Tuesday, December 4, 2012

அதிரடி அயல்நாட்டு சட்டங்கள். அதிர்ச்சியில் இந்திய பெற்றோர்கள்.

//நான் ஒரு முறை இம்மாதிரி பிரச்சனையில் மாட்ட வேண்டியது. நல்ல வேலை தப்பித்தேன்//

நேற்று நார்வே நீதிமன்றம் ஒன்று தங்கள் குழந்தையை கொடுமை படுத்தினார்கள் என்பதற்காக அக்குழந்தையின் இந்திய பெற்றோருக்கு தந்தைக்கு 18 மாதமும் தாய்க்கு 15 மாதமும் சிறை தண்டனை வழங்கி உள்ளது. இது பெரும்பாலானோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அயல் நாடுகளில் பல வருடங்கள் குடும்பத்துடன் வாழ்ந்த எனக்கே இது சற்று பயத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மேலே போவதற்கு முன், இந்தியாவிலிருந்து வெளி நாடு செல்லும் நண்பர்கள் யாராக இருந்தாலும் அந் நாட்டிற்கு செல்லும் முன், அந்நாட்டின்  முக்கியமான சட்ட திட்டங்களை, வரைமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இன்று எல்லா இடங்களிலும் இந்தியர்கள் தமிழர்கள் இருக்கிறார்கள். அதனால் அது ஒன்றும் பெரிய காரியமில்லை.

உதாரணத்திற்கு சிங்கப்பூர் மலேசியாவில் சுத்தம் மிக முக்கியம். நம்மூர் மாதிரி ரோட்டில் பேப்பர் அது இது என்று எதை போட்டாலும் 500 டாலர் 1000 டாலர் என்று பைன் போடுவார்கள் என்று தெரியும். சவூதி போன்ற நாடுகளில் மற்ற மதங்களின் வழிபாடுகள் தடை செய்யப்பட்டுள்ளது என தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதற்காக கடுமையான சட்டங்கள் உண்டு.

ஏன் நாம் மட்டும் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லையா? நாம் பெற்ற குழந்தைகளை நமக்கு கண்டிக்க, அடிக்க உரிமை இல்லையா என சிலர் கேட்கலாம். எந்த நாடாக இருந்தாலும் அங்குள்ள சட்டங்கள் அங்குள்ள பிரச்சனைகளின் அடிப்படையில் தான் உருவாக்கி இருப்பார்கள். அப்படி பார்க்கும் போது, மேலை நாடுகளில் பரவலாக குழந்தை கொடுமைகள் உண்டு. அதற்க்கு காரணம் அவர்களுக்கு குழந்தைகள் மேல் பாசம் இல்லை என்றில்லை. இன்னும் சொல்லப்போனால் நம்மை விட அவர்கள் அதிக நேரம் குழந்தைகளுடன் செலவிடுவார்கள். ஆனால், தனி மனித சுதந்திரம், விருப்பு வெறுப்பு என வரும்போது குழந்தை பாசம் அங்கே குறுக்கே வராது.

விவாகரத்து என்பது அங்கு சர்வ சாதாரணம். கணவன் மனைவியிடையே பிரச்னை உருவாகும் போது நம்மை போல் என் குழந்தைக்காக, குடும்பத்திற்காக தான் நான் பொறுத்து போகிறேன் அப்படி இப்படி எல்லாம் வசனம் பேசிக்கொண்டு இருக்க மாட்டார்கள் அவர்கள். அப்போது இந்த குழந்தை பாசமும் குறுக்கே வராது. கோர்ட் உத்தரவு படி யாராவது ஒருவர் பராமரிப்பில் குழந்தை வளரும். பெற்றோர் மட்டுமல்ல, குழந்தைகளும் இதை சாதரணமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

அவ்வாறு பெற்றோர் பிரியும் போது நம்மூர் போலவே அப்பவோ அம்மாவோ மறுமணம் செய்து கொள்ளும் போது 'சித்தி/சித்தப்பா' கொடுமைகளை சில குழந்தைகள் சந்திக்க நேரிடும். அது மட்டுமின்றி 'சைல்ட் அப்யூசர்ஸ்' நிறைய பேர் அங்கு இருப்பார்கள். அம்மாதிரி கொடுமைகளை தண்டிக்க மேலை நாட்டு அரசுகள் கடுமையான சட்ட திட்டங்களை பின்பற்றுகின்றன. இதில் தான் நம் இந்திய பெற்றோர்கள் விட்டில் பூச்சி போல் மாட்டிக்கொள்கிறார்கள்.

