் அவுட் ஆயிடுச்சு. அவ்வளவுதான்.

                                                   **************************



ஐயோ... அடிக்க வரீங்களா. உடு ஜூட். 

அப்புறம் இது நிஜம் அல்ல கதைதான். மிகச் சரியா கணிச்ச Anonymous க்கு வாழ்த்துக்கள். 

//Anonymous said... ஒரு 45 டிகிரி சாய்த்து கொஞ்ச நேரம் கழித்து அப்பாலிக்கா கெளப்பு சாமி.....ஜோரா கெளம்பும்...//
share on:facebook

Thursday, October 14, 2010

எல்லோர் கையிலும் A. K. 47. . .

கணவன் மனைவி மட்டும் தனியாக இருந்த ஒரு வீட்டில் நள்ளிரவில் உள்ளே புகுந்த திருடன் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து கணவனை மிரட்டுகிறான். மரியாதையாக பீரோவை திறந்து அதிலுள்ள நகை பணம் எல்லாவற்றையும் எடுத்து கொடு. இல்லைனா உன் மனைவியின் சங்கை அறுத்து விடுவேன் என பயமுறுத்துகிறான். கணவனுக்கு வேறு வழி தெரியவில்லை. சரி நான் எல்லாத்தையும் எடுத்து கொடுத்துடுறேன். பீரோவோட சாவி மாடியில இருக்கு. நான் போய் அத எடுத்துட்டு வந்துடுறேன். அதுவரைக்கும் என் மனைவிய ஒண்ணும் பண்ணிடாதனு கெஞ்சிக் கொண்டே மாடிப்படிகளை நோக்கி ஓடினார்.

சற்று நேரத்தில் திரும்பி வந்தவரை பார்த்த திருடனுக்கு தேள் கொட்டியதை விட அதிகமாக உடல் உதறியது. ஐயோ சாமி. என்ன விட்டுடுங்க. எனக்கு ஒண்ணும் வேணாம். நா ஓடிடுறேன் என கத்திக்கொண்டே திரும்பி பார்க்காமல் ஓடினான்.

கைல கத்தி வச்சுக்கிட்டு மிரட்டியவன் ஓடியதற்கு காரணம், திரும்பி வந்தவரின் கையில் இருந்த A.K. 47 தான் காரணம். அதெப்படி சாதாரணமான ஒருத்தவரிடம் A.K. 47 இருக்கும்னு நீங்க கேக்கறது காதுல விழுது. நான் சொன்ன சம்பவம் ரசியாவில நடந்தது. அங்க நடந்திருந்தா கூட அந்த வீட்டுகாரர் வச்சிருந்தது நிஜ A.K. 47 அல்ல. அது ஒரு inflatable fake A.K. 47. கையில் வைத்து மூடிக்கொள்ளும் அளவிற்கு உள்ள ஒரு சிறிய பலூன் போன்ற பொருளில் காற்றை நிரப்பினால் நிஜ A.K. 47 போலவே அது inflate ஆகி தோற்றமளிக்கும்.

மேலே நீங்கள் படித்தது inflatable weaponary பற்றி நானே உருவாக்கிய கதை. இனி வருவது அனைத்தும் உண்மை. சந்தேகமிருந்தால் கீழே உள்ள u-tube லின்க்கை கிளிக் செய்யுங்கள்.

ரசியாவில் உள்ள ஒரு கம்பெனி artificial/fake inflatable weaponary அதாவது நிஜ ஆயுதங்கள் போலவே தோற்றமளிக்கும் டம்மி ஆயுதங்களை அதுவும் ஒரு பையில் வைத்து அடக்கி கொள்ளும் அளவிற்கு ஆன பிளாஸ்டிக் பேக்கை காற்றடித்தால் ஒரு மிக பெரிய பீரங்கி வண்டியாக மாறும்படி வடிவமைத்திருக்கிறார்கள். இது என்ன பெரிய விஷயமான்னு நீங்க நினைக்கலாம். அனால் நீங்கள் நான் மட்டுமல்ல எதிரி நாட்டு உளவு விமானங்கள் மற்றும் ரேடார்கள் ஸ்கேன் பண்ணும்போது கூட இது ஒரிஜினல் பீரங்கி டாங்கர்கள் போல தோற்றமளிக்கும் வகையில் அதனுடைய நிறம் மற்றும் குணத்தை அமைத்திருக்கிறார்கள். எதிரி நாட்டு ரேடார்கள் லேசர் ஸ்கேன் செய்து உளவு பார்க்கும் போது கூட ஒரிஜினல் பீஸ் போலவே ரிப்போர்ட் வரவழைக்கும் வகையில் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள்.

இதனால் என்ன பலன் என்று நீங்கள் கேக்கலாம். ஒரு பீரங்கி வாங்கும் காசிற்கு ஓராயிரம் inflatable fake பேரங்கிகளை வாங்கி பாகிஸ்தான் பார்டரில் நிறுத்தினால் எட்டி பார்க்க கூட அவர்கள் பயப்பிடுவார்கள மாட்டார்களா? சரி இது மாதிரி தொழில் நுட்பம் சீக்கிரத்தில் எல்லா நாட்டிற்கும் வந்துவிடுமே என்றால் யாராலும் எது நிஜம் எது பொம்மை பீரங்கி என கண்டு பிடிக்க முடியாத போது அது பொய்னு தைரியமா சண்டைக்கு போய் அது உண்மையான பீரங்கியா போயடுச்சுனா அப்புறம் நஷ்டம் யாருக்கு?

பொய்யான பீரங்கிகள் மட்டுமல்ல, பொய்யான கண்காணிப்பு டவர்கள், ரேடார்கள் பீரங்கி மற்றும் பீரங்கி வண்டிகள் என எல்லாத்தையும் தயாரித்து இருக்கிறார்கள். உண்மையில் அது எப்படி இருக்கும் என பார்க்கவேண்டுமா? இங்கே சொடுக்குங்கள்.

நன்றி YouTube.
share on:facebook

Wednesday, October 6, 2010

"ஆ" மெரிக்கா

      
அமெரிக்கா, அமெரிக்கானு நாம் அமெரிக்காவை பற்றியும் அமெரிக்கர்களை பற்றியும் வாயை பிளந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் நம்மை பார்த்து நம்மை விட அதிகமாக வாயை பிளப்பதும் உண்டு.

வேற எதுக்கு?

1. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி பேசப்படுவது பற்றி கேள்வி படும்போது.

    இங்கு அமெரிக்காவில் ஆங்கிலம் ஒரு மொழி தான் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் பேசப்படும் மொழி. 

2. இந்தியாவில்  பெரும்பாலான திருமணங்கள் பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்கப்படுகிறது என அறியும்போது.

   அமெரிக்காவில் இது மிகவும் அரிது. பிள்ளைகள் தாங்களே தங்களது துணையை தேடிக்கொண்ட பிறகு கல்யாண நாள் நேரம் குறித்துவிட்டு அதை சர்வ சாதாரணமாக தங்கள் பெற்றோரிடம் தெரிவிப்பது தான் இங்குள்ள பழக்கம்.

