Wednesday, December 14, 2011

"ட்ரைமஸ்டர்" தந்த தங்க தலைவி வாழ்க.


தமிழக முதல்வர் ஜெயலலிதா அவ்வப்போது சில நல்ல திட்டங்களை கொண்டு வருவார். கடந்த முறை அவர் கொண்டு வந்த மழை நீர் சேகரிப்பு திட்டம். அனைவராலும் பாராட்டப் பட்ட ஒன்று. சொல்லப் போனால் நகரம், கிராமம் என வேறுபாடு இல்லாமல் தமிழகத்தில் உள்ள தொண்ணூறு சதவிகிதத்திற்கும் மேலான கட்டடங்களில் இத் திட்டம் நடை முறைப் படுத்தப் பட்டது. அதற்க்கு முழு காரணம் செல்வி. ஜெயலலிதாவும், இத் திட்டத்தை செயல் படுத்த அவரின் அரசு கடை பிடித்த கடுமையான நடைமுறைகளும் தான்.

அடுத்ததாக தற்போது ஒரு மிக பெரிய மாற்றத்தை பள்ளி கல்வித்துறையில் கொண்டு வந்துள்ளார் (சமச்சீர் கல்வி மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலக மாற்றத்தை சொல்ல வில்லை!). மாறாக தற்போதைய கல்வி முறையில் ட்ரைமஸ்டர் என்று சொல்லக் கூடிய பருவ முறை தேர்வு முறை அடுத்த ஆண்டு முதல் அமுலுக்கு வரும் என்ற மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.

தற்போது உள்ள தேர்வு முறையில் காலாண்டு தேர்வுக்கு படித்த பாடத்தையே அரை ஆண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வுக்கும் படிக்க வேண்டும். இதனால் எந்த உபயோகமும் இல்லை. மாறாக வருடம் முழுதும் அதே புத்தகத்தை சுமப்பதும், படித்து முடித்து தேர்வு எழுதிய பாடத்தையே மீண்டும் படிப்பதும் தான் மிச்சம். பருவ முறையில் ஒரு முறை படித்து தேர்வு எழுதி விட்டால் அடுத்த பருவ தேர்வுக்கு அந்த பாடத்தை மீண்டும் படிக்க வேண்டியதில்லை.

அது மட்டும் இன்றி, மூன்று பருவ தேர்வுகளின் மதிப்பெண்களையும் கூட்டி அதன் சராசரியை முழு ஆண்டு தேர்வு மதிப்பெண்ணாக கணக்கிடுகிறார்கள். இதனால், ஒரு நாள் உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் இறுதி தேர்வு எழுத முடியவில்லை என்றால் கூட அதனால் அந்த ஆண்டு தேர்வில் தோல்வி என்ற கவலை இல்லை.

இந்த அறிவிப்பு எல்லா பெற்றோர்களையும் கல்வியாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பதில் ஐயம் இல்லை. அது மட்டும் இல்லாமல் குழந்தைகள் இதன் முழு பலனையும் புரிந்து கொண்டால் அவர்களை விட மகிழ்ச்சி அடைபவர்கள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.

என் குழந்தைகள் தற்போதே துள்ளி குதிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தியா சென்ற பின் தங்களுக்கு செமஸ்டர் முறை தேர்வுகள் என்று அறிந்தவுடன். இங்கு (அமெரிக்காவில்) உள்ள பள்ளி கல்வி முறையை முடிந்தபோது பகிர்கிறேன்.
  

share on:facebook

Tuesday, December 13, 2011

படித்தவுடன் இலவச பயிற்சி, அரசு வேலை - ஆம் தமிழகத்தில் தான்.


அரசு சேவை இல்லம் பற்றிய சென்ற பதிவின் தொடர்ச்சி...

இன்று அரசாங்க வேலை கிடைப்பதே அறிதாகி போய்விட்ட ஒன்று. அப்படி இருக்கையில், படித்து முடித்தவுடன், இலவச பயிற்சி மற்றும் அரசு வேலையென்றால் அது அரசு "சேவை இல்லத்தில்" படித்தவர்களுக்கு மட்டும் தான். இதற்கென்று ஒரு அரசு ஆணையே உள்ளதாக தெரிகிறது. அதாவது "சேவை இல்ல" சீல் உள்ள ட்ரைனிங் சர்டிபிகேட்/பள்ளி சான்றிதல் இருந்தால் அவர்களுக்கே அரசு வேலையில் முன் உரிமை.