மேலை நாட்டில் உள்ள சட்டங்களை நாம் குறை கூறவும் முடியாது. அதே சமயம் அவர்களை போல் திட்டாமல், அடிக்காமல் நாம் குழந்தைகளை வளர்க்க முடியாது வளர்க்கவும் தெரியாது. நமக்கு ஒழுக்கம் அதிலும் நம் குழந்தைகள் ஒழுக்கமாக வளருவதற்காக நாம் என்ன வேண்டுமானாலும் செய்வோம். ஆனால், அங்கோ, ஐந்து வயது குழந்தைக்கே தனி பெட் ரூம். அந்த ரூமிற்குள் செல்ல பெற்றோரே பெர்மிஷன் கேட்க வேண்டும்/தட்டிவிட்டு செல்ல வேண்டும். அப்படி பட்ட தனிமனித சுதந்திரம் உள்ள நாடுகள் அவைகள்.

ஆனால் இந்த குறிப்பிட்ட கைது/தண்டனை சம்பவம் பல சந்தேங்கங்களை கிளப்புகிறது. குழந்தை தன்னை பெற்றோர்கள் திட்டினார்கள், ஒழுங்காக நடக்கவிட்டால் இந்தியா திருப்பி அனுப்பி விடுவோம் என மிரட்டினார்கள் என்பதையெல்லாம் எப்படி குழந்தை கொடுமை என்று எடுத்துக்கொண்டார்கள் என தெரியவில்லை. எந்த நாட்டிலும் குழந்தைகளை சாதரணமாக (அதாவது பொது இடத்தில் அல்லாமல்) திட்டுவது ஒன்றும் பெரிய குற்றமில்லை. அதே போல் கண்டிப்பதும். பிசிகல் அப்யூஸ் தான் குற்றமாக கருதப்படும்.

அதே போல் சம்பவம் நடந்து ஆறு மதங்களுக்கு மேல் அதுவும் குழந்தைகள் தற்போது இந்தியாவில் உள்ள போது இம்மாதிரி பெற்றோர்களை சிறையில் அடைப்பது அநியாயம். இரண்டும் விபரம் அறியா குழந்தைகள். அவைகள்  அம்மா அப்பாவை பார்க்காமல் தவித்து விடாதா? அதிபட்சம் அவர்கள் வெர்பல் அப்யூஸ் செய்தததாக புகார் வந்திருந்தால் அவர்களை கூப்பிட்டு முதலில் ஒரு வார்னிங் செய்திருக்கலாம்.

முதலில் பெற்றோர்கள் திட்டினார்கள் என கூறிய அந்நாட்டு போலீஸ் தற்போது குழந்தை மீது காயங்களும் தழும்புகளும் இருந்தது என கூறுகிறது. குழந்தைகள் ஆறு மாதமாக இந்தியாவில் இருக்கும் போது இவ்வாறு குற்றச்சாட்டு வைப்பது பல சந்தேகங்களை கிளப்புகிறது. எது எப்படியோ, மக்களுக்காக தான் சட்டங்கள். அது எந்த நாடாக இருந்தாலும். இந்த பிரச்சனயை பொறுத்த வரை குழந்தையை திட்டினார்கள் என்பதற்கு சிறை தண்டனை என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அக் குழந்தைகளுக்காவது பெற்றோர் இருவரையும் உடனடியாக நார்வே அரசு விடுதலை செய்ய வேண்டும். அது தான் என் வேண்டுதலும் விருப்பமும்.