3. இந்திய குழந்தைகள் பெற்றோருடன் சேர்ந்து ஒரே அறையில் தூங்குவார்கள் என்று சொன்னால்.

   இங்கு பிறந்து சில நாட்களிலேயே குழந்தைகளை தனியாக படுக்க வைத்துவிடுவார்கள். சற்று பெரிய குழந்தை ஆனவுடனேயே தனி படுக்கை அறை ஒதுக்கி அதில் தனியாக தூங்க பழக்கிவிடுவார்கள்.

4. இந்தியாவிலிருந்து வரும் LKG மற்றும் முதல் வகுப்பு படித்த குழந்தைகள் கூட அழகாக ஆங்கில எழுத்துக்களை கோர்த்து எழுதுவது cursive writing பார்க்கும் போது.

    இங்கு மெத்த படித்தவர்களின் கையெழுத்து கூட நம்மூரில் மூணாம் கிளாஸ் படிக்கும் குழந்தையின் கையெழுத்தை விட மோசமாக இருக்கும்.  

5. நம்மூரில் வீட்டு பாடம் செய்யாவிட்டாலோ பெயில் ஆகிவிட்டாலோ பள்ளியில் அடி பின்னுவார்களே. இதை சொன்னாலே என்னமோ அவர்களை அடித்தது போல் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள் இங்கு.

   இங்குள்ள பள்ளிகளில் அடி உதை (corporate punishment) என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.

6. இந்திய பெண்கள் கட்டும் சேலையும் அதன் நீளம் மற்றும் அதை பெண்கள் கட்டும் விதத்தையும் கண்டு வாயை பிளப்பார்கள்.

7. நாம் கும்பிடும் நூற்றுக் கணக்கான தெய்வங்களையும், ஒவ்வொரு சாமியின் பெயரையும் உருவத்தையும் நாம் ஞாபகம் வைத்து கொள்வதை பார்த்து "ஆ" என வாயை பிளப்பார்கள்.

8. நம்மூரில் போலீஸ் லஞ்சம் வாங்குவது மிகவும் சகஜம் என தெரியும் போது...

   இங்கு லஞ்சம் என்பது பெரும்பாலும் கிடையாது. அப்படியே இருந்தாலும் போலீசிடம் "ஊஹூம்" தப்பி தவறி நீங்கள் கொடுக்க முயன்றால் கூட உங்களுக்கு சங்கு தான். 

9. நாம் சாப்பிடும் கார உணவு வகைகளை பார்த்தால்.

   தப்பி தவறி ஒரு மிளகை இந்திய உணவில் சாப்பிட்டு விட்டால் கூட  இவர்கள் பத்து கோக் குடித்து விடுவார்கள்.     

10. வேற என்ன...இன்னும் நம்மூர் சங்கதி எத பத்தி சொன்னாலும் வாயை தான் பிளக்க போகிறார்கள். 

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு. அவ் அப்போது மோகன் குமார் போன்றோர்கள் தரும் ஊக்கம் ஒரு முக்கிய காரணம்.  நன்றி மோகன் குமார்.
share on:facebook

Monday, June 14, 2010

ஒரு உயர்ந்த காதல் ...

எவ்வளவு நாளாக அவளை உங்களுக்கு தெரியும்?

நான் சுமார் இரண்டு வருடங்கள் மூன்று மாதங்களாக தினமும் அவளை பார்த்து வருகிறேன்.

அவளுடைய பெயர் என்ன?

நான் அவளுக்கு வைத்த பெயர் விண்டி (Windy)

அவள் என்ன கலர்?

நல்ல வெள்ளை நிறம்.

அவளை அருகிலிருந்து பார்த்ததுண்டா?

இல்லை அதற்கான வாய்ப்பு எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. எனது அலுவலகத்தின் நான்காவது மாடியில் இருந்து பார்த்தால் அவள் தெரிவாள்.

ஒரு நாளைக்கு எத்தனை முறை பார்ப்பீர்கள்?

அவளை ஒரு நாள் கூட நான் பார்க்காமல்  இருந்ததில்லை. தினமும் அலுவலகம் நுழையும் முன்னும் பிறகு வீட்டிற்கு திரும்பும் முன்பும் கண்டிப்பாக அவளை பார்க்காமல் போனதில்லை. சில நேரங்களில் அவளை பார்க்க வேண்டும் போல் தோணும். உடனே ஓடி வந்து எட்டி பார்த்து விட்டு போய் விடுவேன்.

உங்கள் நண்பர்களுக்கு அவளை தெரியுமா?

ஓ... நான் எல்லோருக்கும் அவளை காண்பித்துள்ளேன். ஒன்று தெரியுமா? அவளை பார்த்த முதல் நாளிலுருந்து ஒவ்வொரு வருட முடிவிலும் நான் அவளுக்காக நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி வருகிறேன்.

இன்னும் எத்தனை நாட்கள் அவளை பார்த்துக் கொண்டிருப்பதாக எண்ணம்?

எனக்கு தெரியாது. இன்னும் சில நாட்கள் அல்லது மாதங்கள் ஏன் வருடங்கள் கூட பார்த்துக்கொண்டே இருக்கலாம்?

அவள் உங்களை விட்டு விலகி விடுவாள் என்று நினைக்கிறீர்களா?

தெரியவில்லை. ஒருவேளை இரண்டு வருடங்களுக்கு முன் அடித்தது போல் ஒரு மிக பெரிய காற்று அடித்தால் அவள் தற்போது தொங்கிக்கொண்டிருக்கும் மரத்திலிருந்து பறந்து போக வாய்ப்புண்டு.

காற்றடித்ததினால் பறந்து வந்து ஒரு மரக் கிளையில் தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு பிளாஸ்டிக் பையை இரண்டு  வருடங்களாக தொடர்ந்து பார்த்துக்கொண்டு அதற்காக ஒவ்வொரு வருடமும் ஒரு கேக் வெட்டி கொண்டாடும் உங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எனக்கு தெரியும். இது ஒரு மிக பெரிய கிறுக்கு தனம் என்று. ஆனால் ஏதோ ஒரு ஈர்ப்பு எனக்கு அந்த பையின் மேல் ஏற்பட்டுவிட்டது.

நன்றி Kathy Fedrick அவர்களே. எங்கள் வானொலி நிலையத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்து உங்கள் (பை) காதல் கதையை பகிர்ந்து கொண்டதற்கு.

மேலும் விபரங்களுக்கு...

ஒண்ணும் இல்லங்க. அமெரிக்காவில் ஒரு FM வானொலியில் நேயரிடம் எடுக்கப்பட்ட பேட்டி இது. இதெல்லாம் அமெரிகாவில் சகஜமுங்க.
share on:facebook

Friday, June 11, 2010

இதுதாண்டா போலீஸ்...

நான் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் சென்று வந்து கொண்டிருக்கிறேன் (குறுகிய மற்றும் நீண்ட காலம் அங்கு தனியாகவும்/குடும்பத்துடன் வாழ்ந்தும் இருக்கிறேன்). அங்கு நான் கண்ட அதிசயங்களை! ஒரு பதிவாக போட வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அமெரிக்காவை பற்றி பலர் தவறான கருத்தை கொண்டிருப்பது எனக்கு தெரியும். அதில் சில உண்மைகளும் உண்டு. என்னை பொறுத்தவரையில் உலகில் எல்லா இடத்திலும் நல்லதும் உண்டு, கெட்டதும்  உண்டு. நல்லவைகளை முதலில் பார்ப்போமே?