சேவை இல்லத்தில் படித்தவர்களுக்கு அரசு வேளையில் சேர வயது வரம்பே கிடையாது. ஐம்பத்தி ஏழு வயதில் அரசு வேளையில் சேர்ந்து ஐம்பத்து எட்டு வயதில் பனி ஓய்வு பெறலாம்.

சென்ற பதிவில் கூறியிருந்தது போல், சேவை இல்லத்தில் சேர பதினெட்டு வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதற்க்கு காரணம், இப்பள்ளியே ஆதரவற்ற இளம் பெண்கள் நல்வாழ்வு பெறுவதற்கு தான். பெரும்பாலும் இங்கு சேர்பவர்கள் இளம் வயதிலேயே கணவனை இழந்தவர்களோ, அல்லது கணவனால் கை விடபட்டவர்களோ ஆவார்கள். அதனாலேயே ஐந்தாம்  வகுப்பு படித்திருந்தால் மட்டும் போதும், இப்பள்ளியில் சேர்த்துக் கொள்வார்கள். இப்பெண்களுக்கு  குழந்தைகள் இருந்தால் ஆண் குழந்தை என்றால் மூன்று வயது வரையிலும்,  பெண் குழந்தை என்றால் ஐந்து வயது வரையிலும்  தாயுடனே தங்கி கொள்ளலாம்.

அது மட்டுமல்ல, சேவை இல்லத்தில் படித்த பெண்களுக்கு என்றே ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் கடலூர் போன்ற மாவட்டங்களில் செயல்படுகிறது. பயிற்சி முழுவதும் இலவசம்.

அரசு சேவை இல்லம் மூலம் இன்னும் பல நல்ல வசதிகளை ஆதரவற்ற  ஏழை பெண்கள் பெற்றுக் கொள்ள தமிழக அரசின் சமூக நலத்துறையை அணுகலாம். என்னுடைய தாயார் இப்பள்ளியில் தலைமை ஆசிரியர்/  சூப்பிரண்டண்ட் ஆக பணியாற்றியதாலும் இப்பள்ளியை பற்றி பொது மக்களுக்கு அதிகம் தெரியாத காரணமும் இப்பதிவை எழுத தூண்டியது.

சேவை இல்லம் பற்றி எனக்கு தெரிந்த இன்னொரு பெருமை, இம்மாதிரி  அதரவற்ற பெண்களாக இப்பள்ளியில் சேர்ந்து என் தாயிடம் படித்த இரு மாணவிகள் முது நிலை பட்டம் பெற்று   இப்பள்ளியிலேயே ஆசிரியர்களாக பணியாற்றுவதுதான்.


share on:facebook

Monday, December 12, 2011

அமெரிக்காவின் உல்லாச நகரம் : லாஸ் வேகாஸ் போலாம் வாங்க...


லாஸ் வேகாஸ். உல்லாச உலகின் தலை நகரம் என்றும் கூறலாம். அமெரிக்காவின் நவாடா மாகாணத்தில் அமைந்துள்ள இந்நகரம் முற்றிலும் பாலை வன பிரதேசம். அமெரிக்கர்கள் அதையே இன்று அதிக வருவாய் பார்க்கும் நகரமாக மாற்றி இருக்கிறார்கள்.

சரியோ தவறோ, ஒரு மாநகரத்தில் கேளிக்கை விடுதிகள் நிச்சயம் வேண்டும். அப்போது தான் பெரும் பணக்காரர்களிடம் உள்ள பணமும் வளமும் வெளியே வரும். அந்த வகையில் அமெரிக்கர்களிடம் உள்ள அதிகப்படியான பணம் அனைத்தும் லாஸ் வேகாஸில் தான் செலவிடப்படுகிறது.

லாஸ் வேகாஸ் நகரம் முழுவதும் கேசிநோஸ் என சொல்லப்படும் சூதாட்ட விடுதிகள் தான். நம்மூர் மூணு சீட்டிலிருந்து அனைத்து வகையான சூதாட்டங்களும் இங்கு பிரபலம். பெரும்பாலான அமெரிக்கர்கள் வருடத்துக்கு ஒரு முறை லாஸ் வேகாஸ் சென்று தங்கள் விடுமுறையை கழிக்கும் வழக்கம் உள்ளவர்கள். இதற்க்கென்றே தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை மாதாமாதம் சேமிப்பவர்களும் உண்டு.