அதை விட முக்கியம். வெளி நாடு செல்லும் பெற்றோர்கள் அந்நாட்டு சட்ட திட்டங்களை தெரிந்து கொண்டு அதன் படி நடப்பது. நான் ஒரு முறை இம்மாதிரி பிரச்சனையில் மாட்ட வேண்டியது. நல்ல வேலை தப்பித்தேன். முடிந்தால் தனி பதிவாக போடுகிறேன். 

share on:facebook

Monday, December 3, 2012

நொறுக்ஸ்: மிலிடரி காதல் - ஹிந்துவின் காவடி.

இந்த வார நொறுக்ஸ்:

1. இந்திய ராணுவத்தில் பணியாற்றும் ஒருவர் இலங்கை பெண் ஒருவரை காதலித்து பின் கல்யாணம் செய்ய முடிவு செய்துள்ளார். ராணுவ சட்டப்படி பணியில் உள்ள ஒருவர் வெளி நாட்டினரை திருமணம் செய்து கொள்ள முடியாது போலும் (விபரம் தெரிந்தவர்கள் உறுதிப்படுத்தலாம்).

இந்நிலையில் நம் ராணுவ வீரர், தான் வேறொரு நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பதால் தன்னை பணியிலிருந்து விடுவிக்குமாறு இராணுவத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் பல காரணங்களை காட்டி ராணுவம் அதற்க்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதை எதிர்த்து ராணுவ வீரர் கோர்ட்டில் வழக்கு தொடர கோர்ட் அவருக்கு சாதகமாக தீர்பளித்துள்ளது.

அது மட்டுமல்ல. வெளி நாட்டினரை திருமணம் செய்து கொள்வதாலேயே அவரோ அவர் திருமணம் செய்து கொண்டவரோ நம் நாட்டுக்கு துரோகம் செய்வார்கள் என்ற வாதம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தன் கருத்தை வெளியிட்டு இருக்கிறது. ஹ்ம்ம்..காதல் செய்வதில் அதிலும் வெளிநாட்டு பெண்ணை  என்றால் இவ்வளவு பிரச்சனையா?

2. இதுவும் இலங்கை சம்பத்தப்பட்டது. ஹிந்து நாளிதழ். ஒரு காலத்தில் விரும்பி படித்ததுண்டு. ஆனால் சில வருடங்களாக, குறிப்பாக இலங்கை விசயத்தில் இலங்கை அரசின் பத்திரிக்கையாகவே மாறிவிட்டது. இலங்கையில், இறுதிகட்ட போரில் பல்லாயிரகணக்கான தமிழர்கள் பலியாகி, உள்நாட்டிலேயே அகதிகளாக கொட்டடிகளிலும், திறந்த வெளி கேம்புகளிலும் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது கூட, ஹிந்து நாளேட்டில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த அகதிகள் முகாமிலுள்ள டெண்ட்டுகளை முழு பக்கத்தில் கலரில் புகைப்படங்களாக வெளியிட்டு, உலகிலேயே சிறந்த அகதிகள் முகாம் இலங்கையில் தான் உள்ளது என்று புகழாரம் சூட்டியது. அட கண்றாவியே! இதையெல்லாமா பாராட்டுவார்கள்?

தற்போது இலங்கையிலிருந்து கடிதம் என்ற தலைப்பில் அவ்வப்போது ஏதாவது ஒன்றுக்கும் உதவாக கட்டுரை ஒன்றை வெளியிட்டு வருகிறது. பிராபகரன் வாழ்ந்த வீட்டை யாரும் பார்க்க போவதில்லை. அதற்க்கு பதிலாக இலங்கை அரசு அமைத்துள்ள போர் மியூசியத்தை மக்கள் சாரி சாரியாக சென்று பார்த்து வருகிறார்கள் என்று சொல்லி வருகிறது.

இன்னொரு கடிதத்தில் இலங்கை மக்கள் இப்போது தான் சந்தோசமாக வாழ்கிறார்கள். ஒன்றுமே இல்லாவிட்டாலும், மிக விரைவில் பெரிய பெரிய தொழில்கள் ஆரம்பித்து செல்வத்தில் கொழிக்க போகிறார்கள் என்று ஆருடம் கூறிக்கொண்டு இருக்கிறது.