அதிசயம் - I.


1. போக்குவரத்து/வாகன ஓட்டும் முறைகள்:

உலகத்தில் எனக்கு தெரிந்து லஞ்சமே வாங்காத போலிஸ் என்றால் அது அமெரிக்காவில்தான் இருப்பார்கள் என நினைக்கிறேன். ஒருவேளை யாராவது ஒருத்தர் அப்படி லஞ்சம் வாங்கினால் அது லட்சத்தில் ஒருவராக இருந்தாலே அது அதிசயம் தான். அதுபோல் இங்கு போக்குவரத்து/சட்டம் ஒழுங்கு என காவலர்களை பிரிப்பதில்லை. எல்லோருமே COPS தான். அவரே திருடனையும் பிடிப்பார். அவரே போக்குவரத்து பிரச்சனைகளையும் கையாள்வார்.  

2. வாகனம் ஓட்டுனர் உரிமை:

நம்ம ஊரில் பத்தாவது பாஸ் பண்ணுவது எப்படி முக்கியமோ அது போல் அமெரிக்காவில் 18  வயது ஆனவுடன் ஓட்டுனர் உரிமை (License) எடுப்பது என்பது மிக முக்கியமான ஒன்று ஆகும். அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இங்கு யாரும் யாரையும் சார்ந்து (depend) ஆகி வாழ முடியாது. மாணவர்கள் பொதுவாக வெளி ஊர்/வெளி மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் சேரும் போது அவர்களுக்கு கார் ஓட்ட தெரிவது  நிச்சயம் தேவையான ஒன்று.

3.Department of Motor vehicles(DMV = நம்மூர் RTO office):

அடுத்து   ஓட்டுனர் உரிமை (License)  பெறும் நடைமுறை. நம்மூர் போல் இங்கு காசு கொடுத்தால் RTO அலுவலகம் போகாமலே ஓட்டுனர் உரிமை பெற்று விட முடியாது. முறையாக ஓட்டுனர் பயிற்சி புத்தகத்தை (Driver's handbook) படிக்காமல் எழுத்து தேர்வு எழுத சென்றால் பத்து வருடம் அமெரிக்காவில் கார் ஓட்டியவர் கூட தோல்வி அடைய வாய்ப்புண்டு. முதலில் எழுத்து தேர்வில் தேர்வாகிவிட்டால் பின் வாகனம் ஓடும் தேர்வு (road test) நடைபெறும். இங்கும் முறையாக RTO பக்கத்தில் உட்கார்ந்து இருக்க அவர் எதிர்பார்ப்பதுபோல் முறையாகவும் பாதுகாப்பாகவும் வண்டியை ஒட்டி காண்பித்தால் மட்டுமே நீங்கள் தேர்வு பெற முடியும். இல்லையென்றால் நீங்கள் ஒபாமாவின் மகளாக இருந்தால் கூட வாழ்க்கையில் லைசென்சே எடுக்கமுடியாது.

4. சாலை விதிகள்:

சாலை விதிகளை கடைபிடிப்பதில் இவர்களை அடித்துக்கொள்ள உலகில் யாரும் இல்லை. இந்தியாவில் சைக்கிள் ஓட்ட தெரியாதவர்கள் கூட இங்கு கார் ஓட்ட முடியும். கார் ஓட்டுவது இங்கு அவ்வளவு எளிது. அதே சமயம் சாலை விதிகளை ஒருவர் கடை பிடிக்கவில்லை என்றாலும் மிகப்  பெரிய  விபத்துக்கள்  நடக்க  வாய்ப்புண்டு.

ஒரு சிறிய எடுத்துக்காட்டு:

நாலு ரோடுகள் சந்திக்கும் சாலையில் சிக்னல் இல்லையென்றால் நான்கு புறமும் STOP சைன் போர்டுகள் இருக்கும். யாராக இருந்தாலும் அந்த போர்டுக்கு முன்னாள் வாகனத்தை கண்டிப்பாக நிறுத்தி தான் பிறகு செல்ல வேண்டும். யார் முதலில் வந்தார்களோ (எந்த பக்கமாக இருந்தாலும்) அவர்கள் தான் (first come first go) முதலில் சாலையை கடக்கலாம். இரவு பன்னிரண்டு மணிக்கு ஆள் அரவமே இல்லையென்றாலும் இந்த மாதிரி ஒரு சந்திப்பில் வாகனத்தை நிறுத்திவிட்டு தான் பிறகு எடுப்பார்கள்.

5.  அவசர கால சேவை:

அடுத்து அவசர கால சேவை வண்டிகள்: இங்கு ambulance சேவை பாராட்டத்தக்க ஒன்று. நீங்கள் போனை எடுத்து அவசர அழைப்பு என்னை 911 அழுத்தினால் போதும். போன் மூலமாக 5 வயது சிறுவன் கூட அம்மாவுக்கு பிரசவம் பார்க்கும் அளவுக்கு அவனுக்கு உயிர் காக்கும் வழிமுறைகளை கூட கூறிக்கொண்டே அடுத்த சில நிமிடங்களில் உங்கள் வீட்டுக்கு முன் ஆம்புலன்சை கொண்டு வந்து நிறுத்தி விடுவார்கள். அதே போல் ஒரு ஆம்புலன்ஸ் ரோட்டில் சைரன் அடித்துக்கொண்டு போனால் யாராக இருந்தாலும் அதற்க்கு வழி விட வேண்டும். இல்லை என்றல் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும். நம்மூர் மாதிரி யானை கூட்டத்தில் அகப்பட்டுக்கொண்ட கோழிக்குஞ்சு போல மற்ற வாகனங்களிடம்
வழி கேட்டு கெஞ்சாது.

நல்லவைகள் தொடரும்...
share on:facebook

Saturday, May 1, 2010

ஏன் எதற்கு எப்படி?

படிச்சவங்களாம் அரசியலுக்கு வரணும்கறத தப்பா புரிஞ்சுக்கிட்டு இப்ப பல கல்வி வள்ளல்கள் கட்சி தொடங்க ஆரம்பிச்சுட்டாங்க. சரி அவங்கதான் அவங்க பொழப்ப மறந்துட்டாங்க. நம்மளாவது மக்களுக்கு கொஞ்சம் பொது அறிவ வழங்கலாம்னு தோனுச்சு அதான் இங்க சில பொது அறிவு கேள்விகள் உங்களுக்கு.

கூகுல் (google) பண்ணாம கொஞ்ச உங்க பொது அறிவு திறன் பெட்டகத்த திறந்து பாருங்களேன்.

சரியான விடைகளை (யாரும் சொல்லலைனா) கடைசியில பின்னூட்டமா நாளைக்கு போடறேன்.  