லாஸ் வேகாசின் இன்னொமொரு சிறப்பு அம்சம் அங்குள்ள சூதாட்ட விடுதிகளின் கட்டட கலைகள். இங்குள்ள ஒவ்வொரு விடுதியும் ஒரு "theme" என்று சொல்லக் கூடிய வகையில் அமைத்திருப்பார்கள். ஹோட்டல் "பாரிஸ்"  பாரிஸ் நகர ஈபில் டவரின் வடிவில் அமைத்திருப்பார்கள். ஹோட்டல் "நியூயார்க் நியூயார்க்" நியூயார்க் நகரில் அமைந்துள்ள கட்டடங்களின் அமைப்பில் வடிவமைத்திருப்பார்கள்.


இதே போல் ஈஜிப்ட் நகரில் உள்ள பிரமிடுகளின் அமைப்பில் ஒரு விடுதியும் அங்கு உள்ளது. ஒவ்வொரு விடுதியும் பல தளங்களை கொண்டிருக்கும். பெரும்பாலும் கீழ் தளம் சூதாட்ட விடுதியும், மேல் தளங்களில் தங்கும் அறைகளும் அமைத்திருக்கும். லாஸ் வேகாசின் இன்னொரு சிறப்பு அம்சம், இங்குள்ள அனைத்து விடுதிகளும் (பெரும்பாலும் த்ரீ ஸ்டார் அல்லது பைவ் ஸ்டார் அந்தஸ்து கொண்டவை) மிக குறைந்த அளவிலேயே தங்கும் கட்டணம் வசூலிப்பார்கள். அதே போல் லாஸ் வேகாஸ் செல்ல விமான கட்டணங்களும் மிக குறைவே. இவ்வாறு கட்டண சலுகைகள் மூலம்  மக்களை அங்கு வரவழைப்பதே அவர்களின் நோக்கம்.

அமெரிக்காவில் இங்கு மட்டும் தான் நீங்கள் பொது இடங்களில் மது அருந்தலாம். மது அருந்தவும் புகைக்கவும் இங்கு தடை செய்யப்பட்ட இடம் என்று ஒன்று இல்லை. அதே போல் பெரும்பாலான விடுதிகளில் சூதாட்டம் ஆடுபவர்களுக்கு மது இலவசமாக விநியோகிக்கப் படும். எனக்கு தெரிந்த ஒரே கட்டுப்பாடு, சூதாட்ட தளங்களில் குழந்தைகள் தனியாக உலவ அனுமதி கிடையாது. அவர்கள் சூதாடுபவர்களுடன் அமரவும் முடியாது. இரவு நகரம் என சொல்லக்கூடிய லாஸ் வேகாஸில் பகல் பொழுதை விட இரவில் தான் அதிக நடவடிக்கைகள் உண்டு.

உல்லாசங்கள் தொடரும்...



share on:facebook

Sunday, December 11, 2011

ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல்: ரஜினி ரசிகர்களுக்கு சமர்ப்பணம்.

இன்று பிறந்த நாள் காணும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஒரு ரசிகனின் வாழ்த்துக்கள்.


share on:facebook

Thursday, December 8, 2011

இன்று ஊழல் ஒழிப்பு தினம் - அரசு அலுவலக பியூனுக்கு ரூ.4.5 கோடிக்கு சொத்து


உஜ்ஜயினி : மத்திய பிரதேச மாநிலத்தில், அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பியூன் வீட்டில், லோக் ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய சோதனையில், 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள், அவருக்கு சொந்தமாக இருப்பதற்கான ஆவணங்கள் சிக்கின.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் பியூனாக பணிபுரிபவர் நரேந்திர தேஸ்முக், 53. இவரது வீட்டில், லோக் ஆயுக்தா அதிகாரிகளைக் கொண்ட 15 பேர் குழு, நேற்று முன்தினம் சோதனை நடத்துவதற்காக சென்றது. வீட்டில் இருந்தவர்கள், அவர்களை அனுமதிக்கவில்லை. நுழைவாயிலில் உள்ள கேட் பூட்டப்பட்டது. 