இதை தவிர அவ்வப்போது ஹிமாச்சல் பிரதேசத்து பிரச்சனையில் ஒரு மாதிரியாக சீனாவுக்கு வக்காலத்து வாங்குவது போல் அவ்வப்போது எழுதி வருகிறது.

ஹ்ம்ம்...எப்படி இருந்த பத்திரிக்கை இப்படி ஆகிவிட்டது?

share on:facebook

Wednesday, November 28, 2012

சென்னையில் L.K.G. அட்மிஷனுக்கு ரூ. 17 லட்சம்.


தங்கள் பிள்ளைகள் நல்ல பள்ளிகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவது இயற்கையே. ஆனால் அதற்கும் ஒரு எல்லை வேண்டாமா?

நேற்று ஒரு ஆங்கில நாளிதழில் வெளியான செய்தி இது தான். தன் குழந்தைக்கு இடம் வாங்க மைலாப்பூரில் இருக்கும் ஒரு பள்ளிக்கு அக்குழந்தையின் தந்தை அப்பள்ளிக்கு கூடை பந்தாட்ட மைதானம் ஒன்றை தன் சொந்த செலவில் கட்டி தருவதாக கூறி உள்ளாராம். சும்மா இல்லீங்க. அதற்கு ஆகும் செலவு ஜஸ்ட் 17 லட்ச ருபாய் தான்.

இன்னொரு குழந்தையின் தந்தை கீழ்பக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் தன் குழந்தையை சேர்பதற்காக அப்பள்ளிக்கு தன் சொந்த செலவில் கணிப்பொறி மையம் ஒன்றை கட்டி தருவதாக விருப்பம் தெரிவித்துள்ளார். தற்போது 'நன்கொடைகள்' தடை செய்யப்பட்டுள்ளதால் பெற்றோர்களும் பள்ளிகளும் இவ்வாறு வேறு வகைகளில் தங்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். டொனேஷன் என்பதற்கு பதிலாக இதை 'தெரிந்தே கொடுக்கும் நல் உதவிகள் என்றும் திரும்ப பெற்றுக்கொள்ளும் முதலீடு' எனவும் பெயர் வைத்துக் கொள்கிறார்கள்.

சில பள்ளிகளில் அவ்வாறு கொடுக்கப்படும் நன்கொடைகளுக்கு வங்கி வட்டி போட்டுக் கொடுப்பதும் நடக்கிறதாம். பெற்றோர்களும் எப்படியோ பிள்ளைகளுக்கு சீட்டும் ஆச்சு. பணத்திற்கு வட்டிக்கு வட்டியும் ஆச்சு என சந்தோசப் பட்டுக் கொள்கிறார்கள். இன்னும் சில பள்ளிகளில் வட்டி இல்லா கடனாக பெற்றோர்களிடம் ஒரு லட்சம் முதல் பெற்றுக் கொண்டு அதை அவர்கள் பிள்ளைகள் பள்ளியை விட்டு செல்லும் போது திருப்பி கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டு தருகிறார்களாம்.

ஒரு பள்ளியின் நிர்வாகி கூறும்போது, 'இப்போதெல்லாம் பெரிய மனிதர்களிடம் பெற்றோர்கள் போவது நன்கொடை இல்லாமல் சீட்டு வாங்க இல்லை. நாங்கள் அதிகமாக நன்கொடை கொடுக்கிறோம். அதனால் எங்களை சிபாரிசு செய்யுங்கள்' என்று கேட்பதற்கு தான் என்கிறார்.

சென்னையில் நல்ல பள்ளிகளில் நன்கொடைகள் அதிக பட்சமாக 4 லட்சம் வரை வாங்க படுகிறதாம். ஏன் மதுரை போன்ற பிற ஊர்களில் கூட 25,000 முதல் 75,000 வரை நன்கொடையின் வளர்ச்சி அதிகரித்து இருக்கிறதாம். ஹ்ம்ம்...இருக்கிறவன் கொடுக்கிறான் என்கிறீர்களா? அது சரி.

நான் எவ்வளவு நன்கொடை கொடுத்தேன் தெரியுமா? ரூ. 750. இளநிலை பட்டப்படிப்புக்கு தனியார் கல்லூரி ஒன்றில் சேர. வருடம்....?