1. What is Achilles heel?
It is used to mention a person's weak point.
2. From where the word "Atlas" derived?
"Atlas" is a greek God who bears the world on his shoulder. So the book of maps is named after him.
3. Which bone is called as Funny bone and Why?
The bone from your shoulder to your elbow is called funny bone because its scientific name is humerous.
4. What is the first name of shakespear?
William
5. The biggest number in mathematics is called as? 
Centillion - In British centillion has 600 zeros, but in US it has 303 zeros.
6. The sum of opposite sides of a die is always ....
Always 7.
7. Why and how the chess game was invented?
When a King's son died in a war he was so sad and seeing this a genious invented a game to show him that wars are common and you lose kingdom/people.
8. What is Achilles tendon?
Achilles is a greek warrior who fought in the Trojan war. His mother was an angel and she dipped Achilles in a holy river so that he will become an immortal person but since she held his legs while dipping him in the river his ankle never got solemnized.


When he fought in the Trojan war one of the enemy's arrow hit his ankle and he died as that part of his body was not solemnized. So he died in the war. Achilles heel was
9. Which is the shortest word in English that contains all the vowels?
Aerious means airy
10. Do you believe all these are from aathimanithan's moolai?
No. It is all my daughter's question over a week after reading her school book
share on:facebook

Thursday, April 29, 2010

வந்துட்டான்யா வந்துட்டான்...

சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் உங்களை எல்லாம் சந்திக்கப் போவதில் உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சிதான்.

உங்களுக்கு எப்படி...?!
share on:facebook

Wednesday, March 3, 2010

ரஞ்சி (கொஞ்சி) தா Vs நித்யம் ஆனந்தம்

தினமலர் செய்தி: சாமியாருடன் நடிகை ரஞ்சிதா படுக்கை அறை காட்சிகள்; நாடு முழுவதும் பரபரப்பு.

நண்பர்கள் தங்கள் கருத்தை பதிய அழைக்கிறேன். நன்றி - ஆதி மனிதன்.
share on:facebook

Friday, February 26, 2010

அஜீத் ஒரு தும்பை மலர் - கருணாநிதி புகழாரம்.

திரைத்துறையினருக்கு கருணாநிதி வேண்டுகோள் -   கட்டுப்பாடு காக்க வேண்டும்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை.

..............அழகான குழந்தையை மேலும் அலங்கரித்து பள்ளிக்கு அனுப்பும் தாய், அதன் கன்னத்தில் ஒரு சிறிய கறுப்பு பொட்டு வைத்து அனுப்புவதைப் பார்க்கிறோமே, அதைப் போன்றதொரு பொட்டு, அந்த விழாவில் வைக்கப்பட்டதைப் பெரிதுபடுத்தி, அந்தப் பொட்டின் வண்ணத்தை முகம் முழுவதும் பூசிக்கொள்ளும், புரியாத குழந்தையைப் போல ஒரு நிகழ்ச்சி அமைந்துவிட்டது உண்மை தான்.


எல்லாரும் வாழ்த்துரைத்து அள்ளித் தெளித்த அன்பு மலர்களுக்கிடையே, அஜித் எனும் தும்பை மலரும் என் மேல் விழுந்து, அது மாசற்ற மலர் எனினும், எனக்கு நடந்த விழாவுக்கு எதிராக விழுந்த மலரோ என்ற சந்தேகத்தை எழுப்பியது. "இது தான் சமயம்' என சிலர், எனக்கு நடந்த விழாவை திசை திருப்ப முயன்றனர். இருக்கவே இருக்கின்றனவே சில பத்திரிகைகள், அவை அதைப் பூதாகரமாக உருவாக்க முனைந்தபோது, அதை மேடையேற விடாமல், ஒத்திகையிலேயே ஒரு வழி செய்து, முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக, தம்பி அஜித் என் னைச் சந்தித்து விளக்கமளித்தார். கடைசியில், பெரிதாக வெடிக்கப் போகிறது என எதிர்பார்த்தவர்களுக்கு புஸ்வாணமாகி விட்ட கதையாயிற்று. தாம் கண்ட கனவு கலைந்ததே என கைபிசைந்து நிற்கின்றனர். இனி எவர் ஒருவரும் கலையுலகில் சிறு கலகம் விளைவிக்கவும் முடியாது என, கட்டுப்பாடு காப்பார்களேயானால், அது, அவர்கள் நடத்திய விழா தந்த மகிழ்ச்சியை விட பெருமகிழ்ச்சியாக அமையும். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இவர்  என்னதான்  சொல்ல  வருகிறார்? வஞ்ச புகழ்ச்சி அணி கேள்வி பட்டிருக்கிறேன். இது எந்த அணியை சாரும் என யாரும் கூறினால் அவர்களுக்கு என் நன்றி.
share on:facebook

Monday, February 22, 2010

Be Happy - "இதயம் காக்க" மகிழ்ச்சியாக இருங்கள்.

சமீபத்தில் சென்னை பள்ளி ஒன்றில் நடந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பு உரை ஆற்றிய இருதய மருத்துவ நிபுணர் Dr. V. சொக்கலிங்கம் அவர்களின் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. மருத்துவராக பனி புரியும் ஒருவர் சுமார் ஒரு மணி நேரம் அங்கு கூடி இருந்த அணைத்து தரப்பினரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அளவு பேசியது எனக்கு பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. இனி அவர் பேசியதிலிருந்து...


எப்போதும் நாம் கவலை இன்றி இருக்க வேண்டும். கவலைபடுவதால் ஒன்றும் நடந்து விட போவதில்லை. நீங்கள் ஈஸ் (ease) ஆகா இருந்தால் உங்களுக்கு disease வராது. 

என்னைப் பொறுத்தவரை நான் ஜாதி, மதம், மொழி ஆகியவற்றை மனிதர்களிடம் பார்ப்பதில்லை. நான் மனிதர்களை பிரித்துப் பார்ப்பது அவர்களின் ரத்த  வகையை வைத்துதான். எல்லோரும் விரும்பும் ரத்த வகை O+.  அப்போதுதான் நீங்கள் எல்லோருக்கும் உங்கள் ரத்தத்தை தானம் செய்யலாம். நான் உங்களுக்கு எல்லாம் சொல்ல விரும்புவது என்னவென்றால் நீங்கள் எந்த ரத்த வகையை சேர்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் பீ பாசிடிவ் (B+) ஆக மாறுங்கள்.

இதை நான் சொல்லக்கேட்டு நீங்கள் எல்லோரும் கை தட்டுகிறீர்கள். எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. நீங்கள் கைதட்டுவதால் உங்களை சந்தோசமாக மட்டுமில்லாமல் நல்ல ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறீர்கள். ஆம், நீங்கள் கைதட்டும் போது அதுவும் வேகமாக நல்ல சத்தம் வருமளவிற்கு கை தட்டும் போது அக்குபங்க்ச்சர் வேலை செய்கிறது. அதனால் உங்கள் இரு கைகள் வேகமாக அடித்துக் கொள்ளும் போது ஏற்படும் அதிர்வுகள் உங்கள் உடலில் சென்று உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. (மீண்டும் கூடத்தில் பலத்த கரவொலி) இப்ப நீங்க கை தட்டுவது எனக்காகவா அல்லது உங்க ஆரோக்கியத்துக்காகவா? (மீண்டும் கூடத்தில் பலத்த கரவொலி) . 

ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பார்கள். உண்மையான பழமொழி அதுவல்ல. கல்லாமை, இல்லாமை, பொல்லாமை போன்றவைகளை நமக்குள் புக விட கூடாது என்பதைத்தான் அந்த காலத்தில் கூறி இருக்கின்றார்கள். அதை தான் நாம் தவறாக எடுத்துக்கொண்டோம். ஆமைக்கு நான்கு கால்கள் ஒரு தலை உள்ளது. அதற்கு ஆபத்து வரும்போது இவைகளை தன் ஓட்டினுள் இழுத்துக்கொள்ளும். அப்படி இழுத்துக் கொண்டபின் அதன் மேல் இந்த உலகமே விழுந்தாலும் அதற்கு ஒண்ணும் ஆகாது. அதே போல் நீங்களும் மேலே கூறிய தீமைகளையும் நீங்கள் இல்லாமல் ஆக்கிக்கொண்டால் உங்களை இந்த உலகில் யாரும் எதுவும் செய்ய முடியாது.

மனம், உணவு, உடற்பயிற்சி. இந்த மூன்றும் மிகவும் முக்கியம். இதை நீங்கள் சரியாக பழகிக்கொண்டால் நீங்கள் குறைந்தது 125 வருடங்கள் இந்த உலகில் வாழலாம். உங்கள் உயிர் குறைந்தது 100 வருடங்கள் வாழ தகுதி கொண்டது. என்னுடைய அலுவலகம் 8 வது மாடியில் இருக்கிறது. நான் எப்போதும் மாடிப்படிகளை தான் உபயோகிப்பேன். லிப்ட்டை உபயோகப்படுத்த மாட்டேன். ஒரு முறை புதிதாக வேலைக்கு சேர்ந்த லிப்ட் ஆபரேடர் என்னை பார்த்து, "சார், ஏன் சார் நீங்க லிப்ட்ல வரமாட்டீங்கிறீங்க? இதுல வந்தா சீக்கிரம் நீங்க மேல (மாடிக்கு) போகலாம் சார்" என்றார். நானும் சரி என்று கூறினேன். ஆமாம் லிப்ட்ல போனா சீக்கிரம் மேல (இறந்து) போகலாம் என்று (பலத்த சிரிப்பு). 

நான் 41 வருடங்களாக டாக்டராக தொழில் செய்து வருகிறேன். இன்னும் எவ்வளவு காலம் நீங்கள் இந்த தொழில் புரிவீர்கள் என சிலர் கேட்டார்கள். என்னைப் பொறுத்தவரையில் நான் கடைசி வரை மருத்துவம் பார்ப்பேன். யாரும் வயதாகிவிட்டதே என்று சும்மா இருக்காதீர்கள். உங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டே இருங்கள். நான் வேலை செய்துகொண்டிருக்கும்போதே இறக்க வேண்டும் என்பதே என் ஆசை.

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் நடங்கள். வேகமாக நடங்கள். காய்கறிகளை தோல் உரிக்காமல் சாப்பிடுங்கள். அதில்தான் எல்லா சத்துக்களும் இருக்கிறது. நம் வீட்டில் தாய்மார்கள் காய்கறிகளில் உள்ள எல்லா தோலையும் எடுத்துவிட்டு தான் சமைக்கிறார்கள். அந்த தோல்களை  எல்லாம் மாடுகளுக்கு போடுகிறார்கள். அதை சாப்பிட்டுவிட்டுத்தான் மாடுகள் புஷ்டியாக இருக்கிறது. இதை நான் ஒரு முறை சொன்னபோது ஒருவர் எழுந்து சார் பலா பழத்தை  எப்படி தோலுடன் சாப்பிட முடியும் என கேட்டார். சாப்பிடமுடிந்த  காயையையோ பலத்தையோ தோலுடன் சாப்பிடுங்கள் என கூறினேன். 

எல்லோரும் சந்தோசமாக இருங்கள். நேற்று என்பது உடைந்த மண் பானை போன்றது. அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. நாளை என்பது மதில் மேல் பூனை போன்றது. அடுத்து என்ன நடக்கும் என்றே தெரியாது. ஆதலால் இன்றைய பொழுதை நல்ல விதமாக செலவழித்து நிம்மதியாக வாழுங்கள்.
நீங்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் வாழ வேண்டுமானால் மூன்று பேரிடம் செல்லக்கூடாது. போலீஸ்காரர், வக்கீல் மூன்றாவதாக டாக்டர். இவர்களிடம் போவதால் உங்கள் உடல் நலமும் கெடும் (அலைந்து அலைந்து) கையில் இருக்கும் காசும் கரையும்.

என்னடா இவரே ஒரு டாக்டரா இருந்து கொண்டு டாக்டரிடம் போகாதேன்னு சொல்றாரேன்னு நினைக்காதீங்க. என்னுடைய அனுபவத்தை வைத்து ஆங்கிலத்தில் "MIND YOUR HEART" என்றும் தமிழில் "இதயம் காக்க"   என்றும் ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். அதை வாங்கி படியுங்கள். படித்து முடித்தபின் என்னிடம் வர மாட்டீர்கள்.

டிஸ்கி: Dr. V. சொக்கலிங்கம் அவர்களின் முழு பேச்சின் ஒலி நாடா என்னிடம் இல்லை. என் மனதில் பதிந்ததை அப்படியே இங்கு பதிந்துள்ளேன். தவறுகள் இருப்பின் அனைவரும் மன்னிக்கவும். நன்றி டாக்டர் சார்.
share on:facebook

Thursday, February 18, 2010

"எங்க வாத்தியார்"

"முகத்துல மட்டும் காயம் படாம பாத்துக்குங்க. மத்தபடி உசுரு ஒன்ன மட்டும் விட்டுட்டு என்ன வேணாலும் பண்ணிக்குங்க சார் இவன", இப்படி சொன்னது வேறு யாரும் இல்ல. சாட்சாத் எங்க அப்பாதான். சொன்னது என்னோட பள்ளி வகுப்பாசிரியர் கிட்ட. அதுக்காக எங்க அப்பாவ பத்தி உடன நீங்க தப்பா நினைச்சிடாதீங்க. இன்னிக்கு நான் நல்லா இருக்கிறேனா அதுக்கு அவர்தான் காரணம்.

இப்ப காலம் ரொம்ப மாறிடுச்சு. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்குமான இடைவெளி ரொம்ப கொறஞ்சிடுச்சு. என் பொண்ணோட டீச்சர் கேள்வி கேட்டுட்டு பசங்க பதில் சொல்லும் முன் டீலா நோ டீலானு கேக்குறாங்களாம். LKG படிக்கிற புள்ளையோட வீட்டு பாட விபரத்தை பெற்றோருக்கு SMS பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. மதிய இடைவேளையில் மாணவர்களின் சாப்பாட்டை பகிர்ந்து கொள்ளும் ஆசிரியர்கள், "உங்க அம்மா இத எப்படி பண்றாங்கன்னு கேட்டுட்டு வரியான்னு" ங்கற அளவிற்கு அவர்களிடையே நெருக்கம் உள்ளது.