அதிகாரிகள் உள்ளே நுழைந்து விடாமல் இருப்பதற்காக, தேஸ்முக்கின் வீட்டில் வளர்க்கப்படும் நாயும், கேட் அருகே நிறுத்தப்பட்டது. இதனால், 20 நிமிடங்களுக்கு மேல், அதிகாரிகள் வெளியில் நிற்க வேண்டியதாகி விட்டது. இந்த இடைப்பட்ட நேரத்தில், தேஸ்முக்கின் மனைவி, சில நகைகள், முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை பின்பக்க வழி மூலமாக, பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கொடுக்க முயற்சித்தார். வீட்டுக்குள் புகுந்த அதிகாரிகள், ஒவ்வொரு அறையாக சோதனையிட்டனர். 

அப்போது, ஆடம்பரமான விலை உயர்ந்த பொருட்கள் அங்கு இருந்ததை கண்டு ஆச்சர்யப்பட்டனர். நவீன வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடம்பர நாற்காலிகள், மேஜைகள், படுக்கைகள் ஆகியவை வீட்டில் இருந்தன. மேலும், தேஸ்முக்கிற்கு சொந்தமாக இரண்டு ஆடம்பர வீடுகள், ஒரு கோழிப் பண்ணை, கோழிக் கறிக்கடை, மகாராஷ்டிர மாநிலத்தில் ஐந்து ஏக்கர் நிலம், மும்பையில் உள்ள சொகுசு ஓட்டலில் பங்குதாரர், 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்கள், வங்கிகளில் 16 லட்சம் டிபாசிட் மற்றும் நகைகள் உட்பட 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள், இவருக்கு சொந்தமாக இருப்பதற்கான ஆவணங்கள் சிக்கின.

இதுகுறித்து லோக் ஆயுக்தா அதிகாரிகள் கூறுகையில், "தேஸ்முக் கடந்த 1980ல் பணிக்கு சேர்ந்தார். பதவி உயர்வுக்கு இவர் பெயர் சில முறை பரிந்துரைக்கப்பட்டது. ஆனாலும், ஊழல் புகார்கள் காரணமாக பதவி உயர்வு கிடைக்கவில்லை. இவர் வாங்கும் சம்பளம் மிகக் குறைவு. குறைவான சம்பளத்தை வைத்துக் கொண்டு, இந்தளவுக்கு சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்படும்' என்றனர்.

நன்றி: தினமலர் செய்தி.

share on:facebook

Wednesday, December 7, 2011

(முல்லை) பெரியாரும் (ஐயப்ப) பக்த்தர்களும்


முல்லை பெரியார் அணை பிரச்சனையால் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் ஐயப்ப பக்தர்கள் படும் பாடு எல்லோருக்கும் தெரிந்ததே. வாடிக்கையாளர்கள் வரவால் தான் ஒரு வியாபாரம் செழிக்கும். அது போல் பக்தர்கள் வருகையால் தான் ஒரு திருத்தலம் புகழ் பெற முடியும். தமிழக ஐயப்ப பக்தர்கள் ஒரு வருடம் சபரி மலைக்கு செல்வதை நிறுத்தினாலே போதும். அடுத்த வருடம் சபரி மலையை நிர்வகிக்க கேரளா அரசிடம் டப்பு இருக்காது. இவை எல்லாம் தெரிந்திருந்தும் கேரளா அரசு தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு ஏற்படும் இன்னலை கண்டும் காணாமல் இருக்கிறதென்றால் அவர்களுக்கு சரியான பாடம் கற்ப்பிக்க வேண்டும்.

அதற்காக இங்கு தமிழகத்தில் உள்ள கேரளா வர்த்தக நிறுவனங்கள் மீதும் மலையாளிகள் மீதும் தாக்குதல் நடத்தி தான் நம் கண்டனத்தை தெரிவிக்க  வேண்டும் என்று இல்லை. சமீபத்தில் சபரி மலை செல்லும் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகளால்தவித்த தமிழக பக்தர் ஒருவர்,  இனி நாங்கள் சபரி மலை சென்று ஐயப்பனை தரிசிக்க  போவதில்லை.  தமிழ் உணர்வுடன் இங்கு உள்ள (அவர் சொன்ன ஊர் பெயர் நினைவில்லை)  ஐயப்பன் கோவிலுக்கே  சென்று விரதத்தை முடித்துக் கொள்ளப் போகிறோம்  என்று தெரிவித்தார்.  என்ன உன்னதமான ஒரு புத்திசாலித்தனமான முடிவு.