Thanks: TOI

share on:facebook

Sunday, November 25, 2012

IT - கனவாகி போகும் கேம்பஸ் வேலைகள்.


கல்லூரி இறுதி ஆண்டிலோ அல்லது அதற்கும் முதல் ஆண்டிலோ கேம்பஸ் இன்டர்வியூ மூலம் நன்கு படிக்கும் மாணவர்கள் பெரிய பெரிய IT கம்பெனிகளில் வேலைக்கு சேர, படிப்பை முடிக்கும் முன்பே வேலைக்கான ஆர்டர் வாங்கி விடுவர். அதும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கம்பெனிகள் ஆபர் கொடுக்கும் போது எது அதிக சம்பளம் கொடுகிறது எது மிக நல்ல கம்பெனி என்றெல்லாம் பார்த்து அவற்றில் ஒன்றை மாணவர்கள் தேர்ந்தெடுப்பது வழக்கம். அப்புறம் மீதம் உள்ள செமஸ்டர்களை பெயில் ஆகாமல் நல்ல மார்க்குடன் தேர்வாகி விட்டால் வேலைக்கு சேர்ந்த முதல் மாதமே ATM நிறைய சம்பளம். இப்படி தான் IT கனவுகள் இது நாள் வரை இருந்து வந்தன.
  
அதற்க்கெல்லாம் சமீப காலமாக பல வகைகளில் ஆப்புகள் விழ தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டு கேம்பஸில் தேர்வானவர்கள் பலருக்கு இன்னமும் வேலைக்கு வர சொல்லி பல பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு போகவில்லை அதற்க்கு பதிலாக சற்று பொறுத்திருங்கள். அடுத்த மூன்று மாதத்தில் சேரலாம் அடுத்த ஆறு மாதம் கழித்து சேரலாம் என்று ஓலை மட்டும் சென்று கொண்டிருகிறது. இதற்க்கு காரணம் எதிர் பார்த்த அளவு IT வேலைகள் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து கிடைக்காததுதான்.

சரி அதற்க்கு அவர்கள் என்ன செய்வார்கள் பாவம் என்றால்? பாவம் அவர்கள் இல்லை. வேலை உறுதி என்று இத்தனை நாட்கள் காத்திருந்து அதை நம்பி மேற்படிப்புக்கு கூட முயற்சிக்காமல், வேறு கம்பெனிகளில் வந்த ஆபரையும் வேண்டாம் என கூறிய மாணவர்கள் தான். இந்த இடைப்பட்ட காலத்தில் தங்களை இன்னும் நன்றாக பட்டை தீட்டிக் கொள்ளலாம் என்று கூறுபவர்கள் உண்டு. ஆனால், நினைத்து பாருங்கள். படிப்பை முடிக்கும் முன்பே வேலை உறுதி என்ற நிலையிலிருந்து இன்று வேலை திரும்பவும் கிடைக்குமா கிடைக்காதா என விரக்தியோடு வீட்டில் உட்காருவது எவ்வளவு கஷ்டம்.

இது சமீபத்தில் வந்த செய்தி. ஒரு பிரபல IT கம்பெனி இந்த ஆண்டு கேம்பஸ் செலெக்ஷன் ஆனவர்களுக்கு வேலையில் சேரும் முன் மீண்டும் ஒரு திறனாய்வு தேர்வு வைத்ததாகவும் அதில் கலந்து கொண்ட 3000 பேரில் ஆயிரத்து சொச்சம் பேர் மட்டுமே பாசானதகவும், இத்தேர்வில் பாசானவர்கள் மட்டுமே வேலையில்  சேர முடியும் என்று கூறி இருக்கிறது. ஏற்கனவே கேம்பஸ் இண்டர்வியூயில் தேர்வானவர்களுக்கு இன்னும் ஒரு தேர்வு வைப்பது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. அதுவும் எந்த வித பயிற்சியும் அளிக்காமல்.