அப்பலாம் குறிப்பிட்ட சில வாத்தியார் கிளாசுக்கு வறாருணா சில பசங்களுக்கு ஜன்னியே வந்துடும். ஒவ்வொரு வாத்தியாரும் ஒரு டிபரன்ட் ஸ்டைல் ஆப் பணிஷ்மன்ட் வச்சிருப்பாங்க. கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் மாதிரி அடி வாங்கி வாங்கி எங்கள் கரங்கள் சிவந்து போயிருக்கும்.

எங்களுக்கு வரலாறு எடுத்த ஆசிரியர்  அந்த மாதிரியெல்லாம் அடித்து அவர் கையை புண்ணாக்கி கொள்ள மாட்டார். யாராவது தப்பு பண்ணினால் அவனுக்கு பக்கத்தில் உள்ளவனை அவனுக்கு ஓங்கி ஒரு குட்டு வைக்க சொல்லுவார். அவன் பக்கத்தில் உள்ளவன்  நண்பனாச்சேனு பஸ்ட்டு மொதுவாதான் குட்டுவான். இதை கவனிக்கும்  ஆசிரியர் "ஏய், எண்ணா குட்டுற? இன்னும் பலமா வைன்னு" கத்துவார். அடுத்த தடவை சற்று வேகமாகவே குட்டு வைப்பான் அவன். அதிலும் சமாதனமாகாத ஆசிரியர் இப்போ தவறு செய்த மாணவனை அழைத்து உனக்கு எப்படி குட்டுநானோ அதே மாதிரி அவன குட்டுனு  சொல்வார். இவன் குட்டியதுதான் தாமதம். தவறு செய்யாத மாணவனுக்கு சும்மா B.P. எகிறிடும். இவன் தப்பு செய்யாததற்கு   நாம ஏன் குட்டு வாங்கனும்னு செம கடுப்புல இருப்பான். இப்போ மீண்டும் தவறு செய்த மாணவனுக்கு பலமா குட்ட வைக்க சொல்லுவார். இவன் எல்லா கடுப்பையும் சேர்த்து சும்மா "நங்குன்னு" குட்டுவான் பாருங்க. அப்பா, குட்டு வாங்கியவன் அலறும் அலறரில் பில்டிங்கே சும்மா அதிரும்.

இன்னொரு தமிழ் புலவருக்கு சட்டையின் மேல் பட்டன் போடாவிட்டால் அவன் உடம்புல துணியே போடாத மாதிரி டென்சன் ஆகிடுவாரு. அவருக்கு 9 பெண் பிள்ளைகள்(நம்புங்கள்). அதனால் எல்லோரையும் வாடி போடின்னு தான் பேசுவார். கூடவே எங்கள் ஊரின் அனுமதிக்கப்பட்ட கெட்ட  வார்த்தை "கம் ...ட்டி" ஒன்றையும் சேர்த்துக் கொள்வார். மணிமேகலை பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போதே "பட்டன போட்றி  கம்...ட்டி" ஒரு சவுண்டு உடுவாரு.

நான் ரொம்ப நாள் வாட்ச் கட்டாததிற்கு ஒரு காரணம் எங்களின் 9 வகுப்பாசிரியர். அவருக்கு கோவம் வந்தால் முதலில் அவர் வாட்சை கழட்டி மேஜை மீது வைத்து விட்டு தான் கச்சேரியே ஆரம்பிப்பார். அவரின் ஸ்டைல் அடித்து ஓய்ந்து விட்டு மீண்டும் ஒரு இடைவெளி விட்டு திரும்பவும் வந்து அடிப்பது (இப்பவும் வாட்ச் கழட்டப்படும்). இவர் வகுப்பாசிரியரா வரகூடாதுன்னு மொதோ வருசமே எல்லோரும் மாரியாத்தாளுக்கும், மேரிக்கும் வேண்டிக்குவாங்க(எங்கள் பள்ளி ஒரு கிருஸ்தவ பள்ளி).

ஆனா இவ்ளோ அடி வாங்கியும் நாங்க திருந்துவோம்றீங்க. ஹூ ஹூம். மீண்டும் அதே சண்டித்தனம். மீண்டும் அடிவாங்குதல். அதல்லாம் ஒரு காலம். அப்படியெல்லாம் கண்டிப்பான ஆசிரியர்கள் இருந்து அவர்களிடத்தில் படித்ததினால் தானோ என்னவோ இப்ப நாங்க எல்லோரும் நல்ல நிலமையில இருக்கோம். இப்பவும் மேலே கூறிய ஒரு சில ஆசிரியர்களை சந்தித்து அவர்களிடம் நான் ஆசி வாங்கும்  பழக்கம் உண்டு.

"அடித்து வளக்காத புள்ளையும் முறுக்கி வளக்காத மீசையும் நல்லா வராது" எங்கேயோ கேட்ட பழமொழி.

நீங்க யாரும் இப்படி அடி வாங்கி இருக்கீங்களா? வாங்கலனாலும் பறவையில்லை. பதிவு புடிச்சிருந்தா வோட்ட போட்டுடுங்க. நன்றி.

படம் உதவி: srimgr.com
share on:facebook

Saturday, February 13, 2010

My name is Khan - ஒரு சிறப்பு பார்வை


My name is Khan - சுருக்கமாக "MNIK". இந்த "பெயர்" தான் கடந்த சில நாட்களாக வட இந்திய அரசியல் மற்றும் பாலிவுட் திரையுலகில் அதிகமாக அடிபடும் செய்தி. MNIK - இசுலாமியராகவும், இசுலாமிய பெயரை கொண்டிருப்பதாலும் ஒருவர் படும் கஷ்டங்களையும் வேதனைகளையும் வெளி உலகுக்கு எடுத்துக்காட்டும் ஒரு திரைப்படம் என்பது அனைவரும் அறிந்ததே. 

இதில் ஓரளவு உண்மையும் கூட. குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் இசுலாமிய அடையாளங்கள் இருந்தால் அவர்கள் மற்றவர்களை விட சற்று கூடுதல் சோதனைகளுக்கு உட்படுத்தப் படுகிறார்கள். இதை என் இசுலாமிய நண்பர் ஒருவர் என்னிடம் மிகவும் வருத்தப்பட்டு கூறியுள்ளார்.

இதை பற்றி நிறைய பேர் பேசி, எழுதி ஆகிவிட்டது. நான் இங்கு கூற வருவது இதையெல்லாம் விட அதிக கொடுமைகளை உள்நாட்டிலும் (இந்தியாவிலும்) வெளிநாட்டிலும் ஒரு இனத்தில் பிறந்த காரனத்திற்காகவே  எங்கு சென்றாலும் இரண்டாம் தர குடிமகனாகவும் அடித்தும் விரட்டப்படும் "தமிழ்" இன மக்களை பற்றி.