பொதுவாகவே தமிழர்களுக்கு சகிப்புத்தன்மை  அதிகம்.  அதனால் தவறு  ஒன்றும் இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து ஐயப்ப சேவா சங்கங்களும் உடனே கூடி சபரி மலை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் அடுத்த வருடத்தில் இருந்து நாங்கள் யாரும் சபரி மலைக்கு வர மாட்டோம். இங்குள்ள பழனிக்கோ, குன்றக்குடிக்கோ விரதம் இருந்து காவடி எடுப்போம் என்று ஒரு அறிக்கை விடட்டும். அது போதும், கேரளா அரசு அணை கட்டும் பேச்சை கூட எடுக்காது.

தமிழகத்திற்க்கும் கர்நாடகத்திற்கும் இடையே உள்ள தண்ணீர் பிரச்னை வேறு.  ஆனால் முல்லை பெரியாறு அணை பிரச்னை வேறு. ஆயிரம் ஆண்டுகளை கடந்து இன்றும் கல்லணை உறுதியாக உள்ள போது சுமார் நூறு  வருடங்களுக்கு முன் கட்டிய அணை எவ்வாறு பலமிழந்து போகும்.  சுப்ரீம்  கோர்ட் முதல் அனைத்து வல்லுனர்களும் அணையின் பலத்தை பற்றி அறிக்கை கொடுத்தும் கூட கேரளா அரசு அடம் பிடிப்பது சண்டித்தனம்  என்பதை தவிர வேறு என்ன?

கேரளா அரசுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்றால், தமிழகத்திலுள்ள அனைத்து கேரளா நிறுவனங்களையும் (குறிப்பாக தொண்ணூறு சதவிகத்திற்க்கும் மேலான டீ கடைகளை) தமிழர்கள் புறக்கணித்தால் போதும். கேரளா அரசுக்கு மலையாளிகளே நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். பொருளாதார ரீதியாக அடித்தால் போதும் ஒரு மாநில அரசு என்ன ஒரு நாட்டையே வீழ்த்தி விட முடியும்.

உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதத்தை தவிர்ப்போம். பொருளாதார ரீதியாக கேரளா அரசை மிரட்டுவோம்.  

share on:facebook

Tuesday, December 6, 2011

நூறாவது பதிவு நாலு பேருக்கு உதவுட்டுமே - அரசு சேவை இல்லமும் அதன் பயன்களும்


தமிழக அரசானாலும் சரி, அது இந்திய அரசானாலும் சரி. அவ்வப்போது பல்வேறு நல திட்டங்களை அறிவிக்கும். இவைகளில் பல, ஆளும் கட்சி தொண்டர்கள் பலன் பெறுவதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும். சில நேரங்களில் விழலுக்கு இறைத்த நீர் சிறுது பயிருக்கும் பாய்வது போல், ஒரு சில உண்மையான பயனாளிகளுக்கும் போய் சேரும். எனக்கு தெரிந்து இதற்க்கு நேர் மாறாக தமிழக அரசின் திட்டம் ஒன்று இருக்கிறதென்றால் அது தமிழக அரசின் "சேவை இல்லங்கள்" தான்.

தமிழகத்தில் தஞ்சை, கடலூர், தாம்பரம், சேலம், நாகப்பட்டினம் மற்றும் மதுரை என பல இடங்களில் "சேவை இல்லம்" என்ற பெயரில் அரசு நடத்தி வரும் இம்மாதிரியான பல்நோக்கு சேவை மையம் ஒன்று இருப்பது அவ்வூர் மக்களுக்கே தெரியுமா என்பது சந்தேகமே. சரி விசயத்திற்கு வருவோம். எனக்கு தெரிந்த தஞ்சை "சேவை இல்லத்தை" பற்றிய குறிப்புகள் சில கீழே வருமாறு:

தஞ்சையில் 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது நாஞ்சிக் கோட்டை ரோட்டில் அமைந்துள்ள சேவை இல்லம்  கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் அதன் சொந்த  கட்டடத்தில் இயங்கி வருகிறது. முதலில் ஐந்து முதல் பத்தாம் வகுப்பு வரை ஆரம்பிக்கப்பட்ட சேவை இல்லத்தில் இன்று பிளஸ் டூ வரை சொல்லிக்கொடுக்கப்படுகிறது. First group,  Second group, கம்ப்யூட்டர் சயின்ஸ் என அனைத்து பாட பிரிவுகளுக்கும் ஐந்து பைசா டொனேஷன் இன்றி அட்மிஷன் இலவசம். அது தவிர ஆறு மாத தையற்  பயிற்சி மற்றும் தட்டச்சு (தமிழ்+ஆங்கிலம்), குறுக்கெழுத்து  பயிற்சியும் தனி வகுப்புகளாக  நடத்தப்படுகிறது.

ஆறு மாத தையற்  பயிற்சியை முழுமையாக முடித்து வெளியேறும் போது அரசே இலவசமாக தையற் இயந்திரம் ஒன்றையும் வழங்குகிறது. சேவை இல்லத்தில் தட்டச்சு பயில்பவர்கள் மட்டும் வீட்டிலிருந்து(வெளியில்  இருந்து) வந்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. மற்ற அனைவரும்  அங்கேயே  இயங்கி வரும் விடுதியிலேயே தான் தங்கி படிக்க வேண்டும்.  ஆனால்  அதற்காக  கவலை பட வேண்டியதில்லை. சேவை இல்ல விடுதி  முற்றிலும் இலவசம். ஆம், தாங்கும் இடம், உணவு, உடை என  அனைத்துக்கும் அரசே  செலவிடுகிறது. விடுதியை கவனித்துக் கொள்ள ஒரு  வார்டனும்,  அவருக்கான குடியிருப்பும் சேவை இல்லத்தின் உள்ளேயே  உள்ளது.

உள்ளே உள்ள அனைத்து துறைகளையும் கவனித்துக் கொள்ள சூப்பிரண்டண்ட் என ஒரு மேலதிகாரியும் அவரே அங்குள்ள பள்ளிக்கு தலைமை ஆசிரியராகவும் உள்ளார். இவரின் வீடும் பள்ளி வளாகத்தின் உள்ளேயே அமைந்துள்ளது. அதாவது இப்பள்ளியை வருடம் தோறும் இருபத்தி நான்கு மணி நேரமும் கவனித்துக் கொள்ள ஒரு வார்டன் மற்றும் ஒரு சூப்பிரண்டண்ட் எப்போதும் பணியில். இவர்கள் தவிர பகல்/இரவு வாட்ச்மேன், பணியாளர்கள், ஆயாக்கள், பள்ளி ஆசிரியர்கள் என அனைவரும் வெளியில் இருந்து சென்று வரலாம்.

சரி இப் பள்ளியில் சேர என்ன தகுதி, யாரெல்லாம் சேரலாம் என கேட்கிறீர்களா? இப்பள்ளி முற்றும் பெண்களுக்கானது. அது மட்டுமல்ல  இப்பள்ளியில் சேர்ந்து படிக்க கீழ் கண்டவற்றுள்  எதாவது ஒன்றை பூர்த்தி செய்பவராக இருத்தல் வேண்டும்.

# பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியவராக இருத்தல் வேண்டும்.
# கணவனால் கை விடப்பட்டவராகவோ அல்லது கைம்பென்னாகவோ  இருத்தல் வேண்டும்.
# தாயையோ, தந்தையையோ அல்லது இருவரையுமோ இழந்தவராக இருத்தல் வேண்டும்.
# வயது 18 பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
# குறைந்தது ஐந்தாம் வகுப்பு வரை தேர்வு பெற்றிருக்க வேண்டும்.

மேற்கூறிய தகுதிகள் உங்களில் ஒரு சிலருக்கு வியப்பை ஏற்படுத்தலாம். சேவை இல்லத்தின் முழு நோக்கத்தை தெரிந்து கொள்ளும் போது அதற்க்கான காரணம் உங்களுக்கு புரியும்.

மேலும் விபரங்கள் அடுத்த (இந்த ஆண்டின்) 101  வது பதிவில்...


share on:facebook