அது மட்டும் இல்லை. தேர்வுக்கான வினாக்களும் சற்று கஷ்டமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளார்கள். இத்தேர்வில் பெயிலானோர்கள் மறு தேர்வு எழுதி பாசாகும் வரை வேலையில் சேர முடியாது என்றும் மறு தேர்வு எப்போது என தற்போது சொல்ல முடியாது என்றும் கம்பெனி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவர்கள். இந்த கம்பெனி வேலையை நம்பி மற்ற கம்பெனி ஆபர்களை வேண்டாம் என்று சொன்னவர்கள் நிலைமை தான் இன்னும் பாவம்.   

கஷ்டப்பட்டு படித்து பல மாணவர்களுக்கு மத்தியில் கேம்பஸ்யில் தேர்வாகி பின் மாதக்கணக்கில் காத்திருக்கும் மாணவர்களின் மனநிலையை சற்று இந்த கம்பெனிகள் யோசித்து பார்க்கவேண்டும். அட முழு சம்பளம் இல்லை என்றாலும் கூட ஸ்டைபண்ட் போல் எதாவது கொடுத்து உடனே வேலை கொடுக்கலாம். அதே போல் வேலைக்கு தேர்வாகிய பின் மீண்டும் ஒரு தேர்வு வைத்து தான் எடுப்போம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. இதை எல்லாம் IT கம்பெனிகள் நினைத்து பார்த்து ஒரு நல்ல முடிவை எடுத்தால் ஆயிரகணக்கான மாணவர்கள் வாழ்த்துவார்கள்.     


share on:facebook

Tuesday, November 20, 2012

கசாப் தூக்கிலிடப்பட்டார்


இன்று காலை 7.30 மணியளவில் புனே சிறையில் மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் தூக்கிலிட பட்டார்.

share on:facebook

இந்த பதிவு(ம்) பிரச்சினை ஆகுமோ?

//'Which is the largest democracy in the world' ?

அவளே பதிலையும் சத்தம் போட்டு படித்தாள்.

India.//

வடிவேலு ஒரு படத்தில், ஒரே நாளில் கோடீஸ்வரனாவது எப்படி' என எல்லோரிடமும் நூறு ருபாய் வாங்கிக்கொண்டு கடைசியாக ஒரு ஐடியா தந்து எல்லோரிடமும் வாங்கிக் கட்டிக் கொள்வார்.




அது போல இது நம்ம ஐடியா. அதுக்காக அடிக்கிறதா இருந்தாலும் அடிச்சுடுங்க. ஆனா, பதிவ 'லைக்' பண்ணி கமென்ட் மட்டும் போட்டுடாதீங்க. அப்புறம் அது உங்களுக்கு பிரச்சனையானால் அதற்கு நான் பொறுப்பு இல்லை. ஆமா சொல்லிப் புட்டேன்.

நீங்கள் கைதாகாமல் தப்பிக்க வேண்டுமானால், இப்படி தான் உங்கள் பதிவு இனி இருக்க வேண்டும். 

எல்லோரும் வாழ்க. அரசு வாழ்க, அரசியல் வாதிகள் வாழ்க. நாடு வாழ்க. பதிவுலகம் வாழ்க. பதிவர்கள் வாழ்க. கடைசியாக போலீஸ் வாழ்க.

இப்படி ஒரு பதிவு போட்டால் நீங்கள் கைதாக வாய்ப்பே இல்லை. எப்புடீ...?

இன்று காலை என் மகள் பரீட்சைக்காக படித்துக் கொண்டிருந்தது ஏதோ நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

'Which is the largest democracy in the world' ?

அவளே பதிலையும் சத்தம் போட்டு படித்தாள்.

India.

மீண்டும் சொல்லுகிறேன். இந்த பதிவை யாரும் லைக் பண்ணி கமெண்ட் போட்டு அது உங்களுக்கு பிரச்சனையானால் அதற்க்கு நான் பொறுப்பு இல்லை. ஆமா சொல்லிப் புட்டேன்.

share on:facebook

Wednesday, November 7, 2012

பன்னாட்டு நிறுவனங்களுக்கு சவால் விடும் புதிய 'சானிடரி' நாப்கின் - பாமர தமிழனின் கண்டுபிடிப்பு.

Amazing...



share on:facebook