இன்று MNIK திரைப்படத்திற்கும் அதில் நடித்துள்ள  நடிகருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. திரைப்படம் வெளியாகியுள்ள திரை அரங்குகளுக்கு Z+ பாதுகாப்பு போடப் பட்டிருப்பதாக செய்திகள் வருகிறது. "நான் ஷாருக்கான் ரசிகன்" என முதல் காட்சி டிக்கட்டை காண்பித்தவாறு ஒரு மாநிலத்தின் உள் துறை அமைச்சர் போடோவுக்கு போஸ் கொடுக்கிறார். அதெல்லாம் சரிதான். ஆனால் சுமார் எட்டு மாதங்களுக்கு முன் பக்கத்தில் உள்ள தேசத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்க்காக ஈவு இரக்கமில்லாமல் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் படு கொலை செய்யப்பட்டர்களே. அப்போது MNIK என்ற ஒரு திரைப்படத்திற்கு தற்போது கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு பாதியாவது கொடுத்திருப்பார்களா?

கொலைக்கு நிகராக கொலை முயற்சியும் சட்டத்தில் கருதப்படுகிறது. ஏனெனில் கொலை நடந்திருக்காவிடினும் அப்படி ஒரு முயற்சி கொலையில் முடிந்திருந்தால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்  என்ற காரணத்தினால். நம் முன்னாள் பிரதமரை ஒரு இனத்தை சேர்ந்த குழு ஒன்று கொன்றுவிட்டது என்ற ஒரே காரணத்திற்க்காக ஒரு இனத்தையே முழுவதுமாக அழிக்க நினைத்த இனவெறி அரசுக்கு துணை போனபோது இப்போது ஒரு திரைப்படத்திற்கு கொடுக்கும் பாதுகாப்பை, முக்கியவத்துவத்தை  ஒரு இனப் பிரச்சனையில்  நம் நாட்டு அரசியல்வாதிகளோ பத்திரிகை உலகமோ சிறிதளவாவது கொடுத்திருக்குமா?

அதே இலங்கையில் நம் பிரதமரை எங்கும் நிகழாத நிகழ்வாக ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்கும்போது துப்பாக்கி கட்டையால் அந்நாட்டு ராணுவ வீரன் ஒருவன் தாக்கினானே. அது ஒரு கொலை முயற்சிதானே? ஒரு நாட்டு ராணுவ வீரன் ராணுவ அனுவகுப்பின் போது கொலை செய்ய முயற்சிக்கிறான் என்றால் அதுவும் ஒரு நாட்டின் இளைய பிரதமரை, அந்நாட்டு ராணுவத்திற்கு அதில் தொடர்பு இல்லாமல் இருக்குமா? அந்நாட்டு ராணுவத்திற்கு தொடர்பு இருப்பின் அந்நாட்டு அரசுக்கு தொடர்பு இல்லாமல் இருக்குமா? அப்படியானால் அதற்கு என்ன தண்டனை கொடுத்தார்கள்? அந்நாடு ஒரு இனவாத அரசால் பல காலமாக ஆளப்பட்டு வருகிறது. அப்படியானால் அந்த இனத்திற்கு என்ன தண்டனை?

இலங்கை ஒரு இறையாண்மை நாடு. அந்நாட்டு பிரச்சனையில் நாம் தலையிடமுடியாது என மிகவும் வசதியா ஒரு காரணத்தை கூறினார்கள். ஏன் பக்கத்தில் உள்ள மாநிலத்தில் பல வருடங்களாக தமிழர்கள் தாக்கப்படுகிறார்களே. தமிழர்களின் உயிரும் உடமைகளும் கலவரங்களின் போது சூரையாடப்படுகின்றனவே. அவற்றை தடுக்க எந்த இறையாண்மை உங்களை தடுக்கிறது? தமிழ் நாட்டிலிருந்து எந்த தீவிரவாதி அங்கு சென்று யாரை கொலை செய்தான் அம்மாநில தமிழர்களை பழி தீர்க்க?

தங்கள் மாநிலத்தை இரண்டாக பிரிக்கும் பிரச்சனையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் மதகுகளை உடைத்து சேதப்படுத்தினார்களே அங்கு யார் இனவெறியை தூண்டியது? இதற்கெல்லாம் ஒரே காரணம் தமிழன் என்றால், தமிழர் பிரச்னை என்றால் கேள்வி கேட்க ஆளில்லை என்ற நிலை தான். 

"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" - தமிழகத்தை தாண்டி இதை சொல்ல முடியுமா நம்மால் இப்போது?

வழக்கம் போல் உங்கள் பதிலுரையையும், வாக்கையும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் - My name is Aathimanithan.
share on:facebook

Tuesday, February 9, 2010

சென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.



சென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும். இப்படி யாராவது சொல்லிருப்பாங்கன்னு நீங்க நினைச்சிங்கனா சாரி.

மும்பையில் ஆட்டோ ஓட்ட கண்டிப்பாக மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என ஒரு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. சென்னையில் ஆட்டோ ஓட்டும் நண்பர்களுக்கு தமிழ் தெரியவில்லை என்றாலும் எங்களுக்கு கவலையில்லை. மீட்டருக்கு மேல் கேட்காமலும், சூடு வைக்காமலும் நீங்கள் ஒரிய மொழி என்ன? உலகத்தில் யாருக்குமே புரியாத மொழி பேசினாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம். ஆனா ஆட்டோ மீட்டர் போட்டு அத சூடு வைக்காம நீங்க ஒட்டுனாலே உங்களுக்கு "சிறந்த தமிழன்" பட்டம் தரவே நாங்க காத்துக்கிட்டு இருக்கோம்.

நீங்க தயாரா ஆட்டோ அன்னாச்சிகளே! இனி...


சென்னை என்றாலே இந்தியாவின் பிற மாநிலத்தவர்களுக்கு அலறல் ஏற்படுத்தும் ஒரே விஷயம் நம்மூர் ஆட்டோ கட்டணம் தான். கூவம் கூடுதல் பாயிண்ட். ஆனா இப்பல்லாம் அதுக்கு அதிக எபக்ட் இல்ல. எல்லாதான் அப்பாட்மன்ட்டா  மாறிடுச்சே. நம்ம சென்ட்ரல் ஸ்டேசனிலிருந்து எக்மோருக்கு போக ஒரு மணிநேரம் சுற்றி 300 ரூபாய் வசூலித்ததாக என் ஹைதரபாத் நண்பர் ஒருவர் என் கையில் சத்தியம் அடிக்காத குறையாக கூறியபோது எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.

சமீபத்தில் வேலை நிமித்தமாக இரு முறை குறுகிய இடைவெளியில் மும்பை செல்ல நேர்ந்தது. தற்போது விமான பயணம் என்பது எப்படியெல்லாம் மாறி இருக்கிறது என்பதை பிறகு பார்போம். அதற்கு முன் நான் இங்கே குறிப்பிட விரும்புவது மும்பையில் எனக்கு பிடித்த சில பொது கலாசாரம் மட்டும் ஆட்டோ ஒடுனர்களை பற்றி.

கடந்த மாத துவக்கத்தில் நான் மும்பை சென்று இறங்கிய போது நான் செல்ல வேண்டிய இடத்தின் முகவரி மட்டுமே என்னிடம் இருந்தது. தமிழனாய் பிறந்ததினால் இந்தியும் தெரியாது. விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்தவுடன் Auto Bay (ஆட்டோக்கள் வரிசையாக வந்து நிற்கும் இடம்) நோக்கி சென்றேன். வரிசையாக ஆட்டோக்கள் வந்து கொண்டிருக்க பயணிகள் போலீசோ செக்கூரிடியோ யாரும் இல்லாமல் தாங்களாகவே ஒரு வரிசை அமைத்து அதில் நிற்க ஆரம்பித்தார்கள்.

மும்பையில் எனக்கு பிடித்த ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் பொதுவாக மக்கள் ஒரு கட்டுக்கோப்புடன் இருப்பார்கள். பேருந்து நிறுத்தங்களில் சிறுது கூட்டம் கூடி விட்டால் போதும் உடனே ஒரு வரிசையை தாங்களே ஏற்படுத்தி கொள்வார்கள். நம்ம ஊர் மாதிரி உடலில் பலம் உள்ளவன் முண்டி அடித்து முன்னே செல்ல முடியாது.

அதே போல் பொதுமக்களை பார்த்து ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் பயப்படுகிறார்கள். ஒரு பிரச்னை என்றால் மக்கள் உடனே கூடி விடுகிறார்கள். ஒரு பயணிக்கும் ஆட்டோ ஒட்டுனர்க்கும் தகராறு என்றால் உடனே மற்ற பயணிகளும் நமக்காக நியாயம் கேட்க வருகிறார்கள். நம் ஊரில் ஆட்டோ ஓட்டுனர்கள் என்றால் ஒரு ரவுடி போல் தோற்றத்தை உருவாக்கி விட்டார்கள். இதற்கு யார் முழு பொறுப்பு என தெரியவில்லை. ஆனால் சினிமாவுக்கும் சில தவறான ஆட்டோ ஓட்டுநர்களுக்கும்  நிச்சயம் அதில் பங்கு உண்டு.

இதையெல்லாம் நினைத்து நான் ஆச்சிரியாப்பட்டுக் கொண்டிருக்கும்போதே  வரிசையில் எனது முறை வந்தது. எங்கு செல்ல வேண்டும் என்று கூட என்னிடம் ஆட்டோ டிரைவர் கேட்கவில்லை. ஏறி உக்கார்ந்தவுடன் மீட்டர்  போட்ட பின்தான் எங்கு செல்ல வேண்டும் என கேட்டார், அந்த ஆட்டோ டிரைவர். இடத்தின் பெயரை மட்டும் கூறினேன். வண்டி சல்லென பறந்தது.

பொதுவாக மும்பையில் ஆட்டோ ஓட்டுனர்கள் பயணிகளை ஏமாற்றுவதில்லை. 99% சதவிகிதம் மீட்டர் போட்டு தான் ஓட்டுகிறார்கள். அதேபோல் மீட்டரை சூடு வைப்பது என்றால் என்னவென்றே அவர்களுக்கு தெரிவதில்லை.

அதேபோல் உள்ளூர் ஆளா, வெளியூர் ஆளா என்று என்று தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல் பேரம் பேசுவதில்லை. ஏறி உட்கார்ந்தவுடன் மீட்டர் போட்டு விடுகிறார்கள். அதே போல் மினிமம் சார்ஜே மட்டுமே ஆகியிருந்தாலும் கூட மறு பேச்சு பேசாமல் அதையே வாங்கிக்கொள்கிறார்கள். "போட்டு கொடுங்க சார்" சமாசாரத்தை அங்கு காண்பது அரிது.  சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் நான் மும்பை சென்றிந்தபோது  இன்னுமொரு ஆச்சிரியத்தை கண்டேன். மீட்டர் இருபது ரூபா காண்பித்தது என்றால் நாம் இருபது ரூபாயை எடுத்து நீட்டினால் ஆட்டோ டிரைவர் தன சட்டை பையை துளாவுவார். அதாவது நாம் மீட்டர் சார்ஜாக எவ்வளவு கொடுத்தாலும் நமக்கு அவர்கள் ஒரு ரூபாயை திருப்பி கொடுத்து விடுவார்கள். ஆனால் தற்பொழுது அப்பழக்கத்தை பார்க்க முடியவில்லை.

இத்தனைக்கும் மும்பையில் எப்பொழுதும் ஆட்டோவிற்கு கிராக்கிதான். சென்னையில் நீங்கள் பேருந்து நிலையத்திலிருந்தோ புகைவண்டி நிலையத்திலிருந்தோ இறங்கினால் உடனே உங்களை ஒரு நாலைந்து ஆட்டோ ஓட்டுனர்கள் சூழ்ந்து கொண்டு எங்க சார் போவனும்,  எங்க சார் போவனும் என்று மொய்த்து விடுவார்கள். ஆனால் மும்பையில் பெரும்பாலும் ஆட்டோக்களுக்கு கிராக்கிதான். அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை(குறிப்பாக வேலைக்கு செல்லும்/திரும்பும் நேரங்களில்). 

சென்னையில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல ஒவ்வொரு ஆட்டோ டிரைவரும் நேரத்திற்கு தகுந்தாற்போல் ஒரு ரேட் சொல்லுவார்கள். காலை என்றால் கால நேரம் சார், மதியம் என்றால் மதியான வெயிலு சார், மாலை நேரத்தில், என்ன ட்ராபிக் பாரு சார், இரவு நேரத்தில் ராத்திரி நேரம் சார்னு வகை வகையா காரணம் கூறுவார்கள்.

ஆனால் மும்பையில் இரவு நேரமானாலும் அவர்கள் இஷ்டத்துக்கு கட்டணம் கேட்பதில்லை. எல்லோரும் ஒரே மாதிரியாக ஒரு அட்டவணை வைத்து இருக்கிறார்கள். அதில் உள்ளபடிதான் கட்டணம் வசூலிக்கிறார்கள். உள்ளூர் வெளியூர் ஆட்கள் பார்த்து ஏமாற்றுவதில்லை.

இதல்லாம் பார்த்தாவது திருந்துங்கப்பா. மீண்டும் ஒருமுறை...

சென்னையில் ஆட்டோ ஓட்டும் நண்பர்களுக்கு தமிழ் தெரியவில்லை என்றாலும் எங்களுக்கு கவலையில்லை. மீட்டருக்கு மேல் கேட்காமலும், சூடு வைக்காமலும் நீங்கள் ஒரிய மொழி என்ன உலகத்தில் யாருக்குமே புரியாத மொழி பேசினாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம். ஆனா ஆட்டோ மீட்டர் போட்டு அத சூடு வைக்காம நீங்க ஒட்டுனாலே உங்களுக்கு "சிறந்த தமிழன்" பட்டம் தரவே நாங்க காத்துக்கிட்டு இருக்கோம்.

கைவிட்டுடாதிங்க ஆட்டோ அன்னாச்சிகளே!

நம்மூர்ல ஆட்டோ அவஸ்தையை அனுபவிக்காதவர்கள் இருக்க முடியாது. நீங்களும் அனுபவிச்சதா நினைசீங்கனா  அதுக்கு பரிகாரமா ஒரு வோட்ட போட்டுடுங்க. நன்றி.
share on:facebook